Ramadan 2021- day 21 Prophet Muhammad

fathima.ar

Well-Known Member
#1
மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு செய்திருந்ததைக் கூறினார்கள்.

ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும் பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூலஹப் நின்றுகொண்டு “இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர் மதம் மாறியவர்; பொய்யர்” என்று கூறினான்.

இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம் பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில் எடுத்துரைத்தார்கள்.

ஹஜ் காலம் முடிந்தது. இறையழைப்புப் பணியை அதன் ஆரம்ப நிலையிலேயே கருவறுத்திட வேண்டுமென குறைஷியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

1) பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்:

இதுபோன்ற இழிசெயல்களால் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினர். அற்பமான வசைச்சொற்களால் நபி (ஸல்) அவர்களை ஏசினர். சில வேளைகளில் பைத்தியக்காரர் என்றனர்.

(நமது நபியாகிய உங்களை நோக்கி) “வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களை “சூனியக்காரர்’ என்றும் “பொய்யர்’ என்றும் கூறினர்.

(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 38:4)

வஞ்சகத்தனத்தையும் சுட்டெரிக்கும் பார்வைகளையும் நபி (ஸல்) அவர்கள் மீது வீசினர்.

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 68:51)

நபி (ஸல்) அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களைக் கேலி செய்வார்கள்.

நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் “எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?” என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனல்லவா? (அல்குர்ஆன் 6:53)

அதற்கு அல்லாஹ் அந்த வசனத்தின் இறுதியிலேயே பதிலளித்தான். மேலும், இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து எவ்வாறெல்லாம் பரிகசித்தார்கள் என்பதையும் விவரிக்கிறான்.

நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தாரிடம் சென்று விட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) “நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்” என்றும் கூறுகின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (அல்குர்ஆன் 83:29-33)

இவ்வாறு ஒவ்வொரு நாளும் கேலி, கிண்டல், குத்திப்பேசுதல் போன்ற இடையூறுகளை அதிகரித்துக் கொண்டே சென்றனர். இது நபி (ஸல்) அவர்களின் மனதைப் பெரிதும் பாதித்தது. இது குறித்து அல்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை, உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.)

பிறகு அவர்களது மன நெருக்கடியை அகற்றும் வழியைக் கூறி அவர்களை உறுதிப்படுத்துகிறான்.

நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து, அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள். உமக்கு “யக்கீன்’ (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள். (அல்குர்ஆன் 15:98,99)

மேலும் பரிகசிப்பவர்களின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதாக அல்லாஹ் உறுதியளிக்கிறான்.

பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம். இவர்கள் (உங்களைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 15:95, 96)

அதுமட்டுமின்றி அவர்களது தீய செயல்கள் அவர்களுக்கு எதிராகவே முடியும் என்பதையும் அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்தான்.

(நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. (அல்குர்ஆன் 6:10)

பக்கம் - 79 -

2) சந்தேகங்களை கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும்

ஏகத்துவ அழைப்பை மக்கள் செவியேற்று சிந்திக்க முடியாத வகையில் பல வகையான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். குர்ஆனைப் பற்றி இவ்வாறு கூறினர்:

இவை சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட வாக்கியங்கள்; நபி (ஸல்) அவர்கள் தாமே இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு கவிஞர்தான்; தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை; இரவில் பொய்யான கனவுகளைக் கண்டு பகலில் அதை வசனமாக ஓதிக் காட்டுகிறார்; நபி (ஸல்) அவர்கள் தாமாகவே அதைப் புனைந்து கொள்கிறார்; குர்ஆனை இவருக்கு கற்றுத் தருவது ஒரு மனிதர்தான்; குர்ஆனாகிய இது பொய்யாக அவர் கற்பனை செய்துகொண்டதே தவிர வேறில்லை இதைக் கற்பனை செய்வதில் வேறு மக்களும் அவருக்கு உதவி புரிகின்றனர்; இது முன்னோர்களின் கட்டுக்கதையே; காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது அதனை இவர் மற்றொருவரின் உதவியைக் கொண்டு எழுதி வைக்கும்படி செய்கின்றார் இவ்வாறெல்லாம் அந்த நிராகரிப்பவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப பிரச்சாரம் செய்து வந்தனர். (பார்க்க அல்குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4, 5)

சில வேளைகளில் குறி சொல்பவர்களுக்கு ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்வது போல நபி (ஸல்) அவர்கள் மீதும் ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்கின்றன என்றனர். இதை மறுத்தே பின்வரும் வசனம் அருளப்பட்டது.

(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே! (அல்குர்ஆன் 26:221-223)

அதாவது மக்களே! பாவத்தில் உழலும் பொய்யான பாவியின் மீதுதான் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள். நான் பொய்யுரைத்தோ பாவம் செய்தோ நீங்கள் கண்டதில்லை. அப்படியிருக்க இந்தக் குர்ஆனை ஷைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “இவருக்கு ஒருவகையான பைத்தியம் பிடித்துள்ளது. நல்ல கருத்துகளை இவரே சிந்தித்து அதை அழகிய மொழிநடையில் கவிஞர்களைப் போன்று கூறுகிறார். எனவே இவர் கவிஞர்; இவரது வார்த்தைகள் கவிகளே” என்றனர். அல்லாஹ் இவர்களுக்கு மறுப்பு தெரிவித்து, கவிஞர்களிடமுள்ள மூன்று தன்மைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றுகூட நபி (ஸல்) அவர்களிடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினான்.
 
fathima.ar

Well-Known Member
#2
பரிகாசம் செஞ்சு கிண்டல் செய்து, இப்படிலாம் பண்ணும்போது பொறுமையை கொண்டு அதை கடந்து வரணும் அதுதான் படிப்பினை..
ரொம்ப கஷ்டப் தான்ல
 
Hema27

Well-Known Member
#4
பரிகாசம் செஞ்சு கிண்டல் செய்து, இப்படிலாம் பண்ணும்போது பொறுமையை கொண்டு அதை கடந்து வரணும் அதுதான் படிப்பினை..
ரொம்ப கஷ்டப் தான்ல
மிக மிக கஷ்டம்
 
#5
நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவன்......!!!!
Very nice.....
Thanks for your daily updates
வாழ்க வளமுடன்
 
#6
Nice sis, பரிகாசத்தை எதிர் கொள்வது ரொம்பவே கஷ்டம். நேராக பரிகாசம் செய்பவர்களை எதிர்கொள்ள முடியும். முதுகுக்குப் பின் பரிகாசம் செய்பவர்களால் நமக்கு கஷ்டம் அதிகம்தான்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes