புள்ளினங்காதல் - 2

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
ஆதவன் அவனுக்கு ஓய்வளித்து விட்டு, முழுநிலா அதன் பணியை செவ்வனே செய்துகொண்டிருக்க, மண்ணின் மாந்தர்கள் மட்டுமல்லாது, விண்ணின் விண்மீன்களாய் ஒளிரும் நட்சத்திரங்கள் கூட, அதன் அழகை மெய் மறந்து ரசித்து கொண்டிருந்த, முன் இரவு நேரம் அது.



பாண்டிச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆர் சாலையில் அமைந்திருந்த சீ-வியூ ரிசார்ட் அது. நடுவே அமைந்திருந்த நீச்சல் குளம் அதில், வெண்மதியின் அழகிய முகம் பிரதிபலிக்க, அந்த குளத்தை சுற்றி, மெரூன் நிற சாட்டின் துணி போர்த்தப்பட்ட மேஜைகளும், அதற்கு மாறாக சாண்டல் நிற துணியால் போர்த்தப்பட்ட நாற்காலிகளும் நேர்த்தியாய் அடுக்கி வைக்க பட்டிருந்தது. ஒரு புறம், இசை கலைஞர்கள் அவர்களின் வயலினில் இருந்து வெளிவந்த இசையில் சிலர் தன்னை மறந்திருக்க, மற்ற சிலரோ ஒரு புறம் பரிமாறப்பட்ட அறுசுவை உணவின் சுவையில் தன்னை மறந்திருக்க, அதீத ஒப்பனை செய்து வந்த மங்கையர் சிலர் தன அழகின் பெருமையை தானே உரைத்துக்கொண்டிருக்க, கோட்-சூய்ட்யில் இருந்த ஆண்கள் சிலர், தங்கள் பொருளாதார நிலையை பறையடித்து கொண்டிருக்க, இது எதிலுமே நாட்டம் இல்லாதவனாய் ஒரு மேஜையில் தனியாய் அமர்ந்திருந்தான் ஆரூரன்.



நினைவில் மூழ்கியவனாய், தன் முன்னால் இருந்த கிண்ணத்தில் இருந்த சூப்பை அருந்த முற்பட்டவன் கண்களுக்கு அங்கு இருந்த பேனரில் இருந்த தேதி, கண்ணில் பட்டது. 4-4-2020 என்று அதில் இன்றைய தேதி பொறிக்க பட்டிருக்க , இவன் நினைவோ பதினைந்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடந்த அந்த திக்-திக் பொது தேர்வு கணங்கள் நினைவிற்கு வந்தன.



பன்னிரெண்டாம் வகுப்பு கணித பொதுதேர்வான அன்று, கேள்வித்தாளை பார்த்து மயங்கி விழாத குறையாய் அவன் அமர்திருக்க, யாரிடமாவது விடை கேட்கலாம் என்று பார்த்தால், அந்த நேரம் அவன் விதி, வரிசை எண் என்ற ரூபத்தில் விளையாடியது. ஆரூரன் என்ற பெயரால் எங்கு சென்றாலும் வரிசை என் ஒன்று தான். தன் பெயரை எண்ணி முதல் முறையாய் அவன் வருந்திக்கொண்டே, ஜன்னல் வழியாய் தெரிந்த குருவி கூடு ஒன்றை ரசித்து கொண்டு அமர்ந்திருக்க, தேவதையாய் அவனுக்கு உதவி செய்தாள் வரிசை எண் இரண்டாய் அவன் பின்னால் அமர்ந்திருந்த அவிரா. ஐந்து ஆண்டுகள் ஒன்றாய் படித்திருந்தாலும், யாரிடமும் அதிகம் பேசாத குணம் கொண்டவனாய் இருந்த இவன், அவளிடம் இதுவரை பேசியதில்லை. தேர்வு முடிந்தவுடன் அவளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி, அவள் முன்பே புறப்பட்டு விட்டதால் அதுவும் முடியாமல் போனது. அதுவே கடைசி தேர்வு என்பதால் அதன் பிறகும் காண முடியாமல் போனது.



அவனுடன் படித்தவர்கள் அனைவரும், ஒன்றுகூடல் விழாவிற்கு, அழைப்பு விடுக்கவும், அவன் ஆசையாய் புறப்பட்டு வந்ததே, அவளும் வருவாள் என்ற தான். அதே ஆசையில் மாலை 5 மணிக்கே அவன் வந்துவிட்டாலும், மணி 8 ஆகியும் அவள் இன்னும் வரவில்லை.



அவன் எண்ணவோட்டம் அவளை சுற்றி வளம் வர, அவன் கண்களோ அவள் தென்படமாட்டாளோ என்று சுற்றும் முற்றும் பார்த்தது. அவன் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருக்க, அவன் முன்னாள் ஒருவர் வந்து அமர்ந்ததையும் கவனிக்க தவறினான்.



அவன் முன்னால் வந்து அமர்ந்தவர், "ஹலோ " என்று கை அசைத்து அழைத்து பார்த்தும் பயன் இல்லாமல், அந்த மேஜைமேல் அலங்காரத்திற்காக வைத்திருந்த ரோஜாப் பூவை வைத்துச் சீண்ட, அப்போது தான் அவள் இருந்த பக்கமே திரும்பினான்.



அங்கு இருந்த அனைவரும் பகட்டான உடை, அழகுநிலையங்களில் கடன் வாங்கிய அழகு, என்றே இருக்க, தன் முன்னால் அமர்ந்திருந்தவளோ, சிகப்பும், கருப்பும் கலந்த ஒரு சிம்பிளான புடவையை நேர்த்தியாக அணிந்து, அழகாய் பின்னிய கூந்தல் ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஒரு கற்றை கூந்தல் மட்டும், அவள் காதோரம் நாட்டியமாடும் அந்த வெள்ளி நிற ஜிமிக்கியுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.





இவன் திரும்பியதும், "ஹலோ மிஸ்டர்.ரோல் நம்பர் 1" என்று அவள் அழைக்க, "சாரி நீங்க யாருன்னு தெரியல" என்று அவன் விழிக்க, "நான் உங்களுக்கு செய்த உதவிக்கு காலம் முழுக்க என்ன மறக்க மாட்டீங்கன்னுல நெனச்சேன். இப்படி கேட்டு என் மனச ஒடச்சிடீங்களே!" என்று நெஞ்சின் மீது கை வைத்து பொய்யாய் நடிக்க, இவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவனுடன் சேர்ந்து அவளும் சிரித்து விட்டு, "எனிவேஸ்... ஐ யாம் அவிரா, மிஸ்டர்.ஆரூரன். இப்போவாது அடையாளம் தெரியுதா?" என்று அவள் கேட்க, இவனோ வாயை பிளந்தான். "அவிரா நீங்களா?" என்று அவன் கேட்க, "இன்னும் அடையாளம் தெரியலையா?" என்று கேட்டாள் அவள்.



"ஸ்கூல் டேஸ்ல ஒழுங்கா கவனிச்சது இல்ல. அது மட்டும் இல்லாம, அப்போ ஸ்கூல் யூனிபோர்ம், குட்டி முடி, அதுல ரெட்டை சடை, கருப்பு கலர் ல ஒரு குட்டி பொட்டு, அது மட்டும் இல்லாம பிங்க் கலர் ல ஒரு பூனைக்குட்டி பொம்மை போட்ட பேக்....இப்போ சுத்தமா ஆளே மாறிட்டிங்க..அடையாளமே தெரியல" என்று அவன் கூற, அவளோ புருவங்களை உயர்த்தி, "ஹ்ம்ம்...யாரோ ஒழுங்கா கவனிச்சது இல்லன்னு சொன்னாங்க. " என்று கூற, மீண்டும் அவ்விடம் அவர்கள் சிரிப்பொலியால் நிரம்பியது.



