அத்தியாயம் 16 2
“அம்மா வணக்கம்மா”, அமர்த்தலாக ஆரம்பித்தான் லோகேஷ், அவன் வணக்கம் வைத்தது பார்வதம்மாவிற்கு, இடம் ஸ்ருதியின் வீடு. அரசியல்வாதிகள் அணிவதுபோல பளிச் வெள்ளை அணிந்த, லோகேஷைப் போன்ற ஆகிருதியுடன் கூடிய அடிபொடிகள் இருவரும் கூட  வந்திருந்தனர்.
வசந்தம்மாவும் பர்வதமும் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து பேசுவது வழக்கம். அப்படியான நேரத்தில் தான் தனபாலனின்  கைக்கூலியான லோகேஷ் இவர்களை நோக்கி ஆரவாரமாக வந்தான்.
“யாரு நீங்க?”, என்று தனது கைத்தடியை பிடித்துக் கொண்டு எழுந்து நின்று கேட்டார் பர்வதம்.
“அம்மா, உங்களுக்கு என்ன தெரிய வாய்ப்பில்ல, ஆனா உங்க பையனுக்கு என்னை நல்லா தெரியும்”
“”ஓஹோ.. ஆனா..”
“தெரியும்மா, உங்க கஷ்டம் புரிஞ்சதுனாலதான் இவ்ளோ மெதுவா பொறுமையா வந்தேன். உள்ள போயி பேசலாங்களா?”
“ஆங். வாங்க”, என்று அவர்களிடம் சொல்லி, வசந்தம்மாவைப் பார்த்து, “வசந்தி.. மாலவ கூப்பிட்டு”
“ம்ம். நா பாத்துக்கறேன்மா, வந்தவங்கள பாருங்க”, என்று பர்வதத்தின் வலது கையை பிடித்து உள்ளே கூட்டிச்சென்றார் வசந்தி. அங்கே இருக்கையில் அவர் அமர்ந்ததும் உள்ளே மாலாவிடம் வந்தவர்களுக்கு குடிக்க ஏதேனும் ஏற்பாடு செய்யுமாறு கூறினார். கையோடு ஒரு சொம்பில் நீரும் இரண்டு டம்ளர்களும் கொணர்ந்து கூடத்தில் வைத்தார்.
“தண்ணீ எடுத்துக்கோங்க”, என்று லோகேஷை பார்த்து கூறியவர், “தம்பிங்களா நீங்களும் வாங்க உள்ள வந்து உக்காருங்க”, ‘உங்க பையனுக்கு என்னை நல்லா தெரியும்’ என்ற பதம் பர்வதத்திற்கு இதமாக இருந்தது. எனவே வாஞ்சையாகவே  அவர்களுக்கு உபசாரம் செய்தார்.
“சொல்லுங்க, என்ன விஷயம்? ராகவை உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டார்.
ராகவின் பெயர் சொன்னதும் எதிரே நின்றவனுக்கு குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரை ஏறியது. அங்கிருந்த ராதாக்ருஷண விக்ரகம் சின்னதாக புன்முறுவல் பூத்து சிரிப்பது போலிருந்தது.
“மெதுவா மெதுவா, நிதானமா குடிங்க”, சொன்னார் பர்வதம்.
பின்னால் திரும்பி இருமுபவனைப் பார்த்து முறைத்த லோகேஷ், பர்வதத்தைப் பார்த்து, “அம்மா நா ஒரு பில்டர்மா, வில்லா டைப், கேட்டட் கம்யூனிட்டி, பெரிய பெரிய அபார்ட்மெண்ட் எல்லாம் கட்டி இருக்கோம். போன வருஷம் உங்க பையனும் எங்க கம்பெனியும் சேர்ந்து ஒரு ஜாயிண்ட் வென்ச்சர் போட்டோம். அப்டியே அக்ரீமெண்ட்டும் போட்டு அட்வான்ஸ் தொகையும் அவர்ட்ட கொடுத்தோம். ஆனா பாருங்க கரெக்ட்டா நாங்க எங்க வேலைய ஆரம்பிக்கற நேரத்துல அவருக்கு அப்படி ஆயிடுச்சு”, என்று அந்த நிகழ்வுக்கு வருந்துவதுபோல முகத்தை வைத்துக்கொண்டு மௌனமானான் லோகேஷ்.
