Suspect no 1 - episode 4

Advertisement

Pragitha

Member

ஹாய் ப்ரண்ட்ஸ்,​

Suspect no 1 கதையோட அடுத்த அத்தியாயம் இதோ. கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அதனால் தான் தாமதம். மன்னித்து விடுங்கள்.​

கதையை படித்து விட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ். என்னோட நிறை குறைகளை தெரிந்து கொள்ள உங்க கருத்துக்கள் உதவும்.​

அத்தியாயம் 4:​

அந்த மாலை நேரத்தில் பூங்காவில் வயதான மனிதர்களும் , சிறு குழந்தைகளும் நடப்பது விளையாடுவது என அவர்களது வழக்கமான நிகழ்வுகளை செய்து கொண்டு இருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆங்காங்கே அமர்ந்து அவர்களை கண்காணித்து கொண்டு இருந்தனர்.​

சில குழந்தைகள் ஒளிந்து பிடித்து விளையாடினர். அதில் ஒரு சிறுமி பூங்காவின் கடைசி மூலையில் உள்ள இருக்கைக்கு பின்னால் ஒளிந்து கொள்ள சென்றாள். அந்த பூங்கா மிகவும் பெரியது. அதில் இந்த இடத்தில் தான் அதிகமான செடி கொடிகள் இருந்தன. அந்த இருக்கைக்கு பின்னால் ஒளிந்து கொண்டால் எளிதில் யாரும் கண்டுபிடித்திட இயலாது.​

அதனால் தான் அங்கு சென்றாள் அந்த சிறுமி. நன்றாக ஒளிந்து அமர்ந்து கொண்டு எட்டி எட்டி பார்த்தாள். அவளை காணமால் தேடி அலையும் நண்பர்களை‌ கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. அப்போது தான் அது நடந்தது.​

வேகமாக காற்று அடிக்கத் துவங்கியது. அந்த சிறுமியின் பின்னங்கழுத்தில் ஏதோ உரசுவது போல தோன்றவும் திடுக்கிட்ட‌ சிறுமி பின்புறம் திரும்பி பார்த்தாள். அடுத்த நொடி அவளது அலறல் அந்த பூங்காவை அதிர செய்தது. அவளுடைய நண்பர்கள் அவளது சப்தம் கேட்டு அங்கே சென்றனர். அங்கே கண்ட காட்சியில் அவர்களும் அலற பூங்காவே அதிர்ந்து போனது.​

பெற்றோர்கள் அவசர அவசரமாக சப்தம் கேட்ட இடம் நோக்கி ஓட அவர்களும் உறைந்து போனார்கள் தாங்கள் கண்ட காட்சியில். குழந்தைகளின் கண்களை மூடி அவ்விடத்தை விட்டு வேகமாக அழைத்து சென்றனர். யாரோ ஒரு மனிதர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.​

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பூங்கா பரபரப்பானது. ஏறத்தாழ பத்து போலீஸ் அதிகாரிகள் அங்கு குவிந்தனர். ஏற்கனவே போலீஸின் அறிவுரைப்படி பூங்காவில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பூங்கா பூட்டி வைக்கப்பட்டிருந்தது.​

காவல் துறையினர் பூங்காவின் கதவுகளை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அவர்கள் கண்ட காட்சி அவர்களையும் உறைய வைத்தது. வாழ்நாளில் இதுவரை இப்படி ஒரு கொடூரத்தை அவர்கள் கண்டது இல்லை. இனியும் காண்போமா எனத் தெரியவில்லை.​

சில அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு சற்று தள்ளி வந்து நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். சிலர் வாந்தி எடுத்து விட்டனர். பெண் பிள்ளைகளைப் பெற்ற சில அதிகாரிகளுக்கு கண்கள் கலங்க துவங்கியது. அவர்கள் அங்கு கண்டது ஒரு பெண்ணின் இறந்த உடலை.​

பூங்காவில் இறந்த உடலை கொண்டதற்காக யாரும் அஞ்சவில்லை. அந்த உடல் இருந்த நிலை தான் அவர்களுக்கு அதிருப்தியாக இருந்தது. உடனடியாக மருத்துவக் குழு பிரேத பரிசோதனை செய்ய அழைத்து வரப்பட்டனர். அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.​

காவல் அதிகாரிகள் நான்கு நாட்களாக தேடியும்‌ நிவியைப் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. முதல் இரு நாட்கள் சங்கருக்கு இருந்த அழுத்தத்தைக் காட்டிலும் அடுத்தடுத்த நாட்கள் அழுத்தம் அதிகமாகியது. அவனால் உண்ண உறங்க கூட முடியவில்லை. அதன் காரணமாக காண்போர் அத்தனை பேரையும் வறுத்தெடுத்தான்.​

ஹரிஷ் மறைமுகமாக அவனின் மீது அழுத்தம் தருவதை உணர்ந்தவன் ஹரிஷை பழிவாங்கும் நோக்கமாக நிவியின் அத்தனை தகவல்களையும் கூடவே அவள் ஹரிஷின் காதலி என்றும் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் சொல்லிவிட்டான் அவனுடைய பெயர் வெளிவரக் கூடாது என்ற நிபந்தனையுடன்.​

தமிழ் நாட்டின் நம்பர் ஒன் பணக்கார வாரிசான ஹரிஷை பற்றியும் அவனது காதலி என நிவியையும் தொலைக்காட்சிகளில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை காட்டிக் கொண்டு இருந்தனர். இது நிதிக் குடும்பத்திற்கு மேலும் ஒரு பேரிடியானது.​

நிவியின் வாழ்க்கை வரலாறு தோண்டப்பட்டு பரபரப்பான செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தது. நிவி குடும்பத்தின் மீதும் பல அவதூறுகள் வைக்கப்பட்டது. நிவி பணத்திற்காக தான் ஹரிஷை காதலித்தாள் என சில பேரும், நிவியின் குடும்பத்தினர் பணத்திற்காக அவளை வற்புறுத்தி ஹரிஷுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்ததால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்றும், சிலர் நிவிக்கு வேறொரு காதலன் இருந்ததால் அவனுடன் சென்று விட்டாள் எனவும் பேசினார்கள். காவல்துறையினர் வேறு விசாரணைக்காக அடிக்கடி நிவியின் வீட்டிற்கு வந்தனர். அது வேறு அக்கம் பக்கம் வீட்டினருக்கு புகைச்சலை உண்டாக்கியது.​

இந்நிலையில் திடீரென நிவியின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் நிவியின் மூத்த அண்ணி பானுவை கைது செய்தனர்.​

குற்றவாளி யார்??? நிவி எங்கே???​

 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top