Ramadan 2020- Prophet Sulaiman- day 25

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 4000 நபிமார்களும் ஒரே ஷரீஅத் விதிமுறைகளையே பின்பற்றி வந்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் தவ்ராத் வேதத்தின் அடிப்படையையே பின்பற்றி வந்துள்ளனர்.

ஹழ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாலஸ்தீன அரசராக முடிசூட்டிக் கொண்டபோது, அவர்களுக்கு வயது 13 தான்.
சுலைமான் என்றால் பெரிய அரசர் என்றும் ஒரு பொருளுண்டு. ஜம்ஷீதூன் என்ற பெயரும் இவர்களுக்கு இருந்தது.

ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து கொண்டு வந்த முத்திரை மோதிரத்தை ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் விரலில் அணிந்து கொண்டதுமே, பறவையினங்கள் அனைத்துமே அணிஅணியாக அவர்களின் தலைக்கு மேல் வட்டமிட ஆரம்பித்தன. வனவிலங்குகள் அனைத்தும் காடுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும் வெளிப்பட்டு அவர்கள் முன்னால் அணிவகுத்து நின்றன. ஜின்கள் அவர்களுக்கு பணி செய்யக் காத்து நின்றன. அனைத்தும் அவர்களுக்கு அடிபணிந்து நின்றன.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் பட்சிகளின் மொழிகளைக் கற்றுக் கொடுத்ததற்காகவும், அவர்களிடம் மனிதர்கள், ஜின்கள், பட்சிகளின் இராணுவம் இருந்ததற்காகவும் அவர்கள் அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள் என்பதை அல்லாஹ் திருகுர்ஆனில் கூறியுள்ளான்..
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஓராயிரம் கண்ணாடி மாளிகைகள் இருந்தன.அவர்களிடம் 20 ஆயிரம் குதிரைகள் இருந்தன.
இந்தக் குதிரைகளை அவர்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்ததில் அஸர் தொழுகை நேரம் முடிவடைந்து விட்டது. அஸர் தொழுகை அக்காலத்தில் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது.
அல்லாஹ் அவர்கள் மீது கருணை கூர்ந்து, சூரியனை அஸ்தமிப்பதிலிருந்து தடுத்து மேலெழச் செய்தான். அவர்கள் தங்கள் அஸர் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டு அல்லாஹ் காட்டிய கருணைக்காக அவன் பெயரால், அத்தனைக் குதிரைகளையும் குர்பானி கொடுத்துவிட்டார்கள். அவர்களது காலத்தில் குதிரையைக் குர்பானி கொடுப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது.

இம்மாதிரி அவர்கள் தமது குதிரைகளையெல்லாம் குர்பானி கொடுத்து விட்டதால், அவர்கள் சவாரி செய்ய வாகனமில்லாமல் போய்விட்டது. அல்லாஹ் அவர்களுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்து, அவர்கள் எங்குச் செல்ல நாடுகிறார்களோ, அங்கு அவர்களை அது எடுத்துச் சென்று உதவ ஆரம்பித்தது. காற்றின் உதவியால் அவர்கள் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது இராணுவம் தங்குவதற்கு 5000 சதுர கிலோமீட்டர் அளவு இடம் தேவைப்பட்டது. இந்த இடத்தை நான்கு பங்காகப் பிரித்து ஒரு பங்கில் மனிதர்களும், மற்றொரு பங்கில் ஜின்களும், வேறொரு பங்கில் பறவையினங்களும், மீதமுள்ள ஒரு பங்கில் நாற்கள் பிராணிகளும் தங்கி வந்தன. இவ்வளவு திரளான கூட்டமிருந்தும், எந்தவித மோதுதலோ, சண்டை சச்சரவோ இல்லாதது மிகவும் நிம்மதியாக இருந்தது.
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது அரியாசனத்தை வைப்பதற்கு வெகு அற்புதமான விரிப்பு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அந்த விரிப்பின் அளவு 5 கி.மீ. சதுர அளவிலிருந்தது. இந்த விரிப்பின் மத்தியில் தங்கத்தாலும், வெள்ளியாலும் உருவாக்கப்பட்ட அரியாசனம் அமைக்கப்பட்டிருந்தது. அரியாசனத்திற்குக் கீழே இரு சிங்கங்கள் கட்டப்பட்டிருந்தன.
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரியாசனத்தில் அமர வரும் பொழுது, இந்த இரு சிங்கங்களும் தங்களது முன்னங்கால்களை அவர்கள் முன்னால் நீட்டிக் காட்டும். அவர்கள் அவற்றை மிதித்து ஏறி அரியாசனத்தில் அமர்ந்து கொள்வார்கள். இரு கழுகுகள் தங்கள் இறகுகளை விரித்து, அவர்களது தலைக்கு மேல் குடைபோல் வைத்துக் கொள்ளும்.’ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரியாசனத்தில் வந்தமர்ந்த பிறகு, தங்கள நாற்காலிகளில் நபிமார்களும், அவ்லியாக்களும், வெள்ளி நாற்காலிகளில் மார்க்க அறிஞர் பெருமக்களும் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். வளைவுகளுக்குள் பனீ இஸ்ரவேலர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள்.’
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களது அரியாசனத்தில் அமர்ந்திருக்கும்போது பறவையினங்கள் அவர்களது காதில் ஏதோ அதன் பாஷையில் சொல்லிவிட்டு சென்றன. அவர்கள் அவையில் அமர்ந்திருப்பவர்களை நோக்கி, அவை என்ன சொன்னது என்று தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவையோர் அல்லாஹ்வும், அவனது நபியுமே அறிவார்கள் என்று சொன்னார்கள். அந்தப் பறவைகள் சொன்னதை சுலைமான் நபி அவர்கள் சொன்னார்கள்:
1. நீங்கள் இறப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறீர்கள். இழப்பதற்காகவே அளிக்கப்பட்டிருக்கிறீர்கள். 2. படைக்கப்பட்டவை படைக்கப்படாமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று கூறியது ஆந்தை. 3. நீ எவ்விதம் செயல்படுகின்றாயோ, அவ்விதமே அதன் கூலியைப் பெறுவாய் என்று கூறியது மயில். 4. எவன் அன்பைச் செலுத்தமாட்டானோ, அவன் அன்பைப் பெறவும் மாட்டான்’ என்று கூறியது ஹுத் ஹுத் பறவை. 5. குற்றவாளிகளே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியது வட்டூரா பறவை. 6. உயிருள்ள அனைத்தும் இறக்க வேண்டியவையே! புதியன அனைத்தும் பழைமை ஆகக் கூடியதே. என்று கூறியது கிளி. 7. எனதிறைவன் தூயவன். அவன் தனது திருநாமத்தையும், புகழையும் வானங்களிலும், பூமியிலும் அவற்றின் இடையிலுள்ளதிலும் நிரப்பி வைத்துள்ளான்;’ என்று கூறியது சிட்டுக் குருவி. 8. மறுமையில் பெற்றுக் கொள்வதற்காக, இம்மையில் இன்றே முற்படுத்தி நன்மைகளை அனுப்பி வைத்து விடுங்கள் என்று கூறியது அபாபீல் குருவி. 9. அல்லாஹ்வைத் தவிர எல்லாம் அழியக் கூடியவையே என்று கூறியது பருந்து. 10. வாய்மூடி இருப்பவன் ஈடேற்றம் பெற்று விட்டான் என்று கூறியது காடைக் குருவி. 11. ஒளியைப் படைத்த அல்லாஹ் மிகத்தூய்மையானவன் என்று கூறியது காகம்.

இவ்வாறு விவரித்துக் கூறிய சுலைமான் நபி அவர்கள் அதை நற்பதிவேட்டில் பதிந்து கொள்ளுமாறு அவையில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி சொன்னார்கள்.
ஒருமுறை ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமக்களித்துள்ள அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘ யா அல்லாஹ் உனது படைப்பினங்கள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய சக்தியை நீ எனக்கு அருளியிருக்கிறாய. தயவு செய்து அவற்றிற்கு இரணமளிக்கும் பொறுப்பையும் எனக்குத் தரக்கூடாதா? என்று கேட்டார்கள்.
அதற்கு இறைவன் அது உன்னால் முடியாத காரியம் என்று சொல்லி மறுத்துவிட்டான்.. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீ எனக்கு அதை தந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று சொன்னார்கள்.
வல்லநாயன் நான் உனக்கு ஒரு ஜீவனுக்கு இரணம் அளிக்கும் பாக்கியத்தை தருகிறேன். அதற்கு நீ வயிறு நிறைய உணவளித்தால் இவ்வுலகிலுள்ள ஜீவன்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை தந்துவிடுவேன் என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட கடலுக்கு சென்று இன்ன பெயரைக் கொண்டு அழையுங்கள். ஒரு மீன் வரும் அந்த மீனுக்கு வயிறு நிறைய உணவளியுங்கள் போதும் என்றான்.
சுலைமான் நபி அவர்களும் அல்லாஹ் சொன்ன அந்த கடலுக்கு சென்று கரையில் நின்று ஜின்கள், தேவதைகள், மனிதர்கள் அனைவரையும் ஏவி கடற்கரைபக்கம் உணவை கொண்டு வரச் சொன்னார்கள். அவைகள் உணவுகளை ஒரு மலைபோல் குவிக்கத் துவங்கின.
பின் அந்த மீனின் பெயரை அழைத்தார்கள். அம்மீன் வந்தது. உணவிற்காக வாயைத் திறந்தது. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குவித்து வைக்கப்பட்ட உணவுகளை அதன் வாயில் கொட்டும்படி ஜின்களுக்கு கட்டளையிட்டார்கள். அத்தனை உணவுகளையும் அவைகள் கொட்டின.
அதன்பிறகும் அவை உணவுக்காக வாயைத் திறந்தது. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இனி இதற்கு போட என்னிடம் உணவுகள் இல்லை என்று சலிப்புடன் சொல்லி, அந்தக் கடலில் உள்ள மீன்களில் நீதான் பெரிய மீனா என்று கேட்டார்கள். அதற்கு அந்த மீன் சொல்லியது, அங்குள்ள மீன் கூட்டத்தில் நான்தான் சிறிய மீன் என்றது.
மேலும் நான் பிறந்ததுமுதல் இன்றுதான் பாதி வயிற்று உணவுடன் திரும்பிப் போக வேண்டியதாகிவிட்டது. ஏன் என்னை உணவு உண்ண அழைத்தீர்கள்.? என்னைப் படைத்த அல்லாஹ் இதுவரை இப்படி என்னை அரை வயிறு உணவு கொடுத்து அனுப்பவில்லை என்று முனங்கிக்கொண்டே கடலுக்குள் சென்று விட்டது.
அப்பொழுதுதான் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பபடைப்பினங்கள் அனைத்திற்கும் உணவு அளிக்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்றும், மற்றவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உள்ள பொறுப்பு இது என்றும் உணர்ந்து தம்முடைய தவறுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்...

ஒருதடவை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானவீதியில் தமது படையினருடன் வலம் வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் எறும்பு மற்ற எறும்புகளைப் பார்த்;து, ஓ எறும்புகளே! உங்களின் இருப்பிடங்களுளுக்கு சென்று பதுங்கிக கொள்ளுங்கள். சுலைமானும், அவரது படையினரும் அவர்கள் அறியாமல் உங்களை நிச்சயமாக நசுக்கிவிடாமல் இருக்கட்டும் என்று எச்சரித்தது.
அது எறும்புகளின் அரசி என்றும், அதன் பெயர் தாஹினா என்றும், கதமி என்றும், முன்திர் என்றும், மலாஹியா என்றும், மகுனஸாதாயித் என்றும் பல்வேறாக குறிப்பிடுகிறார்கள். அது பெண் நொண்டி எறும்பு என்றும், ஜின்களுக்கு வாகனமாக இருந்ததாகவும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது..

இதைக் கேட்ட சுலைமான் நபி அவர்கள் அந்த எறும்பை நோக்கி, எனது படையினர் யாருக்கும் தொல்லை தருவதில்லை என்பது உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் நபி அவர்களே! தாங்கள் கூறுவது முற்றிலும் சரிதான். ஆனால் நான் எனது கூட்டத்தாருக்கு தலைமை வகித்துள்ளதால் அவர்களை எச்சரிப்பது என் பேரிலுள்ள கடமையல்லவா என்றது.
உனது இனத்தின் தலைமையின் கீழ் எவ்வளவு தொகை இருக்கும்? என்று விசாரித்தார்கள்.
‘எனது தலைமையின் கீழ் பல படைப்பிரிவுகள் உள்ளன. 4ஆயிரம் பெரிய அதிகாரிகள் உள்ளனர். ஒவ்வொரு அதிகாரியின் கீழும் 4 ஆயிரம் சிறிய அதிகாரிகள் உள்ளனர். அந்த ஒவ்வொரு சிறிய அதிகாரியின் கீழும் 40 ஆயிரம் எறும்புகள் உள்ளன என விவரித்தது அந்த எறும்பு.

அவர்களுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி அல்குர்ஆன் 34: 12ல் கூறியுள்ளான்.


அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.)

 

Anuradha Ravisankarram

Well-Known Member
பறவைகள் கூறிச்சென்றவை எல்லாம் நற்பதிவேட்டில் பதிய வேண்டியவை....அருமை.
நன்றி...
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top