Ramadan 2021 - Day 19 spreading Islam..

Advertisement

fathima.ar

Well-Known Member
நபி (ஸல்) அவர்களுக்கு அச்சம் நீங்கி வஹியின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவே வஹியின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. அவ்வாறே அச்சம் நீங்கி ஆர்வம் ஏற்பட்டதும் வஹியை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் இரண்டாவது முறையாக வஹியை இறக்கி அவர்களைச் சிறப்பித்தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்” என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.

(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)

இந்த நிகழ்ச்சி தொழுகை கடமையாவதற்கு முன் நடந்தது. இதைத் தொடர்ந்து வஹி வருவது அதிகரித்தது.

இவ்வசனங்கள்தான் நபித்துவத்தின் தொடக்கமாகும். இவற்றில் இருவகையான சட்டங்கள் உள்ளன.

முதலாவது வகை:

“நீங்கள் எழுந்து சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்”

என்ற வசனத்தின் மூலம் இறைத்தூதை எடுத்தியம்ப வேண்டும்; ஏற்காதவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வசனத்தின் பொருள்: வழிகேடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவது, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகிய குற்றச் செயல்களிலிருந்து இம்மக்கள் விலகவில்லையெனில் அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டென நபியே! நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.

இரண்டாவது வகை: அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகப் பேணிப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்; அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு நீங்கள் அழகிய முன்மாதிரியாகத் திகழ முடியும் என்று கட்டளையிடப்படுகிறது.

“உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்”

அதாவது அல்லாஹ்வை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்! அதில் எவரையும் இணையாக்காதீர்கள்.




“உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்”

அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

“அசுத்தங்களை வெறுத்திடுங்கள்”

அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள்.

“நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்”

அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள்.

“உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்”

நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது.

ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்... ஓ!... தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராடவேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்!

உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது.

அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.



நபி (ஸல்) அவர்களின் நீண்ட தியாக வாழ்க்கையின் சில பகுதியைத்தான் நாம் பின்வரும் பக்கங்களில் காண இருக்கிறோம்.

வஹியின் வகைகள்

நபி (ஸல்) அவர்களின் நுபுவத்திற்குப் பிந்திய வாழ்வைப்பற்றி பேசுமுன் வஹியின் (இறைச்செய்தியின்) வகைகளைப் பற்றி காண்பது சிறந்தது. வஹியின் வகைகள் பற்றி இப்னுல் கய்” (ரஹ்) ‘ஜாதுல் மஆது’ என்ற தனது நூலில் கூறுவதாவது:

1) உண்மையான கனவு. இதுதான் வஹியின் தொடக்கமாக இருந்தது.

2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண்முன் தோன்றாமல் உள்ளத்தில் இறை செய்தியைப் போட்டுவிடுவது. எ.கா. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரூஹுல் குத்ஸ் (ஜிப்ரீல்) எனது உள்ளத்தில் ஊதினார். அதாவது, தனது உணவை முழுமையாக முடித்துக் கொள்ளும்வரை எவரும் மரணிக்க மாட்டார். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உணவைத் தேடுவதில் அழகிய வழியை தேர்ந்தெடுங்கள். உணவு தாமதமாகுவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து அதைத் தேட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்கு வழிப்படுவதன் மூலமே தவிர வேறு வகையில் அடைய முடியாது.”

3) வானவர் ஓர் ஆடவன் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் வானவரை சில நபித்தோழர்கள் கண்டிருக்கிறார்கள்.

4) வானவர் மணியோசையைப் போன்று வருவார். இந்த வகையே நபி (ஸல்) அவர்களுக்கு சுமையாக இருக்கும். நபி (ஸல்) அவர்களை வானவர் தன்னுடன் இணைத்துக் கொள்வார். கடுங்குளிரிலும் நபி (ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹியின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே தரையில் அமர்ந்துவிடும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களின் கால்மீது இருந்த நிலையில் வஹி வந்தது. அதன் சுமை அவர்களது காலைத் துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது.

5) வானவர், அல்லாஹ் படைத்த அதே உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றுவார். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் செய்திகளை அறிவிப்பார். இவ்வாறு இரண்டு முறை நடந்துள்ளது. இதைப்பற்றி குர்ஆனில் ‘அந்நஜ்ம்’ என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜில்” தொழுகை கடமையாக்கப்பட்டது போன்று!

7) வானவரின்றி நேரடியாக அல்லாஹ் பேசுவது. மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசியது போல! மூஸா நபிக்கு இந்த சிறப்பு கிடைத்தது பற்றி குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும் இந்த சிறப்பு கிடைத்தது என மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களின் மூலம் தெளிவாகிறது.

சூரா” முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.



நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் “அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்” (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி) ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உயவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top