இந்த வருத்தமும் வலியும் பர்வதத்திற்கு நன்கு பழகியவைதானே? எனவே அதை அசட்டை செய்து, “என்ன அக்ரீமெண்ட்டு? அட்வான்ஸ்ஸு எதுக்கு?”, என்றார் கூர்மையாக.
“அடடா உங்களுக்கு ராகவ் சொல்லலீங்களா?,  இந்த வீட்ட இடிச்சுட்டு, அக்கம்  பக்கத்துல இருக்கிற இடத்தோட சேர்த்து ஒரு பெரிய அபார்ட்மெண்ட் கட்டப்  போறோம். அதுல உங்களுக்குன்னு ரெண்டு பிளாட்ஸ் வரும், அது தவிர ஒரு பெரிய சி யும் உங்களுக்கு கிடைக்கும்.”
குழப்பமான மனதோடு, “எங்ககிட்ட ரகு அப்டி ஏதும் சொல்லலயே..”, என்றார் பர்வதம். ஏனென்றால் இரு வாரங்களுக்கு முன்புதான் ரகுவிற்கு இப்படியொரு எண்ணம் இருந்ததாக விஷால் சொன்னான் அல்லவா என்று யோசித்தார். ஆனால் ரகு தன்னிடம் இதுபற்றி குறிப்பாய்க் கூட ஏதும் சொல்லவில்லையே? என்றும் அவருக்குத் தோன்றியது.
கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்த லோகேஷ் அவனது தாடையை சொறிந்தபடி, “ஓ! அப்டியா? அது பின்னால மெதுவா சொல்லிக்கலாம்னு நினைச்சிருப்பார், ஏன்னா அவர் சாகறத்துக்கு முத வாரம்தான் இந்த அக்ரீமெண்ட்ட போட்டோம்”, என்று கூறி நாற்காலியில் வசதியாக முதுகை சாய்த்துக் கொண்டவனின் பேச்சில் கருணை வருத்தமெல்லாம் கிஞ்சித்தும் இல்லாமல் போயிருந்தது.
திடீரென வீட்டுக்குள் நுழைந்து தன்னெதிரே அதிகாரமாக அமர்ந்திருந்த அந்த மனிதனும் கூட வந்திருந்த இருவரும் காட்டிய படாடோபத்தில் பர்வதத்திற்கு மெல்லிய பதட்டம் எட்டிப் பார்த்தது. அடுத்து என்ன பேச? எதை கேட்க? ஸ்ருதியைக் கூப்பிடுவதா? என்று புரியாமல் அவர் தடுமாற..
அந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்த நினைத்த லோகேஷ், “நட்ராஜு அந்த அக்ரீமெண்ட் காபி கொண்டாந்து இருக்கீங்கல்ல?”, என்று தன் முதல்  அஸ்திரத்தை எய்தான்.
நடராஜு எனப்படும் அந்த மனிதன், கையில் வைத்திருந்த ஃபோல்டரில் இருந்து கத்தையாக ஒரு காகித தொகுப்பினை வெளியே எடுத்தான். லோகேஷுக்கு முன்னிருந்த டேபிளில் அதை வைத்து, “சார் இது காப்பி, ஒரிஜினல் நம்ம மெயின் ஆபீஸ்ல இருக்கு”, என்று அவசியமின்றி கூறினான். அதாவது இங்கே உள்ள காகிதத்தின் உண்மைத்தன்மையை பர்வதத்திற்கு மறைமுகமாக அறிவுறுத்தினான்.
“இந்தாங்கமா. இது நாங்க போட்ட அக்ரீமெண்ட்.. பாக்கறீங்களா?”, என்று கேட்டு அதை பர்வதத்தை நோக்கி நீட்டினான் லோகேஷ்.
அதை வாங்கிய பர்வதம், படிப்பதற்கு ஏதுவாக கண்ணாடி எடுப்பதற்காக எழ நினைக்க, குறிப்பறிந்து வசந்தி கண்ணாடியை எடுத்து வந்து அவர் கையில் குடுத்தார். மெல்ல நிதானமாக பத்திர நகலை பார்வையிட்ட பர்வதத்திற்கு பதினைந்து இருபது பக்கங்களுக்கு மேல் இருந்த  வாசகங்கள் புரிந்தும் புரியாமல் இருந்தது.
ஆனால் ஒவ்வொரு காகிதத்தின் அடியிலும் இருந்த கையெழுத்து தன மகன் ராகவினுடையது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. கூடவே பத்திரத்தின் தேதியும் லோகேஷ் சொன்ன தேதியும் சரியாக இருந்தது.
