மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 3

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
radha-krishn-star-bharat.jpg

மதுமித்ரா... மதுமித்ரா... என சிலமுறைகள் அவளது பெயரை சொல்லிப் பார்த்துக் கொண்டான். அவளை முதல் நாள் பார்த்த நினைவு வர அதிலேயே லயித்தும் போனான். கொஞ்சநேரம் கழித்து சுதன் வந்து பார்க்கும் வரையிலும் அபிநந்தன் அதே ஃபீட்பேக் படிவங்களை கையில் வைத்துக் கொண்டு இருக்கவும் கோபமுற்று., 'டேய் என்னடா பண்ணிட்டு இருக்க... எத்தன தடவ எண்ணுனாலும் அதே 60 தான் இருக்கும்... அங்க எல்லாரையும் என்னால சமாளிக்க முடியல... வந்து தொலடா...' என்றான். அதன் பின் தான் அபிநந்தனுக்கு உரைத்தது தான் இவ்வாறு நின்றுகொண்டு இருப்பது.

கிராதகி... தன்னை இப்படி நிற்க வைத்துவிட்டாள் என நினைத்துக் கொண்டே அந்த கூட்டத்தை நோக்கி விரைந்தான். சரியாக மதுமித்ராவின் குழுதான் இறுதியாக சென்று கொண்டு இருக்க அபிநந்தன் அவர்களுக்கு பின்னால் தான் நடக்க வேண்டி இருந்தது. அவள் ஒவ்வொரு இடத்திலும் நின்று சந்தேகங்களை கேட்டுக் கொண்டு இருந்தாள். பரவாயில்லை பொறுப்பாய் தான் இருக்கிறாள் ஏனோதானோவென்று கேட்கவில்லை என்று தோன்றியது அவனுக்கு. நல்ல பெண் தான்.. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏன் தன்னை திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள் என அவனுக்கு தெரியவில்லை. க்ரீம் செய்வது முதல் அதை கோனில் அடைப்பது, டப்பாவில் அடைப்பது, குச்சியில் வைப்பது என ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

இதில் அடிக்கடி அவளது கடைக்கண் பார்வை வேறு அவன் மேல் படிந்து மீண்டது. கடைசியாக அவர்கள் பேக்கிங் செக்ஷன் வரவும் சரி ஃபீட்பேக் படிவத்தை எடுத்து வரலாம் என அவன் தன் அறைக்குள் செல்ல ஆயத்தமானான். ஆனால் இந்த மதுமித்ராவும் அதே பக்கம் ஏன் செல்கிறாள். யோசனையாக அவளைப் பின் தொடர்ந்தவன் அவள் தன் அறைக்குள்ளேயே செல்வதைக் கண்டதும் திகைத்துப் போனான். இவள் எதற்கு இங்கே... அவனும் அவனது அறைக்குள் நுழையவும் அவள் சட்டென்று திரும்பி இவனை நெருங்கி.., 'ஏய்... யாரு நீ... உன் பேரென்ன...' என்றாள். என்ன இவள் தன் இடத்திற்கு வந்து தன் பெயரைக் கேட்கிறாளே என தோன்றினாலும் கேட்பது மதுவாயிற்றே எனவே., 'அபிநந்தன்' என்றான்.
'நானும் காலைல இருந்து பாக்குறேன் பின்னாடியே வந்துட்டு இருக்க... உங்க மேனேஜர் எங்க... கம்ப்ளைண் பண்ணவா... இந்த வேலையெல்லாம் என் கிட்ட ஆகாது... புரியுதா... ' என்றாள். அபிநந்தனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரிக்கவும் அவளுக்கு கோபம் அதிகமாகியது., 'என்ன சிரிப்பு...' என்றாள் காட்டமாகவே. 'ஏ யாரும்மா நீ... என் ரூமுக்குள்ள வந்துட்டு என்ன மெரட்டிட்டு இருக்க... ' என்றான். ஒரு நிமிடம் தயங்கியவளுக்கு அவன் பொய் சொல்லுகிறான் எனத் தோன்ற மீண்டும் முறைத்தாள். இவளுக்கு எப்படி விளக்கம் கொடுப்பது என யோசித்தவன்., 'பாரு பாப்பா... உனக்கு பின்னாடி ஒரு நேம் போர்ட் இருக்குல அத பாரு...' என்றான். திரும்பிப் பார்த்தாள். அபிநந்தன் என்று இருந்தது. அவள் இன்னும் குழப்பமாய் அவனைப் பார்க்கவும் தன் ஐடி கார்டை எடுத்து அவளிடம் காண்பித்தான். தீர்க்கமாய் அதை ஆராய்ந்து விட்டு., தலையை குனிந்துகொண்டு., 'சாரி சார்... தெரியாம....' என்றாள்.

'இப்போ வெளிய போறீங்களா.... என் வேலைய நான் பார்க்கணும்... ' என்றான் அவனும் கோபத்துடனே. தவறு தன் மேல் தான் எனத் தெரிந்தாலும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. முதன்முறையாக அல்லவா ஒருவனிடம் இப்படி அசிங்கப்பட்டு இருக்கிறாள். அவள் தன்னை நொந்துகொண்டே நடந்த போது அவன் மீண்டும் அவளை அழைத்தான். சொடக்கிட்டு. என்ன திமிர் இவனுக்கு நான் செய்தது தவறென்றாலும் சொடக்கிட்டு அழைப்பானா.. என கோபமுற திரும்பினாள். ஆனால் அவன் தான் அழைக்கவேயில்லையே... தன் மேஜைமேல் இருந்த மரத்தாலான பேப்பர் வெய்ட்டை நகற்றப் போய் அது தான் சத்தம் எழுப்பியது. மதுமித்ரா திரும்பியதும் அதனைக் கண்டுகொண்டாள். அபிநந்தனோ அதற்குள் அவளைப் பார்த்துவிட்டு., 'இப்போ என்ன... ஏன் பின்னாடி வந்தேன்னு தெரியணுமா... நான் தான் இன்னைக்கு இன்சார்ஜ்... உங்கள நான் தான் கவனிக்கணும்... நீங்க தான் லேட்டா வந்தீங்க... அதனால தான் உங்களுக்கு பின்னாடி வரவேண்டி இருந்தது. உன் பின்னாடி சுத்தணும்னு எனக்கு அவசியம் இல்ல... இப்போ ப்ளீஸ் கெட் ஔட்.... ' என்று சீறினான்.

வேறு வழியின்றி அவளும் வந்துவிட்டாள். ச்ச... என்ன ஒரு அசிங்கம். தான் இதுவரை இப்படி யாரிடமும் கைகட்டி நின்றதில்லை. கொஞ்சம் நிதானமாக யோசித்து இருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் இப்போது தோன்றி என்ன பயன். அது தான் அவன் தாளித்து எடுத்து விட்டானே. இதில் கடைசியாக கெட் அவுட் வேறு. இங்கிருந்து கிளம்பினால் தேவலை என தோன்றியது அதற்கு. மதுமித்ராவின் தோழி வேறு வந்ததில் இருந்து இந்த அபிநந்தனைப் பார்த்து தரையை நனைத்துக் கொண்டு இருந்தாள். அழகாய்த் தான் இருக்கிறான். நல்ல செதுக்கி வைத்ததைப் போன்ற முகம். சாக்லேட் மில்க்-ஷேக் நிறத்தில். கண்ணை உறுத்தாத தங்கச் சங்கிலியும், அவன் கையில் கிடந்த ப்ரேஸ்லெட்டும் அவனை இன்னும் அழகாக்கிக் காட்டியது. மற்றதையெல்லாம் விட அவனது நடை. நிமிர்ந்த விதமாக செறுக்காகவும் அன்றி தடதடவென்றும் இல்லாமல் ஒரு ராஜ தோரணையில் கம்பீராமாக.

சும்மாவே சைட் அடித்துக் கொண்டு சுற்றும் அகல்யாவிற்கு இதைவிட்டால் வேறு என்ன வேண்டும். வந்ததில் இருந்து அவன் புராணம் தான். மதுமித்ராவின் பெற்றோர் காதல் திருமணம் தான். அவர்களது திருமணம் இரு வீட்டாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது போகவே தாங்கள் இருவர் மட்டுமாய் இருந்து இவளை வளர்த்தனர். மதுமித்ரா ஒரே பெண் தான். வீட்டில் மட்டும் மித்ரா... மற்ற இடங்களில் மது... ஆண் பிள்ளை இல்லையென்றா... இல்லை பெண்ணுக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்றா என அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவளது அம்மா அப்பாவைக் காட்டிலும் அவள் தைரியமானவள் தான். எதற்கும் அவள் தயங்கி நின்றதே இல்லை. தீர்க்கமாய் முடிவு எடுப்பவளும் கூட.. ஆனால் இன்று எப்படி தவறியது என்று தன்னைத் தானே குழப்பிக் கொண்டு., தான் வெளியே செல்ல வேண்டுவதை அகல்யாவிடம் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

அபிநந்தனுக்கு குழப்பமே அவனும் அவளைப் பார்த்தான் தான். அவள் அவனை முழுவதுமாய் ஆட்கொண்டு இருந்தாள் தான். ஆனால் அவள் கண்டுகொண்டு திட்டும் அளவிற்கா என அவனுக்கு தெரியவில்லை... அவ்வளவு மோசமாக பார்த்துத் தொலைக்கவும் இல்லை. தற்செயலாக நடந்ததைப் போல் தான். என்ன நேரமோ... அனைவரிடமும் ஃபீட் பெக் படிவத்தை கொடுக்கசொல்லி சுதனையே அனுப்பிவிட்டு தன் வேலைகளில் மூழ்கிப் போனான். அன்று இரவும் அவனை தூங்க விடாமல் கனவில் வந்து படுத்தி எடுத்துக் கொண்டு இருந்தாள். என்ன ஒரு லட்சணம். காஃபி பீன் நிறம். சும்மாவே எடுப்பான குத்திக் கிழிக்கும் கண்கள். அதை மை வேறு தீட்டி கூர்மையாக்கி இருந்தாள். அதனால் தானோ அவளது பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது போயிற்று. ஒப்பனை என்று வேறு எதும் இல்லாத முகம், நிமிர்ந்த நடை. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் போல. சுருக்கமாய்ச் சொல்லவேண்டும் என்றால் சங்க இலக்கியங்களில் வரும் வாளெடுத்து வீசக்கூடிய தலைவியினைப் போல் இருந்தாள். அவளை நினைத்து எவ்வளவு நேரம் விழித்து இருந்தான் என அவனுக்கே தெரியாமல் கண் அயர்ந்து விட்டான்.

காலையின் கண் விழித்தால் அபிநந்தனுக்கு முன்னரே ஸ்ரீநிதா கல்லூரிக்கு கிளம்பி போய்விட்டாள். அம்மாவிடம் கேட்டதற்கு எதோ மேட்ச் என்று இருக்கிறதாம் என்று அம்மாவும் கூறிவிட்டாள். வீடே அமைதியாய்த் தெரிந்தது அவள் இல்லாமல். ஒரு நாளுக்கே இந்த நிலை என்றால் அவள் திருமணம் முடித்துப் போகும்போது என்ன செய்வது. தூக்கிவாறிப் போட்டது அபிநந்தனுக்கு. இன்னும் ஒன்றோ இரண்டோ வருடங்கள் தானே... அதன் பின் அவனது தங்கை வேறு ஒரு வீட்டுக்கு போக வேண்டும். தன்னால் இயன்ற அளவிற்கு அவளுக்கு எதாவது செய்தாக வேண்டும் என எண்ணிக் கொண்டான். தன் தொழிலைத் தொடங்க எங்கேனும் லோன் அப்ளை செய்யலாமா என ஒரு எண்ணம் தோன்றியது. ஆனால் கல்விக் கடன் ஒன்று இருக்கிறதே. இரண்டையும் எவ்வாறு சமாளிப்பது. யோசனையுடனேயே தன் வேலைக்கு கிளம்பினான். எதோ தனக்கு வழி கிடைக்கும் என அவனது உள்ளுணர்வு மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தது. மகனைப் பார்த்த பார்வதிக்கு அவனது எண்ணம் புரிபடாமல் இல்லை. அவன் கேட்பது அவனுக்கு கிடைக்க வேண்டும் கடவுளே என கடவுளை வேண்டிக் கொண்டாள். பாவம் அவளால் வேறு என்ன தான் செய்ய முடியும்.

சரியாக அலுவலகம் நுழையும் முன் நேற்று போட்ட டேபிள் அங்கேயே கிடந்தது. இன்னும் அதை யாரும் தூக்கி வைத்தபாடில்லை. அதன் அருகில் வந்தவனுக்கு நேற்று நடந்ததெல்லாம் கண் முன் படமாய் ஓடியது. தன்னையறியாமல் மதுமித்ரா என ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டான். மீண்டும் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது. நித்தியிடம் கேட்டால் அவ்வளவு தான் ஈரைப் பேணாக்கி பேணை பெருமாளாக்கி விடுவாள். அவளிடம் இதைப் பற்றி சொல்லாமல் இருப்பதே நல்லது.. ஆனால் மதுமித்ராவை எப்படி பார்ப்பது பின்னர். அவளை ஏன் பார்க்க வேண்டும் என தோன்றினாலும் தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டவனாய் அதற்கு 'வித்தியாசமான பெண்ணைப் பார்த்ததினால் வந்த ஆர்வம்' என பெயர் சூட்டிக்கொண்டு மீண்டும் வழி தேட ஆரம்பித்தான். கல்லூரிக்கும் போக முடியாது. வீடும் தெரியாது. வேறு வழி என்ன என அதிதீவிரமாய் யோசிக்கும் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தன் வாழ்வே அவளோடு தான் என்று.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top