யாருமிங்கு அனாதையில்லை - 15

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” (15)
(டாக்டர்.பொன்.கௌசல்யா)

அத்தியாயம் :15​

பைக்கில் செல்லும் போது “டேய்..சேகர்...அது என்ன விஷயம்?ன்னு சொல்லுடா...எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்குடா” பரபரத்தான் முரளி.

“சும்மா பறக்காதடா...இன்னும் கொஞ்சம் தூரம்தான்...அங்க போய்த் தெரிஞ்சுக்க” என்றான் தனசேகர்.

அந்த பைக் தனசேகருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்தது. பைக்கை தோப்பிற்கு மத்தியிலிருந்த அந்த ஓட்டு வீட்டின் முன் கொண்டு போய் நிறுத்தினான் தனசேகர்.

பைக்கிலிருந்து நிதானமாய் இறங்கிய முரளி “இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்திருக்கே?” கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் சற்றுத் தள்ளியிருந்த கயிற்றுக் கட்டிலில் சென்றமர்ந்த தனசேகர் “வாடா...வந்து என் பக்கத்துல உட்காரு” என்றான்.

முரளி மௌனமாகச் சென்று கயிற்றுக் கட்டிலில் அவனருகே உட்கார்ந்தான். “ம்...உட்கார்ந்திட்டேன்!..இப்பச் சொல்லு”

சொல்ல ஆரம்பித்த தனசேகர் சொல்லும் முன் மெலிதாய்ச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் இதுவரை அவன் முகத்தை எட்டிப் பார்க்காத வெட்கம் என்னும் உணர்ச்சி தெரிந்தது. “டேய்...முரளி...அய்யாவுக்கு அடுத்த மாசம்...பத்தாம் தேதி கல்யாணம்!....நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சுது”

கண்களை பெரிதாய் விரித்துக் கொண்டு அவனைப் பார்த்த முரளி

“அடி சக்கை!...பார்த்தியா?...என் கிட்டக் கூட மறைச்சு...ரகசியமா போயி...பொண்ணு பார்த்திட்டு...இன்னிக்கு வந்து “கல்யாணமே முடிவாயிடுச்சு”ன்னு சொல்றியா?...ம்ஹ்ஹும்...இது நியாயமேயில்லை....நான் ஒத்துக்கவே மாட்டேன்...நிச்சயதார்த்தத்துக்கு ஏன் என்னைக் கூப்பிடலை?” என்று சொல்லியபடியே எழுந்து தள்ளிச் சென்றான்.

“டேய்...டேய்...டேய்....கோவிச்சுக்காதடா!...என்னோட அப்பாவும் அம்மாவும் எனக்கே தெரியாமல் பண்ணிட்டாங்க!..” தனசேகர் முரளியின் பின்னால் வந்து நின்று கெஞ்சலாய்ச் சொன்னான்.

“அதெப்படிடா?...பொண்ணு பார்க்கும் படலம்ன்னு ஒண்ணு நிச்சயமா நடந்திருக்கும்..அதுக்கு நீ போய் “பொண்ணைப் பிடிச்சிருக்கு”ன்னு சொல்லாம...அவங்க முடிவு பண்ணிடுவாங்களா?...”

“அந்தக் கதையைக் கேளு...எங்க சொந்தத்துல நடந்த வேறொரு கல்யாணத்துக்கு என்னை வரச் சொல்லி ரொம்ப வற்புறுத்தினாங்க!...நானும் ஓரளவுக்கு மேலே மறுக்க முடியாமல்...போனேன்...!...பொண்ணு வீட்டுக்காரங்களும்...பொண்ணும் அந்த விசேஷத்துக்கு வந்திருந்தாங்க!....அங்கேயே எங்க ரெண்டு பேரையும் பார்க்க வெச்சு...பேச வெச்சு...எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டாங்க”

“ஓ.கே..ஓ.கே!..நீ சொல்றது நம்பற மாதிரி இல்லை!...இருந்தாலும் உனக்காக .நம்பறேன்” என்றான் முரளி.

“சரி... “பொண்ணு யாரு?”ன்னு நீ கேட்கவே இல்லையேடா?” தனசேகர் ஆசையோடு கேட்டான்.

“ஓ...நான் கேட்டால்தான் சொல்லுவியா?...சும்மா சொல்லுடா!” என்றான் முரளி.

“நம்ம கிழக்குச் சீமை பண்ணையாரு ராமலிங்க பூபதி...தெரியுமல்ல” ஆட்காட்டி விரலை ஆட்டிக் கொண்டு கேட்டான் தனசேகர்.

“தெரியும்...ஆட்டுக்கடா மீசை வெச்சுக்கிட்டு.... “பள..பள” ஜிப்பா போட்டுக்கிட்டு...புலிப்பல் சங்கிலியை நெஞ்சு வரை தொங்க விட்டுட்டு...பார்த்தால் எம்.ஜி.ஆர்.படத்துல வர்ற நம்பியார் மாதிரித் திரிவாரே?...அவரா?...” சிரிப்போடு கேட்டான் முரளி.

“ஆமாம்...ஆமாம்...அவரோட மொதல் பொண்ணு!...பேரு...மல்லிகா” அசடு வழியச் சொன்னான் தனசேகர்.

“ம்...பணத்தோட பணம் கை கோர்க்குது!...ஓ.கே...ஓ.கே...கொண்டாடுங்க!” என்ற முரளி “டேய் சேகர்....பண்ணையார் வீட்டு மாப்பிள்ளை ஆனதும்...இந்த பரதேசிப் பயல் கூடப் பேசுவியா?..பழகுவியா?...இல்லை...பார்த்தும் பார்க்காத மாதிரிப் போயிடுவியா?” முரளி சோகமாய்க் கேட்க

“ச்சீய்...வாயைக் கழுவுடா!...” என்று கோபமாய்ச் சொன்ன தனசேகர் “ஏண்டா முரளி...இத்தனை வருஷம் என் கூடப் பழகி....நீ என்னைப் புரிஞ்சுக்கிட்ட்து இவ்வளவுதானா?...ஒண்ணு சொல்றேன் நல்லாக் கேட்டுக்கடா!..இந்த ஊரு என்ன?..எங்க வீடு என்ன?...அந்தக் கிழக்குச் சீமை கிராமமே “வேண்டாம்”னு தடுத்தாலும் “போங்கடா...நீங்களுமாச்சு...உங்க பொண்ணும் ஆச்சு”ன்னு சொல்லி அத்தனை பேரையும் தலை முழுகிட்டு... “நட்புதான் பெரிசு”ன்னு சொல்லிட்டு...கல்யாணமே வேண்டாம்னுட்டு வந்திடுவேன்...தெரியுமா?” உணர்ச்சி பொங்கச் சொன்னான்.

கண்களில் நீர் கோர்த்தது முரளிக்கு.

உதடுகள் தழுதழுத்தன.

“சேகர்...என்னால இந்த சந்தோஷத்தைத் தாங்க முடியலைடா!....அறியாத வயசுல நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் உருவான நட்பை மதிச்சு...இன்னிக்கு வரைக்கும் என் கூட அன்பாகவும் பாசமாகவும் இருக்கியே?...நீயெல்லாம் வணங்கப்பட வேண்டிய ஆத்மாடா!...உனக்கெல்லாம் அந்த ஆண்டவன் நீண்ட ஆயுளைக் குடுத்து உலகத்துக்கு பல நன்மைகளை உன் மூலமா உருவாக்கித் தர வேண்டும்டா!” என்றான் முரளி தனசேகரின் கைகளைப் பற்றிக் கொண்டு கரகரத்த குரலில்.

“என்ன முரளி நீ?...பொம்பளையாட்டம் இதுக்கெல்லாம் அழறே?...வா வா கிளம்பலாம்” என்றபடியே தனசேகர் பைக்கை நோக்கிச் செல்ல முரளியும் எழுந்து உடன் நடந்தான்.

பைக்கில் செல்லும் போது “முரளி...என் கல்யாணத்துல நீதான் எல்லா வேலைகளையும் பொறுப்பா எடுத்துச் செய்யணும்!...தயங்கித் தயங்கி நிற்கக் கூடாது!...ஒதுங்கி ஒதுங்கிப் போகக் கூடாது!..என்ன சரியா?..என்னைப் பொறுத்த வரையில் பெரிய வி.ஐ.பி.நீதான்!” என்று தனசேகர் உரத்த குரலில் சொல்ல

“ம்ம்ம்...எனக்கும் அப்படிச் செய்ய ஆசைதாண்டா!...ஆனா உங்க வீட்டுல பெரியவங்க...அதை அனுமதிப்பாங்களா?ன்னு தெரியலையேடா” என்றான் முரளி.

அவன் குரல் வருத்தமாய் ஒலிப்பதற்கான காரணம் தனசேகருக்குத் தெரியாமலில்லை. “எதைப் பத்தியும் நீ கவலைப்பட வேண்டியதேயில்லை!...ஏன்னா...நான் ஏற்கனவே எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டேன்!... “என் கல்யாணத்துல முரளி...உரிமையா வந்து எல்லா வேலைகளையும் செய்வான்...அவனை யாரும் எதுவும் சொல்லக் கூடாது!...அப்படி யாராவது ஏதாவது சொல்லி அவனை சங்கடப்படுத்தினா...அப்புறம் தாலி கட்ட மாட்டான் இந்த தனசேகர்”ன்னு ஒருவித மிரட்டலே குடுத்து வெச்சிருக்கேன்!..அதனால...யாரும் உன்னைய எதுவும் சொல்ல மாட்டாங்க!...போதுமா?” கழுத்தைத் திருப்பி முரளியைப் பார்த்து அவன் சொல்ல

“போதும்டா...போதும்டா!...நீ தலையைத் திருப்பி ரோட்டைப் பார்த்து ஓட்டுடா” என்றான் முரளி.

நட்புச் சங்கிலியை இவர்கள் இருவரும் வெகுவாய் இறுக்கிக் கொண்ட போதிலும் அந்த விதியரக்கன் அதை வேறு மாதிரியல்லவா வடிவமைத்திருக்கிறான்?.

திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

அன்று காலை தனசேகரின் வீட்டிற்கு வந்திருந்த பிரஸ்காரன் பல்வேறு டிசைன்களில் அழைப்பிதழ் கொண்டு வந்திருந்தான்.

“டேய் சேகர்...நீயே நல்லதா ஒண்ணை தேர்ந்தெடுத்து அச்சுக்குக் குடுத்துடு....அப்புறம் பத்திரிக்கை சரியில்லை...பாயாசம் சரியில்லை”ன்னு புலம்பாதே” என்று அவன் தாய் சொல்ல

“சரிம்மா...” என்றவன் அந்த பிரஸ்காரன் பக்கம் திரும்பி, “அண்ணே...ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க இப்ப வந்திடறேன்” என்று சொல்லி விட்டு அவசரமாய் வெளியேறி பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான்.

“என்னாச்சு இவனுக்கு?...ஏன் திடீர்னு கிளம்பிப் போயிட்டான்?” குழப்பத்துடன் உள் அறைக்குள் சென்றாள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு முரளியுடன் உள்ளே வந்த தனசேகர் “நான் இந்த நாலு டிசைன்களை செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன்!...இதுல ஒண்ணை நீ செலக்ட் பண்ணிக் குடு” என்று அந்த நாற்காலி மீதிருந்த நான்கு அழைப்பிதழ்களையும் எடுத்து முரளி கையில் கொடுத்தான்.

முகம் கோணினாள் தாய்.

அருவருப்பாய் நோக்கினான் பிரஸ்காரன்.

அந்த இரு முகங்களின் இங்கிதத்தைப் புரிந்து கொண்ட முரளி, “டேய்...உன்னோட கல்யாண இன்விடேஷனை நீ செலக்ட் பண்ணுவியா?...அதை விட்டுட்டு...என்னைப் போய்...” தயங்கினான்.

“டேய்..டேய்..ரொம்ப பிகு பண்ணாதே...செலக்ட் பண்ணிக் குடு”ன்னா குடு...அவ்வளவுதான்!...உன்னை விடப் பிரமாதமா யாரால் செலக்ட் பண்ண முடியும்?” செல்லமாய் மிரட்டினான் தனசேகர்.

நண்பன் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன முரளி இருப்பதிலேயே சிறந்த ஒரு கார்டை செலக்ட் செய்து கொடுக்க “டேய் முரளி சொன்னா நம்ப மாட்டே...நானும் அதைத்தான் செல்கட் பண்ணி மனசுக்குள்ளார வெச்சிருந்தேன்!..கரெக்டா நீயும் அதையே செலக்ட் பண்ணிட்டே!...ஸோ...நம்ம ரெண்டு பேரும் ஒரே அலை வரிசையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்!” என்றான் தனசேகர் சந்தோஷமாய்.

அந்த வாரம் முழுவதும் தனசேகரும் முரளியும் அழைப்பிதழ் வினியோகத்திற்காய் கிராமம் கிராமமாய் பைக்கில் அலைந்தனர்.

“டேய் முரளி..தெனமும் உன்னைய என் கூட இழுத்துக்கிட்டுப் போயிடறேனே உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைதானே?” அன்றைய தினம் அழைப்பிதழ் வினியோகத்திற்காக கிளம்பும் போது தனசேகர் கேட்டான்.

“நீ இப்படிக் கேட்கறதுதான் பிரச்சினையே!...” என்றான் முரளி.

“அப்படியில்லைடா...உன் உழைப்பும்...சம்பாத்தியமும்தான் உன் குடும்பத்துக்கே ஆதார வருமானம்!..உங்க அம்மாவும் தங்கச்சியும் உன்னை நம்பித்தான் இருக்காங்க...நீ பாட்டுக்கு என் கூட சுத்திட்டு வேலைக்குப் போகாமலே இருந்தா உன்னோட சம்பளம் குறையும்...அப்புறம் பற்றாக் குறை வரும்!...அவங்க என்னைத் திட்டுவாங்க!... “சரி...நான் ஒரு அமௌண்ட் குடுக்கறேன் சமாளிச்சுக்கடா...”ன்னு சொன்னாலும் நீ வாங்க மாட்டேங்கறே!” தனசேகர் யதார்த்தத்தைச் சொல்ல

“க்கும்...அப்படியே நான் பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கறேன்!...நான் போகலைன்னா எல்லாமே ஸ்தம்பிச்சு நின்னிடும்!...அடப் போடா...ரைஸ் மில்லுக கணக்குப் பிள்ளை உத்தியோகம்....இதுல லீவு போட்டா தலை சிதறிடாது...நீ மொதல்ல பைக்கை ஸ்டார்ட் பண்ணு” என்றான் முரளி.

பைக்கில் போகும் போது “ஆமாம்...இன்னிக்கு எந்த ஏரியாவைக் கவர் பண்ணப் போறோம்?” முரளி கேட்டான்.

“இன்னிக்கு மொதல் வேலையா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புது இன்ஸ்பெக்டர் திவாகர் சாருக்கு பத்திரிக்கை குடுத்திடு”ன்னு அப்பா சொல்லியிருக்கார்!...அதனால மொதல்ல அங்க போறோம்!...அப்புறம்….” என்று தனசேகர் இழுக்க,

“சொல்லுடா…அப்புறம்?”

“கிழக்குச் சீமை போறோம்...பொண்ணு வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கறோம்” என்றான் தனசேகர்.

“டேய்...டேய்...அதெல்லாம் நாம போயி வைக்கற இடமல்ல....வருங்கால சம்மந்தி வீட்டுக்கு...உங்க அப்பாவும் அம்மாவும்தான் போகணும்!...அதுதான் மரியாதை” என்றான் முரளி பைக் சத்தத்தையும் மீறி கத்தலாய்..

“ஏண்டா...கல்யாண மாப்பிள்ளை நான்!...நானே நேர்ல போய் பத்திரிக்கை வைக்கறேன்!...அதை விட என்னடா?” காற்றில் சட்டைக் காலர் படபடத்தது.

“அது முறையல்லடா சேகர்!...அவங்களும் பெரிய பண்ணையார் வம்சமல்லவா?..அவங்களுக்கு குடுக்க வேண்டிய மதிப்பையும்...மரியாதையையும் குடுத்தாகணும்டா” முரளி கெஞ்சலாய்ச் சொன்னான்.

“சரி...சரி...பொலம்பாதே....இப்ப நான் அங்க போறது..என் மாமனாருக்கும் மாமியாருக்கும் பத்திரிக்கை வைக்கறதுக்கு இல்லை..!...அந்த வேலையை என்னோட அப்பாவும்...அம்மாவும் பார்த்துக்கட்டும்!...” என்று சொல்லி விட்டு தனசேகர் நிறுத்த

“வேற யாருக்கு?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் முரளி.

“ம்ம்...என்னோட வருங்கால மனைவி...மல்லிகாவிற்கு” சொல்லி விட்டுச் சிரித்தான் தனசேகர்.

“அடப்பாவி!...அங்க போறதுக்கு எதுக்குடா என்னைக் கூடக் கூட்டிட்டுப் போறே?...வேண்டாம்!டா...அது சரிப்பட்டு வராதுடா” பலமாய் மறுத்தான் முரளி. அவன் மனதில் ஏதோ விபரீதமாய்ப்பட்ட்து.

“ஏன்?...ஏன் சரிப்பட்டு வராது?” வண்டியின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு கேட்டான் தனசேகர்.

“அதாவது...உங்க வீட்டிலேயே நாம ரெண்டு பேரும்...ரொம்ப நட்பா பழகறதை விரும்ப மாட்டேங்கறாங்க!...ஏதோ நீ கொஞ்சம் பிடிவாதமாய் இருந்ததால்...கண்டுக்காம விட்டுட்டிருக்காங்க!...உங்க வருங்கால மாமனார் கெழக்குச் சீமை பண்ணையாரு...நான் உன் கூட பைக்ல வந்து இறங்கறதைப் பார்த்தா செமக் கோபமாயிடுவார்!...அதனால உன் மதிப்புதான் குறையும்!...என்னால உனக்குத்தான் அவமானம்!....அதனால....பேசாம வண்டியைத் திருப்பு...நாளைக்கு உங்க வீட்டுல நிற்குதே ஒரு கப்பல் காரு?...அதை எடுத்துக் கிட்டு...உன்னோட அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கிட்டுப் போய் அவங்களுக்கு பத்திரிக்கை வை!...அதுதான் மரியாதை!” என்றான் முரளி.

“க்ரீச்”சென்று பிரேக்கிட்டு வண்டியை நிறுத்திய தனசேகர் “டேய் முரளி!..நீ ஆயிரம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்!...நானும் நீயும்தான் போறோம்!...அந்தப் பொண்ணைப் பார்த்து பத்திரிக்கை குடுக்கறோம்!...அதை அவங்க ஏத்துக்கிட்டாலும் சரி...ஏத்துக்கலைன்னாலும் சரி!...எனக்குக் கவலையில்லை!...எனக்கும் உனக்கும் இடையிலான இந்த நட்பை மதிக்கறவங்கதான் எனக்கு வேணும்!...உண்மையைச் சொல்லணும்ன்னா...நம்மோட நட்பை அந்தப் பெண் எப்படிப் பார்க்கிறாள்?...என்பதைத் தெரிஞ்சுக்கத்தான் இந்த டிரிப்பே”” ஆணித்தரமாய்ச் சொன்னான்.

“தனசேகர்...வேண்டாம்!...“இது வாழ்க்கைப் பிரச்சினை!...இதுல பிடிவாதம் பிடிக்காதே!” என்று சொல்லி விட்டு சில நிமிடங்கள் யோசித்த முரளி “வேணும்னா இப்படிச் செய்வோம்...நான் அங்க வந்து...வெளிய பைக் பக்கத்திலேயே நின்னுக்கறேன்!...நீ மட்டும் போயிட்டு வந்திடு...என்ன?” என்று முரளி பதிலளிக்க

“த பாரு முரளி...வீணா என் கைல அடி வாங்கிக்காதே!...ஒழுங்கா என் பின்னாடியே வர்றே...நான் உட்காரும் போது என் பக்கத்திலேயே உட்கார்றே...அவ்வளவுதான்” சொல்லி விட்டு பைக்கைக் கிளப்பி “விர்”ரென்று பறந்தான் தனசேகர்.

அடி வயிற்றில் அமிலம் சுரந்தது முரளிக்கு.

******
போலீஸ் ஸ்டேஷன் முன் தன் பைக்கை நிறுத்திய தனசேகர், முரளியிடம், “டேய்…உள்ளார போய் இன்ஸ்பெக்டர் இருக்காரா?ன்னு பார்த்திட்டு வாடா” என்றான்.

இறங்கிப் போய் பார்த்து விட்டுத் திரும்பிய முரளி, வரும் போதே உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வந்தான்.

“என்ன பண்ணலாம்?...திரும்பி வரும் போது குடுத்திடலாமா?”

அப்போது அவர்களைக் கடந்து போன ஒரு கான்ஸ்டபிள், “தம்பி…இன்ஸ்பெக்டர் இன்னிக்கு வரமாட்டார்…ஊரிலிருந்து கிளம்பும் போது அவர் புக் பண்ணி அனுப்பிச்ச சாமானெல்லாம் இன்னிக்குத்தான் வந்து சேர்ந்திருக்கு…எடுத்து வெச்சிட்டிருக்கார்!” என்றார்.

தலையைச் சாய்த்துக் கொண்டு யோசித்த தன சேகர், “உங்க ஸ்டேஷனிலிருந்து யாராச்சும் போய் அவருக்கு உதவி செய்யலாமல்ல?” கேட்டான்.

“தம்பி…இந்த இன்ஸ்பெக்டர் பழைய இன்ஸ்பெக்டர் மாதிரி இல்லை தம்பி!... “போலீஸ்காரங்க பப்ளிக் சர்வெண்ட்…சீனியர் ஆபீசர்ஸ்களுக்கு சர்வெண்ட் அல்ல”ன்னு சொல்லிட்டு…அவரும் அவரோட…அப்பா…அம்மா…மனைவி..எல்லோரும் சேர்ந்து தாங்களே பண்ணிக்கறங்க” என்று அந்த கான்ஸ்டபிள் சொல்ல,

முரளியும் தனசேகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இப்ப…அவரு வீட்டுக்குப் போனா அவரைப் பார்க்கலாமா?” முரளி கேட்டான்.

எதுக்கு தம்பி?...என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லை…என்னோட கல்யாண பத்திரிக்கை குடுக்கணும்…அதுக்குத்தான்”

“ம்…போங்க தம்பி இருக்கார்”

அடுத்த இருபதாவது நிமிடம் அவர்களிருவரும் காவலர் குடியிருப்பிற்குள் நுழைந்து திவாகர் வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்கினர்.

வெண்ணிற பனியனுடன் வாசலில் நின்று கொண்டிருந்த திவாகர் அவர்களைப் பார்த்ததும் புன்னகைத்து வீட்டினுள் அழைத்து வந்தார்.

முன் புற ஹாலில் உட்காரக் கூட இடமில்லாதவாறு பொருட்கள் இறைந்து கிடக்க, “இன்னிக்குத்தான்ப்பா லோடு வந்திச்சு…இப்பத்தான் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டிருக்கோம்!..” என்றார் திவாகர்.

“சார்…நாங்க உதவலாமா?” முரளி கேட்க,

“நோ…நோ…எங்க வீட்டிலேயே நாலு பேர் இருக்கோம்” என்ற திவாகர் வீட்டினுள் திரும்பி எல்லோரையும் அழைக்க, சவிதாவும், திவாகரின் தாய் தந்தையரும், கோபியும் வர,

எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, தான் கொண்டு வந்திருந்த பேக்கிலிருந்து திருமண பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்து, “கண்டிப்பா எல்லோரும் குடும்பத்தோட வந்திடணும் சார்” என்றான் தனசேகர்.

“இந்த ஊரில் எங்களுக்கு வந்திருக்கும் முதல் அழைப்பு…அதனால கண்டிப்பா வந்திடுவோம்” என்று சொன்ன திவாகர், சவிதா பக்கம் திரும்பி, “அம்மா…டீ…காஃபி ஏதாசும் போட முடியுமா?” என்று கேட்டார்.

அதற்குள் தனசேகர் முந்திக் கொண்டு, “பரவாயில்லை சார்…இப்பத்தான் வரும் போது ரெண்டு பேரும் டீ சாப்பிட்டுட்டு வந்தோம்” என்றான்.

அங்கிருந்து புறப்பட்டு வரும் போது தனசேகர் சொன்னான். “என்னடா முரளி…அந்த இன்ஸ்பெக்டர் வீட்டுல எல்லோருமே ஒரு மாதிரியா இருக்காங்க!..அவரோட மனைவி முகமெல்லாம் தீக்காயத் தழும்போட இருக்காங்க,…அப்பா வேற மாதிரி இருக்கார்…அம்மா வேற இருக்காங்க…ஒரு சின்னப்பையன் வேற ஊனமாயிருக்கான்!...”

“பாவம்…அவங்க குடும்பம் எத்தனை பிரச்சினைகளைத் தாண்டி வந்திருக்கோ தெரியலை”

சீரான ஓட்டத்திற்குப் பின் பைக் கிழக்குச் சீமையை அடைந்தது.

(தொடரும்)​
 

தரணி

Well-Known Member
திவாகர் பயணத்தில் நிறைய உறவுகள் இணைந்து கிட்டே இருக்காங்க.... இப்போ யாரோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top