'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 18

Advertisement

Priyaasai

Active Member
அலர் - 18

View attachment 10889

வாகனம் சென்னையின் எல்லைக்குள் நுழைந்து செல்லும் பாதையை சரியாய் கணித்த அயவந்திநாதன் எழிலிடம் "அமுலு காலேஜ்க்கா போக போறோம்" என்று கேட்க..,

"இல்லை" என்றான் ஒற்றை சொல்லாக.

இத்தனை நாட்களாய் அவன் தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடவும் முடியாமல்... சொந்தம் இல்லை என்று விலகி விடவும் முடியாத கொடுமையை அனுபவித்து வந்தவளுக்கு..., இதற்குமேலும் அத்தகைய நிலைக்கு செல்ல எள்ளளவும் விருப்பம் இல்லை.

அதனால்.., "காலேஜ்க்கு போகலையா..! அப்படின்னா நம்மளை ஹாஸ்டல்ல விட்டுடுவானோ என்று மனம் அடித்துக்கொண்டது. மெல்ல ஓரவிழி கொண்டு அவனை படிக்க முனைந்தாள்.., எங்கே அதுவோ முற்றிலும் துடைத்து வைக்க பட்டிருந்தது..!

அவன் முகத்தில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் போனவள்... ஒருவித அலைப்புறுதலில் அவள் மனதோடு மெய்யும் நிலை கொள்ளாமல் தத்தளித்தாள்... அதை அருகே அமர்ந்திருந்த அகனெழிலன் உணர்ந்தாலும்..., உணர்வற்று அவளை பார்த்தானே அன்றி, அவளை அமைதிபடுத்த முனையவில்லை.

பார்வை முழுவதையும் பாதையிலேயே பதித்திருந்தவள்.. சென்று கொண்டிருந்த வாகனம் அவள் விடுதிக்கு நேர் எதிர் புறம் திரும்பவும் தான் அவளின் அலைப்புறுதல் முற்றுப்பெற்றது.

ஆனால் காரிலிருந்து கீழே இறங்கியவள் தன் முன்னே "அலரெழில்" எனும் பெயர் தாங்கி ஜொலித்த பலகையை காணவும் ஸ்தம்பித்து போனாள்.

சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்தவள் தன் மொத்த நேசத்தையும், நன்றியையும் விழியவளின் விழியில் தேக்கி எழிலவனையே பார்த்திருந்தாள்.

"அலரெழில்" என்னும் பெயர் தாங்கி நின்றிருந்த வீடு மாவிலை தோரணம் கட்டி பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க.. உடன் வந்த அனைவரும் ஆச்சர்யத்தில் அமிழ்ந்து எழிலையே பார்க்க அவனோ, "இங்கயே நின்னுட்டா எப்படி..! உள்ள வாங்க.. " என்று அழைத்து சென்றான்.

வாசலிலேயே அவர்களை வரவேற்ற ரத்தினம்மாள்... ஒருநிமிஷம் அங்கேயே நில்லுங்க என்று அவர்களை வாசலிலேயே நிறுத்தியவர், ஆலம் கரைத்து கொண்டு வந்து நீலாவிடம் கொடுத்து "எடும்மா" என்றார்.

அவர் ஆலம் சுற்றிய பின் இருவரும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைய... அங்கு வரவேற்பறையில் பூஜைக்கு ஏற்பாடாகி இருந்தது. "என்னம்மா.. எதுக்கு பூஜை..?" என்று வளர்மதி ரத்தினம்மாளிடம் கேட்க..,

"இந்த வீடு வாங்கி ஒன்றரை வருஷமாச்சு வளர்.. ஆனா இவன் பூட்டியே வெச்சிருந்தான். ஏன்டான்னு கேட்டா..? அதுக்கான நேரம் இன்னும் வரலை ஆயான்னு சொல்லிட்டான். போன வாரம் தான் என்னை கூட்டிட்டு வந்து சுத்தப்படுத்தி பூஜைக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடுத்துட்டு உங்களைகூட்டிட்டு வர போனான்" என்றார்.

அப்போது அங்கு வந்த நீலா வளரிடம் கூடுதல் தகவலாய் ,"இது உன் மகளுக்காகவே என் பிள்ளை வாங்கினது.."என்றார்.

தனக்கு பிடித்த வகையில் வண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்த வீட்டை உதடு கடித்து அடக்கப்பட்ட உணர்வுகளுடன் பார்த்துக்கொண்டிருந்தவள் நீலாவின் செய்தியிலும், ஒன்றரை வருடம் முன்பு என்றதிலும் அவன் இறுதியாய் தன்னை மணக்க கேட்ட நாளை மனதினுள் புரட்டி கொண்டிருந்தாள்.

பலவாறு யோசித்து களைத்து போனவள் இறுதியாய் தன் முட்டாள் தனத்தை எண்ணி தன்னை தானே கடிந்து கொண்டிருந்தாளும் பாவை பார்வை அகனவனை விட்டு அகலவில்லை.

இருவரும் பூஜையில் அமர வேண்டி நீலா அவளை அழைத்துக்கொண்டு அவள் அணிந்திருந்த சுடிதாரை மாற்றி புடவையை கட்ட அதன் நிறத்தில் மேலும் தோய்ந்து போனாள். அது அவளுக்காக அவன் எடுத்திருந்தது அதுவும் அவளுக்கு பிடித்த நிறத்தில் அதன் வேலைப்பாடும் அவளை கவரும் வண்ணம் இருக்கு நெஞ்சடைத்து கொண்டு வந்தது அலருக்கு வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவள் மனம் ஆழ்கடலை ஒத்திருந்தது.

இத்தகைய பேரன்பை தன் அறிவீனத்தால் இனியும் இழப்பதற்கில்லை என்று உறுதி கொண்டவளாய் வெளியில் சென்றாள்.

அங்கு அவனும் வேட்டி சட்டைக்கு மாறி.. ஆண்மை மிளிர நின்றிருக்க, அதை கண்டவளுக்கு சுற்றம் மறந்து தான் போனது.

பாவையின் பார்வை அவனை கொய்து கொண்டிருக்க..,

"போதும்டி..! விட்டா என் பேரனை பார்வையிலேயே முழுங்கிடுவ போல..! போ போய் உட்காரு நேரமாச்சு" என்று தாயம்மாள் கூறவும் தான் தன் மெய்மறந்த நிலையை உணர்ந்தாள் அலர்விழி.

நாணம் மேலிட, "போ அப்பத்தா என் புருஷனை நான் பார்க்குறேன் உனக்கென்ன வந்தது" என்று உதட்டை சுழித்து கொண்டே அவன் அருகே சென்று நின்றாள்.

அவள் அருகே வரவும் இருவரும் ஐயர் முன் வணங்கி அமர்ந்தனர். இருவரையும் மாலை மாற்ற சொல்லவும் அலர்விழி தயக்கமின்றி அவனுக்கு மாலையிட.. யோசனையாய் அவள் முகம் பார்த்தவன், தானும் அவளுக்கு மாலையிட்டு அவர் கூறிய அனைத்தையும் செய்தான்.. அதன் பின் அலர்விழி பால் காய்ச்சி அனைவருக்கும் வழங்க எழில் காலை உணவிற்கான ஏற்பாட்டை கவனிக்க சென்று விட்டான்.

வளர்மதி மற்றும் நாதனின் மனம் நிறைந்து போனது.

நாதனுக்கு அவன் சீர்வரிசை வேண்டாம் என்ற போது கோபம் எழுந்தாலும் வீட்டை முழுதாய் சுற்றி பார்த்தவர்... வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அதனதன் இடத்தில் அழகுற அமைய பெற்றிருப்பதை கண்டவருக்கு.. தன் மகள் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பதில் திருப்தியே.

காலை உணவை வெளியில் இருந்து வரவழைத்திருந்தவன் அனைவரையும் அமர வைத்து கட்டு போட்டிருந்த கையோடு கதிருடன் அவனும் பரிமாற முற்பட... அதை கண்ட அலர்விழி அவன் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டு.. தான் பரிமாற தொடங்கினாள்.

அவனும் அவளிடம் கொடுத்து விட்டு சோபாவில் சென்று அமர சில நிமிடங்களில் அவனிடம் வந்தவள்.. மனைவியாய் தன் கடமை உணர்ந்து இன்று அவன் பசியாற்ற முனைந்தாள்.

அனைவரின் பார்வையும் தங்கள் மீதே பதிந்திருப்பதை கண்டவன் முஷ்டியை இறுகி தன்னை கட்டுப்படுத்தி அவளிடம் இருந்து பெற்று கொண்டான்.

மலர்ந்த முகத்துடன் அவள் தனக்கு ஊட்டுவதை கண்டவன் முகம் மாறியது.

மாலை அனைவரும் கிளம்ப.. எழில் எவ்வளவோ கூறியும், ரத்தினம்மாளும் அவர்களுடனே கிளம்பி விட்டார்.

வளர்மதியும் நீலாவும் மாறி மாறி அலருக்கு அரைமணி நேரம் அறிவுறுத்திய பின்னரே கிளம்பினார்.

அனைவரும் கிளம்பவும் மனதினுள் வெறுமை அரும்ப... விழிகளில் நீருடன் அவர்களின் வாகனம் தெருவை கடக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் உள்ளே நுழைந்தாள்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த எழிலின் பார்வை அவளை துளைத்து கொண்டிருந்தது.

தாய் தந்தையின் பிரிவில் மனம் கனக்க உள்ளே நுழைந்தவள் அவன் பார்வையை உணராமல் தங்கள் அறைக்குள் நுழைந்து தன் மனதை திசை திருப்ப எண்ணி தன் பொருட்களை எல்லாம் அங்கிருந்த கபோர்டில் அடுக்கி கொண்டிருந்தாள்.

மனம் முழுக்க எழிலிடம், “இப்படி கொல்றியேடா... இன்னும் என்னவெல்லாம் வெச்சிருக்க... எல்லாத்தையும் மொத்தமா சொல்லு..! அப்பத்தா சொன்னதுலயே தாங்கமுடியல இப்போ எனக்காக அதுவும் என் காலேஜுக்கு பக்கத்துல, ஆனா நான் தான் லூசு மாதிரி இது எதுவும் தெரியாம இருந்திருக்கேன்" என்றவள் கண்கள் ஓரம் ஈரமாக தொடர்ந்து..,

"மனசை கொல்றது பெரிய பாவம்" அதுலயும் தனக்காகவே வாழும் ஒருத்தனோட மனசை கொல்றது மாபாவம் அத்தகைய மாபாவத்தை தன்னை செய்ய வைத்துவிட்ட விதியை சபித்தவள், அவனிடம் செல்லும் மார்கத்தை இரும்பு கதவு கொண்டு அவளே அடைத்திருக்க இப்போது எவ்வாறு அதை அகற்றுவது என்று அலமலந்து போனாள்.

'அடுத்தடுத்து என்னை சிந்திக்க விடாம உன் காதலால என்னை மூச்சடைக்க செய்றடா நீ …! இப்போ உன் காதலுக்கு நான் தகுதியானவதானான்னு என்னையே யோசிக்க வச்சிட்டல்ல போடா…' என்று மனதார அவனிடம் கேள்விக்கணைகளை தொடுத்து மன்றாடி கொண்டிருந்தாலும் கரம் அதன் வேளையில் ஈடுபட்டிருந்தது.

"என் வேலையை எனக்கு பார்த்துக்க தெரியும் படிக்கிற வேலையை மட்டும் பார்" என்ற அவன் குரலில் திரும்பியவள் அங்கு கதவில் சாய்ந்து நின்று கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு தீவிரமான பார்வையோடு

நின்றிருந்த எழிலை கண்டாள். கரத்தில் இருந்து துணிகளை நழுவ விட்டு அவள் பார்த்த விதத்திலேயே தன் கூற்று அவளை சென்றடையவில்லை என்பதை உணர்ந்தவன் அவளருகே சென்று

“படிக்கிற வழியை மட்டும் பார்ன்னு சொன்னேன்" என்றான்.

அவன் மெய்க்காதலின் ஆழம் கண்டவளுக்கு பேசும் மொழி மறக்க.. தன் காதலை உரைக்க எண்ணி "அது... நா..ன்.., மா.. மா.." என்று தொண்டைக்குழியினுள் எதுவோ அடைக்க நாக்கு வறல மெல்லிய குரலில் வார்த்தை இன்றி இவள் திணறவும் காலையிலிருந்து அவளை பார்த்துக்கொண்டிருப்பவன்அவள் மனம் செல்லும் பாதை அவளுக்கு உவர்பானதல்ல என்பதால்,

"ஏதோ ஒரு விதத்துல இந்த பொறுக்கியை நம்பறதால நம்ம ரூம்க்கு வந்திருக்கன்னு நினைக்குறேன்... கவலையே படாத கண்டிப்பா உன்னுடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்று விட்டு சென்றான்.

அவன் சென்ற பின்பே அவன் வார்த்தைகளின் பொருள் உணர்ந்தவள், "ப்ச்... நான் என்ன சொல்ல வந்தேன். நீ என்ன சொல்லிட்டு போற" என்று சலிப்புற்று கன்னத்தில் கரம் வைத்து உட்கார்ந்துவிட்டாள்.

அன்று இரவு உணவிற்கு அவனுக்காக சப்பாத்தியும் குருமாவும் செய்து இவள் காத்திருக்க... வெளியில் சென்றவன் தாமதமாக வீட்டினுள் நுழையவும் அவனிடம் "சாப்பிட வாங்க" என்று அழைத்தாள்.

"சாப்டுட்டேன்" என்று ஒற்றை சொல்லோடு முடித்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வந்து படுத்துவிட்டான்.

மறுத்து செல்லும் அவனிடம் உரிமையாய் அவன் கரம் பற்றி, “இல்லை முடியாது மாமா நீ சாப்பிட்டுட்டு தான் போகணும்" என்று இழுத்து பிடித்து அமரவைத்து… ஊட்ட அவளுக்கும் ஆசைதான் ஆனால் கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு திரை அவனிடம் இருந்து தன்னை விலக்க தானும் உண்ணாமல் அவர்களறைக்கு சென்றாள்.

மன்னிப்பு என்ற ஒற்றை சொல்கொண்டு அவன் காயத்திற்கு மருந்திட்டு ஆற்ற முடியாது என்பதை உணர்ந்து தன் காதல் கொண்டு மருந்திட அவள் முனைய அவனோ அதற்கு கிஞ்சித்தும் இடம் கொடுக்க மறுத்தான்.

அவனருகே படுத்தவள் அவன் புறம் திரும்பி "உன்னோட சேட்டையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன் மாமா, இது நீ மாதிரியே இல்ல வேற யாரோ ஒரு பீல் கொடுக்குது உன்னோட கோபம் புரியுது முன்ன மாதிரி நீ என்னை கொஞ்ச வேண்டாம் ஆனா சாதரணமா கூட பேச மாட்டேங்கிற அந்த அளவுக்கு என்னை வெறுத்துட்டியா மாமா...?? ஆனா எனக்கு இப்பவும் உன்னை ரொம்ப பிடிக்குது ஆணழகன்டா நீ..!! ஐ லவ் யூ சோ மச் மாமா " என்று அறையில் பரவி இருந்த மங்கிய ஒளியில் அவன் முகத்தை நெட்டி முறித்து பேசிக்கொண்டிருந்தாள்.

இதுநாள் வரை மனத்திரையில் மட்டுமே அவன் முகம் கண்டு மனதார அவள் உணர்வுகளை, தவிப்புகளை பகிர்ந்து கொண்டிருந்தவள் இன்று தைரியம் வரப்பெற்றவளாய் கட்டிலின் ஒரு விளிம்பில் அவன் படுத்திருக்க மற்றொரு விளிம்பில் அமர்ந்து அவன் முகம் பார்த்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

தூக்கத்தில் எழில் அவள் புறம் திரும்பி படுக்கவும் எங்கே விழித்து விட்டானோ என்று ஒரு நொடி அதிர்ந்து கவிழ்ந்து படுத்தவள்... அவனிடம் அசைவில்லை என்பதை உணர்ந்த பின்பு தான் மெல்ல தலை உயர்த்தி அவன் முகம் கண்டாள்.

இரவு ஒளியில் அவன் முகம் வசீகரிக்க மெல்ல திரும்பி அவன் முகம் நோக்கி படுத்தவள்... மீண்டும் தன் வேலையை செவ்வனே தொடர அவன் முகத்தின் வசீகரத்திலும் கம்பீரத்திலும் தன்னை தொலைத்து தூக்கம் இன்றி தவித்து, தத்தளித்து ஒருகட்டத்தில் தன்னை அறியாமல் கண்ணயர்ந்தாள்.

அதிகாலையே விழித்து விட்ட எழில் தன் மீது பாரம் உணர்ந்தவன் விழி தாழ்த்தி பார்க்க... அவன் கண்டதென்னவோ செவ்வரளி நிறம் கொண்ட மெட்டியிட்ட பிஞ்சு விரல்கள் அவன் மார்போடு உறவாடியதையும்... தொடர்ந்து அவன் அசைவில் சிணுங்கிய கொலுசுகளையும் தான்.

அம்மென் பாதம் வருடிட தன்னிச்சையாய் எழுந்த கரத்தை அடக்கியவன்.. பாதத்திற்குரியவளை விழிகள் தேட... அவன் வலப்புறம் அலர்விழி கட்டிலின் விளிம்பில் தலை வைத்து அவன் புறம் பாதம் பதித்து.. அணிந்திருந்த இரவு உடை நெகிழ உறங்கி கொண்டிருந்தாள்.

அவளின் எழில் கோலம் அவனை மூர்ச்சை அடைய செய்ய அவள் கொடுக்கும் அவஸ்த்தை தாளாமல் கரங்களை பின்னே கோர்த்து கொண்டு தலை சாய்த்து சில நொடி கண்மூடியவன் பின் மெல்ல அவள் பாதங்களை விலக்கி எழுந்து அவள் புறம் வந்து இடையிலிருந்து மேலேறி இருந்த அவள் சட்டையை இழுத்து விட்டு சரி செய்யவும்... அவன் தொடுகையில் உடனே விழிப்படைந்தவள் அருகில் அவன் முகம் கண்டு.. அவனை எதிர்பாராதவளாய் கயல் விழிகள் மருள சட்டென எழுந்து அமர்ந்தாள்.

பாவை பார்வை மொழி புரிந்தவன் பின்னந்தலையை கோதி உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து... அவளை உறுத்து விழித்து "சின்ன குழந்தையா நீ ஒரு பொசிஷன்ல தூங்க மாட்ட" என்று காய்ந்து விட்டு துவாலையோடு குளியலறைக்குள் புகுந்தான்.

அலர்விழியோ "நான் ஒண்ணுமே பண்ணலையே... அப்புறம் எதுக்கு திட்றாங்க" என்று அவன் கோபம் எதனால் என்று புரியாமல் " ஹ்ம்ம்ம்... என்று தலையணையை தூக்கி கீழே போட்டவள்.., தெரியாம தப்பு பண்ணிட்டா அதையே மனசுல வச்சிட்டு எப்பப்பாரு மூஞ்சிய திருப்பிக்கிறது இல்ல திட்டறது" என்று சிணுங்கி கொண்டு எழுந்து சென்றாள்.

குளித்து முடித்து வந்தவன் அழைப்பு மணியின் ஒலியில்... அவசரமாய் உடை மாற்றி சென்று கதவை திறந்தான்.

மறுநொடி 'மச்சான்' என்று ஆர்ப்பாட்டத்துடன் எழிலை அணைத்துக்கொண்டே வீட்டினுள் தள்ளி சென்றான் வெற்றி.

ஆஆஆ... விட்றா டேய்...! என்ன பண்ற என்று அவனுக்கும் தனக்கும் இடையில் மாட்டிக்கொண்டு நசுங்கும் அவன் காயம் கொண்ட கரத்தை விடுவிக்க போராடினான்.

விலகி நின்ற வெற்றி அவனிடம் "என்ன மச்சான் வந்தவனை வான்னு சொல்லாம... விட்றாங்குற" என்று கூறியவாறு அவனை மீண்டும் அணைக்க போக "போடாங்க.." என்று பின்னே நகர்ந்தவன் இடக்கரம் கொண்டு வலக்கரத்தை அழுத்தி கொடுத்தான்.

அதை கண்ட வெற்றி "என்ன மச்சான் கட்டு ரொம்ப சிறுசா இருக்கு நான் கொறஞ்சது கையே உடைஞ்சிருக்கும்னு இல்ல எதிர்பார்த்தேன்" எனவும்..,

"என்னடா உளர்ற.." என்று பற்களுக்கிடையில் வார்த்தையை துப்பினான் எழில்.

"அதுக்கில்ல மச்சான் என் தங்கச்சி தூரமா இருந்தப்பவே உன் தொல்லை தாங்காது... இப்போ பக்கத்துல இருக்கும் போது சும்மாவா இருந்திட போற..? எப்படியும் உன் வேலையை காட்டி இருப்ப... என் தங்கச்சி அதுக்கு பதில் கொடுத்திருப்பா அதான் சொன்னேன்டா..!" என்று உரக்க சிரிக்கவும்..,

அவன் முதுகில் ஓங்கி அறைந்தவன் "அப்போ உன்னையெல்லாம் இந்நேரத்துக்கு செல்வி ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கனும்டா" என்றவன் கண்ணில் தாமரை படவும்,

"உள்ள வா செல்வி.. எப்படி இருக்க..?" என்றான்.

'நல்லா இருக்கோம் அண்ணா' என்றவளை மாடியில் இருந்து அழைப்பு மணி ஒலியில் கீழே வந்த அலர் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள்.

அனைத்து நலம் விசாரிப்புகளையும் முடித்து அனைவருக்கும் காபி கொண்டு வந்தாள்.

இருவருக்கும் கொடுத்தவள் எழிலிடம் நீட்ட... "வேண்டாம்" என்றான்..,

ஏற்கனவே அவன் பாராமுகம் அவளை வதைக்க இப்போது அவனுக்காக செய்யும் செயல்களையும் அவன் தவிர்க்க மனம் சுணங்கினாலும், முயற்சியை கைவிடாது நினைவு வந்தவளாய்.., "டீ கொண்டு வரட்டுமா..?" என்று கேட்க..

"வேண்டாம்" என்று அழுத்தமாய் உரைத்தவன் வெற்றியோடு உரையாட தொடங்கி விட்டான்.

சில நொடிகள் தயங்கி நின்றவள் சுழித்த உதடுகளுடன் அவனை பார்த்தவள் "இப்படி ஒதுக்கி வைக்கிறவன் எதுக்குடா என்னை இங்க கூட்டிட்டு அங்கேயே விட வேண்டியது தானே பெருசா நான் இப்போ அலர்விழி அகனெழிலன்னு சொல்லி கூட்டிட்டு வந்த இப்போ எது பண்ணினாலும் ஒதுங்கி போற.. சாரி சொல்ற தப்பை நான் பண்ணலை மாமா எனக்கே புரியுது ஆனா ப்ளீஸ் நான் என்ன தான் மாமா பண்ண..? எனக்கு புரியலை, வேணும்னா இன்னும் ரெண்டு அடி அடிச்சி எனக்கு புரிய வை ஆனா இப்படி தள்ளி போகாத வலிக்குது " என்று அவன் ஒதுக்கம் தாளாமல் மனதினுள் அவனிடம் மன்றாடியவாறே தன் அறைக்கு சென்றாள்.

"என்ன மச்சி பெட்டி படுக்கையோடு காலைலயே வந்திருக்க..?" எழில்..,

அதை ஏண்டா கேக்குற கல்யாணத்துக்கு முன்ன வரை பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ரூம் எடுத்து தங்கி இருந்தோம் கல்யாணத்துக்கு அப்புறம் நானும் நாயா பேயா அலைஞ்சுட்டேன்... கொரோனா அதுவுமா எவனும் வீடு தரமாட்டேங்குறான்.. எங்க வீட்லயும் என் கஷ்டத்தை புரிஞ்சிக்காம வாரத்துல ரெண்டு நாள் இங்க தானடா இருக்க அப்புறம் எதுக்கு தனி செலவுன்னு எங்களை பிரிச்சிட்டாங்கடா என்று வராத கண்ணீரை துடைக்கவும்..,

"போதும்.. போதும் மேல சொல்லு" என்றான் எழில்.

'என்ன சொல்ல மச்சி அதான் நீ இவ்ளோ பெரிய வீட்டை என் தங்கச்சிக்காக வாங்கி வச்சிருக்க... அவ பயப்பட கூடாதில்ல அதான் நாங்க துணைக்கு' என்றவனை, உன்னை நான் அறிவேன் என்பதாய் முறைத்த எழில்

"யார் அனுப்பினா..?" என்று கேட்கவும்..,

"அப்பத்தா" என்ற வெற்றி நண்பனை அணைத்து கொள்ள,

"நினைச்சேன்.."

'சாரி மச்சி அமுலுக்கு நைனா மேல ...' என்று தொடங்கியவன் "என்னைவிட உனக்கு நல்லா தெரியுமேடா நான் என்ன புதுசா சொல்ல சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்...' என்றான்.

வெற்றிக்கு எதுவும் பதிலளிக்காமல் அவனை அழைத்து சென்று அவர்களுக்கான அறையை காட்டினான்.

