வந்தேன் உனக்காக EP-3

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
முதல் நாள் கல்லூரி….

புதிய இடம், புதிய முகங்கள், பல ஆசைகளுடன் உள்ளே வரும், பல கனவுகளை கொண்ட பல்வகை மனங்கள்…. இதற்கிடையே பொழுதுபோக்கிற்காக வரும், திமிர் பிடித்த மாணவர்கள்...,

இவர்களை எல்லாம் சமாளித்து, பல சாதனைகளை செய்ய வேண்டுமென்ற லட்சியத்துடன், கல்லூரிக்குள் நுழைந்தாள் சனாயா.

ஆங்காங்கே ராகிங் நடந்து கொண்டிருப்பதை கண்டு, சற்று தயக்கத்துடன் தனது படிகளை எடுத்து வைத்தவள்,

ஒரு பெண், கூட்டமான மாணவர்கள் மத்தியில் அழுது கொண்டிருப்பதைக் கண்டதும்… தனது தயக்கத்தை எல்லாம் விடுத்து, அவளருகில் வேகமாக சென்றாள்.

அவள் வருகையை பார்த்த மாணவர்களுள் ஒருவன், "அவள் நம்மை நோக்கி வருகிறாளா!!!" என்றான்.

இன்னொருவன், "அவ்வளவு தைரியமா அந்த பெண்ணுக்கு, நமது வேலையை காட்டி விட வேண்டியது தான்", என்றான்.

அந்த கூட்டத்தின் தலைவனோ, "மிக அழகாக இருக்கிறாளே, வரட்டும்…. அவளைப் பற்றி தெரிந்து கொள்வோம் ", என்று அவளையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவர்கள் அருகில் வந்த சனாயா, "எப்படி இருக்கிறாய், வீட்டில் அனைவரும் நலமா.." என்று, அழுது கொண்டிருந்த பெண்ணை வினவினாள்.

இவர்கள் இருவரையும் கவனித்த கூட்டத்தின் தலைவன், "நடித்தது போதும், உன் பெயரென்ன", என்று வினவ,

சற்று தயங்கியவள், ஒருவாராக நிதானித்து... தைரியமாக பேசினாள், "ஆமாம் நடித்தேன், ஆனால் இப்படி ஒரு பெண்ணை இவ்வளவு பேர் சேர்ந்து அழ வைப்பது தவறென,
உங்களுக்குத் தெரியாதா", என்றாள் சனா கடும் சினத்தோடு.

"எனக்கு புத்தி புகட்ட நீ யார்", என அவன் முறைக்க,

இன்னொருவன் அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்து, "நீ போகலாம்" எனறான்.

அவளும் விட்டால் போதுமென ஓடி விட்டாள்.

தான் காப்பாற்ற வந்த பெண், தன்னை விட்டு செல்வதை பார்த்திருந்த சனாவிடம், அக்கூட்டத்தின் தலைவன் வினவினான்.

"உன் பெயர் என்னவென்று, நான் கேட்டது நினைவுள்ளதா" என…....

"அதை உங்களிடம் கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை"..... என்றாள்.

அப்போது அங்கு வந்த கார்த்திக், சனா மாணவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பிரபாவை இழுத்துக் கொண்டு, அக்கூட்டத்தின் தலைவனிடம் விரைந்தான்.

"இவள் எனது சொந்தம் டா மித்ரா, அதனால் இவளிடம் எதுவும் வேண்டாம்டா" என்ற கார்த்திக்கின் குரலில், தயக்கமும், பயமும் எட்டிப்பார்த்தது….

"சரிடா,.... உனக்காக விடுகிறேன்… ஆனால் என்னவோ தெரியவில்லை, இவளது திமிரும், அழகும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது... அதனால் இவளை அடிக்கடி சந்தித்து பேசுவேன். அதற்கெல்லாம் நீ தடை சொல்லக்கூடாது", என்று எச்சரிக்கும் வகையில் கூறிவிட்டு, அவள் புறம் திரும்பிய மித்ரன்,

அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு, "நீ போகலாம் கண்ணே", என்று நக்கலான சிரிப்புடன் கூறினான்.

