மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 2

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
சந்தோஷமாய் அலுவலத்திற்குள் நுழைந்தவனுக்கு சுதன் கைகூப்பி வரவேற்பளித்தான்.‌ அவன் இப்படியெல்லாம் செய்கிறவன் இல்லையே என யோசித்துக் கொண்டே 'என்னடா வணக்கமெல்லாம்... புதுசா இருக்கு... ' என்றான் அபிநந்தன்...

'இல்லை மன்னா... தாங்கள் உள்ள பொறுப்பிற்கு தாங்கள் எந்நேரம் வந்தாலும் தங்களை இப்படி வரவேற்பது தான் தகும்...' என்றான் அந்த 'எந்நேரத்தில்' ஒரு அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே.. தன் வேலை எதையோ அவன் முடித்த கடுப்பில் தான் இவ்வளவு மரியாதை என உணர்ந்த அபிநந்தன்... 'மச்சி.. சாரிடா... எங்க வீட்டு பிசாசு என்ன படுத்தி எடுத்துட்டு இப்போ தான் காலேஜ் கிளம்பி போச்சு... அது கிளம்புன பிறகு தான் நான் வெளியேற முடிஞ்சது... சரி என்ன வேலை பார்க்கணும் இப்போ... எந்த காலேஜ் வர்றாங்க..' என்றான்.

என்ன தான் கோபமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும் அவன் தான் நண்பனின் நிலை அறிந்தவன் ஆயிற்றே... ஸ்ரீநிதாவின் குறும்பும் அவன் அறிந்ததே... என்ன பாடு படுத்தினாள் அபிநந்தன்‌ வீட்டிற்கு சென்ற போது. என்ன வார்த்தை பேசினாலும் எதாவது ஒரு சினிமா வசனத்தை வைத்து விட் அடித்துக் கொண்டே... கடைசியில் அவன் பேசும் வார்த்தைகளே தடுமாறிப் போகவும் பார்வதி தானே தன் மகளை அதட்டி சுதனைக் காப்பாற்றினாள்.‌ இவர்களது பேச்சின் உள்ளே வந்தால் தானும் மாட்டி விடுவோம் என அபிநந்தன் கூட அன்று எதுவும் பேசவில்லையே.. அவளைப் பற்றி அறியாமலா... எனவே மனம் இறங்கியவனாய்., 'சாரதா சக்தி காலேஜ்டா... நித்தி காலேஜ் தான்... ' என்றதும். பதறிப்போய்...'அய்யோ... என் தங்கச்சி வர்றாலா... ' என்றான். அவனது செயலைப் பார்த்து சிரித்துக் கொண்டே., 'அவ்ளோ பயமா மச்சி... அவ இல்லை... அவளுக்கு சீனியர் செட்...அதுக்கு தான் யார் யார் வர்றாங்கனு நேம்‌லிஸ்ட் நிரப்ப ஒரு‌ ஃபார்மும்., ஃபீட் பேக் ஃபார்மும் ப்ரிண்ட் பண்ண சொன்னாங்க.. நான் பண்ணி எடுத்து வச்சிருக்கேன் உன் ரூம்ல... அது சரிதானானு‌ பார்த்துக்க... ' என உரைத்தான்.

அபிநந்தன் நன்றியோடு பார்க்க.., 'என்ன அந்த வானத்த போல மனம்‌ படச்ச மன்னவனேவா... டேய் இந்த ரியாக்‌ஷன்லாம் குடுக்காம மரியாதையா போய் வர்றவங்களுக்கு ஃபைலும் ஐஸ்கிரீமும் குடுக்கணும்னு சொன்னாங்க... அந்த வேலைய பாரு... நிக்காத நெகத்துக்கு நெயில் பாலிஷ் வேற...' என்று சீறினான் சுதன். அவன் செய்த விதம் சிரிப்பை வரவழைக்க சிரித்துக் கொண்டே., 'சரிடா...' என தன் வேலையைத் தொடங்கலானான்.

சில நிமிடங்களிலேயே கல்லூரிப் பேருந்து வரும் ஓசை கேட்டது. உள்ளே வரும் பொழுது அனைவரிடமும் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பவேண்டும் என ஒரு படிவமும் அவர்களுக்கு கொடுக்கவென ஒரு தண்ணீர் பாட்டிலும் வரிசையாய் வாயில் அருகில் டேபிளில் எடுத்து வைக்கப் பட்டு இருந்தன. பேருந்து சத்ததைக் கேட்டதும் அபிநந்தனும், சுதனும் வாசலுக்கு விரைந்தனர். முதலில் அந்த துறையின் பேராசிரியர் வர அவரிடம் மரியாதையின் பொருட்டு நலம்‌ விசாரித்துவிட்டு சுதன்‌ அவரை உள்ளே கூட்டிச் சென்றான். அவருக்கு பின்னால் மாணவ மாணவிகள் வர தலையைக் குனிந்து ஃபீட்பேக் படிவத்தை எண்ணிக் கொண்டே முதலில் வந்த பெண்ணை நிறுத்தி., 'பாப்பா... இதுல சைன் பண்ணுமா...' என்றான் அபிநந்தன்.

சட்டென அந்தப் பெண்.., 'யாரு பாப்பா...' என்றாள். அவளது குரலில் அப்படியொரு அதட்டல்.. துணிவு தெரிக்கும் குரல்.. இதை எங்கேயோ கேட்டிருக்கிறேனே... என யோசித்துக் கொண்டே நிமிர்ந்தவன்,' சாரி மா.. சைன் பண்ணிட்டு போங்க ப்ளீஸ்....' என்றுவிட்டு மீண்டும்‌ தன் வேலையைத் தொடர்ந்தான். திடீரென்று தான் நியாபகம் வந்தது இரு வாரங்களுக்கு முன்னால் ரோட்டில் பார்த்த பெண் இவள் தான். அன்று நித்தியின் வண்டி பழுதாகிவிட இவனை தான் மாலையில் அழைக்க வரவென்று கூறியிருந்தாள். ஆசையாக சொன்னாள் என கூறிவிட முடியாது. ஆனால் தோழிகளிடம் தற்பெருமை அடிக்கவேனும் அவனை சொல்லியிருப்பாள். நித்தியின் எந்த தோழிக்கும் அண்ணன் இல்லையென்றாலும் அதைவிட அபிநந்தனின் கம்பீரமான அழகும், ஆறடிக்கு மீறியிருந்த வளர்ச்சியுமே முக்கிய காரணம்..

தங்கை மீண்டும் மீண்டும் கேட்க அவனும் மறுக்க இயலாமல் அன்று அவளது கல்லூரிக்கு சென்றிருந்தான். ஆனால் அவள் வர நேரமாகியதால் வண்டியை நிறுத்திவிட்டு அதன் மேல் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு சற்றுத் தள்ளி சில இளைஞர்கள்., அந்த கல்லூரி மாணவர்கள் போலும்., அவ்வழியாக கடந்து செல்லும் அணைத்துப் பெண்களையும் கிண்டல் செய்து கொண்டு இருந்தான். அப்போது தான் இவளைப் பார்த்தான். நல்ல அழகான பெண். நல்ல உயரம். கண்களில் ஒருவித செருக்கு குடிகொண்டு இருந்தது. இந்தப் பெண்ணை அவர்கள் என்ன பாடு படுத்தப் போகிறார்களோ என அபிநந்தன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் தொடங்கிவிட்டனர்.

'கோழி புடிக்குமா மச்சான்... ' என்றான்‌ ஒருவன்...

'என்ன கோழிடா... ' என மற்றொருவன் கேட்க முதலாமவன் ஒரு மாதிரிக் குரலில்., 'நாட்டுக் கோழிதான் மச்சி...' என்றான். பின் ஒவ்வொருவனாக இதே போல் பேச அதற்குள் அவள்‌ தன் நடையின் வேகத்தைக் குறைத்திருந்தாள். 'அவர்கள் பேச்சையா இப்படி மெதுவாக நடந்து சென்று கேட்டு ரசிக்கிறாள். என்ன பெண்கள் இவர்கள்.' என சரியாக அவன் நினைக்கும் நேரம் சட்டென்று அங்கிருந்த ஒருவனின்‌ சட்டையை பிடித்து ரோட்டிற்கு இழுத்தாள். பாதி பேர் அதில் சிதறி ஓடிவிட இருவர் மட்டும் அங்கேயே நின்றனர்.‌ தான் இழுத்து வந்தவனின் கன்னத்தில் அவள் வைத்த அறையில் அந்த இருவரும் ஓடிவிட., 'என்னமோ சொன்னியே.. இப்போ சொல்லுடா... இப்போ சொல்லு.. கோழியாம்ல கோழி... மூஞ்ச ஒடச்சிருவேன்...' என்றாள். அப்படி ஒரு குரல். அவ்வளவு சத்தம். அங்கிருந்த அனைவரும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவள் யாரையும் திரும்பிப் பார்க்கவேயில்லை.. அவன் அவளது கையில் இருந்து தன் சட்டையை விடுவிக்க முயன்று வெற்றி கிட்டாமல் அல்லாடிக் கொண்டு இருந்தான்.


வேறு வழியில்லை என அறிந்து அவன் தப்பித்துக் கொள்ளும் பொருட்டு 'நான் என்ன உன்னையவா சொன்னேன்...' என்றான். அவன் கூறி முடிப்பதற்குள் மற்றொரு அறை... 'அசிங்கமா இல்ல... தைரியமா இத தான்‌ சொன்னேன்னு உன்னால சொல்ல முடியல... இதுல எதுக்குடா இவ்வளவு சீன்... மரியாதையா கிளம்பிப் போயிடு... திரும்ப உன் மூஞ்சப் பார்த்தேன் அவ்வளவு தான்..' என அவனை பின்னால் தள்ளினாள்.

அபிநந்தன் பிரம்மித்துப் போய் பார்த்துக் கொண்டு இருந்தான். என்ன ஒரு தைரியம்.‌ யாராவது கேலி செய்தால் ஒதுங்கிப்‌போய் தான் அவனுக்கும் பழக்கமே.. ஆனால் இவள். அவள் சென்ற பிறகும் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். சரியாக நித்தியும் அந்நேரம்‌ வர., 'யாரடா சைட் அடிக்கிற... இரு அம்மாட்ட சொல்லுறேன்...' என்றாள். அவளிடம் ஒன்றுமில்லை என அவன் தலையை சிலுப்பிவிட்டாலும்., அடுத்த இரு நாட்களும்‌ அந்தப் பெண்ணைப் பற்றிய நினைப்பு வரத்தான் செய்தது.. ஆனால் மீண்டும் அவளைக் காணும் வாய்ப்பு‌ இல்லாது போகவே அவளை மறந்திருந்தான். இன்றோ அவளை மீண்டும் பார்க்கும்‌ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறைந்த பட்சம் அவளது பெயரையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என அவள் செல்லும் திசையை நோக்கித் திரும்பினான். சரியாக அந்நேரம் அவளை அருகில் இருந்தவள்., 'மது...' என அழைக்கும் ஓசை கேட்டது..

சட்டென்று நியாபகம் வந்தவன்., அந்த பெயர் படிவத்தை எடுத்து 'மது' என ஆரம்பிக்கும் பெயரை தேட ஆரம்பித்தான்... மூன்றாம் பெயரே அவளுடையது தான்...

மதுமித்ரா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top