Ramadan 2020 Prophet Sulaiman Day 26

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அரசாங்கம் எகிப்திலிருந்து ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது. காலையில் அவர்கள் திமிஷ்க்கிலிருந்து புறப்பட்டு நண்பகல் இஸ்தகர் வந்து சேர்வார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு அஸ்தமன நேரத்திற்கு காபூல் வந்து விடுவார்கள் என்றும் அதிகமாக அவர்கள் ததத்மூர் என்ற ஊரில் வந்துதான் உணவு அருந்துவார்கள் என்றும் ஒரு குறிப்பு உள்ளது.

ததத்மூர் நகரை ஜின் வர்க்கத்தினர் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்குவதற்காக விசேசமாக நிர்ணமானித்திருந்தனர்.
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஓர் அபூர்வமான் நாற்காலி இருந்தது. அதில் ஆயிரம் பாகங்கள் இருந்தன. ஒவ்வொரு பாகத்திலும் ஆயிரம் அறைகள் இருந்தன. இவற்றில், மனிதர்களும், ஜின்களும் தங்கியிருந்தனர். இதன் ஒவ்வொரு பாகத்தையும் ஆயிரம் ஷைத்தான்கள் சுமந்து கொண்டிருந்தனர். அவர்கள் எங்கு செல்ல நாடுகின்றார்களோ, காற்று அந்த இடத்திற்கு அந்த அதிசய நாற்காலியைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும். தப்ஸீர் மதாரிக்கில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைகள் உண்பதற்காக, ஜின்கள் மரத்தினால் தயாரித்திருந்த மேஜையில் அமர்ந்து சாப்பிட முடியும். உணவு சமைக்கப்படும் அண்டா கருங்கல்லினால் தயாரிக்கப்பட்டிருந்தது. சாப்பிடுவதற்காக விரிக்கப்பட்ட விரிப்பின் மீது காலியாக உள்ள அண்டாக்கள் வைக்கப்பட்டிருக்கும். மேகம் மழையைக் கொட்டி அந்த அண்டாக்களை நிரப்பி விடும்.
தினசரி பல்லாயிரக்கணக்கான ஒட்டகங்களும், ஆடுகளும் இறைச்சிக்காக அறுக்கப்பட்டு வந்தன. இவைகள் அனைத்தும் அவர்கள் படைகளுக்காக தயாரிக்கப்படும் உணவுகள். ஊழியர்களுக்காகவும், ஊழியம் புரியும் பிராணிகளுக்காகவும் தனியாக பல்லாயிரக்கணக்கான அண்டாக்களில் உணவு தயாராகும்.
ஆனால் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ தினசரி பகலில் நோன்பு நோற்று வந்தார்கள். அரச பரிபாலன வேலை நேரம் போக மீத நேரங்களில் போரில் உபயோகிக்கும் இரும்புக் கவசங்களை தயாரிப்பார்கள். அவற்றை விற்று, அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இரண்டு தொலிக் கோதுமையிலான ரொட்டியைச் சுட்டு, அவற்றை எடுத்துக் கொண்டு கப்ருஸ்தானுக்குச் செல்வார்கள். வழியில் தென்படும் ஏழைக்கு ஒரு ரொட்டியைக் கொடுத்து, மற்றொரு ரொட்டியைக் கொண்டு நோன்பு திறந்து கொள்வார்கள். இரவு நேரங்களில் ஒரு கம்பளியைப் போர்த்துக் கொண்டு நித்திரை செய்து கொள்வார்கள்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிருகங்கள், பறவைகள், ஜின்கள், தேவதைகள் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பொறுப்பைக் கொடுத்திருந்தார்கள். ஹுத்ஹுத் என்றழைக்கப்படும் மரங்கொத்திப் பறவைக்குத் தண்ணீர் கிடைக்கும் இடத்தைக் கண்டு பிடித்துத் தெரிவிக்கும் பொறுப்பைத் தந்திருந்தார்கள். எந்த இடத்தில் எத்தகையத் தண்ணீர் கிடைக்கிறது என்பதை மிகத் துல்லியமாக சுலைமான் நபிக்கு அறிவித்து விடும். அவ்விடத்தை ஜின்களை விட்டு அவர்கள் தோண்டச் செய்து தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள்.

ஹுத்ஹுத் என்ற பறவையின் தலைமையின கீழ் 12 ஆயிரம் உதவித் தலைமைப் பறவைகளும், ஒவ்வொரு உதவித் தலைமைப் பறவையின் கீழும் 12ஆயிரம் உதவி புரியும் பறவைகளும் இருந்து வந்தன என்றும், நபி அவர்கள் பவனி வரும்போது இந்த அத்தனைப் பறவைகளும் மேலே பறந்து அவர்களுக்கு குடைபோல நிழலிட்டு வரும் என்றும், ஹயாத்துல் ஹய்வான் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் மக்காவில் தங்கியிருந்த போது இதேநகரில் ஒரு நபி வரவிருக்கிறார்கள். அவர்களே இறுதி நபியாகவும் இருப்பார்கள். மற்ற நபிமார்களைவிட அவர்கள் அந்தஸ்திலும், குணாதிசியங்களிலும் உயர்ந்து, சிறந்து விளங்குவார்கள் என்று புகழ்ந்துரைத்தார்கள்.
அவர்கள் எப்போது வருவார்கள் என்று கேட்டதற்கு, ஓராயிரம் வருடங்களுக்குப் பிறகு என்று பதில் கூறினார்கள். அங்கிருந்து புறப்பட்டு எமன் தேசத்தை அடைந்தார்கள். அப்போது தொழுகை நேரம் வந்துவிட்டதால் உளு செய்வதற்காக தண்ணீர் தேவைப்பட்டது. அப்போது தண்ணீர் இருக்குமிடம் கண்டறிய ஹுத்ஹுத் பறவையைத் தேடினார்கள். அது எங்கோ சென்று விட்டது கண்டு அவர்களுக்கு கடுமையான கோபம் கொண்டார்கள். கழுகை ஏவி அதை அழைத்து வருமாறு சொன்னார்கள்.

வழக்கத்திற்கு மாறாக அன்று ஹுத்ஹுத் பறவை வானத்தில் வெகு உயரத்தில் பறந்து பல பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டே வரும்போது, ஒரு சிறு பட்டினமும், அழகான தோட்டமும் அதன் பார்வைக்கு பட்டது. அங்கு இறங்கி சற்று இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, மற்றொரு பறவை வந்தது. அது ஸபா நகரத்திலிருந்து வருவதாகவும், அதை ஒரு அரசி ஆண்டு வருவதாகவும், அந்த அரசியின் அரியாசனத்தையும் காண கண்கள் ஆயிரம் வேண்டும் என்று புகழ்ந்து கூறியது.


ஹுத்ஹுத் பறவை நேரமாகிவிட்டபடியால் தன்னை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லி வேகவேகமாக பறந்து சென்று விட்டது. அவ்வாறு திரும்பிக் கொண்டிருக்கும்போது கழுகு இடைமறித்து சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கோபமாக இருப்பதாக சொன்னது.
இறுதியில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் சென்று இதுபற்றி விபரங்களை தெரிவித்தன. அந்த ஸபா நகரை யார் ஆட்சி செய்கிறார்கள்? அவர்கள் எந்த மார்க்கத்தை சார்ந்தவர்கள்? என்று கேட்டார்கள் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அந்த ஸபா நகரை ஒரு பெண்தான் ஆட்சி செய்து வருகிறார். அவர் பெயர் பல்கீஸ் அவர் வீற்றிருக்கும் அரியாசனம் தங்கத்தாலும், வெள்ளியாலும் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அரசியும், அந்த நகர மக்களும் சூரியனை வணங்கக் கூடியவர்களாக உள்ளார்கள். அந்த அரசி மிகவும் அழகுள்ளவளாக இருக்கிறாள். நான் அவசரமாக திரும்ப வேண்டியதிருந்ததால் மேலும் என்னால் அதிகமான செய்திகளை திரட்ட முடியவில்லை என்றது ஹுத் ஹுத்.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரசி பல்கீஸுக்கு,
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நீங்கள் என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்’ என்று கடிதம் எழுதி ஹுத்ஹுத் பறவையிடம் கொடுத்து ஸபா நகர அரசிக்கு கொடுக்கச் சொன்னார்கள். ஹுத்ஹுத் அதை எடுத்துச் சென்று அரசி பல்கீஸ் முன் போட்டுவிட்டு, அக்கடிதம் சம்பந்தமாக அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை கேட்பதற்கு ஓரிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.
அரசி அந்தக் கடிதத்தைப் படித்து பார்த்து, தம் அவையோர்களிடம் கொடுத்து, இது கண்ணியம் வாய்ந்த ஒருவரிடமிருந்து வந்திருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். ‘அவையோர் அவருடன் போர் புரிய வேண்டும் என்று கருத்து சொன்னார்கள். இது அரசி பல்கீஸுக்குப் பிடிக்கவில்லை. நாம் அவருடைய அழைப்பை ஏற்று அங்கு செல்வதே உசிதம் என்று சொல்லி சுலைமான் நபிக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்புப் பொருட்களை சேகரிக்க சொன்னார்கள்.

விலையுயர்ந்த நவரத்தினங்கள் பதித்த கிரீடம், 1000 தங்கப்பாளங்கள், வெள்ளிப் பாளங்கள், கஸ்தூரி, துளையிடப்படாத ஒரு பெரிய குண்டு முத்து, வளைந்து துவாரமிடப்பட்ட ஒரு குண்டு முத்து இத்தனையையும் சேகரித்ததோடு 500 அழகிய பெண் அடிமைகள், 500 அழகிய ஆண் அடிமைகள் ஆகியோர்களை திரட்டி, ஆண்களை பெண்களைப் போலவும், பெண்களை ஆண்களைப் போலவும் வேடமிடச் செய்து சுலைமான் நபிக்கு முன்னால் அவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் போதித்து இவர்களை தலைமையேற்று நடத்திட முன்திர் இப்னு அம்ர் என்பவரை நியமித்து அவரிடம் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கவனிக்குமாறும் சொன்னார்.

அவர் நபியாக இருந்தால் இந்த ஏற்பாடுகளை எல்லாம் நன்றாக கவனித்து விடுவார் என்று அரசி பல்கீஸ் சொன்னார். இத்தனை ஏற்பாடுகளையும் ஹுத்ஹுத் பறவை முற்கூட்டியே ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் எடுத்து சொல்லிவிட்டது. மற்றொரு குறிப்பில் அல்லாஹ் அவர்களுக்கு தெரிவித்துக் கொடுத்தான் என்றும் உள்ளது.
அரசி பல்கீஸ் அனுப்பி வைத்த ஆட்களோடு கொடுத்தனுப்பிய வெகுமதியோடு வந்து சேர்வதற்குள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜின்களை அனுப்பி அவர்களிடம் வெகுதூரத்திற்கு தங்கம், வெள்ளியிலான பாளங்களை பரத்தி வைக்கவிட்டு அதன் மேல் பொன்னாலான தூண்களையும், சிகரங்களiயும் எழுப்பி நடு மத்தியில் தமது அரியாசனத்தை அமைத்து, அதன் இருபகுதியிலும் நான்காயிரம் நான்காயிரம் பொன்னாலான நாற்காலிகளை வைத்திருக்குமாறு கூறினார்கள்.



பல்கீஸை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமணம் முடித்தால் அவர்களுக்கும் சேவகம் செய்ய வேண்டிவரும் என்று எண்ணி ஜின்கள் ஒன்று கூடி அரசியைப் பற்றி பலவாறு இகழ்ந்துரைத்து, அவளின் காலின் பாதங்கள் கழுதையைப் போன்றிருக்கும் என்று சொல்லி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏமாற்றப்பார்த்தன. அதையெல்லாம் அவர்கள் செவிமடுக்கவில்லை.


பல்கீஸ் அரசியின் பிரதிநிதி முன்திர் இப்னு அம்ர் அங்கு வந்ததும் இந்த ஏற்பாடுகளை கண்டு பிரமித்தார். சுலைமான் நபி அவர்கள் தங்க அரியாசனத்தில் அமர்ந்திருப்பதை கண்டார். இந்த ஏற்பாடுகள் முன் தாம் கொண்டு வந்த வெகுமதிகள் கொஞ்சம்தான் என நினைத்து அனைத்தையும் தூர வைத்து விட்டார்.
சுலைமான் நபி அவர்கள் மிக மரியாதையுடன் அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். முன்திர் அரசி பல்கீஸ் அனுப்பிய அறிமுகக் கடிதத்தை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள், ‘அரசி பல்கீஸ் கொடுத்த இரு முத்துக்கள் அடங்கிய அந்த பொன்சிமிழ் எங்கே? என்று கேட்டார்கள். திகைத்துப் போன முன்திர் அந்த முத்துக்கள் இருந்த பெட்டியை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.


ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துளையிடப்படாத அந்த முத்தையெடுத்து கரையானை அழைத்து அதன் முன்னால் வைத்து இதில் துவாரத்தைப் போட்டு விடு என்று கூறினாhர்கள். நொடிப்பொழுதில் கரையான் அதில் துளையிட்டுவிட்டது. ஒரு புழுவை அழைத்து அதன் வாயில் ஒரு நூலைக் கொடுத்து கோணல் கோணலாகத் துவாரமுள்ள இந்த முத்திற்குள் நுழைந்து இந்த நூலைக் கோர்த்து விடு என்றார்கள். அதுவும் உடனே செய்து முடித்தது.


அதேபோல் மாறு வேடத்திலிருந்த ஆண், பெண்களைப் பார்த்து, நெடுந்தூரம் களைத்து போய்விட்டீர்கள். எனவே, அதோ அந்தப் பாத்திரங்களில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. உங்கள் முகம், கைகால்களைக் கழுவி அவற்றின் மீது படிந்துள்ள தூசுகளைக் களைந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
பெண்கள் வேடமிட்ட ஆண்கள், ஆண்கள் வழமையாக கழுவிக் கொள்வதைப் போல தங்களின் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளிக் கழுவ ஆரம்பித்தனர். ஆண்கள் வேடமிட்டிருந்த பெண்களோ, பெண்களின் வழமைப்போல தண்ணீரை ஒரு கையில் வார்த்து மறுகையில் விட்டு பிறகு இரு கைகளாலும் கழுவ ஆரம்பித்தார்கள். இவற்றை கவனித்துக் கொண்டிருந்த சுலைமான் நபி அவாக்ள் தண்ணீரை அள்ளிக் கழுவுவர்களெல்லாம் ஆண்கள். வார்த்துக் கழுபவர்கள் எல்லாம் பெண்கள் என்று கூறிவிட்டார்கள்.


பிறகு முன்திர் அவர்கள் தாம் கொண்டுவந்த வெகுமதிகளை சுலைமான் நபி முன்னால் வைத்தார். உடனே சுலைமான் அலைஹிஸ்ஸலாம் இதுவெல்லாம் அழியும் பொருட்கள். எனக்குத் தேவையில்லை.இதை உங்கள் அரசியிடமே கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top