கொலுசொலி மயக்குதடி - 3

Advertisement

வாசு வீட்டின் லைட் ஸ்விட்சை போட்டதும் இருள் சூழ்ந்த வீட்டில் வெளிச்சம் பரவியது.. வீட்டின் உள்ளே வந்த நிலாவோ அதிர்ச்சியாகி போனாள்....

என்ன வாசு இது... வீடு இப்படி இருக்கு.... ஏன் வீட்ல கார்கில் போர் ஏதாவது நடந்துச்சா... ஐயோ முடியல.... இயல்பாய் அவனிடம் கதைக்கும் அளவிற்கு நிலா முன்னேறி இருந்தாள்...

வாசுவோ அசடு வழிந்தபடி... பேச்சலர் வீடுமா முன்ன பின்ன அப்படி தான் இருக்கும்.... இனிமேல் தான் நீ இருக்கப் போறியே நானும் பார்க்கறேன் மேடம்... வாசு அவளைப் பற்றி அறியாமல் வாயை விட்டான்....

ஏன் வாசு துடைப்பக் கட்டை எங்க இருக்கு.... நிலாவின் ஒற்றை கேள்வியில் வாசுவோ அரண்டு போய் அனிச்சையாக ஓரடி பின்னால் நகர்ந்தான்

பேச்சு பேச்சாக இருக்கனும்... ஆயுதத்தை எல்லாம் எடுக்கக் கூடாது.... முதலில் அவனின் செய்கையையும்,பேச்சையும் புரியாமல் பார்த்தவள், உடனே கலகலவென சிரிக்கத் தொடங்கினாள்...

பார்த்து பார்த்து மெதுவாக சிரி....பல்லு சுளுக்கிக்க போகுது....வாசு பொய்யாய் முறைத்தான்....

வாயின் மேல் ஒற்றை விரலை வைத்துக் கொண்டவள்.... சரிசரி சிரிக்கல... அதையும் மீறி அவளின் சிரிப்பு பேரலையாய் பொங்கியது....

துடைப்பம் கேட்டது அடிக்கறதுக்கு இல்ல... வீட்டை பெருக்க.... அவள் சொல்லிக் கூட முடிக்கவில்லை வாசு சிரிக்கத் தொடங்கினான்...

என்ன ரிவன்ஞ்ச் ஆ... தாங்கள் சிரிப்பதன் காரணம் என்னவோ.. நாடக பாணியில் கேட்டாள்....

உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மா....மணியை பாரு... பன்னிரண்டு ஆகப் போகுது.. பேய் எல்லாம் வாக்கிங் போற நேரம்... இப்போ போய் நீ துடைப்பத்தோட நின்னா அதுகளை அடிக்க போறியோனு பயந்திட போகுது....

வாசு சொன்ன பின்பே ஆர்வக் கோளாரில் உளறி விட்டது புரிந்தது...இருந்தும் அவன் முன்பு கெத்தை விட மனமில்லை... இப்போ என்ன சொல்லப் போறோம்னு நம்மளையே பார்க்கறானே... என்ன பண்ணலாம் சீக்கீரமாக யோசி..

ஆமா நான் தொடப்பம் எங்கே இருக்குனு தானே கேட்டேன்... இப்போவா வீட்டை பெருக்கப் போறேன்னு சொன்னேன்.. ஆமா பேய் என்ன உங்க எக்ஸ் கேர்ல் ப்ரண்ட்ஸ் ஆ... நீங்க லவ்வ அக்சப்ட் பண்ணலனு சூசைட் பண்ணிட்டாங்களா... அதனால தான் அதுக பயப்படும்னு நீங்க வருத்தப்படறீங்க....

ச்சு..ச்சு.. என்ன ஒரு அக்கறை.. என்ன ஒரு புரிதல்.... நிலா போட்ட போடில் வாசு வாய் பொத்தி நின்றான்.... அது என்று கெத்துடன் நின்றாள் நிலா....

