'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 12

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10872

இரண்டு வருடங்களுக்கு பிறகு..

மார்கழி மாத கடைசி வெள்ளியன்று அதிகாலை வழக்கம்போல வாசல் தெளித்து கோலம் போட்ட வளர்மதி உள்ளே சென்று கதிரை எழுப்பி விட்டார். ஆம் சிகிச்சை முடிந்து இருவாரங்களிலே வீடு திரும்பியவன்..

'நாதனிடம் எனக்கு இப்போ ஓரளவுக்கு எல்லாம் புரிஞ்சது, இதுக்கு மேல நீங்க நெனச்ச மாதிரி நான் இருப்பேன். ஆனா நீங்க இருப்பிங்களா..?' என்றான்.

நாதன் அதில் மனதினுள் பெருத்த அடி வாங்கினார்.

பள்ளி படிப்பை முடித்து தற்போது புகழ் பெற்ற கல்லூரியில் பொறியியல் முதல் ஆண்டு படிப்பவனை பரிட்சைக்கு படிப்பதற்க்காக எழுப்பிக்கொண்டிருந்தார் வளர்மதி.

கதிர் படிக்க அமரவும் பால் பாத்திரத்தோடு வெளியில் வந்தாள்.


பால்காரரின் வருகைக்காக வெளியில் நின்றிருந்த வளரின் முன் வந்து நின்றனர் ராஜனும் செண்பகமும். திடீரென அவர்களை கண்டவளுக்கு பேச்சு எழவில்லை. ராஜன் அவளிடம் நாதன் இருக்கானாம்மா..? என்று கேட்கவும்

'ஆம்' என்று தலை அசைத்தவள் 'உள்ளே வாங்க' என்று அழைத்து சென்றாள்.

நடை பயிற்சி முடித்து வீடு திரும்பிய நாதன் அண்ணனும் அண்ணியும் அமர்ந்திருப்பதை கண்டவர் முகம் இறுக 'வாங்க' என்று அமர்ந்தார்.

அனைவருக்கும் வளர் காபி வழங்கவும் மௌனமாய் பருகியவர்கள் ஒருவர் முகம் ஒருவர் பார்க்க.. பின் செண்பகமே ஆரம்பித்தார்.

'வர்ற வியாழன் கிழமை தம்பிக்கு கல்யாணம் வெச்சிருக்கோம் அதான் எல்லாரையும் அழைச்சிட்டு போகலாம்ன்னு வந்தோம்' என்றார்.

அமைதியாய் அமர்ந்திருந்த அயவந்திநாதனிடம் திரும்பிய ராஜன்

"ஏதோ போதாத காலம் அப்படி நடந்துக்கிட்டேன்.. இப்போ வாழ்க்கை சொத்தை விட சொந்தம் தான் பெருசுன்னு உணர்த்திடுச்சுப்பா எல்லாத்தையும் மன்னிச்சி மறந்துட்டு குடும்பத்தோட வந்து விசேஷத்தை நடத்தி கொடுக்கணும்" என்று கைகூப்பவும்

சடாரென எழுந்த நாதன் "என்னண்ணா இது பெரிய வார்த்தையெல்லாம்" என்று நா தழு தழுக்க கூறியவர்

"நீங்க வந்தது ரொம்ப சந்தோசம் கண்டிப்பா நாங்க எல்லோரும் வருவோம்" என்றார்.

கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த அலரின் கைபேசி அழைக்கவும் எடுத்து எண்ணை பார்த்தவளுக்கு நம்ப முடியவில்லை அழைத்தது தாமரைச்செல்வி இத்தனை வருடங்களில் ஊருக்கு செல்லும்போது அவளை பார்த்து பேசுவதோடு சரி இதுபோல அழைத்ததெல்லாம் கிடையாது.. இப்போது திடீரென அழைக்கவும் மகிழ்ந்து போனாள்.

அழைப்பை ஏற்றவளிடம், "ஹலோ.. அலர் எப்படி இருக்க..?" என்று விசாரித்தவளிடம்

"நல்லா இருக்கேன்டி என்ன திடீர்ன்னு காலைலயே போன்.." என்றாள்.

