UUU - 46

Rudraprarthana

Well-Known Member
10395

வீட்டிற்கு வந்த பின்பும் கட்சியில் ஏற்ப்பட்ட கலகத்தின் விளைவாக பிரகாசத்திற்கு ஏகப்பட்ட அழைப்புகள் அவற்றை ஏற்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்ததில் தீபிகா அவரது மாலை நேர நடை பயிற்சியை நினைவு படுத்தவும் தான் மகள் இன்னும் வீடு வந்து சேராததே அவருக்கு நினைவு வந்தது. உடனே கீர்த்திக்கு அழைக்க அங்கு ப்ரீத்தி தன் கரத்தில் இருந்த கீர்த்தியின் கைபேசியை வெறித்து கொண்டிருந்தாளே அன்றி எடுத்தாள் இல்லை. மகளுக்கு அழைத்து ஓய்ந்த பிரகாசம் சரவணனுக்கு அழைக்கவும் அவரும் ப்ரீத்தி கூறியபடி கீர்த்தி அழுகையில் கரைந்து கொண்டிருப்பதை கூறவும் பிரகசாத்திர்க்கும் இதயத்தில் சிறு வலி எழத்தான் செய்தது..

பின்னே என்னதான் பதவியை தக்க வைத்து கொள்வது அவரது முதன்மை எண்ணமாக இருந்தாலும் அதில் மகள் எங்குமே காயப்பட்டு விடாமல் வளமான வாழவிற்கு மனதார தயாராக வேண்டும் என்றல்லவா பார்த்து பார்த்து சரணை அவள் வாழ்வில் இருந்து வெகு கவனமாக அகற்றினார்.

அது மட்டுமல்ல தன் தகுதிக்கு கீழான இடத்தில் இருக்கும் சரண் குடும்பத்துடனான சம்பந்தம் அவரது அரசியல் வாழ்வில் புகழை குறைப்பதில் தொடங்கி பல மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புண்டு..!! அன்று அமைச்சர் சொன்னது போல இங்கே அனைத்திற்கும் ஒரு கணக்குண்டு வெகு ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும், சரனை மணமுடிப்பது மூலம் தன் மகளுக்கு ஏதோ குறை இருப்பதாக சிலர் பேசவும் வாய்ப்பு உண்டு அல்லது கீர்த்தியின் நடத்தை குறித்த வதந்திகள் பரவவும் வாய்ப்பு உண்டு..!!

அதிலும் அன்று திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனில் உன் அஸ்திவாரத்தையே அசைத்து கவிழ்த்துவிடுவேன் என்ற அமைச்சரின் மறைமுக மிரட்டலும், அரசியலில் பல எதிரிகளை சம்பாதித்து வைத்து இருப்பதில் அவருக்கு எதிராக எதுவும் சாத்தியமே..!! என்பது அரசியல் சாணக்கியனான அவருக்கு தெரியாதா..??

சீராட்டி பாராட்டி வளர்த்த உயிரான மகளின் மீது கலங்க படுவதை ஒரு தந்தையாக அவரும் எவ்வாறு ஏற்பார்..!! குழந்தை வரமே கிடைப்பதர்க்கறிய செல்வம் எனும் போது எத்தனை ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் இறைவன் ஒருவருக்கு பெண் குழந்தையை அளிப்பான். அத்தகைய வரமாய் பெற்ற மகளை கொண்டாடும் பிரகாசத்திற்கு மகள் விடயத்தில் எவ்வித இடர்வாய்ப்பும் மேற்கொள்ளும் தைரியம் இல்லை. கல்லுக்குள் ஈரமா..? என்று கேள்வி எழுந்து நம்மை ஆச்சர்ய படுத்தினாலும் நிதர்சனம் அது தான்..!!

ஆம் முதலில் பல ஆதாயங்களுக்காக கீர்த்தியை வசுமதியிடம் இருந்து எடுத்து வந்திருந்தாலும் புதிதில் அவருக்கு குழந்தையின் மீது பெரிதாக ஈடுபாடு இல்லை. ஆனால் நாளைடைவில் காலம் செல்ல செல்ல குழந்தை தவழ்கையில், பொக்கை வாய் கொண்டு சிரிக்கையில் பிஞ்சு விரல் கொண்டு அவரை ஸ்பரிசிக்கையில் என்று மெல்ல மெல்ல அவரே அறியாமல் அவரது கல்நெஞ்சையும் கரைத்து சத்தமே இல்லாமல் கீர்த்தி அவர் மனதில் தன் தடத்தை ஆழ பதித்திருந்தாள். இது பெண் குழந்தைகளுக்கே உரித்தான இயல்பு அல்லவா..!! அவள் செய்த மாயத்தில் பிரகாசமும் தன்னியல்பில் இருந்து மாறி சிறுக சிறுக அவள் புறம் சாய்ந்திருந்தவருக்கு அதன் பின் மகளே அவருக்கு உலகாகி போனாள்.

அவள் முகத்தில் என்றும் வற்றாத புன்னகையை தவழ செய்வதில் அதீத சிரத்தை எடுத்து கொள்வார் பிரகாசம், இருக்கலாம் ஒருவேளை கீர்த்தி அவரது சொந்த ரத்தம் என்பதும் கூடுதல் காரணமாக இருந்திருக்கலாம்.., சொல்லப்போனால் இது நாள் வரை எவ்வித அரிதார பூச்சும், எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் அவராக தன்னியல்பில் இருப்பது கீர்த்தியிடம் மட்டுமே..!! காலம் இப்போது அன்பு மகளிடமே நடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளபட்டதில் பெரிதும் துடித்து போனார், ஆனால் அதுவும் மகளின் வளமான எதிர்காலத்திற்கு எனும் போது அதுநேரம் வரை மகளை ஏமாற்றுகிறோமே என்று தான் கொண்டிருந்த கசப்பை கடினத்துடன் விழுங்கியவண்ணமே அவளிடம் தன் நடிப்பை தொடர்ந்திருந்தார்.

அதிலும் ஏற்கனவே எழில் அவளை மறுத்த போது மகள் கொண்ட வேதனையை அருகே இருந்து பார்த்தவருக்கு அவளது இளகிய மனம் குறித்து நன்கு தெரியும்.. அதனாலேயே சரணையும் அவளறியும் வண்ணம் விலக்கி மற்றொரு வேதனையை பரிசளிக்க விருப்பம் இல்லை. ஆதலால் பல திரைமறைவு ஆட்டங்களை ஆடி மகளே சரணை நிராகரிக்கும் வண்ணம் நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். இதனால் மகள் உடைந்து போவாள் என்பதும் கண்ணீரே வற்றி போகும் அளவில் அவளது கதறல் இருக்கும் என்பதும் தந்தையாக அவருக்கும் தெரியும் அதேசமயம் மகளின் நேர்மை குணமும், தவறுக்கு துணை போகாத நிலையம், கொண்ட நியாயமான ஆசையில் உறுதி குறித்தும் நன்கு தெரிந்திருந்ததாலேயே அவளுக்கு பேசி புரிய வைக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தார்.

மேலும் எங்கே சரணை முன்னிறுத்தி மகளுக்கும் தனக்கும் ஒரு வாக்குவாதம் வந்து இறுதியில் மகள் சரணை பிரதானபடுத்தி விடுவாளோ என்ற அவரது அச்சமே சரண் மீதான அவரது வன்மம் அத்தனை கொடூரமாக மாறி இருந்தது.

மகளை குறித்த நினைவலைகளில் மூழ்கி இருந்த பிரகாசம் அப்போதுதான் இரவு கவிழ்ந்ததையும் மகள் வீடு திரும்பாததையும் உணர்ந்தவர் கைபேசியை எடுத்த அதேநேரம் புயலென பெரும் சீற்றத்துடன் உள்ளே நுழைந்திருந்தாள் அவரது அருமந்த புத்திரி.

"குட்டிம்மா" என்றழைப்புடன் மகளை சமாதான படுத்தவேண்டி தயாராக கண்களில் நீருடன் பிரகாசம் எழுந்து நிற்க வந்தவளோ இவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் கையில் இருந்த பையை விசிறி அடித்தவண்ணம் தன் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

குட்டி.. குட்டிம்மா என்று அவள் பின்னே ஓடிய பிரகாசத்தை அடைத்திருந்த கதவே வரவேற்க உள்ளே அழுகையினூடே பொருட்களை அடித்து நொறுக்கும் சத்தம் கேட்டு பிரகாசம் திகைத்து போனார்..!!


இருக்காதா பின்னே..!! இது நாள் வரை அதிர்ந்து கூட பேசியிராத மகள் எப்போதும் தன் மறுப்புக்களை கூட அழுத்தமான குரலில் அறிவிப்பாளே அன்றி ஒரு நாளும் ஆவேசம் கொண்டது கிடையாது இப்போதும் சரண் இல்லை என்று தெரிந்ததும் தன்னை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்ப்பாள் என்று அவர் எதிர்பார்த்திருக்கையில் இங்கே அவர் போட்ட கணக்கு தவறாகி அதற்க்கு எதிராகி போனதில் திகைப்பு இருப்பது இயல்பு தானே..??

