ஸ்ருதிபேதம்

உண்மை? பொய்?

நிர்ணயிப்பது எது?

நிகழ்வா? சாட்சியா ?

அத்தியாயம் 2

மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. இள மஞ்சளும் வெண்மையும் கலந்த கலவையாக, மேகக்கூட்டத்தைப் பிளந்து பாகை பாகையாக வானையும் கடலையும் இணைத்தபடி செஞ்சாந்து நிறத்தில் ‘உழைத்துக் களைத்த மக்களே, சென்று வருகிறேன், அனைவரும் உறங்கி நாளைய ஓட்டத்துக்கு தயாராகுங்கள்’, என்று பறையறிவிக்கும் வண்ணம் ஆதவன் மறையத் துவங்கி இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

ஹூம். இதோ முடியப்போகிறது இன்னொமொரு இயந்திரமயமான நாள், என்று சலிப்பு மனதுள் எழும்போதே கணவன் குரல் கேட்டது.

“நந்து காஃபி ரெடியா?”, விஷால்.

மாடி தோட்டத்தில் இதழ் விரித்திருந்த பூக்களை கொய்து கூடையில் போட்டு விறுவிறுவென கீழே சென்றாள், நந்தினி. விஷாலின் மனைவி. திருமணம் முடித்து ஆறு வருடங்கள் ஆகின்றது, திருமணத்திற்கு சான்றாக  ஐந்து வயது மகன் தர்ஷித்.

பிள்ளை திருமணத்திற்கு சான்று, அவ்வளவே. தம்பதியின் அன்பிற்கோ அந்நியோன்யத்திற்கோ அல்ல. காரணம் அவள் வானத்தில் பால்வீதிக்கு பாதை தேட, கணவனோ மாடியில் கூதல் அதிகம் என்னும் ரகம்.

கணவனின் விருப்பு வெறுப்பு அறிந்து நடப்பவளே நல்ல இல்லத்தரசி என்றால், அவளுக்கென்று மனம் எதற்கு? தனியே படிப்பதற்கு? ஆசாபாசங்கள் தான் எதற்கு? உனக்கு எதுவும் யோசிக்கவோ தேடிக் கொள்ளவோ தகுதியில்லை எனவே, இவன்தான் எங்கள் தேர்வு, இனி இவன் இஷ்டப்படி நட, என்று இவளது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். அதற்காக நந்தினி ஒன்றும் காதல் கத்திரிக்காய் என்று திரியவில்லை, அதற்கான வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை, கிடைத்த ஒரு வாய்ப்பையும் வீட்டினருக்கு பயந்து விட்டுவிட்டவள்.

“தோ, எடுத்துட்டு வர்றேங்க”, என்று நந்தினி கிட்சன் செல்ல,

கூடத்தில் அமர்ந்து, தொலைக்காட்சி பெட்டியை உயிர்ப்பித்து, ரிமோட் எடுத்து அவனுக்கு பிடித்த சீரியலுக்கு திரையை மாற்றினான். ஐந்து நிமிடத்தில் காபி வர, டிவி பார்த்தவாறே, வாங்கி அருந்தினான்.

நந்தினி சில நொடி நின்று அவனைப் பார்த்து, காஃபி சுவை மாறியிருந்தால் தோன்றும் முக மாற்றம் இல்லாமல் போக, ‘சரி காஃபி சரியான கலவையில் உள்ளதுபோலும்’ என்று மனதுள் நினைத்து பின் நேரே பூஜையறை சென்று பூக்களை தொடுக்கத் துவங்கினாள். சரியாக பத்து நிமிடத்தில், “நான் போய் தர்ஷித்தை கூட்டிட்டு வர்றேன்”, என்று கிளம்பிவிட்டான். தர்ஷித் அருகில் உள்ள அபாகஸ் கற்றுத்தரும் பள்ளிக்கு சென்றுவருகிறான். அவனைக் கூட்டிவர செல்வது இவனது வழமை.

“நைட் சப்பாத்திக்கு குருமா பண்ணட்டுமா? இல்ல, வெண்டைக்கா பொரியல் பண்ணட்டுமா?”

“ம்ச். எதோ ஒண்ணு பண்ணு, நான் ராகவ் வீட்டிற்கு போயிட்டு, அப்படியே ஸ்டாக் செக் பண்ணிட்டுதான் வருவேன், வர பத்து பதினோரு மணியாயிடும்”, கணவனின் விட்டேத்தியான பதில்.

கடந்த சில வாரங்களாக, விஷால் ராகவ் வீட்டுக்கு போவதும் வருவதும், புது கடையின் உள்வேலையிலுமே அவனது கவனம். இல்லையென்றால் மட்டும் சீக்கிரம் வீடு வந்து மனைவியுடன் அமர்ந்து அளவளாவும் வழமை உள்ளவனா என்ன? குடுக்கிறயா, சாப்பிடறேன், ஏதாவது வேணுமா வாங்கிக்கோ, புடவை பிடிச்சிருக்கா கட்டிக்கோ அப்படித்தான் திருமணம் முடிந்ததிலிருந்து இன்றுவரை.

மாறுதலாக ராகவ் இறந்த சில நாட்கள், ஸ்ருதி பற்றி புலம்பலாக பேசினான், பின் அதுவும் நின்றுவிட்டது. வன்பொருள்கள் விற்பனையகம் வைத்திருந்தால், இறுக்கமாக இருக்வேண்டும் என்று யாரேனும் சட்டம் வைத்திருக்கிறார்களா தெரியவில்லை.

“என்ன ரகுண்ணா வீட்டுக்கு? ஏதாவது பிரச்சனையா?”, எதையாவது பேச வேண்டும், இதைக் கேட்டு வைத்தாள்.

“ப்ளம்பிங் ஒர்க் பாக்க ஆள் வேணும்னு பர்வதம்மா சொல்லி இருந்தாங்க, தண்ணீ எங்கயோ லீக் ஆகுதாம், பிளம்பர் நாளைக்கு வர்றேன்னு சொன்னான், அங்க அம்மாட்ட சொல்லிட்டு, சாமான் என்ன தேவைப்படும்னு பாத்துட்டு போனும்”

“ம்ம், ஸ்ருதி ஆபீஸ் போகப் போகுதில்ல?”

“ம்ம். ஆமா, எப்படி சமாளிக்கப்போறா-னு தெரில”

“ம்ம்”, இதற்கு என்ன பதில் சொல்வது? இப்படியா ஒரு பெண் இந்தக்காலத்தில் எதையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பாள்? ஆனால், அவளை ராகவ் அப்படி தாங்கினார். வகை வகையாக சமைப்பதில், இழை இழையாக கோலம் போடுவதிலும், பளிங்கு போல வீட்டை பராமரித்து நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதிலும் இருந்த திறமை அவளுக்கு போதும் என்று அவர் நினைத்திருக்கலாம். எப்போது இங்கு வந்தாலும் சிரித்த முகமாகத்தான் இருவரும் இருப்பர். வீட்டுக்கு திரும்ப நேரமாகிவிட்டதென்று ஸ்ருதி நிமிர்ந்து கணவனை ஒரு பார்வை பார்த்தால் போதும். உடனே, “டைமாச்சு விசு, கிளம்பறேன்”, என்று விடுவார் ராகவ். ஹ்ம்ம். இப்படி இந்த வயதில் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டாம்.

முன்பெல்லாம் இந்த பெண் ஸ்ருதி மிகவும் கொடுத்து வைத்தவள் என்று பொறாமை பட்டிருக்கிறோம், ஆனால், இப்போது அவளை பார்த்து பரிதாபம் தான் வருகிறது. எத்தனை அந்நியோன்யமான தம்பதிகள்?, நமக்கு இப்படி கண் பார்த்து புரிந்து நடக்கும் கணவன் அமையவில்லை அட, பார்வை புரிய வேண்டாம், பேச்சு? அதுவும்  புரியாது, இவள் சிந்தனைகள் அப்துல் கலாம் முதன் அஜீத் குமார் வரை சென்றாலும், கூட பேச வேண்டுமே? திருமணமான புதிதில், அவனது ஹார்ட் வேர் கடைகள், அதன் நெளிவு சுழிவுகள் குறித்துப் பேசிய விஷால், இவளுக்கு போர் அடிப்பதுபோல முகம் சுளிக்க பேசுவதை மெல்ல குறைத்துக் கொண்டான். வேறு எதுவும் பேச தெரியாது, தெரிந்து கொள்ளவோ, அரட்டையிலோ விருப்பமில்லா பிறவி. ஹூம். இரவில் கணவனும் மனைவியுமாக பேச விஷயமா இல்லை? வருவதே பதினோரு மணிக்கு மேல், டிவி பார்த்தவாறே சாப்பிட்டு, உறக்கம் வரும்வரை சேனல் மாற்றி, படுக்க வந்து கடமைக்கு காதல், ச்சே. என்ன வாழ்க்கை?

இப்படி காலம் முழுதும் வாழ்வதற்கு, ஸ்ருதியைப்போல் சில காலமேயானாலும் புரிந்த கணவனோடு வாழ்வதே மேல், என்று தோன்றத்தான் செய்கிறது, என்றெல்லாம் எண்ணமிட்டு நந்தினி தனது அலைபேசியில் முக புத்தகத்தை திறந்தாள். அதில் ரமணன் நட்பு விண்ணப்பம் கேட்டிருந்தான். ரமணன்.. இவளிடம் முதன்முதலில் காதல் சொல்லி கடிதம் கொடுத்தவன், கல்லூரியில் இவளது சீனியர். பட்டிமன்றப் பேச்சாளி, நகைச்சுவை பேச்சில் மன்னன்.

*****************

வாசலில் அழைப்பு மணி அடித்தது, ஸ்ருதி கூடத்தில்தான் அமர்ந்திருந்தாள், ஆனால் வெறுமையாக, எதிலும் பற்றில்லாத ஒரு நிலையில், அறையில் இருந்து வெளியே வந்த மாமியார், கதவைத் திறந்து வந்தது யார் என்று பார்த்தார். எவனோ முன்பின் அறியாதவன் ஒருவன் நின்றிருந்தான், “யாருப்பா நீ? என்ன வேணும்?”, என்று கேட்டதும்

“ராகவா சார் இல்லீங்களா?”

“இல்ல என்ன விஷயம்னு சொல்லு..”

“அது வந்துங்கமா, ஒரு வாரத்துல அவர் கேட்ட பொம்மை தரேன்னு சொன்னேன், ஆனா என் பொஞ்சாதிக்கு பிரசவ நேரம்ங்கிறதால ஊர்ல இருக்க வேண்டியதா போச்சு, ராகவா சார் போன் நம்பர் இல்ல, இருந்திருந்தா சொல்லி இருப்பேன், அவர் கேட்ட ராதாகிருஷ்ணன் கொண்ணாந்திருக்கேன், உள்ள வச்சிட்டுங்களா?”

“ம்ம்.”, என்று அத்தை வழிவிட..

“சார் வெளில போயிருக்காங்களா?, நா நேரே ஊர்லேர்ந்து வர்றேன், காலைல ஆபிஸ் போம்போது தினமும் பாப்பேன், சார் அவங்க friends நிறைய பேருக்கு என்னை பத்தி சொல்லி இருக்காங்க, தங்கமான குணம்ங்க”, சளசளத்தபடி அட்டைப் பெட்டியைப் பிரித்து, சுற்றியிருந்த காகிதங்களை நீக்கி அவன் செய்த ராதா கிருஷ்ணனை வெளியே எடுத்து காண்பித்தான். பின் சில நிமிடங்களில் கூடத்தின்  ஓரத்தில் நடுநாயகமாக இருந்த அந்த அழகிய வேலைப்பாடமைந்த ஸ்டூல்-லில் ராதாகிருஷ்ணன் எழிலாக அமர்ந்துகொண்டான். அங்கிருந்த ஸ்டாண்ட்-ல் சிலையை வைத்ததும் போய் வருவதாக கூறி அந்த பொம்மைக்காரன் விடைபெற்றான். ஸ்ருதியும் அவளது மாமியாரும் ஏதும் சொல்லாத தோன்றாமல் அமைதியாக நின்றிருந்தனர்.

கண் கொட்டாமல் ராதா க்ருஷ்ணனை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதிக்கு கணவன் ராகவ் சொன்னது மனதில் ஊஞ்சலாடியது. “அவங்க பிரிஞ்சே இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் நினைச்சிட்டேதான் இருந்தாங்க, சோ அவங்கதான் பெஸ்ட் கபிள் இன் தி வேர்ல்டு”, நாற்பது நாட்கள் கடந்திருந்தது, ராகவ் இல்லாத நாட்கள், சாவி கொடுத்த இயந்திரம் போல யாரோ சொல்லச் சொல்ல அதை கேட்டு நடந்ததில் சென்றது, அவன் இல்லை என்ற எண்ணம் கூட வர மறுத்தது. எப்படி முடியும்? என்னை விட்டு எப்படி போனான்? இன்னமும் நம்ப முடியவில்லை.

அவன் இறந்த மறுநாள் கூடத்தில் குழுமி அழுதுகொண்டிருந்த சொந்தங்களை பார்த்து, “ச்சூ.. சும்மாயிருங்க, அவங்க என்னைவிட்டு எங்கயும் போமாட்டாங்க, அழுது ஆர்பாட்டம் பண்ணாதீங்க”, என்று அரட்டியது பேதமை என்று அனைவரும் நினைக்க, அவ்வாறில்லை என்று ஊர்ஜிதப்படுத்தும் விதமாய் அடுத்தடுத்த நிகழ்வுகள்.

நான்கு நாட்களில், ராகவ் ஆர்டர் செய்திருந்த கைவினைப்பாடுகள் நிறைந்த மர ஸ்டாண்ட் வந்தது. அடுத்தடுத்த நாட்களில் அவனது மொபைல் வாடகை வாங்க, மளிகை பொருட்கள், இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை செலுத்த, ம்யுசுவல் ஃபண்ட் நிறுவன காரியதரிசி என தொடர்ச்சியாக தகவல்கள், அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க, இவை எதுவுமே புரியாமல் தலைசுற்றித்த்தான் போனாள் ஸ்ருதி.

கட்டக் கடைசியாக, ராகவின்  வங்கி அட்டை பின் நம்பரைக் கூட தெரிந்து கொள்ளாத அவள் மடத்தனத்தை தம்பி மாதேஷ் கடிந்து கொண்ட போது, “தெரியாதேடா, இப்படி பொசுக்குன்னு விட்டுட்டு போவார்ன்னு தெரியாதேடா”, என்று வெடித்து அழுதது நினைவில் வந்தது. அதன் பின் இரண்டு நாட்கள் மாதேஷ்தான், விஷாலையும் கூட்டிக்கொண்டு வங்கி, காப்பீடு நிறுவனம் அனைத்திற்கும் அலைந்து விபரம் சொல்லி, சரி செய்தான்.

பின் பிருத்வி-யை, மாதேஷ் பூனே அழைத்து சென்றிருந்தான். அவனுக்கு ஒன்னரை வயதில் இரட்டை ஆண் குழந்தைகள். அவர்களை பார்த்து ப்ரித்வி சற்று இந்த இறுக்கத்தில் இருந்து விடுபடக்கூடும் என்று கூட்டிச்சென்று விட்டான்.

தனிமையில் உழன்ற ஸ்ருதிக்குத்தான் உணவின் தேவை கூட இல்லாமல் போனது, ராகவிற்காக சமைத்து, அவனுக்காக உடுத்து, அவனுக்கு பிடித்தாற்போல் வீட்டை அழகுபடுத்தி, அவன் மெச்சுதல் ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்பதுபோல இத்தனை வருடம் இருந்து பழகியபின், அவன் இல்லாத வீடு இப்போது மிக சூன்யமாக தெரிந்தது.

“ஸ்ருதி, எழுந்து கொடில இருக்கிற துணியெல்லாம் மடிச்சு பீரோல வை, நைட்க்கு உனக்கு தோசையும், எனக்கு கஞ்சியும் ரெடி பண்ணிடு”, அத்தையின் குரல் வர.. சற்றே வெறுப்பாக இருந்தது. ராகவ் இருந்தவரை இவர் அதிகம் பேசியதே கிடையாது, சிறிது நேரம் தொலைக்காட்சி அல்லது அவரது பக்தி புத்தகங்கள், தினசரி கோவில் என்பதுதான் அவரது வழமையாக இருந்தது. இப்போது வந்திருந்த சொந்தங்கள் அனைத்தும் சென்றபின் நான்கைந்து நாட்களாக கொஞ்சம் கடுமையாக பேசுவதுபோல ஸ்ருதிக்கு தோன்றியது. அதிலும் விபத்து நடந்த அன்று மருத்துவமனையில் வைத்து அவர் கேட்ட கேள்வி?

“பணம் எவ்ளோ கைல வச்சிருக்க?”, மகன் இறந்துவிட்டான் என்பது தெரிந்து பேத்தியை மூன்றாவது வீட்டு நந்தினியிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுவிட்டு, மருத்துவமனை வந்ததும் மருமகளிடம் அவர் கேட்ட முதல் கேள்வி இது. அப்போது அவரது கேள்வி புரியாமல் மலங்க மலங்க விழித்தது நினைவுக்கு வந்தது. ஆனால், மறுபடியும் அதே கேள்வி கேட்கப்பட, மனதை மெல்ல திரட்டி நிஜமாகவே பணம் குறித்துதான் கேட்கிறார் என்பது புரிந்து, “ஒரு இருபதாயிரம் இருக்கும்னு நினைக்கறேன்த்த”, என்றாள்.

அவர், “ப்ச்”, என்றதும், “மா, நா பாத்துக்கறேன்”, என்றான் விஷால், ராகவின் பள்ளித்தோழன். மெல்ல அவன் கைப்பிடித்து, “நீயே பாத்துக்கப்பா”, என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அப்போதுதான் அவரது கண்கள் அயற்சியையும், கலக்கத்தையும் காண்பித்தது. தசை ஆடியதோ?

பின் ராகவின் அலுவலக நண்பர்கள், உயரதிகாரிகள் என அனைவரும் ஒவ்வொருவராய், சிலர் குழுவாய் வந்தனர். “உங்களுக்கு யாருமில்லைன்னு கவலைப்படாதீங்க மா, ராகவ் வொய்ப்-க்கு அவங்களுக்கு ஏத்தா மாதிரி வேலை இன்னும் ஒருமாசத்துல கிடைக்க ஏற்பாடு பண்றோம்”, என்று அத்தையிடம் ஆறுதல் சொல்லி போயிருந்தனர். ராகவின் குடும்பத்தை நாங்கள் கவனித்துக்கொண்டே இருப்போம் என்பதை வேறு வேறு வார்த்தைகளால், செய்கைகளால் சொல்லிவிட்டு சென்றனர். அவ்வப்போது கண்களில் நீர் திரையிட்டாலும், ஸ்ருதியைப் போல துவண்டு விடாமல் பர்வதம் அத்தை திடமாகவே நின்றார்.

அன்று மட்டுமல்ல, அடுத்தடுத்து நடந்த சடங்கு ஸம்ப்ரதாயங்களிலும் அத்தை குறுக்கிட்டு, “ஸ்ருதிக்கு, தாலி சரடை மட்டும் கழட்ட சொல்லுங்க, வேற எதுவும் பண்ணக்கூடாது”, தெளிவாக கணீர்க் குரலில் கூறிவிட, மாமியாரே சொன்னபின் மறுத்துப் பேச யாருக்கும் மனம் வரவில்லை.

ஸ்ருதி எதிர்பாரா விஷயம் என்னவென்றால், பத்து நாட்களுக்கு முன் ராகவ் இறப்பின் அடிப்படையில் வாரிசான இவளுக்கு ( க்ளெரிக்கல் ஒர்க் ) வேலை நியமனக் கடிதம் வந்ததுதான். “வேலைக்கெல்லாம் போ முடியாதுத்த, பழக்கமில்லை, தவிர நமக்குத்தான் வாடகை வருதில்ல?”, என்ற இவளின் மறுப்புக்கு அத்தை செவி சாய்க்கவில்லை.

“நாப்பத்தஞ்சு நாள் முடிஞ்சதும் வந்து சேர்றேன்-ன்னு லெட்டர் குடுக்க சொல்லி இருக்காங்க, தயாரா இருந்துக்கோ”, என்று சற்று கடுமையாகத்தான் பேசினார். தம்பியும், “உனக்கு மாற்றம் வேணும்க்கா, வேலைக்கு போ”, என்று சொல்லி அத்தையின் பேச்சை வலியுறுத்தினான்.

ஆனால் வேலை, மாறுதல் இதெல்லாம் யாருக்கு வேண்டும், ஸ்ருதிக்கு தேவை இப்போது தனிமை மட்டுமே. ராகவை, அவன் பேசிய பேச்சுக்களை, சீண்டல்களை, தன்னோடு கோபம் கொண்ட தருணங்களை என்று அசைபோட தனிமை தேவைப்பட்டது, இந்த அத்தை ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை எதையாவது பேசி ராகவுடனான நினைவுகளைக் கலைக்கிறார்.

‘இப்போது இந்த பொம்மைக்காரன்’, மனதில் சலிப்புடன் அத்தைக்கும் தனக்குமான இரவு உணவினை தயாரிக்கக் சென்றாள் ஸ்ருதி. அரைமணி நேரம் அதில் கழிய, வீட்டின் மௌனத்தைக் குலைக்கும் வண்ணம் தொலைபேசி அலறியது.

அதன் சத்தத்தில் விதிர்த்து நின்றாள் ஸ்ருதி. உடல் தானாக விரைத்து நடுங்க ஆரம்பித்தது, இதை எதிர்பார்த்திருந்த அத்தை, பேசியை தங்கியில் இருந்து எடுத்து, “ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, வர்றேன்”, என்று அழைத்தவரிடம் கூறிவிட்டு, ஒலிவாங்கியை தங்கியில் வைத்து, வேகமாக சமையலறைக்கு சென்று ஸ்ருதியிடம், “கஞ்சி ரெடி பண்ணிட்டியா ஸ்ருதி, தாளிச்சிடறயா?”, என்று மருமகளிடம் இயல்பாக பேசினார்.

“ஆங்.. கஞ்சியா? சரி இதோ தாளிக்கறேன் த்த”, என்று திணறலாக சொல்லி, வேலையில் கவனமானாள்.

கூடத்திற்கு வந்த பர்வதம், தொலைபேசியை எடுத்து, “சொல்லுங்க, யார் வேணும்?”

“….”

“ஆமா, கீழ் போர்ஷன் காலியா இருக்கு”

“…”

“சரி, வந்து பாருங்க, பிடிச்சிருந்தா அட்வான்ஸ் பத்தி பேசலாம்”

“…”

“இப்போவா?”, என்று யோசித்தவர், “சரி நீங்களும் உங்கம்மாவும்தானே வர்றீங்க?, வாங்க”, என்று விட்டு ஒலிவாங்கியை தங்கியில் வைத்து மருமகளிடம் போனார்.

“என்ன ஸ்ருதி, ஆச்சா? வா உக்காரு, நீயும் என்னோடவே சாப்பிட்டுடு”, என்று அவளுக்கான தோசை சட்னி பொடி வகைகளை கீழே பரத்தி, அவளையும் சாப்பிட வைத்தாவாறே, தானும் தனது இரவு உணவினை முடித்தார்.

ஸ்ருதி இவர்கள் இருவரும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய, பர்வதம் அவளிடம், “கீழ் போர்ஷன் பாக்கறதுக்கு ஆளுங்க வர்றாங்க, அட்வான்ஸ் எவ்வளவு வாங்கணும்-னு தெரியுமா? இல்ல மாதேஷ் கிட்ட கேக்கறியா? நான் விஷாலை வேணா கூப்பிடட்டுமா?” என்று கேட்டார்.

“வேண்டாம் த்த, விஷால் கடை வேலை-ல இருப்பார், அவரை ரொம்ப தொந்தரவு பண்ண வேண்டாம், ஐஞ்சு மாச அட்வான்ஸ், பதினைஞ்சி ரூபா வாடகை,  அப்டின்னுதான் மாதேஷ் சொன்னான்”, ஸ்ருதி. ஆமாம், ராகவ் மற்ற இரண்டு போர்ஷன்களின் அட்வான்ஸ் வாங்குவது, வாடகை விபரங்கள் அனைத்தையும் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்கி இருந்ததால் இலகுவாக இவையனைத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

“என்னால மறுபடியும் மாடி இறங்கி ஏற முடியாது, அவங்க வந்தா நீ போயி வீட்டை காமிச்சு பேசி முடி, என்ன சரியா?”

“அத்த, நான் எப்படி..?”, ஸ்ருதி தயக்கமாக இழுக்க..

“வீட்டை விட்டா வெளில போற?, நம்ம வீட்டு கீழ் போர்ஷனுக்குத்தானே?, இப்படி எல்லாத்திலேயும் ஒதுங்காத ஸ்ருதி”, என்றார் ஒரு வித கண்டிப்போடு.

“ம்ம். சரித்த”, என்று சொல்லி முடிக்கவும், தொலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது, ‘அவங்கதான்னு நினைக்கறேன்”, என்று சொல்லி போனை எடுத்து பேசிய பர்வதம், “அவங்க வந்துட்டாங்க, நம்ம வீட்டு காம்பவுண்ட் கீழ நிக்கறாங்களாம் ஸ்ருதி, போய் வீட்டைக் காமிச்சிட்டு வந்துடு”, என்றார்.

சாவியை கையிலெடுத்து பல நாட்களுக்குப் பின், ஸ்ருதி முதன் முதலாக தனது வீட்டை விட்டு வெளியே வந்தாள், உலகமே மாறினாற்போல் ஒரு பிரமை. அதே நடைபாதை, மாடிப்படிகள் அன்று கணவன் முன் செல்ல பின் தொடர்ந்து சென்றது மனதில் நிழலாட, இப்போதும் ராகவ் தெரிகின்றானா என்று கண்களில் தேடினாள்.

சிறிய இரும்புக்கு க்ராதிக் கதவைத் திறந்து இருவர் உள்ளே வருவதைப் பார்த்து, ஒரு பெருமூச்சுடன் அவர்களைநோக்கிச் சென்றாள் ஸ்ருதி. உழைத்து உரமேறிய கிராமத்து பெண்மணி வைரம் மினுமினுக்கும் எட்டுக்கல் தோடு மற்றும் மூக்குத்தியுடன், ஸ்னேக பாவத்துடனான முகத்தோடு எளிமையாய் இயல்பாக நின்றிருந்தார், இருட்டாக இருக்க அவர் பின்னால் வருபவனை கவனிக்க முடியவில்லை.

“வாங்கம்மா, இதான் போர்ஷன்”, என்று நடப்புக்கு வந்த ஸ்ருதி, வீட்டினை திறந்து உள்ளே போனாள். ஸ்விட்சினை போட்டதும், வீட்டின் ஹால் பளிச்சென்றாக, “இது ஹால்”, என்று சொல்லி கிச்சன் டைனிங் மற்றும் ரெண்டு பெட் ரூம் விளக்குகளை போட்டு விட்டு இவள் கூடத்திற்கு வந்த போது அவ்விருவரும் கிச்சனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கிச்சனையும் அதை ஒட்டியிருந்த உணவருந்தும் அறையையும் பார்த்த அந்த பெண்மணி, ஹாலுக்கு வந்து “ம்ம்,வீடு நல்லா அமைப்பா இருக்கும்மா” என்றார்.

“இன்னும் பெட் ரூம் பாக்கலையே? உள்ள போய் பாருங்க”, ஸ்ருதி சொல்ல,

“ம்ம். அதெல்லாம் அவன் பாக்கட்டும், நமக்கு சமயலறைதான் முக்கியம், எனக்கு பிடிச்சிருக்கு, நீ என்னப்பா சொல்ற?”

உள்ளே சென்று அனைத்தையும் நோட்டம் விட்ட அந்த அவன், “ம்ம்”, என்றான்.

“ஆங், ஒரு விஷயம், நீங்க வெஜிடேரியன் தான?”, இங்கே சுற்றி இருக்கும் பெரும்பாலோனோர் புலால் உண்ணாதவர்கள், இந்தக் காலனிவாசிகள் அதை ஒரு நிபந்தனையாகவே வைக்குமாறு வீடு வாடகைக்கு விடுபவர்களிடம் கோரிக்கையாக வைத்திருந்தனர். எனவே ஸ்ருதி இந்த விபரத்தை கேட்க..

“அது வந்து..  நா கவிச்சி சாப்பிடமாட்டேன், தம்பி சாப்பிடுவான்”, என்று அப்பெண்மணி சொல்ல..

“வெஜிடேரியன்-க்கு தான் வாடகைக்கு விடுவோம்னு சொல்லி வச்சிருந்தோம் தவிர, போர்ட்-ம்  போட்டுருக்கே?”, ஒரு குழம்பிய மன நிலையில் ஸ்ருதி கேட்க.

“இங்க சமைக்கத்தானே கூடாது, வெளில வாங்கி சாப்பிலாம்தானே?”, கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அழுத்தமான குரலில் கேள்வி வர, துணுக்கமாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் ஸ்ருதி

“கூடாது”, பல நாட்களுக்குப் பிறகு ஸ்ருதிக்கு கோபமெனும் உணர்வு அவளறியாமல் எட்டிப் பார்த்தது. பின்னே? வீட்டில் வெளியே வாங்கிவந்து இங்கே சாப்பிட்டால், அந்த குப்பையெல்லாம் பார்த்தால் காலனிவாசிகளுக்கு முக்கியமாக, அடுத்த போர்ஷனில் உள்ள குருக்களுக்கு அசவுகரியமாக இருக்காதா?

அதைவிட, பேசிய அவனது குரலில் ஒரு வித திமிர்த்தனம் இருந்தாற்போல் ஸ்ருதிக்கு தோன்றியது.