நீயாக நான், நானாக நீ 4

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...:giggle::giggle::giggle: இதோ அடுத்த எபி போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:):):)

உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு டிஸ்கி... இந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல... இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே...:giggle::giggle::giggle:

eiP0GRT7070.jpg

அத்தியாயம் 4

(இனி ஆகாஷ், பூமி என்ற பெயர்கள் அவர்களின் ஆத்மாக்களை குறிக்கும்… உடல்களை அல்ல…)

ஆகாஷ் கொடுத்த ஆடையை அணிந்து அறையை விட்டு வெளியே வந்த பூமி, நடுகூடத்தில் அமர்ந்து, ஆகாஷின் அறையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ப்ச் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கான்… எவ்ளோ நேரம்… ஒரு வேள ப்ரோமிஸ்ஸ மறந்து பார்த்திருப்பானோ… ச்சே அவ்ளோ மோசம் கிடையாது அந்த கருவாயன்…” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவளை மேலும் சில நேரம் காத்திருக்க வைத்தே கதவைத் திறந்தான் ஆகாஷ். அவனைக் கண்டு தலையிலடித்துக் கொண்டாள் பூமி. ஏனெனில் அவன் இருந்த கோலம் அப்படி..

தலைமுடி கலைந்து முகத்தை மறைத்திருக்க, துப்பட்டாவோ ஒரு பக்கம் சரிந்து தொங்கிக் கொண்திருந்தது. அவனோ பின்னால் இருக்கும் கயிறைக் கட்ட படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

“அடேய் என்ன டா இது…” என்று பூமி கோபமாக கேட்க, “அதே தான் டி நானும் கேக்குறேன்… என்னது இது… முடியா இது… அங்கங்க கொதறி வச்சுருக்க… இத சீவுறதுக்கு தான் இவ்ளோ லேட்டாச்சு… என் பொறுமைய இழுத்து பிடிச்சு சீவுனா, இங்க பாரு இப்போவே முகத்த மறைச்சுக்கிட்டு இருக்கு…” என்று ஆகாஷ் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, அவனை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் பூமி.

அதைப் பார்த்ததும் சற்று அடங்கிய ஆகாஷ், “சரி சரி வா கிளம்பலாம்…” என்றான்.

“என்னது கிளம்புறதா… இப்படியே வெளிய போகப் போறீயா… உனக்கு கொஞ்சமாச்சும் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கா…” என்று கத்தத்துவங்க, ஆகாஷோ பாவமாக, ‘நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்னு இவ இந்த குதி குதிக்கிறா…’ என்று மனதிற்குள் பேசினான்.

திட்டுவதை எல்லாம் முடித்த பின்னர் அவனை இழுத்துச் சென்று அவளின் அலங்கார கண்ணாடி மேசையில் அமர வைத்தவள், “இங்க பாரு… இது தான் லாஸ்ட் டைம்… எப்படி இப்போ மேக்-அப் போடுறேனோ அப்படியே தான் ஒவ்வொரு தடவ வெளிய போகும் போதும் போடணும்… இதுல ஏதாவது ஒன்னு கொறஞ்சுச்சு, அப்பறம் நீ வெளிய போறதையே மறந்துடு…” என்று எச்சரித்துக் கொண்டிருக்க, ‘அடி க்ளோப்பே… இது தான் எனக்கும் மேக்-அப் போடுறது ஃபர்ஸ்ட் டைம் டி… சை ஒரு பொண்ணா இருக்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு…’ என்று சலித்துக் கொண்டான்.

அடுத்த அரை மணிநேரம், எதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியவள், அவனை தயார் படுத்தினாள்.

“இப்போ போலாம்…” என்று அவள் அறையை விட்டு செல்ல முயற்சிக்க, அவளின் கையைப் பிடித்து தடுத்தவன், “எங்க போற… நீங்க மட்டும் தான் மேக்-அப் பண்ணுவீங்களா… நாங்களும் பண்ணுவோம்…” என்றவன் அவளை அந்த நாற்காலியில் அமர வைத்தான்.

“நான் இப்போ எப்படி ஸ்டைலா முடிய கோதி விடுறேனோ, அப்படி தான் வெளிய போகும் போதேல்லாம் பண்ணனும்… அப்பறம் என்னது இது டக்-இன் பண்ணிட்டு… இதெல்லாம் வேலைக்கு போகும்போது மட்டும் தான்…” என்றவன் டக்-இன் செய்த ஷர்ட்டை வெளியே எடுத்து விட, பூமிக்கு தான் அவனின் நெருக்கம், உள்ளுக்குள் சொல்லத் தெரியாத பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை தொட்டு பேசாதவர்கள் அல்ல… ஆனாலும் இன்றைய நெருக்கம், அவளின் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. அவளிருப்பது அவனின் உடலில் தான் என்றாலும் உணர்வுகள் அவளது தானே…

ஆகாஷோ இதை எதுவும் அறியாமல், அவனின் வேலையில் கண்ணாக இருந்தான்.

“ஏண்டி நெளிஞ்சுகிட்டே இருக்க… நீ எனக்கு மேக்-அப் பண்ணி விடும்போது இப்படி தான் நெளிஞ்சுட்டு இருந்தேனா…”

‘ஐயோ படுத்துறானே இவன்…’ என்று மனதிற்குள் புலம்பியவள், அவனை தள்ளி நிற்க வைத்து, “போதும் டா… லேட்டாச்சு…” என்று ஏதேதோ கூறி சமாளித்துவிட்டு அறைக்கு வெளியே சென்று விட்டாள்.

ஆகாஷோ ‘இனி மேக்-அப் பண்றேன்னு என் பக்கத்துல வருவ நீ…’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்து விட்டு அவனும் வெளியே வந்தான்.

********

‘ஸ்ரீ கஷ்டானந்தா சுவாமிகளின் அன்பாலயம்’ என்ற பலகையைக் கண்டவள், “கஷ்டானந்தா சுவாமிகளா… என்ன பேரு டா இது…” என்று அவள் முகத்தை சுழிக்க, “நம்ம கஷ்டங்களை எல்லாம் அவருக்கிட்ட கொட்டி வழி கேக்குறோம்ல அதான் கஷ்டானந்தா சுவாமிகள்…” என்று விளக்கினான் ஆகாஷ்.

“க்கும் கஷ்டத்தை மட்டுமா கொட்டுறோம்… காசையும் சேர்த்து தான கொட்டுறோம்… ஆமா இவர எப்படி உனக்கு தெரியும்…” என்று வினவினாள் பூமி.

“என் பிரெண்டு பல குடும்ப பிரச்சனைகளால தவிச்சுட்டு இருந்தப்போ, இவருக்கிட்ட வந்தானாம்… இவருக்கிட்ட கஷ்டங்கள கொட்டிட்டு போன ஒரே வாரத்துல அவன் குடும்ப பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சாம்…”

“இதெல்லாம் நீ நம்புறியா…”

“ப்ச் பூமி நமக்கு இப்போ வேற வழியில்ல… இது ஜஸ்ட் அ ட்ரை… பண்ணித்தான் பார்ப்போமே…”

அவன் கூறுவதை போல், முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்பதால், அமைதியாக அந்த வரிசையில் அவனுடன் நின்றாள்.

நேரம் கூட கூட வரிசை நீண்டு கொண்டே செல்ல, அவர்களை உள்ளே அழைத்த பாடில்லை. அப்படியே ஒருவர் உள்ளே சென்று விட்டு வெளியே வந்தாலும், அடுத்த நபரை உள்ளே அழைப்பதற்கு மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனது.

காத்திருந்து காத்திருந்து கடுப்பாகிப் போன பூமி, அருகில் வந்த அவரின் சீடன் ஒருவனை அழைத்து, “ஒருத்தர் போயிட்டு வந்ததுக்கப்பறம் அடுத்தவர உள்ள அனுப்ப ஏன் இவ்ளோ நேரம்..?” என்று வினவினாள்.

“ஒருத்தருக்கிட்ட இருந்து அவங்க கஷ்டங்கள வாங்கினதும், சுவாமிகள் ஆழ்நிலை தியானத்துக்கு போய் அவங்க கஷ்டங்களை கரைப்பாரு… அதுக்கு தான் அந்த ஐந்து நிமிடங்கள் தேவைப்படுது…” என்று விளக்கிவிட்டு சென்றார்.

ஆகாஷை ஒரு பார்வை பார்த்தவள், தலையை இடவலமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் இவர்களை உள்ளே அழைத்தனர்.

