தூரம் போகாதே என் மழை மேகமே!! - 33

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


சத்தம் செய்யாமல் ஆடையை மாற்றிய ஆதிரை மெதுவாக அந்த மரவீட்டினை விட்டு வெளியில் சென்று கீழே பார்த்தாள். அந்தக் கரடி இப்போது அங்கு இல்லை. எங்குச் சென்று இருக்குமென்று அவள் நின்றிருந்த மரக்கிளையினை சுற்றி அங்கும் இங்கும் பார்த்தாள். அந்தக் கரடி அவர்கள் தர்பூசணி பறித்து வந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘அப்பாடா. எப்படியோ அந்தக் கரடி போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் அருகிலே என்றாலும் கூடியவிரைவில் கண்ணுக்கு எட்டும் தூரம் கடந்து சென்றுவிடும். பின் இந்தத் தீவில் யாரும் வசிக்கிறார்களா! என்று தேடிப் பார்க்கலாம். இல்லையென்றால் இந்தத் தீவினை விட்டு அந்த மலைகுன்றின் மேலேறிச்சென்று நாமே கூட வழிக் கண்டு பிடிக்க முயற்சிக்கலாம். உள்ளிருக்கும் கடுவன் பூனையை எழுப்பிக் கொண்டு கிளம்பலாம்.’ என்று ஆதிரை எண்ணினாள்.


நாம் நினைப்பதெல்லாம் நினைத்த நேரத்தில் நடந்துவிடுமா என்ன! இல்லை இந்தத் தீவுதான் மனதின் விருப்பத்தையெல்லாம் அவ்வளவு எளிதில் நிறைவேற விட்டுவிடுமா! அப்படிதான் அப்போதும் நடந்தது.


வீட்டிற்குள் போக முயன்றவளை அந்த வீட்டின் அமைப்பு வியக்க வைத்தது. சுற்றி ஆலம்விழுதுகள் தாங்கிய வண்ணம் இருக்க அந்த வீடு ஆலமரத்தின் மூன்று வலிமையான கிளைகளின் மீது கட்டமைக்கப்பட்டிருந்தது. ‘உண்மையில் idea மட்டும் சிறந்தது இல்ல, மரத்தின் தேர்வும் அருமையாக இருக்கிறது. இதை யோசித்து அமைத்தவர்களுக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறதே.!:’ என்று ஆச்சரியமுடன் பார்த்தாள்.


அவள் மூன்று கிளைகள் சங்கமிக்கும் இடத்தில் நின்றிருந்தாள். அது கிட்டத்தட்ட சமதளம் போலவே இருந்தது. அப்போது அவள் முதுகு பக்கமாக லேசாகச் சில்லென்று காற்று வீசுவதை உணர்ந்து திரும்பி பார்த்தாள். அங்கு அதோ அந்த மழை மேகம் , அந்த ஆற்றின் கரையில் அவளை மயக்கிய அதே மழை மேகம் அவளை நோக்கி வந்தது. முன்பு ஏதோ அழகாக இருக்கிறதே என்று பார்த்த ஆதிரைக்கு இப்போது ஏனோ ஒரு பயம் வரத் தொடங்கியது. ஏனேன்றால் அந்த மழை மேகம் காட்டின் மரங்களுக்கு இடையில் மரக்கிளைகளை ஊடுருவிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. ‘பார்க்க ரம்யமாக இருந்த போதும் முன்பு போல மயக்கம் வந்து விட்டால் இந்த மரத்தின் மேலே நின்று கொண்டு விழுந்தால் என்னவாகுவது. அதனோடு தேவையில்லா எண்ண அலைகளை என் மனதில் உண்டாக்கிவிடுகிறது.’ என்று அஞ்சி அவள் அந்த மரவீட்டை நோக்கி ஓடி வந்தாள்.


அப்போது நீண்ட நேரமாக அரவம் அற்று இருந்த அறையில் இருமுறை ஆதிரையை அழைத்துவிட்டு பின் குரல் கேட்காததால் பயந்து திரும்பி பார்த்த அர்ஜூனுக்கு அவள் அங்கு இல்லையென்றதும் விரைந்து வெளியில் வந்தான். நல்ல வேளையாக ஆதிரை எங்கும் சென்றுவிடாமல் அந்த மரக்கிளையின் மேலே நின்று இருந்தால். அவளை நோக்கி வர எத்தனித்தவன் அவள் அவசரமாக அந்த வீட்டை நோக்கி வருவதையும் அவள் பின்னாலே அந்த மழைமேகம் துரத்துவது போல வருவதையும் பார்த்து வியந்தான். அவள் வருவதற்காக வழிவிட்டு நின்றிருந்தவன், அவள் பாதி வழியில் இருக்கும் போதே அந்த மழை மேகம் அவளை அனுங்கியதை பார்த்தான். அதன்பின் அவளால் நடக்கமுடியாமல் மயங்கி விழப் போவதை பார்த்து ஒரு அதிர்ந்து நொடியும் தாமதிக்காமல் ஓடிச் சென்று அவளை அவனது வலதுகையால் தாங்கினான். அவன் தாங்கிய நொடி அவர்களுக்கு நேர் மேலே இருந்த மழை மேகம் தன் வேலையை ஆரம்பித்தது. மழை பொழிய ஆரம்பித்தது.


அவர்கள் இருவரும் மழையில் நனைந்து கொண்டிருந்தனர். அர்ஜூனும் அவளைத் தாங்கிய நிலையிலும் அவன் கனவில் இருப்பது போல உணர்ந்தான். அவனும் அவன் வசம் இல்லாமல் யாரோ அவனை கட்டுப் படுத்துவது போல உணர்ந்தான். அது கனவாக இருக்குமோ என்று சந்தேகமே இல்லாமல் அவன் கண்கள் மனத்திரையில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தது. அவன் மனத்திரையில் அவன் இருந்தது , இதோ இதே தீவு போல இருந்தது. அதுவும் இந்த மரத்தின் அடியில்தான் இருக்கிறான். ஆனால் அவனது ஆடை அணிகலங்களெல்லாம் மாறியிருந்தது. வேஷ்டியை மடித்துக் கொண்டு ஆஜானுபாகுவாகவும் இருந்தான். கையில் வில் அம்பை போல உணர்ந்தான். அப்போது அவன் அருகில் அவன் அக்கா அமர்ந்து கொண்டு “தம்பி சாப்பிடு பா” என்று அவள் கையால் உணவினை உருட்டி அவன் கையில் தந்து கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்த அர்ஜூன். அவள் பார்ப்பதற்கு அம்மாவைப் போல அல்லவா இருக்கிறாள். பார்க்க வயது அதிகமில்லை என்ற போதும் கொசுவம் வைத்த பருத்தி சேலையில் அவளைப் பார்க்க வயதான அம்மாவைப் போல இருந்தது . அவளின் கையிலிருந்து அந்த உணவினை வாங்கிக் கொண்டான். அவனது அக்கா ஏதோ சொல்ல முயல அர்ஜூனுக்கு இதெல்லாம் உண்மையில்லை ,பிரமையென்று புரிய ஆரம்பித்தது. அவனையே அவன் கிள்ளிக் கொண்டான். அவனுக்கு வழிக்கவில்லை. அவனது வில்லால் அவன் கையில் குத்திக் கொண்டான். அதுவும் வேதனைத் தரவில்லை.


அதன்பின் முயன்று அவன் சுயநினைவுக்கு வந்தான். அப்போது பார்த்தால் நல்ல வேளையாக அந்த ஆலமரத்தின் விழுதுகள் அவர்களைக் கீழே விழுந்துவிடாமல் தடுத்திருந்தது. ஆதிரை இன்னும் மயக்கம் தெளியவில்லை. மழையும் இன்னும் குறையவில்லை. இந்த மழை ஏதோ மாயச் சக்தி கொண்டது என்பதை அர்ஜுன் அறிந்து கொண்டான். எப்படியோ அதனை அறிந்து அதிலிருந்து மீண்டுவிட்டான். ஆனால் ஆதிரை இன்னும் மயக்கம் தெளியாமல் அப்படியே அவன் கையிலிருந்தாள். அவளை அணைத்துக் கொண்டு அந்த ஆலமரத்தின் விழுதினையே பற்றிச் சென்று அந்த வீட்டுக்குள் நுழைந்தான். அவனையே தொடர்ந்த அந்தக் குட்டி மழை அவன் வீட்டை அடைந்த பின்னும் அந்த வீட்டின் மேலும் பொழிந்து கொண்டிருந்தது. மரவீட்டின் மேலே விழுந்த மழைத்துளிகளின் சப்தம் ஏதோ சங்கீதம் போல் ஒலித்துக் கொண்டிருந்தது.


அர்ஜூன் ஆதிரையின் கன்னத்தை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். அவள் கண்விழித்த போது அவளுக்குப் பாதி கனவில் எழுப்பியது போல உணர்ந்தாள். அந்த மழையின் சப்தம் அவளை என்னமோ செய்தது. மீண்டும் மயக்கம் வருவது போல அவள் நெளிகையில் அர்ஜூன். “ஆதிரை.. அவை உண்மையில்லை. இதோ நான் அர்ஜூன். இங்கு இருக்கிறேன். நீ காண்பது உண்மை அல்ல. அது கனவு. அது போல ஒரு நாளும் நடக்கவில்லை. விழித்துக் கொள் ஆதிரை. இவை அந்த மழை மேகத்தின் மாயம். ஆதிரை .. ஆதிரை..” என்று அவளுக்குப் புரியவைத்துவிடும் வேகத்தில் மீண்டும் மீண்டும் பேசினான்.
அதற்கு ஆதிரை, “திகேந்திரா… என்னை விட்டுப் போய்விடாதே! என் கண்ணா! என்னை..” என்று காய்ச்சல் வந்த குழந்தை போல உலறினாள்.


அவள் திகேந்திரன் என்றதும் அர்ஜூனுக்கு ஏதோ தோன்ற அவளை எழுப்புவதை விட்டுவிட்டான். பதிலாக அவளது தலையினை அவன் மடிமீது போட்டுக் கொண்டு லேசாக அவள் கைகளுக்கு சூடுபரப்ப தேய்த்துவிட்டான்.


ஆதிரையின் மனத்திரையில்....


வங்க கடலின் நடுவில் இருந்தது தீவு சிறியதாக இருந்த போதும் அங்கு எல்லா வளமும் கிடைக்க பெற்றது. உலகத்திற்கு அத்தீவு இருப்பதே தெரியாதது போல் அத்தீவின் அமைப்பு இருந்தது. எல்லா வளமும் கிடைத்தால், இத்தீவிலிருந்து யாரும் வாணிபம் என்று வெளியில் சென்றதும் இல்லை, புதியவர்கள் யாரும் அத்தீவிற்கு வந்ததும் இல்லை. அத்தீவின் மையப் புள்ளியில் வானுயர்ந்த கோபுரம் கொண்ட ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோபுரம் முழுதும் ஒரே பறையால் தேர்ந்த சிற்பிகளால் கலை வண்ணம் கொண்டு செதுக்கப் பட்டிருந்தது. அக்கோவிலினுள் எப்போது யார் நுழைந்தாளும் எவ்வளவு பகல் பொழுதாக இருந்தாலும், இல்லை அமாவாசை இருட்டாக இருந்தாலும், பௌர்ணமி இரவு வேளை போல நிலவொளியே தெரியும். அதனோடு குளிர்ந்த மழை மேகத்தினூடே இருப்பது போல மிகவும் குளிராக இருக்கும். அவ்வாறாக அப்பாறை கோபுரக் கோயிலின் வடிவமைப்பு இருந்தது. அத்தகைய கோவிலே, அம்மக்களின் குல தெய்வமான துர்கை அம்மனின் குல தெய்வமாக இருந்தது.


ஒரு நாள் அக்கோபுரத்தில் இருந்த அம்மன், ஆருடம் போல ஒருவரின் உடலில் குடியேறி, தான் சியாமள தேவி என்றும் , இன்னும் 5 நாட்களில் இத்தீவு முழுதும் நில நடுக்கம் வந்து கடல் நீரில் மூழ்கப் போவதாகவும், 2 நாட்களில் மேற்கு நோக்கிச் செல்லும் ஒரு ஊர்தி இங்குக் கரை ஒதுங்கும். அதில் ஏறிச் சென்று ஊர்மக்கள் அருகில் இருக்கும் நிலப் பகுதியில் குடியேறி விடவும் என உக்கிரமாக கூறிச் சென்றது. அந்த ஆருடம் பலிப்பது போல இரண்டு நாட்களில் ஒரு சிறிய கப்பல் சூறைக்காற்றால் அடிபட்டு மீண்டு வந்து அத்தீவில் அடைக்கலம் புகுந்தது. அக்கப்பலில் மாலுமியைத் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்போது அத்தீவை ஆண்ட ராஜா அம்மாலுமிக்கு விருந்து உபசாரம் அளித்து, அக்கிராமத்தில் நடந்த கதையைச் சொல்லி, ஊர் மக்கள் அனைவரையும் உடனடியாக அழைத்துச் செல்லுமாறு மாலுமியிடம் கூறினார். ஆனால் அம்மாலுமி ‘தானே வழித்தடம் தெரியாமல் இத்தீவில் குடியேறினேன்.’ என வருந்தினார். இப்போது கடலில் இருக்கும் சூழலில், வழி தெரியாமல் கடலில் செல்வது தற்கொலைக்குச் சமம் என்றார். இதனால் குழப்பமும் கவலையும் அடைந்த ராஜா அந்தக் கடவுளிடமே வழி கேட்க எண்ணி கோவிலினுள் சென்று மௌன மொழியில் சியாமளா தேவியிடம் முறையிட்டார்.

அவர் மனக் கண்ணில் சாந்த சுவருபமாக இருந்த அம்மன் சிலையில் ஒளிப்பெற்று அசரீரி ஒன்று ஒலித்தது , “என் முன் ஏற்றி இருக்கும் விளக்கை எந்தக் கன்னி பெண் கையில் ஏந்த முடிகிறோதோ , அவளால் மட்டுமே இம்மக்களை காக்க இயலும். அந்த விளக்கினை கையில் ஏந்தி இருப்பவளால் மட்டுமே எத்திசையில் நீங்கள் சென்றால் நிலம் சேர்வீர்கள் என்பது அவ்விளக்கொளியின் அசைவில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப் பெண் இம்முடிவை மனமுவந்து ஏற்றுக் கொண்டு உங்களை வழி நடத்த சில சிக்கல்கள் நேரிடக் கூடும்” எனக் கூறி மறைந்தது.

திடுக்கிட்டுக் கண் விழித்த ராஜா நடந்தவற்றை அவ்வூர் மக்களிடம் கூற அனைவரும் தங்கள் திருமணமாகாத மகள்களை அழைத்துக் கொண்டு அக்கோவிலுக்குச் சென்றனர். ஒவ்வொரு பெண்ணாக அவ்விளக்கை ஏந்த முயல யாராலும் அதன் சூட்டை தாங்க முடியவில்லை. மக்களின் நம்பிக்கை மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. இறுதியாக ராஜாவின் தங்கை மகள், ஆதிரை முன் வந்த போது அம்மக்களின் நம்பிக்கை அறவே இல்லாமல் போயிற்று. தாங்கள் இங்கேயே இருந்து இறக்கப் போவதாகவே எண்ணினர். இறுதியாக ஆதிரை அந்த விளக்கைத் தொட்டு பார்த்தாள். மற்றவர்களைப் போல சூட்டை உணராமல் , மெதுவாக எடுத்து கையில் ஏந்தினாள். விளக்கு சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. அம்மக்களின் மனமும் நெகிழிந்தது. பவித்திரமான உள்ளம் கொண்ட ஆதிரை கஜேந்திர ராஜாவின் மகன் திகேந்திரனை பெருமையுடன் தன் மான் விழியால் நோக்கினாள். ஏற்கனே ஒரு மாதத்தில் திகேந்திரனுடன் திருமணம் என்று நிச்சயமானதால் , அவள் முகம் மெருகேற்றி இருக்க, இந்த விளக்கொளியால் இன்னும் அதிக பொழிவை தந்து பார்க்கும் யாவரயும் மெய் மறக்கச் செய்தது.

அந்த நேரத்தில் அங்கு மாலுமியாக வந்தவன் நடப்பவை அனைத்தையும் கண் கொட்டாமல் கண்டான். ஆதிரையின் அழகில் மயங்காதவர்கள் யாரும் உண்டோ!. மாலுமியும் அவ்வாறே சொக்கித்தான் போனான். ஊர் மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு தங்கள் மகிழ்வை பரிமாறிக் கொண்டனர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top