ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்

ஜெய் ஸ்ரீராம்

ஸ்ரீ ராமர் ஏன் உயர்ந்தவர்

மற்ற மஹா விஷ்ணுவின் அவதாரங்கள் பல வகை.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்ல வந்தவை
ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும்
உதாரண தத்துவ வடிவமாக வாழ வேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ஸ்ரீராம அவதாரம் மட்டுமே.

அயனம் என்றால் வழி என பொருள்
ஸ்ரீராமன் காட்டிய வழியே ஸ்ரீராமாயணம் ஆயிற்று

கம்பன் இப்படி சொல்கின்றார்
அவர் வரியில் தொடங்கலாம்.
"மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்"

ஸ்ரீராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம்
மூல மந்திரம்
அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது வால்மீகி சொன்னது.

ஸ்ரீராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடும் தாங்காது
உலகமும் தாங்காது.

காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் அவன் புகழை மானிட குலம் பாடுவற்கும் காரணம் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணம்

ஸ்ரீராமரின் வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தார்
உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான்
மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது
அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழ வேண்டும் என வாழ்ந்தும் காட்டினான்.

அப்படி சோகமும் பரிதாபமும் கண்ணீரும் நிறைந்த வாழ்வு அவனுடையது
ஆயினும் ஒரு நொடியிலும் அவன் தன் நிலை தவறவில்லை
மானிடன் எப்படி கர்மமே சுதர்மமாக கொண்டு வாழ வேண்டும் என வாழ்ந்த தத்துவம் அவனுடையது.

சகோதர்களுடனும் தாய்களுடனும் தந்தையின் ஒப்பற்ற பாசத்தில் வளர்ந்தவன் அவன்
அந்த வில்லை கூட சீதைக்காக அவன் உடைக்கவில்லை
விஸ்வாமித்திரர் சொன்னார்
உடைத்தான்
சீதைக்கு மாலையிடுவதை தசரதனே முடிவு செய்வார் என ஒதுங்கி நின்றார் ராமன்.
பெரும் அழகியும் அரசியுமான சீதையினை அடையும் பந்தயத்தில் வென்ற பின்பும் தந்தையின் அனுமதிக்காக காத்திருந்தார்.
தந்தை செய்தி அனுப்பி அனுமதித்த பின்பே அந்த சீதையினை தன் ஒரே மனைவியாய் ஏற்றும் கொண்டார்

மறுநாள் பட்டாபிஷேகம் எனும் நிலையில் அவன் அரசு மறுக்கபட்ட பொழுது அவர் கானகம் செல்லவேண்டும் என தசரதன் சொன்ன பொழுது "யாருக்கு என் அரசை கொடுக்கின்றேன்? என் தம்பிக்குத்தானே" என பெருமையாக சொல்லி கானகம் புகுந்த அவரை அயோத்தியே வணங்கி நின்றது

ஸ்ரீராமன் சென்ற இடமெல்லாம் தர்மங்கள் அரங்கேறின
அரக்கர் கூட்டமும் ஆணவமும் ஒழிந்தது
தர்மத்தை அவர் அப்படி காத்தார்
பெண்கள் மேல் அவருக்கு தனி இரக்கம் இருந்தது
சூர்ப்பநகையின் காதலை அவர் மறுத்து அவளுக்கு போதனையே செய்தார்
இது முறையன்று என் இயல்புமன்று என எவ்வளவோ போதித்தார்
(ஆனால் சீதை இருக்கும் வரை தன் காதலை ஸ்ரீராமன் ஏற்கப் போவதில்லை என அவளை கொல்ல முயன்ற சூர்ப்பநகையினை லஷ்மணன் மூக்கறுத்து விரட்டினார்)

தாடகையினை கொல்லுமுன் கூட விஸ்வாமித்திரரிடம் ஒரு பெண்ணை கொல்வது தர்மமாகாது என வேண்டுகின்றார்
"மானிட குலத்துக்கு எதிரான தர்மத்துக்கு எதிரான அக்கிரமிகளில் ஆண் பெண் பேதமில்லை" என அவன் குரு விளக்கிய பின்பே அவன் அவளை வதைக்கின்றார்
கல்லான அகலிகை ஸ்ரீராமனால் உயிர்பெற்றாள்
அப்பொழுதும் ஏற்க மறுத்தான் அவள் முனி கணவன் கௌதமர்
முக்காலமும் உணர்ந்த உனக்கே எது பொய்க் கோழி என தெரியவில்லையே
அவளுக்கு எப்படி வந்தவன் முனிவன் என தெரியும்?" என அவன் சொன்னபொழுது மன்னிப்பு கேட்டு அகலிகையினை ஏற்றார் முனிவர்.

