'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 6

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10857

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவன் அறையை விட்டு வெளியில் வரவும் அங்கு சரஸ்வதி யாரிடமோ மும்முரமாக கைபேசியில் பேசுவதை கண்டவன் அதை அலட்சியப்படுத்தி தன் அடுத்த நகர்வுகளை மனதில் அசைபோட்டவாறே அலுவலகத்திற்கு கிளம்பினான்.


நாட்கள் விரைந்தோடி ஓர் மாதம் கடந்த நிலையில் கல்லூரி முடிந்து தோழிகளோடு அரட்டை அடித்தவாறு விடுதி நோக்கி சென்று கொண்டிருந்த அலரின் கால்கள் தன் செயல்பாட்டை நிறுத்தவும் முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அலர் உடன் வராததை தொடர்ந்து அவளிடம் விரைய அவள் பார்வை குறிப்பிட்ட இடத்தில நிலைகுத்தி இருப்பதை கண்தடு அவள் பார்வையின் வழி பயணித்தனர்.

அங்கு சாலை ஓரம் புங்கை மர நிழலில் கண்களில் காதல், ஏக்கம், பரிவு, வலி அனைத்தும் கலந்து.., ஒற்றை காலை மரத்தில் தாங்கி கைகளை கட்டியவாறே தன்னை புரிய வைத்துவிடும் நோக்கதோடு பார்த்துக்கொண்டிருந்தான் அலர்வளின் அகனெழிலன்.

அவன் பார்வை கூறிய செய்தியை முழுதாக படித்தவளுக்கு அதன் வீச்சை தாங்க முடியாமல் போனது. அன்று போல் இன்றும்...!! ஆனால் அன்று போல் நாணத்தால் அல்ல கோபத்தால்.

கண்களில் வெறுப்பை தத்தெடுத்து அவனை தவிர்த்தவாறு தோழியின் கரம் பற்றி அவனை கடந்து செல்ல முனைந்தாள், பாதையில் இருந்து மட்டும் அல்ல வாழ்க்கையில் இருந்தும்.., ஆனால் முடியவில்லை.

அவள் எண்ணம் புரிந்தவன் அவள் வழியை மரித்து நின்றான். பாதையில் இருந்து மட்டும் அல்ல வாழ்கையிலிருந்தும் அகல மாட்டேன் என்ற பிடிவாததோடு.

பின்னர் அவள் தோழிகளை ஏறிட்டவன் அவளை விட்டு அகலுமாறு கண்களால் கட்டளையிட்டான்.

அனைத்தையும் அறிந்த நித்துவோ காயத்ரியை அழைத்துக்கொண்டு விடுதியை நோக்கி சென்றாள். அவர்கள் செல்வதை புன்முறுவலோடு பார்த்துக்கொண்டிருந்தவன் பார்வை அலரின் மீது படிந்தது.

அவர்கள் நின்று கொண்டிருந்தது முக்கிய சாலையில் இருந்து பிரிந்து சென்று அவள் விடுதிக்கு செல்லும் வழியின் வளைவில். வீடுகள் அதிகம் இல்லாத பகுதி.

நிமிடங்களை மௌனம் விழுங்கி கொண்டிருப்பதை இருவரும் உணர்ந்தாலும் யார் முதலில் என்பதாய் நின்றிருந்தனர்.

அலரின் நேர்கொண்ட தீர்க்கமான பார்வையை சந்தித்த எழிலுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவள் , திருவிழா அன்று தன்னை கள்ளப்பார்வை பார்த்து உள்ளத்தில் நிறைத்தவளும் அல்ல என்பது.

அவளின் இந்த பார்வை புதிது.., அதன் திடம் புதிது.., அது சொல்லும் செய்தி புதிது.., அவள் வாய் திறக்க மாட்டாள் என்பதை உணர்ந்தவன்.., தானே இயல்பாய் ஆரம்பித்தான்.

'அமுலு எப்படிடா இருக்க..?'

பதில் இல்லை பாவையிடம்.

அவள் மீது பதிந்த பார்வை அகலாது தலையை அழுத்த கோதியவாறு செமஸ்டர் எப்போ ஆரம்பிக்குது..? என்றான்.

இதை கேட்கத்தான் வந்தாயா நீ..? என்பது போல் புருவம் உயர்த்தினாள். அவளின் எள்ளலை கண்டு கொண்டவன் இனியும் மயிலே மயிலே என்றால் வேலைக்கு ஆகாது என்று அவளை பார்க்கவும் அவளோ பேச்சு முடிந்தது போல் கிளம்பினாள்.

பொறுமை காற்றோடு கலக்க அவள் கையை பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தினான். தன் கையை பிடித்திருந்தவனை கடுமையாக முறைக்கவும் அதை லட்சியப்படுத்தாதவன், "பேசிகிட்டு இருக்கும் போது எங்கடி போற?" என்றவாறு அவளை இழுக்கவும்,

"இப்போ உன் கையை எடுக்க போறியா? இல்லயா..?"என்றாள் அவன் கண்களை பார்த்தவாறு.

அவளின் ஒருமையான விளிப்பில் கொதித்தவன், "என்னடி மரியாதை குறையுது..! மாமாங்கற நினைப்பு இருக்கா..? இல்லையா..?"

'முடியாது..! கையை விட முடியாது..! என்னடி பண்ணுவ..?' என்றான் அலட்சியமாக.

இப்போ மட்டும் நீ கையை எடுக்கல கையை புடிச்சி இழுத்து டீஸ் பண்ணணு சொல்லி போலீஸ்ல புடிச்சி கொடுத்துடுவேன்.

'ஈவ் டீசிங்க்கு என்ன தண்டனைனு தெரியும்ல' என்றவள் சிறு இடைவெளி விட்டு குறைந்தது மூணு மாசம் என்றாள் நக்கலான குரலில்.

அவளின் வார்த்தை பிரயோகத்தில் முழுதாக அதிர்ந்து அதை உள்வாங்கி அதன் அர்த்தம் உணர முழுதாக மூன்று நிமிடங்கள் பிடித்தது எழிலுக்கு.

அர்த்தம் புரிந்ததும் அவள் கையை விட்டவன், அவளை நெருங்கி தாடையை அழுந்த பற்றி "என்னடி சொன்ன? போலீஸ்ல புடிச்சிக்குடுப்பியா..? என்னை என்ன பொறுக்கின்னு நெனச்சியா..? எப்போ இருந்தடி இப்படி பேச கத்துகிட்ட? எங்க மாமா ஒன்னும் உன்னை இப்படி வளர்க்கலையே?" என்றான் ஆதங்கத்துடன்.

அவன் வார்த்தை உயிர்வரை சென்று தாக்க எடுத்த முடிவை செயல் படுத்த இன்றை விட்டால் வேறு நாள் கிடைப்பது கடினம் என்று எண்ணியவாறே.., போராடி அவன் கையை விடுவித்தவள், நீங்க பண்ணின வேலைக்கு வேற எப்படி பேசணும்னு எதிர்பார்க்குறீங்க..? ! என்றாள் வெறுப்பாக.

அவள் முகத்தில் வெறுப்பை கண்டவன் தன்னை நிலைப்படுத்தி கொண்டு கோபத்தை கைவிட்டவனாக அவளிடம் தன்மையாக பேச தொடங்கினான்,

"அமுலு… அமுலு … இங்க பாருடா..! நான் யாருனு தெரியும் தானே உனக்கு! நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்காடா? அதே நிலையில தான் நான் இப்பவும் இருக்கேன்".

உங்கிட்ட… ம்ம்ம….அது வந்து…எனக்கு.. நான்… என்று காதல் சொல்ல வந்தவன் வார்த்தைகள் கோர்க்க முடியாமல் தடுமாற அவனின் எண்ணம் புரிந்தவள், அவனிடம்..,

இங்க பாருங்க.., "என்னை படிக்க எங்க அப்பா இங்க அனுப்பிருக்காரு. நீங்க யாராக இருந்தாலும் என்னை விடுதியில் வந்து பார்த்திருக்கணும்… ஆனால் நாம எங்க நிற்க்கிறோம்னு தெரியுதா உங்களுக்கு? நாதனோட பொண்ணுக்கிட்ட ஒருத்தன் பப்ளிக் ரோடுல வழி மறிச்சி பேசுறது அவருக்கு கௌரவம்னு நெனைக்குறீங்களா..? இதுவரைக்கும் ஒருத்தன் இப்படி என்னை மறிச்சி பேசனதில்லை அதுக்கு நான் இடம் கொடுத்ததும் இல்லை.

என் அப்பாவிற்கு ஊருக்குள்ள நல்ல பேர் இருக்கு என்னால அவர் தலை குனிவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால இப்படி பேசுறதை விட்டுட்டு ஊர் போய் சேருங்க" என்றாள் தன்மையாக.

இதெல்லாம் தெரியாமயா நான் இங்க வந்து பேசிட்டிருக்கேன்..! நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..! என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளை துப்பினான்.

இதற்கு மேல் உன்னிடம் பேச எதுவும் இல்லை என்று எண்ணியவாறு கையை கட்டிக்கொண்டு சாலையை வெறித்தாள்.

எழிலோ வாயை தொறந்து பேசுடி!! அப்பா… அப்பானு… இப்படி மூச்சு விடாம பேசுறவள், எதுக்குடி திருவிழா அப்போ கோவில்ல பொங்கல் வெச்சிட்டு இருந்ததை விட்டுட்டு நான் கோவிலுக்குள்ளே போவதை பார்த்ததும் என் பின்னாடியே வந்து மறைஞ்சி மறைஞ்சி நின்னு என்னை ரசிச்சிட்டு இருந்த அப்போ உங்க அப்பா உன் நெனப்புல இல்லையா.

"சரி அதைவிடு வாழை தோப்புல என்னை பார்த்ததும் உன் கண்ணுல ஆசையும் சந்தோஷமும் போட்டி போட்டுச்சே அதுக்கு என்ன அர்த்தம். சரி அதையும் விடு நான் கட்டி புடிச்சப்ப என்ன வெறுத்து ஓடாம யாராவது வந்துடுவாங்க போங்க மாமான்னு படபடத்தியே அதுக்கு என்னடி அர்த்தம்..?"

அப்போ எல்லாம் நீங்க நாதன் மகள்னு தெரியலையா..? அதனால எல்லாம் உங்க அப்பா தலை நிமிர்ந்து இருக்குமா..? இப்போதான் ஞானோதயம் வந்ததா..? என்று இடைவிடாது கேள்விக்கணைகளால் அவளை துளைத்தெடுத்தான்.

தன்னை கண்டுகொண்டானே என்று உள்ளுக்குள் ஒருபுறம் திடுக்கிட்டாலும் மறுபுறம் தான் எடுத்த முடிவில் எஃகின் உறுதியோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்.

"போதும் இதுக்கு மேல ஒருவார்த்தை அநாகரிகமா பேசினாலும் நான் பொறுமையா இருக்க மாட்டேன்" என்றாள்.

ஏய்..! எதுடி அநாகரிகம். நீ செஞ்சதை சொன்னா அது அநாகரீகமா..? உன் பின்னாடியே சுத்திட்டு இருக்குறதால என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..? கையாலாகாதவன்னா.., நான் நெனைச்சேன்னா உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்ட பத்து நிமிஷம் ஆகாது. ஆனால் என்னோட வளர்ப்பு அதை செய்யவிடாம தடுக்குது.

“எப்போ தான்டி அப்பாவை தாண்டி யோசிக்க போற நீ”, உன்னையே நெனச்சி 4 வருஷமா பைத்தியக்காரனா திரியுற என்னை பார்த்தா உனக்கு எப்படிடி இருக்கு..! என்னை பத்தி யோசிக்க மாட்டியா..! என்னை விடு அட்லீஸ்ட் உன்னை பத்தி கூடவா யோசிக்கமாட்ட.. அந்த அளவுக்கு முட்டாளாடி நீ..?

'எங்க என் கண்ணை பார்த்து சொல்லு உனக்கு என் மேல ஆசை இல்லனு. என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லனு' என்றவாறு அவள் விழிகளை தன் விழிகளால் ஊடுருவி சென்றான், அதில் புதைந்திருக்கும் காதலை அறியும் பொருட்டு.

ஆனால் அவன் வார்த்தைகளை பொருட்படுத்தாது அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்து, "என்கிட்ட கேட்குற எல்லா கேள்விக்கும் என்னோட பதில் எங்க அப்பா மட்டும் தான். அதனால என்கிட்ட பேசுறத விட்டுட்டு வேற வேலை இருந்தா போய் பாரு" என்று கூறிவிட்டு விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பதிலில் சிக்கலுக்கான தீர்வை கண்டுகொண்டவன் விரைந்து சென்று அவள் வழியை மறித்தான். திடீரென தன் முன் நின்றவனை., என்ன..? என்ற கேள்வி தாங்கி அலர் பார்க்கவும், எழில் முகம் மலர “அப்போ உங்க அப்பா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்கிட்ட சொன்னா உனக்கு சம்மதமா..?” என்றான்.

போகாத ஊருக்கு வழிகேட்கிறானே.. என்று உள்ளுக்குள் நொந்து கொண்டாலும், எங்க அப்பா ஒருநாளும் என் விருப்பத்துக்கு மாறா நடக்க மாட்டார். சோ இதுக்கு மேலயும் என் பதில் தெரிஞ்சே ஆகணுமா..? என்றவளை தீர்க்கமாக பார்த்தவன்.,

"நான் கேட்டது உன் அப்பா என்னை கட்டிக்க சொன்னா உன்னோட பதில் என்ன..? அதை மட்டும் சொல்லு என்றான்.


மொதல்ல எங்க அப்பா என்கிட்ட இந்த கேள்வியை கேட்கட்டும். அப்புறம் நான் என் பதிலை அவர் கிட்டயே சொல்றேன் என்றாள். எந்த நிலையிலும் தன் வார்த்தை அவனுக்கு நம்பிக்கை கொடுத்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

'சரிடி இப்போ சொல்றேன் கேட்டுக்கோ..! உங்க அப்பாவே வந்து நீ எழிலை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு உன்கிட்டயே சொல்ல வைக்குறேன். ஊரறிய உன்னை என் பொண்டாட்டி ஆக்கிக்காட்டுறேன்' என்றவனின் வார்த்தைகளுக்கு செவி மடுக்காது விடுதி நோக்கி திரும்பி நடந்தவளின் கரம் பற்றி,

'நான் பேசிட்டு இருக்கேன் உன் இஷ்டத்துக்கு கிளம்புவியா..? எவ்வளவு திமிர்டி உனக்கு..!' என்று வேகமாக தன் புறம் திருப்பினான்.

அதில் தடுமாறி அவனை மோதி நின்ற அலர் ஒரு நொடி திகைத்தாலும் மறுநொடி விலகி அவன் கன்னத்தில் இடியென தன் கரத்தை இறக்கினாள்.

'ஹௌ டேர் யு..?' என்றவள், கண்கள் சிவக்க சுட்டு விரலை அவன் முன் நீட்டி

'இன்னொரு முறை என்னை தொட்ட.., மரியாதை இருக்காது' என்று அவனை எச்சரித்து..,

என்ன கேட்ட..? எங்க அப்பா எப்படி வளர்த்தாருன்னா..? இதோ இப்படி தான் வளர்த்தார் போதுமா..! அப்புறம் என்ன நான் உன் பொண்டாட்டியா..? அதுவும் எங்க அப்பாவே சொல்லுவாரா..? கனவுல கூட நடக்காது.

தொடர்ந்த அலர் "இவ்ளோ நேரம் நான் பொறுமையா நின்னு பேசிகிட்டிருக்குகிறது இனிமேலும் என்னை தொடரக்கூடாதுன்னு தான். புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்குறேன்" என்றவள் விடுதி நோக்கி நடக்க தொடங்கினாள்.

அனிச்சை செயலாய் கன்னத்தில் கரம் பதித்தவன் சுளீர் என்று எரியவுமே தான் அவள் தன்னை அடித்ததை உணர்ந்தான்.

சாலையில் சென்று கொண்டிருந்தவள் மனமோ எழிலை வறுத்து கொண்டிருந்தது, "மனசுல என்ன பெரிய மைனர்ன்னு நினைப்பா..! எப்பப்பார் வழிமறிச்சி பேசுறது இன்னும் என்ன ஒன்பதாம் கிளாஸ் படிக்கிற பொண்ணுனே நினைப்பா..அமைதியா போய்டுவேன்னு நினைச்சானா என்றவள் அன்று அவன் தன்னிடம் பேசிய நாளை அசை போட ஆரம்பித்தாள்.

அன்று பள்ளிக்கூடம் முடிந்து அலர்விழி வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தாள். பொதுவாகவே யாரிடமும் பொது இடங்களில் பேச்சு வைத்து கொள்ளாதவள் அலர். அதற்கும் காரணம் நாதனே..! அவருக்கு பிடிக்காது என்பது மட்டும் அல்லாது ஊரில் அவர் பிரபலமானவர் என்பதால் தன்னால் அவருக்கு எந்தவிதமான அவமரியாதையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பாள்.

அப்போது அவளருகே வந்த சதிஷ் தேர்வு பற்றி கேட்கவும் பதில் அளித்தவள் பேச்சு சுவாரஸ்யத்தில் அது சாலை என்பதை மறந்து அவனோடு உரையாடி கொண்டிருந்தாள். இருவரும் வகுப்பில் நண்பர்கள் செய்த சேட்டைகளை பேசி சிரித்து கொண்டு வந்தனர்.

அன்று அவளை அழைக்க வந்திருந்த அகனெழிலன் அவர்கள் அருகே தன் வாகனத்தை நிறுத்தி கனல் கக்கும் பார்வையை சதீஷிடம் செலுத்தியவாறு ஏறு என்றான். அவன் யாரை ஏற சொல்கிறான் என்று புரியாமல் அவள் தயங்கி நிற்க இப்போது அவள் புறம் திரும்பியவன் ஏறு என்று உறுமவும் திடுக்கிட்டு அவன் பின் அமர்ந்தாள்.

எதுவும் பேசாமல் வண்டியை எழிலன் செலுத்தவும் சிறிது நேரம் கழித்தே சுற்றுப்புறத்தை உணர்ந்தவள்.., வண்டி வீட்டிற்கு செல்லாமல் வேறுபுறம் செல்வதை கண்டு, மா.. மா.. மாமா..! எனவும் அவன் வண்டியை ஓரம் கட்டவும் சரியாய் இருந்தது.

உடனே கீழே இறங்கியவள் "ஏன் மாமா இங்க நிறுத்துனீங்க..? வீட்டுக்கு போகணும் அம்மா தேடுவாங்க" எனவும், அவள் தோளில் இருந்த புத்தக பையை வெடுக்கென இழுத்தவன் அதை வண்டியின் மீது வைத்துவிட்டு அவள் கரம் பிடித்து அழைத்து சென்றான்.

அலரோ தன் மாமனின் இத்தகைய செயலில் அதிர்ந்தவள் பேச்சு மறந்தவளாய் அதிர்ந்த பார்வையோடு அவனை பின் தொடர்ந்தாள். அருகிருந்த மரத்தடியில் அவளை நிறுத்தியவன் அவளிடம், "என்ன பேச்சு உனக்கு அவன்கிட்ட..?" என்றான்.

அவன் கேள்வி புரியாமல் இவள் அவனை ஏறிடவும் இப்போ 'உன்கூட வந்தானே அவன் கூட உனக்கு என்ன பேச்சுன்னு கேட்டேன்..?' என்றான்.

ஒன்னும் இல்லை மாமா எக்ஸாம் எப்படி எழுதினேன்னு கேட்டான் பதில் சொன்னேன் என்றாள். உடனே எழில் இதுவே கடைசியா இருக்கனும் இப்படி மத்தவங்ககிட்ட பேசுறது. இனி ஒருமுறை இப்படி உன்னை பார்க்க கூடாது புரியுதா..? என்றான்.

ஏன் என்பதாய் அலர் அவன் முகம் பார்க்கவும்..,

அவள் அருகே வந்தவன் அவளின் விரிந்த மருண்ட நயனங்களில் மிளிர்ந்த அச்சத்தை கண்டு நிதானித்து தன்னையே நிந்தித்து கொண்டு அவளிடம்,

"அது அப்படி தான், இனி யார்கிட்டயும் பேசக்கூடாது. ஏன்னா இன்னும் மூணு வருஷம் கழிச்சி நம்ம ரெண்டு பேருக்கும் திருமணம்ன்னு முடிவு பண்ணி இருக்காங்க" என்றான்.

கேட்டவளுக்கோ ஒருநொடி பூமி தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு ஸ்தம்பித்து போன பாவையவள் பின் திக்கி திணறியவாறு அவனிடம் "யாரு..?" என்ற கேள்வி கேட்டாள்.

அவனும் உன் அப்பா என்று முடித்துக்கொண்டான்.

நினைவில் இருந்து மீண்டவள், "உன்னால தான்டா இத்தனை வருஷம் நான் அனுபவிச்சேன் இனியும் அப்படி இருக்க போறது இல்லை. பெருசா சவால் விட வந்துட்டான், நானே இப்போதான் எதுவும் வேண்டாம்னு வெளில வந்துட்டேன். அதை புரியிற மாதிரியும் சொல்லிட்டேன் இன்னமும் அதுலயே இருந்தா என்ன அர்த்தம் என்னை மறந்துட்டு வேற ஒருத்தியை கட்டிட்டு வாழ வேண்டியது தானே".

"எங்க அப்பா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என் அப்பா அம்மாக்காக நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. எனக்கு நீ வேண்டாம் அதையும் மீறி நீ எப்படி என்னை உன் பொண்டாட்டி ஆக்குறன்னு நானும் பார்க்கிறேன்" என்ற உறுதியோடு அறைக்கு வந்து சேர்ந்தாள்.


ஹாய் ஹனீஸ்...


இதோ " நெஞ்சமெல்லாம் அலரே !! " அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top