சிந்தையில் நிறைந்த தேனமுதே-3

Pallavi

Writers Team
Tamil Novel Writer
#1
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு

சமையலறையில் பரபரப்பாக அவளே செய்த மைசூர்பாக் மற்றும் மிக்ஸ்சரை தட்டுகளில் வைத்துக் கொண்டிருந்தாள் சான்வி.அருகில் இருந்த கப்புகளில் சுடான காபியை ஊற்றியவள்,

"சாரதாம்மா அந்த காபி ட்ரேய நீங்க கொண்டு வாங்க...நா ஸ்நாக்ஸ் ட்ரேய எடுத்திட்டுப் போறேன்"

என்று சமையல்காரம்மாவிற்கு கூறிய அவள் ட்ரேயோடு சமையலறையைத் தாண்டு முன் சரக்கென அவள் எதிரில் வந்து நின்றாள் விமலா.

"மகாராணி எங்க கிளம்பிட்டீங்க?!"

"அது...அம்மா!கெஸ்ட்டுக்கு ஸ்நாக்ஸ் எடுத்திட்டு போலாம்ன்னு..."

"அவங்க சுப சமாசாரம் பேச வந்திருக்காங்க...தெரியுமில்ல..உன் விளங்கா முகத்த அங்க வந்து அவங்களுக்கு காட்டத் தேவையில்ல... அந்த ட்ரேயக் கொடு இங்க...நானே கொண்டு போறேன்.."என்றபடி வெடுக்கென சான்வியின் கையிலிருந்ததை பிடுங்கிக் கொண்டு சென்றாள் விமலா.

"ஆறே மாசத்துல கட்டின புருஷன முழிங்கிட்டு வந்துட்டா.. ஸ்வீட் கொடுக்க"என போகிற போக்கில் சொல்லம்பை வீசிவிட்டே சென்றாள் அவள்.

பொங்கி வந்த அழுகையை மறைக்க சமையல் மேடையின் புறம் திரும்பி நின்று கொண்டாள் சான்வி.காப்பி ட்ரேயை மேடையில் வைத்த சாரதா சான்வியின் தோளை மென்மையாகப் பிடித்துக் கொண்டார்.

"ஆமா இவங்க பெரிய பதிவிரதை...கட்டின புருஷன தூக்கி எறிஞ்சிட்டு பொறந்த வீட்டில உட்கார்ந்துகிட்டு பேச வந்திட்டாங்க பேச்சு"என்று கோபத்தில் பொறுமிய அவர் சான்வியின் தலையை மென்மையாக தடவியபடி,

"சான்வியம்மா! வருத்தப்படாதீங்க...அவங்க குணந்தான் உங்களுக்கு தெரியுமே...மத்தவங்க மனச நோகடிச்சே பழக்கம்...ரகு அய்யா போனதுல உங்க தப்பு ஒண்ணும் இல்ல... நீங்க கண்ணை தொடச்சுக்குங்க"என்று அவளை சமாதானப் படுத்தினார்.

"அவங்க பேசினதுல எனக்கொண்ணும் வருத்தமில்லை சாரதாம்மா... நீங்க காபியை எடுத்திட்டு போங்க ஆறிப் போயிடும்... போங்க"என அவரை அனுப்பினாள்.

இந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்ற எத்தனையோ மனம் நோகும் பேச்சுக்களை சான்வி விமலாவிடம் கேட்க நேர்ந்தது.விமலா மட்டுமல்லாது சமயம் வாய்த்த போது மனோகரும் அவளை சொல்லம்புகளால் கிழித்தார்.

