அந்த வாரம் வெள்ளிக்கிழமை குழலி, தாரணி மற்றும் வருண் கயல்விழியைப் பார்க்க வந்தனர்.


அவர்கள் வருவதால். பத்மா காலையிலேயே எழுந்து பொங்கல், கேசரி என டிபன் செய்து வைத்தார். நந்தா அவர்களை அழைத்து வர ரயில் நிலையம் சென்று இருந்தான். அன்று கயல்விழியும் சீக்கிரமே எழுந்து குளித்து விட்டாள்.


பத்மா அவளுக்காக லேவண்டர் நிறத்தில் புதுப் புடவை ஒன்றை தயாராக எடுத்து வைத்திருந்தார். கயல் அதைக் கட்டிக்கொண்டு வர, பத்மா அவள் தலையை உலர வைத்து, தளர பின்னலிட்டார்.


அப்போதுதான் அனவைரும் வீட்டிற்குள் நுழைந்தனர். கயல் வேகமாக எழுந்து எல்லோரையும் வரவேற்றாள்.


கயலின் முகத்தில் அவள் சோர்வையும் தாண்டி தாய்மையின் பூரிப்பு நன்றாகவே தெரிந்தது. இன்னும் அழகாகத் தெரிந்தாள். பத்மா காபி போட, கயல் அதை எல்லோருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள்.


“எப்படி இருக்கக் கயல்?” வருண் வாஞ்சையாகக் கேட்க,


“நல்லா இருக்கேன் அண்ணா. வீட்ல பெரியம்மா பெரியப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?” எனக் கயலும் பதிலுக்கு அவனிடம் விசாரித்தாள்.


“நல்லா இருக்காங்க. உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க.”


“நானும் அவங்களைக் கேட்டதா சொல்லுங்க.”


“இங்க ரொம்பச் செட் ஆகிட்ட போல, உனக்கு இங்க பிடிச்சிருக்கா? இல்ல மெட்ராஸ் பிடிச்சிருக்கா?”


“எனக்கு அங்கதான் பிடிக்கும். காலேஜ் வேற திருந்து இருக்கும்.”


“அங்க வந்தா கூட நீங்க தனிக்குடித்தனம் போகப்போறதா நந்தா சொன்னான்.” வருண் கச்சிதமாக நந்தாவை போட்டுக் கொடுக்க, அவன் வருணை முறைத்தான்.


“இங்கயே நான் ஒத்தையில வெடுக்கு வெடுக்குன்னு உட்கார்ந்து இருக்கேன். அங்க வந்தும் என்னால தனியா இருக்க முடியாது. தனியா போகணும்ன்னா அவர் மட்டும் போகட்டும். நான் நம்ம வீட்லதான் இருப்பேன்.”


அடிப்பாவி நான் கஷ்ட்டப்பட்டுப் பில்டப் பண்ணி வச்சா, ஒரே பால்ல கிளீன் போல்ட் ஆக்கிட்டாலே என நந்தா மனதிற்குள் நொந்துகொள்ள, மற்றவர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர்.


“உன் தங்கச்சி படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்லி, இத்தனை நாள் பிள்ளை பெத்துகிறதை தள்ளிப்போட்டா, இப்பத்தான் பெத்துக்கலாம்ன்னு ஆசைபட்டா.” என்றவர், தரணியிடம், “நீ ஒரு வருஷம் வேலைக்குப் போ, அதுக்குள்ள கயலுக்குப் பிரசவம் ஆகிடும். அப்புறம் நீ பெத்துக்கலாம்.” என்றார்.


தாரணியும் இப்போது கர்ப்பமானால், இருவரையும் பார்த்துக் கொள்வது சிரமம் என்று நினைத்தே சொன்னார்.


தாரணி சரி என்று சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த பத்மா, “அதெல்லாம் இனியும் தள்ளி போட சொல்லாதீங்க. தாரணியும் உண்டாகட்டும், நாம இத்தனை பேர் இருக்கோம் பார்த்துக்க மாட்டோமா?” என்றார்.