பத்தி மற்றும் சாம்பிராணியின் புகையினால், சற்றே மங்கலாக காட்சியளித்தது அந்த இடம். அதீத சந்தன வாசனையும் பூக்களின் நறுமணமும் நாசியைத் தீண்டி அவர்களை ஒருவித மயக்க நிலைக்குத் தள்ளியது. அதிலிருந்து சமாளித்து இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கு ‘கஷ்டானந்தா சுவாமிகள்’ எனப்பட்டவரோ, இரு சிஷ்யர்கள் அருகில் நிற்க, சுற்றி பூ, பழங்கள் ஆகியவை வைக்கப் பட்டிருக்க, நடுவில் அமர்ந்திருந்தார். புன்னகையுடன் இவர்களை நோக்கியவர், அமருமாறு சைகை செய்தார்.

அவர்கள் அமர்ந்ததும், “வாருங்கள் குழந்தைகளே… உங்கள் கஷ்டங்களை இந்த கஷ்டானந்தாவிடம் கொட்டுங்கள்… உங்களின் கஷ்டங்கள் அதோடு மறைந்துவிடும்…” என்று அவர் கூற, அவரின் தொனியில் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் பூமி.

ஆகாஷ் அவளைக் கண்டு முறைக்க, சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

பின், “சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்…” என்று அவளே ஆரம்பித்தாள். ஏதோ வில்லங்கமாக கேட்க போகிறாள் என்பதை உணர்ந்த ஆகாஷ் அவளை அடக்க முயல, அவனின் முயற்சியைத் தடுத்த சுவாமி, “கேள் குழந்தாய்…” என்று கூறினார்.

‘இவர டேமேஜ் பண்றதுக்கு இவரே வாலண்டியரா என்ட்ரி குடுக்குறாரு… என்ன ஆகப் போகுதோ…’ என்று சிந்தித்தவன், அருகே இருந்த சீடர்களைக் கண்டு, ‘இவனுங்க வேற பல்க்கா இருக்கானுங்க… இன்னிக்கு உசுரோட வீடு போய் சேருவோமா…’ என்று புலம்பினான்.

இதைப் பற்றி கவலைப்படாத பூமியோ, “சுவாமி, உங்களிடம் கஷ்டங்களை மட்டும் கொட்டினால் போதுமா… வேறு எதையும் கொட்ட வேண்டாமா…” என்று விஷமமாகக் கேட்டாள்.

அதில் குழம்பிய சுவாமியோ, “என்ன கேட்க வருகிறாய் குழந்தாய்… புரியும்படி கேள்…” என்றார்.

“இதுவே புரியலைனா எங்க கஷ்டங்களை எப்படி புரிஞ்சு தீர்த்து வைப்பீங்க சுவாமி…” என்று சலித்த குரலில் கூறி அவருக்கு ஒரு குட்டு வைத்தவள், “கஷ்டங்களை மட்டும் கொட்டினால் போதுமா… காசு பணம் எதுவும் கொட்ட வேண்டாமா என்று கேட்டேன் சுவாமி…” என்றாள்.

அப்போது ஒரு சீடன் சுவாமியின் காதில், “அடேய் சாமி இதுங்க ரெண்டும் விவரமா இருக்குதுங்க… ஒழுங்கா பேசி சமாளி…” என்று முணுமுணுத்தான்.

“அப்படியே ஆகட்டும் சிஷ்யா…” என்று கூறினார் சுவாமிகள்.

பின் பூமியைக் கண்டு பெரிதாக சிரித்தவர், “குழந்தாய், முற்றும் துறந்தவனிற்கு செல்வம் ஒரு கேடா… நீங்களும் அளிக்கும் நன்கொடைகள் இறைவன் பெயரால், உதவி தேவைப்படுபவர்களுக்கு தானமாக வழங்கப் படுகிறது…” என்றார்.

அவர் பாதை அமைத்துக் கொடுக்க, அதையே பின்பற்றினர் சீடர்களும். “சுவாமி சொல்றது சரி தான்… நீங்க கொடுக்குற பணம், பசியால் வாடுற பலரோட பசிய போக்குறதுக்காக செலவிடப் படுது..” என்றான் ஒருவன்.

மற்றொருவனோ, “பல அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் இதிலிருந்து ஒரு பங்கு தொகை தானமாக வழங்குகிறோம்…” என்று கூறி சுவாமியை பார்த்தான்.

சுவாமியோ, ‘அடேய் நீயா எதுக்கு டா கோர்த்து விடுற…’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே அவனை பார்த்து சிரித்து வைத்தார்.

“ஓ… ஆமா முற்றும் துறந்தவருக்கு எதுக்கு ஏசி ரூமு... சரி சரி அத விடுவோம்… நீங்க எந்தந்த அனாதை ஆஸ்ரமங்களுக்கு உதவி செய்யுறீங்கன்னு சொன்னா, நானும் அவங்களுக்கு உதவலாம்னு இருக்கேன்… நீங்க அட்ரஸ் தாங்க, நாங்க அவங்களுக்கு என்ன மாதிரி உதவி தேவைப்படுதுன்னு கேட்டுக்குறோம்…” என்று கூற, சுவாமி மற்றும் அவரின் இரு சீடர்களும் மாட்டிக்கொண்ட உணர்வில் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினர்.

அவர்களை காப்பவனாக, “ஷ் பூமி… கொஞ்ச நேரம் அமைதியா இரு…” என்று அடக்கியவன், தங்களின் பிரச்சனையை சுவாமியிடம் கூறினான்.

அவ்வளவு நேரம் பூமியை சமாளிக்கவே படாத பாடு பட்டதால், அவளருகில் இருக்கும் பெண்ணை (!!!) சுவாமி கவனிக்க வில்லை. இப்போதோ அந்த பெண்ணையே (!!!) வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆகாஷ் அவரின் பார்வையை கவனிக்காமல், அவர்களின் பிரச்சனையை கூறி முடித்திருந்தான்.

ஆகாஷ் கூறி முடித்தும் அவரிடமிருந்து பதிலில்லாமல் போனதால், பூமி சுவாமியை பார்க்க, அவரோ ஆகாஷின் அழகை (!!!) ரசித்துக் கொண்டிருந்தார்.

அதில் கோவம் கொண்ட பூமி, “யோவ்…” என்று கத்தியிருந்தாள்.

அவளின் கத்தலில் மற்ற நால்வரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். சுவாமியோ ஒரு படி மேலே சென்று, “குழந்தாய், இப்போது என்னை மரியாதை இல்லாமல் விளித்தாயா…” என்று சற்று கோபத்துடன் கேட்டார்.

பூமி ஏதோ கூறப் போக, ஆகாஷ் அவளின் கைகளை அழுத்தி, கண்களாலேயே வேண்டாம் என்று ஜாடை காட்டினான்.

அதில் தன் கோபத்தை குறைத்தவள், “என்னது நான் உங்களை மரியாதை இல்லாமல் அழைத்தேனா…” என்று பாவமாக கேட்டாள்.

“ஆம்… இப்போது தானே ‘யோவ்’ என்று கூறினாய்…”

“அது அப்படியில்லை சுவாமி. இவன் நடந்ததைக் கூறிய பின்னரும் தாங்கள் யோசனையில் இருந்தீர்களா… அது தான் என்ன யோசனை என்று தெரிவதற்காக ‘யோ…’ என்று ஆரம்பித்தேன். பின்னர் தான் உங்களைப் போன்ற மகான்கள் உலக நன்மைக்காக அடிக்கடி யோசனையில் மூழ்குவீர்கள்… உங்கள் சிந்தனையை எதற்கு தொல்லை செய்ய வேண்டும் என்று நினைத்து, கேட்க வந்ததை வாய்க்குள்ளேயே முழுங்கிவிட்டேன்… அதனால் தான் ‘யோ..வ்’ என்று தங்களுக்கு கேட்டது…” விளக்கினாள்.

“நீ கூறிய ‘யோவ்’விற்கு இதுவா அர்த்தம்…” என்று சுவாமி கேட்க, “ஆமாம் சுவாமி…” என்றாள். ஆகாஷிற்கு பூமி கூறியதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டான்.

“ம்ம்ம் நல்லது… இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம்…” என்று அவர் ஏதோ சொல்லப் போக, இப்போதும் அவரின் சீடன் அவரின் காதருகே குனிந்து, “யோவ்…” என்று முணுமுணுத்தான்.

அதில் அவர் அவனை முறைக்க, “ரொம்ப முக்கியம்… இத கவனி… இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை போல… ஏதாவது எடக்குமடக்கா பேசி, நீ போலி சாமியார்னு தெரிய வந்தது, ஒரு நாடு இல்ல ஒரு வீடு கூட வாங்க முடியாது… ஏற்கனவே இந்த இடத்தோட ஓனர், ரெண்டு மாசம் வாடகைய வாங்க வந்துருக்கான்… அவன பின் பக்கம் மடக்கி வச்சிருக்கோம்… இவங்க கிட்டேயிருந்து கரக்குற பணத்த வச்சு தான் அவனுக்கு செட்டில் பண்ணனும்… அத மனசுல வச்சுக்கிட்டு ஜொள்ளு விடாம, ஏதாவது சொல்லி சமாளி…” என்றான்.

“இப்போ பாரு எப்படி சமாளிக்குறேன்னு…” என்று சீடனிடம் முணுமுணுத்தவர், ஆகாஷ் மற்றும் பூமியைப் பார்த்து, “உங்கள் பிரச்சனையைத் தீர்க்க சில நாட்கள் ஆகலாம்… உங்களுக்காக கடும் தவம் புரிய போகிறேன்… அதன்மூலம் உங்களின் ஆத்மாக்களை என்னுள் கொண்டு வந்து மறுபடியும் அவரவர்களின் உடலில் செலுத்த போகிறேன்… அதுவரையிலும் நீங்கள் இங்கே தங்கியிருந்து எனக்கு சேவை செய்ய வேண்டும்…” என்று ஆகாஷை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே கூற, ஆகாஷிற்கும் கோபம் வந்தது.

பூமியோ வெகுண்டெழுந்து, “யோவ்…” கத்தினாள்.

“குழந்தாய், நான் தான் இப்போது எதையும் யோசிக்க வில்லையே…”

“மண்ணாங்கட்டி… நீ யோசிக்குறதெல்லாம் என்னன்னு எனக்கு தெரியும்… பேர பாரு கஷ்டானந்தாவாம்… கஷ்டத்த கொட்டனுமாம்… நாலு விட்டேன் உன் கஷ்டத்த சொல்ல ஆளே இல்லாம போயிடுவ… இவரு மூஞ்சிக்கு சேவை பண்ணனுமாம்ல…” என்று அவள் கோபத்தில் அங்கிருந்த பூஜை தட்டு, பழத்தட்டு ஆகியவற்றை அவர்களின் மீது வீசினாள்.

இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால், அவர்களின் உயிருக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று எண்ணிய ஆகாஷ், பூமியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

இங்கு சுவாமியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. மஞ்சள், குங்குமம் எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாகி அவரின் உடலில் புது வண்ணம் பூசியிருக்க, அதில் அவர் வாங்கிய பல ஊமைக் காயங்கள், வெளியில் தெரியாமல் மறைந்து போனதோ…

“சிஷ்யா, இப்போ இங்க என்ன நடந்துச்சு…?” – தட்டுத்தடுமாறி எழுந்தவர் பாவமாக கேட்டார்.

“ஹ்ம்ம் உனக்கு சேவை செஞ்சுட்டு போனாங்க… ஆளப் பாரு… நான் தான் சொன்னேன்ல பார்த்து பேசுன்னு…”

“க்கும்… பார்த்து பேசுனதுனால தான் இந்த நெலமைல இருக்கேன்… அடேய் சிஷ்யா என்ன அப்படியே கைத்தாங்கலா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க டா… வெளிய இருக்க அந்த ஓனர் பயலுக்கிட்டயிருந்து வேற தப்பிக்கணுமே… ஆஆ… டேய் அங்க தொடாதடா… ஐயோ அம்மா வலிக்குதே…”

“யோவ் என்னயா சமஞ்ச புள்ள மாதிரி நெளிஞ்சுட்டே இருக்க… ஒழுங்கா நடந்து வா யா…”

*****

ஆகாஷ், சிறிது தூரம் சென்றவன், ஆளில்லாத இடத்தில் நின்றான். அவ்வளவு நேரமும் திட்டிக்கொண்டே வந்தவள், அவன் நின்றதும், “ஏன்டா இப்போ என்ன கூட்டிட்டு வந்த… அந்த போலி சாமியார இன்னும் நல்லா திட்டிருப்பேன்…” என்று சூடான குரலில் கூறினாள்

ஆகாஷோ கையைக் கட்டிக்கொண்டு, “இங்க நம்ம பிரச்சனையே எப்படி தீர்க்க போறோம்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்… இதுல ஊருல இருக்க பிரச்சனையெல்லாம் உன் தலைல போட்டுக்க போறீயா…” என்றான்.

“அதுக்காக அப்படியே விட சொல்றீயா… என்ன என்ன உன்ன மாதிரி சமூக பொறுப்பில்லாதவன்னு நெனைச்சீயா…”

“எனக்கும் சமூக பொறுப்பு இருக்கு… அதுக்குன்னு உன்ன மாதிரி லூசுத்தனமா யோசிக்காம முடிவெடுக்க மாட்டேன்…”என்று கூறியவன், யாருக்கோ அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

அவன் பேசியதை வைத்தே, இந்த போலி சாமியாரைப் பற்றி யாருக்கோ கூறுகிறான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

அலைபேசியில் பேசி முடித்ததும், “இப்போ என் பிரெண்டுக்கு தான் கால் பண்ணேன்… அவன் பிரெஸ்ல வேலை பாக்குறான்… இனி இந்த பிரச்சனைய எப்படி வெளிய கொண்டு வரணும்னு அவன் பார்த்துப்பான்… எந்தவொரு விஷயத்துலயும் ஆழம் தெரியாம கால விடக் கூடாது…” என்று கூறி அவளின் துடுக்குதனத்திற்கு ஒரு கொட்டும் வைத்தான்.

ஆனால் அதை ஒத்துக்கொள்ள முடியாத பூமி, ‘இவன ஏதாவது சொல்லணுமே...’ என்று யோசித்தவள், ‘ஹான் கெடைச்சுருச்சு…’ என்று சந்தோஷித்தாள்.

“டேய் கருவாயா… அதெல்லாம் சரி… அவன் உன்ன தப்பா பாக்குறான்னு கூட தெரியாதா உனக்கு…” என்று அடுத்த பிரச்சனையை கையில் எடுத்தாள்.

“எனக்கு இந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இல்லல… அதான் அத உணர முடியல…” என்றான் மெல்லிய குரலில்.

இவள் அதற்கு ஏதோ திட்ட, அந்த பக்கம் வந்த ஒரு மாமி, “நடுரோட்டுல இப்படி ஒரு பொண்ண திட்டுறானே… ஏண்டா அம்பி உங்க பிரச்சனைய ஆத்துல போய் வச்சுக்கப்படாதோ... அந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும்…” என்று தேவையில்லாமல் ஆஜரானார்.

“அது பொண்ணுன்னு உங்களுக்கு தெரியுமா…” என்று எரிச்சலில் பூமி கேட்டாள்.

“இதுல என்னடா அம்பி நோக்கு சந்தேகம்… நன்னா அழகா லக்ஷணமா இருக்காளே… என்ன அவள கம்பேர் பண்றச்சே நீ கொஞ்சம் கம்மி தான்…” என்க, அவளின் அழகைப் பாராட்டுவதைக் கூட அனுபவிக்க முடியாத எரிச்சலில், “ஏதாவது சொல்லிட போறேன் மாமி… உங்க வேலைய பார்த்துட்டு போங்க…” என்றாள்.

அவளின் கோபத்தில் சற்று பயந்த அந்த மாமி, “நன்னா மூக்குக்கு மேல கோபம் வர்ரது… ஏம்மா உன் ஆத்துக்காரரை பார்த்து அழைச்சுண்டு போ…” என்று கூறி அங்கிருந்து நழுவினார்.

ஆகாஷோ நடப்பவைகளைக் கண்டு தலையில் கைவைத்து விட்டான்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், இருவரும் அருகிலிருந்த கோவிலில் சென்று அமர்ந்து விட்டனர்.

“இப்போ என்ன டா பண்றது… நம்மளால திரும்ப பழைய மாதிரி மாற முடியாதா…” என்று பூமி சோகமாக கேட்டாள்.

அப்போது அவர்களின் அருகில் சத்தம் கேட்டது. இருவரும் அங்கு பார்க்க, சற்று வயதான தோற்றத்தில், ஜடாமுடியுடனும், அழுக்கு உடையுடனும் ஒருவர் தூணில் சாய்ந்து இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

“அவன் உங்களுக்கு வைக்கும் பரிட்சை இது…
அதற்கான பதிலை பிறரிடம் எதிர்பார்க்காமல், உங்களுக்குள்ளே தேடுங்கள்…
நீங்கள் எப்படி இருக்க ஆசைப்பட்டீர்களோ, அப்படியே மாறியிருக்கிறீர்கள்..
யாருக்கும் தராதை உங்களுக்கு தந்திருக்கிறான் அவன்…
எனில், அதை வரமாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது…”


அவர் இவ்வாறு கூற, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top