என்ன அழைத்தும் மகள் பதில் அளிக்காமல் போக கதவை ஓங்கி அறைந்து பிரகாசம் அவளை திறக்க சொல்ல இவர்களின் சத்தத்தில் பின்புறம் இருந்த தீபிகாவும் ஓடி வந்து சேர்ந்திருந்தார். இருவரும் சேர்ந்து தட்ட ஒரு கட்டத்தில் பொருட்கள் உடையும் சத்தம் நின்று போக சில கணங்களுக்கு பின் என்றுமில்லாத ஆவேசத்துடன் ப்ரீத்தி கதவை திறந்திருந்தாள்.

"பாப்பா என்னடா இது..??" என்று விலகாத அதிர்ச்சியுடன் பாய்ந்து அறையினுள் நுழைந்த பிரகாசம் "என்னம்மா அச்சு..??" என்றவாறே அவள் உச்சியில் பதிய போன அவரது கரம் பாதியிலேயே நின்று போனது கண்ணாடி துண்டை தன் கழுத்தில் பதித்திருந்த ப்ரீத்தியை கண்டு..,

ஆம் கழுத்தில் துண்டை பதித்தவளின் ஆவேச உக்கிர கோலம் பெற்றோரை பெரிதாக பயமுறுத்த அவளோ பிரகாசத்திடம், "கிட்ட வந்த அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்கமாட்டேன்" என்று உரத்த குரலில் ஆக்ரோஷத்துடன் அவள் உதிர்த்த சொற்களில் சர்வமும் ஒடுங்கி போனது பிரகாசத்திற்கு, ஒருபுறம் விழிகள் தெரிக்க முகம் வெளிறி வியர்வை ஆறாக பொங்கி பெருகி அவர் சட்டையை நனைக்க மறுபுறம் மூச்சுவிடவும் மறந்தவரின் முகத்தில் ஈயாடவில்லை.

மகளின் கரத்தில் இருந்த கண்ணாடி துண்டு தலைக்கு மீது தொங்கும் கத்தியாக அவரை பயமுறுத்தி இதயதுடிப்பை ஏகத்திற்கும் எகிற செய்திருந்தது.


இருப்பினும் தைரியத்தை கூட்டி அவளை நெருங்கியவாறே, 'அம்மாடி' என்ற அடுத்த கணமே சற்றும் யோசிக்காமல் கண்ணாடி துண்டை ப்ரீத்தி தன் கரத்தில் இறக்கிட குருதி பீறிட்டு வெளியேற முன்னேறிய பிரகாசத்தின் கால்கள் அன்னிச்சையாய் இரண்டெட்டு பின்னே நகர்ந்தது.

ஒரு நொடி என்ன நடந்தது என்று கூட யோசிக்க முடியாமல் பெற்றோர் ஸ்தம்பித்து போயினர். மகளின் கையில் இருந்து கொட்டிய குருதியை கண்ட பிரகாசத்தின் உடலின் மொத்த குருதியும் வற்றிய நிலை தான்..!! எடுத்த உடனே உச்சகட்ட அதிர்ச்சியை அளித்து பிரகாசத்தின் சிந்திக்கும் திறனை ஒருங்கே தன் வசப்படுத்தி இருந்தாள் ப்ரீத்தி. ஆம் ஏற்கனவே மகளிடம் நடிக்கும் கொடுமையை கடினப்பட்டு விழுங்கி கொண்டிருப்பவருக்கு தற்போதைய மகளின் கோலம் அவரது கல்நெஞ்சை பலமாக அசைத்திருந்தது. மனம் முழுக்க மகளும், அவளது உதிரமும், அவள் ஆவேசமும் மட்டுமே நிறைந்திருக்க அவள் கூறியதை மறந்தவராக திரும்ப கீர்த்தியின் கரத்தை பற்ற போன போது உக்கிரகாளியாக மாறி இருந்தாள் ப்ரீத்தி.

*


"நோ நோ என்று ஆவேச மூச்சுக்களுடன் வேகமாக தலையை இருமருங்கிலும் அசைத்த ப்ரீத்தி, நீயெல்லாம் மனுஷனே இல்லை, நீ தொட்ட அடுத்த நிமிஷமே நான் பொணமாகிடுவேன் தள்ளிப்போஓஒ... தள்ளிப்போ " என்று இருகரங்களையும் ஆவேசமாக வீசியபடி சத்தமாக அறையே அதிர அவள் கர்ஜிக்க அதில் உடல் வெடவெடக்க பின்னே நகர்ந்திருந்தார் பிரகாசம்.