“ஆமாம் அத்தை, எங்க அம்மா தாரணியைப் பார்த்துப்பாங்க. அது ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றான் வருண். அவனுக்கு வெகு நாட்களாகவே குழந்தை ஆசை இருந்தது. நந்தா நண்பனின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.


“சரி குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்.” பத்மா சொல்ல, எல்லோரும் எழுந்தனர்.


“அண்ணி, நீங்க இந்த ரூம்ல குளிங்க.” எனத் தாரணியை அவர்கள் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்ற கயல், “குளிச்சிட்டு இந்தப் புடவை கட்டிக்றீங்களா அண்ணி.” என அவள் கட்டியிருந்த புடவை போலவே ஒன்றை கொடுத்தாள்.


“நல்லா இருக்கே. எப்ப எடுத்தீங்க அண்ணி.”


“நீங்க வர்றீங்கன்னு சொன்னதும், நானும் அம்மாவும் போய் எடுத்திட்டு வந்தோம்.”


தாரணி தயார் ஆகி வரும்வரை, கயல் அங்கேயே இருந்தாள். இருவரும் சேர்ந்தே அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.


ஒரே மாதிரி புடவை அணிந்து வந்த இருவரையும் பார்த்ததும், நந்தாவும் வருணும் பெரிதாகச் சிரித்தனர்.


“ரெண்டும் தனித்தனியா இருந்தாலே தாங்க முடியாது. இதுல ஒரே மாதிரி வேறையா?” வருண் கிண்டல் செய்ய,


“ஏன் அண்ணா? கயல் கேட்க,


“நம்மைப் பார்த்து பொறாமை.” என்றாள் தாரணி.


“உனக்கு இந்தப் புடவை அழகா இருக்கு மா.” பத்மா சொல்ல, தாரணி அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.


எல்லோரும் சேர்ந்தே காலை உணவை சாப்பிட்டனர். காலை உணவை சாப்பிட்டதும், பத்மா அவர் வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.


அவருக்கு வீட்டுக்கு போன் செய்து காரை அனுப்பி வைக்கச் சொல்ல வேண்டியது இருந்தது. நந்தா போன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்ததால்… தயங்கி நின்று கொண்டிருந்தார்.

“என்னங்க அத்தை?”


“வீட்டுக்கு போன் பண்ணி கார் அனுப்ப சொல்லணும்.”


“ஏன் கிளம்பிடீங்க? எங்களோட இருக்கலாமே.” குழலி சொல்ல,


“நீங்க இங்க இருக்கும்போது, நான் வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்ன்னு பார்த்தேன். கயல் அப்பா வெளியதான் சாப்பிடுறார்.”


“ஒ… அப்படியா சரி.”


“இருங்க அத்தை நான் உங்களைக் கொண்டு போய் விடுறேன்.” என்ற நந்தா, வருணையும் உடன் அழைத்தான்.


கயல் நந்தாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அறைக்குள் செல்வதைப் பார்த்தவள், அவன் பின்னே சென்றாள்.


“என்ன மாமனார் வீட்டுக்கு கிளம்பிட்டீங்க போலிருக்கு.”


“நீயும் வேணா வா…”


“நான் வரலை.”


நந்தா தோளை குலுக்கிவிட்டு வெளியே சென்றான்.


“வர ரொம்ப நேரம் ஆகுமா.” எனத் தாரணி வருணிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்தவன், “உன் அண்ணி வரலையாம் நீயாவது வா.” என்றான்.


பத்மாவும் தாரணியை அழைத்தார். காரை எடுப்பதற்கு முன் நந்தா கயலை பார்க்க, அவள் முகம் வாடி இருந்தது. அவனுக்குத் தெரியும் அவளுக்குக் கஷ்ட்டமாக இருக்கும் என்று.


இவர்கள் சென்ற போது, வீட்டில் அன்பரசு இல்லை. அவர்களைப் பத்மா உள்ளே அழைத்துச் சென்றார்.


“உட்காருங்க டீ போடுறேன்.” என்றவர் அறைக்குள் சென்றார். கணவர் தோட்டத்து வீட்டில் இருப்பார் என்று ஊகித்த பத்மா, அறையில் இருந்த தொலைபேசியில் கணவரை அழைத்தார்.


