மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 1

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
கண்களுக்குள் சூரிய வெளிச்சம்‌ உறுத்த ஆரம்பித்தது. வீட்டில் வளர்க்கப் படும் கிளியும் கத்திக் கத்தி அவனை எழுப்ப முயன்று தோற்றுப் போய் திரும்பிக் கொண்டது.. கண்ணுக்குள் உறுத்தும் வெளிச்சத்திலும், தன் கிளியின் சத்தம் ஓய்வதிலுமாய் மெல்ல கண்களைத் தேய்த்துக் கொண்டே விழித்த அபிநந்தன் அப்போது தான் மணியைப் பார்த்தான்.. 8:15 என அது காட்டிக் கொண்டிருந்தது. தடாலென்று எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்த சத்ததைக் கேட்ட அவனது அம்மா பார்வதி சமையற்கட்டில் இருந்து வேகமாக வந்து அவனைப் பார்த்தாள். தூக்கத்தில் இருந்து விழிக்கும் சிறுபிள்ளை போல் தன் மகன் கண்ணைத் தேய்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தது., அவளை மீண்டும் பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. எப்படி இருக்க வேண்டிய பையன்.. ராஜவம்சம் தான். ஆனால் இப்போது யார் நம்புவார்கள்.

நல்ல செழிப்பான குடும்பமாய் தான் இருந்தது அவனுடையது. அபிநந்தனின் தாத்தா வழி சொத்து தான் அனைத்தும். அதனால் அவனது அப்பா ஈஸ்வரனுக்கு சம்பாதிக்கும் தேவையே இல்லாது போயிற்று.. ஆனால் குந்தித் தின்றால் குன்றும் மாலுமே... தின்றாலே இந்த நிலை என்றால் எந்நேரமும் குடியென்று இருந்தால்.. சில வருடங்களிலேயே நிலை தலைகீழாய் மாறிப்போனது. பார்வதி தைரியமான பெண் தான். ஆனால் திருமணமான முதல் வருடம் அபிநந்தன் பிறந்து விட்டான்.‌ அடுத்த நான்கு வருடங்களில் ஸ்ரீநிதாவும் பிறந்துவிட அவள் அந்நேரம் தான் தன் கணவனை திருத்த முயன்றதெல்லாம் ஒன்றுக்கும் ஆகாது என புரிந்திருந்தாள். ஈஸ்வரனும் முழுக்க மோசமானவன் என்று கூற இயலாது. பாதி பணத்தை குடிக்க எடுத்தான் என்றால் மீதியை குடுக்க தான்‌ எடுப்பான். உதவியென்று எவரும் வந்து நின்றால் சட்டென்று இளகிவிடும் மனம் கொண்டவன். விசாரிக்காமல் கொடுப்பவனும் அல்ல... தன்னுடனேயே ஒருவனை வைத்திருப்பான். அவன் பெயர் பிரகதீசன். ஈஸ்வரன் குடித்துவிட்டு விழும் போதெல்லாம்‌ அவனை வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பதற்கும்., யாருக்கும் பணம் தர நினைக்கிறான் என்றால் அதை விசாரித்து சொல்வதற்கும் பிரகதீசன் மட்டுமே அனுமதிக்கப்பட்டவன். அவன் ஏன் குடிக்க ஆரம்பித்தான்‌ என இன்று வரை பார்வதிக்குமே தெரியாது.

அவள் அதை தெரிந்துகொள்ள முயன்றதும் இல்லை... ஈஸ்வரன் குடிபோதையில் வண்டி மோதி இறந்தபோதும் பதறிக்கொண்டு வந்து கூறியவன் அந்த பிரகதீசன் தான். ஈஸ்வரன் தன் புல்லட்டை எடுத்தான் என்றாலே ராஜ தோரணை தான். சொத்துகளை விற்று அழித்த போதிலும் அந்த வண்டியை பத்திரமாகவே வைத்துக் காப்பாற்றினான். ஆனால் அவன் இறந்ததும் பார்வதி மொத்தமாய் நம்பிக்கையை இழந்திருந்தாள். அந்த ஊரில் இருந்தால் அவளுக்கு தன் கணவன் நினைப்பே வாட்டி எடுத்தது. அங்கிருந்தால் ஒன்றும் ஆவதற்கில்லை‌ என சில நாட்களிலேயே புரிந்து விட்டது.‌ இருந்த கொஞ்ச நிலத்தில் பாதியை பிரகதீசனுக்கு கொடுத்துவிட்டு மீதியை விற்று பணத்தை எடுத்துக் கொண்டு நகர்ப் பக்கம் வந்துவிட்டாள். அங்கிருந்து கொண்டு வந்தது ஒரே ஒரு பெட்டி தான். பின் தனக்குத் தெரிந்த பலகாரம்‌‌ சுடும் வேலையை தெரிந்தவர்களுக்கு என்று செய்து கொடுக்க ஆரம்பித்து பின் நாளடைவில் 4 பெண்களை வைத்து பலகாரம் சுட்டு கடைகளுக்கு போடும் அளவிற்கு வளர்ந்து கொண்டாள்.

அபிநந்தனையும், ஸ்ரீநிதாவையும் அவளே தான் படிக்க வைத்தாள். அபிநந்தனுக்கு தொழிற் தொடங்கவென்று தீராத ஆவல் இருந்து. வேறு ஒன்றும் இல்லை. தன் தாயின் கைப்பக்குவம் அவன் அறிந்ததே..‌ அதை வைத்தே தான் அப்படி பலகாரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நிறுவ வேண்டும் என்பது அவனது கனவு. ஆனால் அவர்களது நிலை தான் இப்போது வேறாயிற்றே... பணம் என அம்மாவிடம் கேட்கக் கூடாது என்பதில் தீர்க்கமாய் இருந்தான். எனவே படித்து முடித்ததும் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பெரிய ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் தரம் சரிபார்க்கும் துறையின் பொறுப்பில் இருக்கிறான்.

சட்டென்று குக்கர் விசில் எழுப்ப தன் நினைவில் இருந்து கலைந்தவள் இன்னும் தன் மகன் கண்களைத் தேய்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தாள். கன்னத்தைக் கிள்ளி அவனை கொஞ்ச வேண்டும் என ஆவல் எழ அதை அடக்கிக் கொண்டவளாய்., 'போதும் அபி.. கண்ணு வெளிய வந்து விழுந்துடப் போகுது... ' என்றாள்.

'ஏம்மா என்ன எழுப்பல... நேரம் என்ன ஆச்சு பார்த்தியா...' என்றான் மீண்டும் தன் கண்களைக் கசக்கிக் கொண்டே...
'நீ என்கிட்ட எப்போடா சொன்ன... எனக்கு நீ வேகமா எழுந்திருக்கணும்னே தெரியாது...' என அவள் பதில் உறைத்த பின் தான் அவனுக்கு நியாபகம்‌ வந்தது அவன் அம்மாவை எழுப்பச் சொல்லவேயில்லை என.. மெல்ல தன் கழுத்தை வலப்பக்கமாக திருப்பிப் பார்த்தான் அவனுக்கு இரண்டடி இடைவெளி விட்டு அவனது அன்புத் தங்கை படுத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவளை நம்பி‌ கூறியது எவ்வளவு பெரிய தவறு. அலாரம் அடித்தால் தான் எழுவதில்லை என்று அறிந்து தானே அவளிடம் கூறினான்.

நேற்று இரவு ஸ்ரீநிதாவிடம்., 'என்னை மறந்துடாம எழுப்பிடு டீ... வேகமா போகணும்... எதோ காலேஜ்ல இருந்து ஐ.வி வர்றாங்களாம்... என்னை‌ தான் இன்சார்ஜ் ஆக்கி இருக்காங்க...' என அவன் கெஞ்சியதும்., சரியென்று ஒரு பார் சாக்கலேட்டும், 100 ரூபாயும் வேண்டும் என்று அவனிடம் கட்டளையிட்டுவிட்டு அண்ணன் நம்பவில்லை எனவும் அவனிடம்‌ தன் கணக்கு பரிட்சையின் மேல் சத்தியம் செய்துவிட்டு தான்‌ உறங்கினாள். இப்பொழுதென்றால் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறாள்.

கோபமாகி ஓங்கி அவளது காலில் அடித்தான். அவள் அவன்‌ அடித்த அடியில் விருட்டென்று எழுந்து அமர்ந்துகொண்டு., 'எதுக்குடா அடிச்ச... இரு உன்ன அம்மாட்ட சொல்லித் தர்றேன்...' என்றாள்.

'மணி என்னாச்சு தெரியுமாடீ...' என்றான் எரிச்சலுற்று..

'8.15 டா... இது கூட தெரியால.. உனக்கெல்லாம் எப்படி தான் வேலை குடுத்தாங்களோ... உங்க எம்.டி கிட்ட நான் பேசணும்... நம்பர் இருக்கா... எனக்கு‌ கூட‌ இன்னைக்கு வாலிபால் ப்ராக்டீஸ் உண்டு... நான்‌ என்ன உன்ன மாதிரி கூவிட்டா இருக்கேன்' என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே...

'உனக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆகிக்கிட்டே போகுதுடீ... இதுல மேத்ஸ் பரிட்சை மேல சத்தியம் வேற... நீ ஃபெயில் தான்டீ.. போ.. உனக்கு சாக்லேட்டும் கிடையாது ரூபாயும் கிடையாது உதைப்பதற்குள் ஒடிவிடு... ' என இம்சை அரசன் வடிவேலுவின் குரலில் கூறிக்கொண்டே எழுந்து தன் பிரஷ்ஷில் பேஸ்ட்டை வைத்தான்.

'என்னண்ணா இப்படி சொல்லிட்ட... நான் அலாரம்லாம் வச்சேன்..‌ ஆனா அது ஏன் அடிக்கலனு‌ தெரியல... அப்புறம் அண்ணா.. இன்னொரு முக்கியமான விஷயம்...' என இழுத்தாள்.

வாயில் பிரஷ்ஷை வைத்துக் கொண்டே., 'வேற என்ன இம்ச...' என்றான்.

'நீ எனக்கு சாக்லேட்டும் தர வேணாம்.. ரூபாயும் தரவேணாம்.. சாக்லேட்டும் 70 ரூபா... அதனால நானே உன் பர்ஸ்ல இருந்து எடுத்துக்கிட்டேன்.. ' என கூறிக்கொண்டே பாத்ரூமினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

தான் வேகமாக குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என பல் தேய்க்கத் தொடங்கியவன் அவள் உள்ளே சென்று கதவடைக்கவும் எரிச்சலாகிவிட்டான். இதில் எழுப்பாமல் விட்டுவிட்டு 170 ரூபாயை வேறு எடுத்துக் கொண்டாள். பாத்ரூமின் கதவை இருமுறை பலமாக தட்டினான்... ஆனால் அவள் தான் திறப்பதாய் இல்லையே..

தரை அதிர நடந்து சென்று தன் தாயிடம்., 'பாருமா... உன் மகள... நான் கிளம்பணும்னு சொல்றேன்.. அவ என்னடானா முதல்ல உள்ள போய்ட்டா... நான் இப்போ எப்படி கிளம்புறது... இதுல என் ரூபாயை வேற எடுத்துட்டா...' என்றான்.

உள்ளூற பிள்ளைகளின் சண்டையௌ ரசித்தாலும் அதைக் காட்டிக்‌கொண்டால் மகன் கோபப் படுவான் என அறிந்து., 'உங்களுக்கு வேற வேலையில்ல... நீ மாடில போய் பல் தேய்... அவ வந்ததும் குளிக்கப் போ...' என்றுவிட்டு தன் சமையலைத் தொடர்ந்தாள்.

'பிசாசு... பிசாசு... குட்டிப் பிசாசு... எவன்‌ வந்து மாட்டப் போறானோ... ஆழ்ந்த அனுதாபங்கள்டா... ' என வாய்க்குள் முனகிக் கொண்டே சென்ற மகனை ரசித்துப் பார்த்தாள். கிட்டத்தட்ட குடும்பச் சுமை முழுதும்‌ அவன் மேல் தான். இதில் அவனுக்கு வாங்கிய படிப்பு கடன், அவளுக்கு வாங்கிய படிப்புக் கடன் வேறு.. ஆனாலும் விளைடாட்டுப் பிள்ளையாய் இருக்கிறானே... அவனுக்கு பொறுப்பில்லை என கூற முடியாது. அவன்‌ தான் இப்போது வீட்டை நிர்வகிப்பதே... அவளுடைய பலகாரங்களை கடைகளுக்கு போடலாம் என அறிவுரை வழங்கியதும்‌ அவன் தான். ஆனால் வீட்டுச் சுமை அவனை பிள்ளை மனதை முதிர்ச்சி அடையச் செய்யவில்லை என்று அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.

இருவரும் குளித்து முடிக்கும் வரையிலும் வீடு போர்க்களமாகவே காணப்பட்டது... சாப்பிட அமர்ந்தவுடனும் அப்படித்தான். அவனுக்கு என சுட்டு எடுத்து வந்த இரு தோசைகளையும் நித்திக் குட்டி பிடுங்கிக் கொள்ள... அதற்கும் சண்டை தான். சரியாக ஒன்பது மணியளவில் இருவரும் கிளம்பிவிட்டனர். வீடு வெறிச்சென்று இருந்தது... பிள்ளைகள் வீட்டில் இருந்தால் நன்றாகத் தான் இருக்கிறது என எண்ணிவிட்டு பெருமூச்சொன்றை எறிந்துகொண்டே தன் பலகார வேலைகளை கவனிக்கக் கிளம்பினாள்..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மாதவன்
பூங்குழல் மந்திர
கானமே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மதுரயாழினி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top