எனக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு உன்னை கூப்பிடத்தான் போன் பண்ணினேன் என்றவளிடம்

'வாவ்' என்று குதூகலித்தவள் 'எப்போ..?? எங்கே..??யாரு மாப்பிள்ளை..??' என்றாள்.

ஒவ்வொண்ணா கேளுடி சொல்றேன் என்றவளிடம்,

சரி சொல்லு, எப்போ..? என்றாள்.

அடுத்த வாரம் வியாழன்..

யார் மாப்பிள்ளை..? என்றவளிடம் உனக்கு தெரிஞ்சவர் தான் என்றாள்.

எனக்கு தெரிஞ்சவரா.. யாருடி அது..? என்று சில நிமிடங்கள் யோசித்தவள் தெரியலைடி என்று உதடு பிதுக்கினாள்.

"ஹ்ம்ம் உங்க அண்ணன் தான்.. இனி நீ வாடி போடின்னு கூப்பிடக்கூடாது ஒழுங்கா அண்ணின்னு கூப்பிட்டு பழகு" என்றாள்.

'யாரைடி சொல்ற.. வெற்றி அண்ணனா..?' என்றவளிடம் மெல்லிய புன்னகையுடன் "ஆம்" என்றாள்.

எப்படிடி என்று அதிசயித்தவளிடம் மாமா அத்தை எல்லாம் பொண்ணு கேட்டு வந்தாங்க எங்க வீட்டுலையும் சம்மதிச்சிட்டாங்க என்றாள்.

"லக்கிடி நீ..! வாழ்த்துக்கள்" என்றாள் அலர்.

'தேங்க்ஸ்டி கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்.. அதுக்குத்தான் இந்த போன். உங்க அப்பா அம்மாக்கு பத்திரிகை வெச்சாச்சு அவங்க கண்டிப்பா வருவாங்க நீயும் அவங்க கூடவே வந்து சேரு' என்றாள் கட்டளையாக.

'நான் இல்லாமையா..???' என்றவள்,

'கண்டிப்பாடி பொங்கல் லீவுக்கு எப்படியும் வருவேன் கூட ரெண்டு நாள் எடுத்துட்டு வரேன்' என்றாள்.

உயிர் தோழனின் திருமணத்தில் பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த எழில் எதிரில் வந்த தன் சின்ன தாத்தாவை கண்டதும் நிதானித்தான்.

அவரோ அகனெழினனிடம், "என்ன எழிலு, வெற்றிக்கே இன்னிக்கு கால் கட்டு போட்டுடுவாங்க நீ தான் இன்னும் சிக்காம இருக்க.. எல்லாம் காலகாலத்துல நடக்கணும் ஆனா எங்க இந்த காலத்து புள்ளைங்க கேக்குதுங்க...! சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு" என்றார்.

திருமண மண்டபத்தின் அலங்காரங்களை பார்வை இட்டவாறு உள்ளே நுழைந்த அலரின் செவிகளை தீண்டவும் அதில் சிந்தை கலைந்து எழிலையே அதிர்ந்து பார்த்தாள்.

காலை முகூர்த்தத்திற்கு தேவையான பூமாலைகளை மேடைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தவன் மனம் தன்னவளின் மணத்தால் ஆட்கொள்ளப்பட்டு தன் வசம் இழந்து அவள் திசை திரும்பியது.

அங்கே பட்டுப்புடவை சரசரக்க கூந்தலில் மல்லிகை சூடி அஞ்சனம் தீட்டிய நயனங்கள் திருமண அலங்காரங்களில் பதிந்தவாறு அவள் அணிந்திருந்த பொன்னகைக்கு இணையாய் வதனத்தில் வீற்றிருந்த புன்னகை ஜொலிக்க பெற்றோர் மற்றும் தம்பியுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் அலர்விழி.

ஒருகணம் தன்னவளின் எழிலில் மனம் லயித்தாலும் மறுகணமே சதாசிவத்தின் கேள்வியில் அன்று அவள் கூறியவை நினைவு வர முகத்தில் இருந்த இலகு தன்மை மறைந்து தானாய் கடுமை குடிகொண்டது.

ஆம் அலரின் மீது பார்வை பதித்தவாறு சென்று கொண்டிருந்தவனை தடுத்து நிறுத்திய சதாசிவம், "என்ன எழிலு..! இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் ஒத்தைலயே தவம் இருக்க போற.. உனக்கு பொண்ணு கொடுக்க ஊருலயும் உறவுளையும் அம்புட்டு பயலுக போட்டி போட்றானுங்க நீதான் பிடி கொடுக்க மாட்டேங்குறன்னு உங்க அம்மா சொல்றா..! காலகாலத்துல நடக்கவேண்டியது நடந்தா தான் அதுக்கு மதிப்பு.. எதுக்கு தள்ளி போடுற..?? சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு" என்றவரிடம்

'அதெல்லாம் ஒண்ணுமில்லை தாத்தா இந்த வருஷம் கண்டிப்ப போட்டுடறேன்' என்றான்.

இன்று.. நேற்று அல்ல.. பல நாட்களாய் அவனை துரத்தும் கேள்வி தான் என்றாலும் இன்று அதற்கு காரணமானவளை கண்டதும் மனம் பாறையாய் இறுகி போனது.

இதை கேட்ட அலருக்கோ இரண்டு வருடங்களுக்கு முன்பான தங்கள் சந்திப்பிற்கு பின் தன்னை மறந்து மற்றொரு பெண்ணை மணந்திருப்பான் என்று இருந்தவளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியே.

இரண்டு வருடங்களாய் தன் மனதை படிப்பில் செலுத்தியவள் இன்று வரை சிறந்த மாணவியாக திகழ்கிறாள்.

வீட்டில் யாருக்கும் இவர்கள் இடையே நடந்தது தெரியாது. அதே போல்.. அதன் பின் தாமரை உடனான சந்திப்புகளிலும் இவனை பற்றிய பேச்சுக்கள் எழாமல் பார்த்துக்கொள்வாள் அப்படியே எழுந்தாலும் அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து விடுவாள்.

இன்று சதாசிவ தாத்தாவின் கேள்வி அவளிடம் சிறு குற்ற உணர்வை தோற்றுவித்தது. தன்னால் தான் அவன் இன்னும் மனம் முடிக்காமல் இருக்கிறானோ..! என்று.

ஆனால் அகனெழிலனை கண்ட கதிரோ.., "மாமா.. என்று அழைத்து அவனை கட்டிக்கொண்டு எப்படி இருக்கீங்க..?" என்றான்.

"ஆம்" அன்று அனைத்து கட்ட சிகிச்சைகளும் கவுன்சலிங்கும் முடிந்து கதிரை பெற்றோரிடம் சேர்த்தவன்.. தன் அலைபேசி எண்ணை அவனிடம் அளித்து எந்த நேரமானாலும் தயங்காமல் அழைக்குமாறு கூறி சென்றான். அன்று முதல் கதிருக்கும் எழிலுக்கும் நல்ல பந்தம் உருவாகியது..,

அலர்விழி மூலம் மருத்துவர் கூறியதை அறிந்தவர் அதன்பின் பிள்ளை கண்முன் நலமாய் இருந்தால் போதும் என்று நாதனும் அவனை தடுப்பதில்லை. இதனால் அலைபேசியில் இருவரும் தொடர்பில் இருந்தனர்.

கதிர் எழிலிடம் செல்லவும் செண்பகம் வந்து மற்றவர்களை வரவேற்று அழைத்து சென்றாள்.

அலர்விழியோ வளர்மதியிடம், "அம்மா நான் தாமரை கூட இருக்கேன்" என்று மணமகள் அறை நோக்கி சென்றாள். முதல் முறை புடவை கட்டியிருந்ததால் நடக்க முடியாமல் அவதி பட்டவள் முன் கொசுவத்தை லேசாக தூக்கி பிடித்தவாறு சென்று கொண்டிருந்தாள். எண்ணம் முழுதும் எழிலை சுற்றியே இருக்க.. ஒரு கட்டத்தில் தரையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் கால் இடறி கீழே விழ இருந்தவளை.., வலிய கரம் ஒன்று பற்றி நிலை நிறுத்தியது.

**

ஒரு கணம் மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் நிமிர்ந்து பார்க்க.. அங்கு புன்னகை முகமாய் பெற்றோருடன் திருமணத்திற்கு வந்திருந்த சரண் அவளின் முழங்கையை பற்றி அலரை நிலைப்படுத்தினான்.

