லயம் தேடும் தாளங்கள் - இன்ட்ரோ

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க... உங்களை எல்லாம் சந்திக்கும் ஆவல் இருந்தாலும் இந்த கொரோனா லாக்டவுனில் ரொம்பவே லாக் ஆகி ஒருவழியா மீண்டு ஓடி வந்திருக்கேன்... பதிவைத் தாமதியாமல் சரியாய் கொடுக்கணும்னு என்னை வாழ்த்துங்கப்பா...

ஓகே கதைத் தலைப்பு - "லயம் தேடும் தாளங்கள்..." பிடிச்சிருக்கா...

சரி, குட்டியா ஒரு தொடக்கம் போட்டு வைக்கிறேன்... துவக்கமே எப்பவும் நம்ம கதைல உள்ள போல இல்லாம கொஞ்சம் மாறுதலா இருக்கும்... படிச்சிட்டு சொல்லுங்க... திங்கள் முதல் எபி கொடுக்கிறேன் டியர்ஸ்... சரி, கதைக்குப் போவோமா...

"லயம் தேடும் தாளங்கள்" - இன்ட்ரோ


மத்திய சிறை, கோவை.

“சக்தி...”

உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த சூரியனின் வெயில் நெற்றியில் வேர்வைத் துளிகளைப் பளபளக்க செய்ய வட்டமாய் தோண்டிய குழியில் கத்தரிச் செடியை வைத்து மண்ணிட்டு மூடிக் கொண்டிருந்த சக்தி காவலரின் அழைப்பில் நிமிர்ந்தான்.

“உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்களாம்... வார்டன் வர சொன்னார்...”

அவர் சொல்லவும் முகம் மலர்ந்தவன், “இதோ போறேன் சார்...” என்றுவிட்டு கை காலில் அப்பியிருந்த செம்மண்ணைக் கழுவுவதற்காய் தண்ணித் தொட்டியை நோக்கி நகர, “ம்ம்... நல்ல பிள்ளை... விதியால இங்க கிடக்குது...” யோசித்துக் கொண்டே நகர்ந்தார் அவர்.
நல்ல உயரத்தில் திடகாத்திரமான உடம்போடு இருந்த சக்திவேலின் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்னகை நிலை கொண்டிருந்தாலும் அதன் பின்னில் ஏதோ சோகம் அப்பிக் கிடந்தது. சிரிக்கும்போது அழகாய் தெரிந்தான்.

“என்ன சக்தி, செடியெல்லாம் நட்டாச்சா...” அருகில் கேட்ட முதிர்ந்த குரலில் திரும்பியவன், “இன்னும் இல்லிங்க ஐயா, விசிட்டர் இருக்காங்கன்னு சொன்னாங்க அதான்...” சொல்லிக் கொண்டே முகத்தை கழுவ, “ஓ... வீட்ல இருந்தா... சரி, சரி சீக்கிரம் போ...” என்ற பெரியசாமி சொல்லிக் கொண்டே மண்வெட்டியுடன் நகர்ந்தார்.

கோவை மத்தியசிறை வளாகத்தில் சிறியளவிலான திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்கப்படும் பணி நடந்து கொண்டிருந்தது. விவசாயத்திற்கு ஏற்ற நிலம் என்பதால் காய்கறிகளை சாகுபடி செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். சிறை விதிகளுக்கு கட்டுப்பட்டு நன்னடத்தையுடன் நடந்து கொள்ளும் தண்டனைக் கைதிகள் சிலரை அங்கு பணிபுரிய அதிகாரிகள் தேர்வு செய்திருந்தனர். இந்த திறந்தவெளிச் சிறைச்சாலையில் பணியில் ஈடுபடுத்தப்படும் கைதிகளின் தண்டனைக்காலம் சரிபாதியாகக் குறையுமென்பது கூடுதல் சிறப்பு. சக்திவேலும் அதில் தேர்வு செய்யப்பட்டிருந்தான்.

வேகமாய் பார்வையாளர்கள் காத்திருக்கும் இடத்திற்கு வந்தவனின் பார்வை ஆவலுடன் நோக்க அங்கே அவனது நகலாய் நின்றவனைக் கண்டதும் புன்னகைத்து பின்னில் பார்வையால் துளாவியவன் கண்கள் ஏமாற்றமடைந்தது.

“வெற்றி, பவியை அழைச்சிட்டு வரலியா...”

“ப்ச்... இல்ல, அடிக்கடி இங்கே அழைச்சிட்டு வர்றது நல்லதில்லன்னு தோணுச்சு...” அவன் சொல்லவும் சக்தியின் முகம் வாடியது.

“ம்ம்... அவ முகம் கண்ணுக்குள்ளேயே நிக்குது... பார்க்கணும் போல இருக்கு... கூட்டிட்டு வருவேன்னு நினைச்சேன்...” என்றவனின் குரல் தழுதழுக்க வெற்றி என்னும் வெற்றிவேலின் முகம் இறுக்கத்தைக் காட்டியது.
“எவ்ளோ பட்டாலும் உனக்கு புத்தியே வராது... இந்த சென்டிமென்ட்ஸ் எல்லாம் எப்பதான் விடப் போறியோ...”

“விடுடா, இது என் சுபாவம்... பழக்கத்தை மாத்தலாம், சுபாவத்தை மாத்த முடியாது...” சோகமாய் சொன்னவனின் மீது அழுத்தமாய் ஒரு பார்வையைப் பதித்தான் வெற்றி.

“நம்ம வீட்டை வாடகைக்கு கொடுத்துட்டு வேற ஏரியால வீடு வாடகைக்கு எடுத்துட்டுப் போயிடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்...”

“ம்ம்... வீடு பார்த்தாச்சா...” என்றவன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்ததால் ஏனென்று கேட்கவில்லை.

“ம்ம்... அம்மாவும் போன பிறகு அந்த வீட்டுல இருக்கவே பிடிக்கலை...”

“ம்ம்...” என்றவனின் குரலில் வருத்தம் தெரிந்தது.

“பவி...”
“அவளைப் பார்த்துக்க ஒரு ஆளை ஏற்பாடு பண்ணணும்...”

“சரி... வெற்றி, அவளை பத்திரமா...” சக்தி முடிப்பதற்குள், “அவ என் பொண்ணு, பார்த்துக்குவேன்...” என்றான் வெற்றி.

“ம்ம்... உனக்கு ரொம்ப சிரமத்தைக் கொடுத்துட்டேன்...”

“போதும்... நடந்த எதையும் பேசி பிரயோசனமில்லை... நான் வீடு மாறினபிறகு வந்து பார்க்கறேன்... வர்றேன்...” சொன்னவன் முகத்தில் கடுகளவும் சிரிப்பில்லை. செல்பவனின் முதுகையே ஒரு நிமிடம் வெறித்தவன் தனது செல்லுக்குத் திரும்பினான்.

வெற்றிவேலும், சக்திவேலும் ஒன்றாய் பிறந்த இரட்டையர்கள். உருவத்தில் ஒரே போல இருந்தாலும் இருவரின் குணமும் வேறு. சக்தி மிகவும் மென்மையானவன் என்றால் வெற்றி சற்று அழுத்தமானவன். சக்தி சாப்ட்வேர் என்றால் வெற்றி ஹார்ட்வேர்... சக்திவேல் எப்போதும் புன்னகைக்கும் வள்ளல் என்றால் வெற்றிவேல் சிரிக்கவே கணக்கு பார்க்கும் கஞ்சன். ஒன்றாய் பிறந்து, உடன்பிறப்பாய் மட்டுமின்றி புரிதலான நட்போடு வளர்ந்த இருவரின் வாழ்விலும் விதி சதிராடியதில் இரு துருவங்களாகிப் போயினர்.


“இந்து...”

சூரியன் மேற்கில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்க அழகழகான பூச்செடிகளின் நடுவே பெரிய பூச்செண்டாய் கையில் கட்டருடன் நின்று கொண்டிருந்தாள் இந்துஜா. செடிகளில் பழுத்த இலைகளை வெட்டிக் கொண்டிருந்தவள் அன்னையின் குரலில் நிமிர்ந்தாள்.

“வர்றேன் மா...”

சொல்லிக் கொண்டே கையில் இருந்த கட்டரை வைத்துவிட்டு “கி(ப)ட்ஸ் கார்டன்” என்ற பலகையைத் தாங்கி இருந்த சின்ன கட்டிடத்துக்குள் நுழைந்தாள். அங்கே கண்ணில் கண்ணாடியுடன் மேசை மீது ஒரு லெட்ஜரை விரித்து வைத்துக் கொண்டிருந்தார் அவளது அன்னை அகிலாண்டேஸ்வரி. அவருக்கு முன்னில் இந்துவின் தங்கை சிந்துஜா கால்குலேட்டரில் எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்.

“என்னமா, எதுக்கு கூப்பிட்டிங்க...”

“நியூ அட்மிஷன் பேமென்ட் ரெசிப்ட் எல்லாம் செக் பண்ணிட்டு இருந்தோம்... ஒரு பேமென்ட் இடிக்குது... நீ கொஞ்சம் பார்த்துடறியா...”

“என்ன அமவுண்ட் இடிக்குது...”

“அக்கா, ஒரு பத்தாயிரம் ரூபா ஷார்ட்டேஜ் வருது...”

“பத்தாயிரம்...” என்று யோசித்தவள், “ம்மா, பாங்குல ஏதோ செக் வருது, பாலன்ஸ் பத்தாதுன்னு அப்பாகிட்ட பாங்குல போட சொல்லி கொடுத்து விட்டிங்களே... அதுவோ...”

“அது இதுல இருந்தா எடுத்தேன்...” சொல்லிக் கொண்டே யோசித்த அன்னை சட்டென்று தலையில் தட்டிக் கொண்டு, “அட ஆமா, அப்பா ஆபீஸ் கிளம்புற நேரத்துல நிக்க வைக்க வேண்டாம்னு இதுல இருந்து தான் கொடுத்தேன்...” என்றார்.

“ம்ம்... அப்புறம் எப்படி ஷார்டேஜ் வராம இருக்கும்...” என்ற இந்துவிடம், “அக்கா, உண்மைலயே நீ நியாபகம் வச்சுக்கிறதுல ஒரு இரண்டாம் புலிகேசி தான்...” பாராட்டிய தங்கையை நோக்கி புன்னகைத்தவள், “ஓ இரண்டாம் புலிகேசி ஞாபகம் வைக்கிறதுலயும் புலியோ...” என்று கேட்க,

“யாருக்குத் தெரியும்... சும்மா அடிச்சு விட்டேன்...” என்று சொல்லிக் கொண்டே எழுந்து ஓடி விட, சிரிப்புடன் மீண்டும் தனது செடிகளிடம் செல்லும் மகளையே வேதனையுடன் நோக்கிக் கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி.

“ம்ம்... பட்டாம்பூச்சி போல சந்தோஷமா இருந்த பொண்ணு... இப்ப பூ, செடி மட்டுமே சந்தோஷம்னு அங்கயே கிடக்குதே...” கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.


-முழுமையான பதிவில் திங்கள் சந்திப்போம் நட்பூஸ்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "லயம் தேடும்
தாளங்கள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வருக வருக என்னருமை இனிய லதா செல்லமே வருக வருக
நீண்ட காலமாக உங்களை காணாமல் கண்களும் மனமும் ஏங்கி விட்டதுப்பா
புதிய கதை இன்ட்ரோவே ரொம்பவும் சூப்பரா இருக்கு
அப்டேட்டை எதிர்நோக்கி திங்கள்கிழமைக்கு ஆவலோடு காத்திருக்கிறேன், லதா டியர்
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "லயம் தேடும்
தாளங்கள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்

அன்பான வாழ்த்துக்கு நன்றி பானுக்கா...
 

banumathi jayaraman

Well-Known Member
மென்மையான சக்திவேல் ஏன் ஜெயிலுக்கு அதுவும் எங்கள் ஊர் ஜெயிலுக்கு போனான்?
சக்திவேலுவுக்கும் இந்துஜாவுக்கும் என்ன கனெக்க்ஷன்?
பவி சக்திவேலின் குழந்தையா?
"பவி"யின் முழுப் பெயர் நீங்கள் சொல்லலையே, லதா டியர்
கதையின் மீது ஆர்வத்தை இன்ட்ரோ அதிகமாக தூண்டுது
அப்டேட் சீக்கிரமா கொடுங்க, லதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top