அன்று ஒரு நாள் ஜாடிகளில் அலங்கரிப்பதற்கு வண்ண மலர்களைப் பறித்துக் கொண்டு அவள் வீட்டின் உள்ளே நுழைந்த போது ஆபிஸ் போவதற்கு தயாராகி வந்த மனோகர் இவள் எதிரில் வரவும் கோபம் கொப்பளிக்க சென்று சோபாவில் அமர்ந்தவர்,

"போச்சு போச்சு எல்லா நாசமா போச்சு... இன்னிக்கு முக்கியமான ஒப்பந்தம் பேச கிளம்பினா காலங்காத்தால இது மொகத்த பாத்திட்டு போன இன்னிக்கு வேலை விளங்கினாப் போலத்தான்...சே சே... கொஞ்சமாவது அறிவு வேண்டாம்... சொன்னாலும் புரியாது...சுயமாவும் தெரியாது"என வாய்க்கு வந்தபடி சான்வியைத் திட்டித் தீர்த்தார்.கண்ணீர் கண்களை மறைக்க அங்கிருந்து அகன்றாள் அவள்.அதிலிருந்து காலையில் அனைவரும் வெளியே கிளம்பும் வரை அவள் யார் எதிரிலும் வருவதே இல்லை.

ஆனால் அவர்கள் இருவரைத் தவிர வீட்டிலிருந்த அனைவரும் அவள் மேல் பாசத்தை பொழிந்தனர்.அவள் மனதிற்கு அவர்களால் காயமானால் மற்ற அனைவரும் அதற்கு மருந்தாயினர்.அதிலும் சித்தார்த் ஸ்நேஹா இருவரும் அவளை சோர்ந்து போக விடுவதே இல்லை.சினிமா பார்க் பீச் என்று அழைத்துப் போவது, அவளுக்கு பிடித்த உணவு வகைகளை அவர்களே சமையலறையை ரணகளமாக்கி செய்துக் கொடுப்பது என அவள் கலங்குதற்கு நேரமே கொடுப்பதில்லை அவர்கள்.

அதனால் விமலா மனோகர் இவர்களின் பேச்சில் ஒரு கணம் கலங்கினாலும் மற்றவரின் பாசத்தை எண்ணி தன்னைத் தானே திடப்படுத்திக் கொள்வாள்.

ஆனால் அன்று வந்தவர்கள் பேச வந்த சந்தோஷ விஷயத்தை அறிந்துக் கொள்ள அவள் மனம் படபடக்க தான் செய்தது.ஆனால் விமலாவின் வாய்க்கு பயந்து தன் ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களுக்கான சமையல் வேலையைத் தொடங்கினாள்.

ஹால் சோபாவின் ஒருபுறத்தில் வீட்டின் பெரியவர்கள் விஸ்வநாதன் மீனாட்சி அமர்ந்திருந்தனர்.அவர்கள் அருகில் மற்றொரு சோபாவில் ஜனார்த்தனன் அமர்ந்திருந்தார்.அவரின் பின்புறம் லஷ்மி நின்றிருந்தார்.அவர்களின் எதிர் சோபாவில் ரித்திகாவின் தந்தை நடராஜனும் தாய் வனஜாவும் அமர்ந்திருந்தனர்.அந்த சோபாவின் கை பகுதியில் ஸ்டைலாக அமர்ந்திருந்தாள் ரித்திகா.

புடவை அணிந்து வருமாறு தாயின் வற்புறுத்தலால் கையில்லாத லோ நெக் பிளவுஸும் மிகவும் இறக்கி கட்டிய புடவையும் அவள் மாடர்ன் உடையே அணிந்து வந்திருக்கலாம் என அனைவரையும் எண்ண வைத்தது.அவளின் அலங்கோலத்தை வெறுப்போடு பார்த்த மீனாட்சியும் லஷ்மியும் திருமணத்தின் பின் அவளை சரி செய்து விடலாம் என மனதிற்குள் சமாதானம் செய்துக் கொண்டனர்.

"பெரியப்பா! பெரியவங்க சுபஸ்ய சீக்கிரம்ன்னு சொல்லியிருக்காங்க... இவளுக்கு சித்தார்த்து... சித்தார்த்துக்கு இவள்ன்னு என்னிக்கோ முடிவான விஷயம்...நடுவுல என்னென்னமோ நடந்து கல்யாண பேச்சு நின்னு போச்சு...போன வருஷம் நாங்க பேச வந்த போது சித்தார்த் முடியவே முடியாதுன்னுட்டான்.இப்பவாது சீக்கிரமா ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி வச்சிடலாம்...இவ வேற தினம்தினம் சித்து சித்துன்னு மருகி போறா... சீக்கிரம் நல்ல முடிவ சொல்லுங்க... இந்த வாரத்துலயே நல்ல நாளு இருக்கு... நிச்சயம் வச்சுக்கலாம்..என்ன சொல்றீங்க?"

ரித்திக்காவின் தாய் வனஜா விஸ்வநாதனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகள்.அந்த உரிமையில் முதலிலேயே ரகுராமிற்கு ரித்திகாவை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கேட்டாள்.ஆனால் நண்பருக்கு கொடுத்த வாக்குற்காக சான்வியை அவனுக்கு மணம் முடித்தார்.

ரகுராம் இல்லையென்றால் என்ன! இளையவன் சித்தார்த்திடம் மகளை நெருங்கி பழகவிட்டாள்.ரித்திகாவின் பார்லர் அழகும் நவநாகரீக உடைகளும் சித்தார்த் அவளிடம் மயங்கிப் போனான்.வீட்டில் திருமண பேச்சு எழவும் ரித்திகாவை கைக் காட்டினான் அவன்.

மேலே பேச்சு வார்த்தை நடக்கும் முன் இடியென அந்த குடும்பத்தை தாக்கியது ரகுராமின் இறப்பு.அதிலிருந்து அவர்கள் சிறிது மீண்ட பின் திருமண பேச்சை எடுத்துக் கொண்டு வந்தனர் வனஜாவின் குடும்பம்.ஆனால் சித்தார்த்தோ தற்சமயம் அவனின் திருமண பேச்சே அந்த வீட்டில் எடுக்கக் கூடாது என கடுமையாக சொல்லி விட்டான்.

ஆனால் கஜினி முகமதின் மறுபிறவியான வனஜா அவ்வப்போது வீட்டு பெரியவர்களிடம் திருமணத்தைப் பற்றி நினைவுட்டியபடியே இருந்தாள்.அன்று எப்பாடுபட்டாவது திருமண நிச்சயத்திற்காவது தீர்மானம் செய்தே விடுவது என தலையாட்டி பொம்மையான கணவனை அதட்டி உருட்டி செல்ல மகளோடு அங்கே வந்துவிட்டிருந்தாள்.

யோசனையோடு தன் மனையாளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த தன் பெரியப்பா விஸ்வநாதனைக் கண்டு கோபம் எப்போதும் போல கணகணவென மூண்டது அவள் மனதில்.

'பேசினது நானு... எனக்கு பதில சொல்லாம பொண்டாட்டிய என்ன பார்வை... இந்த வீட்டுல இது ஒண்ணு கருமம்...வீட்டு பொம்பளங்கள கேக்காம ஒரு முடிவும் பண்ண மாட்டானுங்க இவனுங்க'
என மனதிற்குள் அவர்களைத் திட்டித் தீர்த்தாள் அவள்.

"பெரியப்பா!என்ன யோசிக்கறீங்க?எப்பவோ முடிவான விஷயம்தானே இது...இன்னும் யோசிக்க என்ன இருக்கு?இனிமேலும் தள்ளிப் போட்றதுல அர்த்தமே இல்லை... இந்த கவலைலே எம்பொண்ணு ஒண்ணுகெடக்க ஒண்ணு பண்ணிடிச்சுன்னா யார் பொறுப்பு"
என பெண்ணின் உயிரைக் காட்டி பயமுறுத்தினாள் அவள்.

"சே சே என்ன பேசற வனஜா! விளையாட்டுக்கு கூட அப்படி பேசக் கூடாது.... எங்களுக்கு இப்ப கல்யாணம் பண்ணறதுல எந்த தயக்கமும் இல்லை...ஆனா சித்தார்த் சம்மதம் இல்லாம நா எப்படி ஏற்பாடு பண்ண சொல்றது...அவன் வரட்டும்...அவனை ஒரு வார்த்தை கேட்டுட்டு நீங்க சொன்ன நாள்ளையே நிச்சயத்தை வச்சுக்கலாம்..."

'கெட்டது குடி....அவன் வந்து இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா?இப்பவே முன்னே இருந்த நாட்டம் பொண்ணு மேல அவனுக்கு இல்ல...இப்படியே விட்டா மொத்தமா என் கணக்கு பூராவும் கெட்டு குட்டிசுவராயிடும்..."என பயந்த வனஜா வேறு வழியில் முயன்றாள்.

"அய்யோ என்ன பெரியப்பா நீங்க!நீங்க சொல்லி சித்தார்த் எப்ப முடியாதுன்னு சொல்லியிருக்கான்?நம்ப எல்லா முடிவு பண்ணிட்டு சொன்னா அவன் சரிங்கப் போறான்...அதுமட்டுமில்லாம......சொல்லவே வாய் வர மாட்டேங்குது... உங்களுக்கு தெரியல....ஊர்ல என்னலாம் பேச்சு கிளம்பியிருக்குன்னு.... அந்த பொண்ணுக்கு என்னமோ குறை...அதுனால தான் பேச்சு வார்த்தை நின்னு மேல கல்யாணமும் நடக்கல....என்னவோ ஏதோன்னு கண்டபடி பேசுறாங்க...இது இப்படியே போன நாங்க மூணு பேரும் விஷக் குடுச்சுதான் சாகனும்"என்று ஹோவென அழுதாள் வனஜா.

"சே சே அப்படியெல்லாம் பேசாதே வனஜா....சரி நீ சொன்னபடியே இந்த வாரத்துலயே நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்...நீ சாகற பேச்ச இத்தோட விட்டுடு...என்ன?"என்று அவளை சமானதானப்படுத்தினார் மீனாட்சி.

சுவிட்ச் போட்டது போல் அழுகை நின்று வாயெல்லாம் பல்லானது வனஜாவிற்கு.ரித்திகாவும் பொங்கிய மகிழ்வில் தன் தாயின் தோளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அவர்களெல்லாம் சென்ற பின் வீட்டவர்கள் எல்லாம் விஷயம் அறிந்தால் சித்தார்த் என்ன சொல்லுவானோ என கவலையோடு பேசிக் கொண்டிருந்தனர்.அதே நேரம் வாயிலில் சித்தார்த்தின் கார் வந்து நின்றது.டிரைவர் அவனின் லேப்டாப் ஃபைல் பேகை உள்ளே வந்து வைத்துவிட்டு போனான்.

பின்னால் அந்த ஹாலையே தன் உயரத்தால் சிறிதாக்கிக் கொண்டு நுழைந்தான் சித்தார்த். நீல நிற கோட்சூட் அவனின் மாநிறத்தை எடுத்துக் காட்டியது.ஜிம்மை பயன்படுத்தும் உடல் கிண்ணென்று இறுகி இருந்தது.அந்த கருநிற கண்களில் விளையாட்டுதனம் சென்று கூர்ப் பார்வை இடம் பிடித்திருந்தது.

ரகுராமின் மறைவுக்குப் பின் கம்பெனியின் முழு பொறுப்பும் அவனாததால் அர்த்தமில்லாத பேச்சுக்களெல்லாம் மறைந்து பொறுக்கியெடுத்தாற் போல் அழுத்தமான ஒரே பேச்சில் எதிரில் இருப்பவரை வாயடைக்க செய்தான் அவன்.பேச்சு சிரிப்பெல்லாம் ரொம்பவும் குறைந்திருந்தது.

அதனாலேயே நிச்சய விஷயத்தை அவனிடம் எப்படி சொல்வது என வீட்டவர் குழம்பினர்.

அதற்குள் உள்ளேயிருந்து ஓடி வந்த ஸ்நேஹா கையிலிருந்த ஸ்வீடை அவன் வாயில் அடைத்து,

"கங்கிராஜுலேஷன்ஸ் ப்ரோ ஐ ம் சோ ஹாப்பி ஃபார் யூ"என்று வாழ்த்தினாள்.

"எதுக்கு விஷ் பண்றே?"

"எதுக்கா!திருவளர்செல்வன் சித்தார்த்துக்கும் திருவளர்செல்வி ரித்திகாவிற்கும் வரும் வெள்ளிக்கிழமை சுபயோக சுபதினத்தில் நிச்சயதார்த்தம் செய்வதாக பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தீர்மானம் செய்திருப்பதால் உங்கள் அருமை தங்கையாகிய நான் மனதார உன்னை வாழ்த்துகிறேன்"என கூறி கைத் தட்டினாள் ஸ்நேஹா.

"வாட்!.....ஆர் யூ ஜோகிங்.....?"

"இல்லவே இல்லை....ஹன்டரட் பர்சன்ட் அக்மார்க் சத்தியம்"

"நோ!இது நிஜம் இல்ல....பொய்"

"இல்ல சித்தார்த்...ஸ்நேஹா சொல்றது நிஜம்...வர வெள்ளிக்கிழமை உனக்கும் ரித்திகாவுக்கும் நிச்சயதார்த்தம்"என்றார் தாத்தா.

"தாத்தா?"

"ஆமாடா ராஜா... நாங்க எல்லாம் பேசி இன்னிக்கு தான் முடிவு பண்ணினோம்"என்றார் பாட்டி.

"யார கேட்டு முடிவு பண்ணீங்க?ம்..... கல்யாணம் பண்ணிக்க போறவன் நான்...என்னை ஒரு வார்த்தை கேக்கனும்னு தோணலையா உங்களுக்கு?"

"கேக்கறதுக்கு என்னடா இருக்கு இதுல...உங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம்ன்னு எப்பவோ முடிவு பண்ணதுதானே!இப்ப அதுக்கு நேரம் கூடி வந்திருக்குன்னு நெனச்சுக்க... அந்த பொண்ணும் எத்தனை நாள்தான் உனக்காக காத்துகிட்டு இருக்கும்...அவ நிலைமையும் கொஞ்சம் யோசிச்சு பாரு"என்றார் லஷ்மி.

"அம்மா...!என் வேலை யார பத்தியும் யோசிக்கறதில்ல கம்பெனிய இன்னும் முன்னேற்றத்து... அதுதான் இப்ப நான் பண்ண வேண்டிய வேலை....அத விட்டுட்டு கல்யாணம்கற கம்மிட்மெண்ட்ல சிக்கிக நா தயாரா இல்லை... அப்படி அவளுக்கு அவசரம்ன்னா வேற பையன பாத்து கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க.... இந்த ஏற்பாட்டை இத்தோட நிறுத்திடுங்க...."என்றபடி படிகளில் ஏறி அவன் அறைக்குள் நுழைந்தவன் கதவை படாரென அறைந்து சாத்தினான்.

பிடிவாதமாக அவன் திருமணத்தை மறுத்து விட்டு போனதை குடும்பத்தோடு சான்வியும் கவலையோடுப் பார்த்தாள்.
 
Saroja

Well-Known Member
#6
சான்விய இப்படி பேச எப்படி மனசு வருது
சித்துஏன் கல்யாணம் வேண்டாம் என்று
இத்தனை கோபம்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement