யாருமிங்கு அனாதையில்லை - 4

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை “
(பாகம் - 4)
எழுதியவர் : பொன்.கௌசல்யா.
நெரிசலான கடைவீதியில் நடு நாயகமாய் வீற்றிருந்த கே.பி.எஸ்.ஜுவல்லரி, அந்த மதிய நேரத்தில் களேபரப்பட்டுக் கொண்டிருந்தது.

“அதெப்படிம்மா...நான் சாப்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடிதான்...அந்த நூறு ரூபாய்க் கட்டை வாங்கி டிராயருக்குள்ளார போட்டுட்டுப் போனேன்!...லன்ச் முடிச்சிட்டு வந்து பார்த்தாக் காணோம்!...இங்க உங்க மூணு பேரையும் தவிர வேற யாருமே கிடையாது!...அப்ப உங்க மூணு பேர் மேலேயும் நான் சந்தேகப்படறதுல என்னம்மா தப்பு?” நகைக்கடை உரிமையாளர் நாகராஜன் கொதித்துக் கொண்டிருந்தார்.

“சார்...சார்..நாங்க யாருமே அந்த டிராயர் பக்கமே போகலை சார்!” இது ஒரு பெண்.

“சார்..அஞ்சு வருஷத்துக்கு மேல இங்க வேலை பார்த்திட்டிருக்கேன்!...என்னைப் போயி சந்தேகப் படறீங்களே சார்?” இது இன்னொரு பெண்.

“சத்தியமா நான் அந்தப் பணத்தை எடுக்கலை!...அவ்வளவுதான்!” என்றாள் ஜோதி சிறிதும் அஞ்சாமல் தைரியமாய்.

“அது சரி...நீங்க மூணு பேருமே இப்படி “நான் எடுக்கலை!...“நான் எடுக்கலை”ன்னு சொல்லிட்டிருந்தீங்கன்னா...அந்தப் பணம் மாயமா மறைஞ்சு போச்சா?..இல்லை காக்காய் வந்து தூக்கிட்டுப் போயிடுச்சா?...ம்ஹூம்...வேற வழியேயில்லை...போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்துட வேண்டியதுதான்!” சொல்லியவாறே நகைக்கடை உரிமையாளர் நாகராஜன், தொலைபேசியை எடுத்து டயல் செய்ய,

மூன்று பெண்களும் நடுங்கியபடி நின்றனர்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் கடை எதிரில் வந்து நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கி வந்தனர் ஒரு பெருந்தொந்தி போலீஸ்காரரும், இரண்டு லேடி கான்ஸ்டபிள்களும்.

கடைக்குள் வந்ததும் அந்தப் பெருந்தொந்தி, லேடி கான்ஸ்டபிள்களிடம் கண் ஜாடை காட்ட, அவர்களிருவரும் அந்த மூன்று பெண்களையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை போட்டனர்.

“சார்...இவங்க யாருகிட்டேயும் பணம் இல்லை சார்!” ஒரு லேடி கான்ஸ்டபிள் சொல்ல,

“அப்படின்னா அந்தப் பணக்கட்டு வெளிய போயிடுச்சுன்னு அர்த்தம்!...நான் லன்ச்சுக்குப் போயிட்டு வர்றதுக்குள்ளார பணக்கட்டைத் திருடி, அதை வெளியவும் அனுப்பிட்டாளுக!..மூணு பேரும் கூட்டுக் களவாணிச் சிறுக்கிகளா இருப்பாளுக போலிருக்கு!” நகைக்கடை உரிமையாளர் பொரிந்து தள்ளினார்.

அதுவரை வாயே திறக்காமல் இருந்த பெருந்தொந்தி போலீஸ்காரர், “த பாருங்கம்மா...மூணு பேரும் சின்ன வயசா...இன்னும் கலியாணமாகாத பொண்ணுகளா இருக்கீங்க!...பேசாம இங்கியே உண்மையை சொல்லிடுங்க...இல்லேன்னா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயி விசாரிக்க வேண்டி வரும்...அப்புறம் உங்களுக்குத்தான் கஷ்டம்....யோசிச்சுக்கங்க!” என்றார்.

“சார்..நாங்க பணத்தை எடுக்கலை...எங்களுக்கும் அதுக்கும் சம்மந்தமேயில்லை...இதுதான் உண்மை!..நீங்க எங்க கூட்டிட்டுப் போய் விசாரிச்சாலும் நாங்க இதைத்தானே சொல்லப் போறோம்?” ஜோதி கடுப்புடன் சொல்ல,

“ம்ஹூம்!...உங்களுக்கு சொன்னாப் புரியாது...செஞ்சு காட்டினாத்தான் புரியும் போலிருக்கு..!” என்று சொல்லியபடியே அந்த லேடி கான்ஸ்டபிள்கள் பக்கம் திரும்பிய தொந்தி போலீஸ்காரர், “இந்தம்மா...இவங்க மூணு பேரையும்...கூட்டிட்டுப் போயி ஜீப்புல ஏத்துக்கம்மா!” என்று ஆணையிட்டார்.

கடை வீதியில், அக்கம் பக்கத்துக் கடைக்காரர்...பொதுமக்கள்....என எல்லோரும் வேடிக்கை பார்க்க, அழுத முகத்துடனிருந்த அந்த மூன்று இளம் பெண்களும் வலுக்கட்டாயமாய் போலீஸ் ஜீப்பில் ஏற்றப்பட்டனர்.

மதியம் மூன்றரை மணி வாக்கில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட அந்த மூன்று பெண்களும், மாலை ஏழு மணி வரை அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்காகக் காத்திருந்து விட்டு, பெண் போலீஸிடம் புலம்பித் தள்ளினர்.

“மேடம்...ராத்திரியே ஆயிடுச்சுங்க மேடம்!...எங்களை வீட்டுக்கு அனுப்புங்க மேடம்!...ப்ளீஸ்!” கெஞ்சினர்.

“அட...நானாம்மா வேண்டாங்கறேன்?...அந்தத் தொந்திக்காரருதன் சாயந்திரத்திலிருந்தே “இதோ வந்துட்டார் இன்ஸ்பெக்டர்!...இதோ வந்துட்டார் இன்ஸ்பெக்டர்!”ன்னு சொல்லிச் சொல்லியே ஓட்டிட்டாரு!...நான் என்ன பண்ணுவேன்?...இப்பக்கூட கேட்டுப் பார்த்தேன், அதுக்கும் “வந்துட்டே இருக்கார்!”ன்னுதான் பதில் சொல்றார்!...” பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் புரியும், என்பது போல் அந்தப் பெண்களின் தவிப்பைப் புரிந்து கொண்ட ஒரு லேடி கான்ஸ்டபிள் தன் நிலைப்பாட்டை எடுத்துரைத்தாள்.

“யாரு...யாருய்யா இன்ஸ்பெக்டர் இங்கே?” கேட்டபடியே ஒரு “பளீர்” வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை ஆசாமி வந்து நிற்க,

அரண்டு போனார் பெருந்தொந்தி போலீஸ்.

“அய்யா...நீங்க...இங்க?” போலீஸ்காரரின் பணிவான பவ்யத்திலேயே தெரிந்தது வந்திருக்கும் ஆசாமி ஒரு அரசியல் புள்ளியென்று.

“ஏய்யா...உங்களையெல்லாம் கேட்கறதுக்கு ஆளில்லைன்னு நெனச்சுட்டீங்களா?...பொம்பளைப் புள்ளைகளை...அதுவும் பாவம் இன்னும் கல்யாணமாகாத சின்னஞ்சிறுசுகளை இங்க கொண்டாந்து குந்த வெச்சிருக்கீங்களே..இது என்ன சட்டம்யா?...ம்ஹூம் உங்களை விட மாட்டேன்யா...இந்தப் பிரச்சினையை சட்டசபை வரை கொண்டு போகாம விட மாட்டேய்யா!...எங்கேய்யா உங்க இன்ஸ்பெக்டரு?”

“வந்துட்டேயிருக்காருங்கய்யா!”

“யோவ்!...அவரு வரட்டும்...இல்லை வராமலே போகட்டும்...அதைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலை இல்லை!...பெண்ணுங்க வெளிய போகணும்...அதுக்கு ஏற்பாடு பண்ணுய்யா!”

“பண்ணிடலாமுங்கய்யா!” தொந்திக்காரர் தயாராக,

“ஏம்மா...இதுல யாரும்மா மகேசுவரி?...ஒன்றியச் செயலாளர் குணாவோட மச்சினிச்சி?” அந்த அரசியல் ஆந்தை மூன்று பெண்களையும் பார்த்துக் கேட்க,

பச்சை நிற சுடிதார் அணிந்திருந்த பெண், “நாந்தான் சார்!” என்று சொல்லியபடி முன் வந்தாள்.

“ம்...இந்தப் பொண்ணை உடனே அனுப்பிடுய்யா!” என்றது அரசியல் செல்வாக்கு.

“சரிங்கய்யா!” என்ற தொந்தி அந்தப் பெண்ணைப் பார்த்து, “ம்...நீ...கிளம்பும்மா!” என்றார்.

மற்ற இரண்டு பெண்களும் பரிதாபமாய்த் தன்னைப் பார்ப்பதைக் கண்ட அரசியல்வாதி, “யோவ்!...அதுகளையும் அனுப்பிட வேண்டியதுதானய்யா?” என்று கேட்க,

“அய்யா...கொஞ்சம் அப்படி வாங்க!” என்று சொல்லி அந்த அரசியல் அண்ணாச்சியை சற்றுத் தள்ளி அழைத்துச் சென்று, “சார்...ஒட்டு மொத்தமா எல்லாரையும் அனுப்பிட்டா..இன்ஸ்பெக்டர் வந்து “தாட்...பூட்”னு குதிப்பார்...போதாக்கொறைக்கு அந்த நகைக்கடை ஓனர் வேற கொஞ்சம் பெரிய புள்ளி...அவரோட கம்ப்ளைண்டுக்கு நாங்க எதுவுமே செய்யாத மாதிரி ஆயிடும்...அதான்!” என்று இழுத்தார் தொந்திக் கணபதி.

“அதனால?”

“அவங்க இங்க இருக்கட்டும்...இன்ஸ்பெக்டர் வந்ததும் மேலோட்டமா ஒரு சின்ன விசாரணை பண்ணிட்டு உடனே அனுப்பிடறோம் அய்யா!”

“ம்ம்ம்” என்று யோசித்த அரசியல்வாதி, “ஆமாம்...ஆமாம்...உங்களுக்கும் பிரச்சினை வராம இருக்கணுமல்லவா?....சரி...சரி...அப்படியே பண்ணுங்க!” சொல்லியவாறே அந்தப் பெண்களை நோட்டம் விட்டார் அந்த அரசியல் புள்ளி.

அப்பெண்கள் இங்கிருந்தவாறே கையெடுத்துக் கும்பிட்டு, “எங்களையும் விடச் சொல்லுங்கய்யா!” எனக் கெஞ்சினர்.

அதைப் பார்த்தும் பார்க்காதது போல் பறந்து சென்றது அரசியல் ஆந்தை.

உடனிருந்த ஒருத்தி மட்டும் சென்று விட்ட நிலையில், ஜோதியும் அந்த இன்னொரு பெண்ணும் அங்கிருந்த லேடி கான்ஸ்டபிளை பரிதாபமாய்ப் பார்த்தனர்.

அப்பார்வையில் தெரிந்த கெஞ்சலைப் புரிந்து கொண்ட லேடி கான்ஸ்டபிள் அவர்களிடம் வந்து, “ஏம்மா...நீங்களும்...இதே மாதிரி யாராவது தெரிஞ்சவங்க இருந்தா அவங்களை வரச் சொல்லி அவங்க மூலமா வெளிய போயிடுங்களேன்!” என்று சொல்ல,

“எங்களுக்கு அப்படி யாரையுமே தெரியாதுங்களே!” கண்களில் நீருடன் சொன்னாள் ஜோதி.

உடனிருந்த அந்தப் பெண், “எங்க அண்ணனுக்கு மட்டும் நான் இங்கிருக்கறது தெரிஞ்சா உடனே பறந்து வந்து என்னை கூட்டிட்டுப் போயிடுவார்...ஆனா அவருக்கு எப்படி தெரிவிக்கறதுன்னுதான் தெரியலை!” என்றாள் சோகமாய்.

உடனே அந்த லேடி கான்ஸ்டபிள் தன் பேண்ட்டின் இடது புறப் பாக்கெட்டிலிருந்து தனது செல்போனை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்து, “இது என்னோட பர்ஸனல் செல்...இதிலிருந்து உங்க அண்ணனுக்குப் பேசி தகவல் சொல்லிடு!” என்றாள்.

கண்களில் சந்தோஷமும், நன்றியும் கலவையாய் மின்ன, அப்பெண் அதை வாங்கி தன் அண்ணனை அழைத்து தகவல் சொன்னாள்.

அவள் தோள் பட்டையில் சுரண்டிய ஜோதி, “ஏய்...உங்கண்ணன் வந்ததும் என்னையும் உன் கூடவே கூட்டிட்டுப் போகச் சொல்லுடி!” சன்னக் குரலில் கேட்டாள்.

“ம்” என்றாள் அப்பெண்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் அங்கு வந்து நின்ற அவளுடைய அண்ணன், சற்று முன் வந்து போன அரசியல்வாதியைப் போல் ஆள் பலமும், அரசியல் பலமும் இல்லாது போன காரணத்தால் அந்த தொந்திப் போலீஸ்காரரால் வெகுவாக உதாசீனப்படுத்தப் பட்டான். “ஹே...இவரு பெரிய டெபுடி கலெக்டர்...இவரு வந்து சொன்னதும் விட்டுடணும்...அடப் போய்யா வெளிய...இல்லேன்னா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி உன் மேலேயும் ஒரு கஞ்சா கேஸ் போட்டு உள்ளார தள்ளச் சொல்லிடுவேன்!”

தர்ம சங்கடமாகிப் போன அந்த அண்ணன்காரன், தனது கடைசி அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் விதமாய், “சார்...கொஞ்சம் அப்படி வர்றீங்களா?” என்றான் ரகசிய குரலில்.

அந்தக் குரலின் சமிக்ஞையைப் புரிந்து கொண்ட தொந்தி, “ம்..வா...வா!” என்றபடி வேளியே நடக்க, பின் தொடர்ந்தான் அவன்.

வெளியே சென்றதும், “ம்...என்ன சீக்கிரம் சொல்லு!”

அவன் ஒரு தொகையைக் கூற, தொந்தி இட வலமாய்த் தலையாட்டியது. இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொல்ல, யோசனையாய்த் தலையாட்டியது. தொகை மேலும் உயர, ஒப்புக் கொள்ளும் விதமாய்த் தலை ஆடியது. முடிவில் பேரம் படிந்து கரன்ஸி கை மாறியதும், “ஹி...ஹி..” என்று சிரித்துக் கொண்டே உள்ளே வந்த தொந்தி போலீஸ்,

“ம்ம்...சரிம்மா..நீ...நீ போய்க்கலாம்!” என்றார் அந்த நபரின் தங்கையைப் பார்த்து, அவரது கை அவரையுமறியாமல் வீங்கியிருந்த பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது.

இன்னொருத்தியும் தன்னை விட்டுச் செல்வதை கண்ணீருடன் பார்த்தபடி நின்றாள் ஜோதி. அவள் மனதினுள் அப்பாவும், சித்தியும் வந்து போனார்கள்.

மணி ஒன்பதுக்கும் மேலாகி விட, தனித்திருந்த ஜோதி, தவித்தாள், துடித்தாள். யாருக்கு தகவல் சொல்லி, யாரை வரவழைப்பது?...அப்பாவோ வயதான மனிதர்...பயந்த சுபாவம்!..இது போன்று போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் வந்து பழக்கப் படாதவர். அப்படியே மீறி, ஒரு பாசத்தில் உந்தப்பட்டு அவர் கிளம்பினாலும், அவரை அடக்கி தடுத்து விடுவாள் சித்தி. என்ன செய்வதென்றே புரியாமல் மௌனமாய்க் குலுங்கினாள்.

அவளது அழுகையைப் பார்த்துப் பொறுக்க மாட்டாத அந்த லேடி கான்ஸ்டபிள் தொந்திப் போலீஸ்காரரிடம் சென்று, “த பாருங்க...கரெக்டா சொல்லுங்க இன்ஸ்பெக்டர் வருவாரா?..இல்லை வர மாட்டாரா?...நானும் பார்த்திட்டே இருக்கேன் சாயந்திரத்திலிருந்து “இதோ வந்துட்டார்!...இதோ வந்துட்டார்!”ன்னு பூச்சாண்டி காட்டறீங்களே தவிர, அவரு வர்றதாவே தெரியலை!” என்று சத்தம் போட ஆரம்பித்தாள்.

“அட..நீ வேற ஏம்மா...என்கிட்ட சண்டைக்கு வர்றே? அவர் சொல்றதைத்தானே நான் சொல்லிட்டிருக்கேன்?”

“இன்னொரு தடவை போன்ல கூப்பிட்டுப் பேசுங்க!...வர்றாரா?...இல்லயா?ன்னு கரெக்டா கேட்டுச் சொல்லுங்க!..ஏற்கனவே மணி ஒன்பதுக்கும் மேலாச்சு...இதுக்கு மேலேயும் இந்தப் பொண்ணை இங்க வெச்சிருந்தா பிரச்சினையாயிடும்!..” பொரிந்து தள்ளினாள் லேடி கான்ஸ்டபிள்.

“இரும்மா...இரும்மா..இப்பவே பேசிடறேன்!” அந்த தொந்திப் போலீஸ், இன்ஸ்பெக்டரை போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து விட்டு, “அட என்னம்மா?...எடுக்கவே மாட்டேங்குறார்!”

“ப்ச்!...இங்க பாருங்க சார்...எனக்கு டியூட்டி முடியற நேரம்!...நான் இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருப்பேன்...அப்புறம் கிளம்பிடுவேன்!...எப்படி இந்தப் பெண்ணை மட்டும் உங்க கூட தனியா விட்டுட்டுப் போறது?...சொல்லுங்க!”

தொடர்ந்து இன்ஸ்பெக்டரின் எண்ணை முயற்சி செய்து கொண்டேயிருந்த தொந்திக்காரர், திடீரென்று கூவினார், “சார்...சார்...நான் த்ரி நாட் டூ பேசறேன் சார்!”

“ம்...சொல்லுய்யா...என்ன விஷயம்?” இன்ஸ்பெக்டரின் குரலிலிருந்த குழறலைப் புரிந்து கொண்ட போலீஸ்காரர்,

“வந்து அந்தப் பொண்ணு உங்க விசாரணைக்காக ஸ்டேஷன்ல வெய்ட் பண்ணிக்கிட்டிருக்குது சார்!”

“எந்தப் பொண்ணு..எந்தக் கேஸூ?...ஓ...அந்த நகைக்கடைக்காரர் கம்ப்ளைண்டி குடுத்தாரே அதுவா?”

“ஆமாம் சார்...அந்த நகைக்கடை திருட்டுக் கேஸ்தான் சார்!”

“யோவ்...இப்ப நான் லிக்கர் சாப்பிட்டிருக்கேன்யா!...அதனால் என்னால இப்ப வந்து விசாரணையெல்லாம் பண்ண முடியாதுய்யா!”

“என்ன சார்?...ஓ...அப்படிங்களா?”

“அப்படியேதான்!...அத்னால நீ என்ன பண்றே?...அந்தப் பொண்ணை அனுப்பிச்சிடு...அப்புரம் பார்க்கலாம்!”

“அப்பச் சரி சார்...அனுப்பிடறேன் சார்!”

“நேரம் வேற ரொம்ப ஆயிடுச்சே?...யார் கூட அனுப்புவே?...நம்ம லேடி கான்ஸ்டபிள் அமுதா இருக்காங்களா?”

“யாரு?...ம்ம்...லேடி கான்ஸ்டபிள் அமுதாவா?...ம்ம்...இருக்காங்க சார்!...!

“ஏய்யா அவங்க இன்னும் போகாம இருக்காங்க?....யோவ் ஏதாச்சும் கசமுசாவா?”

“அய்யய்யோ...இல்லை சார்...அவங்களுக்கு இனிமேல்தான் டியூட்டி முடியுது சார்!”

“அப்ப அவங்களோடவே அந்தப் பொண்ணையும் அனுப்பிச்சிடு...என்ன?”

“ஓ.கே.சார்!”

இணைப்பைத் துண்டித்து விட்டு, “சரிம்மா...இன்ஸ்பெக்டர் வரலையாம்...இந்தப் பொண்ணை உன் கூட அனுப்பிடச் சொல்லிட்டாரு!” என்றால் தொந்திப் போலீஸ்காரர்.

“பாவிகளா!...மதியம் மூணு மணியிலிருந்து இப்படி ராத்திரி பத்து மணி வரைக்கும் காக்க வெச்சிட்டு...இப்ப போகச் சொல்றீங்களே...இது உங்களுக்கே நியாயமாத் தெரியுதா?” அந்த லேடி கான்ஸ்டபிள் ஜோதியின் பிரதிநிதியாய் தன் ஆற்றாமையைக் கொட்ட,

“சரிம்மா...நீ இப்படிப் பேசிட்டே இருந்தா இன்னும்தான் லேட்டாயிடும்...உடனே கூட்டிட்டுக் கிளம்பும்மா!” தொந்திக்காரர் துரத்தினார்.

முனகிக் கொண்டே ஜோதியை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியேறி, மரத்தடியில் நின்றிருந்த தன் டி.வி.எஸ்.50-யில் ஜோதியை ஏற்றிக் கொண்டு வெறிச்சோடிக் கிடந்த தெருவில் வேகமாய்ப் பறந்தாள் அந்த லேடி கான்ஸ்டபிள்.

ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய பதினைந்தாவது நிமிடத்தில் அவர்களிருவரும் ஊரைத் தாண்டி புறநகர்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். நெரிசல் இல்லாத அந்தப் பாதையில் அவர்கள் வேகமாய்ச் சென்று கொண்டிருக்கும் போது, “ட...மா....ர்” என்ற பெருத்த ஓசையுடன் டி.வி.எஸ்.50-ன் பின் டயர் வெடித்தது.

தடுமாறிய வண்டி ஒரு சிறு சிரமத்திற்குப் பின் நிற்க, இருவரும் இறங்கி ரோட்டில் நின்றனர்.

“ஹூம்...சமயத்துல காலை வாரிடுச்சு இந்த வண்டி!...ச்சே...இப்ப என்ன பண்றது?” இடது உள்ளங்கையை வலது கை முஷ்டியால் ஓங்கிக் குத்தியபடியே சொன்னாள் அந்த லேடி கான்ஸ்டபிள்.

“அய்யய்யோ...மேடம்...எனக்கு ரொம்ப பயம்மாயிருக்கு மேடம்!...இந்த ரோடு வேற கொஞ்சம் மோசமான ரோடு!..இங்கதான் அடிக்கடி வழிப்பறித் திருட்டு நடக்கும்!” நடுங்கும் குரலில் ஜோதி சொல்ல,

“அது செரி!...ஏம்மா...கூடவே ஒரு பெண் போலீஸை வெச்சுக்கிட்டு உனக்கென்னம்மா பயம்?” என்றவாறே தன் மணிக்கட்டை உயர்த்தி வாட்சைப் பார்த்தாள் லேடி கான்ஸ்டபிள், “அடடே....மணி பத்தே முக்கால் ஆயிடுச்சே!”

லேசாய் அழ ஆரம்பித்தாள் ஜோதி.

“ச்சூ...ஏம்மா...எதுக்கு இப்ப அழறே?”

“மேடம்...இப்ப நான் வீட்டுக்குப் போனாலே என்னை வீட்டுக்குள்ளார விடுவாங்களோ?...விட மாட்டாங்களோ?ன்னு சந்தேகமயிருக்கு!..இதுக்கு மேலேயும் லேட்டாகி நான் வீட்டுக்குப் போறதை விட...இப்படியே எங்காச்சும் கண் காணாமப் போயிடறதுதான் நல்லது!..ஏன்னா எங்க சித்தி சும்மாவே என்னைய தாளிச்செடுக்கும்...இன்னிக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கு...இது போதும் அவங்களுக்கு என் கழுத்தைக் கடிச்சுத் துப்பறதுக்கு!” பாதி அழுகையும், பாதி பேச்சுமாய்ச் சொன்னாள்.

“ம்ம்ம்ம்” என்று சில நிமிடங்கள் தன் தாடையைத் தட்டியபடியே யோசித்த அந்த லேடி கான்ஸ்டபிள், “ஒண்ணு செய்வோம்...இங்கிருந்து எங்க வீடு ஒரு ரெண்டு கிலோ மீட்டர்தான் இருக்கும்...மெதுவா பேசிட்டே நடந்து போனா சீக்கிரமே போயிடலாம்!...நீ இன்னிக்கு ராத்திரி என் கூட என் வீட்டிலேயே இருந்திட்டு காலைல நேரத்துல எந்திரிச்சு உங்க வீட்டுக்குப் போயிடு!”

அதைக் கேட்டதும் பெருங் குரலில் அழ ஆரம்பித்த ஜோதியை, மறுபடியும் அடக்கிய அந்தப் பெண் போலீஸ், “கவலைப்படாதே...காலைல நானே உன்னை என் கூட கூட்டிட்டுப் போய் உன் வீட்டுல விட்டுட்டு...அவங்க கிட்டே நடந்ததையெல்லாம் விளக்கிச் சொல்லிட்டு வர்றேன்...போதுமா?”

அரைகுறை மனதுடன் தலையாட்டினாள் ஜோதி.
( தொடரும்)
 

Saroja

Well-Known Member
அடப்பாவி கடைக்காரா
இப்ப இந்த பிள்ள நிலைமை
பாவம்டா
 

banumathi jayaraman

Well-Known Member
ஜோதி பாவம்
இவளுக்கு இன்னும் என்னென்ன கஷ்டங்கள் இருக்கோ?
 

தரணி

Well-Known Member
பொறுப்பு இல்லாம இப்படி அலட்சியமா இருக்கு ஆட்களை என்ன பண்ண
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top