"ஹுப்ஸ்.., நீங்கதானா மாமா..!" தேங்க்ஸ்.. என்று பற்களை காட்ட அவள் காதை பிடித்து திருகியவன்

"என்ன நீங்கதானா..? இந்நேரம் பிடிக்கலைன்னா விழுந்து வாரியிருப்ப.." என்றவன் தொடர்ந்து

"அப்புறம் இப்போ காட்டுற பாத்தியா இந்த முப்பத்திரண்டும் கொட்டி போய் இருக்கும்.. அதுக்கப்புறம் என் அக்கா மகளுக்கு நான் எங்கன்னு போய் மாப்பிள்ளை தேட..?" என்றான்.

"ஆஆஆ.. வலிக்குது விடுங்க மாமா" என்றவள் இடுப்பில் கை வைத்து முறைத்து,

இதுதான் பர்ஸ்ட் தடவை மாமா.. புடவை கட்டுறது. உங்க அக்கா தான்.. நான் எவ்ளோ கெஞ்சியும் கேட்காமல்.., "பெண்ணா லட்சணமாய் புடவை கட்டுன்னு கட்டிவிட்டாங்க" என்றவளை

"ரொம்ப அழகா இருக்கடா ராசாத்தி" என்று நெட்டி முறித்து கலைவாணி அணைத்துக்கொள்ள,

'எப்படி இருக்கீங்க பாட்டி..? நீங்க தாத்தா..??' என்றவள் சரணிடமும் சில நிமிடங்கள் செலவிட்ட பின்னே தாமரையின் அறையினுள் நுழைந்தாள்.

வளர்மதியை தேடி சென்ற சிதம்பரம், கலைவாணி அவர்கள் அருகே அமரவும்.. சரண் வளரிடம், "கதிர் எங்கக்கா..?" என்றான்.

வளர்மதி அவன் எழிலுடன் சென்றிருப்பதை கூறவும் இதோ வரேன்க்கா.. என்று அவர்களை நோக்கி சென்றான்.

ஐயரிடம் பூமாலையை கொடுத்து அவர் கேட்ட மற்ற பொருட்களை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான் எழில்.

"அண்ணா" என்று அழைப்பில் திரும்பியவன்.., அங்கே சரண் நிற்க கண்டவன்.. இவன் எங்கே நம்மிடம்..? என்பதாய் நெற்றி சுருக்கி,

என்ன..? என்பதாய் புருவம் உயர்த்தினான்.

அலர்விழியுடனான இவன் சம்பாஷணைகளை தூரத்தில் இருந்து கண்டவன் சரணிடம் அமைதியாய் நிற்பதை எண்ணி அவனுக்கே ஆச்சரியம். அதை புறம் தள்ளி, அவன் பேச்சிற்கு செவி மடுக்க துவங்கினான்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, நீங்க இல்லைன்னா..! இதோ இவன் இல்லை" என்றவாறு கதிரை இறுக அணைத்தவன்.., உங்களை நேரில் பார்த்து நன்றி சொல்லணும்னு காத்திருந்தேன். ஆனால் அது இன்னைக்குத்தான் அமைஞ்சிருக்கு என்றான்.

நன்றி சொல்லி ஆச்சில்லை வேறு என்ன என்பதாய் இருந்த அவன் பார்வையை உணர்ந்த சரண், "சரி நீங்க வேலையாய் இருக்கீங்க.. நான் அப்புறம் வரேன்ண்ணா" என்றவாறு கதிரை அழைத்துக்கொண்டு சென்றான்.

இங்கு தாமரையின் அறையினுள் அலர்விழி நுழையவும் அப்போதுதான் அழகு நிலைய பெண் தாமரையை தயார் செய்து முடித்திருக்க, இவள் நுழையவும்.., நான் கிளம்புறேன் மேடம் என்று வெளியேறினாள். அவரிடம் "சரி" என்று தலை அசைத்தவள்.. "வாடி" என்று அலரை அனைத்து வரவேற்ற தாமரை தன்னருகே அமர்த்தினாள்.

"வாவ்..! செமயா இருக்கடி.. உன்னை பார்த்ததும் எங்க அண்ணண் மொத்தமா பிளாட் ஆகிடுவாரு" என்றாள்.

" நீ வேற உங்க அண்ணன் மொத்தமா விழுந்து பல வருசமாச்சு.. ஊர்ல இல்லாததால உனக்குத்தான் தெரியலை" என்றாள்.

"என்னடி சொல்ற.." என்றவளிடம் "பின்ன என்னடி நான் காலேஜ் போற வர வழியிலையும் எங்க தெருவிலையும் அவர் வடிச்ச ஜொல்லுல பல வீடுகளும், ஆடு, மாடுகளும் அடிச்சிட்டு போய்டுச்சின்னா பாரேன்" என்று கண்சிமிட்டினாள்.

"அடிப்பாவி.. என்னடி இப்படி சொல்ற..!" என்றாள், அலர்.

"வேற எப்படி சொல்ல சொல்ற..!" என்று உதட்டை சுழித்த தாமரையிடம் "அப்போ அண்ணா உன்னை லவ் பண்றது, உனக்கு முன்னாடியே தெரியுமா..? ஏன்டி என்கிட்டே இருந்து மறைச்ச என்று அலர் கோபிக்க..,


"உங்க நொண்ணன் என்கிட்ட வந்து லவ் சொல்லாதப்போ.. நான் எப்படி உன்கிட்ட சொல்றது" என்றாள் தாமரை.

என்னடி குழப்புற என்றவளிடம் "ஆமா என்கிட்ட சொல்லாம நேரா அத்தை மாமாவை கூட்டிட்டு வந்து பொண்ணு கேட்டார். எல்லாரும் சம்மதிக்க அப்புறம் தான் என்கிட்ட விஷயத்தை சொன்னாரு" என்றாள்.

அவர் சொன்னாரு சரி..! ஆனா உனக்கு அண்ணனை பிடிச்சிருக்கா..? இல்லையா..? என்றாள்.

தோழியின் கேள்வியில் முகம் சிவக்க அதை மறைத்தவண்ணம், "முதல்ல இல்லைடி, ஆனா பைனல் இயர் அப்போ எங்களோட காலேஜ் பொண்ணுக்கு ஒரு பையன் வழியில ரொம்ப பிரச்சனை கொடுத்துட்டு இருந்தான். இதை பார்த்தவரு அவனை கூப்புட்டு என்ன சொன்னாருன்னு தெரியாது ஆனா அதுக்கு அப்புறம் அவ பின்னாடி அந்த பையன் வரதில்லை. அதுல இருந்து எனக்கும் ஒருமாதிரி பிடிச்சிதான் இருந்தது" என்றாள்.

"நீ ரொம்பவே லக்கி தான்டி" என்று அவளை கட்டிக்கொள்ளவும்.., "முகூர்த்த நேரம் நெருங்க ஒருமாதிரி படபடன்னு இருக்குடி" என்றாள் தாமரை.

அதுக்குதான் இன்னும் அரை மணி நேரம் இருக்கே.. இந்தா மொதல்ல தண்ணி குடி கொஞ்சம் குறையும் என்றாள்.

அப்போது அங்கு வந்த தாமரையின் அன்னை.. அவள் தாய்மாமனிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று அவளை அழைக்க.., "இதோ வரேன்மா.." என்று எழுந்தவள், இங்கயே இருடி..! வந்துடறேன்.. என்று அன்னையுடன் சென்றாள்.

தாமரை செல்லவும் மெல்ல அறையை பார்வையிட்டவாறு கட்டில் மீது இருந்த பொருட்களை ஒதுக்கி வைத்து கொண்டிருந்தவள் கதவு தட்டப்படும் ஓசையில் சென்று திறந்தாள். அங்கு நின்றிருந்த எழில் இவளை எதிர்பாராததால் ஒரு நொடி நிதானித்து, பின் முகம் இறுக.. பார்வையை அறையினுள் சுழல விட்டு.., தாமரை எங்கே..? என்று கேட்டான்.

அலரோ அவன் அறையை கண்களால் அளப்பதை கண்டவள் தோள்களை குலுக்கியவாறு கண்ணாடியின் முன் சென்று தலை அலங்காரத்தை திருத்த ஆரம்பித்தாள்.

அகனெழிலனோ அறை வாயிலிலேயே நின்ற வண்ணம் கடிகாரத்தை பார்த்தவாறு "தாமரை எங்கே..?" என்றான் அவசர குரலில். அலரோ அவன் கேள்வியை காதில் வாங்காதவளாய் கண்ணாடியிலேயே முகத்தை புதைத்து கொள்பவள் போல் செவ்வனே தன் பணியை தொடர்ந்துகொண்டிருந்தாள்.

அவளின் அலட்சியத்தில் ரத்த அழுத்தம் உயர.. நேரமாவதை உணர்ந்தவன் அறையினுள் சென்று அங்கிருந்த அலமாரியில் எதையோ தேடி.. அது கிடைக்காமல், பின் அவளிடம் சென்று கண்ணாடியில் அவள் முகத்தை அழுத்தமாய் பார்த்தவண்ணம், "தாமரை எங்கே..?" என்றான்.

கண்ணாடியில் அவன் முகம் கண்டவள் அவன் கடுமையான குரலில் ஒரு நொடி அதிர்ந்தாலும்.. அதை அவனிடம் வெளிப்படுத்தாமல் சாதாரண குரலில்

"என்னையா கேட்டிங்க..?" என்றவாறு அவள் திரும்ப..,

அருகே கண்ட அவள் வதனத்திலும் கயல் விழிகளிலும் தன்னை தொலைக்க இருந்தவன்.. நொடியில் சுதாரித்து மெல்ல இரண்டடி பின் வைத்து பார்வையை அவளிடம் இருந்து திருப்பியவாறே "ஆம்" என்பதாய் தலை ஆட்டினான்.

"அவள்.. என்று அலர் ஆரம்பிக்கவும் அறையினுள் நுழைந்த தாமரையை கண்டவன் அவளிடம் விரைந்து "செல்வி, சித்தப்பா வீட்டு சாவி கேட்டாரு.. எங்கே வச்சிருக்க.. உடனே கொடு" என்றான். அவன் குரலில் இருந்த அவசரத்தை புரிந்து கொண்டவள் தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து கொடுத்தாள்.

வாங்கியவன், துரிதமாய் வெளியேற.. அலரை நெருங்கியவள், "என்னடி ஏதாவது தொந்தரவு கொடுத்தானா..?" எனவும்

'இல்லைடி சாவி கேட்டாரு.. தேடி பார்த்தேன் கிடைக்கலை' என்றாள்.

தாயம்மாள் மற்றும் நீலாவின் மேற்பார்வையில் மேடையில் அணைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்க.., சரசு மேடையின் ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் நாத்தனாராய் தன் கொடியை உயரே பறக்கவிட்டு கொண்டிருந்தாள். நீலாவோ அதை பொருட்படுத்தாது செண்பகத்தையும் அதை பெரிது படுத்தாமல் வேலையை பார் என்று கூறி முகூர்த்த வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

சுடரின் மகன் வந்து அழைக்கவும் தான் கீழே இறங்கி சென்றாள் சரசு.

முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிற்று என்று தாமரையை அழைக்க பெண்கள் வரவும்.., தாமரையோடு மேடைக்கு சென்றாள் அலர்விழி.

அங்கு அமர்ந்திருந்த வெற்றி தாமரை வருவதை கண்டு ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரிக்காமல் வாய்க்குள் ஈ நுழைவது கூட தெரியாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

இதை கண்ட எழில், "மச்சான் மானத்தை வாங்காதடா.. கொஞ்சம் இங்கே பாரு" என்றவாறு அவன் கையில் இருந்ததை ஓமகுண்டத்தில் போட வைத்தான்.

தாமரையை வெற்றியின் அருகே அமரவைத்த அலர்விழி அவள் பின்னால் நின்று அனைத்து சம்பிரதாயங்களையும் பார்வையிட்டு கொண்டிருந்தாலும் பட்டுவேட்டி சட்டையில் ஆண்மை மிளிர இன்முகமாய் நின்று கொண்டிருந்த எழிலின் மீது சில நொடிகள் அவளையும் அறியாமல் பார்வை படிந்து மீண்டது.

இதை எழில் கவனிக்கவில்லை என்றாலும் முன் வரிசையில் அமர்ந்திருந்த சரசுவின் பார்வையில் சிக்கியது.

"இப்படி பார்வையாலயே தான் அவனை வசியம் பண்ணி வைச்சிருக்கா போல..!! அதான் இவனும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாட்டம் அவளை தவிர வேற ஒருத்தி பக்கம் திரும்ப கூட மாட்டேங்குறான்.., இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு காட்டுறேன்" என்று மனதினுள் சூளுரைத்தவள் மேடைக்கு செல்லலாம் என்று எழவும்..,

மடியில் அமர்ந்திருந்த சர்வேஷ் 'எங்க போற பாட்டி இங்கயே இரு' என்றான்.

அருகே அமர்ந்திருந்த சுடர்கொடியின் மாமியாரும், 'ஆமா சம்பந்தி இருங்க' எனவும் பல்லை கடித்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.

நாதனின் குடும்பம் மண்டபத்தினுள் வந்தவுடன், சுடர்கொடியிடம் அதை தெரிவித்த எழிலன் அவர்களுக்கு சரசுவால் எந்த வித தலைகுனிவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று உறுதியாய் தெரிவித்தவன் அவன் பேசினால் அது சரசுவிற்கு கொம்பு சீவியது போலாகிவிடும் என்பதால் அந்த பொறுப்பை சுடரிடம் கொடுத்துவிட்டான்.

"எப்படி அன்னையை அவர்களை நெருங்க விடாமல் இருப்பது என்று சில நிமிடங்கள் யோசித்த சுடர்க்கொடி.., தன் மாமியாரை அன்னையின் அருகே அமர்த்தி, தன் மகனையும் சரசுவின் மடியில் அமர்த்திவிட்டாள். தற்போது சரசுவின் கரங்கள் ( வாய் )கட்டப்பட்ட நிலை.

திருமாங்கல்யத்தை பெரியோரிடம் ஆசீர்வாதம் பெற்று வரச்சொல்லி நீலா தாம்பாளத்தை அலர்விழியிடம் நீட்ட.. அதை பெற்றுக்கொண்டவள் கீழே செல்ல அவளை தடுத்த சுடர்க்கொடி 'கொடு அமுலு' என்று தான் கொண்டு சென்றாள்.

அலர் ஒன்றும் புரியாமல் அவளை பின் தொடர சரசுவிடம் இவளை செல்ல விடாமல் தடுத்து.. இரு வரிசைகளை தாண்டியதும் அவளிடம் தாம்பாளத்தை கொடுத்தவள், "இப்போ எடுத்துட்டு போ.." என்றாள்.

அனைவரிடமும் ஆசி பெற்ற பின் மேடையில் இருந்தவர்களிடம் கொண்டு செல்ல எழில் பார்வை முழுவதையும் தட்டில் பதித்து கண்களில் ஒற்றிக்கொண்டான்.

மங்கள வாத்தியங்கள் முழங்க குறித்த நேரத்தில் பெரியோரின் ஆசியோடு மங்கலநாணை அணிவித்து வெற்றி தாமரையை தன் சரி பாதியாய் ஏற்றுக்கொண்டான்.

*

திருமணம் முடிந்து மணமக்கள் பெற்றோர் பெரியவர்களிடம் ஆசி பெற.., அதன் பின் தாமரை அலர்விழியை தன்னோடே நிறுத்திக்கொண்டாள்.

வெற்றியும் எழிலை உடனிருக்க செய்ய, "டேய் வேலை இருக்குடா.. நீ என்ன பொண்ணா உனக்கு துணை இருக்க.." என்றவனிடம்..,

'என் இடத்துல இருந்து பாரு மச்சான் அப்போ புரியும்.. தூரத்துல இருந்தப்போ தைரியமா இருந்தது.., பக்கத்துல பார்த்தா அதுவும் அவ முட்ட கண்ணை பார்த்தா கொஞ்சம் உதறுதுடா..' என்றான் வெற்றி.

அவன் பேச்சில் புன்னகை எழ கண்களும் சேர்ந்து சிரித்தது அகனெழிலனுக்கு.

தாமரையின் பூவை சரி செய்ய அவள் புறம் திரும்பிய அலரின் கண்ணில் அவன் புன்னகை முகம் பட.. அவன் கண்களின் காந்த விசைக்கு கட்டுப்பட்டவள் போல் விழி அகலாது மெய் மறந்து எழிலை ரசித்தவண்ணம் நின்றுவிட்டாள்.

"இன்னும் என்னடி பண்ற கழுத்து வலிக்குது சீக்கிரம் சரி பண்ணு..." என்று தாமரை அழைக்கவும் தான் நினைவுலகிற்கு வந்தாள்.

"ச்சே என்னதிது..! என்ன பண்ணிட்டு இருக்க நீ..? என்று தன்னை தானே திட்டிகொண்டவள்.., வேண்டாம்ன்னு சொல்லிட்ட தானே அப்புறம் என்ன பார்வை.. இனி மறந்தும் அந்த பக்கம் திரும்பக்கூடாது" என்று தன் மனதிற்கு கடிவாளமிட்டாள் ஆனால் அதுவோ திமிறிக்கொண்டு அவ்வப்போது அகனெழிலன் புறம் வட்டமடிக்க தான் செய்தது.

திருமணம் முடியவும் பாலன் அவசர வேலையாக கிளம்ப சுடர்கொடியும் அவள் குடும்பத்தினருடன் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றாள்.

பேரனின் திருமணத்தில் ஒன்று கூடியிருந்த தன் அனைத்து பிள்ளைகளையும் அவர்கள் குடும்பத்தையும் நெஞ்சம் முழுக்க நிரப்பி கொண்ட தாயம்மாள், அனைத்து சம்பிரதாயங்களும் முடிய மணமக்களோடு தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்குள் இருந்த தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.

"ஆம் !! ராஜன் என்று வீடு தேடி வந்து தம் தவறுகளை உணர்ந்து சொந்தம் பெருசு, அனைவரும் எனக்கு வேண்டும் என்றாரோ அன்றே கண்கள் பணிக்க தம் குலதெய்வத்தை மனதார வணங்கிய தாயம்மாள் அனைவரின் இணைப்பிற்கும் காரணமான இத்திருமணம் முடிந்ததும் தம் மக்கள் அனைவருடனும் வந்து பாலபிஷேகம் செய்வதாய் வேண்டிக்கொண்டார்" அதை நிறைவேற்றவே அனைவருடன் சென்றுகொண்டிருக்கிறார்.

மணமக்களை அழைத்துக்கொண்டு பெரியவர்கள் எல்லாம் முன்னே செல்ல அடுத்த தலைமுறையோ அரட்டை அடித்தவாறு பின்னே சென்றுகொண்டிருந்தது. அதிலும் அலர்விழி அணிந்திருந்த புடவை சற்று விலகி இருக்க அதை சரி செய்ய வெற்றியின் தங்கையோடு பின்தங்கி விட்டாள்.

கையில் இருந்த அலைபேசி ஒலிக்க எடுத்து பார்த்தவள், அன்னை அழைக்கவும் ஏற்று சொல்லுங்கம்மா என்றாள்.

"ஹ்ம்ம் இதோ வரேன்" என்றவள் வேக எட்டுக்கள் வைத்து செல்ல வழியில இருந்த சிறு படியை கவனிக்காமல் செல்லவும்.., அதில் கால் இடறி கிழே விழ இருந்தவள் அவசரமாய் அருகே இருந்தவரை பற்றி நிலை நிறுத்திக்கொள்ள முனைந்தாள்.

"ஏய் அலர் பார்த்து.." என்று வெற்றியின் தங்கை ரேவதியின் குரலில் எழிலன் திரும்ப.. அவள் திடீரென தன்னை பற்றவும் அதில் நிலைகுலைந்து கீழே விழுந்தவனின் மேல் அலர்விழி விழுந்திருந்தாள்.

விழுந்த வேகத்தில் அவன் நெற்றியில் வேகமாய் மோதியவள் நெற்றியை தேய்த்துக்கொண்டே "சாரி.. சாரி.." என்று அவன் முகம் பார்க்க அங்கு அகனெழிலனோ "பார்த்து வர தெரியாதா..?" என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளை துப்பியவன் பார்வையால் அவளை கூறுபோட்ட வண்ணம் விலகி எழ முயன்று கொண்டிருந்தான்.


அவள் பின்னே வந்த ரேவதி "மெதுவா போறதுடி.." என்றபடி அவளை எழுப்ப கரம் நீட்டும் முன்.. வேகமாய் ஒரு கரம் அலரை தூக்கி நிறுத்தி, அதே வேகத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தது.
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top