மானிடருக்கு இருக்க வேண்டிய மிகப் பெரும் குணம் அவனுக்கு இருந்தது
அது எல்லா உயிர் மேலும் அன்பு.
ஆம் குரங்குகளை தனக்கு சமகாக அமர்த்தியவர் அவரே
கழுகு என்றாலும் ஜடாயுவுக்கு தன் உடன்பிறந்தவன் போல் காரியம் செய்தவரும் அவரே
தன்னை அறியாமல் அம்பால் குத்தப்பட்ட தேரைக்கும் அவன் அருள்பொழிந்தான் என்கின்றது ராமாயணம்
இதனாலே வானர கூட்டம் அவன் அடிபணிந்தது
ஹனுமன் தான் கண்ட மனித கடவுளாகவே அவரை வணங்கினார்கள்
கடைசி வரை கூடவே இருந்தார்கள்.

அந்த இலங்கை போரில் கூட ராவணன் திருந்த கடைசி வரை சந்தர்ப்பம் கொடுத்தார்
"இன்று போய் நாளை வா" என அவன் சொன்னது கடைசி இரவிலாவது அவன் திருந்தமாட்டானா எனும் ஒரு நம்பிக்கையன்றி வேறு என்ன?

ஸ்ரீராமனின் விஷேஷ குணங்களில் ஒன்று அரசுக்கு ஆசைப்படாதது
வாலியினை வீழ்த்தியபின் கிஷ்கிந்தா ஸ்ரீராமனுக்கே சொந்தம்
ஆனால் சுக்ரீவனுக்கு விட்டுக் கொடுத்தார்.
லங்காபுரியினினை வென்றபின் நிச்சயம் அதன் அரசன் ஸ்ரீராமனே
ஆனால் வாக்குப்படி விபீஷணனுக்கு விட்டுக் கொடுத்தார்.
சென்ற இடமெல்லாம் தர்மத்தை வாழ வைத்து அரியணை ஏற்றி வைத்து விட்டு வந்தான் அந்த கருணாமூர்த்தி

தன்னை நம்பியோரை எல்லாம் காத்தான்
யாரெல்லாம் அக்கிரமத்தின் கொடுமை தாங்காமல் அடைக்கலம் என வந்தார்களோ அவர்களை எல்லாம் அரணாக நின்று காத்தான்.
இலங்கை போருக்கு பின்பே அவன் அயோத்தி அரசனாகின்றான்
இன்று வரை ராம ராஜ்யம் என்ற அவன் ஆட்சிமுறை புகழப்படுகின்றது என்றால் அவனின் ஆட்சித் திறன் அப்படி

கவனியுங்கள்
ஒரு சலவை தொழிலாளி சீதை யோக்கியமா? என்றவுடன் அவன் தலையினை ஸ்ரீராமன் சீவவில்லை,
சிறையிடவில்லை
நாடு கடத்தவில்லை
மாறாக அவன் தன் குடிமகன்
தன் அரசின் கீழ் வாழ்பவன்
அவன் நம்பிக்கையினை பெறுவது அரசனின் கடமை என்றே சீதையினை தீக்குளிக்க சொன்னான்
அவனுக்கு சீதை பற்றி தெரியும்
அவளின் கற்பு பற்றியும் அவளுக்கு இருந்த சக்தி பற்றியும் தெரியும்
இதனால் அவளை முழுக்க நம்பி அதே நேரம் தன் நாட்டு குடிமக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே சீதையின் புகழ் அறியப்பட வேண்டும் என்பதற்காகவே தீயிலிறங்க சொன்னான்
அங்கு நெருப்பே அந்த தாயினை வணங்கியது

உலகிலே அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என சொன்ன அரசன் அவனே
அது உலகெல்லாம் புகழ்பெற்ற வரியாய் மாறிற்று
காலம் காலமாக தொடர்ந்தது
ரோமர்களின் சாம்ராஜ்யத்திலும் அந்த வரி ஒலித்தது
சீசருக்கு பல லட்சம் வருடம் முன்னாலே அதை சொன்னவன் ஸ்ரீராமன்
ஸ்ரீராமனின் புகழ் உலகம் முழுக்க பரவியிருந்தது
இன்னும் தாய்லாந்து முதல் இந்தோனேஷியா கிழக்கு சைனா வரை அவனின் வரலாறு உண்டு
அப்படி மேற்கிலும் பரவி இருந்த ஸ்ரீராமனின் புகழ்வரிதான் சீசர் சொன்னது
ஸ்ரீராமனின் அரசு தேவலோக அரசுக்கு நிகராய் இருந்தது.
அவன் பரதனிடம் கேட்கும் கேள்விகளின் தொகுப்பு அவன் விளக்கும் பல நிர்வாகங்களின் தொகுப்பு சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில் அப்படியே வரும்

ஆம் ஸ்ரீராமனே இங்கு எல்லா விஷயங்களுக்கும் எடுத்துக்காட்டானவன்
அவன் செய்த ராஜ நீதியே பின்னாளில் மனு நீதி சோழன் தன் மகனை பசுவுக்காய் கொல்லும் அளவு ஆட்சி கொடுத்தது
அவனின் பொய் சொல்லா குணமே அரிச்சந்திர கதையின் நாதம்
அவனின் சகோதர பாசத்தின் தொடர்ச்சியே பாரதம்
அவனின் அரச நீதியின் தொடர்ச்சியே சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம்
இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு

ஒருவனின் நற்குணத்தை பற்றி அவனின் நண்பர்களோ பலன் பெற்றவர்களோ சொல்வதில் அர்த்தமில்லை
அவனின் எதிரி என்ன சொல்கின்றானோ அதுதான் நிஜம்

ராவணன் மாயமான் உருவெடுக்க மாரீசனிடம் சொன்ன பொழுது ஸ்ரீராமனின் குணம் பற்றி வியந்துரைத்து அவனுக்கு துரோகம் புரிய முடியாது என மருவுகின்றான் மாரீசன்
ஸ்ரீராமன் உருவெடுத்தால் சீதை மயங்குவாள் என திட்டம் போட்ட ராவணன் ஸ்ரீராம உருவெடுத்து அந்த உருவில் தனக்கு மாபெரும் நல்ல குணங்கள் வருவதை உணர்ந்து அதை சட்டென மாற்றி கதறி அழுதான் என்கின்றது புராணம்

போர்க்களத்தில் ஸ்ரீராமனின் அழகையும் அவனின் வீரத்தையும் ஆயுதம் இல்லா தன்னை வீட்டுக்கு அனுப்பி நாளை வா என சொன்ன ஸ்ரீராமனிடம் மனமார தோற்றான் ராவணன்
லங்காபுரியில் அவன் அழகில் தோற்றாள் சூர்ப்பநகை
அவன் அன்பில் தோற்றான் விபீஷ்ணன்
அவன் வீரத்திலும் கருணையிலும் தோற்றான் ராவணன்
ராவணன் வாலியாலோ இல்லை கார்த்தவீரியனாலோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவன்
ஆனால் அவனின் பெரும் பக்தியின் பலன் ஸ்ரீராமன் எனும் நல்லவனால் கொல்லப்பட்டான்
இதை உணர்ந்தே மகிழ்வாய் உயிர் விட்டான் ராவணன்
இதைவிட ஸ்ரீராமனின் பெருமை சொல்ல என்ன உண்டு?

தந்தை பாசத்துக்கு எடுத்துக்காட்டான ஒருவன் உண்டா?
ஸ்ரீராமன் வாழ்வு சொல்லும்

ஒரு மூத்த சகோதரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யார் உதாரணம்?
ஸ்ரீராமன் வாழ்வு சொல்லும்

ஒன்றுமே இல்லா பராரி நிலையில் ஒருமனிதன் எப்படி இருக்க வேண்டும்?
ஸ்ரீராமன் வாழ்வு சொல்லும்

தந்தையும் மனைவியும் பிரிந்த நிலையில் அனாதையாய் நிற்கும் நிலையில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்?
ஸ்ரீராமனின் வாழ்வு சொல்லும்.

நம்பியோரை காப்பது எப்படி?
தர்மத்தை அரங்கேற்றுவது எப்படி?
அவன் வாழ்வு சொல்லும்

மனிதன் தன்னிலும் கீழான விலங்குகளிடமும் பறவைகளிடமும் கருணையாய் இருப்பது எப்படி?
அவன் வாழ்வு சொல்லும்

எல்லாம் தொலைத்த நிலையிலும் எதுவுமே இல்லா நிலையிலும் தர்மமும் கருணையும் ஒருவனிடம் இருந்தால் அவன் எப்படி மீள்வான்?
அதை அவன் வாழ்வு சொல்லும்

ராஜ்யமும் ஏராளமான‌ பெண்களும் ஏன் அந்நிய ராஜ்யங்கள் ஏராளம் கண்முன் நின்று தனக்காக ஏங்கினாலும் ஒரு மனிதன் எப்படி ஒதுங்க வேண்டும்?
ராமன் வாழ்வு சொல்லும்

நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும்?
தன் குடிகளை கண்காணித்து தன் மேல் எப்படி நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும்?
ராமனே உதாரணம்

இதனாலே யுக யுகமாக இந்த உலகில் ஸ்ரீராமனை வழிபட சொன்னார்கள்
அவன் கதையினை படிக்க சொன்னார்கள்

ஸ்ரீராமன் கதையினை முழுக்க வாசிக்கும் ஒருவனுக்கு அவனின் ஏதாவது ஒரு குணம் வரக்கூடும்
அவன் அதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக‌வே.

தான் வீரன் எனும் வாலியின் அகங்காரம் அவனால் ஒழிக்கபட்டது
அழகி எனும் கர்வம் கொண்ட சூர்ப்பநகையின் அகங்காரம் அவனாலே ஒழிக்கபட்டது
தாடகை அவனிடமே அடங்கி வீழ்ந்தாள்

மூவுலகை வென்ற ராவணின் அகங்காரம் அவனிடமே ஒழிந்தது
தன்னை வெல்ல சத்திரியன் எவனுமில்லை எனும் பரசுராமனின் அகங்காரமும் அவனிடமே ஒழிந்தது

அகங்காரம் ஒழிய ஸ்ரீராமனை வணங்குங்கள் என்றது இந்த பூமி
ஆற்றல் கொண்டவன் ஸ்ரீராமனை பணிந்தால் ஹனுமன் போல் தன்னிகரற்ற வாழ்வுக்கு வாழ்வார்
அகங்காரம் கொண்டவன் அழிவான் என சொன்னது

ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் (மனைவி) என வாழ்ந்தவன் ஸ்ரீராமன்..

ஸ்ரீராமனின் ஒரே குறை குறை காண முடியா வாழ்வினை அவன் வாழ்ந்தான் என்பதன்றி வேறல்ல‌
ஸ்ரீராமனை இங்கு எக்காலமும் நினைவில் நிற்க சொன்னார்கள்
அவனை அனுதினமும் வணங்கினால் அவனை போல் நற்குணத்தில் ஒன்று வரும் என்றார்கள்
அவன் அருள் பெருகும் என்றார்கள்
அருள் பெருகுமோ இல்லையோ ஸ்ரீராமனின் வாழ்வினை தியானிப்பவர்களுக்கு ஞானம் வரும்

மானிட வாழ்வு சிக்கலும் கண்ணீரும் கவலையும் மிகுந்தது
ஸ்ரீராமனுக்கு வந்த சிக்கலா நமக்கு வரும் என்ற தைரியம் பிறக்கும்

ஸ்ரீராமன் ராஜ்ஜியம் போனாலும் மனைவி பிரிந்தாலும் மீண்டும் பெற்றது போல் பெறுவோம் எனும் நம்பிக்கை வரும்
வனவாசம் மட்டும் செல்லாமல் இருந்தால் அவன் ஹனுமனை கண்டிருப்பானா?
குகனை கண்டிருப்பானா?
ராவண வதம் நடந்திருக்குமா?
இல்லை சலவை தொழிலாளியின் நம்பிக்கையினை பெற்று மாபெரும் அரசனாய் வீற்றிருப்பானா?
எல்லாம் நன்மைக்கே எனும் நம்பிக்கை பிறக்கும்

நல்லவனாய் இருப்போம்
ஸ்ரீராமனுக்கு ஹனுமன் போல நமக்கும் ஒருவன் வராமலா போய்விடுவான் எனும் தைரியம் பிறக்கும்

ஸ்ரீராமனின் பரசுராம மோதல் காட்சிகளை காணும் பொழுது அகம்பாவம் ஒழியும்
ஆட்சியாளர் படித்தால் நாமும் அப்படி ஆள வேண்டும் என்ற் ஆசை வரும்
வீரன் படித்தால் நாமும் ராமனைப் போல் தர்மப் போர் புரிய வேண்டும் என்ற வீரம் வரும்
குறைந்த பட்சம் குகனைப் போல் நண்பனை பெற வேண்டும் எனும் ஆசை வரும்
விபீஷ்ணன் சுக்ரீவன் ராஜ்யம் அவனுக்கு என்பதை போல் மண் ஆசை குறையும்
பரதனுக்கு நாடு கொடுத்த ஸ்ரீராமன் போல் நாமும் சகோதரனுக்கு விட்டு கொடுப்போம்
மண்ணாசை வராது
பேரழகி ஆனாலும் ஏறெடுத்து பார்க்க மாட்டோம்
இதனால் பெண்ணாசையும் வராது

இதனாலே ஒவ்வொரு மனிதனும் ஸ்ரீராமனின் கதையினை படிக்க வேண்டும் என்றது இந்த ஞான பூமி
இன்றும் இந்துக்கள் வாயில் "ராமா..." எனும் வார்த்தை சர்வ சாதாரணம்
அது அவர்கள் ரத்தத்தில் வந்தது
பூர்வ பூர்வ ஜென்மமாய் வந்தது அது இன்னும் வரும்
ஸ்ரீராமன் காலம் தோறும் யாரையாவது உலகிலும் இப்பூமியிலும் தொட்டுக் கொண்டே இருப்பான்,
பல ஆயிரம் வருடம் கழித்து அவன் ஆலயம் கட்டப்படுவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல
எகிப்து ரோம் இன்னும் பல மதங்கள் செத்தே விட்ட நிலையில் ராமன் ஆலயம் மட்டும் உயிர்த்தெழுவது எப்படி?
ஆம் அவனே தர்மம்
அவனே சத்தியம் அது ஒருக்காலும் அழியாது

ஸ்வாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ஸ்ரீராமனை ஏன் இந்து மதம் கொண்டாடுகின்றது
ஸ்ரீராமன் என்பதன் தத்துவ வடிவம் என்ன என்பதை இப்படி சொன்னார்
“ஸ்ரீராமபிரான் புராதன வீர சகாப்தத்தின் சின்னம்
தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்;
அறநெறிகளின் சின்னம் அவர்.
அது மட்டுமல்ல
முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன் ஒரு தந்தை ஒரு கணவன்
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டு வந்து ஸ்ரீராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.
அவருடைய அற்புதமான தூய மொழி மாசு மருவற்ற நடை அழகான மொழி அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ஸ்ரீராமபிரானை வருணிக்கிறார்.
ஸ்ரீராமனைப் போல ஒருவனை காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் ஆழமாக இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன்
வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும் நீங்கள் இன்னும் ஒரு ராமனை காணவே முடியாது
அவன் ஒப்பற்றவன்
ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய ஒருவனை காணமுடியும்"

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே."

ஸ்ரீராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
செல்வம், ஞானம் , புகழ், லஷ்மி கடாஷம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே விடுதலையும் கிட்டும்.
அந்த ஸ்ரீராமனை மனமார வணங்குங்கள்
வான் மேகத்தில் ஒரு துளியும் தாகம் தீர்க்கும் என்பது போல வைரத்தின் ஒவ்வொரு துண்டும் மின்னும் என்பது போல ராமனின் குணங்களில் ஒன்று ஒன்றே ஒன்று உங்களில் கலந்தால் போதும்
உங்கள் வாழ்வே மாறும்
அது சமூகத்தை மாற்றும்

ஹனுமன், விபீஷ்ணன், வால்மீகி, கம்பன், விவேகானந்தர், என ஏராளமான உதாரணங்களை சொல்லிக் கொண்டே இருக்க முடியும்
நிச்சயம் அதில் உங்கள் பெயரும் வரும்..
எல்லா இந்துக்களும் வால்மீகியினை போல் ஸ்ரீராமன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கின்றன‌ர்.

அவ்வளவு ஏன்?
காசியில் பரமேஸ்வரன் இறக்கும் தருவாயில் உள்ள உயிர்களை ராமா என்று சொல்லி முக்தி அளிப்பார்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top