மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 4

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
காலை ஆறுமணிக்கு வீட்டில் கறந்து வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்துச்சென்று கடைக்கு கொடுத்துவிட்டு கடை முதலாளியிடம் அதற்கான பற்றுச்சீட்டினை பெற்றுக்கொண்டு அப்படியே தான் அன்னைக்கென கையோடு கொண்டு வந்திருந்த காட்டைத்தண்ணியையும் பாசிப்பயறு கலந்த இரண்டு ரொட்டித்துண்டுகளையும் கொழுந்து பறிக்க அதிகாலை நான்கு மணிக்கே மலைக்கு சென்ற தன் அன்னைக்கு கொடுக்க மலைக்கு சென்றாள்...
தினக்கூலிக்கு கொழுந்து பறிக்கும் அப்பிரதேச மக்கள் தினமும் காலை ஏழு மணிக்கு மலைக்கு செல்ல வேண்டும்....அதிக சம்பளம் வேண்டும் என்பவர்கள் அதிகாலை நான்கு மணிக்கே கொழுந்து பறிக்க சென்றுவிடுவர்...காரணம் அவர்கள் எடுக்கும் கொழுந்தின் நிறையை பொறுத்தே அவர்களுக்கு சம்பள ரசீது வழங்கப்படும்.... ஒரு இறாத்தலிற்கு பத்து சதம் வீதம் ஒரு தொழிலாளி ஒரு நாளுக்கு முப்பது இறாத்தல் கொழுந்து பறிக்க வேண்டும்..... ஆக அவர்களது ஒரு நாள் தினக்கூலி மூன்று ரூபா..... அதிகாலை நான்கு மணிக்கு மலையேறுபவர்களுக்கு காலை எட்டு மணிக்கும் பகல் ஒரு மணிக்கும் மாலை ஐந்து மணிக்கும் அவர்கள் பறித்த கொழுந்து நிறுத்தப்பட்டு அதற்கிணங்க ரசீது வழங்கப்படும்... பின் ஏழு மணிக்கு கொழுந்து பறிக்க மலையேருபவர்களுக்கு நண்பகல் பன்னிரண்டு மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் கொழுந்து நிறுத்தப்பட்டு ரசீது வழங்கப்படும்.... கண்டக்டரினால் வழங்கப்படும் ரசீதினை கணக்கு பிள்ளையிடம் வழங்கி சம்பளத்தை பெற்றுக்கொள்வர்........
கங்காணியே தொழிலாளிகளுக்கு மலை நிலத்தை பிரித்து கொடுத்தல், வேலையை கண்காணித்தல் ஆகிய செயல்களை ஆற்றுவார்... ஒரு மலையில் அதாவது பத்து ஏக்கர் நிலத்தில் சுமார் இருபத்தைந்து தொடக்கம் முப்பது வரையான தொழிலாளர்கள் வேலை செய்வர்...... குளிரான பிரதேசம் என்பதாலும் மண்வளம் நன்றாக உள்ள பிரதேசம் என்பதாலும் அங்கு தேயிலைக் கொழுந்திற்கு என்றுமே பஞ்சம் இல்லை..... மேலும் தேயிலையின் தரத்திற்கு நுகர்வோரிடம் நன்மதிப்பு இருந்ததால் அது கம்பனிக்கு பெருமளவு வருமானத்தை ஈட்டித்தர கம்பனி தொழிலாளர்களுக்கு போதுமான அளவு சம்பளத்தை வழங்கியது...
காலை நான்கு மணிக்கு மலைக்கு சென்ற தன் அம்மாவிற்கு உணவை கொடுக்க வந்த தேவி அவருக்காக காத்திருக்க நேரம் கடந்தும் அவர் வராமல் இருக்க வேறு யாரிடமாவது உணவை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று காத்திருந்த போது அங்கு வந்தார் வேலம்மாள்.....அவரை கண்டதும் அவரிடம் உணவுப்பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்ப முயன்றவளை
“பாப்பா.... வீட்டுக்கு போனோன அம்மாயிகிட்ட சொல்லு....சின்ன மச்சானுக்கு அத்தை விபூதி மந்திரிச்சி கேட்டாங்கனு.... பூசாரி பத்து மணிக்கு மேல அங்கிட்டு வருவாறாம்... அவர்ட்ட மந்திரிச்சி விபூதி வாங்கி வைக்க சொல்லு..... நான் மதிய சாப்பாடுக்கு வரும் போது வாங்கிக்கிறதா சொல்லு.....”
“ஏன் அத்தை மச்சானுக்கு என்னாச்சி... ராவு வீட்டுக்கு வந்துட்டு போனப்ப நல்லா தானே இருந்தாரு.....”
“அது ராத்திரியில வரும்போது காத்து கருப்பு ஏதும் அடிச்சிருச்சோ தெரியல... தம்பி கை கால்ல எல்லாம் காயத்தோட தான் வந்திச்சி.... ராத்திரி அதுக்கு சுடுத்தண்ணி ஒத்தடம் குடுத்து படுக்க வச்சேன்.... ராவெல்லாம் பையனுக்கு காய்ச்சல் நெருப்பா கொதிக்க ஆரம்பிச்சிரிச்சி.... விடிய வரைக்கும் அனத்திட்டே இருந்தான்.... இப்போ தான் அசந்து தூங்குறான்... மாமா கொஞ்சத்துல வந்திருவாரு.. அது வரைக்கும் பெரிய மச்சானை துணைக்கு இருக்கச்சொல்லிட்டு வந்திருக்கேன்... நீ மறந்திறாம அம்மாயிகிட்ட நான் சொன்னதை சொல்லிரு.... மறந்துறாத புள்ள..”
“சரி அத்த... நான் அம்மாயிட்ட சொல்லிர்றேன்.... நீங்க இந்த சாப்பாட்ட அம்மா கையிலயே குடுத்துடுங்க.....” என்றுவிட்டு பள்ளிக்கு நேரமாவதை உணர்ந்து அங்கிருந்து விரைவாக வீடு நோக்கி நடை போட்டாள்...
வீட்டிற்கு வந்து தன் அம்மாயியிடம் சந்திரனுக்கு உடல் நிலை சரியில்லாததையும் தன் அத்தை விபூதி மந்திரித்து கேட்டதையும் தெரிவித்தவள் வசந்தனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றாள்....
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தேவியையும் வசந்தனையும் வாசல் கதவில் தொங்கிய பூட்டே வரவேற்க பக்கத்து வீட்டிற்கு சென்று விசாரிக்க அங்கு அவர்களை வேலம்மாள் அத்தை வீட்டிற்கு வந்து சேருமாறு ஒரு செய்தியை விட்டுச்சென்றிருந்தார் அவர்களது அம்மாயி..... அவர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே பின்புறம் இருந்த திறந்த வெளி குளியலறையில் குளித்துவிட்டு அங்கு கட்டப்பட்டிருந்த கொடியில் உலர்ந்து கொண்டிருந்த அவர்களது உடையை அணிந்து கொண்டு தம் அத்தை வீட்டை நோக்கி படையெடுத்தனர்.
செல்லும் வழியில் வசந்தன்
“ஏன் பாப்பா அக்கா திடீர்னு அம்மாயி வேலு அத்தை வீட்டுக்கு போயிட்டாங்க??”
“மச்சானை பார்க்கவா இருக்கும்....”
“யாரு பெரிய மச்சானையா?”
“இல்லடா...”
“அப்போ சின்னவரையா?”
“ஆமா...”
“அவரு நேத்து ராவு தானே வீட்டுக்கு வந்ததுட்டு போனாரு....இப்போ எதுக்கு இவங்க மறுபடியும் அங்க போயிருக்காங்க??? மச்சானுக்கு ஏதும் சமைச்சி எடுத்திட்டு போயிருப்பாங்களோ......?”
“உனக்கு எப்பவும் சாப்பாட்டு நெனவு தான்... மச்சானுக்கு ஒடம்பு சரியில்லனு அத்தய காலேல வழியில பார்த்தப்போ சொன்னாங்க... அம்மாயிக்கு தான் மச்சான்னா உசிராச்சே...அதான் அதை பார்க்க போயிருப்பாங்க....”
“நேத்தைக்கு ரா நல்லா தானே இருந்தாரு...அதுக்குள்ள அவருக்கு எப்படி இப்படி” என்று வசந்தன் வினவ வேலம்மாள் கூறியதை தன் தம்பிக்கு தெரிவித்தாள் தேவி...
“ஹாஹா... மச்சான் நான் சொன்ன கதையை கேட்டு பயந்துட்டாரு போல.... இந்த மச்சான் ஏன் பேய் பிசாசுனா இவ்வளவு பயப்படுறாரு??”
“என்ன தம்பா சொல்ற??? நீ என்ன சொன்ன அவர்கிட்ட??”
“அதுவா... நம்ம முத்தம்மா ஆச்சி ஆவி சுத்துதுனு சொன்னேன்.... அதான் பயந்துட்டாரு போல...”
“தம்பா இதெல்லாம் ரொம்ப தப்பு... அவரு பயப்படுவாருனு தெரிஞ்சே ஏன் அப்படி சொன்ன??? இப்போ பாரு அவருக்கு காய்ச்சல் வந்திருச்சினு அத்தை சொல்றாங்க... பாவம் தானே அவங்க.....”
“நான் சும்மா தான்கா சொன்னேன்... ஆனா மச்சான் இப்படி பயந்து காய்ச்சல் வர்ற அளவிற்கு போகும்னு எனக்கு தெரியாது... தெரிஞ்சிருந்தா நான் அப்படி சொல்லியே இருக்க மாட்டேன்...”
“சரி.... இனிமே அப்படி பொய் சொல்ல கூடாது.... மத்தவங்க பயத்தோட விளையாடுறது ரொம்ப தப்பு தம்பா... இனிமே யாரையும் சும்மா பயமுறுத்தக்கூடாது.... சரியா??”
“சரிக்கா... நான் யாரையும் இனி இப்படி பயமுறுத்த மாட்டேன்...”
“சரி வா ...” என்று பேசியவாறு தம் அத்தை வீட்டை அடைந்தனர் தேவியும் வசந்தனும்...
அங்கு சந்திரனின் வீட்டில் விபூதி மந்திரித்து சந்திரனுக்கு பூசிவிட்டுக்கொண்டிருந்தார் பூசாரி...
“ராவுல கறி சாப்பாடு சாப்பிட்டுட்டு வீட்டை விட்டு வெளிய எறங்கும் போது ஏதாவது இரும்பு சாமான கையில கொண்டு போகனும்... இல்லனா உதட்டுலயும் கையிலயும் எண்ணெய் பூசிட்டு வெளிய எறங்கனும்... ராவுல தான் எல்லா பேய் பிசாசும் வெளிய நடமாடும்... அதுகளுக்கு கவுச்சி வாடை உள்ள ஒடம்புல பூந்துக்க ரொம்ப இஷ்டம்..... அதானால கறி சோறு சாப்பிட்டு வெளியில எறங்குனா இதெல்லாம் செஞ்சிட்டு தான் எறங்கனும்.... அதோட ராத்திரி நேரத்துல காளி காவலுக்கு போவா.... அவளை பார்த்திருந்தாலும் இப்படி தான் பயத்தில காய்ச்சல் வரும்.... இப்போ விபூதி மந்திரிச்சி போட்டுட்டேன்.. சரியா போயிரும்..... பையனுக்கு இப்ப குடிக்க கஞ்சி இருந்தா குடுங்க..... பையன் தெம்பாகிருவான்.. சரி நான் கிளம்புறேன்” என்றுவிட்டு விடைபெற்றார் பூசாரி.....
அவர் சென்றதும் அம்மாயியும் வேலம்மாவும் அடுப்படிக்கு செல்ல மரக்கட்டிலில் அமர்ந்திருந்த சந்திரன் அருகில் சென்றான் வசந்தன்... வசந்தன் சந்திரனிடம் செல்ல அப்போது தான் சந்திரனை ஒழுங்காக பார்த்தாள் தேவி.... அவனது உடலில் அங்காங்கே சிராய்ப்புகள் இருப்பது அவளது கண்களுக்கு புலப்பட்டது..... அப்போது தான் தன் திருவாய் மலர்ந்து தேவி சந்திரனிடம் விசாரித்தாள்..
“மச்சான் என்ன கை கால்ல எல்லாம் காயமா இருக்கு....எப்படி அடிபட்டிச்சி???இராத்திரி வீட்டுக்கு வரும் வழியில என்னத்த பார்த்து பயந்தீங்க??” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுக்க சந்திரன் விழி விரித்து ஆச்சரியத்துடன் தேவியை பார்த்தான்....அவனது ஆச்சரியத்திற்கு காரணம் அவனை கண்டாலே ஓடி ஒளியும் தேவி அவனிடம் நலம் விசாரித்ததே..... அவன் அவளை விழிவிரித்து பார்த்தவாறு இருக்க வசந்தனோ
“மச்சான் அக்கா கேக்குதுல.... எப்படி உங்களுக்கு அடிபட்டுச்சுனு சொல்லுங்க..” என்று சந்திரனின் கவனத்தை கலைக்க தான் விழுந்து எழும்பி வந்த கதையை சொன்னான் சந்திரன்.....
“பார்த்தியா தம்பா நீ ஒரு பொய் சொல்லப்போய் அவரு இப்படி அடிப்பட்டு எழும்பி வந்திருக்காரு.... அவரு பயப்படுவாருனு தெரிஞ்சு தானே அப்படி பொய் சொல்லி இருக்க...”
“ஏ பாப்பா நான் ஒன்னும் பயப்படல.... பந்தம் அணஞ்சிருச்சி.. அதான் வெரசா வீட்டு வந்துரலாம்னு ஓடி வந்து தாறுமாறா விழுந்திட்டேன்.... நீ என்னமோ நான் வசந்தன் சொன்னதை நம்பி பயந்து ஓடி வந்து விழுந்த மாதிரி இல்ல சொல்லுற???” அப்போ வசந்தன்
“அப்போ நீங்க நான் சொன்னதை நம்பலையா மச்சான்???”
“அப்படி இல்லை.... ஆனா நான் நீ சொன்னதுக்கெல்லாம் பயப்படல.....”
“அதான் பூசாரி நீங்க பயந்திருக்கீங்கனு சத்தியம் பண்ணாத குறையா சொல்லிட்டு போயிட்டாரே...” என்று அவனை கேலி செய்ய அவனை அடக்கும் பொறுட்டு என்ன கூறுவதென்று சந்திரன் தடுமாற அவனது பாவனையில் தேவி சிரிக்கத்தொடங்கினாள்..... என்றும் அவன் முன் இருக்கும் போது ஒருவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாத தேவியின் முகத்தையே பார்த்து பழக்கப்பட்டவனுக்கு இன்று அவளது சிரிப்பு அவளை வெளிப்படையாக ரசிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது... அவனது அமைதியையும் பார்வை மாற்றத்தையும் பெண்ணவள் உணர்ந்து கொள்ள சட்டென்று அத்தையை பார்க்கப்போவதாக கூறி வீட்டிற்குள் சென்றாள்... அந்த சொற்ப நேர இன்பம் சந்திரனுள் ஒருவித இன்ப ஊற்றை பெருக்க ஒருவித மயக்கத்துடன் வசந்தனது கேள்விகளுக்கு அவனது நா பதிலளித்துக்கொண்டு இருந்தது.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top