முடியல நிலா... மணி வேற ஆயிருச்சு.... தூங்க போலாம்... இன்னைக்கு நீ என்னோட ரூம்ல தங்கிக்கோ... நான் ஹால்ல படுத்துக்கற... நாளைக்கு இன்னொரு ரூம் ரெடி பண்ணிடலாம்.....

வாசு சொன்னதை எல்லாம் சரியென ஒப்புக் கொண்டாள் பின்னால் வரப் போகும் ஆபத்து தெரியாமல்...

அவனது ரூமிற்குள் அவள் போக.... நொந்தே போனாள்... அவனது துணிகள் அங்கு பெட் முழுதும் இறைந்து கிடந்தது... பொருட்களும் அந்தந்த இடத்தில் இல்லாமல் பழங்கால பொருட்கள் பாதுகாக்கும் அருங்காட்சியகம் போல இருந்தது...

திரும்பி பார்த்து முறைத்தவள்... என்ன யா இது... ரூமா.. இது ரூமா னு கேட்கறேன்.... பொறுப்பே இல்லை... எப்படி இங்க தூங்கறது...

வாசு அவள் புலம்பத் தொடங்கவும் வேகமாக ஓடிப்போய் கைகளுக்கு அடங்கும் அளவு துணிகளை கைகளில் அள்ளிக் கொண்டான்.... இப்போ பாரு உட்காரும் அளவு இடம் கிடைச்சாச்சு... வாங்க வந்து அமருங்கள்....

வாசு கூறிய பாவனையில் வாய்விட்டு சிரித்தவள் அவன் காட்டிய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.... சரி உட்கார இடம் ஓ.கே எப்படி தூங்கறது...இன்னும் எவ்ளோ நேரம் அந்த துணிகளை எல்லாம் கைகளிலேயே வச்சுருக்க போறீங்க...

ஹலோ வெயிட்... வெயிட்... இப்போ பாரு ஐயாவோட வேகத்தையும் திறமையையும் என்றவன்... நிற்காமல் கடகடவென அனைத்து துணிகளையும் எடுத்து அங்கு இருந்த அழுக்கு கூடையில் வைத்து அடைத்தான்....

ஐயே அப்போ இதெல்லாம் அழுக்குத் துணிகளா.... என்ன வாசு இது... இவ்ளோ துணியை சேர்த்து வச்சிருக்கீங்க... போன கோபம் புசுபுசுவென ஏறியது...

ஆத்தா... மகமாயி.. ஏன் இப்போ மலை ஏறுற... மீ பாவம்.... நான் அவசரமாக ஊருக்கு கிளம்பிட்டேன்.. துவைக்க இங்க ஒரு ஆயா வருவாங்க... நான் போற அவசரத்தில் அப்படியே மறந்துட்டு போயிட்டேன்...

ஸ்கூல் பையன் ஹோம்வொர்க் நோட்டை மறந்து விட்டு வந்ததை போல காரணம் சொன்னான்... ஐயோ வாசு நீங்க இருக்கீங்களே...

நான் இருக்கேன்.. நீங்க தூங்குங்க... ஆல்ரெடி ரொம்ப லேட் ஆயிருச்சு.... நாலைந்து கொட்டாவிகளை ஒன்றாக வெளியிட்டான்....

நீங்க எங்க தூங்கப் போறீங்க...

வெளியே சோபாவில்..... அவள் ஏன் கேட்கிறாள் என அவனிற்கு புரிவில்லை...

வெளியே ஹாலில் இருந்த சோபாவிலா... அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு சரி போங்க என்று முடித்து விட்டாள்....

ஏன் அதுக்கு இப்படி பார்த்தாள்.. யோசித்தபடியே போனவன் சிறிது நேரத்திலேயே அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டான்...

