பயம் அர்த்தம் அற்றது..,''

Advertisement

Eswari kasi

Well-Known Member
''பயம் அர்த்தம் அற்றது..,''
...........................................

பயப்படாத மனிதன் உலகத்தில் இருக்கவே முடியாது. நம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம் தான்!

சிறுவயதில், நம்மை அடக்க அல்லது கீழ்ப்படிய வைக்க “பூச்சாண்டி’ காட்டுவது நடைமுறை வழக்கம் என்றாலும், அதுவும் ஒருவகையில் மனதளவில் நம்மை பாதிக்க வைக்கும் செயல்தான்.

பெரியவர்களான பிறகு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் அடிப்படைக் காரணமே அதுதான்.

இது வளர வளர பின்னாளில் மனோ வியாதியாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு.

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டு இருந்தபோது அவனுக்குப் பசி எடுத்தது.ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.

மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.

ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு,"யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான்.

உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தவனைப் பார்த்தார்.

அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது.

"பெரியவரே,உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவு இல்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன்,பெரு முயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.இளைஞன் இப்போது இன்னொரு முயற்சி எடுத்து கிளை மேல் ஏறி விட்டான்.விடு விடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.
அவரை சரமாரியாகத் திட்டினான்.

"ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே,

"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார்.
இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார்,

"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து. நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.

உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.
அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்..
,
ஆம்,நண்பர்களே.,

பயம் உங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்பு பயத்தை உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடுங்கள்..

முடிவில் பயம் அர்த்தம் அற்றது என்பதை நீங்கள் தானகவே உணர்வீர்கள்.,

Padithathil pidithathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top