நள மஹாராஜாவின் சரித்திரம்

#1
சனியின் தோஷம் விலக படிக்க வேண்டிய கதை
அற்புத பலன் தரும் நளமகராஜாவின் சரித்திரம்

கால சக்கரமும் கர்மபலனும்
நளன் தமயந்தி கதை
இதைப் படிப்பதினால் சனி தோஷம் விலகும்

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர்.
அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர்.
இரவாகி விட்டதால் குகைக்குள் துறவியும் ஆகுகியும் தங்கினர்.
அதில் இருவர்தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை.
தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார்.
அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது.
விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர்.
துறவி அன்னப்பறவையாக பிறந்தார்.
நளன் நிடத நாட்டின் மன்னராக இருந்தான். ஒரு நாள் அன்னப்பறவையைக் கண்டான்.

நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்திதான்.
அவளை திருமணம் செய்து கொள்.
உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது.
அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர்.
அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர்.
எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர்.
நிஜ நளனும் வந்திருந்தான்.
புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள்.
அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.

தமயந்தியை பெற முடியாத தேவர்கள் சனீஸ்வரரிடம் நளனைப் பிடிக்கும்படி கூறினர்.
கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார்.
அதே நேரம் கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார்.
நளனோ நல்லாட்சி செய்தான்.
இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

ஒரு முறை பூஜைக்கு தயாரான போது நளன் சரியாக கால் கழுவவில்லை.
“இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆள முடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின் புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான்.
குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான்.
காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

பின், மனைவியையும் பிரிந்தான்.
நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது.
ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான்.
ஆனால் அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான்.
தப்பித்த அவள் சேதி நாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள்.
ஒரு வழியாக அவளை தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன் காட்டில் கார்க்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான்.
அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது.
அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான்.
அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறு சுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள்.
ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

அப்போது நளனைப் பிடித்த சனி நீங்கியது.
தேரோட்டியாக இருந்த நளனையும் தமயந்தி அடையாளம் கண்டாள்.
நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுய உருவை மீண்டும் பெற்றான்.

திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது ஏழரைச் சனி நீங்கியது.
சனீஸ்வரர் நளன் முன் தோன்றி தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார்.

“சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக் கூடாது.
என் மனைவி பட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது.
என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான்.
சனி பகவானும் அருள் புரிந்தார்.

★நளன் கதை படித்த நீங்கள் உங்கள் கடமையைச் சரி வரச் செய்தால் சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்!!!

சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

நளன் தமயந்தி வரலாறு தோற்றுவாய்
++++++++++++++++++++-++++++++++++++++++++++++++++
நள தமயந்தி பகுதி

தர்ம ராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.
எதற்காக சூதாடினோம்
எதற்காக நாட்டையும் தம்பியரையும் மனைவியையும் பணயம் வைத்து அவமானப்பட்டோம்?
என் ஒருவனது தவறான முடிவால் இன்று எல்லாரும் சிரமப்படுகின்றனரே!
இதைத்தான் விதி என்பதோ!
ஏன் மனிதனை இப்படி கஷ்டங்கள் வாட்டுகின்றன!
கிருஷ்ணா! என்னைப் போல் கஷ்டப்பட்டவர் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள்
இனியும் இருக்கக் கூடாது என்று பெருமூச்செறிந்த வேளையில் சிரிப்பொலி கேட்டது.
சிரித்தவர் வியாச மகரிஷி.
தர்மராஜா அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
சாதாரணமான மகரிஷியா அவர்!
பராசர முனிவருக்கும் யோஜனகந்தி என்னும் செம்படவர் குலத்தில் வளர்ந்த பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையான அவர் மகாபாரதம் என்னும் காவியம் எழுதும் பாக்கியம் பெற்றார்.
உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொக்கிஷம் அது.
இந்த கலியுகத்திலும் நமது பாரதத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் தர்மம் என்னும் கோஷத்திற்கு காரணம் இந்த இதிகாசம்தான்.
இந்தக் காவியத்தை எழுத அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

அக்காலத்தில் சில மகரிஷிகளுக்கு கதை சொல்லத் தெரியும்.
ஆனால் எழுதத் தெரியாது.
எனவே நல்ல எழுத்தர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
மகாபாரதம் தர்மத்தை நிலை நிறுத்த எழுதப்பட்ட இதிகாசமல்லவா!

இதை எழுதும் பொறுப்பை விநாயகப் பெருமான் முன்வந்து ஏற்றுக்கொண்டார்.
யானைக்கு அழகே தந்தம்தான்!
ஆனால், அந்த ஆனை முகத்தான் தன் தந்தத்தையே ஒடித்து வியாசர் சொல்லச் சொல்ல எழுத ஆரம்பித்து விட்டார்.
எழுதுகோலாக தந்தத்தை ஒடித்துக் கொண்டவர் எழுதுவதற்காக அவர் தேர்ந்தெடுத்த பொருள் தெரியுமா?
புராணங்களில் வர்ணிக்கப்படும் மேருமலை
அப்போது வியாசர் விநாயகருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.

ஐயா, கணபதி
நீர் எழுதுவதெல்லாம் சரி
நான் சொல்வதை சற்றும் தாமதிக்காமல் எழுதிவிட வேண்டும்.
ஏனென்றால் நான் ரொம்ப வேகமான ஆள்.
சற்று தாமதித்தாலும் திரும்பச் சொல்ல மாட்டேன்
சரியா? என்றார்.
இவரே இப்படி என்றால் பார்வதி பாலகனான கணேசன் விடுவாரா என்ன?
அதெல்லாம் இருக்கட்டும் ஓய்
நான் எழுதும்போது நீர் நிறுத்தி விட்டால் அப்படியே எழுந்து போய்விடுவேன்.
ஆனால் தான் எழுத்தராக இருக்க வேண்டுமானால் இந்த நிபந்தனைக்கு வியாசர் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லி விட்டார்.
ஆரோக்கியமான போட்டிதானே
வியாசர் விடாக்கண்டனாக ஸ்லோகங்களை அள்ளி விட விநாயகர் வேகமாக எழுதித் தள்ளினார்.
ஒரு கட்டத்தில் வியாசருக்கு மூச்சு முட்டிவிட்டது.
எவ்வளவு ஸ்லோகங்களைச் சொன்னாலும் கண நேரத்தில் எழுதி விடுகிறாரே இந்தக் கணபதி
உஸ்... என்று மூச்சு வாங்கியவர் ஒரு தந்திரம் செய்தார்.
கணேசா நீர் எழுதுவதெல்லாம் சரி..
சில சமயங்களில் நான் சில ஸ்லோகங்களைச் சொல்லி அதற்கு விளக்கம் கேட்பேன்
நீர் விளக்கத்தைச் சொல்லிக் கொண்டே அடுத்து நான் சொல்லும் ஸ்லோகங்களையும் எழுத வேண்டும் என கண்டிஷன் போட்டார்.
இப்படி மடக்கப் பார்க்கிறீரா? என்று ஆனைமுகன் தலையை ஆட்டினார்.
வேதங்களைத் தொகுத்தவருக்கே இவ்வளவு தைரியம் என்றால் வேதநாயகனின் பிள்ளைக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்!
இவர்களது போட்டி தொடர்ந்தது.
சில கடுமையான பொருளுள்ள இப்போது ஒரு சுவையான ஆனால் கடினமான ஸ்லோகம் ஒன்றைச் சொல்லி விளக்கம் கேட்பார் வியாசர்.
கணபதி இதற்குரிய பொருளை அரை நொடிக்குள் சொல்லி விட அதற்குள் அடுத்த ஸ்லோகத்தை சுதாரித்து சொல்லத் தொடங்குவார் வியாசர்.
இப்படியாக பெரும் சிரமமெடுத்து வியாசர் தயார் செய்தது மகாபாரதம்.
அதில் தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக் கொண்ட வியாசர் தர்மராஜா முன் தோன்றினார்.
தர்மரின் மனக்குறிப்பை அறிந்த அவர் தர்மராஜா நீ ஒருவனே உலகில் கஷ்டப்படுபவன் போலவும் உனக்கு மட்டுமே தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தது போலவும் நினைக்கிறாய்.
இது சரியல்ல
நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது நம்மிலும் கஷ்டப்படுபவர்களைப் பார்த்து ஆறுதலடைய வேண்டும்.
உனக்கு நிடத மகராஜன் நளனைப் பற்றித் தெரியுமா?
அவனும் உன்னைப் போலவே சூதாட்டத்தில் நாடிழந்தவன்.
சிறிய கடமை ஒன்றை செய்யாமல் விட்டதற்காக பெரும் இழப்பைச் சந்தித்தவன்.
அவனும் உன்னைப் போலவே நல்லவன்.
உனக்காவது தெரிந்தே துன்பம் வந்தது.
அவனுக்கோ மக்களைக் காக்க வேண்டிய தேவர்களே சோதனைகளைக் கொடுத்தனர்.
அவனுடைய வரலாற்றைக் கேள்.
அதன் பிறகு உனக்கு வந்துள்ள துன்பம் மிகச் சிறியது என்பதை உணர்வாய் என்றார்.
தர்மராஜா அந்தக் கதையைக் கேட்கத் தயாரானார்.
நளமகாராஜனின் கதையைக் கேட்பவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் நடக்காது என்பது நீண்டகால நம்பிக்கை.
அது மட்டுமல்ல
இந்த சரிதத்தைப் படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
நாமும் சனி பகவானை வணங்கி இந்தக் கதையைத் துவக்குவோம்.

அன்று அதிகாலையில், குகைக்கு வெளியே கொட்டும் மழையில் பாதுகாப்புக்கு நின்ற தன் கணவன் ஆகுகனைக் காண வேக வேகமாக வெளியே வந்த அவனது மனைவி ஆவென அலறி விட்டாள்.
ரத்தச்சகதியாகி வெளியே கிடந்தான் ஆகுகன்.
என் அன்பே
தியாகத்தின் திருவிளக்கே
தர்மத்தின் தலைவனே
தங்களுக்கா இந்தக்கதி?
பிறருக்கு உபகாரம் செய்த உங்களது உயிரையா இறைவன் பறித்துக் கொண்டான்?
இறைவா இதுதான் உனது அரசாங்கத்தின் தர்மமா என்று கொதித்தாள்.
அவளது அலறல் கேட்டு குகைக்குள் இருந்த துறவி ஓடி வந்தார்.
பாச பந்தங்களைத் துறந்த அவரது மனதில் கூட வேடனின் மரணம் சோக அலைகளை எழுப்பியது.
கணவனின் உடல் மீது கதறியபடியே விழுந்த அவள் அதன் பின் எழவில்லை.
என்னுடைய உயிர் காக்க இந்த வேடனும் அவனது மனைவியும் உயிர் துறந்தனரே என்று கவலைப்பட்ட துறவி முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார்.
 
Last edited:
#3
முடிந்ததுப்பா
முனிவர் நினைத்து பார்க்கும் முதல் நாள் நிகழ்வுகள் முதலில் வந்திருக்கு பாருங்க
அந்த வேடனும் அவன் மனைவியும்தான் அடுத்த பிறவியில் நளன் தமயந்தியாக பிறந்தார்கள்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes