மை டியர் டே(டெ)டி -4

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
வரும் வழியெல்லாம் நிலா முகத்தை உர்ர்ர்'ரென்று வைத்துக் கொண்டு வர, "இப்போ என்னவாம்?" என்று மாறன் கேட்க, மீண்டும் ஒரு முறை, "ஹ்ஹ்ம்ம்ம்…" என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிலா. "என்ன? பாதி நிலா தான் தெரியுது! இப்படி திரும்புனா தான எனக்கு முழுநிலா தரிசனம் கிடைக்கும்" என்று மாறன் கூற, "உனக்கு பாதி நிலாவே அதிகம். இதுல முழு நிலா பாக்கணுமாம்" என்று, தன் முகத்தைத் தான் கூறுகிறான் என்று புரிந்து கொண்ட நிலா, அவனுக்குத் தெரியும் அந்த பாதி முகத்தையும், கையில் இருந்த கைக்குட்டையை வைத்து மறைத்துக்கொண்டாள்.

"என்ன டா இது?", நிலா முழுசா காணாம போச்சு. இன்னைக்கு அம்மாவாசை கூட இல்லையே!" என்று எட்டி பார்ப்பது போலப் பாவனை செய்தான் மாறன்.

"ஏய்ய்ய்ய்ய்ய்...ரோட்ட பாத்து வண்டி ஓட்டு. இல்லனா..." என்று அவள் நிறுத்த, "இல்லனா என்ன ஆகுமாம்?" என்று மாறன் கேட்க,

"மாச மாசம் வரும் அம்மாவாசை...

அது வரும்போதெல்லாம் இந்த நிலாவுக்கும் போடுவாங்க பூசை" என்றாள் அந்த வாண்டு.


வண்டியை ரோட்டோரமாய் மாறன் நிறுத்த, "அதுக்குள்ளயா வீடு வந்துடுச்சு?" என்று ஜன்னல் வழியாய் எட்டி பார்த்தாள் அவள்.

வீடு வரவில்லை... இவர்கள் வழக்கமாய் ஐஸ்-கிரீம் சாப்பிடும் பார்லர் தான் வந்திருந்தது. "ஐஸ் வாங்கி குடுத்து ஐஸ் வைக்கப் பாக்குறியா நீ? ஐஸ்-கிரீம் தான் உருகும். நான் உருக மாட்டேன்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் முன்னர் அமர்ந்திருந்தது போலவே, கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

"உங்களுக்கு யாரும் வாங்கி தரல. நான் சாப்பிட போறேன். நீங்கச் சும்மா உக்காந்தா போதும்" என்று மாறன் சொல்ல, "சரி" என்று சொல்லிவிட்டு, இவளும் உடன் சென்றாள்.

அங்குச் சென்று மாறன் ஒரு டேபிளில் அமர, அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டாள் நிலா. "உனக்கு எதுவும் வேணாம் ல?" என்று மாறன் மீண்டும் கேட்க, "வேணவே வேணாம்" என்று சொல்லிவிட்டாள் அவள்.

காரில் அமர்ந்திருந்தாலாவது வாயைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். இப்பொழுது உள்ளே வந்து அமர்ந்துவிட்டு, அந்த ஐஸ்-கிரீம் பார்லரில் ஆங்காங்கு ஐஸ்-கிரீம் படங்கள் வேறு ஒட்டபட்டிறிருந்தது. அதைப் பார்த்தே நாக்கில் எச்சில் ஊர தொடங்கிவிட்டது நிலா குட்டிக்கு.

பள்ளி விடும் நேரம் என்பதால், அந்த பார்லரில் ஆங்காங்கு இவள் வயதை ஒத்த பிள்ளைகள், தன்னை மறந்து ஐஸ்-கிரீம் சுவைத்துக்கொண்டிருந்தனர்.

"நம்ப வேற வீரப்பா வேணாம்ன்னு சொல்லிட்டோம்! ஆனா இப்போ ஆசையா இருக்கே. என்ன பண்ணலாம்? நோ நோ. நம்மளே கேட்டா அசிங்கமாகிடும். எப்படியும் ஆர்டர் பண்ணுறப்போ ஒரு தடவ இளா கேப்பான். அப்போ சொல்லிக்கலாம்" என்று அமர்ந்துகொண்டிருந்தாள்.

வெயிட்டர் வந்து இவர்கள் டேபிள் அருகில் நிற்க, "எனக்கு ஒரு சிஸ்லிங் பிரௌனி (SIZZLING BROWNIE)" என்றான் மாறன். "அப்புறம் சார்" என்று வெயிட்டர் நிற்க, "எனக்கும் ஒன்னு" எனச் சொல்ல நிலா வாயெடுத்த நேரம், "அவ்ளோ தான். போதும்" என்றான் மாறன். "சார். பாப்பா'க்கு?" என்று வெயிட்டர் கேட்க, "பாப்பாக்கு வேணாமாம்" என்று கூறி அனுப்பிவிட்டான் விட்டான் அவரை.

"அட பஞ்சுமிட்டாய் தலையா! ஒரு பேச்சுக்கு வேணாம்ன்னு சொன்னேன். இப்படி என் பிரௌனில மண்ணை அள்ளிப் போட்டுட்டியே!" என்று உள்ளுக்குள் அவனை அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள் நிலா.

அவள் முகம் அஷ்டகோணலாய் மாறியதை கண்டதும் சிரிப்பு தான் மாறனுக்கு. அவன் ஆர்டர் செய்த சிஸ்லிங் பிரௌனி வந்துவிட்டது.

கைகளைத் தேடித்து கொண்டு, நாக்கை 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று இழுத்துக்கொண்டு மாறன் அமர, 'உஸ்ஸ்ஸ்' என்று தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தாள் நிலா.

"பாக்கவே செமயா இருக்கே. இந்த இளா வேற, 'ஸ்ஸ்ஸ்ஸ்'ன்னு இழுக்குறத பார்த்தா, அவனே சாப்ட்ருவான் போலயே!" என்று உள்ளுக்குள் புலம்பித் தள்ளிக்கொண்டிருந்தாள் குட்டி இளா.

அந்த வெயிட்டர், சுடவைத்து ஒரு இரும்பு பிளேட்டை, ஒரு மர பிளேட்டுக்குள் வைத்து, அதில் ஒரு பிரௌனியை வைத்து, அதன் மேல் இரண்டு ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்-கிரீம் வேறு. இதைப் பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊறிவிட்டது நிலாவுக்கு. இரண்டு நிமிடங்களில், சாக்லேட்டை உருக்கிச் செய்த சாக்லேட் சாஸ்சை அதன் மேல் ஊற்ற, சூடான அந்த இரும்பு பிளேட்டில் பட்டு, அந்த சாஸ் கொப்பளித்தது. கொப்பளிக்கும் சத்தம் கேட்டுத் திரும்பியவள், அதைப் பார்க்க, அந்த பிரௌனி மீது சாஸ் ஊற்றுவதை பார்த்ததும், அளவில்லா ஆசை வந்துவிட்டது அதை ருசித்துப் பார்க்க.

அவள் அதையே பார்த்துக்கொண்டிருக்க, அவனோ அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் பிரௌனி, கொஞ்சம் வெண்ணிலா ஐஸ்-கிரீம் கொஞ்சம் ஸ்பூனில் எடுத்து, சூடு ஆரும் வரை ஊதிவிட்டு, வாயில் வைக்கப் போக, அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.

அவன் அதைச் சாப்பிட வாயைத் திறக்க, இவள் வாயும் தானாக திறந்தது, அதை பார்த்து.

ரோஜா மலர்களின் இதழ்களைக் கொண்ட தன் ராஜகுமாரி, இதழ்களைப் பிளந்து, அவள் கண்கள் இரண்டும் வண்டாய் அந்த பிரௌனியை மொய்த்துக்கொண்டிருக்க, அவளை ரசிப்பானா? இல்லை கையில் இருப்பதை ருசிப்பானா?

ஸ்பூனை அவள் புறம் திருப்பினான் மாறன். பிரௌனியை பார்த்ததுமே, அகல விரிந்த கண்கள், ஸ்பூனை தன் பக்கம் திருப்பியதும் இன்னும் விரிந்தது.

இத்தனை நேரம் முறைத்துகொண்டதெல்லாம் மறந்து, "என் செல்ல இளா!" என்று அவன் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்சி வைத்துவிட்டு, ஜம்மென்று அவன் மடியில் வந்து அமர்ந்துகொண்டாள் குட்டி இளா.

அவள் அந்த பிரௌனியை அழகாய் சாப்பிட, மடியில் இருக்கும் அவளை ஆசையாய் அணைத்துக்கொண்டான் அவன்.

அவள் தோளில் தாடை வைத்து, "குட்டி இளாக்கு கோவம் போய்டுச்சா?" என்று அவன் கேட்க, "உஃப்ப்.. உஃப்ப்.. உஃப்ப்.." என்று பிரௌனியை ஊதிக்கொண்டிருந்தவள், சட்டென்று நிறுத்தி, "நோ!" என்றாள்.

"ஏன் கோவமாம் என் குட்டி இளாக்கு" என்று அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க, "ச்சி...எச்சி" என்று துடைத்துக்கொண்டாள் அவள்.

"என்னது எச்சியா? இப்போ என்ன பண்ணுவ?" என்று அவள் கன்னத்தில் விடாமல் அவன் முத்தம் வைக்க, "விடு விடு விடு. மிஸ்டர்.இளமாறன். குட்டி இளாவுக்கு. கோவம் தான். அதை முத்தம் குடுத்தெல்லாம் சரி பண்ண முடியாது!" என்று அவள் முறைக்க, "அப்போ பிரௌனி குடுத்து சரி பண்ணலாம்" என்றான் மாறன்.

"அது. பசி-ருசி. அதெல்லாம் வேற டிபார்ட்மென்ட். குட்டி இளா கோவம் தான்" என்றாள் அவள் அழுத்தமாக.
"சரி சரி சரி. பாப்பா கோவம் தான். பாப்பா கோவம் தான்" எனக் கூறிக்கொண்டே, அவளை இன்னும் இறுக கட்டிக்கொண்டான்.


அவள் பின்னால் இருந்து கட்டிக்கொண்டவன், "பாப்பா.." என்று வாஞ்சையாய் அழைக்க, இதன் மேலும் கோவத்தை கட்டிக்கொண்டு இருக்க முடியவில்லை இளநிலாவால்.

இத்தனை நேரம் படபடவென அவளிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகள், இப்பொழுது அமைதியாய் வந்தது, "என்ன இளா" என்று. அமைதியாய், சீராய் ஆனது வார்த்தைகள் மட்டுமல்ல!

"இளா சொன்னா கேப்பீங்களா?" என்று மாறன் அமைதியாய் கேட்க, "கேப்பேன்" என்றாள் நிலாவும்.

"என் குட்டி இளா இருக்கால்ல..." என்று மாறன் தொடங்க, "ஆமா இருக்கா, இளா கைக்குள்ள இருக்கா" என்று சொல்லிவிட்டு, அவளை இறுக அணைத்திருந்த அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

"என் குட்டி இளா அவ்ளோ அழகு. அவ பேச்சு, அவ எண்ணம், அவ கேள்வி எல்லாமே அவ்ளோ அழகு. ஆனா, அவ கேள்வி கேக்குற விதம் தான் சரி இல்ல" என்று கூற, "வேற எப்படி கேக்கணும்" என்று கேட்டாள் அவள், உண்மையாவே புரியாமல்.

"இப்போ இந்த பிரௌனி இருக்குல. இதை ஏன் ஊதி ஊதி சாப்புடுறீங்க?" என்று அவன் கேட்க, "அச்சோ. அப்டியே சாப்பிட்டால் சுடும்" என்றாள் அவள்.

"வேற எப்படி சாப்பிடணும்" என்று மாறன் கேட்க, "தோ. இந்த பிரௌனி கூட, கொஞ்சம் ஜில் ஜில் ஐஸ் கிரீம் எடுத்து, அப்புறம் இப்டி உஃப்ப்.. உஃப்ப்..ன்னு ஊதி ஊதி சாப்பிடணும்" என்றாள் நிலா.

"அதே மாதிரி, எந்த விஷயத்தையும், கொஞ்சம் ஆறவைத்து தான் பேசணும். அப்டியே இந்த ஐஸ்-கிரீம் மாதிரி கொஞ்சம் ஸ்வீட் வார்த்தைகளோட" என்று அவன் கூற, ஒன்றும் புரியாமல் விழித்தாள் நிலா.

"இன்னைக்கு இளா கிட்ட, என்ன நடந்துச்சுன்னு பொறுமையா சொன்ன மாதிரி, பிரின்சிபால் மேம் கிட்டயும் பொறுமையா சொல்லிருந்தா அழகா கேட்ருப்பாங்க. அதை விட்டுட்டு, சாமி ஆடுற மாதிரி, அங்க போயி ஆடுனா, அவங்க பதிலுக்கு பேய் ஆடத்தான் செய்வாங்க" என்று அவன் கூற, "அப்படியா? பொறுமையா சொன்னா கேப்பாங்களா?" என்றாள் அவள் ஆச்சர்யமாய்.

"ஆமா. இதோ பாரேன். இப்டி அழகா கண்ணு, குண்டு குண்டு கன்னம். இதெல்லாம் வச்சிக்கிட்டு போயி குட்டி இளா பொறுமையா கேட்டா, யாரும் மாட்டேன்னு சொல்லவே மாட்டாங்க. அதை விட்டுட்டு குட்டி சாத்தான் மாதிரி போயி ரகளை பண்ணா? இப்படி தான் கேக்க மாட்டாங்க" என்றான் மாறன்.

"ஒஹ்..ஓஹ்...! அப்போ நான் இனிமே பொறுமையா பேசுறேன். அப்புறம்.. ஸ்வீட் ஸ்வீடா பேசுறேன்... சரியா!" என்று தலை சாய்த்து கேட்க, "என் செல்ல குட்டி இளா" என மீண்டும் முத்த மழையில் நனைத்துவிட்டான் அவளை.

ஆசை தீர பிரௌனி சாப்பிட்டு முடித்துவிட்டு, இருவரும் கிளம்ப அவர் குடியிருக்கும் பிளாட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

சுமார் 4 பிளாக்களில் 100 குடும்பங்கள் வாழும் அபார்ட்மெண்ட் அது. குழந்தைகள் விளையாடும் பார்க், நீச்சல் குளம், ஜிம் என்று அனைத்தையும் உள்ளடக்கிய நவீன அப்பார்ட்மெண்ட் அது.

100 குடும்பங்கள் என்றாலும், அதில் நம் நிலாவை தெரியாதவர்கள் எவருமே இல்லை.

மாறன் உடனிருக்கும் நேரம் அவள் அமைதியாய் இருந்தாலும், அவன் இல்லாத நேரம் ஏதாவது அலப்பறை செய்துவிடுவாள். இவள் மாலை மூன்று மணிக்கே பள்ளி பேருந்தில் வந்துவிடுவாள். ஆனால், மாறன் வீட்டுக்கு வருவதற்கு எப்படியும் மாலை 6 மணி ஆகிவிடும். அதற்குள் ஏதாவது செய்து வைத்து, ஒரு பஞ்சாயத்துடன் தான் காத்திருப்பாள்.

ஆனால், அவளைப் பிடிக்காதவர் என்று எவரும் இல்லை. அவரவர், அவர் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த அபார்ட்மெண்டிற்கு உயிர் குடுப்பது நம் குட்டி இளா தான். அதே போல், எல்லாருக்கும் நம்ப நிலாவின் மீது எப்பொழுதும் ஒரு கண் இருக்கும். அதுவும் மாறன் இல்லா நேரங்களில், அவள் பத்திரமாக இருக்கிறாளா என்று ஒன்று மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டு தான் இருப்பர். அங்கு இருக்கும் வாட்ச் மேன், தோட்டக்காரர், தூய்மை பணியாளர்கள் என்று அனைவர்க்கும் அத்தனை பிரியம். அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் குட்டிஸுக்கு சொல்லவா வேண்டும். வருத்தப்படாத அந்த குட்டிஸ் சங்கத்திற்கு தலைவியே இவள் தான்.

அந்த அபார்ட்மெண்டில் இவள் சேட்டைகளில் பாதிக்கப் பட்ட ஒருவர் தான் வடிவு பாட்டி. இவள் வைத்த பெயர் விக்(Wig) பாட்டி. அந்த பெயருக்குக் காரணமும் உண்டு.

இவர்கள் இருவரும் காரை விட்டு இறங்கி வர, அங்கு பார்க்கில் பிளாட் செக்ரெட்டரியுடன் அமர்ந்திருந்தார் விக் பாட்டி.

இவர்கள் வருவதை பார்த்து, "அய்யயோ. இந்தக் குட்டி சாத்தனா" என்று ஒளிய முயன்றும் முடியவில்லை.
 
Last edited:

தரணி

Well-Known Member
சிஸ்ஸ்லிங் பிரௌனி மாதிரி எபி யும் ஜில் ஜில் கூல் கூல்..... மாறன் எத்தனை அழகாக நிலா குட்டிக்கு சொல்லிட்டான்....
 

Kamali Ayappa

Well-Known Member
சிஸ்ஸ்லிங் பிரௌனி மாதிரி எபி யும் ஜில் ஜில் கூல் கூல்..... மாறன் எத்தனை அழகாக நிலா குட்டிக்கு சொல்லிட்டான்....
:love: thanks kaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top