'அறையினுள் சென்றதும் மச்சான் நான் ஒரு வாரம் லீவுல வந்திருக்கேன்டா' என்று உண்மையை உரைத்தவன் அவனிடம் ஊட்டிக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் என்று பிளைட் டிக்கெட் முதற்கொண்டு ட்ரெயின் டிக்கெட் வரை அவனிடம் நீட்டவும்..,

'யாரை கேட்டுடா முடிவு பண்ண... இப்போதான் லீவு முடிஞ்சி ஜாயின் பண்ணி இருக்கேன்.. திரும்ப போய் நிற்க முடியாது அது மட்டுமில்லை எனக்கு அடுத்த வாரம் மதுரைல ட்ரைனிங் இருக்கு கிளம்பியே ஆகணும்' என்றான்.

'அடுத்த வாரம் தானே மச்சி இது மூணு நாள் ட்ரிப் தான் வந்துட்டு உன் கடமையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்து யார் வேண்டாம்னு சொன்னா..? என்றிட,

'டேய் அவளுக்கும் இந்த வெள்ளி கிழமைல இருந்து எக்ஸாம் ஆரம்பிக்குதுடா...'

'அதனால என்ன ஒரு நாள் முன்னாடியே வந்துடுவோம்...'

'இல்லைடா அது சரிப்படாது... நாங்க வரலை நீங்க போயிட்டு வாங்க' என்றான்.

"ஏன்டா நாங்க மட்டும் போறதுன்னா அங்க இருந்தே போயிருக்க மாட்டேனா..??" என்றவன் அவனை நெருங்கி

"நீ வரலைனா நானும் போகல, என்ன ஒன்னு காலம் பூரா என்னை ஹனிமூன் போக விடாத பாவம் உன்னை துரத்தும் பரவாயில்லையா...? அதுமட்டுமில்லை.." என்று ஆரம்பித்து அவன் காதில் ரத்தம் வரும் வரை எழிலை பேசியே கரைத்தவன்.. கைகாயத்தை காரணம் காட்டி விடுப்பு எடுக்க செய்தான்.

எழில் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு திரும்பி வர,

"சரி மச்சி அப்போ போய் பேக் பண்ணு..." எனவும்

'இன்னிக்கேவா' என்று எழில் அதிர

"ஆமா சாயங்காலம் அங்க ரீச் ஆகுற மாதிரி தான் பிளான்" என்றான்.

"அப்போ எல்லாம் பக்காவா பிளான் பண்ணி தான் வந்திருக்க" என்று அவனை முறைக்க..,

'உனக்கு நண்பனா வாய்ச்சிட்டு... இவ்ளோ கூட பண்ணலைனா எப்படி மச்சி..?? சீக்கிரம் கிளம்புங்க' என்றவாறு கட்டிலில் அயர்ந்து விழுந்தான்.

அரை மணி நேரம் கழித்து ஆண்கள் இருவரும் வரவேற்பறையில் காத்திருக்க... அறையில் இருந்து "தாமரை" என்ற அலரின் குரல் கேட்கவும்... கீழே இருந்தவாறே "என்னடி..." என்று தாமரை கேட்க, இங்க வா என்ற அலரின் குரலில்... அவளிடம் சென்றாள்

அங்கு அவளோ புடவையை பாதி கட்டிய நிலையில் அடுத்து எங்கு.. எப்படி.. சொருகுவது என்று புரியாமல் நின்றிருந்தாள்.

'ட்ராவல் தானே பண்ண போறோம்... எதுக்குடி இப்போ புடவை கட்டுற..?' என்று தாமரை கேட்கவும்,

"உனக்கு எதுக்கு அதெல்லாம் கட்டி விடுற வேலையை மட்டும் பார்" என்றவள் தயாராகி தாமரையோடு கீழே வர பார்வை மொத்தமும் எழில் மீதே இருந்தது அன்று தாவணியில் முதல் முறை பார்த்தபோது அவன் கண்களில் தெரிந்த மயக்கம் இன்றும் பசுமையாய் அவள் மனதை ஆக்கிரமித்து இருக்க இன்றும் அதை எதிர்பார்த்தாள் ஆனால் அவனோ அவள் வரவை உணர்ந்தாலும் அலைபேசியில் மும்முரமாய் யாருடனோ பேசியவாறு வெற்றியிடம் தலையசைத்து அனைவரும் வெளியில் வந்ததும் வீட்டை பூட்டி நடக்க துவங்கினான்.

"டேய்.. டேய்... நில்லுடா..! நாம என்ன ஊட்டிக்கு பாத யாத்திரையா போக போறோம்... கார்ல ஏறுடா" என்று வெற்றி அழைக்கவும்..,

'பக்கத்துல கோவில் இருக்குடா ஒரு தேங்காய் உடைச்சிட்டு கும்பிட்டுட்டு வரலாம்' என்றவன் நடையை தொடர... அனைவரும் அவன் பின்னே சென்றனர்.

அலரின் சிந்தை.. மனம்... செயல் என அனைத்தையும் எழிலே ஆக்கிரமித்திருக்க.. பெண்ணின் தவிப்புகளை வார்த்தை கொண்டு வடிக்க தெரியாமல் பாவை அவள் பேதலித்து செயல்கள் மூலம் உணர்த்திட முனைந்தாள் ஆனால் இங்கு அகனவனோ அவள் தவிப்புகளை உணராமல் தன் போக்கில் விட்டேத்தியாய் சென்று கொண்டிருந்தான்.

அவனுக்கு பிடித்த நிறத்தில் சேலை கட்டி அழகாக ஒப்பனை செய்து மலர் சூட்டி அவனை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தவள் அதற்கான அவன் மறுமொழியை தேடி நொடிக்கொருமுறை அவன் முகத்தை ஆராய்ந்தவாறே நடந்து கொண்டிருந்தாள்.

அவள் சிந்தையை சிறைபிடித்து கல்மிஷம் செய்பவனின் மீதே அவள் பார்வை பதிந்திருந்ததில் வளைவில் போடப்பட்டிருந்த வேக தடையை கவனிக்காமல் கால் வைக்கவும் புடவையில் சிக்கி விழ போனாள்.

அதற்குள் அவளை ஒற்றை கரம் கொண்டு எழில் தாங்க அலருக்கோ இடையில் சில்லென்ற அவன் கரம் பட்ட இடம் குறுகுறுக்க அவன் சட்டையை பிடித்துகொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்தவளின் மனம் பட்டாம்பூச்சியாய் அடித்துக்கொள்ள விழி விரித்து அவனையே பார்த்திருந்தாள் அலர்.

அவளை பிடித்து நிறுத்தியவன் "இதை கட்டிக்கிட்டு தான் நடக்க தெரியலையே... அப்புறம் எதுக்கு தேவை இல்லாத வேலை" என்று சிடுசிடுக்கவும் மலரவளின் மதிவதனம் கூம்பி போனது.

"உனக்காக பார்த்து பார்த்து புடவை காட்டினேன் பாரு என்னை சொல்லணும்" என்று சிணுங்கியவாறே அவன் பின்னே கோவிலுக்குள் சென்றாள்.

தரிசனம் முடிந்ததும் தாமரை வெற்றிக்கு இயல்பாய் விபூதி குங்குமம் இட்டு விட.. இதை கண்ட அலர் தானும் அவனுக்கு வைக்க பேராவல் கொண்டு அவன் அருகே சென்றால்.

ஆனால் அவள் ஆவலை தடை செய்யும் விதமாக அகனெழிலன் காயப்பட்ட கரத்துடன் அவனே கண்ணாடியை பார்த்து வைத்து கொண்டிருப்பதை கண்டவள் முகம் கடுகடுத்தது.

'மாமா..' என்று அவள் இதழ்கள் துடித்தாலும் அவனை நெருங்க ஏதோ ஒன்று தடுப்பது புரிய நிதானமாக அதை ஆராய துவங்கினாள்.

ஆராய்ச்சியின் முடிவில் அன்று போல் அவனை நெருங்கி காயப்படுத்திவிடக்கூடாது என்பது புரிய வேறு எப்படி அவன் வலியை தீர்ப்பது என்ற வழி அறியாது சோர்ந்து போனாள்.

கோவிலில் இருந்து திரும்பியவர்கள் காலை உணவை முடித்துக்கொண்டு ஏர்போர்ட் சென்று விமானம் மூலம் கோவை சென்று சேர்ந்தனர்.

அங்கிருந்து ஆறு மணிநேர பயணம் மேற்கொண்டு மலையரசியின் வாயிலை இரவு நெருங்கும் நேரத்தில் அடைந்தவர்கள்... பயணக்களைப்பில் இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கிப்போயினர்.


ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !!' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். இன்னும் மூன்று அத்தியாயங்களில் முதல் பாகம் நிறைவு பெற்று விடும் இதுவரை படிக்காதவர்கள் படிக்க தொடங்கலாம்.. 'உயிரில் உறைந்த உறவே !!' பதிவு மாலை உண்டு.
Ezhil semma but alar pavam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top