என்னடா இது இந்த வாசுவிற்கு வந்த சோதனை...நம்ம பாதி உயரத்திற்கு கூட இந்த சோபா பத்தாது போலயே... வருவது வரட்டும் என கால்களை சுருக்கி படுத்து விட்டான்...

உடல் ஓய்விற்கு கெஞ்சியும் தூக்கம் தான் வரவில்லை... இதற்கு முன்பு இப்படி படுத்து உறங்கி பழக்கம் இல்லாததால் உறக்கம் அவன் அருகில் கூட வராமல் எட்ட நின்று போக்கு காட்டியது.....

வாசு இது சரியாக வராதுடா... தனக்குத் தானே பேசிக் கொண்டவன் எழுந்து அமர்ந்து கொண்டான்...பத்து நிமிடம் கூட ஆகவில்லை... காலை சுருக்கி படுத்ததில் கால் வேறு வலித்தது...

இதுக்கு மேல இப்படி உட்கார்ந்துட்டு இருக்க முடியாது... நாளைக்கு வேற ஆபிஸ் போகனும்... வெட்கத்தை விட்டு கேட்க வேண்டியது தான்.. தயங்கியவாறு எழுந்து கதவருகில் போனவன் கதவைத் திட்ட முடியாமல் தேங்கி நின்றான்...

வேண்டாம் என்ன ஆனாலும் சரி... அவங்க நம்மளை நம்பி வந்தவங்க... இப்போ போய் கதவை தட்டுனா நல்லா இருக்காது... அவங்க இங்க இருக்கறதை ஒருதுளிகூட சங்கடமாக நினைக்கக்கூடாது... ஆமா அதுதான் சரி... அதற்கு பின்பு அவன் ஒருநொடி கூட நிற்கவில்லை.. சோபாவில் படுத்து உறங்கி விட்டான்....

நிலாவிற்கோ படுத்தும் தூக்கமே வரவில்லை... இது சரியா... யாரென்று தெரியாத திருமணம் ஆகாத ஒரு ஆணுடன் அவனது வீட்டில் தனியாக தங்கலாமா...

நாம் எப்படி இருந்தோம்... லிவிங் டூகெதர் என்ற மேலை நாட்டு கலாச்சாரத்தை அறவே வெறுக்கும் குணமுடையவள்.. இன்றோ நான் எப்படி இப்படி மாறினேன்..

ஏய் வாசுவை பார்த்து அப்படி நினைப்பாயா... அவன் இரக்கப்பட்டு உனக்கு அடைக்கலம் கொடுத்தவன்... அவனோடு உன்னை வைத்து லிவிங் டூகெதர்... ச்சே எப்படி இப்படி நினைக்க மனம் வந்தது... மனசாட்சி அவளை காறி துப்பியது.... விலுக்கென எழுந்து அமர்ந்து கொண்டாள்....

வெளியே எழுந்து போனாள்.... சிறு குழந்தை போல அவன் கால்களை சுருக்கி படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்... இவனைப் போய் தவறாக நினைத்தாயே.. குற்ற உணர்வுடன் அவனின் அருகில் போனாள்...

வாசு.. வாசு... எழுந்திரிங்க... அவனின் தோள் தொட்டு எழுப்பினாள்.. கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தான்.. என்ன நிலா ஏதாவது வேணுமா... அவளிடம் கேட்டபடியே கண்களை நன்கு திறந்து பார்த்தான்...

உள்ளே வந்து படுங்க... மேலே எதுவும் பேசவில்லை.. முன்னே நடந்தாள்.. அவனோ தூக்க கலக்கத்தில் நடந்து வந்தவன் கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்து தூங்கி விட்டான்...

அவன் தூங்குவதை ஒரு தாயின் கனிவுடன் பார்த்தவள் தானும் மறுபக்கம் படுத்து தூங்கி விட்டாள்... நிம்மதியான ஒரு உறக்கத்தில் ஆழ்ந்து போனாள்..


மயக்குவாள்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top