Uyirin ularal - episode 9

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 8

ஐந்து வருடங்களுக்கு மேலாக தன்னிடம் ஒரு சிறு நெருக்கத்தை கூட காட்டாத அபி, இவன் எதிர்பாராமல் அவனை கட்டிப்பிடித்து கொண்டு அவன் மார்பில் புதைந்து அழவும் முதலில் அதிர்ச்சியானவன் பின்பு ஆனந்தமடைந்தான்.

அடுத்த நொடியே அவளின் அழுகை இவனுக்கு உறைக்க அவளை அணைத்தபடி " அம்மு என்னாச்சு ? எதுக்கு இந்த அழுகை ? ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன் அழாதே " என்றான் ரிஷி.

" இல்ல சின்னத்தான் நான் உன் மேல கோப்படல, நீ பேசியது தப்பும் இல்லை, எனக்குதான் எதுவுமே சரியா இல்ல, சின்னத்தான் நீ வெளிநாட்டிற்கு போன பிறகு, பாட்டி, நம்மை விட்டுட்டு போனாங்கல அதுக்கு அடுத்த வருஷம் எனக்கு பிறந்தநாள் வந்துச்சு, அப்போ...... அப்போ " என்று பேச முடியாமல் இழுத்தாள் அபி.

அவள் ஏதோ சொல்லமுடியாமல் தவிப்பதை உணர்ந்தவன், அவளை அணைத்தவாறு அங்கிருந்த பென்ஞில் அவளை அமரவைத்தான்.

சற்று நேரம் எதுவும் பேசாதவள் மெல்ல பேசலானாள். " நந்து அன்றைக்கு பெரியத்தான் எனக்கு ஒரு கிப்ட் கொடுத்து, நல்லா படிக்கனும் என்று என் நெற்றியில் முத்தம் கொடுத்தார், அப்போது அப்போது அம்பிகா அக்கா வந்து கோபத்தில் என்... என் முடியை பிடித்து இழுத்து என்னை அடித்துவிட்டார், அதுகூட பரவாயில்லை, என்னை ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டினாங்க, அப்போ அவர்கள் பேசியது பாதிக்கு மேல எனக்கு புரியல, ஆனா என்னை.... என்னை ஒரு விபசாரி என்பது போல பேசினாங்க. பெரிய அத்தானையும் என்னையும் சேர்த்து வைத்து தப்பு தப்பா பேசினாங்க, நான் எல்லா ஆம்பிளை மேலும் போய் போய் விழுகிறேன்னா, உனக்கு... உனக்கு... உடம்பு " என்று சொல்ல வந்தவள் அதை முடிக்க முடியாமல் கேவி கேவி அழுதாள்.

" போதும் அம்மு நீ எதுவும் சொல்லாதே, இவ்வளவு நடந்திருக்கு, அண்ணனும், அம்மாவும், அப்பாவும் எதுவும் செய்யலையா ?" என்று கேட்டான் ஆத்திரத்தில்.

" இல்ல, நந்து அங்கு நடந்தது யாருக்கும் தெரியாது, நான் சொல்ல, அத்தை தாங்க மாட்டாங்க, ஆனால் பெரியத்தான் அந்த இடத்திலேயே அக்காவை அடிச்சிட்டாங்க, அடிச்சிட்டு " அவ என் குழந்தை மாதிரி, உன் சாக்கடை பழக்கம் எல்லாம் எங்கள் வீட்டில் கிடையாதுன்னு திட்டினார், அதனால் அக்காவுக்கு என் மேல் ரொம்ப கோபமாயிட்டு, நேரம் கிடைக்கும் போதேல்லாம் திட்டினாங்க, எதுவுமே வெளியே சொல்லமுடியாது. அப்புறம் ஒரு வாரத்தில் சண்முகம்முன்னு ஒரு வேலைக்காரன் வேலைக்கு வந்தான், அவன் பார்வையில் ரொம்ப தப்பிருந்தது, அவன் ஒரு நாள் என்னை....என்னை இங்கே தொட வந்தான் " என்று அவள் காட்டிய இடத்தை காட்டியவள் பார்த்தவன் கண்ணில் கொலைவெறி இருந்தது. அன்று அவனிடம் எப்படியோ தப்பிவிட்டேன், அப்புறம் நான் தனியே அழுததை பார்த்து மாமா என்னிடம் விசாரித்தார், நான் அவன் என்னிடம் தப்பாக நடக்க முயற்சித்ததை மாமாவிடம் சொல்லிவிட்டேன், உடனே மாமா அவனை வேலையை விட்டு அனுப்பிவிட்டார், அப்புறம் இரண்டு நாளில் பெரியத்தானும் தனிகுடுத்தனம் சென்றுவிட்டார்.

நந்து நான் எந்த தப்பும் செய்யவில்லை, எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்காது, அதுமாதிரிதான் அம்பிகா அக்காவுக்கு என்னை பிடிக்காமல் போயிருக்கலாம், அதுக்காக என்னை அவங்க ஏன் அந்த மாதிரி திட்டனும் என்று யோசித்தேன், அதுக்கப்புறம் யாரிடமும் எனக்கு பேசவோ, பழைய மாதிரி பழக்கவோ பிடிக்கலை. என் பெற்றோர் உயிரோடு இருந்திருந்தால் என்னை யாரும் இந்த மாதிரி பேசியிருக்க மாட்டாங்க. நான் பெண்ணாக பிறந்திருக்காவிட்டாலும் என்னை யாரும் இந்த அளவுக்கு கேவலமாக பேசியிருக்க மாட்டாங்க. முன்னதை என்னால் மாற்ற முடியாது, ஆனா பின்னதை மாற்ற முடியும். அதனால் தான் நான் பெண் என்பதற்கு அறிகுறியாக இருக்கும் எந்த அழகும் வெளியே தெரியகூடாதுன்னு நினைத்தேன், அப்புறம் வந்த பானு அக்காவும் என்னை அப்படிதான் ட்ரெஸ் பண்ண சொன்னாங்க, எனக்கும் இதுவே சரின்னு பட்டுச்சு, முடியையும் வெட்டணும் என்றுதான் நினைத்தேன், ஆனால் மாமா நான் சின்ன பொண்ணா இருக்கும் போது கூட என் முடியை வெட்ட அனுமதிக்க மாட்டார். அதனால மாமாவுக்கு பிடிக்காது என்று முடியை மட்டும் வெட்டாமல் விட்டுவிட்டேன்.

இப்போ புரியுதா நந்து, நான் ஏன் உன்னை விட்டு விலகி போகிறேன் என்று. நீ நன்றாக வாழ வேண்டியவன், உனக்குன்னு ஒரு சந்தோசமான வாழ்க்கையை நீ அமைத்துக்கொள். காலமெல்லாம் பொதியை சுமக்கும் கழுதை போல நீ என்னை சுமக்க நினைக்காதே. நீ சொன்ன மாதிரி என்னால் நீ உன் வயதிற்குரிய சந்தோசத்தை எல்லாம் இழந்துவிட்டாய், இனியாவது நீ ப்ரியாவை கட்டிக்கொண்டு சந்தோசமாக வாழு. என்னிடம் பேசவோ, என்னை பார்க்கவோ முயற்சிக்காதே, நான் ஒரு ட்ராக்கில் போகிறேன் அப்படியே என்னை போகவிடு நந்து. " என்றாள் அபி கெஞ்சலாக.

" ஓஒ நான் வாழவேண்டியவன், நீ வாழ்ந்து முடித்துவிட்டியா,? உன்னை சொல்லி என்ன பயன் ? அம்மு என்னை யாரும் புரிந்துகொள்ளவே போவதில்லை" என்றான் வருத்தத்தில். குரல் கரகரவென்றது.

அவன் அணைப்பில் இருந்து விலகிய அபி தன் கையால் அவன் முகம் எங்கும் தடவினாள் " அப்படி சொல்லாதே நந்து, எனக்கு உன் வருத்தம் புரியுது. நாம் இருவரும் சேர்த்து வளர்த்த காலத்தில் உன்னை நானோ, என்னை நீயோ பார்க்க, பேச, பழக என்று யாரும் தடை போட்டது இல்லை. ஆனால் இப்போது அப்படியில்லை, அதனால் நீ எந்த அளவுக்கு தவிக்கிறாய் என்று எனக்கு தெரியும், எனக்கும் அதே தவிப்பு இருந்தது, இப்போது இல்லை. அதான் சொல்கிறேன் நீ ப்ரியாவை கல்யாணம் பண்ணிக்கோ, இந்த வருத்தம் தானா உன்னை விட்டு போய்விடும், அப்புறம் நான் உன்னிடம் சொன்னது அனைத்தும் உனக்குள்ளாகவே இருக்கணும், யாரிடமும் நீ வெறுப்பை காட்டக்கூடாது" என்றாள் அபி.

" இல்லை, சாக்கடையில் கல்லை போட்டால் அது நம் மேல்தான் தெறிக்கும் என்று எனக்கும் தெரியும், ஆனாலும் அம்மு ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு நான் பதில் கொடுக்காமல் விடப்போவதில்லை, அப்புறம் உன் கல்யாணத்திற்கு பிறகுதான் என் கல்யாணம், நீ லைஃபில் செட்டில் ஆகாமல் எனக்கு எதுவும் கிடையாது " என்றான் ரிஷி.

" அப்படின்னா ப்ரியா "

" அவளுக்கு என்ன ? என்னை திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்தால் காத்திருக்கட்டும், இல்லையென்றால் வழி எப்போதும் திறந்தே இருக்கிறது " என்றான் எரிச்சலில்.

அவள் காதல் என்றாள், இவள் எரிச்சல் படுகிறான், இவர்கள் கதைதான் என்ன ? என்று புரியாமல் விழிக்கும் அபியை தோளோடு சேர்த்துக்கொண்டு பவுர்ணமி நிலவை பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி.

********

மறுநாள் கற்பகம்மாள் மகனிடம் கூறினார். "ரிஷி ப்ரியா வீட்டிலிருந்து போன் வந்தது. நாம் இனியும் தாமதிக்கமுடியாது, அம்முவுக்கு மாப்பிள்ளை பார்க்க தரகரை வரச்சொல், நீயும் உனக்கு தெரிந்த பையன் யாரும் இருந்தால் பார்" என்றார்.

ரிஷி பதில் சொல்லாமல் அவரை பார்த்தபடியே இருந்தான்.

" என்னப்பா ரிஷி நான் என்ன தெரியாத பாஷை பேசுகிறேன்னா? அப்படி பார்க்கிறாய் " என்றார் அவர்.

" இல்லம்மா வந்து அம்முவிடம் ஒருவார்த்தை கேட்க வேண்டாமா ? " என்றான்.

" அவளிடம் கேளாமல் மாப்பிளை பார்க்க சொல்வேன்னா" என்றார் அவர்.

" சரிம்மா " என்றதோடு முடித்துக்கொண்டான் ரிஷி.

மகன் எதையோ தன்னிடம் சொல்ல தயங்குகிறானோ ? என்று பட்டது கற்பகம்மாளுக்கு.

அதன் பிறகு வந்த நாட்கள் ரிஷியையும், அபியையும் ஒன்றாக பார்க்கவே முடியவில்லை, இருவரில் யார் ஒதுங்கிப்போவதில் பெஸ்ட் என்று போட்டிபோட்டார்களோ என்னவோ ?

பானுவுக்கு ஏக மகிழ்ச்சி, எல்லாம் தான் நினைத்தது போல போகிறது என்று மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளின் கண்காணிப்பு வேலையையும் கொஞ்சம் குறைத்து கொண்டாள்.

ப்ரியா கேட்டதற்கு " அதுக முன்னமாதிரி இல்லை ப்ரியா, அவர்கள் இருவரையும் ஒரே அறைக்குள் ஒருமாதம் பூட்டிவைத்தாலும் இரண்டு பேரும் பேசிக்கொள்ளக்கூட யோசிப்பார்கள் போல " என்றாள் அவள்.

********
இப்படியே போய்க்கொண்டிருக்க ஒரு நாள் மாலையில் ரிஷி ஹாலில் ஒரு பைலை பார்த்தபடி இருந்தான். வெளியே அபி கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு அவளை தவிர்க்க தன் அறைக்கு செல்ல நினைத்து கையில் இருந்த பைலை எடுத்து கொண்டு எழுந்தான். கைத்தவறி கையில் இருந்த பைல் கீழே விழுந்து பேப்பர் அங்கேயும் இங்கேயுமாக பறக்க, ச்சை என்று சலித்தபடி அதை எடுக்க குனிந்தவன் கண்ணில் அபி நடக்க முடியாமல் தாங்கி தாங்கி வருவதை பார்த்தான். அங்கிருந்த வேலையாளிடம் பைலை எடுத்துவைக்க சொல்லிவிட்டு அவளை நோக்கி போனான்.

" அம்மு என்னாச்சு, ஏன் இப்படி நடக்குற ?" என்றான். அவள் பதில் ஏதும் சொல்லாமல் முறைக்க,

" என்னன்னு சொல்லித்தொலையேன், " என்றான் கோபத்தில்.

" என்ன ? என்ன ? ஆபிஸில் இருந்து வெளியே வரும் போது அங்கு கட்டிட வேலை நடந்துகொண்டிருந்த இடத்தில் ஒரு கம்பி இருந்திருக்கிறது. நான் பார்க்காமல் அதில் போய் இடித்துகொண்டேன். " என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

" கம்பி இடித்தால் இங்கே எதற்கு வந்தாய், உன் கூடவே ஒரு வானரம் சுத்துமே, அதான் அந்த வசந்த் பய அவனை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் போனால் என்ன ? உன்னை இங்கே யார் பார்ப்பார்கள், பார்த்தாலும் விட்டுவிட்டுதான் நீ அடுத்த வேலை பார்ப்பாய். அடுத்தவர்களின் எண்ணத்தின் படிதான் நீயும் நடப்பாய், நானும் உனக்காக அவர்களுக்கு பயந்துதான் நடக்கவேண்டும் என்பாய்" என்றான் அதே கோபத்தில்.

அவளுக்கும் கோபம் வர பதில் சொல்லாமல் அவனை சுத்திகொண்டு போக நினைத்து ஒரு அடி எடுத்துவைத்தாள். முடியாமல் அவள் வலியில் முகம் சுளிக்க, அவள் நின்ற இடத்தில் இரத்த துளிகள்.

" ஏய் அம்மு " என்று பதறியவன் சட்டென்று அவளை தாங்கி பிடித்துக்கொண்டு " ரத்தம் வருதுடி, வா ஹாஸ்பிடல் போகலாம்" என்றான் .

" இல்ல, இல்ல வேண்டாம், சின்ன அடிதான், நானே பார்த்துப்பேன் " என்று அவள் மறுக்கவும்

" உன் பானு அக்காவை அழைக்கவா ? அவர்களுடனாவது ஹாஸ்பிடல் போ " என்றான் ரிஷி.

" ஒரு மண்ணும் வேண்டாம், என்னை என் ரூமில் கொண்டு விடு " என்றாள்.

" கொண்டுவிடு என்றால் எப்படி ? உன்னை பிடிக்கவும் கூடாது, உன்னால் நடக்கவும் முடியாது அப்புறம் எப்படி, உன் அக்காவிடம் பெர்மிஷன் வாங்கிட்டு வருவதற்குள் " என்று அவன் இழுக்க

" கடன்காரா நான் வலியில் துடிக்கிறேன், உனக்கு குத்திக்காட்டி பேச நேரம் இதுவா ? என்னை என் ரூமில் கொண்டுவிடு எருமை " என்று இரு கையையும் நீட்டினாள்.

மறுபேச்சின்றி அவளை கையில் ஏந்தியவன் அவள் அறையில் கொண்டு சேர்த்தான். நல்லவேளை பானு போன் பேசுவதில் பிசியாக இருந்ததால் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

கட்டிலில் கொண்டு ரிஷி அவளை இறக்கி விடவும் " ரொம்ப தேங்க்ஸ் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றாள் அபி.

" விரட்டுவதிலேயே குறியாக இரு, ஹாஸ்பிடலுக்கு போக கூடாது, யாரின் உதவியையும் ஏற்க கூடாது, நீயெல்லாம் ஆளோடு இருப்பதற்கு லாயக்கு இல்லாத ஜென்மம், ஆள் அண்டாத ஏதாவது தீவு இருக்கா என்று பாரு, அங்கே கொண்டு தள்ளிவிட்டுவருகிறேன் " என்றவன் அவள் காயத்தை ஆராய தொடங்கினான்.

அன்று அவள் போட்டியிருந்தது ஒரு லாங் ஸ்கேர்ட், அது கம்பி பட்டு கிழிந்திருந்தது. அவன் காயத்தை தேட இவள் பட்டென்று அவன் கையை தட்டிவிட்டாள். முறைத்தவன் அவளின் ஸ்கேர்ட்டை முட்டுவரை உயர்த்திவிட்டான், காயத்தை காணவில்லை, இவன் அவளை பார்க்க மறுபடியும் இவள் அவன் கையை தட்டிவிட்டாள்.

" அம்மு என்னை பொறுக்கி மாதிரி ட்ரீட் பன்னுற, என்னை பார்த்தா உனக்கு அப்படியா தோணுது " என்றான் கோபத்தில்.

" நந்து முட்டாள் மாதிரி பேசாதே, உன்னை போய் நான் தப்பாக நினைப்பேனா, உன் நல்லதுக்குதான் சொல்றேன், புரிந்துகொள்ளமாட்டாயா ? இப்படி பேசுற ? என்றாள் அவள் கண்ணீர் முட்ட.

" யாரு நீ என் நல்லதுக்கு பேசுற, என் நன்மை என்று எதையாவது நீ நினைத்து பார்த்ததுண்டா ? உனக்கு உன்னை பற்றி மட்டும்தான் கவலை, என்னை நினைத்திருந்தால் என்னுடன் பேசாதே, என்னை பார்க்காதேன்னு வார்த்தையாலயே என்னை கொல்லுவியா. ?" என்றான் அவன்.

" நந்து நான் உன்னிடம் எல்லாவற்றையும் சொன்னேன் இல்ல ?" என்றாள்.

" சொன்னாய், ஏதோ நாய் குலைக்கிறது என்று விடாமல் உன்னையும் வருத்தி, என்னையும் வருத்தி அவர்கள் சொல் படி நடந்துகொண்டிருக்கிறாய் " என்றான்.

அதற்கு பிறகு அவள் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவனும் பேசாமல் தன் வேலையை தொடர்ந்தான். முட்டைத்தாண்டியும் காயம் தென்படாமல் போகவே அவன் கை ஒரு நிமிடம் நின்றது.

அவனை பார்த்தவள் எப்படியும் போ என்று பார்வையை திருப்பிக்கொண்டாள்.

கட்டிலில் இருந்த ஒரு பெட்ஷிட்டை எடுத்து அவளின் காலை மூடியவன் மேலும் அவள் ஸ்கேர்ட்டை சுருட்டி காயத்தை கண்டுகொண்டான், அது சரியாக அவள் தொடையில் இருந்தது. கம்பி இழுத்து அதில் இரத்தம் வந்திருந்தது.

" இடித்துக்கொண்டேன் என்றாய், இங்கே கம்பி கிழித்து இரத்தம் வருகிறது, ரத்தம் வருவதுகூட தெரியாமலாய் இருந்தாய் " என்று கேட்டவாறு காயத்தை துடைத்து மருந்திட்டவன் டாக்டருக்கு போன் போட்டான்.

" வேண்டாம் " என்றாள் அபி தயக்கத்துடன்.

" லேடி டாக்டர்தான் " என்றான் அவன் பதிலுக்கு. அவள் அமைதியாகிவிட,

" இதோ வருகிறேன் " என்று கூறிவிட்டு அறைக்கதவை சாத்திவிட்டுசென்றான்.

சற்று நேரத்தில் அன்னம்மாள் டாக்டரை அழைத்துக்கொண்டு அபி ரூமுக்கு வந்தார். அவளுக்கு ஒரு tt போட்ட டாக்டர் " ஒருவாரம் ட்ரெஸ்ஸிங் செய்ய வேண்டியிருக்கும், முடிந்தால் செய்துவிடுங்கள் இல்லையென்றால் ஹாஸ்பிடல் அழைத்துவாருங்கள் " என்று கூறி சென்றுவிட்டார்.

" அத்தை என்ன டாக்டர் வந்துவிட்டு போகிறார், யாருக்கு என்ன ? என்று கேட்ட பானுவிடம்,

" அபிக்கு காலில் அடிபட்டுவிட்டது, அதனால் டாக்டர் வந்துவிட்டு போகிறார், ஒருவாரம் காயத்திற்கு மருந்து வைக்க சொல்லியிருக்கிறார், நீ கொஞ்சம் வைத்துவிடு " என்றார் கற்பகம்மாள்.

" யார் காலுக்கு யார் மருந்து போடுவது, என்னால் அதெல்லாம் முடியாது " என்று பானு மறுக்க.

" என்னால் மாடி ஏற முடியாது, அன்னம்மாளுக்கு மருந்து வைக்க தெரியாது, நீயும் வைக்கவில்லை என்றால் வேறு யாரு செய்வார்கள், ஒரு வாரம் கூட வேண்டாம் ஒரு இரண்டு நாலாவது செய் " என்றார் கற்பகம்மாள் விடாமல்.

" என்னால் முடியாது, ஏன் உங்கள் சின்ன மகன் எங்கே போனார், காலில் தானே அடி, அவர் செய்யவேண்டியதுதானே " என்றாள் எடக்காக.

" யாரை சொல்கிறாய் ரிஷியையா ? அவனை அபிக்கு கார் ஓட்டவே அனுமதிக்க மறுக்கிறாய், என் தங்கைக்கு நிச்சயம் செய்ய போகிறவர் என்று, அப்புறம் இதுக்கு மட்டும் விடுவியா என்ன ?" என்ற கற்பகம்மாளுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள் பானு.

அங்கிருந்து மட்டும் இல்லை, " நான் ஒரு மூன்று நாள் என் அம்மாவீட்டில் இருந்துவிட்டு வருகிறேன் " என்று கணவனிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் குழந்தையுடன்.

அபிக்கு அடிபட்டிருப்பதை கேள்விப்பட்ட பிறகுதான் அவனுக்கு தெரிந்தது தன் மனைவி எதற்கு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்று. இங்கே இருந்தால் அபிக்கு உதவி செய்ய சொல்வார்களே என்று நினைத்துக்கொண்டான் அவன்.

மறுநாள் காலையும் ரிஷியே ட்ரெஸ்ஸிங் செய்ய வர அபி மறுத்தாள்.

" வேண்டாம் சின்னத்தான், நானே பார்த்துக்கொள்வேன், தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதே, பிறகு ஏதாவது பிரச்சனை வந்தது உன்னை கொன்னே போட்டுடுவேன், பேசாமல் போய் உன் ப்ரியாவை பார் " என்றாள் காலை இழுத்துக்கொண்டு.

" பேசாமல் காலை காட்டு அம்மு, இப்போது நீ மறுத்தால் நான் உன்னை ஹாஸ்பிடல் தான் கூட்டிட்டுபோகணும், உன்னால் நடக்க முடியாது, நான் தூக்கிட்டு கீழே போக, அதை உன் அக்காவின் விசுவாசி யாராவது பார்க்க, அது என் ப்ரியாவின் காதுக்கு போக, அப்புறம்தான் பிரச்சனையே வரும் " என்றான் ரிஷி 'என் ப்ரியாவில்'சற்று அழுத்தம் கொடுத்து.

அபிக்கு எதற்கு கோபம் வந்தது என்றே தெரியவில்லை, திடீரெண்டு அவனை கோபத்தில் அடிக்க ஆரம்பித்தாள்.

" ஏய் அம்மு நிறுத்து நீ எதுக்கு என்னை அடிக்கிற " என்றான் அவள் கையை பிடித்து.

" சொல்ல சொல்ல கேட்காமல் திரும்ப திரும்ப ட்ரெஸ்ஸிங் செய்ய வந்திருக்கல அதனால் " என்றாள் திணறியபடி.

" அதான் பொய் சொல்ல வரலல்ல அப்புறமென்ன? உன்னை பற்றி எனக்கு தெரியாதா ? நீ என்னை எதுக்கு அடிச்ச என்று எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும் " என்றான் அவன் கையை விடாமல்.

" நான் ஏன் பொய் சொல்ல போகிறேன்" என்றாள் அபி.

" உனக்கு இன்னைக்கு மட்டுமா இந்த புத்தி, ஆரம்பத்தில் இருந்தே நீ இப்படித்தானே, உன்னால் தானே எனக்கு ரொம்ப பிரெண்ட்ஸ்ஸே இல்லை, அதிலும் கேர்ள் பிரெண்ட்ஸ் இல்லவே இல்லை. நான் பத்து படிக்கும் போது என் பின்னால் அலைந்த அந்த காவியாவை நானும் காதலிக்கலாம் என்று நினைத்ததற்குள், சின்னத்தான், சின்னத்தான் என்று குறுக்கே சாடி, அந்த காவியாவை என்ன விரட்டு விரட்டின ? அப்பாவிடமும் போட்டுக்கொடுத்தல, அவரும் குழந்தை பொய் சொல்லாதுன்னு எனக்கு எவ்வளவு அறிவுரை செய்தார் தெரியுமா ? இப்போதும் 'உன் ப்ரியா, உன் ப்ரியான்னு சொன்னது நீ, நான் அதை திருப்பி சொன்னேன் ' என் ப்ரியா ' என்று. அதற்குத்தானே இப்போ இந்த அடி அடிச்ச ?" என்றான் அவன்.

' பாவி பயலே கண்டுபிடிச்சிட்டானே ' என்று நினைத்த மனதை அடக்கியவள் " அதெல்லாம் ஒன்றும் இல்லை, உனக்கு மட்டும்தான் ' என் ப்ரியா ' இருக்கிறாளா ? எனக்கும் ' என் நந் ' " என்றவள்

" ச்சீ எனக்கும் ' என் ---------' என்று ஒருவன் வராமலா போவான், எப்படியும் எனக்கு கல்யாணம் ஆன பிறகுதான் உனக்கு, அப்போது நானும் சொல்வேன் ' என் -----என் -----' என்று அப்போது உனக்கு வயிறு எரியும் பாரு " என்றாள் அவள்.

" எப்படி இப்போது உனக்கு எரிவது போலவா ?" என்றான் ரிஷி சிரித்துக்கொண்டே.

" ஆமா நீ பெரிய மன்மதன், உன்னை பார்த்து நான் பொறாமை பட " என்றாள் அவள்.

" ஏன் என் அழகுக்கு என்ன குறை ? என்னை எத்தனை பெண்கள் காதலித்தார்கள் தெரியுமா ? " என்று வேடிக்கை பேசியவன்

" ஏன் அம்மு என் மேல் உனக்கு மட்டும் காதல் வரவில்லை " என்றான் அதே வேடிக்கை குரலில்.

" ஏன்னா எனக்கு காதல் பிடிக்காது, அப்புறம் உன்னையும் பிடிக்காது " என்று சிரித்தாள் அபி.

ரிஷி அவளை இமைக்காமல் பார்க்க " சும்மா சொன்னேன், சும்மா சொன்னேன், அழுதுவிடாதே நந்து பையா. எனக்கு காதல்தான் பிடிக்காது, உன்னை பிடிக்கும். ஆனாலும் லவ் எல்லாம் தப்பு. ஏதோ இடத்தை கொடுத்தால் மடியை கேட்பது போல ஆகிவிடும் அதுமட்டுமில்லாமல் என்னை வளர்ந்ததே நீதானே, நீ எனக்கு வேறு மாப்பிளை பாரு. நான் கட்டிக்கிறேன், அப்புறம் தான் நீ " என் ப்ரியான்னு " சொல்லணும் சரியா, அதுவரைக்கும் அவள் ப்ரியா அவ்வுளவுதான்." என்றாள் அவன் கன்னத்தை பிடித்து.

" எப்படியோ பொறாமைதான்னு ஒத்துக்கிட்டியே, சந்தோசம், காலை காட்டு, நான் மருந்து போட்டுட்டு ஆபிஸ் போகணும், அந்த வசந்தை வரச்சொல்லி வேலையை வீட்டில் வைத்தே பாரு, நான் மாலை சீக்கிரம் வருகிறேன்." என்றான் ரிஷி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top