என் காதல் தீ 19

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
இதோ அடுத்த பகுதி! இத்தோடு, ஒரு சின்ன எபிச்சோட், மற்றும் எபிலாக். அதுவும் முடிந்தவரை இன்றிரவே பதிவிடப்படும். இல்லையேல், நாளை மாலை.
படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா...

என் காதல் தீ 19



வெள்ளிக்கிழமை மாலை நேரம்.

நிரல்யா அந்த ராயல் என்ஃபீல்டின் பின் அமர்ந்திருக்க, கதிர் அதனை இயக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் கோவை மாநகரத்தின் நெரிசலான சாலையைக் கடந்து அந்த சிற்றூருக்கு செல்லும் சிறுபாதையில் பிரிந்து சென்றுகொண்டிருந்தனர்.

அன்றைய நிரல்யாவின் சந்திப்பிற்குப்பின் அபிராமி தன் புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள். முழுவதும் சரியாகவில்லை எனினும், சில நாட்களில் சுமூகமான நிலை வரவே, மேலும் எதுவும் ஆகாதவாறு தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்த அபிராமியின் கணவன், கதிரையும் நிரல்யாவையும் தங்கள் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தான். கல்லூரியைக் காரணம் காட்டி மறுத்த கதிரை, வெள்ளியன்று ஊருக்கு செல்லும் முன்பு வீட்டிற்கு வந்துவிட்டு போகுமாறு வேண்ட, மறுக்க வழியில்லாததால் இருவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

பிரச்சனையை சுமூகமாக தீர்த்த நிரல்யாவிற்கு நன்றி சொன்ன கதிர், எப்படி இதனை நல்லபடியாக முடிக்க முடிந்தது என்று கேட்டபோது ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் நகர்ந்துவிட்டாள் நிரல்யா. அதன்பின், மீண்டும் இருவரின் நடுவில் மௌனத்திரை விழுந்துவிட்டது. இருவருக்கும் பழைய கோபம் முற்றிலும் இல்லை. ஆனாலும், பேசுவதற்கு தயக்கம். காதலில் ஈகோ கூடாது என்பது அதன் பாலபாடம் கற்கும் இந்த மாணவர்களுக்கு இன்னும் புரியவில்லை.

இருவரும் இதோ, அபிராமியின் புகுந்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். நிரல்யாவோ, கதிரின் பின்னே ஒற்றை பக்கமாக கால்களை போட்டுக்கொண்டு தூரத்தே தெரிந்த மலை முகடுகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.

திடீரென்று கதிர், “நிரல்யா, கொஞ்சம் கெட்டியா கைப்பிடியை பிடிச்சுக்கோ” என்று சொல்லவும், அதுவரை எங்கும் பிடிக்காமல் அமர்ந்திருந்தவள், ‘நீ சொன்னா நான் செய்யனுமா?’ என்ற ரீதியில் அதேபோல் அமர, அவன் கூறியதன் அர்த்தம் அந்த வளைவை திரும்பியதும் புரிந்தது அவளுக்கு.

அங்கே கீழ்நோக்கியவாறு சாலை இருக்க, கதிர் எஞ்சினை அணைத்து வேகத்தை குறைத்திருந்தான். இருந்தாலும் அந்த சாலையில் வண்டி சல்லென்று வழுக்கிச் செல்ல, இதனை எதிர்பாராத நிரல்யா, பயத்தில் கதிரை ஒண்டியிருந்தாள்.

தான் சொல்வதை கேட்கவே கூடாது என்று இருப்பவளை என்ன செய்வது என்று கதிர் யோசித்தவாறு இருக்கும்போதே நிரல்யா வந்து அவன்மீது மோத, மெலிதாக சிரிப்பு வந்தது அவனுக்கு. ‘சிரிச்சா சாமியாடிருவா’ என்று நினைத்த கதிர், அதனை தன் வாயினுள்ளேயே அடக்கிக்கொண்டு சாலையின் முடிவில் எஞ்சினை இயக்கி தாங்கள் சேரவேண்டிய இடம் நோக்கி விரைந்தான். அவள் செயல் மூலம் விளைந்த இதத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று உள்மனம் நினைத்தது ஒரு காரணம். அதையே நினைத்த நிரல்யாவும் அவனை விட்டு விலகவில்லை.

ஊர் எல்லை வரை வந்தவன், அங்கேயே பைக்கை நிறுத்தி, மெலிதாக கணைக்க, அதில் சுயம் பெற்றவள் மெல்ல விலகினாள். ஆனால், இருவரின் முகத்திலும் புன்னகை இருந்தது.

அதன்பின், அபிராமியின் வீட்டிற்கு சென்று விருந்தாடிவிட்டு அங்கே இருந்து கிளம்பும்போது மணி பத்தை நெருங்கியிருந்தது. இருவரும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என நினைத்து டவுன் வழியாக செல்லாமல் பல சிற்றூர்களின் ஊடே சென்றனர்.

எல்லாம் நன்றாகவே சென்றது, அவர்கள் நெல்லித்துறைக்கு நான்கு கிலோமீட்டர்கள் அருகே இருக்கும்போதுதான் அது நிகழ்ந்தது.

****​

அவ்விடங்கள் யாவும் மலையடிவாரம் ஆகும். மலைகளின் அரசி ஒரு புறம் உயர்ந்து நிற்க, அருகருகே ஒரு சில சிறு குன்றுகளும் இருக்கும். வரட்சியான வேளைகளில் மலைகளில் இருந்து பசிக்காக கீழிறங்கி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து விடுவதும் உண்டு. அதுவும் பல நேரங்களில் ஒற்றை யானை வந்தால் பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்படுவதுண்டு.

நெல்லித்துறை யானைவழித்தடத்தில் இல்லையாதலால் அங்கே அவை வருவது குறைவாகினும், தற்போது இருவரும் சென்று கொண்டிருக்கும் பாதை மலையில் இருந்து இறங்கி வந்த சிறிது தூரத்தில் தோப்புகளாக இருப்பதால் பல நேரங்களில் யானைகளின் பிடியில் இருந்து தப்பிப்பதில்லை.

வனபத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்போது எதிரில் ஒற்றை யானை வருவதைக் கண்ட கதிர் அதிர்ந்து வண்டியை நிறுத்திவிட்டான்.

சத்தம் வராமல் பைக்கை இயக்குவதும் இயலாத காரியம். தனியே என்றாலும் பரவாயில்லை. உடன் நிரல்யாவும் இருக்கிறாள். என்ன செய்வது என்று அவன் யோசிக்கையில் பின்னிலிருந்து மெலிதாக அவனிடம் பேசினாள் அவள்.

“ஏன் நிறுத்தீட்டீங்க? ஆல்ரெடி லேட்டாச்சு. சீக்கிரம்” என்று அவள் கேட்க, மெலிதாக அதட்டியவன், காரணத்தை கூற, அவள் அதிர்ந்து கத்த வாயைத் திறந்தாள்.

நிரல்யா மெலிதாக கத்தும்போதே அவன் பின்னால் திரும்பி அவள் வாயை கையால் அடைத்திருந்தபோதும், அந்த சிறு சத்தமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த அந்த விலங்கிற்கு போதுமானதாக இருந்தது.

‘போச்சுடா” என்று நினைத்தவன், பைக்கை அங்கேயே விட்டுவிட்டு அவளுடன் சாலையோரம் ஒதுங்கினான்.அருகே ஏதேனும் தோட்டம் இருந்தால் புகுந்துவிடலாம் என்று நினைத்தவன் அங்கே இருந்த குழியை பார்க்கவில்லை. அருகில் குடியிருப்புகள் எதுவும் இல்லையே!

இருவரும் தவறி அந்த குழியினுள் விழுந்தனர். இருந்தும் நிரல்யாவிற்கு அடி படாதவாறு தான் அவளை காத்தவன், சத்தம் எதுவும் வராதவாறு அவளை அடக்கினான்.

அவர்கள் நின்ற இடத்தில் சிறிது நேரம் வந்து நின்ற யானையும், யாரையும் அங்கே காணாததால் தன் வழியே சென்றது.

மேலும் சிறிது நேரம் கடந்தே இருவரும் மறைவிடத்திலிருந்து வெளிவந்தனர்.

இருவரும் மற்றவர்க்கு பெரியதாக எதுவும் ஆகவில்லை என்று ஆசுவாசம் அடைந்த பின்னரே அவ்வளவு நேரம் கேட்பாரற்று கிடந்த பைக்கை கண்டனர்.

நல்லவேளை, அதனை யானை ஃபுட்பால் ஆடாமல் விட்டு வைத்திருந்தது. அதனால், விரைவாக அதனை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி விரைந்தனர் தம்பதியர்.

******​

வீடு வந்த இருவரின் நிலையைக் கண்டு பதறிய தந்தையர் இருவரிடமும் புள்ளார் (யானையை பிள்ளையாரின் மறுஉருவமாகக் கொண்டு புள்ளார் என்றே அழைப்பர்) வந்ததென்று சொல்லி நடந்ததை விளக்கியவன், தங்கள் இருவரின் காயங்களுக்கும் தானே மருந்திட்டான்.

நிரல்யா இன்னும் அந்த திகைப்பில் இருந்து மீளாமலே இருந்தாள். அவளுக்கு இது எல்லாம் முற்றிலும் புதிது. யானையை வெகு அருகில், இருட்டில் என்றாலும் பார்த்ததே இல்லை. அதுவும் இங்கே அவள் தந்தையும் மாமனாரும் கூறியதிலிருந்து தாங்கள் எத்தகைய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறோம் என்று அவள் உணர்ந்தபோது அவளுக்கு நா எழவில்லை.

மறுபுறம் கதிரோ, இவை யாவும் எனக்கு பழக்கம் தான் என்பது போல வெகு விரைவாக வெளிவந்துவிட்டான்.

அவன் மருந்திட்ட பிறகு நிரல்யாவிற்கும் தனக்கும் அறைக்கே இரவு உணவை எடுத்து வரும்வரையும் நிரல்யாவின் நிலை மாறவில்லை.

அவளைக் கண்டவன், தங்களுக்குள் இருக்கும் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, அவளை நெருங்கி “நிரல்யா!” என்று அழைத்தான். அப்பொழுதும் அவளிடம் இருந்து பதிலில்லை. அவள் தோளில் கை வைத்தவன், “லயா!” என்று உலுக்க, அதில் நிகழ்காலத்திற்க்கு வந்தவள், அவனைக் கண்டதும் வெடித்து அழுதாள்.

அவள் அழுகையைக் கண்டவன், தன் வயிற்றோடு அணைத்து அவளை தேற்றலானான்.

“ஒன்னும் இல்லடா.. இங்க எல்லாம் இது சகஜம். எதுவும் நடக்கலைல்ல... ரிலாக்ஸ்” என்று அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.

இதில் அவள் அழுகை மிகுந்ததே ஒழிய, குறையவில்லை. ஏதேனும் நடந்திருந்தால்? என்ற எண்ணமே அவளை நடுங்கச்செய்தது.

அவ்வாறு ஒரு வேளை இருவரது உயிரும் சென்றிருந்தால்? இருக்கும் ஒரே வாழ்க்கையில் சண்டையிட்டு என்ன சாதிக்கப்போகிறோம் என்ற ரீதியில் அவள் மனம் சென்றது.

கதிரை அணைத்தவாறே முகம் பார்த்தவள், “சாரி கதிர்!” என்று அவனை மேலும் இறுக்கிக்கொண்டு தேம்பலானாள்.

“நமக்கு மட்டும் ஏதாவது நடந்திருந்தா?” என்று கண்களில் வலியோடு கேட்டவளை மேலும் தன்னோடு அணைத்துக்கொண்டான் கதிர்.

“என் மேலையும் தப்பு இருக்கு… சா…” என்று அவன் வார்த்தையை முடிக்கும் முன்பே தன் தளிர் விரல்கள் கொண்டு அவன் இதழ் மூடியிருந்தாள் பெண்.

“எல்லாம் செய்தது நான். நீங்க எதுக்கு சாரி கேட்கறீங்க?” என்றவள் அவனிடம் மனமுவந்து மீண்டுமொரு முறை மன்னிப்பை வேண்டினாள்.

“இருந்தாலும், உன்னிடம் கோபம் கொண்டது என் தப்பு தான? அதனால் தான் இந்த சாரி!” என்றவன் அவள் முகம் நோக்கினான்.

“என்ன தப்பு? இல்ல, என்ன தப்புங்கறேன். நான் மட்டும் நம்ம கல்யாணத்த மறைக்க சொல்லாம இருந்துருந்தா நீங்க கோபப்பட்டிருக்க மாட்டீங்கல்ல” என்று அவள் கூற, அவன் உடல்மொழியில் ஒரு இறுக்கம் வந்து போனது. அது சில நொடிகளே என்றாலும், கண்டுகொண்டவள்,

அனைத்தையும் இன்றுடன் பேசிவிடும் எண்ணத்துடன், “எனக்கு அப்போ இருந்த மனநிலை அது. உங்களுடன் திருமணம் ஆனது யாருக்கும் தெரியாமலேயே விவாகரத்து வாங்கி விடலாம் என்று நினைத்தேன்” என்று அவள் கூறி அவனை காண, அவன் விழியில் சிறு வலி. கண்களாலேயே தன் மன்னிப்பை அவள் வேண்ட, சிறு புன்னகையில் மேலும் கூறுமாறு அவன் வேண்டி அவள் அருகே சிறிது தள்ளி அமர்ந்து கொண்டான்.

அந்த விலகலைக் கூட பொறுக்காதவள், அவனை நெருங்கி அவன் கையை தன் தோளில் போட்டவள், கூறலானாள்.

“அது எல்லாம் கொஞ்ச நாள் தான். அதன்பின், என் மனசு கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. உங்களையும் பிடிக்க ஆரம்பிச்சது. உங்களிடம் ஏன் லூசுத்தனமா நடந்துகொண்டேன் என்று என்னை நானே திட்டியிருக்கிறேன் தெரியுமா?” என்று அவள் கூற, அவளவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.

என்னவென்று அவள் கேட்க, “இப்போவச்சும் நீ லூசுன்னு புரிஞ்சுதே உனக்கு” என்று கூறி அவளிடம் இருந்து சில பல கொட்டுகளை வாங்கிக்கொண்டான்.

“கதையை மட்டும் கேட்கனும். கிண்டல் எதுவும் செய்தீங்க, அவ்வளவுதான்!” என்று அவனை மிரட்டியவள், தொடர்ந்தாள்.

“இதுல என் கிளாஸ்மேட்ஸ் வேற, நாம ரெண்டு பேரும் ரிலேஷன்ஸ்னு தெரிஞ்சுட்டு உங்ககிட்ட என்னை தூது போக சொன்னாங்க. அப்போ எல்லாம் எனக்கு செம்ம கடுப்பா இருக்கும். எதுவுமே சொல்ல முடியாம போயிடுவேன்” என்று அவள் சொல்ல,

“அடிப்பாவி! எனக்கு வர்ற நல்ல ப்ரோபோசல்ஸ் எல்லாம் கெடுத்து விட்டுட்டியேடி!” என்று அவன் போலியாக அலற, அவனை விட்டு விலகி எழுந்தவள், இடுப்பில் கை வைத்துக்கொண்டு,

“ஓஓஓ… தொரைக்கு ப்ரோபோசல்ஸ் கேட்குதோ?” என்று காளி அவதாரம் எடுக்க, சிரித்தவன், அவள் கையை இழுத்து தன் மடியில் அமர வைத்து,

“ஏண்டி, நான் பல வருஷமா காதலிச்சவளையே கட்டிகிட்டேன். அப்புறம் எதுக்குடி எனக்கு வேற லவ் எல்லாம்?” என்று அவன் கேட்க,

“என்னது?” என அதிர்ச்சியடைவது அவள் முறையானது.

ஆம் என்றவன், அவளிடம் தன் காதல் கதையை உரைக்க, அதனை கேட்டவள் கண்கள் கலங்கியது.

‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்று அவள் மனம் விம்மியது.

அதேநேரம், அவன் காதலுக்கு இணையாக தானும் அவன் மீது காதலை பொழியவேண்டும் என்ற வேகம் அவளுள் எழுந்தது.

“சாரி மாமா… எல்லாத்துக்கும்…” என்றவள், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள்.

“ஹேய்… என்னடா?” என்றவனிடம்,

“நான் உங்களுக்கு என்ன செய்தேன்? என்னை இவ்வளவு லவ் பண்றீங்க?”

“இந்த ரீசனால தான் ஒருத்தரை பிடிச்சிருக்குன்னா அதற்கு அர்த்தமே இல்லடா. ஏன் என்றே தெரியாம ஒருத்தர பிடிக்கனும். அவங்களோட இயல்பா நம்மோட நாளைய வாழ்வுக்கான கனவு எந்த ஒரு உந்துதலும் இல்லாம விரியனும். இது எல்லாம் எனக்கு உன்னோட நடந்துச்சு” என்று அவள் நெற்றியில் முட்டினான்.

“உங்கள மாதிரி என்னால லவ் பண்ண முடியாது கதிர்” என்றவளிடம், “நீ என்னைவிட என்னை லவ் பண்ணுவ” என்றவனை அவள் நம்பாத பார்வை பார்க்க, “சத்தியமா” என்றான் அவன்.

அவன் சொல்வதுபோல் என்றேனும் நடக்குமா என்ற யோசனையில் இருந்தவளுக்கு அவர்களது கடைசி சண்டை நியாபகத்திற்கு வர,

“கதிர், அன்னைக்கு அவன் எனக்கு லவ் சொல்லத்தான் கூப்பிட்டான். நானும் ஏதோ விளையாட்டுக்கு இந்த ஊருல எப்படி ப்ரபோஸ் செய்வாங்கன்னு பாத்துட்டு இருந்தேன். பிறகு, அவன் ரொம்ப சீரியசா பேசவும், நான் அங்கே இருந்து வந்துட்டேன்” என்று அவள் விளக்க,

கதிரும் அதன்பின் நடந்ததை விளக்கினான்.

அதைக் கேட்டவள், “எல்லாம் என்னாலதான? எப்படி எல்லாம் பேசியிருக்கிறான்? வேறு யாரிடம் எல்லாம் சொன்னானோ! என்னால உங்களுக்கு வேற கெட்ட பெயர்” என்று அவள் கூற, “விடுடா! அவன் யாரிடமும் சொல்லமாட்டான். நான் அன்னைக்கே அவனை தட்டி வைத்துவிட்டேன்” என்று அவன் கூற, நிரல்யாவும் அமைதி காத்தாள்.

திடீரென்று ஏதோ அவள் நினைவிற்கு வரவும், அவன் முதுகில் சரமாரியாக தாக்கினாள் நிரல்யா. அவள் அடிகளை தடுத்துக்கொண்டே, “பேச்சு பேச்சாத்தான் இருக்கனும். நோ அடிதடி” என்றவாறு அவள் இரு கைகளையும் சிறைபிடித்தவன், “ஏன்டி?” என்று கேட்டான்.

“எதுக்கு இங்க இருந்து ஆர்.எஸ்.புரத்துல வீடு எடுத்து தனியா கூட்டிட்டு போனீங்க?” என்று அவள் சிறிது கோபமுடன் கேட்க, “நீ காலேஜ் போகவர கஷ்டமா இருக்கும்னு தாண்டா” என்று அவன் புன்னகையுடன் உரைக்க,

“ஆஹான்… நம்பிட்டேன்” என்று அவள் உரைத்த தோரணையே அவள் நம்பவில்லை என்று கூற,

“நீ அப்போ நம்ம திருமணத்தின்மீதும் என்மீதும் விருப்பம் இல்லாம தான் இருந்த. இது பெரியவங்களுக்கு தெரிஞ்சாலோ, இல்ல, நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லைங்கறத அவங்க தெரிஞ்சுகிட்டாலோ அவங்க மனசு கஷ்டப்படும். இது ஒரு காரணம். இன்னொன்னு, ரெண்டு பேரும் தனித்திருக்கும்போது ஒருவரை சார்ந்து மற்றவர் வாழ வேண்டியது வரும். அப்போ உனக்கு என் மேல பிடிப்பு வரலாம் என்று ஒரு எண்ணம்” என்று அவன் கூற, அவனை வியந்து பார்த்தவள், ஒன்றும் கூறாமல் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

அவள் இயல்பிற்கு திரும்பிவிட்டதை அறிந்த கதிர், அவளை உண்ண வைத்து, தானும் உண்டு உறங்கச் சென்றனர்.

அன்றைய தினம், இருவரும் தங்கள் மனதை வெளியிட்டதால் நிம்மதியாக உறங்கினர்.


HelloGuruPremaKosame.jpg
 

Saroja

Well-Known Member
புள்ளார் வந்து புள்ளங்க
வாழ்க்கையில் வெளிச்சம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top