பாய்ந்து சென்று ப்ரீத்தியின் கரத்தை பிடித்த தீபிகா, "கீர்த்தி இது என்ன பைத்தியகாரத்தனம் என்னடா ஆச்சு உனக்கு..??" என்று வெட்டு பட்ட இடத்தை முந்தானை கொண்டு அழுத்தி பிடிக்க,

சட்டென அவர் தோள் சாய்ந்தவள் பெரும் கேவலுடன், "ம்மா போச்சும்மா.., போச்சு போச்சு எல்லாமே போச்சு" என்று கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் தேம்பியவள், அவ்ளோ தான்ம்மா எல்லாமே முடிஞ்சி போச்சு என்று தன் கண்ணீரை அவர் தோளில் அழுந்த துடைத்தவள்,

"உனக்கு தெரியுமாம்மா மாமா நான் வேண்டாம்ன்னு சொல்லி என்னை விட்டுட்டு போயிட்டார்.., அதற்க்கு காரணம் யார் தெரியுமா..???" என்று சிவந்த விழிகளுடன் பிரகாசத்தை பார்த்தவாறே அழுகையுடன் கேட்டவள் மீண்டும் துண்டை ஆவேசமாக கழுத்தை நோக்கி எடுத்து செல்ல பதறி போன தீபிகா அதை தட்டி விட்டு மகளை அனைத்து கொண்டவர்,

"கீர்த்தி கொஞ்சம் அமைதியா இருடா, என்ன ஆச்சு நீ எதுக்காக இப்படி நடந்துக்குற எதையும் பொறுமையா பேசலாம்" என்றவர் அப்போதுதான் பிரகாசம் ஆணி அடித்தார் போல அங்கே நின்றிருப்பதை கண்டவர்,

"என்னங்க பார்த்துட்டு இருக்கீங்க டாக்டருக்கு போன் பண்ணுங்க" என்று கூற, அப்போதுதான் தன்னிலை அடைந்தவர் இயந்திரகதியில் மருத்துவருக்கு அழைத்து பேச, அடுத்த அரைமணி நேரத்தில் ப்ரீத்திக்கு கட்டு போடப்பட பிரகாசமோ அறையின் மூலையில் உறைந்து போய் நின்றிருந்தார்.

மகளை தன் தோள் சாய்த்த தீபிகா, "இப்போ சொல்லுடா என்ன ஆச்சு..? என்று கேட்க

இல்லைம்மா இல்லை இனி எதை சொல்லி என்ன பிரோஜனம் எல்லாமே முடிஞ்சி போச்சு விடுங்க என்று அவர் கரத்தில் இருந்து விலகியவள் ஆவேசத்துடன் பிரகாசத்தின் அறைக்கு சென்று அவர் பீரோவில் இருந்து கற்றை பணத்தை எடுத்து வந்தவள் அதை பிரகாசத்தின் முகத்தில் விட்டெறிந்து, "இந்தா இதுதானே உனக்கு முக்கியம் இதுக்காக தானே என்னையும் மாமாவையும் பிரிச்ச போ போய் இதையே கட்டிட்டு அழு என்றவள் அங்கேயே மடங்கி அமர்ந்து மீண்டும் கதற தொடங்கினாள். கதறலிநூடே "ஏன்ம்மா ஏன் ஏன் என்னை காப்பாத்தின மாமாவே இல்லைன்னு ஆனபிறகு நான் எதுக்கு வாழனும், எனக்கும் கல்யாணத்துக்கும் ராசியே இல்லை.., நான் ஒரு அதிர்ஷ்டகட்டை யார் செஞ்ச பாவமோ இப்போ நான் அனுபவிக்கிறேன்" என்று தலையில் அடித்து கொண்டு அழுதவள்,

இப்போது தீபிகாவிடம் சென்று அவர் முன் மண்டியிட்டு "ஏன்மா என்னை பெத்த..??" என்று கரகரத்த குரலில் கேட்டவள் அவர் மடியில் முகம் பதித்து, "எதுக்காக என்னை பெத்த..??" என்று நெஞ்சம் விம்ம கேட்டவள் சட்டென அவரது கரங்களை எடுத்து தன் கழுத்தில் பதித்து,

"கொன்னுடும்மா உன் கையாலேயே என்னை கொன்னுடு நான் எதுக்கு வாழனும்.., யாருக்குமே என்னை பிடிக்கலை முதல்ல எழில் மாமா அலருக்காக என்னை வேண்டாம்ன்னு சொன்னாங்க, ஆனா இப்போ என்றவளின் பார்வை பிரகாசத்தின் மீது வன்மையுடன் படிந்தவாறே இப்போ சரண் மாமாவும் என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க" என்று அவர் கரத்தில் அழுத்தம் கூட்டி கூற, பதறிக்கொண்டு தன் கரத்தை விலக்கிய தீபிகா, மகளின் செய்கையில் பெரிதாக திகைத்து போயிருந்தார்.

ப்ரீத்தியின் கன்னத்தை வருடியவர் பாப்பா என்னடா சொல்ற அப்படி எல்லாம் எதுவும் இருக்காது நீ எதுக்காக இவ்ளோ கோபபடுற அமைதியா இருடா அப்பா அப்படி எல்லாம் விட்டுட மாட்டார் என்று கூறவுமே ஆக்ரோஷத்துடன் அவர் கரத்தை தட்டிவிட்டாள்,

"அப்பாவா..??" என்று பிரகாசத்தின் மீது வெறுப்பை உமிழ அதில் அவர் முதுகுதண்டுவடம் சில்லிட்டு போனது

"ஏன்மா அப்பா என்ன பண்ணாரு எதுக்கு அவர் மேல கோபபடுற" என்று கேட்க

"ம்மா என்னையும் மாமாவையும் பிரிச்சதே இந்த ஆளுதான்" என்று அவரை சுட்டி காட்ட.., மகளின் அந்நிய விளிப்பு பிரகாசத்தை பேரதிர்ச்சி கொள்ள வைக்க பேசும் திறனை அற்றவராக கண்ணீர் கரையோடிய முகத்துடன் மகளை பார்க்க, தீபிகாவோ அதை நம்ப இயலாதவராக பிரகாசத்தை பார்த்தவர், இல்லைடா கீர்த்தி நீ ஏதோ தப்பா புரிஞ்சிருக்க உங்கப்பா அப்படி இல்லை அவருக்கு நீதான் உயிர் உனக்காக எதையும் செய்வார் என்று மகளை சாந்த படுத்த முயல,

அதை அலட்சியபடுத்திய ப்ரீத்தி, "உனக்கு தெரியுமா இல்லை எனக்கு தெரியுமா..? என்று விழிகளை உருட்டிக்கொண்டு தீபிகாவிடமும் எகிறியவள் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னையில் திலக்கை சந்தித்ததாகவும் அன்று பிரகாசம் அலுவலகத்தில் சரணிடம் மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டிருந்ததை வெளியில் இருந்து கேட்டதாகவும் பின்னர் இருவருக்கும் கை கலப்பு ஏற்பட்டதாகவும் அதை குறித்து தான் சரணிடம் கேட்டபோது அவன் எதையும் கூறாமல் மழுப்பி விட்டு அடுத்த இரண்டு நாட்கள் தீவிரமான பண தேடலில் இறங்கியதாகவும் திலக்கும் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக அவனுக்கு உதவியதாகவும் மிக மிக அழகாக ஏற்ற இறக்கங்களுடன் அழுத்தமான வார்த்தைகளில் அவர்கள் நம்பும் விதமாக கதை புனைய அதை கேட்ட பிரகாசத்தின் முகத்தில் அவர் அழிவிற்கான அறிகுறி மிக பிரகாசமாக சுடர் விட தொடங்கியது.


தீபிகாவிடம் கதையை கூறி முடித்தவள் குறையாத ஆவேசத்துடன் பிரகாசம் புறம் திரும்பி, "அப்போ உனக்கு என்னை விட என்னோட சந்தோஷத்தை விட பண பெருசா போயிடுச்சி தானே இனி நான் எதுக்கு இந்த வீட்டில் இருக்கணும் நான் போறேன் நீ பணத்தை கட்டிட்டு அழு" என்றவள் ஆவேசத்துடன் தன் துணிகளை எடுத்து வைக்க,

அடுத்தடுத்து என்னவென்று கூட யோசிக்க அவகாசம் கொடுக்காமல் சூறாவளியாக ப்ரீத்தி சுழன்று அடிக்க அதில் பிரகாசம் என்ன பேசுவது என்று புரியாமல் கண்ணீர் கோடுகள் முகமெங்கும் வியாபித்த நிலையில் நின்றிருந்தார். ஆனால் அவர் மனமோ எத்தனை ஜாக்கிரதையாக அனைத்தையும் திட்டமிட்டு செய்திருக்க இப்போது அனைத்தும் மகளிடம் வெட்டவெளிச்சமாகி போனது எப்படி என்று எண்ணினாலும் இப்போது அவர் இருக்கும் நிலையில் அதை மறுத்து கூறும் திடமும் இல்லாது நின்றிருந்தார்.

பின்னே கனவிலும் அவர் நினைத்து கூட பார்க்க விரும்பாத மகளின் ஒதுக்கம் இப்போது கண்கூடாக அரங்கேறி தலையில் இடியாய் இறங்கியதில் துடி துடித்து போனாவருக்கு அதை தாண்டி எதையும் சிந்திக்கும் மனநிலை இல்லை.*

பிரகாசத்துடனான முதல் சந்திப்பை ப்ரீத்தி கூறி முடிக்கையில் மூவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி, "ப்ரீத்தி இது என்ன முட்டாள்தனம்..!! அந்த அய்யோக்கியனை பழிவாங்க போறேன்னு உன்னை காயபடுத்தி இருக்க" என்று பொறுக்கமாட்டாமல் எழில் கேட்க ப்ரீத்தியின் விழிகளை பளபளப்பு,

"வாவ் மாமா அப்போ நீங்களும் என்னோட நடிப்புல அசந்து நிற்க்குறீங்க போல" என்று வியந்தவள் எழிலின் முகத்தில் வருத்தம் தென்படுவதை கண்டு "கம்மான் மாமா நான் ஒரு டாக்டர் அதை மறந்துடீங்களே, அவ்ளோ கோபத்திலும் லேசா தோலை தான் கிழிச்சேன் ஆழமா இல்லை" எனவும்,

"இருந்தாலும் எதுக்கு ப்ரீத்தி இந்த விஷபரிச்சை ..!!"

"மாமா இங்க காதலே விஷபரிச்சை தான்..!! சொல்லபோனா தண்ணீரில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும் ஒன்னு இரண்டுமே கரை சேரும் வரை தத்தளிச்சிட்டு தான் இருக்கும். காதல் கைகூடுமா..?? காதலன் கை சேருவோமா..?? என்ற எண்ணம் அவங்களை நிலைகொள்ள விடாம தவிக்கவிடும். அன்னைக்கு காலையில் சரனை சந்திக்க போகும் போது கீர்த்தியும் அந்த மனநிலையில் தான் இருந்தா சரணை இழந்து விடகூடாது என்ற தவிப்பே அவளை தன்னிலையில் இருக்க விடாது செய்திருந்தது. அது தான் மாமா பிரகாசத்தை நெருங்குறதுக்கான என்னோட துருப்பு சீட்டு" என்று எள்ளலாக கூற,

அதை அனுபவித்து உணர்ந்திருந்த எழிலும் அலரும் மௌனமாக அவள் பேச்சிற்கு செவி மடுக்க ப்ரீத்தியும் அவர்களை ஒரு பார்வை பார்த்தவாறே தொடர்ந்தாள்.

"மாமா உண்மையா ஒருத்தனை காதலிக்கும் பெண் தன் காதல் கைகூடும் வரை போராடுவா, ஒருவேளை காதல் கைகூடாமல் போனா அவள் தன்னோட வாழ்க்கையையே தான் கொண்ட காதலுக்காக அர்பணிக்க தயங்க மாட்டா.., ஆனா எப்போ அப்பாவோட சூழச்சியால தன்னோட காதல் கல்யாண கனவு கலைஞ்சதுன்னு தெரிய வருதோ அப்போ அந்த பெண்ணோட கோபம் எல்லையற்றதா இருக்கும்.

அதிலும் கீர்த்தி மாதிரி உண்மை, நேர்மை, பற்று, கொள்கைன்னு இருப்பவளால அவனை மாதிரி மிருகத்தோட குள்ளநரிதனத்தை நிச்சயமா எத்துக்க முடியாது அந்த நிலை வரும்போது எவ்வளவுக்கு எவ்வளவு சாந்தமா அப்பா பேச்சுக்கு மறுபேச்சு பேசாம இருந்தாளோ இப்போ அதுக்கு நேர்மாறா நடந்துப்பா அவரை எதிர்த்து எரிக்கவும் தயங்க மாட்டா, இதெல்லாம் உளவியல் சார்ந்த விஷயம் மாமா..!!

நாங்களே பல சூயுசைட் கேசஸ் பார்த்திருக்கோம் . காதலன் கூட சேர முடியாம போகுற பெண்கள் அதிகளவுல மன அழுத்தத்துக்கு உள்ளாகி எக்ஸ்ட்ரீம் லெவல்க்கு போவாங்க அதாவது மனதளவில் ஆத்மார்த்தமான காதல் கொண்டிருப்பவர்களை சொல்றேன் என்றவள், இங்க அதே லாஜிக்கை தான் நானும் யூஸ் பண்ணேன்.

