யாருமிங்கு அனாதையில்லை - 16

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” (16)
(நாவல்)
(டாக்டர்.பொன்.கௌசல்யா)

அத்தியாயம் :16

கிழக்குச் சீமை பண்ணையார் வீட்டு மெயின் கேட்டிற்குள் அந்த பைக் நுழைய, ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களெல்லாம் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு “மாப்பிள்ளைப் பையன்!...மாப்பிள்ளைப் பையன்” என்று சன்னக் குரலில் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

“ஆஹா...பையன் செவப்பா...லட்சணமா...சினிமாக்காரன் மாதிரியல்ல இருக்கான்?” ஒரு மூத்த பெண்மணி தனசேகரின் காது படவே சொன்னாள்.

அந்த வேலையாட்களில் ஒருவன் மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் பாய்ந்து மாப்பிள்ளை வந்திருக்கும் தகவலை உள்ளே அறிவித்து விட

பண்ணையார் ராமலிங்க பூபதியும் அவர் மனைவி சொர்ணமும் பரபரப்பாகி வாசலுக்கே வந்து மாப்பிள்ளையை வரவேற்றனர். “வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி!” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தவர்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்தபடியே உள்ளே சென்றனர் தனசேகரும் முரளியும்.

பின்னால் சென்ற முரளியை எல்லோரும் புருவங்களை நெரித்துக் கொண்டு பார்த்தனர்.

கூடத்திலிருந்த உயர் ரக தேக்கு நாற்காலியில் அவர்களை அமர வைத்து விட்டு நடு கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த உஞ்சலில் அமர்ந்தார் ராமலிங்க பூபதி. நடிகர் வினுசக்கரவர்த்திக்கு பெரிய மீசை வைத்தது போலிருந்தார்.

அப்போது உள்ளேயிருந்த வந்த அந்த மூதாட்டியிடம் “ஆத்தா...நம்ம மல்லிகாவைக் கட்டிக்கப் போற .மாப்பிள்ளை வந்திருக்காரு பாரு!” என்ற ராமலிங்க பூபதி தனசேகர் பக்கம் திரும்பி “என்னைப் பெத்த ஆத்தா!...மாப்பிள்ளை...வளமா வாழ்ந்த மகராசி!” என்றார்.

எழுந்து சென்று அவள் காலைத் தொட்டு வணங்கினான் தனசேகர்.

புல்லரித்துப் போனார் ராமலிங்க பூபதி.

அதுவரையில் அமைதியாயிருந்த சொர்ணம் “கை கழுவுங்க தம்பி...டிபன் சாப்பிடலாம்” என்றாள்.

“அய்யய்ய...டிபனெல்லாம் காலைல எட்டரைக்கே ஆச்சுங்க அத்தை” என்றான் தனசேகர்.

“அப்ப...மதிய சாப்பாடு தயார் பண்ணிடு” என்றார் ராமலிங்க பூபதி.

“அதெல்லாம் வேண்டாம் மாமா!...நாங்க உடனே கிளம்பணும்...இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்!...உண்மையில் நாங்க இப்ப எதுக்கு இங்க வந்தோம்!ன்னா....” என்று தனசேகர் தயங்க

“அட...கூச்சப்படாம சொல்லுங்க தம்பி” என்றாள் பெண்ணின் தாயார்.

தொடர்ந்து தனசேகர் அதே நிலையில் இருக்க

முரளி சொன்னான். “அய்யா...தன்னோட வருங்கால மனைவிக்கு தானே தன் கையால ஒரு பத்திரிக்கை குடுக்கணும்!”னு ஆசைப்பட்டான்!...நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன்!... “உங்க வீட்டுப் பெரியவங்களோட வந்து...இந்த வீட்டுப் பெரியவங்களுக்கு பத்திரிக்கை வைக்கறதுதான் மரியாதை”ன்னு!...அதுக்கு இவன் “பெரியவங்க வந்து பெரியவங்களுக்கு வைக்கட்டும்!...நான் கட்டிக்கப் போற மனைவிக்கு நான் வைக்கறேன்!”னு என் கிட்ட வாக்குவாதம் பண்ணி என்னை இங்கே கூட்டிட்டு வந்திட்டான்!...வரும் போது நல்லா வீராப்பாத்தான் பேசினான்..இங்க வந்ததும் சுத்தமா வெட்க ராஜாவாயிட்டான்” சொல்லி விட்டுச் சிரித்தான் முரளி.

பக்கத்தில் அமர்ந்திருந்த தனசேகர் முரளியின் தொடையில் மெல்லமாய் அடித்து “டேய்...சும்மாயிருடா...போட்டுக் குடுக்காதடா” என்றான்.

தனசேகர் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து போன ராமலிங்க பூபதி “ஹா...ஹா...ஹா...” என்று வில்லத்தனமாய் சிரித்து விட்டு “மாப்பிள்ளை ஆசைப்பட்டதுல என தப்பிருக்கு?...தாராளமாய் அவர் அவரோட வருங்கால மனைவிக்கு பத்திரிக்கை வைக்கட்டும்...நாங்க ஒண்ணும் சங்கடப்படவோ...மறுத்துப் பேசவோ மாட்டோம்” என்றவர் சட்டென்று குரலைத் தாழ்த்திக் கொண்டு “இவராவது பத்திரிக்கை குடுக்கறதுக்காக வந்தார்...அந்தக் காலத்துல நானெல்லாம் வேற ஒண்ணுக்காக பொண்ணு வீட்டுக்குப் போனோன்” என்று சொல்ல

சொர்ணம் “ச்சூ...சும்மாயிருங்க” என்றாள் வெட்கத்துடன்.

அப்போது மெல்ல மெல்ல நகர்ந்து முரளியின் அருகே வந்து நின்ற அந்த மூதாட்டி அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு “நீ மாப்பிள்ளைக்கு சிநேகிதனாப்பா?...”கேட்க

முந்திக் கொண்டு பதில் சொன்னான் தனசேகர் “வெறும் சிநேகிதனில்லை பாட்டி!...உயிர் சிநேகிதன்”

“ஓ...”என்ற கிழவி “ஆமாம்...நீ யாரு பையனப்பா?...எந்த வம்சமப்பா?” கேட்டாள்.

“பக்”கென்று அதிர்ந்து போனான் முரளி. அவன் முகம் ஒரே வினாடியில் சுண்டிப் போனது.

சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தனசேகர் அதைச் சமாளிக்கும் விதமாய் “ஆத்தா...இவன் நம்ம ஊருதான்!...என் கூட சின்ன வயசிலிருந்தே ஒண்ணாப் படிச்சவன்!...கிட்டத்தட்ட இருபத்தி அஞ்சு வருஷமா நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள்!..” என்றான்.

“அதெல்லாம் செரி!...உங்க ஊருல இவன் எந்த தெரு?...இவங்க அப்பன் பேரு என்ன?” விடாமல் கேட்டாள் கிழவி.

“அதெல்லாம் எதுக்கு பாட்டி உங்களுக்கு?...என்னோட சிநேகிதன் அவ்வளவுதான்” ‘வெடுக்’கென்று சொன்னான் தனசேகர்.

அப்போது அந்தக் கிழவி அடங்காமல் “கண்ணூ...அந்த ஊர்ல இருக்கற எல்லாரையும் எனக்குத் தெரியும்!...அதான் இவனோட அப்பனையும் தெரியுமா?ன்னு பார்க்கத்தான் கேட்டேன்”

பதில் சொல்லாமல் அவளிடமிருந்து மீள முடியாது, என்பதை தெளிவாய்ப் புரிந்து கொண்ட தனசேகர் “அது...வந்து... “கீழடித் தெரு”.... அங்கே...?” என்று யோசித்து விட்டு “டேய் உங்கப்பா பேரு என்ன?” சன்னக் குரலில் முரளியிடம் கேட்டான்.

“இருளாண்டி” என்றான் அவன்.

“ஆமாம்!....கீழடித்தெரு...இருளாண்டியோட மகன்!...இவன் பேரு முரளி!” என்றான் தனசேகர்.

“இருளாண்டியா?....எந்த இருளாண்டி?....வீடு...வீடா அடப்பத்தை எடுத்துக்கிட்டுப் போய் முடி வெட்டி...சவரம் பண்ணி விடுவானே?..அந்த இருளாண்டி மவனா நீ?” கிழவி முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு கேட்க

முரளியின் முகம் இருண்டது. “ஆ...மா....ம்” என்றான் தயக்கமாய்.

“இருளாண்டி இருக்கானா?...செத்துப் போயிட்டானா?” கிழவி கேட்டாள்.

“இல்லை ஆத்தா...மூணு வருஷத்துக்கு முன்னாடி மாரடைப்புல செத்துப் போயிட்டாரு”என்றான் தனசேகர்.

தலையை மேலும் கீழும் ஆட்டியபடியே யோசித்த கிழவி “ஏம்ப்பா...உங்கப்பன் போன பொறவு நீ அந்தத் தொழிலை எடுத்துக்கலையா?” கேட்க

“பாட்டி...இவன் படிச்சவன்...இப்ப ரைஸ் மில்லுல கணக்குப்பிள்ளையா இருக்கான்” நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசினான் தனசேகர்.

“அப்படியா?....” என்ற கிழவி ஒரு சிறிய யோசிப்பிற்குப் பின் “ஏம்பா...இருளாண்டி...நல்ல மனுஷனா...மரியாதை தெரிஞ்சவனா...இருந்தான்!...அவனுக்குப் பொறந்த நீ...இப்படி மரியாதை தெரியாதவனா இருக்கியேப்பா?” என்று சொல்ல ஒரு கணம் ஆடிப் போனான் முரளி.

தர்ம சங்கடமாகிப் போன தனசேகர் “ஆத்தா...நீங்க என்ன பேசறீங்க?...நான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போறவன்!..இவன் என்னோட நண்பன்...நீங்க எனக்கு குடுக்கற மரியாதையை இவனுக்கும் குடுக்கணும்” என்றான்.

“மாப்ளத் தம்பி...நீங்க சொல்றது வாஸ்தவம்தான்!...ஆனா அதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கல்ல?...இன்ன வர்ணத்தைத்தான் உள்ளார விடணும்..இன்ன வர்ணத்தையெல்லாம் வெளிய வாசலிலேயே நிக்க வைக்கணும்!ன்னு...நம்ம பெரியவங்க சொல்லி வெச்சதெல்லாம் சும்மா வாய்ப் பேச்சுக்காக மட்டுமல்ல...எலொலாத்திலும் ஏதோ ஒரு அர்த்தமிருக்கு!....இதோ இந்த தம்பியோட அப்பனை நான் சின்ன பல வருஷத்துக்கு முன்னாடி உங்க ஊருக்கு வந்தப்ப பார்த்திருக்கேன்...என்னையும் என் புருஷனையும் ரோட்டுல பார்த்தா தோள்ல இருக்கற துண்டை எடுத்து ஒரு கக்கத்திலும் கால் கிடக்கற செருப்பைக் கழற்றி இன்னொரு கக்கத்திலும் வெச்சிட்டு...அப்படியே தெருவோரமா கூனிக் குறுகி ஒதுங்கிப் போவான்!...அப்படிப்பட்டவனுக்குப் பொறந்த இவன் என்னடான்னா...நம்ம வீட்டுக்குள்ளாரவே வந்து...நம்ம பண்ணை எதிர்த்தாப்புல உட்கார்ந்து பேசிட்டிருக்கான்!....ம்ஹும்...இதெல்லாம் நல்லதுக்கில்லை தம்பி” கிழவி இங்கிதமென்றால் என்ன வென்றே தெரியாமல் பேசிக் கொண்டே போனாள்.

சட்டென்று எழுந்தான் முரளி “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்... “வெளில பைக் பக்கத்திலேயே நின்னுக்கறேன்”ன்னு...நீதான் கேட்காம வீட்டுக்குள்ளார கூட்டிட்டு வந்தே...இப்ப பாரு...எனக்குத் தேவையில்லாத அவமானம்” சொல்லிக் கொண்டே முரளி வெளியேறப் போக

தன் பார்வையை ராமலிங்க பூபதி பக்கம் திருப்பிய தனசேகர், “மாமா...ஆத்தா சொன்னா சொல்லிட்டுப் போறாங்க...என்னோட நண்பனை உட்காரச் சொல்லி நீங்க சொல்லுங்க மாமா” என்றான். வீட்டுத்தலைவன் சொன்ன பிறகு அதை யாரும் மறுக்க முடியாது என்று எண்ணிச் சொன்னான் தனசேகர்.

“அது...வந்து...ஆத்தா சொன்னதுல...என்ன மாப்பிள்ளை தப்பு?...கால காலமா நடந்திட்டு வர்ற ஒரு விஷயத்தை எப்படி தம்பி விட்டுட முடியும்?”