அதற்கு மேல் அதில் என்ன விஷயம் இருக்கிறது என்று ஊன்றிப் பார்க்க முனையவில்லை அவர். “சரி இப்போ நாங்க என்ன பண்ணனும்?”, என்று நேரிடையாக விஷயத்திற்கு வந்தார்.
‘அப்பாடா வந்த வேலை ஈஸியா முடிஞ்சிடும் போல இருக்கே’, மனம் உவகையில் திளைக்க, “பெரிசா ஒன்னும் கஷ்டபட வேணாம்மா, இதே அக்ரீமெண்ட் புதுசா மறுபடியும்  போடணும், ஏன்னா அவர் இல்ல பாருங்க. அப்பறம் இங்க வாடகைக்கு இருக்கிறவங்கள காலி பண்ண சொல்லிடுங்க”, என்று தொண்டையை செருமி பேச ஆரம்பித்த லோகேஷ், “உங்களுக்கு என்ன ஏரியா வசதிப்படும்னு சொல்லுங்க. நாங்களே நல்ல வசதியான  வீடா பாத்து தர்றோம், ஒரு மூணுலேர்ந்து ஆறு மாசம் வரைக்கும்தான். அப்றம் இங்கேயே வந்துடலாம். உங்களுக்கு தரவேண்டிய மிச்ச பணத்தையும் செட்டில் பண்ணிடுவோம்”, என்றான்.
“என்ன மிச்ச பணம்?”, என்றபடி அறையில் இருந்து வெளியே வந்தாள் ஸ்ருதி.
யாரிது? என்பது போல பார்த்த லோகேஷிற்கு பதிலளிக்கும் விதமாக, “என் மருமக”, சொன்னார் பர்வதம்.
“வணக்கம்மா”
“ம்ம். வணக்கம், சொல்லுங்க என்ன மிச்சம்ன்னு தெரிஞ்சிக்கலாமா?”,
“அதான்மா அட்வான்ஸ் போக பேலன்ஸ் பேமெண்ட் உங்களுக்கு செட்டில் பண்றதை பத்தி பேசிட்டு இருந்தோம்”
“ம்ஹ்ம்”, என்று தலையசைத்து, ‘என்ன விஷயம்?’ என்பதுபோல  கேள்வியாக அத்தையைப் பார்த்தாள் ஸ்ருதி.
“ராகவ் இந்த வீட்ட இடிச்சு அடுக்குமாடி கட்றத்துக்கு இவரோட ஒப்பந்தம் போட்டு இருக்கான். இவர் அந்த பத்திரத்தோட வந்து இருக்காரு”
புருவம் சுருங்க, “ஓஹோ?”, என்றாள்.
“தோ அதைத்தான் பாத்திட்டு இருக்கேன். அப்பறம் அவங்களே நமக்கு வீடு பாத்து தருவங்களாம், இத ப்ளாட்டா மாத்தி கட்டின உடனே நாம இங்க குடி வந்துடலாமாம், கூடவே அவங்க நமக்கு தரவேண்டிய பணத்தையும் செட்டில் பண்ணுவாங்களாம்”, என்றார்.
“ஆமாம்மா, உங்களுக்காக வேணா இந்த வீடு ஷிப்ட்டிங் வேலையாக கூட நாங்களே பாத்துத் தர்றோம், பாவம் நீங்க லேடீசா கஷ்டப்படக்கூடாதில்ல?”, சேதாரம் இருபது சதம் வைத்து, சோப்பு டப்பாவை இலவசமாகத் தந்து ஏமாற்றும் தங்கநகை வியாபாரிகளின் பேச்சை ஒத்திருந்தது லோகேஷின் பேச்சு.
ஒருவேளை ராகவ் உயிரோடு இருக்கும்போது ஸ்ருதியிடம் யாரேனும் இப்படிக் கேட்டிருந்தால், ‘என்ன கலர்ல சோப்பு டப்பா குடுப்பீங்க? நாங்க கேக்கற கலர் தருவீங்களா? என்று கேட்டிருப்பாளோ என்னவோ, இப்போது லோகேஷின் பேச்சை செவிமடுத்துவிட்டு, பதிலேதும் கூறாமல் அவனை ஒரு நொடி நேராகப் பார்த்தாள்.
பின் அந்த பத்திரத்தை வாசிக்க ஆரம்பித்தாள். அதில் முழுதாக பத்து நிமிடங்கள் செலவானது. அதில் இருந்த விஷயங்களைப் படிக்கப் படிக்க ஸ்ருதியின் முகத்தில் குழப்பரேகை படிந்தது. காரணம் அதில் லோகேஷின் நிறுவனத்தில் இருந்து முன்பணமாக ராகவ் எழுபது லட்சங்கள் வாங்கி இருப்பதாக இருந்த வாசகங்கள்.
சர்வ நிச்சயமாக அத்தனை பெரிய தொகையை பற்றி அவளிடம் கலந்து பேசாது ராகவ் கையாண்டு இருப்பான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. என்னதான் இவள் காது குடுத்து கேட்டாலும் கேட்காவில்லையானாலும் முக்கியமான விஷயங்களை ஸ்ருதியிடம் பகிர்வது ராகவின் பழக்கம். அவள் அப்படியான விஷயங்களில் சற்று அசட்டையாக இருந்தாலும், ராகவ் சொல்லும்போது செவிமடுப்பாள்.
தவிரவும், ஒருவேளை ராகவ் இவனிடம் முன்பணம் வாங்கி இருந்தால்.. அந்தப் பணம் எங்கே போயிற்று? இப்போது ஸ்ருதியிடமிருந்த முதலீடுகள்.. அதன் நிதி ஆதாரங்கள் என்று அனைத்தும் இவளுக்கு அத்துப்படியாகத் தெரியும். அப்படி இருக்க.. திடீரென்று எழுபது லட்சம் முன்பணமாக தந்துள்ளதாக பத்திரத்தில் இருப்பது அவளைக் குழப்பியது.
“இல்ல இவ்ளோ அமௌன்ட்.. வாங்கறதை பத்தி எங்க கிட்ட அவர் ஒண்ணும் சொல்லலயே”
ஒரு விதமான நமுட்டுச் சிரிப்புடன், “மா, உங்களுக்கு தெரியாம வேணா இருக்கும். எந்த பேங்க்-ல போட்டு வச்சிருக்காரோ? யாரு பேருல போட்டு வச்சிருக்காரோ? ஏன்னா இந்த பணம் எல்லாத்துக்கும் வரி கட்டணும் பாருங்க..”, என்றான் லோகேஷ். அதில் ‘யாரு பேருல’, என்பதில் மிக அழுத்தம் குடுத்தான்.
அவன் உள்ளீடாக என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாவிட்டாலும்,ராகவைப் பற்றி ஏதோ குதர்க்கமாக யோசிக்கிறான் என்றறிந்த ஸ்ருதி,  “அப்படியெல்லாம் யாரு பேர்லயும் எங்களுக்குத் தெரியாம போடமாட்டாங்க”, என்றாள் பட்டென.
போனால் போகிறதென்ற ரீதியில், “சரிம்மா, விடுங்க நீங்க சொல்றத நா நம்பறேன், அவருக்கு எந்த பேங்க் எல்லாம் அக்கவுண்ட் இருக்குன்னு பாருங்க. அவர் போட்டு வச்சிருக்கறது உங்களுக்கேத் தெரியாம கூட இருக்கலாமில்ல?, என்றான்.
அதற்குள் லோகேஷின் ‘யாரு பேருல’ குதர்க்கம் ஸ்ருதிக்கு புரிந்து விட்டது.அதாவது ‘ராவிற்க்கு வேறு தொடர்புகள் இருக்கலாம் என்பதாக குறிப்பு தருகிறான் இவன்’, என்றுணர்ந்த ஸ்ருதிக்கு மெல்ல கோபம் தலை காட்டியது.
“சரி, எப்படி எந்த கேரன்டியும் இல்லாம இவ்ளோ பணம் குடுத்தீங்க?”,  என்று கேட்டாள்
லோகேஷோ, “என்னங்க இப்படி கேட்டுடீங்க? எலெக்ட்ரிசிட்டில வேலை பாக்கறாரு, ரொம்ப நல்ல மாதிரி-ன்னு ஊரு பூரா பேர் வாங்கி இருக்காரு, அவரை நம்ப மாட்டோமா என்ன? எங்க தொழிலுக்கே நம்பிக்கைதாங்க மூலதனம்”, பதிலை தயாராக வைத்திருந்தான்.
