பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 82. தீநட்பு, குறள் எண்: 812 & 817

Sasideera

Well-Known Member
#1
குறள் 812:- உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?

பொருள் :- தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 817:- நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும்.

பொருள் :-
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.
 
Sasideera

Well-Known Member
#3
தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீநட்பு. கெட்ட குணமுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு தீங்கு விளைவிக்கும் என்பதைக் கூறும் அதிகாரம். ஒருவருடன் நட்பு உண்டானபின் பிரிவது கடினமான செயலாம். ஒப்பிலார் கேண்மை என்ன தீமை செய்யும் என்பதை அறிந்துகொண்டால் விலக்குவதா கூட்டுவதா என்பதைத் தெளியலாம். தீய நண்பர்கள் என அறிந்தபின்னர் அந்நட்பை விலக்குதல்‌ நல்லது எனச் சொல்லப்படுகிறது.

எவ்வளவுதான் ஆராய்ந்து நட்புகொண்டாலும், சிலரின் உண்மையான குணநலன்கள் காலம் செல்லச்செல்ல வெளிப்பட்டேவிடும். தமது உள்நோக்கங்களைத் திறமையாக மறைத்து நம்பிக்கைக்குரிய நண்பரைப்போல காட்டிக்கொள்பவர் போன்றோரின் உறவு தீ நட்பு என வகைப்படுத்தப்படுகிறது. நட்பதில் விழிப்புடன் தடுக்க வேண்டியதொடர்புகளாக இவ்வதிகாரம் கூறுவன:
அளவு கடந்த அன்பைக் காட்டுவது போல் இருந்தாலும் நல்ல பண்புகளைப் பெறாதவர்களின் நட்பு.
தங்களுக்குப் பயனளிக்கும் சில செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நட்புகளை உருவாக்கித் தன்னலம் ஒன்றையே கருதி நட்புகொள்வோர்.
பொருள் கவர்வதிலேயே குறியாய் இருக்கும் இழிதகை நட்பினர்.
போர்க்களத்தில் முதுகில் இருந்த வீரனைத் தள்ளிவிட்டுத் தப்பிஓடும் குதிரையைப்போன்றோரது நம்பகத்தன்மையற்ற உறவு,
உதவி செய்யும் மனப்பான்மையே இல்லாதவருடனான உறவு.
அறிவு திரிந்தவருடனான கெழுமுதல்.
களிப்பும் பொழுதுபோக்கிற்காகவே கூடுபவரது நட்பு.
கூடவே இருந்து குழிபறிப்பவருடனான நெருக்கம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரது கசப்பான கெழுமுதல்,
வீட்டிற்குள் நயமாகப் பேசிவிட்டு, பொது இடங்களில் பழிச்சொல் கூறுவோரது கேண்மை.
இத்தகையோருடனான நட்பை வளரவிடக்கூடாது, அது இருந்தால் என்ன அதை இழந்தால் என்ன. கள்வர்க்கு இணையான நட்பு தேவையா?, நட்பின்றித் தனியாகவே இருக்கலாம், நட்பை அடைவது விட அடையாதிருப்பது நல்லது, இவர்களின் நட்பைவிட, பகைவரால் வரும் துன்பம் பெரிதல்ல, சொல்லாமல் கொள்ளாமல் தளரவிடுக, இதுபோன்ற தீநட்பைக் கனவில்கூட கருதிப்பார்க்கக் கூடாது, பக்கத்திலே நெருங்க விடாதீர் என்பன இவ்வதிகாரம் வழங்கும் அறிவுரைகள்.
 
Advertisement

Sponsored