'எவ்வளவு திமிர், இவ்வளவு ஆணவம் பிடித்த மாணவனை எப்படி இந்த கல்லூரியில் வைத்துள்ளனர்' என்று எரிச்சலுற்ற சனா, அவனிடம் மேலே பேச பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

"சனா… ஒரு நிமிடம் நான் சொல்வதை நன்றாகக் கேள்", என்றான் கார்த்திக்.

"என்ன அண்ணா" என சனாயா பார்க்க.

"மித்ரன் இந்த கல்லூரியிலேயே மிகப்பெரிய ஆசாமி… இங்குள்ள ப்ரொஃபஸர் முதல், வாட்ச்மேன் வரை, அனைவரும் இவனை கண்டால் நடுங்குவர். அவனுக்கு பிடிக்கவில்லை என்றால், ஒருவனும் இங்கே இருக்க இயலாது", என்றான் கார்த்திக்.

"என்ன அநியாயம், இதையெல்லாம் எவர் தட்டிக்கேட்பது" என பிரபா வினவ,

"அது எவராலும் இயலாத காரியம்", என்றான் கார்த்திக்.

"ஏன்??? இவன் யார், இந்த கல்லூரியின் முதலாளியா", என்றாள் சனாயா.

"இல்லை சனா, இவன் யார் என்று எவருக்குமே தெரியாது. உனக்கு உனது லட்சியம் தானே முக்கியம், அதை நோக்கி செல். இவனிடம் ஜாக்கிரதையாகவும், மரியாதையாகவும், நடந்து கொள்", என்றான் கார்த்திக்.

"சரிங்க அண்ணா, என்னாள் முடிந்தவரை கவனமாக நடந்து கொள்கிறேன்", என்று கூறிவிட்டு, பிரபாவுடன் வகுப்புக்குச் சென்றாள் சனாயா.

'ஆசிரியர்களையே மதிக்க மாட்டான், என்று கூறினாரே. இவனை எப்படி நாம் மதித்து, மரியாதையாக, நடந்து கொள்வது. இவனை போன்றவர்களுக்கு, தக்க பாடம் கற்பிக்க வேண்டும்', என்று எண்ணினாள் சனாயா.

மறுநிமிடமே, 'சேச்சே... அதற்காகவா, நாம் இங்கே வந்தோம். நாம், நம் வேலை உண்டு நாம் உண்டு, என்று இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம். இவனை போன்ற ஆட்களை பகைத்தால், நமது நிம்மதி மட்டுமல்ல, பெயரும் தான் கேடும்', என்று முடிவுக்கு வந்தாள்.

"ஏன் முகத்தை இப்படி வைத்துள்ளாய், கொஞ்சம் சிரியேன்", என்று பிரபா கூற,

"இல்லை பிரபா, அண்ணாவுக்கு என்னால் தானே வீன் சிரமம். அந்த மித்ரனிடம் எனக்காக பேச வேண்டியதாயிற்று, அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்று சொல்லிவிடு", என்று, வருத்தத்துடன் கூறினாள் சனாயா .

"அட லூசு, உனக்காக பேசாமல் எப்படி இருக்க இயலும்" என்றாள் பிரபா.

*******

நம் அனைவரின் முதல்நாள் கல்லூரியை போலவே, அங்கேயும்... அவரவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ள சொன்னார், அங்கிருந்த பேராசிரியர்.

ஒவ்வொருவராக, அனைத்து மாணவ மாணவியர்களின் முன் சென்று, அவர்களைப் பற்றி சிலவற்றை கூறிவிட்டு, தன் இடத்துக்கு வந்து அமர்ந்தனர்.

நடுவில் ஒருவன் கம்பீரமான நடையுடன் வகுப்புக்குள் நுழைந்தான்.

நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியர், எழுந்து... "வாருங்கள் ஆதி, இதுதான் உங்கள் வகுப்பறை", என கூறி, சகல மரியாதையுடன் வரவேற்றார்.

அவனுக்கென தனியாக ஒரு நாற்காலியும் போடப்பட்டது.

அவனுடைய ஆறடி உயரமும், ஸ்டைலான தோற்றமும், அனைவரையும் கவர்ந்தது. முக்கியமாக மாணவியரை,

'யார் இவன்' என அனைவரின் மனதில் எழுந்த கேள்விக்கு விடையாக,

"இந்த காலேஜ் முதலாளியின், ஒரே மகன் ஆதித்யா", என்று அவனை அறிமுகப்படுத்தினார் ப்ரொபஸ்ஸர் ஜான்.

"அடுத்த தலைவலி போல, இவன் என்னவெல்லாம் செய்யப் போகிறானோ" என்று கூறிய சனாயாவை,

"அமைதியாய் இரு சனா" என்று, அதட்டினாள் பிரபா.

அவனை கவனித்த, அங்கிருந்த மாணவர்கள்... "இவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், முதல் நாளன்றே எவ்வளவு பந்தா" என்று பேசிக் கொண்டிருந்தனர்,

மாணவிகளோ, "இவன்தான் நமது காலேஜ் ஹீரோ", என்று பேசிக்கொண்டனர்.

இப்போது சனாயாவின் முறை, அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அனைவரின் முன் சென்று நின்றாள்.

"என் பெயர் சனாயா", என்று அவள் கூறி முடிக்கும் முன்,

"ஓஹோ... உனது பெயர் இதுதானா", என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான் மித்ரன்.

என்ன செய்வதென்று அறியாமல், சனாயாவும், ஆசிரியரும், விழித்துக் கொண்டு நிற்க…

சற்று நிமிடத்துக்கு முன், மாணவிகள் மத்தியில் ஹீரோவான நமது ஆதி, எழுந்து…

"போதும் மித்ரா, நான் முன்பே உன்னிடம் கூறிவிட்டேன். நீ இங்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என் வகுப்பில் மட்டும் நுழையாதே என்று", என கடுமையான குரலில் கூறினான்.

"நான் மறந்து விட்டேன்", என்று கூறி, வகுப்பை விட்டு வெளியேறினான் மித்ரன்.

அனைவரும் என்ன நடக்கின்றது என புரியாமல் விழித்தனர்,

'ஏன் முதல் நாளன்றே, இப்படி எல்லாம் நடக்கிறது', என்று வருந்தினாள் சனா.

அமைதியாய் நின்று கொண்டிருந்த சனாவை, ஒருதரம் பார்த்துவிட்டு, தனது இடத்தில் வந்து அமர்ந்தான் ஆதி.

இப்படியே நாட்கள் ஓடின... வகுப்புக்குள் ஆதியும், வெளியே கார்த்திக்கும், சனாயாவை மித்தரனின் தொல்லையிலிருந்து காப்பாற்றினார்.

*****

ஒரு நாள் மாலை, பிரபா கார்த்திக்குடன் வெளியே சென்றுவிடவே, வீட்டிற்கு சென்று தனிமையில் இருக்க மனம் வராமல், லைப்ரரிக்கு சென்று சிறிது நேரம் படித்து விட்டு வரலாம், என சனா கிளம்பினாள்.

இரண்டு, மூன்று, புத்தகங்களை எடுத்துக்கொண்டு, ஒரு மேஜையின் மேல் வைத்துவிட்டு படிக்கத் தொடங்க, மனம் வேறொன்றை யோசிக்க துவங்கியது.

"நம்மை பலமுறை மித்ரனிடமிருந்து தப்பிக்க வைத்தானே,.. அந்த ஆதி, அவனிடம் ஒருமுறையாவது நன்றி சொல்லி விட வேண்டும். ஆனால் எப்படி!!... பெண்களை கண்டாலே, தலை தெறிக்க ஓடி விடுகிறானே".....

"ஒரு உதவி, என ஸ்ருதி அவனிடம் கேட்டதற்கு, கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல், அங்கிருந்து சென்றுவட்டானே!!!!.... இவனிடம் நன்றி சொல்ல சென்றாள், நமக்கும் இதே அவமானம்தான், என்ன செய்வது"... என்று யோசித்திருந்தாள் சுனாயா.

"ஆனால், அவன் என்னை காப்பாற்றுவதற்காக அப்படி செய்வது போல் தோன்றவில்லை, பலமுறை மித்ரன் என்னுடன் வெளியே பேசுவதையும், தொந்தரவு செய்வதையும், பார்த்துவிட்டு பேசாமல் தானே சென்றான். கார்த்திக் அண்ணா, தான் அப்போதெல்லாம் உதவி செய்தார், வகுப்புக்குள் அவன் வராமல் இருப்பதற்காக தான் அவன் அவ்வாறு செய்திருப்பான், அதில் நமக்கும் பயன் அவ்வளவே", என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தாள் சனா.

சில மணித்துளிகளுக்கு பின், மண ஒருங்கிணைப்போடு படித்துவிட்டு, வீட்டிற்கு கிளம்பிய சனா, தூரத்தில் ஆதி தன்னை அழைப்பதை கவனித்து நின்றாள்.

"இவனா!!!!….. பெண்களை கண்டாலே, முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவன், இன்று நம் முன்…" என்று யோசித்தவள், அவன் அருகில் வரவும்,

"ஹலோ ஆதி" என லேசாக புன்னகைத்தாள்.

"உன் தோழி பிரபா உன்னுடன் இல்லை போல", என்று சிறு புன்னகையுடன் அவன் வினவ,

"ஆம்... ஆனால் உங்களுக்கு எப்படி தெரியும்".....

"தெரியாமல் என்ன…' உன்னுடன் பேச வேண்டும்', என்று பல நாட்களாக காத்திருக்கிறேன், இன்று தான் உன் தோழி உன்னை தனியே விட்டிருக்கிறாள்", என்று அவன் இயல்பாக பேசிக்கொண்டிருந்தான்.

'கல்லூரி முதல்வரின் ஒரே மகன், கல்லூரியில் உள்ள அனைவரும் இவன் விரல் அசைவுக்கு வேலை செய்கின்றனர் இவன் நம்முடன் பேச, காத்திருக்கிறானா!!!...', என்ற சிந்தனையோடு அவனைப் பார்த்திருந்தாள் சனாயா.

"பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு சென்று பேசுவோமா" என்றான் அவன்.

அவள் தயங்கவே, "நீ அடிக்கடி செல்லும் பூங்கா தான், தைரியமாக என்னை நம்பி விரலாம்" என்று, அவன் கூற,

மறுக்க மனமின்றி, சிறிது சிந்தனைக்கு பின், "வாருங்கள் செல்வோம்" என்றாள்.

இருவரும் பொறுமையாக அங்கே நடந்தனர், சின்னஞ்சிறு குழந்தைகளின் சிரிப்பையும், விளையாட்டையும், கண்டால், சனாவிற்கு எப்போதும் மகிழ்ச்சிதான்….

"பேசவேண்டும் என்று கூறி விட்டு, அமைதியாக நடந்து வருகிறீர்களே", என்றாள் சனாயா.

"நீங்கள், நாங்கள், என்ற மரியாதை எல்லாம் வேண்டாம். நாம் இருவரும் ஒரே வகுப்பு தானே" என்றான் ஆதி.

"சரி ஆதி, என்ன பேச வேண்டும்"...

"என் வாழ்நாளில், முதன்முறையாக ஒருவரிடம் ஒன்று கேட்கிறேன்" என்று அவன் பீடிகை போட,

'என்ன அது', என பார்த்தாள் சனா.

"நீ என்னுடைய தோழி ஆவாயா, நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்", என்றான்.

எதிர்பாராத கேள்விகள் வரவே, அமைதியாய் ஆதியை நோக்கினாள் சனாயா.

"எனக்கு நண்பர்கள் என்று, கூறிக் கொள்ள, ஒருவன் மட்டும்தான் உள்ளான். தோழிகள் யாரும் இல்லை. அதை நான் இதுவரை விரும்பியதும் இல்லை. உன்னை பார்த்த பின், உன்னுடன் நட்பாக பழக ஆவலாக உள்ளது. காரணம் எல்லாம் தெரியவில்லை. நட்பிற்கு காரணம் வேண்டுமா என்ன", என அவன் கூற,

"கண்டிப்பாக அதி"…. என்று சிநேகமாக புன்னகைத்தவள்,

"மித்ரனின் தொல்லையிலிருந்து, என்னைக் காப்பாற்றுவதற்கு மிக மிக நன்றி. இதை நான் பலமுறை உன்னிடம் கூற நினைத்தது உண்டு. இப்போது தான் கூற முடிந்தது"... என்றாள்.

"வெகு விரைவாக கூறிவிட்டாய் போ"… என்றான் ஆதி சிரித்துக்கொண்டே.

தொடரும்....

என்னுடைய இந்த முதல் முயற்சிக்கு, ஆதரவு தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்... மல்லிகா மேடம்கும், எனது மனமார்ந்த நன்றிகள்...:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top