இன்னமும் ஸ்ருதியின் முகம் தெளிவில்லாது இருக்க.., அடுத்த அஸ்திரத்தை எடுத்தான் லோகேஷ். “ஆனா பாருங்க மேடம், எப்பவுமே ஒரு செக்யுரிட்டிக்காக ஜெ.வி. பார்ட்டி கிட்ட இருந்து செக் வாங்கி வைக்கறது எங்க பழக்கம். அநேகமா எங்ககிட்ட அதொட காப்பியும் இருக்கும்னு நினைக்கறேன்”, என்று ஸ்ருதிக்கு சொல்லிவிட்டு, தலை திருப்பி, “யப்பா நட்ராஜு நம்ம ராகவ் குடுத்த செக்கோட செராக்ஸ் இருக்கா பாரு?”, என்றான்.
ஒரு முடிவோடுதான் தனபாலன் லோகேஷை ஸ்ருதியின் வீட்டிற்க்கு  அனுப்பியிருந்தான். எனவே எஜமானன் இட்ட பணியை முடிக்கத் தேவையான அனைத்து தஸ்தாவேஜுகளையும் லோகேஷ் அண்ட் கோ தயாராக எடுத்து வந்து இருந்தது.
நட்ராஜ் காசோலையின் பிரதியை ஸ்ருதியிடம் நீட்ட, அது சாட்சாத் ராகவின் வங்கி கணக்குக்கு உண்டான காசோலைதான். கையெழுத்தும் அவனுடையதுதான் என்று ஸ்ருதிக்கு புரிந்தது. ஆனால் எழுபது லட்சமா? அது எங்கே?
ஸ்ருதி, “கொஞ்ச வெயிட் பண்ணுங்க வர்றேன்”, என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றாள். காரணம் அங்கு பீரோவில் இருக்கும் ராகவின் டைரி. அதை வைத்துக்கொண்டுதான், ராகவ் பேரில் இருந்த அனைத்து கணக்குகளையும்  தம்பியும் விஷாலுமாக சேர்ந்து இவள் பெயருக்கு மாற்றினார்கள். தவிர வாடகைக்கு குடிவருவோர் விபரம், நிலுவையில் உள்ள வாடகை, வாடகைக்கு வருபவர்களிடம் ராகவ் வாங்கிய அட்வான்ஸ், கரண்டு மீட்டர் பதிவு என்று அனைத்தையும் ராகவ் அதில் குறிப்பு எழுதி வைத்திருந்தான்.  எனவே ஒருவேளை எழுபது லட்சம் பற்றி ஏதேனும் எழுதி உள்ளானா என்று தெளிவு படுத்திக்க கொள்ள உள்ளே சென்றாள்.
எடுத்து ஒவ்வொரு பக்கமாக தேடியவளுக்கு அவன் இறப்பதற்கு முதல் நாள் எழுதிய குறிப்பு காணில் பட்டது. பெரிதாக ஏதுமில்லை. “அந்த ஓட்டு வீட்டை வாங்கியவன் என் வீட்டை விலைக்கு கேட்டு அலுவலகம் வந்து மிரட்டலாக பேசினான். போலீசுக்கு போவேன் என்று நான் அவனை பதிலுக்கு மிரட்டினேன்”, என்று நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தான் ராகவ்.
******************
தோழமைகளுக்கு,
வணக்கம்.
கதை பற்றி ஒரு சிறிய விளக்கம்.
ஐந்தாறு வருடங்கள் அர்த்தமுள்ள தாம்பத்யம் செய்த ஒரு பெண், கணவன்  மறைந்து ஒரே வருடத்தில், அதிலும் இரு பிள்ளைகளுடன் இருப்பவள், அடுத்த துணை பற்றி யோசிப்பது என்பது எனக்கு சற்று இடறுகிறது.
ஸ்ருதி அப்படியான பெண்ணில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் ராகவ் மிக நல்ல கணவன் ஆயிற்றே என்பதும் ஒரு காரணம். மெல்ல மெல்ல மாற்றம் நிகழும். [உங்களோட ‘நீ ரொம்ப ரொம்ப மெல்லமா எழுதறியேமா’ குரல் கேக்குது ஹஹ].
BTW யோகியின் ஆட்டம் அடுத்த அத்தியாயத்தில் இருந்து ஆரம்பம் ஆகும்.
முடிந்தவரை பிழையின்றி எழுத முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். பிழையிருந்தால் சுட்டவும்.
நட்புகள் அனைவர்க்கும் என் மனம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகள்.
வாசக சொந்தங்களுக்கு, நிம்மதியான மனநிறைவான வாழக்கை அமைய எல்லாம் வல்ல இறையை  வேண்டி..
ஆதி.