"அப்புறம். என்ன ஆச்சு. தனியா உக்காந்துட்டு இருக்கீங்க?" என்று கேட்க, "ஸ்கூல் டைம்ல யார்கிட்டயும் அதிகம் பேசுனது, பழகுனது இல்ல. கிளோஸ்ன்னு சொல்லுற அளவுக்கு, நம்ப கிளாஸ்ல எனக்கு யாரும் இல்ல. இன்னும் சொல்லனும்னா, இந்த கெட்-டுகெதர் அட்டென்ட் பண்றதுக்கே எனக்கு அவ்வளவு விருப்பம் இல்ல" என்றான் ஆரூரன். "விருப்பம் இல்லனா... எதுக்கு வரணும்?" என்று அவிரா கேள்வியாய் நோக்க, "உங்கள பாக்கணும்னு தான் வந்தேன்னு சொன்னா நம்புவீங்களா?" என்று இவன் பதில் கேள்வி கேட்க, கண்களை விரித்து, "என்ன பாக்கவா?" என்றாள் அவள்.



"உண்மையா சொல்லணும்ன்னா.... ஆமா... அன்னைக்கு நீங்க மேத்ஸ் எக்ஸாம் ல ஹெல்ப் பண்ணலேன்னா, கண்டிப்பா நான் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் ஆகியிருக்க மாட்டேன். ஆனா அன்னைக்கு உங்க கிட்ட ஒழுங்கா ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல. அந்த தேங்க்ஸ் இப்போவாது சொல்லணும்ன்னு தான் வந்தேன்." என்று கூற, "என்னை தேடி வந்தேன்னு சொல்லிட்டு, இங்க நான் ஒரு மணி நேரமா இருக்கேன், நீங்க என்னை கண்டுக்கவே இல்லையே!" என்றாள் அவள். "எனக்கு சாத்தியமா உங்கள அடையாளம் தெரியலைங்க" என்றான் அவன் சிரித்து கொண்டே.



"இவர்கள் இருவரும் சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்ட, இவர்கள் வகுப்பு தோழர்கள் மூவர், இவர்களிடம் வந்து, "ஹேய் அவிரா. இவன் கிட்ட என்ன பேச்சு?" என்று கேட்க, "ஏன் பேச கூடாதா?" என்று கேட்டாள் அவிரா.



"அப்படி இல்ல. நம்ப கூட படிச்சவங்க எல்லாரும், இப்போ சமூகத்துல நல்ல அந்தஸ்து ல இருக்க, டாக்டர்ஸ், என்ஜினீர்ஸ், பிசினெஸ் மேன்.. அவங்க கிட்ட பேசுனா ஒரு யூஸ் இருக்கும். இவனே பறவைங்க பின்னாடி ஓடிட்டு இருக்க ஒரு லூசர். இவன் கிட்ட பேச என்ன இருக்கு?" என்று ஏளனமாய் கேட்க, "யாரு இவர் லூசெரா?" என்று அவிரா கேட்க, "ஆமாம்" என்றனர் அவர்கள்.



"டாக்டர், என்ஜினீர்ஸ், பிசினெஸ் மென், இவங்க தான் வாழ்க்கைல வெற்றி அடைஞ்சவங்கன்னு யாரு சொன்னா? ஏன் உங்களையே எடுத்துக்கோங்க. அன்வர் நீ ஒரு என்ஜினீயர். ஆனா நீ ஆசை பட்டு தான் இன்ஜினியரிங் எடுத்தியா? ஏதோ...வீட்டுல சொல்றாங்க...சொசைட்டில நல்ல ஸ்டேட்டஸ்னு எடுத்த...இப்போ நீ சமூகத்தால் மதிக்கப்படும் ஒரு என்ஜினீயர்...ஆனா நீ எவ்வளவு நல்லா நடிப்பனு இப்போ உன்ன சுத்தி இருக்கவங்க யாருக்காவது தெரியுமா? உனக்குள்ள இருக்க ஒரு கலைஞனை, உனக்குள்ள இருக்க ஒரு தனி திறைமையை, உன்னோட ஆசையா பொதைச்சிட்டு தான வாழ்ந்துட்டு இருக்க. உனக்கு மனசுக்குள்ள ஏதோ ஒரு மூலையில அந்த உறுத்தல் இல்லனு சொல்லு பாப்போம்.



ஏன் இளமதி. நீ இப்போ ஒரு டாக்டர். நீ டாக்டர் ஆகணும்ங்கிறது, உங்க அப்பாவோட கனவு. அதுக்காக டாக்டர் ஆகிட்ட. ஆனா உனக்கு பிசிக்ஸ்ல இருந்த இன்டெர்ஸ்ட். பிசிக்ஸ் ப்ரொபெஸ்ஸர் ஆகணும்ன்னு உன்னோட ஆசை? அதை தொலைச்சிட்ட தான? இப்போ சொல்லுங்க லூசர் நீங்களா? இல்ல, யாருக்காகவும் எதுக்காகவும் தன்னோட கனவை தொலைக்காம,இன்னைக்கு ஒரு பறவையியல் நிபுணர் (Ornithologist) ஆகியிருக்காரே அவரு லூசரா? உங்க கிட்ட அந்தஸ்து இருக்கலாம், ஆனா, ஒரு பறவையியல் நிபுணரா இவருக்கு கிடைத்த அனுபவத்துக்கு, அவரோட மன நிறைவுக்கும் அது கொஞ்சமும் ஈடாகாது." என்று கூற, "ஹேய் விடுங்க பா. இவளும் என்ன. நம்பள மாதிரி வெல்-செட்டில்டு ஆவா இருக்கா? இவளும் மண்ணை தோண்டி பொழைக்கறவ தான....அப்டி தான் இவனுக்கு சப்போர்ட் பண்ணுவா..." என்றான் அந்த இருவருடன் வந்த இன்னொருவன்..



"யாரு? பிரபல தொழிலதிபர் ஞானசம்பதம் அவர்களின் மகன் சந்திரன் அவர்களா? இன்னைக்கு வரைக்கும் லோக்கல் நியூஸ்பேப்பர் ல உன்ன இப்டி தான மேன்ஷன் பண்றங்க. ஆனா எத்தனை இன்டர்நேஷனல் வைல்டு லைப் மேகசின்ஸ் ல இவர் எழுதுன ஆர்டிகிள்ஸ் வந்துருக்கு தெரியுமா?" உங்க அப்பா பிசினெஸ் தான டா இன்னைக்கு வரை பண்ணிட்டு இருக்க? உனக்குன்னு ஒரு அடையாளமே நீ உருவாக்கலையே இப்போ வரை. ஆனா நான் அப்டி இல்ல. ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக எனக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. எங்க ரெண்டு பேரை பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல சந்திரன்" என்று மூச்சி விடாமல் அனைவரையும் பேசியே ஒரு அவிரா ஒரு வழி செய்ய, அவள் பேசுவதை வாய் பிளந்து, கண் இமைக்காமல் பார்த்தான் ஆரூரன்.



பேசி முடித்தவள், எதிரில் இருப்பவர்கள் பதிலை கூட எதிர் பார்க்காமல், அவளுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு, ஆரூரன் கையையும் பிடித்து இழுத்து கொண்டு, அதே வேகத்தில், மற்றவர் அழைப்பதை கூட காதில் வாங்காமல் அந்த ரெசார்ட்டை விட்டு வெளியே சென்றாள்.



சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியாமல், தெரிந்துகொள்ளவும் விரும்பாமல், அவிரா இழுத்த இழுப்பிற்கு அவளுடனே சென்றான் ஆரூரன். ரெசார்ட்டை விட்டு வெளியே வந்து நின்றவள், சிறைபடுத்தி வைத்திருந்த அவன் கைகளையும் விடுவித்தாள். "இப்போ எங்க போறது ஆரூரன்?" என்ற அவள் கேள்வியில் தான் அவனுக்கு விழிப்பு தட்டியதே. அதன் பிறகு தான் அவர்கள் வெளியே வந்து நிற்பதையே உணர்தான் இவன். இவன் திருதிருவென விழிப்பதை கண்டவள், "ஆரூரன், நீங்க எங்க போகணும்?" என்ற அவள் கேள்விக்கு, ஒரு வழியாக விண்ணில் பறந்து, மண்ணில் நடப்பவை மறந்த தன் மனதை அழைத்து வந்து பதில் அளித்தான். "நான்...அது வந்து..நான் சென்னை போகணும்...கெட்-டுகெதர் இரண்டு நாள் நடப்பதாக தான சொன்னாங்க. அதான் நாளைக்கு ஈவினிங் கெளம்பறதுக்கு கேப் புக் பண்ணியிருந்தேன்" என்று கூற, "ஒஹ்ஹ்" என்று மட்டும் பதில் அளித்தவளிடன் "நீங்க எங்க போகணும்?" என்று கேட்டான் அவன்.



"நான் ஆதிச்சநல்லூர் போகணும்" என்று அவள் கூற, "உங்க வீடு அங்கேயா இருக்கு?" என்று கேட்க, "இல்ல இல்ல. நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கேன். இப்போ ஆதிச்சநல்லூர்ல தான் வேலை" என்றாள் அவள். "இப்போ அங்க எப்படி போவீங்க?" என்று கேட்க, " இங்க இருந்து பாண்டிச்சேரி ஒரு 25 கிலோமீட்டர்ஸ் தான் ஆரூரன். ஒரு கேப் புக் பண்ணி பாண்டிச்சேரி போய்டுவேன். ப்ரெண்ட் வீடு அங்க இருக்கு. நைட் அங்க தங்கிட்டு காலைல பஸ்ல போவேன்" என்று பதில் அளித்தாள். இவன் யோசித்துக்கொண்டே நிற்க, அவளோ கைபேசியில் கேப் புக் செய்துவிட்டாள். "நான் கேப் புக் பண்ணிட்டேன். ஐயா எப்படி ஊருக்கு போறதா உத்தேசம்?" என்று கேள்வி கேட்க, அவனோ ஊருக்கு செல்லத் தான் வேண்டுமா என்ற யோசனையில் இருந்தான்.



இவன் பதில் அளிக்காமல் இருக்க, அவன் முகத்திற்கு முன், சொடக்கிட்டாள் அவள். "அப்டி சார் என்ன தான் யோசிக்கிறீங்க. சொன்னா..எங்களுக்கு இருக்க குட்டியோண்டு மூளையை வச்சி, நாங்களும் ஏதாவது ஐடியா சொல்லுவோம்" என்று அவள் கேட்க, அவனோ மனதிற்குள் அவளை கண்டமேனிக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தான். "சரியான மோகினி பிசாசா இருப்பா போல. இவளுக்கு வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்ல தான் வந்தேன். இவ தான்...அந்த குட்டி கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசி, என்ன இப்படி புலம்ப விட்டுட்டா. முழுசா கூட பேசி முடிக்கல. அதுக்குள்ள கெளம்பறாளாம். இதுல என்னையும் வேற கிளம்ப சொல்லுறா. என்ன பொய் சொல்லி, இவ கூட போகலாம்ன்னு நானே என் ஆர்ணித்தாலொஜிஸ்ட் பிரைனை கசக்கி யோசிச்சிட்டு இருக்கேன். இப்போ வந்து கேக்குறா பாரு கேள்வி. அவ கிட்ட என்ன பொய் சொல்லலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்னு அவ கிட்டயேவா சொல்லி சொல்ல முடியும்.. ராட்சசி" என்று மனசுக்குள் ஒரு பேரக்ராப் அளவிற்கு வசனம் பேசினாலும், வாய் வரை ஒற்றை வார்த்தை கூட வரவில்லை.



"என்ன மிஸ்டர். ரோல் நம்பர் ஒன். பதிலே காணும்" என்று மறுபடியும் கேட்க, "அவிரா...அது வந்து...நான் இதுவரை ஆதிச்சநல்லூர் போனதே இல்ல. அது மட்டும் இல்லாம தொல்பொருள் ஆராய்ச்சி எப்படி பண்ணுங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு. அதனால..அதனால..." என்று அவன் இழுக்க, "அதனால?" என்றாள் அவிரா. "அதனால...நானும் உங்க கூட ஆதிச்சநல்லூர் வரேனே. ஒரு ரெண்டு நாள் உங்க கூட இருந்துட்டு...அதாவது தொல்பொருள் ஆராய்ச்சி எப்படி பண்றங்கன்னு பாத்துட்டு ஊருக்கு போறேனே" என்று அவன் தயங்கி தயங்கி கேட்க, இவளோ கொல்லென சிரித்தாள்.



அவள் சிரிப்பதை பார்த்தவன். "என்ன அவிரா. ஏன் சிரிக்கறீங்க. நான் யோசிச்சி சொன்ன பொய் நம்புற மாதிரி இல்லையா?" என்று இவன் உலற, "என்னது?" என்றாள் அவள். "அது வந்து. நான் யோசிச்சி பொய் சொன்ன மாதிரியா இருக்கு? என்னை நம்புறியா இல்லையா? அப்டின்னு கோவமா கேட்டேன்" என்று மழுப்பினான் அவன். அவன் சொன்னதை கேட்டு, அவள் மீண்டும் சிரிக்க, "என்ன? மறுபடியும் சிரிக்குற?" என்று அவன் கேட்க, "இல்லப்பா...நீ கோவமா கேட்டதே, எனக்கு என்னமோ வெக்க பட்டு கேட்ட மாதிரி இருந்துச்சு. அதான்..." என்று இவனை பார்த்து அவள் மீண்டும் சிரிக்க, "என்ன பண்றது. பொண்ணுங்க தான் இப்போல்லாம் வெக்க படுறதே இல்லையே. பசங்க நாங்க தான். அப்போ அப்போ வெக்க பட்டு, வெக்கத்தை வாழ வச்சிட்டு இருக்கோம்" என்று அவன் கூற, "உன்னை நான் அமைதையான பையன்னுல நெனச்சேன்" என்று அவனை நோக்கினாள் அவள்.



"அட, நான் அமைதியான, சமத்து பையன். ஊருல யாரை வேணாலும் கேட்டு பாருங்க மேடம்" என்று அவன் கையை கட்டிகொண்டு கூற, "என் கிட்ட மட்டும் தான். வாயோட சேர்ந்து வாலும் நீண்டு போகுது போல" என்று அவள் கூறும்போது, அவள் புக் செய்த கேப் வந்து நின்றது. அவள் அதன் உள்ளே அமர, இவனோ அவளை கேள்வியாய் நோக்கினான். "உள்ள வந்து உக்காருங்க, வெக்கத்தை வாழ வைக்க பிறந்த வள்ளலே" என்று கூற, அசடு வழிந்துகொண்டே காருக்குள் ஏறினான் அவன்.



அன்று இரவு இருவரும் பாண்டிச்சேரியில் இருக்கும் அவிராவின் தோழியின் இல்லத்தில் தங்கி விட்டு, அடுத்த நாள் காலை பேருந்து நிலையம் சென்றனர்.






தங்கள் விமர்சனங்களை ஆவளுடன் எதிர்நோக்கும்...
கமலி ஐயப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி ஐயப்பா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே
இஞ்ஜினியர் டாக்டர் இதெல்லாம்தான் படிப்பா?
மத்ததெல்லாம் படிப்பில்லையா?
பணம் மட்டுமே வாழ்க்கையில்லையே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top