எப்படி..??

அலர் பிரகாசம் பண்ணின கேடுகேட்ட வேலையால சரண் கீர்த்தி கிட்ட கூட சொல்லிக்க முடியாம பாரின் போயாச்சு அது கீர்த்திக்கு தெரியாது அதே சமயம் அவளை பொறுத்த வரை இப்போ கீர்த்தியோட காதல் அபிஷியலா தோல்வியில முடிஞ்சிடுச்சி அதாவது என்று அழுத்தமாக எழிலை பார்த்தவள் அவளோட காதல் இரண்டாவது முறையா தோற்று போயிருக்கு அவள் வரையில் என்றிட,


அதை கேட்ட எழிலின் உடலில் சிறு அதிர்வு, "ப்ரீத்தி அதுக்கு பேர் காதல் இல்லை" என்று கண்டிப்பான குரலில் கூற,

"உனக்கெப்படி தெரியும்..??" என்ற கேள்வி அலரிடம் இருந்து புறப்பட்டாலும் அவள் பார்வை எழிலிடமே..!!

அதை கண்ட ப்ரீத்தியின் முகத்தில் புன்னகை எழுந்தாலும் கட்டுபடுத்தி கொண்டவள் அவளிடம், "அது தான் அன்னைக்கு ஊட்டியில மாமா கீர்த்தி கிட்ட பேசிட்டு இருந்தப்போ உன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிச்சதே..!! என்னடா இதுன்னு சரவணன் சித்தப்பா கிட்ட கேட்கவும் அவர் தான் சொன்னாரு கீர்த்தி மாமாவை லவ் பண்ணதையும் பெண் பார்க்க வந்தப்போ அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டு தெரியாத்தனமா வந்து உன்கிட்ட மாட்டிக்கிட்டதாகவும்" என்று கண்ணடித்து சிரிக்க,

அதை கண்ட எழிலோ, "ப்ரீத்தி என்ன இது..?? இப்போ இது ரொம்ப முக்கியமா..?? அவ கிட்ட வம்பிழுக்குறதை விட்டுட்டு அப்புறம் என்ன ஆனது அதை சொல்லு" என்று கண்டிப்பான குரலில் கூற,

"நீ பொண்ணு பார்க்க போனதால எவ்ளோ வினை பார்த்தியா..??" என்று முகம் சுருங்க அடக்கப்பட்ட குரலில் எழிலிடம் அலர் சீற,

நெற்றியை பிடித்து கொண்ட எழில், "ஏய் அப்படி எல்லாம் இல்லைடி, எல்லாத்துக்கும் எங்க அம்மா தான் காரணம்",

"அதே தான்டா கேட்கிறேன் அப்போ உங்க அம்மா சொல்லி இருந்தா நீ தாலியும் கட்டி இருப்ப அப்படி தானே..??? ஏன்ன்னா உனக்கு தான் வாயில கை வச்சாலும் கடிக்க தெரியாது " என்று அவனை முறைக்க,

"ஏன்டி உனக்கே நியாயமா இருக்கா..??? இத்தனை வருஷம் ஆகியும் இதை நீ விடமாட்டேன்கிற..???" என்று அவன் சலிப்புடன் கேட்க,

அதை கண்ட அலரின் இதழ்களில் சிறு கீற்றாக புன்னகை உற்பத்தி ஆக "இதுதானே எனக்கு என்டர்டெயின்மென்ட் அதை எப்படிடா செல்லம் விடமுடியும் என்று மனதார அவனை கொஞ்சியவள் வெளியில் புன்னகையை இயல்பாக மறைத்துகொண்டு முகம் கடுகடுக்க, "அது எப்படி விட முடிய..."

"முடிஞ்சதா உங்க பஞ்சாயத்து " ப்ரீத்தி எள்ளலாக வினவ,

"ப்ரீத்தி உன் டார்கெட் பிரகாசமா இல்லை நானா..?? "என்று வெற்று குரலில் கேட்டவன் "தயவு செய்து அங்க என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு எங்கயும் என்னை இழுக்காத நீ என் பேரை சொல்லும்போது எல்லாம் உள்ள பக்குன்னு இருக்கு..,இப்படியே போனா சேர்ந்து வந்த எங்களை பிரிச்சி தனித்தனியா அனுப்பிடுவ போல" என்றவன் தன்னருகே இருந்தவளின் தலையில் கொட்டி, "இவளும் எப்படா என்னை வச்சி செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும்ன்னு காத்துட்டு இருக்கா" என்று கூற,

சிறு புன்னகையுடன் தலையசைத்தவள் தொடர்ந்தாள்.