“ஹலோ…”


“நான்தான், வீட்டுக்கு வந்திட்டேன். மாப்பிள்ளை, அவர் தங்கச்சி வீட்டுக்காரர் எல்லாம் வந்திருக்காங்க.”


“சரி நான் இப்ப வரேன்.”


அன்பரசு வருகிறேன் என்றதும், பத்மாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஹாலில் சென்று அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார்.


தாரணிக்கு வீட்டை பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது. அவள் இப்போதுதானே வீட்டை பார்க்கிறாள். திருமணதிற்கு வந்தபோது கோவிலில் இருந்தே சென்று இருந்தனர்.

இவ்வளவு பெரிய வீட்டுப் பெண்ணா கயல். அவள் ஒருநாளும் பெரிய இடத்துப் பெண் போலக் காட்டிக் கொண்டது இல்லையே என நினைத்தாள்.


அடுத்தப் பத்து நிமிடத்தில், அன்பரசு வீட்டில் இருந்தார். “வாங்க.” என எல்லோரையும் பார்த்து சொன்னவர், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.


பத்மா எல்லோருக்கும் டீ கொண்டு வர, “டீ வேண்டாம். தோட்டத்தில இருந்து இளநீர் கொண்டு வந்தேன் பாரு.” என்றவர், “செல்வம், அந்த இளனியை உடைச்சுக் கொண்டு வா.” எனக் குரல் கொடுத்தார்.


வரும்போதே தோட்டத்தில் இருந்து இளநீர் கொண்டு வந்து இருந்தார்.
நந்தாவும், வருணும் லாவகமாக இளநீர் குடிக்க, தாரணிக்கு அப்படியே குடிக்கத் தெரியவில்லை.


“இந்தா, பாப்பாவுக்குக் கிளாஸ்ல ஊத்திக் கொடு.” என அன்பரசு சொல்ல, பத்மா ஒரு செம்பில் ஊற்றிக்கொடுத்தார்.


ஆளுக்கு இரண்டு இளநீர் குடிக்க, வயிறு திம்மென்று இருந்தது. அன்பரசுவும் வருணும் தான் பேசிக்கொண்டு இருந்தனர்.


“நீங்க வக்கில் தான, நம்ம சின்னப் பையனும் வக்கீல்தான். நம்ம ஆளுங்கல்ல நிறையப் பேர் வக்கில்தான்.”


“நான் உங்க ஆளு இல்லைங்க.”

“என்னது?” அன்பரசு திகைத்துப் போய்ப் பார்க்க, “நானும் நந்தாவும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸ். தாரணியை எனக்குப் பிடிச்சிருந்தது. நான் பெண் கேட்டேன். இவங்க வீட்லயும் கொடுத்திட்டாங்க.”


அன்பரசுவுக்கு வருண் சொன்னதை இன்னும் கூட நம்பமுடியவில்லை.


“நீங்க எந்த ஆளுங்க.”


“அது எதுக்குங்க? நானும் மனுஷ சாதிதான், நீங்களும் மனுஷ சாதிதான். அப்புறம் அதுக்குள்ள எதுக்கு இன்னொரு ஜாதியை கொண்டு வந்திட்டு.” என்றான் வருண்.


‘நம்ம ஆளுங்கல்ல மாப்பிள்ளையா இல்லை.’ என்பதைப் போல நந்தாவை ஒரு பார்வை பார்த்தார். அதன்பிறகு அவர் வருணோடு பேசவே இல்லை.


“சரி நாங்க கிளம்புறோம்.” என்றதும், அன்பரசுவின் பார்வை சமையல் அறைப் பக்கம் சென்றது. பத்மாவும் தாரணியும் மட்டும் வெளியே வர, கயல் இங்கே வரவேயில்லை என்பது அவருக்கு அப்போதுதான் தெரியும். அவள் உள்ளே இருக்கிறாள் என்றே நினைத்துக் கொண்டு இருந்தார்.


அவர் முகம் மாற, நந்தா அதுவரை அவரையேதான் பார்த்துக் கொண்டு இருந்தான். மகளைத் தேடுகிறார் எனப் புரிந்து கொண்டான்.


வெளியே வந்து காரில் ஏறியதும், “உன் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா.” நந்தா வருணிடம் சொல்ல,

“அவருக்குத் தெரியணும்ன்னு தான்டா சொன்னேன். வேற ஜாதியில கல்யாணம் பண்ணிகிட்டு நல்லாத்தான் இருக்கோம்ன்னு காட்ட வேண்டாம்.”


“நான் எங்க கல்யாணத்துக்கு அவசரப்பட்டதுக்கு, இதுவும் ஒரு காரணம். முன்னாடியே தெரிஞ்சிருந்தா, அவர் கயலை எனக்குக் கொடுத்திருக்க மாட்டார்.”


“நாம விட்டிருப்போமா என்ன? பொண்ணைத் தூக்கி இருப்போம். வருண் சொன்னதற்கு, நந்தா ஆமோதிக்க,


“நீங்க ரெண்டு பேரும் சரியான கேடிங்க. ஆனாப் பாரு ஒருத்தர் போலீஸ், இன்னொருத்தர் வக்கீல். என்ன கொடுமை?” தாரணி சலித்துக்கொள்ள, நந்தாவும் வருணும் வாய்விட்டு சிரித்தனர்.


வீட்டிற்குள் அன்பரசு குட்டி போட்ட பூனை போல, ஒரு இடத்தில் உட்காராமல் நடந்து கொண்டே இருந்தார்.


“இவங்க எல்லாம் வந்திருக்காங்க. உன் பொண்ணுக்கு வர முடியலையா?” அன்பரசு பொறுக்க முடியாமல் கேட்டே விட,


“அவ வீடு தேடி போய், அவ முன்னாடியே அவ புருஷனை மிரட்டினா, இங்க வருவாளா? அவ இன்னும் கோபமா இருக்கா.”


“இருக்கட்டும் எனக்கு ஒன்னும் இல்லை.”


“நாம போட்ட நகை ஒன்னு கூட அவகிட்ட இல்லை. நீங்க எதோ பசங்களைப் படிக்க விடாம செஞ்சிங்கலாமே. அவங்களுக்கு வெளியூர்ல படிக்க, எல்லா நகையையும் கழட்டி கொடுத்திருக்கா.” பத்மா சொல்ல, கேட்ட அன்பரசு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தார்.


“போதும்ங்க, ஊர் வாயில நின்னது போதும். வாழுற வயசுல ஒரு பையன் ஜெயில்ல இருக்கான். வீட்டுக்கு வந்த மருமகள் வாழவெட்டியா இருக்கா. நம்மால ஒரு உயிர் போயிடுச்சேன்னு, கயல் இப்பவரை மனசுக்குள்ள குமுறிகிட்டுதான் இருக்கா.”


“நம்ம பிள்ளைங்க சந்தோஷமா இருந்தா தானே நாம சந்தோஷமா இருக்க முடியும்.”


“இனியாவது உங்க ஜாதி வெறி எல்லாம் விட்டுட்டு, நம்ம பிள்ளைங்க, குடும்பம்ன்னு வாழப்பாருங்க.”


“ஒரு நாளாவது உங்க பிள்ளைங்களோட சேர்ந்து பேசி, சாப்பிட்டு இருப்பீங்களா?”


“இப்ப ஊருக்கு பெரிய மனுஷனா இருந்து என்ன சாதிச்சீங்க?”


“அதே பாருங்க, நம்ம கயல் குடும்பத்துல பிள்ளைங்க சந்தோஷத்தைதான் பார்க்கிறாங்க.”


“நம்ம பொண்ணைப் பார்க்கணும்னு, அவங்க மகளை இன்னும் ஒரு வருஷம் கழிச்சு மாசம் ஆகச் சொல்றாங்க, கயல் மாமியார்.”


“ஏற்கனவே உங்க மக அவங்க யாரையும் விட்டுக்கொடுத்து பேச மாட்டா, இனி தலையில தூக்கி வச்சுகிட்டு தான் திரிவா.”


பத்மா பேசியதை எல்லாம் கேட்ட அன்பரசு யோசிக்க, தன் கணவரை கவலையாகப் பார்த்து விட்டு பத்மா உள்ளே சென்றார்.