“விருட்”டென்று தானும் எழுந்தான் தனசேகர். “மாமா...நாங்க ஒரு சின்ன சந்தோஷத்தை எதிர்பார்த்து...உங்க மகளுக்கு பத்திரிக்கை குடுக்க இங்க வந்தோம்!...ஆனா வந்த இடத்துல நல்ல மரியாதையைக் குடுத்திட்டீங்க!...ஆத்தா அந்தக் காலத்து மனுஷி...அவங்க அப்படித்தான் வர்ணம்...ஜாதி...ன்னு பேசிட்டிருப்பாங்க!...ஆனா நீங்க...இந்தக் காலத்து மனுஷன்...நீங்களும் அதே மாதிரிப் பேசறதுதான் எனக்கு சங்கடமாயிருக்கு!”

இருவரும் வாசலை நோக்கி நடக்க வேக வேகமாய் அவர்களிடம் வந்த சொர்ணம் “கோவிச்சுக்காதீங்க மாப்பிள்ளை...இந்த தம்பி சொல்ற மாதிரி அவரு வேணா கொஞ்ச நேரம் வெளிய நிற்கட்டும்...மல்லிகாவைக் கூப்பிடறேன் நீங்க அவ கைல பத்திரிக்கையைக் குடுத்திட்டே போயிடுங்க!” என்று சொல்ல

அவளை எரித்து விடுவது போல் பார்த்து “அவனை வெளியில் நிறுத்தறதும்...என்னை வெளியில் நிறுத்தறதும் ஒண்ணுதான்!” சொல்லிக் கொண்டே வெளியே சென்றான் தனசேகர்.


அங்கிருந்து திரும்பி வரும் வழியில் சாலையோரமிருந்த ஒரு இளநீர்க் கடையில் பைக்கை நிறுத்தினான் தனசேகர்.

“ஏன் சேகர் வண்டியை நிறுத்திட்டே?” முரளி கேட்க

“ஆளுக்கொரு இளநீர் சாப்பிட்டுட்டுப் போவோமே?” என்றான் தனசேகர்.

“எனக்கு வேண்டாம்...நீ வேணா சாப்பிடு” என்றான் முரளி. அவன் முகம் இறுக்கமாயிருந்தது.

“டேய்...இளநீர் குடிக்கறதுக்கென்ன?” என்று முரளியிடம் சொல்லிய தனசேகர் கடைக்காரனிடம் “ரெண்டு இளநீர் வெட்டுப்பா” என்றான்.

அவன் வெட்டிக் கொடுத்த இளநீரை வாங்கிப் பருகும் போது தனசேகர், “என்னை மன்னிச்சிடுடா முரளி!...என்னாலதான் உனக்கு இந்த அவமானம்!...போகும் போதே நீ “வேண்டாம்...நான் வரலை...அது முறையல்ல?”ன்னு சொன்னே...நான்தான் கேட்கலை!” மிகவும் வருத்தப்பட்டான்.

“பரவாயில்லை விடுடா!” என்ற முரளி “இன்னிக்கு நடந்த இந்த விஷயத்தைப் பார்க்கும் போது...நீ ஆசைப்பட்ட மாதிரி...நான் உன்னோட கல்யாணத்துல முழு ஈடுபாட்டோட வேலை வெட்டி செய்ய முடியாது போலிருக்கே!...” என்றான்.

“அடப் போடா....அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?...நீ மாப்பிள்ளை வீட்டுக்காரன்!...அதிலும் மாப்பிள்ளைத் தோழன்” என்று தனசேகர் சொல்ல

“அய்யய்ய...அந்த இடத்துக்கெல்லாம் நான் வர முடியாது சாமி!...அதுக்குன்னு உங்க சொந்தத்துல உரிமை உள்ளவங்கதான் இருப்பாங்க!...அந்த உரிமையை அவங்க விட்டுக் கொடுக்க மாட்டாங்க!...வெட்டுக்குத்து வரைக்கும் போயிடுவாங்க!.” என்றான் முரளி.

“த பாரு முரளி!...என்னைப் பொருத்த வரையில்...நிஜ வாழ்க்கையில் இந்த மாப்பிள்ளைக்கு சின்ன வயசிலிருந்தே தோழனாய் இருந்தவன் நீதான்!...அதனால...நீதான் அங்கேயும் மாப்பிள்ளைத் தோழன்!...” உறுதிபடச் சொன்னான் தனசேகர்.

“டேய்...டேய்...சேகர்!...வேண்டாம்டா...அதையும் இதையும் பேசி...வீணா..பிரச்சினை பண்ணாதடா!..கல்யாணம் முடியற வ்ரைக்கும் நாம ரெண்டு பேருமே கொஞ்சம் விலகியே இருப்போம்டா.” கெஞ்சினான் முரளி.

மெலிதாய்ச் சிரித்த தனசேகர் “என்னது?...நாம ரெண்டு பேரும் விலகி இருக்கறதா?...முரளிக் கண்ணா...எனக்கு இந்தக் கல்யாணம் முக்கியமில்லை!....நீதான் முக்கியம்!...நான் உனக்கு முக்கியத்துவம் குடுக்கிறேன் என்கிற காரணத்தால் இந்தக் கல்யாணமே நின்னு போனாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்!...” என்று சொல்ல

அவன் வாயைப் பொத்தினான் முரளி “ச்சீய்...என்ன பேச்சு இது?...எதுக்கு கல்யாணம் நிற்கணும்?...”

“இல்லை முரளி...அந்த வீட்டில் அந்த கிழவி...என் வருங்கால மாமனார்...அத்தை...எல்லோருமே சொல்லி வெச்ச மாதிரி...ஒரே பாணிலதான் பேசினாங்க!...அதாவது... “இவன் ஆகாது”...என்கிற மாதிரிதான் பேசினாங்க!...இதை வெச்சுப் பார்க்கும் போது அந்தப் பொண்ணு மல்லிகாவும் அதே மாதிரித்தான் பேசும்!னு தோணுது!...அவ மட்டும் அப்படிப் பேசினா....?”

“பேசினா?...சொல்லுடா...பேசினா என்ன பண்ணுவே?” கோபமாய்க் கேட்டான் முரளி.

“தாலி கட்டறதுக்கு முன்னாடியே அப்படிப் பேசினா...தாலியைக் கட்ட மாட்டேன்!...தாலி கட்டின பிறகு பேசினா...நான் கட்டிய தாலியை நானே அறுத்து வீசிடுவேன்!” கண்களில் கோபம் கொப்பளிக்கச் சொன்னான் தனசேகர்.

தன் தலையை இட வலமாய் ஆட்டிய முரளி “இல்லைடா சேகர்...நீ பேசறது தப்பு!...நட்பு வேற...உறவு வேற!...நண்பன் என்பவன்...இப்ப உன் கூட இருப்பான்!...நாளைக்கு வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறும் போது...இருப்பான்!னு உறுதியா சொல்ல முடியாது!...ஆனா தாலி கட்டிய மனைவி என்பவள் அப்படியில்லை!...நீ இந்த உலகத்துல இருக்கற வரைக்கும்...உன் கூட்த்தான் இருப்பா!” என்று சொல்ல

அவனைக் கையமர்த்திய தனசேகர் “டேய் முரளி...பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த நிகழ்ச்சியை நீ மறந்திட்டியா?” தலையை இடது புறமாய்ச் சாய்த்துக் கொண்டு கேட்டான்.

“எந்த நிகழ்ச்சி?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டான் முரளி.

“புறா பிடிக்க...பாழுங் கிணற்றுக்குப் போனோமே?...நான் சாகப் போனேனே?...மறந்திட்டியா?”

முரளியின் கண்களில் அந்தக் காட்சிகள் விரிந்தன.

------​


காலை பதினோரு மணியிருக்கும் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொண்டு தெருவில் நடந்தனர் பதிமூன்று வயது தனசேகரும் முரளியும்.

தெருவில் கிடந்த அந்த தகர டப்பாவை முரளி உதைக்க அது பத்தடி உருண்டு போய் நிற்க பத்தடி நடந்ததும் அதை தனசேகர் உதைக்க...அது இன்னும் பத்தடி உருண்டு நிற்க அடுத்து முரளி உதைக்க...

படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது அந்த தகர டப்பா. தெருவில் உருளும் போது அது எழுப்பிய ஓசை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது. மற்றவர்களின் அந்த முகச்சுளிப்பு அவர்கள் இருவரையும் மகிழ வைத்தது.

“ஏண்டா பசங்களா...சும்மா போக மாட்டீங்களா?...அதை எதுக்குடா உதைச்சு...சத்தம் எழுப்பறீங்க?” பெட்டிக் கடையில் பீடி உறிஞ்சிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் கேட்டார்.

“அதுவா?....உங்களுக்கு காது இன்னும் கேட்குதா?ன்னு செக் பண்ணத்தான் சத்தம் பண்றோம்” என்றான் தனசேகர்.

“அடேய் படவா?...எனக்கு வயசுதான் எழுவது...ஆனா முறுக்கத்துல இன்னும் இருபதுடா...தெரிஞ்சுக்க!...நம்பிக்கை இல்லேன்னா உன்ர வீட்டுல அக்கா இருந்தா அனுப்பு...அவ சொல்லுவா!” என்றார் பெரியவர்.

“அப்படின்னா நாங்க ஒரு இடத்துக்குப் போறேன்...நீங்களும் எந்திரிச்சு எங்க கூட வாங்க...பார்க்கறோம் உங்க முறுக்கத்தையும்...வலுவையும்!” என்றான் தனசேகர்.

“வர்றேண்டா!...எங்க போறீங்க?ன்னு சொல்லுங்க இப்பவே புறப்பட்டு வர்றேன்” பெரியவர் உடனே எழுந்து தயாரானார்.

“ம்...போடியம்மா தோட்டத்தைத் தாண்டி...சுடுகாடு போற வழில ஒரு பாழுங் கிணறு இருக்கல்ல?...அதுல போய் புறா பிடிக்கப் போறோம்...வர்றீங்களா?” தனசேகர் கத்தலாய்ச் சொன்னான்.

அதைக் கேட்டதும் எழுந்த பெரியவர் அப்படியே அமர்ந்தார். “அய்யோ...அந்தக் கிணத்துக்கா?...நான் வரலை சாமி!...என்னோட அனுபவத்துல இதுவரைக்கும் சுத்தமா அம்பது பேருக்கும் மேலே அந்தக் கிணத்துல விழுந்து உசுரை விட்டிருக்காக்க!...அவங்க ஆவியெல்லாம் இன்னும் அந்தக் கிணத்துக்குள்ளார தான் சுத்திட்டிருக்கும்!...இப்ப மணி பதினொண்ணே முக்கால்!...உச்சி நேரம்....சரியா...பனிரெண்டு மணிக்கு எல்லாம் வெளிய வந்து உலாத்தும்...ஆள் சிக்குனா...அப்படியே உள்ளார போட்டு அழுத்திடும்”

“என்னமோ... “முறுக்கத்துல இருபது”னு சொன்னீங்க!...அப்படியே உட்கார்ந்திட்டீங்க?” முரளி கேட்க

“அடப் போங்கப்பா...நான் வரலை!...அதே மாதிரி நீங்களும் போக வேண்டாம்...உச்சி நேரம் வினையை வாங்கிக்காதீங்க” பெரியவர் அறிவுரைத்தார்.

“கெக்கே...பிக்கே” என்று சிரித்து அதை அலட்சியப்படுத்தி விட்டு சுடுகாட்டு வழியில் இருந்த அந்த பாழுங் கிணற்றை நோக்கி நடந்தனர் சிறுவர்கள் இருவரும்.

சுற்றுச்சுவர் இல்லாத அந்தக் கிணறு நல்ல அகலமாய் இருந்தாலும் ஓரத்தில் வளர்ந்திருந்த செடிகளும் கொடிகளும் பெரிய புதராய் மண்டி கால்வாசிக் கிணற்றை மறைத்திருந்தன.

ஓரிடத்தில் மட்டும் உள்ளே இறங்குவதற்கு தோதாக ஒரு சரிவு இருந்தது. அந்தச் சரிவும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆழம் வரை மட்டுமே சென்றது. அதற்குக் கீழே பாறைகளை வெட்டிக் கிணறு தோண்டப்பட்டிருந்ததால்...இறங்குவதற்கு தோதாக அங்கே எதுவுமில்லை.

சரிவில் உட்கார்ந்தபடியே ஊர்ந்து கிட்டத்தட்ட கிணற்றின் பாதி ஆழம் வரை வந்து அங்கிருந்த ஒரு வலுவான கொடியைப் பற்றியபடி அமர்ந்து கொண்டனர் தனசேகரும் முரளியும்.

சூரியன் அவர்களின் தலைக்கு நேர் மேலே வந்திருந்தது.

மணி சரியாக பனிரெண்டு.

(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
என்ன ஒரு வில்லத்தனம் கொஞ்சம் கூட பயம் இல்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top