அதுக்கு அப்புறம் என்ன மாமா நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி போட்ட டிராமால அவன் பேயறஞ்ச மாதிரி நின்னான்.., கடைசியா அவன் முகத்துல கூட முழிக்க விரும்பலைன்னு சொல்லி அவங்க ரெண்டு பேரையும் ரூமை விட்டு வெளியே தள்ளி கதவை அடைச்சிட்டேன்.

ஒரு நாள் ரெண்டு நாளாகி வாரமாகியும் நான் கதவை திறக்கலை அதுவே அவனை ரொம்ப பாதிச்சிடுச்சி போல தினமும் என் ரூம் கதவு முன்னாடி வந்து அம்மாடி, பாப்பா, குட்டிம்மா, பட்டும்மான்னு ஏதாவது சொல்லிட்டு இருப்பான். எனக்கு அவன் குரலை கேட்டாலே அப்படியே பத்திக்கிட்டு வரும் தெரியுமா அலர் ஆனாலும் பொறுமையா இருந்தேன் நைட்ல அப்பப்போ மன அழுத்தம் அதிகமாகின மாதிரி சத்தமா கத்துவேன் ஆர்பாட்டம் பண்ணுவேன்.. சொல்லபோனா நான் அங்க போன அப்புறம் அவன் நிம்மதியா தூங்கி இருக்க மாட்டான்ன்னு தான் நினைக்கிறேன்.

அப்பப்போ மிசர்ஸ் தீபிகாவும் வந்து பேசுவாங்க கதவை திறக்க சொல்லுவாங்க சரண் கிட்ட பேசி சேர்த்து வைக்கிறோம்ன்னு சொல்லுவாங்க அப்போ எல்லா அவங்க கிட்ட அழுது ஒரு நடிப்பை போடுவேன் அதுல உருகி போய் அவங்க இந்த மாதிரி ஒரு காரியத்தை செஞ்சதுக்காக அவனை பேசுவாங்க. இப்படியே ஒரு மாசம் போச்சு ஒரு நாள் வந்து ரொம்ப ஒப்பாரி வச்சான் நெஞ்சை தொடுற மாதிரி பேசினான் முகத்தை பார்க்காட்டி கூட பரவாயில்லை வெளியில வர சொல்லி அழுதான். ஒருவேளை அன்னைக்கு நான் காட்டின கண்ணாடி துண்டை வச்சி நான் திரும்ப ஏதாவது செய்துபேன்னு பயந்துட்டான் போல.

"சரி நானும் இவன் தொல்லை தாங்கலையே அது மட்டும் இல்லாம அந்த ரூம்லயே அடைஞ்சு இருந்ததால நான் வந்த வேலையும் தொடங்க முடியலைன்னு சும்மா சொல்லி பார்ப்போமேன்னு சொன்னேன் ஆனா அவன் உடனே செஞ்சிட்டான்" என்றிட

"என்ன சொன்ன ..??"

நான் இந்த ரூமை விட்டு வெளியே வரணும்ன்னா அவன் அந்த வீட்ல நடமாட கூடாதுன்னு சொன்னேன். ஆனா பாரேன் என்ன அதிசயம் அடுத்த ஒரு வாரத்துலயே தோட்டத்துல ஒரு ரூம் கட்டிட்டு அங்க போயிட்டான். அவ்ளோ பாசம் போல பொண்ணு மேல என்று நக்கலாக கூறினாலும் அவள் விழிகளில் வெஞ்சினம் குடிகொண்டிருந்தது.

"அதுக்கப்புறம் என்ன..??"


அதுக்கு அப்புறம்..... என்று புருவம் உயர்த்தியவள் அவள் செய்த அதிரடிகளை பகிர மற்ற மூவரும் அசந்து போய் நின்றனர்.

ஹாய் செல்லகுட்டீஸ்..

இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

ருத்ரபிரார்த்தனா
 
Vatsalaramamoorthy

Well-Known Member
அருமையாக கொண்டு செல்கிறீர்கள் ருத்ரா..வாழ்த்துக்கள்.
இது கதையின் இரண்டாம் பாகமா? இன்னும் சில அத்யாயங்களில் கதை முடியும் என்று எழுதியிருக்கிங்க…I am littlebit confused. Please clarify.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement