Ramadan 2020- Prophet Moosa- Day 20

Advertisement

fathima.ar

Well-Known Member
மூஸா நபியின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்த்த பிர்அவன் அவர்களை ஒழிக்க பனீ இஸ்ரவேலர்களை கடும் கொடுமைக்கு ஆளாக்க உத்தரவிட்டான். அக் கொடுமைகளைத் தாங்காத பனீ இஸ்ரவேலர்கள் மூஸா நபியிடம் நடந்ததை சொன்னார்கள்.
அல்லாஹ் கிப்திகள் மீது வேதனைகளை இறக்க ஆரம்பித்தான். அவ்வாறு வேதனை இறங்கும்போது, அவர்கள் மூஸா நபியிடம் வந்து அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுமாறு கேட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் மீதும் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதி செய்தார்கள். ஆனால் அதற்கு மாறு செய்தார்கள்.

நீண்டகாலமாகவே மூஸா நபி அவர்கள் பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் திருத்த – நேர்வழிபடுத்த எவ்வளவோ நல்லுபதேசம் செய்து பார்த்தார்கள். எல்லாம் வீணாகிப் போயின. பிர்அவ்னின் அட்டகாசம் கூடிக்கொண்டேதான் போயிற்று. இறுதியாக அல்லாஹ்விடம் இருந்து அவர்களுக்கு இரவோடிரவாக எகிப்தை விட்டு கிளம்பி கடல் வழியாக வெளியே சென்று விடுங்கள் என்று உத்திரவு வந்தது. பிர்அவனுக்கும் அவனது கூட்டத்தாருக்கும் வேதனை இறங்கப் போகிறது என்றும் அல்லாஹ் சொன்னான்.
எகிப்தை விட்டு வெளியேறும்குறிப்பிட்ட நாள் வந்தது. ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடலை எடுத்துக் கொண்டு நைல்நதியை கடந்து பனீஇஸ்ரவேலர்கள் அனைவருடனும்; எகிப்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறுபோகும்போது கடல் குறுக்கிட்டது. பின்னால் பிர்அவ்னின் படைகள் அவர்களைத் துரத்திக் கொண்டே வந்தது.
கடலை தம் கைத்தடியால் அடிக்கும்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ வந்தது. அவர்கள் அடித்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்து வழி விட்டது. அதில் மூஸா நபியும் அவர்கள் கூட்டத்தார்களும் நடந்து சென்றார்கள். பின்னால் துரத்திச் சென்ற பிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் அவ்வழியே போக முற்பட்டனர். நடுக்கடலுக்கு அருகில் சென்றதும் கடல் மூடிக் கொண்டது. அச்சமயத்தில் மூஸா நபி அவர்களின் கூட்டம் அக்கரையை அடைந்திருந்தது. அப்போது பிர்அவ்னும் அவனின் கூட்டத்தாரும் கடலில் மூழ்கி இறந்து போயினர். கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இறுதித் தருவாயில் பிர்அவன் ஈமான் கொள்கிறேன் என்று கத்தினான். ஆனால் அவனது இறுதிநேர விசுவாசம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவன் மூழ்கடிக்கப்பட்டான். பிர்அவ்ன் இறக்கும்போது அவனுக்கு வயது 600.
பிர்அவ்னுடைய அழிவிற்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிரியா நோக்கி பயணமானார்கள். செல்லும் வழியில் பல விக்கிரக ஆராதனை செய்பவர்களை
நேர்வழிபடுத்தினார்கள். இவ்வுலகில் 3500 வருடங்கள் வாழ்ந்து வந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மகளான ஸபூராவின் மகனும், ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கப்பல் கட்ட மரத்தை வேருடன் பிடுங்கி கொண்டு வந்து கொடுத்தவனுமான அவ்ஜ் இப்னு உனக்கை கொன்றார்கள். இவ்வாறு சுமார் 40 ஆண்டுகள் வரை பயணம் செய்தார்கள்.

வழியில் பனீஇஸ்ரவேலர்கள் சிற்சில இடங்களில் பசியாலும், தாகத்தாலும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு நிரந்தரமாக உணவு கிடைப்பதற்கு துஆ செய்யுமாறு மூஸா நபி அவர்களிடம் அவர்கள் வேண்டினார்கள். அவர்களும் து ஆ செய்தார்கள். அனைவருக்கும் நாளொன்றுக்கு இரண்டு விட்டர் அளவு மன்னு என்ற பொருளை அல்லாஹ் இறக்க ஆரம்பித்தான்.
சிலகாலம் இதை சாப்பிட்டு வந்தபின் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. எனவே இறைச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி மூஸா நபியிடம் வேண்டினார்கள். அவர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்ததில் ஸல்வா என்ற குருவிகளை ஆளுக்கு ஒன்று என்று தினமும் இறக்கினான். பிறகு அருந்துவதற்கு தண்ணீர் கேட்டார்கள். அதையும் ஏற்பாடு செய்தார்கள் ஆனாலும் பனீ இஸ்ராயீல்கள் திருப்தி அடையவில்லை. மேலும், மேலும் அது வேண்டும், இது வேண்டும் என்று நச்சரித்ததோடு இறைவனுக்கு மாறு செய்யவும் முனைந்தார்கள். இதனால் சினம் கொண்ட அல்லாஹ் தான் அனுப்பி வந்த அத்தனை அருட்கொடைகளையும் நிறுத்தி விட்டான். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில்…

இன்னும். உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

பிர்அவ்னுடைய காலம்வரை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கால சட்டதிட்டங்களின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்தார்கள். தங்களுக்கு என்று தனியாக சட்டதிட்டங்களை கோரிப் பெறுமாறு மூஸா நபி அவர்களை அவர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர்.
மூஸா நபியவர்கள் இதை ஏற்று தங்களுக்கு தனிச் சட்டம் வேண்டுமென்று துஆ செய்தார்கள். அதனை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் முப்பது நாட்கள் நோன்பிருந்து தூர்சீனா மலைக்கு வந்து சந்திக்குமாறு சொன்னான்.
நோன்பிருந்ததின் காரணமாக வாயில் ஏற்பட்ட வாடையைப் போக்க மிஸ்வாக் செய்தார்கள். இதனைக் கண்ட வானவர்கள் வருத்தப்பட்டார்கள். நீங்கள் மிஸ்வாக் செய்ததால் மேற்கொண்டு 10 நாட்கள் நோன்பிருக்கும்படி அல்லாஹ் பணித்தான். அதன்பின் தமது சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தங்கள் பிரதிநிதியாக நியமித்து விட்டு தூர்சீனா மலை சென்று அல்லாஹ்வுடன் நாற்பது நாட்கள் வரை உரையாடிக் கொண்டிருந்த அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்க ஆசைப்பட்டார்கள். தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு ஊசிமுனை அளவு அம்மலை மீது விழச் செய்தான். அதனால் அம்மலை தவிடுபொடியாகிவிட்டது. இதனால் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்கள்.

அச்சமயம் உலகில் உள்ள அத்தனைப் பைத்தியங்களும் தெளிவு பெற்றனர். நோயாளிகள் அனைவரும் சுகம் பெற்றனர். வறண்ட பூமியின் பகுதிகளெல்லாம் பசுமை பெற்றன. விக்கிரகங்கள் எல்லாம் தலைகுப்புற விழுந்தன.
மூர்ச்சை தெளிந்த மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் அழுது புலம்பி பாவமன்னிப்புக் கோரினார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டான். பிறகுஅவர்களை அவர்களின் கூட்டத்தாருக்கு ரஸூலாக நியமித்து தனியாக சட்டதிட்டங்களை அளித்தான்.
அதன்பின் வானத்திலிருந்து அல்லாஹ்வின் கட்டளைகள் அடங்கிய ஏழு அல்லது ஒன்பது பலகைகளும், தவ்ராத் வேதமும் இறங்கியது. தவ்ராத் வேதத்தில் ஆயிரம் அத்தியாயங்களும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆயிரம் வசனங்களும் இருந்தன என கூறப்படுகிறது. பலகையில் பத்;துக் கட்டளைகள் பொறிக்கப்பட்டிருந்தன


இச்சமயத்தில் ஸாமிரி என்பவன் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து நயமாக பேசி கிப்தியர்களிடமிருந்து கைப்பற்றிய செல்வங்களை பெற்று அதைக் கொண்டு ஒரு காளை மாட்டை வடிவமைத்து, ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குதிரையில் வரும்போது அதன் காலடி மண்ணை ஏற்கனவே எடுத்து வைத்திருந்த அவன் அதை அந்த காளை மாட்டின் வாயில் போட அது உயிர் பெற்று பேச ஆரம்பித்து விட்டது.
பனீ இஸ்ரவேலர்களை நயமாக பேசி அவர்களை ஏமாற்றி அந்த காளை மாட்டை வணங்க வைத்து விட்டான். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவோ தடுத்தும் ஒருசிலரைத் தவிர அவர்கள் அனைவரும் அதை வணங்கி வந்தனர். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில்…

20:85. “நிச்சயமாக,(நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.
20:86. ஆகவே,மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).


20:87. “உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.

20:88. பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

20:89. அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?

நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.

20:91. “மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.


அல்குர்ஆன் 20:85-91
மலையிலிருந்து வந்த மூஸா நபியவர்கள் இவர்களின் இச்செயலைப் பார்த்து கடும் கோபம் கொண்டார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலம் அவர்களை பிடித்து ஏன் இவர்களை தடுக்கவில்லை என்று கேட்டார்கள். அதற்கு ஹாரூன் நபி அவர்கள் நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன் அவர்கள் கேட்கவில்லை என்று அடக்கமாக பதில் சொன்னார்கள்.
அதன்பின் அந்தக் கோபம் சாமிரி மீது திரும்பி அவன் யாரைத் தொட்டாலும், யாருடனும் பேசிவிட்டாலும் அவர்களுக்கு கடும் குளிர் ஜுரம் ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு உன்னை அடித்து விரட்டட்டும் என்று சாபமிட்டார்கள். காளை மாட்டை நெருப்பிலிட்டு சிதைத்து கடலில் எறிந்தார்கள். இதைப்பற்றி அல்குர்ஆன் அத்தியாயம் 20:92-97 வரை தெளிவாகக் கூறுகிறது.

20:92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
20:93. “நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”


20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
20:95. “ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.
20:96. “அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
20:97. “நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.


பிறகு அல்லாஹ்வின் உத்திரவின்படி காளை மாட்டை வணங்கியவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்யப்பட்டனர். அவர்கள் மொத்தம் 70000 பேர்.
மூசா நபியின் சிறிய தந்தையின் மகனான காரூன் என்பவன் மூஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சகோதரியையும் திருமணம் முடித்திருந்தான். மிக்க செல்வந்தனாகவும், அழகனாகவும் இருந்தான். அவன் மூஸா நபி மீது பகைமை கொள்ள ஆரம்பித்து விட்டான். இச்சமயத்தில் அல்லாஹ்வின் உத்திரவின்படி பனீ இஸ்ரவேலர்கள் ஜகாத் கொடுக்க கடமையாக்கப்பட்டனர். காரூன் செல்வந்தனாயிருந்ததால் அவனும் ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவனானான்.

இதனால் கோபம் கொண்ட அவன் ஒருசிலரை சேர்த்துக் கொண்டு மூஸா நபி மீது பழி போட ஆயத்தமானான். அதற்காக ஒரு விபச்சாரியை பேரம் பேசி மூசா நபி அவர்கள் என்னோடு விபரச்சாரம் செய்தார்கள் என்று சொல்லும்படி ஏவினான். அவன் கட்டளையை ஏற்றுக் கொண்ட அவள், மூஸா நபியின் தோற்றத்தைக் கண்டதும் நடந்த உண்மைகளை சொல்லி விட்டாள். இதனால் காரூனும் அவனுடன் சேர்ந்தோரும் தப்பி ஓட முயன்றனர்.
மூஸா நபி அவர்களுக்கு ‘அல்லாஹ்விடமிருந்து பூமியை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்ததாக வஹீ வந்தது. பூமியை காரூனையும், அவனைச் சார்ந்தோரையும் விழுங்க கட்டளையிட்டார்கள். உடனே பூமியானது அவர்களை விழுங்கியது. உலக முடிவு வரை அவன் பூமியின் கீழே சென்று கொண்டே இருப்பான்.
இறுதியில் உலக முடிவுநாளன்று ஏழாவது பூமி அவனை விழுங்கும் என்று ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
பனீ இஸ்ராயீல்களில் பணக்கார வயோதிகர் ஒருவர் இருந்தார். அவருக்கு மக்கள் இல்லை. ஆனால் அவருடைய தந்தையின் சகோதரருடைய ஆண் மக்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு அந்த வயோதிகரின் சொத்தின் மீது கண் இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் அவ்வயோதிகரை கொன்று ஊரின் எல்லையில் கொண்டு போய் போட்டு விட்டனர்.
வயோதிகரை யார் கொன்றார் என்ற கேள்வி எல்லாப் பகுதியிலிருந்தும் எழுந்தது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் உங்கள் அல்லாஹ்விடம் கேட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அதற்கு அல்லாஹ், ஒரு மாட்டை அறுத்து ஒரு குறிப்பிட்ட பகுதியின் இறைச்சியை எடுத்து, இறந்தவரின் உடலில் தேய்த்தால் இறந்தவர் உயிர்ப்பெற்று எழுந்து தன்னை கொன்றவர் யார் என்று சொல்லி விடுவார் என்று சொன்னான். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்….


2:67. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர்’ “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.

2:68. “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல. கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.

2:69. “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.

2:70. “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

2:71. அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.

2:72. “நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).

2:73. “(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
அல்-குர்ஆன் 2:67-73









இதன்பிறகு அல்லாஹ்வின் உத்தரவிற்கிணங்க அர்பஹாவிற்குச் சென்று அமாலிகாவுடன் போர் புரியுமாறு இஸ்ரவேலர்களை ஏவினார்கள். அமாலிகா கூட்டத்தினர் அரீஹா நவாஹ் என்ற பகுதியில் வசித்து வந்தனர். இவர்கள் 240 அடி உயரமிருந்தனர்.


இப்படியே பனீ இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான நாற்பது ஆண்டுகள் கழித்ததும் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு அஹா நவாஹ்வை வென்று அங்கேயே நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.
ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா நபியை விட 3 அல்லது 4 வயது மூத்தவர்களாக இருந்தார்கள். 150 வருடங்கள் வரை வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. இவர்கள் மூஸா நபி மரணிப்பதற்கு ஒரு வருடம் முன்னதாக ஸினாய் பாலைவனத்திலுள்ள ஒரு மலையின் உச்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அந்த மலை சவீக் மலை என்றும், ஹுர் மலை என்றும் ஹாரூன் மலை என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது.
ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்ததும் சிலர் அவர்களை மூஸா நபிதான் கொன்று விட்டார்கள் என்று வதத்தியை பரப்பி விட்டார்கள். ஹாரூன் நபிஅவர்கள் மீண்டும் உயிர்ப்பெற்றெழுந்து பனீ இஸ்ரவேலர்கள் முன்னிலையில் தோன்றி தாம் இயற்கையாகவே மரணித்ததாக சொல்லி மீண்டும் மரணித்து விட்டார்கள்.
இதன்பிறகு ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது பிரதிநிதியாக ஹழ்ரத் யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்களை நியமித்து விட்டுத் தாம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.
ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறையும் போது அவர்களது வயது 123 என்றும் 150 என்றும் இரு கருத்துக்கள் உள்ளன.
 

fathima.ar

Well-Known Member
பிர்அவ்ன் அழிந்து போனபிறகு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரயீல்களுக்கு நற்போதனைகள் புரிந்து வந்தார்கள். ஒரு நாள் ஒருவர் மூஸாவே! உம்மை விட அறிந்தவர் இவ்வுலகில் யாரும் உள்ளார்களோ? என்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள் எனக்குத் தெரியாது என்று சொன்னார்கள். தமது உள்ளத்தில் நம்மைவிட அதிகம் தெரிந்தவர் யாராக இருக்க முடியும் என்று எண்ண ஆரம்பித்தார்கள்.

உடனே அல்லாஹ், வஹீ மூலம் ஓ மூஸாவே! உம்மை விட அதிகம் அறிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவரைப் போய் நீர் சந்தியும். அவர் இரு கடல்கள் சந்திக்கும் இடத்தில் உள்ளார். அவருக்கு உம்மை விட அதிக அறிவைத் தந்துள்ளோம். நம்பிக்கைக்குரிய ஒருவரை துணையாக அழைத்துக் கொண்டு பொறித்த மீனை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி கொண்டு செல்லவும். அந்தப் பொறித்த மீன் உமக்கு வழிகாட்டும்’ என்று அறிவித்தான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யூஷஃ இப்னு நூன் (இவர் மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்களின் சகோதரர் மகன் என்றும், இவர்களது தந்தையான நூன் என்பவர் ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரரான அப்ராயீமின் மகன் என்றும் 126 வயது வரை வாழ்ந்தார்கள் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.) அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு பொரித்த மீனையும், ரொட்டியையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். ஒரு இடத்தில் பொரித்த மீன் உயிர் பெற்றெழுந்து கடலுக்குள் ஓடியது.
அப்பகுதியில்தான் அந்தப் பெரியார் இருப்பதாக அல்லாஹ் முன்னறிவித்திருந்தான். அதன்படி அவர்கள் அங்கு சென்று பார்த்தார்கள். அங்கு ஒரு பெரியவர் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள்.


18:60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.


18:61. அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.

18:62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.

18:63. அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.

18:64. (அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
அல்-குர்ஆன் 18:60-65 ல் தெளிவாகக் கூறுகிறான்.
அவர்கள் தம்மை ஹிளுரு என்று அறிவித்தார்கள். தமக்கு அல்லாஹ் அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தந்திருப்பதாகவும், நீங்கள் வெளிரங்கத்தை அறிந்திருப்பதால் நம்மிருவருக்கும் ஒத்து வராது. கருத்து மோதல்கள் ஏற்படும் என்றார்கள்.
அல்லாஹ் நாடினால் உங்களுடைய கருத்துக்கு ஏற்றவாறே நான் நடந்து கொள்வேன். இதில் நான் உறுதியாக இருப்பேன் என்றும் வாக்களிக்கிறேன் என்றார்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.


அப்படியானால், நான் என்ன காரியத்தை செய்தாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கக் கூடாது. நான் அதற்கு விளக்கம் தரும்வரையில் பொறுமையாக இருந்து கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொள்வதாக இருந்தால் நீங்கள் என்னோடு இருந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை என்று சொன்னார்கள் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கு சம்மதித்து அவர்கள் கடலோரமாக சென்று கொண்டிருந்தார்கள்.
இதை அல்லாஹ் திருக்குர்ஆன் 18:66-82 ல் தெளிவாகக் கூறுகிறான்.

:66. “உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
18:67. (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
18:68. “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
18:69. (அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.


18:70. (அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.

18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர்> (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

18:72. (அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
18:73. “நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.


18:74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.


18:75. (அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.

18:76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் – நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.

18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.

18:78. “இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.

18:79. “அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.

18:80. “(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.

18:81. “இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

18:82. “இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.
இப்போது நீங்கள் எம்மை விட்டு பிரிந்து செல்லலாம் என்று கிளுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா நபிக்கு உத்திர கொடுத்தார்கள். அதன்பின் மூஸா நபி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நற்போதனைகள் புரிந்தார்கள்.
 

fathima.ar

Well-Known Member
உள்ளதில் கடுகு அளவு கூட பெருமை இருக்க கூடாதுன்னு சொல்ற மார்க்கம் தான் இஸ்லாம்..
இது நபியையே சோதிச்சு பார்க்கிறான் அல்லாஹ்...
வாயால சொல்லலை, உள்ளத்துல நினைச்சதுக்கே.. உன்னைவிட பெரியவங்களாம் இருக்காங்கன்னு தலையில கொட்டி சொல்றாங்க...


அவங்களோட ஆர்வக்கோளாறும் இதன் மூலமாக நமக்கு படிப்பினை பார்த்த உடனே don't judge.. காரணங்கள் இருக்கலாம்.. நாமும் பொறுமையை கடைப்பிடிக்கலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top