மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 6

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
எப்படியாவது அவனுடன் பைக்கில் போவதை தடுத்து நிறுத்த வேண்டும்.. அசிங்கப் படுத்தியவனிடம் உதவியா... நினைக்கவே என்னவோ போல் இருந்தது.. அதைத் தடுத்த நிறுத்தவென்று யோசித்து யோசித்து ஒரு வழியைக் கண்டு பிடித்தாள். அதன்படி நித்தியை அழைத்து.,‌'ஸ்ரீ போலீஸ் நிக்குறாங்கனு சொன்னால்ல உன் க்ளாஸ்மேட்... அப்புறம் எப்படி மூணு பேர் ஒரே பைக்ல...' என்றாள்.

நித்தி யோசிக்க ஆரம்பித்தாள். ஆட்டோ பிடித்து சென்று விடலாம்‌ எனக் கூற மதுமித்ரா வாயெடுக்கும் வேளையில் நித்தியோ புது வழியைக் கண்டுபிடித்து விட்டாள்.

மதுமித்ரா வாயைத் திறக்கும் முன் நித்தி., 'அப்படினா மது நீங்க முதல்ல அண்ணா கூட போங்க... நான் அடுத்து வர்றேன்... ' என்றாள். மதுமித்ரா திகைத்து தான் போனாள். இப்படி வேறு ஒரு வழி உள்ளதா..

'இல்ல நித்தி... எதுக்கு உங்க அண்ணாக்கு சிரமம்... நாம ஆட்டோல போவோம்...' என அவளும் கேட்டுப் பார்த்தாள்.

நித்தியோ விடாப்பிடியாக., 'என்ன மது நீங்க... அவன்‌ சும்மா தின்னுட்டு தூங்குவான்... அவனுக்கு என்ன சிரமம்... சும்மா ரெண்டு ட்ரிப் வரட்டும்...' என்றவாறே தன் அண்ணனை நோக்கிச் சென்று விஷயத்தைக் கூறினாள்.

என்ன தான் மது தன்னுடன் வரவேண்டும் என ஆசை இருந்தாலும் இப்படியெல்லாம் செய்வது முற்றிலும் தவறு. மற்றவர்களிடம்‌ இருந்து அவளை பத்திரம் பார்க்கும்‌ நித்திக்கு தன் அண்ணன் என்றதும் தவறாய் எண்ணத் தோன்றவில்லை. சும்மாவே மது முறைப்புடன் இருக்கிறாள். இவ்வாறெல்லாம் செய்யப் போய் அதுவேறு அவள் எதுவும் நினைத்துக் கொண்டால்.. எதற்கு வம்பு என்றெண்ணியவன்.. 'ஒளறாத நித்தி.. உங்க காலேஜ் வாசல்ல தான போலீஸ் நிக்குது... காலேஜ்க்கு கொஞ்சம் முன்னாடி ரெண்டு பேரும் இறங்கிக்கங்க.... ' என்றான்.

வாசலில் இருந்து அனைத்தையும் கேட்ட மதுமித்ராவின் மனதில் மெலிதாய் ஒரு நல்ல எண்ணம் தோன்ற ஆரம்பித்தது அவனைப் பற்றி... அபிநந்தன் வண்டி ஒட்ட அடுத்து நித்தி.. பின் கடைசியாய் மது என மூவரும் அமர்ந்து சென்றனர்.

கல்லூரியில் இறங்கியதும் நித்தி தன் தோழி வர கழுத்தைத் திருப்பாமல் 'டாட்டா ணா...' என்றுவிட்டு ஓடிவிட்டாள். அபிநந்தனும் வண்டியை பாதி திருப்பிவிட்டான். வண்டியில் இருந்து இறங்கிய மதுமித்ரா இரண்டடி நடந்து விட்டு பின்‌ மீண்டும் அவனிடம் திரும்பி., 'ரொம்ப தேங்க்ஸ் நந்தன்...' என்றுவிட்டு நடந்துவிட்டாள்.

அவள் ஒருமுறைதான் கூறினாள். ஆனால் அவனது செவிகளுக்குள் அது திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது. பின்னால் வந்தவன் இருமுறை ஹாரன் அடித்துவிட்டு., 'சார்... ப்ளீஸ் வழிவிடுங்க... ' என கெஞ்சியதும்‌ தான் நினைவு வந்து வண்டியை செலுத்தினான்...

இரவு தூங்காத தூக்கத்தையெல்லாம் அன்று பகலில் தூங்கித் தீர்த்தான். பார்வதியும் அவன் அசந்து‌ தூங்குவதைப் பார்த்துவிட்டு அவனை எழுப்பவில்லை. தூக்கத்திலும் அவக் வந்து இம்சித்துக் கொண்டே இருந்தாள். கனவையும் கலைக்க மனமின்றி உறக்கத்தை நீட்டித்துக் கொண்டே இருந்தான். சாயங்காலம் தான் மீண்டும் எழுந்தவன் மணியைப் பார்த்தான். அச்சச்சோ.... மணி 6... அவர்கள் இருவரும் எப்படி வீடு வந்து சேர்வர். தடதடவென்று ஹாலுக்கு ஓடினான். அங்கே பார்த்தால் மதுவும், நித்தியும் அமர்ந்து எதோ பேசிக்கொண்டு இருந்தனர். முகத்தைக் கழுவி துடைத்துக் கொண்டே சமையல்‌அறை பக்கம்‌ சென்றவன் பார்வதியிடம்., 'எப்படிம்மா ரெண்டு பேரும் வந்தாங்க... ' என்றான்.

'ஃப்ரண்ட் கொண்டு வந்து விட்டாளாம் டா... மித்ரா வீட்டுக்கு போய் லைசென்ஸ எடுத்துட்டு வந்தாங்க... 5 நிமிஷம் தான் இருக்கும்... ' என்றாள் பார்வதி. அபிநந்தனுக்கு கஷ்டமாக இருந்தது. இனி அவர்களாகவே வண்டியில் சென்று விடுவர். அவளோடு பேசும் வாய்ப்பு கிடைக்குமா எனக் கூட தெரியவில்லை.. கடவுளே என்ன விதமான உணர்வு இது. இதிலிருந்து என்னை விடுவித்து விடு வேண்டிக்கொண்டான்.

மதுமித்ராவும் சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவளாய் இல்லை... சமையல் வேலை முதல் வீடு சுத்தம்‌ செய்வது வரை எதாவது செய்து கொண்டே இருந்தாள். பார்வதிக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று. மகனின் ஏக்கப் பார்வை வேறு., எதாவது நல்லது நடக்கும் என்ற ஆசையை அவளுக்கு விதைத்திருந்தன. தன் பிள்ளைகளுக்கு செய்வதைப் போலவே அவளுக்கும் செய்து வைத்தாள். ஆனால்‌ மதுமித்ரா தன் வேலை ஒன்றையும் பார்வதியை செய்யவிடவில்லை.

இந்தப் பெண்ணை எப்படி இனி பிரிந்து இருப்பது அதுவும் பத்திரமான இடம்‌தானா என தெரியாமல்.. இவள் வேறு ஹாஸ்டல் என அரற்றிக்கொண்டே இருக்கிறாளே என்றெண்ணிய பார்வதி., இடையில் மதுமித்ராவிடம்., 'நீ ஹாஸ்டல் தேர்ந்தெடுத்தாலும் அது சரிதானா என சொல்லும் உரிமையை எனக்கு கொடுத்துவிடு மகளே... உன்னை தனியே அனுப்ப எனக்கு மனமேயில்லை. ஆனால் உன் பிடிவாதத்தை என்ன செய்யவென்றும் தெரியவில்லை. உன் தாய் ஸ்தானத்தில் இருந்து இதை மட்டுமாவது செய்ய எனக்கு அனுமதி கொடு... ' என்று சத்தியமும் வாங்கி விட்டாள்.

உள்ளூற அகமகிழ்ந்து தான் போனாள் மதுமித்ரா... பார்வதி கேட்ட படி சத்தியமும் செய்து கொடுத்து விட்டாள். ஆனால் ஹாஸ்டல் தான்‌ கிடைத்தபாடில்லை. அவளுக்கே அந்த இடங்கள் சரியாகப் படவும் இல்லை.

அன்று மாலை 7 ஆகியும் இருவரும் வீடு வந்து சேரவில்லை. பார்வதிக்கு பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது‌. நித்திக்கு வாலிபால் பயிற்சி என்றால் லேட் ஆகும் என குறுந்தகவல் அனுப்பி விடுவாள். மதுமித்ராவின் நம்பரும் பார்வதியிடம் இருக்கவே அதிலும் தொடர்பு கொள்ள முய்றசித்தாள். அவளும் அழைப்பை எடுக்காமல் போகவே பார்வதி பதறித்தான் போய்விட்டாள். இன்னும் அரை மணி நேரமும் ஆகிவிட்டது.‌ அவசரமாய் அபிநந்தனை அழைத்தாள்.

வேலையில் இருந்தவன் சற்று சலிப்புடன்., 'சொல்லுமா... ' என்றான்.

'டேய்... பிள்ளைங்க ரெண்டும் வீடு வந்து சேரலடா இன்னும்..'

'வந்திடுவாங்க மா... வெய்ட் பண்ணு..'

'தம்பி... ரொம்ப நேரமா கால் பண்ணுறேன்... ரெண்டு பேரும் எடுக்கல டா... ' என்றாள் பதற்றம் குறையாமல்..

'சரி இரு.. நான் பாக்குறேன்... ' எனக் கூறி அழைப்பை துண்டித்து விட்டு., தன்‌ தங்கைக்கு அழைத்தான். அவளும் எடுக்காமல் போகவே தன் அலுவலகத்தில் சொல்லி பர்மிஷன் போட்டுவிட்டு அவர்களது கல்லூரிக்கு விரைந்தான்.

கல்லூரி சாலையிலேயே அவர்களை பார்த்தும் விட்டான்... ஆனால் வேறு யாரோ இருவர் உடன் இருந்தனர். கூட படிக்கும் சக மாணவர்களா.. ஆனால் மதுமித்ராவின் முகம் கோபமாய் தெரிகிறதே... யோசித்தவாறே அவர்களை நெருங்கிக்‌ கொண்டு இருந்தான். சரியாக அங்கிருந்தவன் மதுமித்ராவின் கையை பிடித்துவிட்டான். அவனிடம்‌ இருந்து தன் கையை விடுவிக்க அவள் முயன்றவாறு இருந்தாள். நித்தியும் அவனிடம் சண்டையிட ஆரம்பித்தாள்.

நேராக அவர்கள் அருகில் வந்து வண்டியை நிறுத்தினான். அவன் தான்.. மதுமித்ராவுடன் இதற்கு முன் சண்டையிட்டவன். அபிநந்தன் வண்டியை நிறுத்தியதும் அவன் மது மேல் இருந்து கையை எடுத்து விட்டான். ஆனால் அபிநந்தனை முறைத்தவாறே நிற்க...

' யாருடா நீங்க... ' என்றான் அபிநந்தன் தன் கோபக் குரலில்..

'நீ யாரு... ' என அந்த சிகப்பு சட்டைக்காரன் ஏளனமாய்க் கேட்கவும்‌ நித்தி முந்திக் கொண்டு., 'என் அண்ணா...' என்றாள்.

மீண்டும் அந்த சிகப்பு சட்டை., 'அப்படினா அவள கூட்டிட்டு போ... இவ இருக்கட்டும்... ' என்றான் மதுமித்ராவைக் காட்டி...

கோபம் தலைக்கேற பளார் என ஒரு அறை அவனை அறைந்துவிட்டு., 'ஏன்டா... சின்ன பசங்கன்னு பார்த்தா‌ ஓவரா தான் போறீங்க... இந்த வேலையெல்லாம் இங்க இருக்கக் கூடாது... ' என்றான்.

அந்தப் பொடியன் மீண்டும் முறைத்தவாறே நிற்க.., 'ம்கூம்... இது சரிப்படாது... நீ வா... ஸ்டேஷன்க்கு... உங்க அம்மா அப்பா உன்ன அங்க வந்து கூப்பிட்டுக்கட்டும்...' என அவனது சட்டையைப் பிடித்தான். இதை எதிர்பாராமல் அவன் அரண்டு போய்.., கையை தட்டிவிட்டுவிட்டு ஓடிவிட்டான்.

அதே கோபத்துடன் நித்தி பக்கம்‌ திரும்பி., 'ஃபோன் எங்கடீ...' என்றான்.

'பேக்ல இருக்குனா...' என அவள் முடிப்பதற்குள் அவளது கன்னம் சிவந்திருந்தது.‌ அவன் அடித்ததை விடவும் இதுவரை தன் அண்ணன் இப்படி கோபப்பட்டதில்லை என்ற கவலை மேலோங்க கண்கள் கலங்கி விட்டாள். அவனது கோபத்தைக் கண்ட மதுமித்ராவும் பயந்து தான் போயிருந்தாள்.

அதற்குள் நிதானத்திற்கு வந்த அபிநந்தன்‌ தன் தங்கையை கட்டிக்கொண்டு., 'சாரி நித்திக் குட்டி... நானும் அம்மாவும் ரொம்ப நேரமா ட்ரை பண்ணுறோம்.. யாராவது போன் பண்ணியாவது சொல்லி இருக்கலாம்ல... ' என்றான்.

ஏங்கிக் கொண்டே., 'இல்லண்ணா... ஃபோன் சைலண்ட்ல போட சொல்லிட்டாங்க... மேட்ச் வருதுனு க்ளாஸ்ல இருக்கப்போவே ப்ராக்டீஸ்க்கு கூட்டிட்டு போய்ட்டாங்க.. இப்போ தான் வெளியவே வர்றோம்...' என்றாள்.

'அப்போ அந்தப் பொண்ணாவது சொல்லியிருக்கலாம்ல...' என்றான் வினாவோடு..

'ரெண்டு பேரும் தான்ணா போனோம் ப்ராக்டீஸ்க்கு... ' என்றாள்..

'அவளுமா...'

'அவங்க தான் டீம் கேப்டன்... '

அவளைத் திரும்பிப் பார்த்தான். பாவமாய்த் தான் இருந்தது. இதுவே முன்னால் என்றால் அவளைக் காக்க எவனும் தேவையிராது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அக்கறை காட்ட யாருமில்லை என்ற நினைப்பே நம் தைரியத்தை உடைத்துவிடும் என்றெண்ணியவாறே அவளைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என நினைத்த மனதை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவள் சட்டென்று அவன்‌ பக்கம் திரும்பி., 'நந்தன்.. ' என்றழைத்தாள்.

'சொல்லு மதுரா..' மீண்டும் அந்த அழைப்பு... ஒரு விநாடி அவள் திகைத்து நின்று பின் அவளே., 'அம்மா கிட்ட எதுவும் சொல்லாதீங்க... அந்த பசங்க பத்தி... ' என்றாள்.

'ஏன்...'

'பயந்திருவாங்க...'

'சரி சொல்லல... ஆனா ஒரு கண்டிஷன்...' என்றான் அழுத்தமாக...

கண்டிஷனா... என்ன கேட்கப் போகிறானோ என மனம் பதறத் தொடங்கியது. இவனும் மற்றவர்களைப் போல் இல்லாமல் இருக்க வேண்டும்‌ என கடவுளை வேண்ட ஆரம்பித்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top