'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 36

Advertisement

Priyaasai

Active Member
அகனலர் – 36.1

View attachment 10973

வான்மகளிடம் கொண்ட ஊடலின் விளைவாக இடியுடன் கரம் கோர்த்த மின்னல் கீற்றுகள் ஒன்றோடொன்று உறவாடியவாறு பூமியை தழுவி தஞ்சம் புக அவர்களுக்கு சற்றும் குறையாத அக்ரோஷத்தோடு மழை நீரும் போட்டி போட்டுகொண்டு அதிவேகமாக அவனியை சென்றடைந்த தருணம் அது.



அறையில் இருந்த ஜன்னல் வழியாக ஊடுருவும் கூதகாற்றினால் வெடவெடக்கும் உடலை மீறிய மனதின் வெம்மை முன்னிலை வகிக்க.., விழிகளில் வெறுமையுடன் மனதில் மூண்ட சஞ்சலம் நொடிக்கு நொடி விஸ்வரூபம் எடுக்க தாங்க இயலாது இதழ்கள் துடித்திட பற்கள் கொண்டு அதை கட்டுபடுத்தி கொண்டே விடாது பெய்து கொண்டிருக்கும் அடை மழையை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தாள் அலர்விழி.

கடந்த ஒரு வாரமாக குற்ற உணர்ச்சியின் சிகரத்தில் சிக்கிக்கொண்டு தவித்தவள் விழிகள் நாதனின் வீட்டில் இருந்தபோது நொடி பொழுது கூட கண்ணயரவில்லை. கண்மூடிய மறுநொடி மன்னவனின் முகம் வந்து நிற்கையில் எங்கனம் துயில் கொள்ள..!!! அதிலும் 'எங்கே என்னை தாண்டி சென்றுவிட முடியுமா உன்னால்..!! என்று வானளவு திடத்துடன் தன்னை இறுதியாக பார்த்தவனின் விழிகளே அவளை வதைத்து தூக்கம் பறிக்க போதுமானதாக இருந்தது..!!!



தன் மீதான அவன் உறுதியை தானே சிதைத்ததை எண்ணியவளுக்கு நன்கு தெரியும், தான் இல்லாத வீடு அவனுக்கு எத்தனை அன்னியம் என்று..!! அவனையும் உறக்கம் தழுவி இருக்காது என்பதை நன்கு அறிவாள்.., அதுதான் இரவு இரண்டு மணிக்கு அழைத்தாலும் அவள் அழைப்பை துண்டிக்கிறானே அதுவே அவன் நிலையை உணர்த்த போதுமானதாக இருந்தது அலர்விழிக்கு..!!!



பொதுவாக திருமண பந்தத்தில் இணைபவர்கள் ஒருவருடன் மற்றவர் வாழ்வை பிணைத்து கொள்வது வழக்கம். ஆனால் இங்கு அகனெழிலனோ மற்றவர்களை போல தன்னுடன் அவன் வாழ்வை பிணைக்கவில்லை.. மாறாக அலர்விழியை மட்டுமே அஸ்த்திவாரமாக கொண்டு அவன் வாழ்வை கட்டமைத்திருப்பவன். அவனின் அனைத்தும் அவளே..!! ஆனால் என்றுமே அதை அலங்கார வார்த்தைகள் கொண்டு அவளிடம் அவன் வடித்ததில்லை.



அதுவே அலரை அவன் மீது பித்தம் கொள்ள செய்து அவனின் பேரன்பில் கட்டுண்டு கிடக்க வைத்திருக்கிறது. அதிலும் அவள் மீதான அவன் நேசத்தின் உட்சத்தை அவன் உணர்த்திய தருணத்தில் அலர் வாயடைத்து போய் நின்றுவிட்டாள். அவளுக்காக தன் மகிழ்வை துட்சமாக நினைப்பவனுக்கு தான் நியாயம் செய்யவில்லையோ என்ற எண்ணம் பலமுறை அவளை கொன்று கிழித்திருக்கிறது. ஆம் ஒவ்வொருமுறையும் எழிலை விடுத்து தந்தையை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் அவனை விட அவனுக்காக அதிகம் துடிப்பவளாயிற்றே அலர்விழி..!!



இப்போது ஒரு வாரமாகவே எழில் அவளிடம் காட்டிய பாராமுகம் புறக்கணிப்பும் அவளின் சிந்தையை சிதறடித்திருக்க, வீட்டில் இருந்த நேரம் முழுதும் அவன் வரவையும் மன்னிப்பையும் எதிர்பார்த்தே அவள் நாட்கள் கழிய வேறு எதை பற்றியும் சிந்திக்கும் திறனும் அற்று தான் போனாள். வீட்டிற்கு வந்த பின்புமான இந்த நான்கு நாட்களுமே அவனின் ஒவ்வொரு அசைவிலும் தனக்கான மன்னிப்பை தேடி தேடி பெருமளவு களைத்து தான் போனாள்.



ஆனால் இன்று அலுவலகம் வந்த பின்பு இருவருக்கும் இடையிலான இடைவெளிக்கு முற்றுபுள்ளி வைக்க எண்ணி முனைப்புடன் சுய அலசலில் ஈடுபட்டவள் பல மணி நேரம் கழித்து அனைத்து பிரச்சினைகளுக்குமான நுனியை கண்டறிய, மறுநொடி அவள் முகம் செவ்வானமாக சிவக்க தொடங்கியது.



ஒரு வாரமாக தன்னை எத்தனை தவிக்க விட்டுவிட்டான்.... அதிலும் குற்ற உணர்வில் உழன்று தன்னையே அல்லவா இழந்து கொண்டிருந்தாள் அவள், கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அவளை இந்நிலைக்கு தள்ளியது அகனெழிலனே..!! எத்தனை பெரிய உண்மையை எட்டு மாதங்களாக தன்னிடம் இருந்து மறைத்திருக்கிறான்.., என்பதை உணர்ந்த தருணத்தில் இருந்து அவளுக்கு ஆற்றாமை தாளவில்லை.



ஆம் அவளின் யூகம் சரியாக இருக்குமாயின் சரண் நாடு திரும்பி பெண் பார்க்க சென்ற அன்று சரணை சந்திக்க சென்றிருந்த எழில் தாமதமாகத்தான் அவனுடன் திரும்பி இருந்தான். வரும்போதே சரண் எழில் இருவரின் முகமும் உணர்வுகள் தொலைத்து இருந்ததை கண்டு என்னவென்று கேட்டவளிடம் இருவருமே ஒன்றுபோல எதுவும் இல்லை என்று மழுப்பி விட்டனர். அப்போது அவள் அதை பெரிதாக எடுக்கவில்லை... இப்போது எண்ணி பார்க்கையில் அப்போதே அவர்களை தோண்டி துருவி இருக்க வேண்டுமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.



சரண் தன்னிடம் பகிராததை அலரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏனெனில் சரண் தன் காதல் குறித்தோ, அதில் உண்டான தடைகள் குறித்தோ, தான் கொண்ட வலிகள் குறித்தோ அக்கா பெண்ணிடம் இலகுவாக பகிரும் அளவிற்கான நெருக்கம் அவர்கள் இடையே இல்லையே..!! சரியாக சொல்ல வேண்டுமானால் தாய்மாமன் என்பதை தாண்டிய தந்தை மகள் உறவல்லவா அவர்களது..!!



ஆம், அவன் நிலையை உணர்ந்தவள் அதை உடைத்து சரண் அவளிடம் பகிர்ந்திருக்க வேண்டும் என்று எவ்வாறு அலரும் எதிர்பார்ப்பாள். அலருக்கும் சரணிடம் அத்தகைய எதிர்பார்ப்பு இல்லை, ஆனால் எழில்..!!! அவனுக்கு அவளிடம் என்ன தயக்கம்..!! அவர்களின் உறவு எத்தனை ஆழமானது அப்படி இருக்கையில்..,



"ஏன்..?? எதனால்..?? யாருக்காக தன்னிடம் இருந்து இதை மறைக்க வேண்டும்...? தன் மீதான நம்பிக்கை அவ்வளவுதானா..!! அல்லது இதை பகிரும் அளவிற்கு தான் அவனுக்கு நெருக்கம் அற்று போனோமோ..?? அல்லது, அல்லது.. என்று தொடர் கேள்விகள் புற்றீசலாய் படையெடுத்து அவளை அரிக்க அதை தொடர்ந்த மனதின் ஆர்பரிப்பு அவள் வதனத்தை சென்றடைய கண்களில் கனல் தெறிக்க.., இத்தனை நேரம் கழிவிரக்கத்தில் நைந்து போயிருந்த அவள் முகத்தில் ரௌத்திரம் மிளிர தொடங்கியது.



எழில் கூறியது போல பிரகாசம் என்ன செய்தார், சரணின் வாழ்வில் என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னமே தெரிந்திருந்தால் அன்றைய சூழலில் அவளின் அணுகுமுறையே வேறாக அல்லவா இருந்திருக்கும்...!! சொல்லப்போனால் கீர்த்தியை அந்நிலையில் கண்டது அவளுக்குமே அதிர்ச்சியாக இருந்திருந்தாலும் இன்னும் நிதானத்துடன் அச்சூழலை கையாண்டிருப்பாளே...!!! எழில் தன்னிடம் இருந்து மறைத்ததன் விளைவே அலர் சரணை பேசியதில் தொடங்கி நாதன் அலரை தன்னுடன் அழைத்து சென்றது வரையில் முடிந்திருக்கிறது.



அனைத்திற்கும் காரண கர்த்தாவானவன் தன்னையே குற்றம் சுமத்தி எவ்வளவு பேசிவிட்டான்.. இப்போதும் அவள் அவன் மீது பிரயோகித்த வார்த்தைகளை அவள் நியாயபடுத்த முயலவில்லை.. ஏனெனில் அவனை பற்றி முழுதாக அறிந்திருப்பவள் எத்தகைய மோசமான நிலையாக இருந்திருந்தாலும் எழிலை பேசி இருக்ககூடாது.., அது தவறு தான், காலம் கடந்து பெற்ற ஞானோதயம்...!!! ஆனால் அலரிடம் இதை பகிர்ந்திருந்தால் அத்தகைய சூழலே இல்லாது போயிருக்குமே..!! அவளும் தன்னிலை இழந்து பேசி இருக்கமாட்டாளே..!!



அனைத்தையும் மீறி, "நான் உனக்கு அவ்வளவு முக்கியம் இல்லாம போயிட்டேனா மாமா...?, ஏன் என்னிடம் இருந்து மறைத்தாய்..?? இந்நிலையில் நீ என்னை வைக்கும் அளவிற்கு தான் நான் உன் நம்பிக்கையை பெற்று இருக்கிறேனா..!!" என்று கோபத்தையும் மீறிய ஆதங்கத்தில் மனதினுள் அவனிடம் உரையாட தொடங்கினாள் அதன் விளைவு.., இத்துடன் முப்பதுக்கும் மேற்பட்ட அவன் அழைப்பை நிராகரித்து..,





"ரொம்ப பிசியா, இன்னும் எவ்ளோ நேரம் ஆகும், என்ன ஆச்சு, எப்போ வர, ஏன் கால் அட்டென்ட் பண்ணலை, மழை வரமாதிரி இருக்கு சீக்கிரம் வா, பதில் சொல்லு, நான் என்ன நினைக்க, ஆர் யூ ஸேப், மழை ஆரம்பிக்குதுடி, எதாவது சொல்லு, என்ன ஆச்சு, அவி தூங்குறான், மழை அதிகமா வருதுடி, சரி அங்கேயே இரு, நான் வரேன்" என்று அவள் தன் அழைப்பை ஏற்காததால் தொடர்ந்து பல வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்கள் எழில் அனுப்பியிருக்க ஒன்றைக்கூட திறந்து பார்க்கவில்லை.





கைபேசி ஒளிர்வதை கண்டாலும் அதை பற்றி பெரிதாக அலட்டிகொள்ளாமல்..., மனம் முழுக்க கேள்விகள் விரவி இருக்க, அதற்க்கு பதில் கிட்டாது அங்கிருந்து அகலக்கூடாது என்ற திடத்துடன் சிறு அடத்துடனே அமர்ந்திருக்கிறாள்.



***



மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போதே அலரை அலுவலகத்தில் சென்று சந்திக்க மனம் ஆளாய் பறந்தாலும் அது சரிவராது என்று அவ்வெண்ணத்தை கைவிட்டவன் நேரே பள்ளிக்கு சென்று அவிரனை அழைத்துக்கொண்டு வீடு சென்று அவளுக்காக காத்திருக்க தொடங்கினான். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அலருக்கு அழைத்து விட்டிருந்தான் அகனெழிலன்.



ஆனால் அவன் அழைப்பை ஏற்காமல் போகவும் பிஸியாக இருப்பாள் என்று எண்ணிக்கொண்டவன், பின் அவிரனை சுத்தபடுத்தி அவனின் உடைகளை களைந்து வேறு மாற்றி அவனுக்கு சிற்றுண்டியும் பாலும் பருக கொடுத்தவன் மீண்டும் அலருக்கு அழைக்க தொடங்கினான்.. ஆனால் ஒற்றை அழைப்பை கூட அவள் ஏற்காமல் போகவும் என்னவாக இருக்கும் என்று எண்ணியவன் அவள் அலுவலக வளாகத்தை சேர்ந்த மற்றொருவருக்கு அழைத்து கேட்க.., அவர் அலர் அலுவலகத்தினுள் இருப்பதை உறுதிபடுத்தவும் தான் நிம்மதி மூச்சு விட்டவன்..



முக்கியமான வேலையாக இருப்பாள் வந்துவிடுவாள் என்று தன்னையே தேற்றிக்கொன்டவன் பின் அவிரனை வீட்டு பாடங்களை முடிக்க செய்வதற்குள் மணி இரவு ஏழு ஆகிவிட்டிருந்தது. அதே நேரம் வெளியில் மின்னலுடன் கூடிய மழையும் மெல்ல வலு கூட்டி இப்போது அடைமழையாக விடாது பெய்து கொண்டிருக்க, அவளுக்கு மீண்டும் அழைத்து பதில் இல்லாது போகவும் வாட்ஸ்அப்ல் மெசேஜ் அனுப்ப தொடங்கினான்.



அவிரனை வீட்டுபாடம் செய்ய வைத்துக்கொண்டே கிடைத்த இடைவெளியில் இரவு உணவை செய்து முடித்திருந்தவன் அவனுக்கு தட்டில் போட்டுகொண்டு வர,



எப்போதும் பள்ளியில் இருந்து வந்ததும் அன்றைய நிகழ்வுகளை அன்னையுடன் பகிர்பவன் இன்று அவள் இல்லாது போக அன்னையை அதிகமாக தேடியிருந்த அவிரன் எழிலிடம் "அம்மா எங்கப்பா..??, ஏன் இன்னும் வரலை..??" என்று சோர்ந்து போன குரலில் ஐந்தாவது முறையாக கேட்க...,



'வந்துடுவாங்க கண்ணா நீ சாப்பிடு' என்று அவனுக்கு இட்லியை பிட்டு ஊட்ட அவனோ வாயை அழுந்த மூடி முடியாது என்பதாக தலையை இருபுறமும் அசைத்து மறுத்தவன்,



"அம்மா வந்தாதான் சாப்பிடுவேன்" என்று அடமாக நிற்க,



'ம்ப்ச்... அம்மா வந்துடுவாங்கடா நீ சாப்பிடு' என்றிட..,



"அப்போ ஏன் இன்னும் வரலை..??? மழைல எப்படி வரமுடியும்..??? இன்னும் லேட் தான் ஆகும்.. நீங்க பொய் சொல்றிங்க..??" என்று கூற..



"எது பொய்யா..??" என்று விழித்த எழிலுக்கோ என்ன பதில் சொல்லி அவனை சமாளிக்க என்று புரியாது போக..,



லேசாக உயர்த்திய குரலில் "அவி சொன்னா கேட்கமாட்டியா...?? அம்மா வருவாங்க நீ வாயை திற" என்று அதட்ட.,



மறுநொடியே, "நோப்பா..., நீங்க தான் காலையில அம்மாவை விட்டுட்டு கிளம்புனிங்க, இப்போ எப்படி அவங்க தனியா வருவாங்க... அவங்க என்ன கார்லயா போயிருக்காங்க எப்படி மழையில வரமுடியும்..., அம்மா வந்தாதான் சாப்பிடுவேன்" என்று திடமாக மறுத்து தன் அறையினுள் புகுந்துகொண்டான்.



உள்ளே செல்லும் மகனையே பார்த்துகொண்டிருந்த எழிலின் ஆதாரங்களோ, "அப்படியே அம்மா மாதிரியே பாயிண்டை புடிச்சிட்டான் என்று முனுமுனுத்தவன் உரத்த குரலில், "டேய் அவ பத்து மணி ஆனாலும் வரமாட்டா போல நான் தான் போய் கூட்டிட்டு வரணும் நீ மொதல்ல சாப்டுடா கிளம்புவோம்" என்றிட..,



அறையில் இருந்து தலையை நீட்டிய அவிரன், "அப்போ ஏன் நீங்க முன்னமே போகல... எதுக்கு இவ்ளோ நேரம் வெயிட் பண்ணிங்க" என்று கேட்கவும் தலையில் கை வைத்துகொண்டு அமர்ந்துவிட்டான் எழிலன்.



மீண்டும் இறுதியாக ஒருமுறை அவளுக்கு அழைத்து பார்க்க, 'ஹும்ஹும் பதில் இல்லை'



அவள் ஏதோ காரணத்தினால் தான் தன்னை தவிர்க்கிறாள் என்பதை உணர்ந்துகொண்டவன் அது எதனால் என்று அறிய முடியாமல் குழம்பி போனான். ஆனால் தன் மீது கொண்ட கோபத்தின் எதிர்வினை தான் இது என்பதை சில நிமிடங்களில் கண்டு கொண்டவன் நிச்சயம் அவன் அழைக்காமல் அவள் வரப்போவதில்லை என்பதையும் அறிந்திருப்பதால் இனியும் தாமதிப்பதற்கு இல்லை என்று முடிவு செய்து கார் சாவியை எடுத்துகொண்டு அவிரனை அழைக்க சென்றால் அவன் தூங்கி விட்டிருந்தான்.



உறங்கிகொண்டிருக்கும் பிள்ளையை தனியே விட்டு செல்லவும் முடியாது அதேபோல தன்னவளை அழைக்க சென்றால் அங்கிருந்து திரும்ப எவ்வளவு நேரம் ஆகும் என்றும் உறுதியாக கூற முடியாது. அவள் பிடிவாதம் அறிந்ததாயிற்றே..!!



என்ன செய்வது என்று சில நொடிகள் யோசித்தவன் மறுநொடியே வெற்றிக்கு அழைத்தவன் மறுபுறம் சில நொடிகள் அவன் மெளனமாக இருக்கவும், 'டேய் செவிட்டு கூமுட்டை நான் பேசுறது கேட்குதா..??' என்று ஆரம்பித்து இப்போது அங்கு வரவிருப்பதையும் கூறி வைத்தவன் அவிரனை தூக்கிக்கொண்டு வீட்டை பூட்டி காரின் பின்னிருக்கையில் அவிரனை பத்திரமாக படுக்க வைத்து கிளப்பினான்.



அங்கு அலர்விழியோ எழில் மீது அத்தனை சீற்றத்துடன் அவன் வருகைக்காக காத்திருக்க தொடங்கினாள்.



****



எழிலின் வரவிற்காக தாமரையும் வெற்றியும் வாயிலிலேயே காத்திருக்க, அவன் காரை நிறுத்தியதும் வெற்றி அவிரன் மழையில் நனையாமல் இருக்க வேண்டி குடையுடன் அவர்களை அடைந்து பத்திரமாக அவர்கள் அறையில் சித்து, சுபியுடன் படுக்க வைத்தான்.



'சரி நான் கிளம்புறன் அமுலுவை கூட்டிட்டு வந்துடுறேன்' என்று கூற,



வெற்றியோ 'ஒரு நிமிஷம் மச்சி' என்று அழைக்க,



"என்னடா..???"



"ஏன் உன் மாமனார் வீடும் பக்கத்துல தானே இருக்கு அங்க விட வேண்டியது தானே..!! என்றான் நக்கலான குரலில்..., அவன் தான் தாமரை மூலமாக நடந்த அனைத்தையும் அறிந்திருந்தானே..!!



இப்போது எழில் நாதன் வீட்டிற்கு சென்று அமுலு இன்னும் வீடு திரும்பவில்லை தான் அழைக்க செல்கிறேன் மகனை பார்த்துகொள்ளுங்கள் என்று கூறினால்.., எட்டு மணிவரை என்ன பண்ணிட்டு இருந்த..??? இதான் என் பெண்ணை பார்த்துக்கிற லட்சணமா..??.. அது.. இது.. என்று நாதன் அதற்கும் ஒரு மூச்சு பேசி தீர்த்துவிடுவாறே...!! அதுமட்டும் இல்லை இதையே சாக்காக வைத்துகொண்டு மீண்டும் அலரை அவரோடு அழைத்து செல்லவும் கூடும்.., அதற்க்கு ஏன் வாய்ப்பளிப்பானேன் என்று தானே எழிலும் வெற்றியை தேடி வந்திருக்கிறான்.



அதை அறிந்து தான் வெற்றியும் அவனை கேட்கிறான். தன்னை சீண்டும் அவன் குரலை கண்டுகொண்ட எழில், "டேய் பரதேசி, என்ன நக்கலா..???" என்று பல்லை கடித்தவாறு கேட்கவும்,



"இல்லைடி சிக்கல், அதுவும் உனக்கு" என்றான் எள்ளலாக புருவம் உயர்த்தி..,



நேரம் ஆவதை உணர்ந்தவன் கை முஷ்டியை இருகியவாறு 'உன்னை வந்து வச்சிக்கிறேன்டா' என்று அவனை முறைத்துக்கொண்டு எழில் திரும்ப..,



அவனை சொடக்கிட்டு அழைத்த வெற்றி, "அடியேய் ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.., என் தங்கச்சியையும் என்னை மாதிரியே மாங்கான்னு நினைச்சி எப்பவும் ஏய்க்கலாம்ன்னு இருந்தேன்னா அந்த எண்ணத்தை இப்பவே குழி தோண்டி பொதைச்சிடு.., ஏன்னா எங்க எல்லாரையும் விட அவ ரொம்ப ஷார்ப்.., இந்நேரத்துக்கு உன் முள்ளமாரித்தனம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சி இருப்பா..???? அதுமட்டுமில்லை இந்த மழையில உன்னை ஓட விடறன்னா கண்டிப்பா உனக்கு சேதாரம் பெருசுதான் மச்சி" என்று அடக்க மாட்டாமல் சிரித்தவன்.., சிரிப்பினூடே 'ஆல் தி பெஸ்ட்' என்றான்.



வெற்றி பேச ஆரம்பித்ததுமே திரும்பி நின்று மேவாயை தடவியவாறு அவனை கூர்மையாய் பார்த்துகொண்டு நின்றவன் அவன் ஆல் தி பெஸ்ட் என்று முடிக்கும் முன் வெற்றியை நெருங்கி இடக்கரம் கொண்டு அவன் கழுத்தை வளைத்து தன் முன் குனியவைத்தவன் வலக்கர முஷ்டியை கொண்டு ஓங்கி முதுகில் இரண்டு வைத்தவாறே..,



"அங்க ஒருத்தி எதுக்கு உட்காந்திருக்கான்னே தெரியாம தலையை பிச்சிட்டு இருக்கேன் எருமை டைலாக்காடா பேசுற வர்றேன் இரு, அவளை கூட்டிட்டு வந்து உனக்கு கச்சேரியை வைக்கிறேன்" என்றவாறு கிளம்பி சென்றான்.



மழைநீர் பாதையை மறைத்தாலும் விண்ட்ஷீல்ட் வைப்பர் போட்டுகொண்டு முடிந்தளவு வேகமாக வாகனத்தை செலுத்தி கொண்டு சென்றவன் வளாகத்தை அடைந்து அவள் அலுவலறையினுள் நுழையவும் திடுக்கிட்டு போனான். ஆம் அலுவலக அறை கதவு முதற்கொண்டு அறையினுள் இருந்த மூன்று ஜன்னல்களும் திறந்திருக்க அதன் வழியே நுழைந்த மழைநீர் சிதறல்கள் தரையை நிறைத்திருக்க, மேஜையில் கவிழ்ந்து முகம் பதித்திருந்தவளின் உடல் குளிரில் அப்பட்டமாய் நடுங்கி கொண்டிருந்தது.



உடனே அவளை நெருங்கியவன் அலரை எழுப்பி நிறுத்தி இறுக அணைத்து தன் வெப்பத்தை அவளுக்கு கடத்த முனைய அவளும் எவ்வித எதிர்ப்பும் இன்றி அமைதியாக அவன் அணைப்பில் கட்டுண்டு நின்றாள். மெல்ல அவள் உடலின் நடுக்கம் குறைந்ததும் அவளை விலக்கி நிறுத்தியவன், "ஏய் அறிவுகெட்டவளே எல்லாத்தையும் திறந்து வச்சிட்டு என்னடி பண்ற, கால் பண்ணினாலும் எடுக்கலை, மெசேஜ்க்கும் எந்த ரிப்ளையும் இல்லை" என்று அவளை கடிந்தவாறே தான் அணிந்து வந்திருந்த ஜெர்க்கினை கழற்றி அவளுக்கு அணிவித்துகொண்டிருந்தான்.



பின்னே சிறு வயதில் இருந்தே அவளுக்கு குளிர் காற்று ஒத்துக்கொள்ளாது, மழையில் நனைத்தாலோ, குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் முதலியவைகளை எடுத்துகொண்டாலோ அடுத்த நாளே படுத்துவிடுவாள். அதிலும் இப்போது அணிந்திருக்கும் மெல்லிய காட்டன் புடவை எவ்வாறு குளிர் தாங்கும்.., குனிந்து ஜிப்பை பூட்டி கொண்டு இருந்தவன் அவளிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க அங்கு அவளோ அழுத்தமாய் அவனைத்தான் பார்த்துகொண்டிருந்தாள்.



அவளின் பார்வை எதனால் என்று புரியாதவன், 'என்னடி', என்று அவள் விழிகளை ஒருமுறை பார்க்க அதில் மிதமிஞ்சிய சினம் மட்டுமே தென்பட.., "வா வீட்டுக்கு போகலாம்" என்று அவள் கரத்தை பிடிக்க, அலர்விழியோ கால்களை அழுத்தமாய் ஊன்றியவாறு அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை பிரித்தெடுத்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள்.



"சரி நான் காலைல உன்னை விட்டுட்டு போயிருக்க கூடாது, தப்பு தான்... அதுக்கு இப்படியாடி பண்ணுவ..??? இனிமேலும் இங்க இருந்தா கண்டிப்பா உனக்கு பீவர் வந்துடும் வீட்டுக்கு போயி பேசிக்கலாம் வா என்று அவளை கிளப்ப முயல..,



'உட்காரு' என்ற அலரின் அழுத்தமான குரல் அவன் செவிகளை சென்று சேர..., அவள் முகம் பார்த்தவன்... அவள் குரலுக்கு கட்டுப்பட்டு அவள் முன் அமர்ந்தான்.
Super
 

Priyaasai

Active Member
அகனலர் - 36.2

தான் காலையில்
அவள் கேட்டுக்கொண்ட பின்பும் அலுவலகத்திற்கு அழைத்து வராததால் தான் மனைவி தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்று எண்ணியவன் அவளிடமும் அதையே கூறியிருக்க, அலர்விழியோ அவன் வார்த்தைகளை சட்டை செய்யாது நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து எழிலையே துளைக்கும் பார்வை பார்த்துகொண்டிருந்தாள்.



மழை விடாது மேலும் வலுப்பதை கண்டவன் முடிந்தவரை அவளை அழைத்துக்கொண்டு விரைவாக கிளம்பிவிட வேண்டும் என்றிருக்க.., அலர்விழி அவனிடம் 'உட்கார் மாமா பேசணும்' என்று கூறவும், அவளை திரும்பி பார்த்தவன் குத்தீட்டியாய் துளைக்கும் தன்னவளின் தீர்க்கமான பார்வைக்கு கட்டுண்டு 'ஏன்.. எதற்கு..' என்ற மறுகேள்வியே எழுப்பாமல் அவள் எதிரே அமர்ந்தான் அகனெழிலன்.



இருகரங்களையும் மேஜை மேல் கோர்த்து அதில் நாடியை தாங்கியவள் விழிகளில் என்றுமில்லாத கலவையான உணர்வுகள் தென்பட அதை படிக்க முடியாமல் சில நொடிகள் திண்டாடி போனான் எழிலன்.



ஆம் அவளெதிரே அமர்ந்த எழிலின் பார்வையும் அலரின் மீதுதான் இருந்தது... காலை வரை அவள் கண்களில் அவன் கண்ட அலைப்புறுதலும், தவிப்பும், தேடலும் முற்றிலுமாக நீங்கியிருக்க.., வரையறுக்க முடியாத திடத்துடனான சிறு சீற்றம் அவள் நயங்களில் விரவி இருப்பதை கண்டவனின் முகமும் தீவிரத்தை தத்தெடுத்தது.



கனத்து போயிருந்த மனதையும்.., எழிலை கண்டதும் இதுவரை கொண்டிருந்த மனக்கிலேசங்களுக்கு அவனையே வடிகாலாய் கொள்ள எண்ணிய தன்னையும் சில நொடிகளில் மீட்டேடுத்தவள் நேரடியாக அவனிடம்..,



"Justice delayed is justice denied"க்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..??? என்று கேட்க..



சம்பந்தமே இல்லாமல் இப்போ எதற்கு இந்த கேள்வி என்று புரியாதவன், 'எதுக்கு கேட்கிற, புரியலை' என்றான்.



தலையை இடப்புறம் சாய்த்தவள், "ஹ்ம்ம்... எதுக்குன்னு அப்புறம் சொல்றேன், பட் அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா..??" என்று ஆழ்ந்த குரலில் மீண்டும் கேட்க..,



அவள் குரலில் தொனித்த கடுமைக்கு கட்டுபட்டவன் தெரியும் என்பதாக தலையசைத்து "தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி..." என்றவன், ஆனா இப்போ எதுக்கு அதைபத்தி கேட்கிற...? என்றவனின் பார்வை மழையையும் தன்னவளையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தது.



அவன் கேள்வியை புறம் தள்ளியவள் சற்று அழுத்தமான குரலில் "எக்ஸாக்ட்லி.., என்று அவன் பதிலை உறுதி செய்தவள் இப்போது கரங்களை மேஜை மீது கோர்த்து கண்கள் இடுங்க, "ஆனா இது தெரிஞ்ச உங்களுக்கு, எப்படி தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்படதாகுமோ..!! அதேபோல இங்கு மறைக்கப்படும் உண்மைகளும்.., மறுக்கப்படும் நீதிக்கு துணைபோகும்ன்னு தெரியாம போச்சு..???" என்று முடிக்கையில் அவளையும் மீறி குரல் உயர்ந்திருந்தது.



அவள் அவ்வாறு கூறியதும் எழிலுக்கு சில நொடிகள் எடுத்தது அவள் விளக்கத்தை கிரகிக்க... சத்தியமாக அவனுக்கு அவள் கேள்வியின் நோக்கம் எதனால் என்றும் புரியவில்லை, மேலும் அவள் விளக்கம் யாருக்கானது என்றும் கண்டறிய முடியவில்லை, அதனால் அவளிடம்,



"என்ன உண்மை..?? யார் மறைச்சா..?? சுத்தி வளைக்காம நேரடியா சொல்லுடி" என்றான் ஜன்னல் வழியே குறையாத மழை மீது பார்வை பதித்தவாறு..,



"சோ உங்களுக்கு புரியலை அப்படி தானே..??" என்று நிமிர்ந்து அமர்ந்து புருவம் உயர்த்தி கேட்கவும்,



அவள் செயலில் பொறுமை இழந்து போனான் அகனெழிலன். ஆம் காலை விட்டு சென்றதில் கோபம் என்றால் இந்நேரம் அதற்க்கு சண்டை போடுவாள் சமாதனபடுத்தி அழைத்து செல்வோம் என்று வந்தால் அவளோ புரியாதவண்ணம் பேசுவதை கண்டவன், "இதோபாரு அவியை தாமரைகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன் எந்திரிச்சான்னா உன்னை தான் தேடுவான்.., மழை இன்னும் அதிகமாகும் போல எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் கிளம்பு" என்று எழுந்து நின்றான்..,



அலரோ "நான் இன்னும் பேசி முடிக்கலை அண்ட் இன்னும் என் கேள்விக்கு இன்னும் பதிலும் வரலை" என்றாள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு அசையாமல் தீர்க்கமான குரலில்.,



'உப்ப்ப்' என்று இதழ்களை குவித்து காற்றை இழுத்து விட்டவன் தலையை கோதிக்கொண்டு மீண்டும் அமர்ந்தவாறே, "என்ன கேட்கிறன்னே புரியலைடி... புரிஞ்சாதானே பதில் சொல்ல.." என்றான்.



"ஓகே பைன்.. நேரடியாவே கேட்கிறேன், எதுக்கு சரண் மாமா சித்தப்பா பத்தி உங்களுக்கு தெரிஞ்ச உண்மைகளை என் கிட்ட இருந்து மறைச்சிங்க..??" என்றவள் சிறு இடைவெளி விட்டு "இப்..போ பு..ரி..யு..தா..?" என்று ஒவ்வொரு எழுத்துக்கும் அழுத்தும் கொடுத்துக்கொண்டே புருவம் உயர்த்த..,



பிரகாசம் பற்றி கேட்கிறாள் என்று எண்ணிகொண்டவன், "மனுஷனா அவனெல்லாம்..?? வெளில சொல்ற மாதிரியான விஷயத்தையாடி உன் சொத்தப்பன் பண்ணியிருக்கான்.., என்று இன்றும் பிரகாசத்தின் செயல்கள் மீதான் கொதிப்பு எழிலிடம் அடங்க மறுக்க, அவன் பண்ணினதெல்லாம் தெரிஞ்சா.. "என்று தொடங்கியவனை அலரின் உரத்த குரல் தடுத்து நிறுத்தியது.



"தெரியாது, தெரியவும் வேண்டாம்.." என்று ஒரு கணம் தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தியவள் பின் தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவனிடம், "என் சித்.." என்று ஆரம்பித்தவள் ஒரு கணம் கண்களை மூடி திறந்து தலையை இருமருங்கிலும் ஆட்டி இல்லை "மினிஸ்டர் பிரகாசம்" என்ற வார்த்தைக்கு வலுகூட்டியவள் எழிலிடம்,



"மினிஸ்டர் பிரகாசம் என் மாமாவை என்ன எல்லாம் பண்ணி இருக்க கூடும்ன்னு அனுமானிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை.. அதுதான் அவரே அங்க வாக்குமூலம் கொடுத்துட்டாரே அதுல இருந்து ஓரளவுக்கு நான் நடந்ததை கெஸ் பண்ணிட்டேன்.." என்றவள் 'பட் தட்ஸ் இர்ரிலவன்ட் ஹியர்' என்றுவிட்டு அவனிடம்,



"எனக்கு அதை பற்றி எதுவும் தெரியகூடாதுன்னு தானே நெனச்சிங்க.., அதுதானே உங்களுக்கும் வேணும்..!! அதுக்காக தானே கூடவே இருக்கிற என்கிட்ட அட்லீஸ்ட் ஒரு தகவலா கூட இதை பகிர்ந்துக்காம எட்டு மாசமா கஷ்டப்பட்டு ரகசியத்தை காப்பாத்தியிருக்கிங்க...", என்றவள் எழில் ஏதோ மறுத்து கூற வரவும், வலக்கரம் நீட்டி அவனை தடுத்தவள்,



"வெல் லெட் இட் பி..!! ஐ வில் நெவெர் போர்ஸ் யூ டு டிஸ்க்ளோஸ், ஆல் தி வே ஐ வான்ட் டு க்நொவ் இஸ் ஒன்லி தி ரீசன் ஆப் யுவர் சீக்ரெசி" (Well let it be..!! I'll never force you to disclose.., all the way I want to know is only the reason of your secrecy) 'ஹ்ம்ம் சொல்லுங்க எதுக்காக மறைச்சிங்க' என்று அலர்விழி குரலை உயர்த்த,



ஒருநொடி எழில் திகைத்து தான் போனான்.



ஆம் அவளை பற்றி நன்கு அறிந்தவன் தான் அவன்..!! ஆனால் அவளின் இன்றைய இந்த முகமும் அவதாரமும் அவனுக்கே புதிது..!! இதுவரையில் அவன் கண்டிராத அசாத்திய நிமிர்வும் நிதானமும் அவளிடம், அனாவசிய வார்த்தையாடல் இன்றி அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரயோகிக்கப்படும் வார்த்தைகள்., அதிலும் இப்போது அவள் உணர்ச்சி வசப்படவில்லை, விழிநீர் சிந்தவில்லை, ஆர்பாட்டம் எதுவுமின்று கூர்மையான பார்வை அதிலும் அவள் குரலில் உணர்வுகள் முற்றிலும் களையப்பட்டு அழுத்தம் மட்டுமே மிகுந்திருந்தது.



எழில் புரிந்து கொண்டான் "இப்போது இங்கு அவள் தன் மனைவியாக அல்லாமல் ஒரு வழக்கறிஞராக தன் எதிரே அமர்ந்து சரணின் விடயத்தை ஆராய்கிறாள்" என்பதும் அவள் கோபத்திற்கான காரணம், தான் அவனை பற்றிய உண்மையை மறைத்தது என்பதும் புரிபட..,

தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டி அவளிடம், "இதோ பாரு அமுலு என் சம்பந்தப்பட்ட எதையாவது இதுவரை நான் மறைச்சிருக்கேனா..??? அப்படி இருந்தா நீ கேள்வி கேளு நான் பதில் சொல்றேன்.. ஆனா அடுத்தவங்க தன்னோட கஷ்டத்தை என்கிட்டே பகிர்ந்து அதை வெளியில் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னதுக்கு அப்புறமும் நான் அதை பத்தி பேசுறது நல்லா இருக்காது.. அதுமட்டுமில்லை அவங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கையை, அவங்களுக்கு தெரியபோறது இல்லைன்னாலும் என் மனசறிஞ்சி நான் உடைக்கிறதா தானே அர்த்தம்..!! என்னால அப்படி செய்ய முடியாது, அதுவும் இல்லாம..." என்று தொடர்ந்தவனை கரம் கொண்டு இடையில் நிறுத்தியவள்..,




"வெல் செட்.. பட் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா..??" என்றவள் ஒரு நொடி நிறுத்தி விழிகள் இடுங்க அவனை பார்த்தவள்,



"இங்க பெரும்பாலான விஷயத்துல தப்பு பண்றவங்களை விட அந்த தப்புக்கு துணை போறவங்களும் அதை மறைக்க முயல்பவர்களும் தான் முதல் குற்றவாளி..", என்றவள் "ஹ்ம்ம் புரியிற மாதிரி சொல்லனும்ன்னா, நேத்து உங்களுக்கு ஒரு நியூஸ் ஆர்ட்டிகள் காட்டினேனே நியாபகம் இருக்கா", என்று கேட்கவும் எழிலுக்கும் அவள் எதை குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.



ஆம், "ஒரு பதின்பருவ பள்ளி மாணவி பல நாட்களாக ஆசிரியரின் பாலியல் தொல்லைக்கு ஆட்கொள்ளப்பட்டு அதை எதிர்க்கவும் முடியாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் தற்கொலை புரிந்திருந்தாள், ஆனால் அவளின் தோழி அப்பெண்ணின் இறப்பிற்கு பின்பு தன்னிடம் அப்பெண் இதை பகிர்ந்திருந்தாள்.., ஆனால் பெற்றவர்கள், சமூகத்தின் மீது கொண்ட பயத்தில் இதை பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்று அவளிடம் சத்தியம் பெற்றிருந்ததாகவும் அதனால் அத்தோழி பெண்ணும் இதுவரை யாரிடமும் அதை பற்றி கூறாமல் ரகசியம் காத்ததாகவும் கூறியிருந்தாள்"



அலர் அதை இங்கே மேற்கோள் காட்டவும் எழிலுக்கும் மெல்ல புரிபட தொடங்கியது



"இப்போ புரியுதா அந்த பொண்ணு உண்மையை மறைச்சதால ஒரு உயிர் போயிருச்சி... அந்த பொண்ணு இறந்ததுக்கு அப்புறம் இந்த உண்மையை சொன்னதால செத்து போன பெண்ணை உயிர்பிக்க முடியுமா சொல்லுங்க..?? ஐ அக்ரி அந்த ஆசிரியருக்கு தண்டனை கிடைக்கும் ஓரளவுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் மத்தவங்களை காப்பாற்றலம்ன்னு சொன்னாலும் அதை ஒரு உயிரை விலை கொடுத்துதான் வாங்கனுமா சொல்லுங்க...???"



அதேதான் இங்கயும் ஒருவேளை மாமா சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி நீங்க அதை மறைச்சி, இப்போ நடந்ததை சொல்ல போறதால எதையாவது மாத்திட முடியுமா..??? அதைவிட கொடுமை என்னன்னா இறந்து போன அந்த பொண்ணோட நிலை தான் இப்போ என் மாமாக்கும்.. என்னத்தான் சித்தப்பாக்கு தண்டனை கிடைச்சாலும் மாமாவை மனசை உயிரோடு கொன்ன அப்புறம் அதை செயல் படுத்தி என்ன பிரோஜனம்..??" என்று அலர் கூறவும் ஸ்தம்பித்து போனான் அகனெழிலன்.



அவன் கற்பனைக்கும் அப்பாற்பட்ட கோணம் இது..!! ஆம் சரண் அன்று தான் கொண்ட வலிகள் தன்னோடு போகட்டும், இனி கீர்த்தி அவன் வாழ்வில் முடிந்து போன அத்தியாயம் அவளை நெருங்க போவதில்லை அதே சமயம் வேறு பெண்ணையும் மணக்க போவதில்லை என்று திடமாக உரைத்தவன்..., நடந்து முடிந்த கொடூரங்கள் மற்றவர்களுக்கு தெரியவருகையில் முக்கியமாக அது நாதன் வளர்மதி இடையே பெரும் விரிசல் உண்டாக்க வாய்ப்பிருப்பதாகவும் அதே சமயம் நடந்தவை யார் மூலமாகவாவது அவன் அன்னைக்கு தெரியவந்தால் அவர் வயதிற்கு நிச்சயம் தாங்க மாட்டார். தந்தையை இழந்தவன் அன்னையையும் இழக்க தயாராக இல்லை என்று கூறியதாலேயே எழில் யாரிடமும் பகிரவில்லை.



ஆனால் அவன் பகிர்ந்திருக்க வேண்டுமோ..!! அலரிடமாவது..!! என்ற எண்ணம் இப்போது எழாமல் இல்லை.



அலர்விழி தொடர்ந்து அவனிடம், "இப்போ புரியுதா ஒரு உண்மையை மறைக்கிறது எவ்ளோ பெரிய தப்புன்னு..!! ஏன்னா இங்க நீங்க மறைக்கக்கூடிய ஒரு உண்மை குற்றவாளியை நிரபராதி ஆக்கி இன்னும் பல குற்றங்களுக்கு வித்திடும்.. அதே போல் நிரபராதியை குற்றவாளி ஆக்கி அவன் மட்டும் இல்லாம அவனோட குடும்பத்தோட மொத்த நிம்மதி, சந்தோசம், கனவு எல்லாத்தையும் பறிச்சி நிலை குலைய செய்து மிச்ச சொச்ச வாழ்க்கையையும் பாழாக்கிடும்.. என்று கூற விழியகலாது தன்னவளை பார்த்திருந்தவனின் மனதினுள் பெரும் சஞ்சலம் மூண்டிருந்தது.



"அதேபோல இங்க நீங்க மறைச்சது மாமா கீர்த்தியோட முடியக்கூடிய விஷயத்தை இல்லை. இதுல எத்தனை குடும்பத்தோட நிம்மதி, சந்தோசம் அடங்கி இருக்கு தெரியுமா...??? அப்பா ஏற்கனவே மாமாவை வெறுத்துட்டாங்க, அதான் அன்னைக்கு மாமா பேசினதைகூட சரியா புரிஞ்சிக்காம திரும்ப அவர அடிக்க போயிட்டாரு.., அம்மாக்கு அங்க நடந்ததெல்லாம் தெரிஞ்சி நொறுங்கி போயிட்டாங்க.., இன்னும் சித்தி சித்தப்பாங்களுக்கு எல்லாம் தெரிஞ்சதுனா யார் எப்படி நடந்துபங்கன்னே சொல்ல முடியாது... அப்படி சிக்கலாக்கி வச்சிருக்கிங்க என்றவளின் குரலில் இப்போது அப்பட்டமாக எரிச்சல் மிகுந்திருந்தது, ஒரு நொடி அவனை கூர்ந்தது பார்த்தவள் மீண்டும் அவனிடம்..,



"இவ்ளோ ஏன் நீங்க மட்டும் இதை மறைக்காம இருந்திருந்தா நாம பிரிஞ்சிருக்க வேண்டிய அவசியமே இல்லாம போயிருக்கும்.. சொல்லப்போனா நீங்க மறைச்சதோட விளைவு தான் இவ்வளவு பூதாகரமாகி எல்லாரோட நிம்மதியையும் பறிச்சிடுச்சி.. இப்போ புரியுதா நீங்க எவ்ளோ பெரிய தப்பு பண்ணி இருக்கிங்கன்னு" என்று முடித்தவள், "என்ன நான் சொல்றது சரி தானே..!" என்றவாறு அவனை பார்க்க..,



உறைந்துபோய் அவள் பேச்சில் லயித்திருந்தவன் தலையும் தன்னிச்சையாய் 'ஆம்' என்பதாக அசைந்தது.



இன்னொரு விஷயம் "நீங்க மறைச்சது யாரோ மூணாவது மனுஷனை பத்தி இல்லை என்னோட தாய் மாமாவை பத்தி.. ஹவ் டேர் யூ டு டூ சோ..?? நாளைக்கு நான் 'அண்ணி இல்லை வேதா, சர்வேஷ் பத்தின உண்மையை உங்ககிட்ட இருந்து மறைச்சா உங்களால ஏத்துக்க முடியுமா..?? என்று மேஜையை தட்டியவாறே எழுந்து அவன் அருகே வர..,
அன்னிச்சையாய் அவனும் எழுந்து நின்றான்.

ஹாய் டியர்ஸ்....


சிலருக்கு இங்கு எதனால் அலர் எழிலுக்கு சண்டை என்ற குழப்பம் இருக்கலாம்... நான் இந்த கதையும் 'உயிரில் உறைந்த உறவே' கதையும் ஒரே நேரத்தில் நடைபெறுவது போல எழுதி இருந்தேன் அங்கு சரண் வாழ்வில் நிகழ்ந்த பல குழப்பங்களால் இங்கு இவர்களுக்குள் பலநேரம் முட்டிக்கொள்ளும் இதை மனதில் இருத்தி படிங்கள் குழப்பம் வராது.

நன்றிகள்..
Ezhil pavam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top