FIRST LOVE LETTER

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முதல் காதல் கடிதம்

பிறந்தது முதல் கண்ணனின் லீலைகளையும் குணங்களையும் கேட்டு கேட்டு அவன் பால் காதல் வயப்பட்டாள் விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணி.

அவ்வாறிருக்க அவளை சேதி நாட்டரசன் சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்தான் அவளது அண்ணன் ருக்மி என்பவன்.
தந்தையான பீஷ்மகர் மகனின் அதிகாரத்தை அடக்க இயலாமல் சிசுபாலனுக்கும் ருக்மிணிக்கும் திருமண ஏற்பாடுகள் செய்தார்.

அப்போது எதேச்சையாக உஞ்சவ்ருத்தி எடுத்துக் கொண்டு வந்த சாது ஒருவர் ருக்மிணியிடம் கண்ணனுக்காக ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தால் கடிதில் கொண்டு சேர்ப்பேன் என்று கூறினார்.

திசையறியாமல் திகைத்த ருக்மிணிக்கு கலங்கரை விளக்கமாய்த் தெரிந்தார் அவர்.
கண்ணனைக் கண்ணால் பார்க்காமலே ருக்மிணி அவனுக்கு எழுதிய கடிதம்.

உலகின் முதல் காதல் கடிதம் இதுவாக இருக்கலாம்.

தூது வந்த சாதுவிமிருந்து கடிதத்தைக் கைகளில் வாங்கவில்லை கேசவன்.
ஐயன்மீர்! எனக்கென்று ரகசியங்கள் ஏதுமில்லை.
இக்கடிதத்தை தாங்களே‌ படியுங்கள் என்றான்.

தன்னை விரும்பும் பெண் கொடுத்த கடிதத்தை இன்னொருவரை விட்டுப் படிக்கச் சொல்வதா?
என்ன இது? என்று தோன்றுகிறதா?

கண்ணனே உலகின் தந்தை.
ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மியே ருக்மிணியாக அவதாரம் செய்திருக்கிறாள்.

ஜகன்மாதாவிற்கும் ஜகத்பிதாவிற்குமான சம்பாஷணைகள் அனைத்தும் உலகின் நன்மைக்காகவே.
ருக்மிணி தேவி தன் குழந்தைகளை முன்னிட்டுக்கொண்டு தான் சரணாகதி செய்கிறாள்.
ஒவ்வொரு ஜீவனின் சார்பாகவும் உன்னைச் சரணடைகிறேன் என்று நமக்கும் சரணாகதியை சொல்லித் தருகிறாள்.

சுற்றியிருக்கும் அனைவரும் எதிரிகள்.
அசந்தால் சிசுபாலனுடன் திருமணம் நடந்து விடும்.
உதவுவார் எவருமின்றி நிற்கும்போது அபலையாகத் தவிக்கும்போது தேடி வந்தவரை குருவாக வணங்கி சரணாகதி செய்கிறாள்.

ஜீவன் செய்யும் சரணாகதியை அப்படியே கொண்டுபோய் இறைவனிடம் சேர்த்து, இறைவனையும்‌ ஜீவனையும் இணைத்து வைப்பதே குருவின் தலையாய பணி.
சூழ்நிலை பற்றிக் கவலை கொள்ளாமல், பயப்படாமல் இறைவனின் சரணத்தை நம்பினால் குருவின் மூலமாக இறைவன் நல்வழி காட்டுவான் என்பதே சாரம்.

இப்போது மூன்றாவது நபராக இல்லாமல் ருக்மிணியின் 'பா'வத்திலேயே கடிதத்தைப் படிக்கிறார் சாது.

ஏழு ஸ்லோகங்கள்‌ கொண்டது இக்கடிதம்.
திருமணத்தில் ஸப்தபதி என்பது மிகவும் முக்கியமானது.
அதைப் போல் இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இந்த ஏழு ஸ்லோகங்கள் முக்கியமானவை.

ஒருவருடன் ஏழு ஒன்றாக நடந்தால் அவருடன் நம் வாழ்வு எவ்விதத்திலேனும் பிணைக்கப்படுகிறது‌.
அதனாலேயே சாதுக்கள் நடக்கும்போது கூடவே அவரது சீடர்கள் நடந்து செல்வதைப் பார்க்கிறோம்.
இந்த ஏழு அடிகள் கொண்ட ஸ்லோகத்தினால் ஜீவனின் வாழ்வு பகவானுடன் பிணைக்கப்படும்.

#ருக்மிணி_பத்ரிகா
#ஸ்ரீமத்_பாகவதம்

1. ச்ருத்வா கு3ணான் பு4வனஸுந்தரா ச்ருண்வதாம் தே
நிர்விச்ய கர்ண விவரைர் ஹரதோங்க3 தாபம்‌|
ரூபம்‌த்ருஶாம் த்ருஶிமதாம் அகிலார்த2 லாப4ம்
த்வய்யச்சுதாவிஶதி சித்தமபத்ரபம் மே||

புவனசுந்தரா! என்று அழைக்கிறாள் தாயார்.
புவனம் அனைத்திலும் அழகனே! பார்க்காமலே எப்படி அழகன் என்று சொல்லுவாள்.
கண்ணில் இதுவரை கண்டே அறியாத ஒரு ஆடவனுக்கு கடிதம் எழுதுகிறேன் என்று தவறாக எண்ணாதே.

உன் கல்யாண குணங்களையும் எண்ணற்ற லீலைகளையும் சாதுக்கள்‌ மூலம் தினம் தினம் கேட்டு கேட்டு உன் திருவுருவம் என் இதயத்தில் பதிந்து விட்டது.

சாது ரக்ஷகனாக விளங்குபவர்களின் ஹ்ருதயம் அழகாகத்தான் இருக்கும்.

உள்ளம் அழகியவர்களின் முகம்
அழகிற்சிறந்த முகமாம்.

மேலும் ச்ரவண பக்தியையே தாயார் சிறப்பித்துக் கூறுகிறாள்.
பக்த சக்ரவர்த்தியான ப்ரஹலாதன் நவ வித பக்தி சாதனங்களைக் கூறுங்கால்

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

என்கிறான்.
முதல் படி ச்ரவண பக்தி.
அதாவது இறைவனின் புகழை, லீலைகளை, குணங்களைக் கேட்பது.
காது வழியாகத்தான் இறைவன் இதயம் நுழைகிறான்.
ஒவ்வொரு புலனுக்கும் மூடி இருக்கிறது.
கண், வாக்கு, நாக்கு, இவைகளை மூடிக் கொள்ளலாம்.
ஆனால், காது?
எப்படியாவது தற்செயலாகவாவது ஒருவனின் காது வழியாக இறை நாமம் புகுந்துவிட்டதென்றால் அது நெஞ்சில் படிந்த நெருப்பாக அவனது அத்தனை பாவங்களையும் பொசுக்கவல்லது.
ஜீவனின் மேலுள்ள அளவற்ற கருணையினாலேயே காதுகளுக்கு மூடி வைக்கவில்லை இறைவன்.

2. காத்வா முகுந்த3 மஹதீம் குலசீலரூப
வித்3யாவயோத்3ரவிணதா4மபி4ராத்மதுல்யம் |
தீ4ரா பதிம் குலவதீ ந வ்ருணீத கன்யா
காலே‌ ந்ருஸிம்ஹ நரலோகமனோபி4ராமம் ||

தங்கள் குண வைபவங்களைக் கேட்டு தங்களையே வரித்தேன். என்று என்னைத் தவறாக எண்ண வேண்டாம்.
ஏனெனில் அது என் குற்றமல்ல.

மனித குல திலகமே!
அனைத்து ஜீவராசிகளும் தங்களைக் கண்டதும் மகிழ்ச்சி கொள்கின்றன.
மன நிம்மதி பெறுகின்றன.
நல்லொழுக்கம், அழகு, வித்யை, செல்வம், பெருமை, கருணை, பௌருஷம், வீரம், நல்ல குலப்பிறப்பு ஆகிய அனைத்திலும் இணையற்ற விளங்கும் உங்களை திருமணப் பருவத்திலிருக்கும்‌ எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்?

3. தன்மே ப4வான் க2லு வ்ருத: பதிரங்க3 ஜாயாம்
ஆத்மார்பிதஶ்ச ப4வதோத்ர விபோ4 விதே4ஹி|
மா வீரபா4க3மபி4மர்ஶது சைத்3ய ஆராத்3
கோ3மாயுவன்ம்ருக3பதேர்ப3லிம் அம்பு3ஜாக்ஷ||

என் ஆன்மாவும் உடலும் இனி தங்களுக்கே சொந்தம்
ஐயனே!
தாங்கள் இங்கு வந்து என்னைத் தங்கள் மனைவியாக ஏற்க வேண்டும்.
சிங்கத்தின் இரையை சிறு நரி தீண்டுவதா?
வீரரான தம்மைச் சரணடைந்த என்னை சிசுபாலன் நெருங்கலாகுமா?
இதென்ன நீதி?

கண்ணன் உடனே கிளம்பி வர வேண்டும் என்பதால் கொஞ்சம் உசுப்பேற்றி விடுகிறாள்.

4. பூர்தேஷ்டத3த்த நியம வ்ரத தே3வ விப்ர
கு3ர்வர்ச்சனாதி3பி4ரலம் ப4கவான் பரேஶ: |
ஆராதி3தோ யதி3 கதா3க்3ரஜ ஏத்ய பாணிம்
க்3ருஹ்ணாது மே ந த3மகோ4ஷ ஸுதாத3யோன்யே ||

நான் எனது கர்மாக்கள், தானங்கள், ஸாது சேவை, புண்ய நதிகளில் நீராடுதல், நியமங்கள், தேவர்கள், அந்தணர்கள், ஆசார்யர்கள், எளியோர், முதியவர்கள்‌ ஆகியவர்களுக்கான பணிவிடைகள், கோவில் கட்டுட்கல், குளம் வெட்டுதல், முதலியவற்றை தவறாமல் செய்து வந்திருக்கிறேன்‌.
நான் செய்த நற்செயல்கள் அனைத்தும் பலனளிக்கும் வகையில் தாங்கள் இங்கு வந்து என் கைப்பற்ற வேண்டும்.
வேறெவரும் என்னைத் தீண்டலாகாது.

5. ஶ்வோபா4விநி த்வமஜிதோத்3வஹனே வித3ர்பா4ன்
கு3ப்த: ஸமேத்ய ப்ருதனாபதிபி4: பரீத: |
நிர்மத்2ய சைத்3யமக3தே4ந்த்ரப3ல3ம் ப்ரஸஹ்ய
மாம் ராக்ஷஸேன விதி4நோத்3வஹ வீர்யசுல்காம் ||

எவராலும் ஜெயிக்க முடியாதவரே!
நம் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பே நீங்கள் ரகசியமாகப் படை திரட்டிக் கொண்டு வர வேண்டும்.
சிசுபாலன், ஜராசந்தன் ஆகியோரின் படைகளை கதி கலங்கச் செய்து வீரத்தைக் காட்டி, ராக்ஷஸ விவாஹ முறைப்படி பகிரங்கமாகக் கவர்ந்து செல்ல வேண்டும்.
நானும் வீர குலத்தில் பிறந்த நங்கை என்பதால் எவருமறியாமல் ரகசியமாக நமது திருமணம் நடக்க வேண்டாம்.
(எண் வகைத் திருமண முறைகளில் ராக்ஷஸ விவாஹ முறை க்ஷத்ரியர்களுக்கு உரியதாகும்.)

6. அந்த:புராந்தரசரீம் அநிஹத்ய ப3ந்தூ4ன்
ஸ்த்வாமுத்3வஹே கத2மிதி ப்ரவதாம்யுபாயம் |
பூர்வேத்3யுரஸ்தி மஹதீ குலதே3வியாத்ரா
யஸ்யாம் ப3ஹிர்நவவதூ4ர் கிரிஜாம் உபேயாத்||

நம் திருமண தினத்தன்று என் உறவினர்களைக் கொல்ல வேண்டாம்.
அவர்கள் நம் எதிரிகள் அல்லர்
அதைத் தவிர்க்க நான் குல தெய்வமான கௌரியைப் பூஜை செய்ய கோவிலுக்கு வருவேன்.
அப்போது நீங்கள் என்னை எடுத்துச் செல்லலாம்.
(கண்ணன் வந்தாக வேண்டும் என்பதை பல விதமாக உறுதிப்‌படுத்துகிறாள்)

7. யஸ்யாங்க்4ரி பங்கஜரஜ:ஸ்நபனம் மஹாந்தோ
வாஞ்ச2த்யுமாபதிரிவாத்ம தமோபஹத்யை |
யர்ஹ்யம்பு3ஜாக்ஷ ந லபே4ய ப4வத்ப்ரஸாத3ம் |
ஜஹ்யாமஸூன் வ்ரத க்ருஶாஞ்ச2த ஜன்மபி:4 ஸ்யாத்||

தாமரைக் கண்ணனே!
பதினான்கு லோகங்களில் உள்ள தேவர்களும் தங்கள் திருவடித் துகளை சிரசில் தரிக்கின்றனர்.
அப்படிப்பட்ட உமது அருள் எனக்குக் கிடைக்காவிடில் வ்ரதங்களால் என்னை வருத்திக் கொண்டு உயிரை விடுவேனேயன்றி வேறெவரையும் மணக்க மாட்டேன்.
ஒருக்கால் உம்மை மணக்க எனக்குத் தகுதி இல்லையென்று தாங்கள் எண்ணினால், நூறு ஜென்மங்களானாலும் உமது அருளையே வேண்டுவேன்.

இறைவனிடம் எப்படி ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்று அன்னை சொல்லித் தருகிறாள்.
தம் தாய் தந்தையிடம்‌ அடம் பிடிக்கும் குழந்தையைப் போல பிரார்த்தனை செய்ய வேண்டும்.‌
இதைச் செய்கிறேன் அதன் பலனாக என் விருப்பத்தை நிறைவேற்று என்று கேட்கலாம்.‌
ஆனால் அது பூரண சரணாகதி ஆகாது.
செய்த செயலுக்குப் பயனாய் ப்ரார்த்தனையை வைப்பதைக் காட்டிலும் உன்னை விட்டால் வேறு கதியில்லை.
எனக்கு நீ அருள் செய்தே ஆக வேண்டும் என்று கேட்பது நிபந்தனையற்ற சரணாகதி.

எல்லா விதமாகவும் தன்னை ஏற்கும்படி வேண்டினாள்.
பின்னர் தன்னை அழைத்துப் போகும் உபாயத்தையும்‌ கூறினாள்.
முன்பின் தெரியாத பெண் யாரையோ திருமணம் செய்து கொள்ளட்டும் என்று எண்ணி விட்டால்?
அதற்காக எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீதான் கதி.
உன்னையே அடைவேன் என்று வலியுறுத்துகிறாள்.

இவ்வளவு சொன்ன பிறகும் பேசாமல் இருப்பானா கண்ணன்?
உடனேயே சாதுவுடன் கிளம்பி விதர்ப்ப தேசத்தை அடைந்தான்.
காதலியின் சொற்களை கடுகளவும் தட்டாமல் கோவிலுக்கு வந்தவளைக் கவர்ந்து வந்தான்.
எதிர்த்த அரசர்கள் அனைவரையும் சிதறி ஓடச் செய்தான்.
துவாரகை வந்ததும் தாயிடத்தில் அவளை ஒப்படைத்தான்.
நல்லதொரு திருநாளில் உலகோர் போற்ற மிக விமரிசையாக கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் திருமணம் நடந்தேறியது.

இதைப் படிப்பவர் அனைவர்க்கும் மஹாலக்ஷ்மியான ருக்மிணியின் அருளால் எல்லா‌ நன்மைகளும் உண்டாகும்.

திருமணமாகாதவர்க்கு விரைவில் கல்யாண மாலை தேடி வரும்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இடையே சில வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.... அருமையான பகிர்வு....
இடையில் உள்ளவை ஸ்லோகம்
சமஸ்கிருதத்தில் இருக்கும்
நமக்கு புரியாதுப்பா
நாம் ஸ்லோகம் மட்டும் சொல்லுவோம்
பலனை கிருஷ்ணர் தருவார்
 

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
இடையில் உள்ளவை ஸ்லோகம்
சமஸ்கிருதத்தில் இருக்கும்
நமக்கு புரியாதுப்பா
நாம் ஸ்லோகம் மட்டும் சொல்லுவோம்
பலனை கிருஷ்ணர் தருவார்
Arputham Banu dear..
 

banumathi jayaraman

Well-Known Member
இடையே சில வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.... அருமையான பகிர்வு....
Arputham Banu dear..
மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது படிக்க
நன்றி
சிறந்த இப்பதிவிற்கு நன்றி
அருமையான பதிவு
கிருஷ்ண லீலை கேட்க படிக்க இனிமை
படித்ததை பகிர்ந்தேன்
நன்றி அன்புத் தோழிகளே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top