அத்தியாயம் 15

ஸ்ருதியை மருத்துவமனையில் இருந்து வீட்டில் விட்ட மறுதினமே மாதேஷ் அவனது ஊருக்கு புறப்பட்டுவிட்டான். அவளது வீட்டில் உதவியாக இருக்கும் பாமாவிடம் எந்த ஒரு முக்கிய விஷயமானாலும் தன்னிடம் தெரிவிக்குமாறு சொல்லி விட்டு, ஸ்ருதியின் வீட்டிற்குத் தேவையான இரண்டு மாதத்திற்கு உண்டான மளிகை பொருள்களையும், குழந்தைக்கு டயபர், டிஸ்யூஸ் போன்றவற்றை வாங்கினான்.

அது போதாதென்று தன் மருமகனுக்காக நாட்டு மருந்து கடையிலிருந்து  உரைமருந்துக்கு உண்டானவற்றைக்கூட ஒன்று விடாமல் வாங்கி அவளது வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான்.

ஸ்ருதியின், “இதல்லாம் எங்களுக்கு பாக்க தெரியாதா? போன் பண்ணி சொன்னா வந்துட்டுப்போகுது”, போன்ற முணுமுணுப்புகள் இருக்கவே செய்தன. ஆனால், அத்தை பர்வதத்தின் ஒரு பார்வையில் அடங்கி உள்ளே சென்று விடுவாள்.

மாதேஷ் புறப்படும்முன் ஸ்ருதியின் வீட்டின் கீழே நின்று அத்தையிடம் அலைபேசியில் பேச, ஸ்ருதியோ தம்பிதான் மாமியாருடன் பேசுகிறான் என்று தெரிந்ததும் தனது அறைக்குச் சென்று விட்டாள்.

மாதேஷ், பர்வதம்மாவிடம் பேசியதிலிருந்து யாரோ புதிதாக ஒருவன் வீட்டிற்கு குடிவருவதை அறிந்து, யார் என்ன போன்ற விபரங்கள் கேட்டறிந்தான். அவர் சொன்ன தகவல்களோடு வாடகைக்கு வந்திருப்பவன் யோகியின் தங்கை ஈஸ்வரியின் கணவன் என்ற விபரம் அவனுக்கு திருப்திகரமாக இருக்க, ஓரளவு சமாதானமானான்.

இது பற்றி யோசிக்கும்போதே விஷால் கூறிய ‘வீட்டை விற்றுவிட்டு அபார்ட்மெண்ட் குடிபோகலாம்’ என்ற யோசனையும் மாதேஷின் எண்ணத்தில் எழுந்தது. முன்பு ஒருமுறை அத்தையிடம் இதைப்பற்றி சொன்னதற்கு, “அதெல்லாம் ஸ்ருதியோட இஷடம்ப்பா”, என்று சொல்லிவிட்டார். இப்போதைக்கு அக்காவிடம் பேசுவது முடியாது என்பதால் அதை பின்னால் பார்க்கலாம் என்று ஒத்திப்போட்டான்.

ஸ்ருதி வீட்டின் கீழே இருந்துதானே மாதேஷ் அத்தையோடு பேசிக்கொண்டு இருந்தான்?, எனவே, எதற்கும் ஒருமுறை பார்த்துவிடுவோம் என்று பாமாவிடம் சுகுமாரன் எழுதிக் குடுத்த வாடகை ஒப்பந்தத்தை குடுத்து அனுப்பும்படி சொன்னான். கூடவே ஸ்ரீகுட்டியையும் கீழே வரச்சொன்னான்.

பர்வதம்மாவோ, “அவதான் கோவத்துல ஒரு வார்த்த சொல்லிட்டா, அதுக்காக வீடு வாசல் வரை வந்துட்டு மேல வராம இருக்கியேப்பா?”, என்று குறை கூறியபடியே அவனுக்கு பத்திரத்தைக் குடுத்து அனுப்பினார்.

சுகுமாரன் எழுதியிருந்த பத்திரம் தெளிவாக எந்த விதமான வில்லங்கமுமின்றி இருக்க, அத்தைக்கு அலைபேசியில் அந்த விபரத்தைத் தெரிவித்த மாதேஷ், அவனருகே நின்ற ஸ்ரீகுட்டியிடம், அவளுக்காக வாங்கிய குட்டிக்கு மிகவும் பிடித்தமான காஜூ கத்லியும், பட்டர் முறுக்கும் குடுத்தான். அவளிடம் அதைக் கொடுத்ததும்.., “ஐ அப்பாக்கு பிடிச்ச ஸ்வீட்”, என்று ஸ்ரீகுட்டி ஆவலோடு அதை வாங்க..

மனதில் மாதேஷுக்கு சுருக்கென வலித்தது. இனிப்பு நிறைந்திருந்த அந்த அட்டைப் பெட்டியை அங்கேயே பிரிக்க ஸ்ரீகுட்டி முயல, “மேல வீட்டுக்கு போயி சாப்பிடு கண்ணா, நீ குட் கேர்ல் இல்ல?”, என்றான்.

இனிப்பு பெட்டியை திறப்பதை நிறுத்திய ஸ்ரீ, நிமிர்ந்து தனது மாமாவைப் பார்த்து, “ஓகே பை”, என்று கையசைத்தாள். வீடு செல்ல திரும்பிய பெண்.. துள்ளலான  ஆட்டத்தோடு, “ஐ லவ் ஆல்  பியூட்டியஸ்..”, பாடியபடி நீண்ட காரிடாரில் நடக்க ஆரம்பிக்க,  சற்று தள்ளி நின்று கொண்டிருந்த பாமாவிடம், “சரி நா கிளம்பறேன், நீங்க ஸ்ரீ கூட போங்க”, என்ற மாதேஷ் அவரையும் வீட்டுக்குப் போகச் சொன்னான்.

ஒருவிதமான பாரம் நெஞ்சை அழுத்த காரிடார் முடியும்வரை துள்ளலோடு போகும் மருமகளைப் பார்த்து நின்றான் மாதேஷ். “ஹ்ம்ம்..”, நெடுமூச்சொன்றை விட்டு சரி புறப்படலாமென்று நினைத்தான். அப்போது யோகிசரத் மொபைலில் பேசியபடி வீட்டில் இருந்து வெளியே வரவும், மாதேஷ் நட்பாக அவனைப் பார்த்து புன்னைகைத்தான்.

அதே இன்ஸ்டன்ட் புன்னகையையை பதிலுக்குத் தந்து தலையசைத்த யோகி, அலைபேசியில் தீவிரமாக தனது பண்ணை ஆட்களோடு தேங்காய் லோடு குறித்து பேசிக்கொண்டு இருந்தான். அவனுக்கு தான் ஊருக்குப் போவதாக கைகாமித்த மாதேஷ், மரியாதை நிமித்தம் யோகியின் வீட்டில் தலை காட்டி அங்கும், “பாத்துக்கங்க”, என்று பொதுவாக ஒரு வார்த்தை கூறி விடைபெற்றான்.

ஆயிற்று.. அப்படி இப்படி என்று இரண்டு மாதத்திற்கு மேல் கடந்திருந்தது.  பிள்ளைக்கு எந்த ஒரு ஆர்பாட்டமும் இன்றி பாலகிருஷ்ணன் என்று பெயரிடப்பட்டு, எல்லாமும் இயல்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

எதிர்வீட்டுக்கு குடிவந்த சுகுமாரன் வார இறுதி நாட்களில் தலைகாட்டுவான். மற்ற நாட்களில் ஊருக்கு போய்விடுவான். இரு வாரங்களுக்கு முன் ஒரு முறை அவனது தங்கை என்று ஒரு பெண் வந்து வீட்டைப் பார்த்துவிட்டு சென்றாள். அப்போதும் வசந்தம்மா வீட்டில் கசமுசவென சத்தம் கேட்டது. ஸ்ரீகுட்டியையும், கிருஷ்ணனையும் பார்க்க வந்த வசத்தம்மாவிடம் விபரம் கேட்க எண்ணி பின் மனதை மாற்றிக்கொண்டாள். அவராக எதையும் பேசினால் சரி என்று விட்டு விட்டாள்.

ஆனால் சுகுமாரனின் தங்கை வந்து சென்ற பின்னர், மேல் வீட்டில் சில மாறுதல்கள். வசந்தம்மா இவனோடு கொஞ்சம் சமாதானமாகி விட்டதுபோல தெரிந்தது. ஏனென்றால், அதன்பின் சுகுமாரன் சென்னையில் இருந்தால் கீழ் வீட்டில் இருந்து அவனுக்கு சாப்பாடு வந்தது. ஒன்றிரண்டு முறை யோகியின் தலைகூட தெரிந்தது. ஆனால், முக்கால்வாசி நாட்கள் சுகுமாரன், யோகி இருவரும் வெளியூரில்தான் அநேகமாக (அவர்களது சொந்தஊரில் என்பது ஸ்ருதியின் யூகம்) அங்குதான் இருந்தனர்.

இவைகளுக்கு இடையே விஷால் ஸ்ருதியின் வீட்டிற்கு இருமுறை வந்தான். முதன் முறை அவளது வீட்டில் மின்சார மோட்டார் பழுதாக, பழுது நீக்குபவர் மோட்டாரை எடுத்துச் சென்று வேலை செய்ததால், மூன்று நாட்களுக்கு தண்ணீர் லாரி சப்ளை தேவைப்பட்டது. அதற்காக அவனை தொடர்பு கொள்ள.. தண்ணீரோடு (லாரிதான்) வந்த விஷால், அத்தையிடம் மெல்ல இந்த வீட்டை விற்று அக்கடா என்று ஸ்ருதியின் அலுவலகம் அருகில் சின்னதாக வேறு வீடு வாங்கி சென்றால் நல்லது என்று யோசனை சொல்லிச் சென்றான். பர்வதமோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சில வாரங்கள் கடந்த நிலையில்.. ஒருநாள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த குருக்கள் மாமாவின் ஆக்டிவா வண்டி ஹெல்மெட்டோடு காணாமல் போனது. அவரானால், “பத்து நிமிஷம் முன்னதான உள்ள போனேன், அதுக்குள்ள எவனோ லவட்டின்ண்டு போயிட்டான்”, என்று புலம்பித் தீர்த்து விட்டார்.

கையோடு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்ற அவர் ஒரு புகாரும் அளித்துவிட, இரு காவலர்கள் வந்து வீட்டைப் பார்த்து விட்டு, ‘ஏன் சிசிடிவி கண்காணிப்பு கமெரா பொறுத்தவில்லை? வீட்டிற்கு வாடகை வாங்கும்போது அவரின் உடமைகளுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பு வீட்டின் உடமையாளருக்கு இல்லையா? எல்லாவற்றையும் போலீஸே பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ என்று ஸ்ருதியிடமும் பர்வதம்மாவிடமும் கடிந்து கொண்டனர்.

சரி கண்காணிப்பு கருவியை பொருத்தி விடுவோம் என்று எண்ணி அது குறித்த சரியான விபரங்கள் தெரியாததால், மீண்டும் விஷாலையே ஸ்ருதி நாட, மறுபடியும் வீட்டுக்கு வந்தான் விஷால்.

காரிடாரில் கேமரா பொருத்துவதை சரிபார்க்கும் சாக்கில் பேச்சுவாக்கில் அத்தையிடம், “மா, சொல்றேன்னு கோச்சிக்காதீங்க, ஆனை அசைஞ்சு சாப்பிடும், வீடு அசையாம சாப்பிடும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. இப்போதைக்கு இதெல்லாம் சில்ற வேலையா தெரியலாம், ஆனா போகப்போக வீடு மெயின்டையின் பண்றதுங்கிறது பெரிய தலைவலி ஆயிடும். நல்ல விலை வரும்போதே தள்ளிவிட்டுட்டு அழகா ஸ்ரீகுட்டி ஸ்கூல் பக்கமா பிளாட்க்கு போறது நல்லதுன்னு எனக்கு தோணுது”, என்றான் வற்புறுத்தலாக.

“ஸ்ருதிட்ட சொல்லிப்பாக்கிறேன் பா”, என்றார் பர்வதம்.

“என்ன அத்தை எங்கிட்ட சொல்லணும்?”, கேட்டபடி ஸ்ருதி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள்.

வீட்டு வாசலில் நின்று பர்வதம்மாவும் விஷாலும் பேசியது என்னவென்று ஸ்ருதிக்கு கேட்கவில்லை என்றாலும், அத்தை கடைசியாக சொன்ன ஸ்ருதிக்கு சொல்றேன் என்பது மட்டும் இவளுக்கு கேட்டது. எனவே என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள இருவரையும் பார்த்தது நேரடியாகவே வினவினாள்.

“அது வந்து ஒண்ணுமில்ல ஸ்ருதி, வீடு அடிக்கடி வேலை பாக்க வேண்டி இருக்கில்ல? அதான்.. விஷால் ஒரு யோசனை சொல்றான்”

” ..?”, ஸ்ருதியின் கேள்வி பார்வை விஷாலை தொக்கி நின்றது.

“ஸ்ரீகுட்டி ஸ்கூல் பக்கத்துல நல்ல ஃபோர் பெட்ரூம் அபார்ட்மெண்ட் இருக்கு ஸ்ருதி, அதை வாங்கிட்டு அங்க போயிடலாம். உனக்கும் ஆபீஸ் போயிட்டு வர்றது ஈஸியா இருக்கும். இன்னும் சொல்லப்போனா, நீ வேலைக்கு போவேண்டிய அவசியமே இருக்காது.”, பெரிதான பீடிகையோடு விஷால் ஆரம்பித்தான்.

பர்வதமோ இந்த விஷயம் பற்றி ஏற்கனவே தனக்குத் தெரியுமாதலால், “சரிம்மா நா குட்டிப்பையன் கிட்ட போறேன்”, என்று உள்ளே சென்றார். தவிர, விஷால் வந்ததில் இருந்து வெளியே உள்ளே என்று வெகு நேரமாக பர்வதம்மா நடந்து கொண்டே இருந்ததால் கால்கள் வலிக்க, கூடவே கைகுழந்தையின் அருகே இருப்போம் என்று அவருக்கு தோன்ற அறைக்குச் சென்றார்.

அவருக்கு தலையசைத்து, யோசனையாக, “ஃபோர் பெட் ரூம் பிளாட்டா? ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே அண்ணா.. அவ்ளோ பணத்தை வேஸ்ட்டா வீட்ல முடக்கிறதா?”, என்று கேட்டு.., விஷால் பதிலளிக்கும் முன்.. “இப்போ இருக்கிற வீட்டையே நாளாவட்டத்தில மெயின்டைன் பண்ண முடியாதுன்னு சொல்லறீங்க, அப்டி இருக்கும்போது இன்னொரு வீடு..?”, என்று நிறுத்தினாள்.

ஆஹா, நல்ல நேரத்தில் கேட்டாள், இப்போது விட்டால் ஸ்ருதியிடம் பேச மறுபடியும் எப்போது நேரம் கிடைக்குமோ? என்று விஷாலுக்குத் தோன்ற, “அது அப்டி இல்ல ஸ்ருதி, இது பெரிய வீடா இருக்கறதாலதான் மெயின்டைன் பண்றது கஷ்டமாயிருக்கு. அதுவுமில்லாம டெனன்ட்ஸ் வேற இருக்காங்கல்ல? இதே நா சொல்ற வீடுன்னா ஜஸ்ட் நீ மாசாமாசம் மெயின்டெனன்ஸ் குடுத்தா போதும் அவங்களே எல்லா வேலையும் பாத்துகுவாங்க, குட்டிக்கும் வசதி உனக்கும் வசதியா இருக்கும்”

“ஆனா அவ்ளோ பணத்துக்கு..?”

“அதான்மா இந்த வீட்டை வித்து..”, என்று முடிக்கும் முன்..

“என்னது?”, அதிர்ச்சியாக ஸ்ருதி.

“ஆமா ஸ்ருதி, இத வித்துட்டு வர்ற கேஷ்-ல பாதி எடுத்து ஒரு பிளாட் வாங்கிக்க, மிச்சத்தை பேங்க்ல இன்வெஸ்ட் பண்ணு, இந்த நச்சு நச்சு வேலை தலைவலியெல்லாம் இல்லாம நீ பசங்கள பாத்துட்டு நிம்மதியா இருக்கலாம்”, என்றான் அழுத்தமான குரலில்.

‘நிம்மதியா? ஹ்ம்..?’, என்ற விரக்தி தானாக வர..”இப்ப எனக்கு எதுவும் ஐடியா இல்லண்ணா”, என்றாள் விட்டேத்தியாக.

கீழ்க்கண்ணால் பார்த்த விஷால் தயங்கியவாறே, “இல்லம்மா ராகவ்க்கே அப்படியொரு எண்ணம் இருக்கறதா சொன்னான், அதான்..”, என்று மெதுவாக சொன்னான்.

வெகுநாட்கள் கழித்து ராகவ் பற்றி நேரிடையான பேச்சு. அதன் தாக்கம் வெகுவாக குறைந்திருந்தாலும், கனவாய்ப் போன கணவன் நினைவு ஸ்ருதிக்கு எழுந்தது. கூடவே இந்த வீட்டை அவன் விற்பனை செய்ய நினைத்தானா? இருக்காதே அப்படி எதுவும் இருந்திருந்தால் சொல்லி இருப்பானே? என்ற கேள்விகள் மனதுக்குள் வந்தது. எதையும் காட்டிக் கொள்ளாமல், “அவர் எங்கிட்ட அப்படி எதுவும் சொன்னதில்ல, எதுக்கும் அத்தை கிட்ட கேட்டு சொல்றேன்”, என்று கைப்புக் குரலில் பிடிகொடுக்காமல் பேசினாள்.

விஷாலுக்கே ஸ்ருதியின் முகபாவம் மனதை என்னவோ செய்தது. அப்படி எந்த எண்ணமும் ராக்வக்கு இருந்ததில்லை என்பது இவனுக்கு நிச்சயமாகத் தெரியும். அவன் இறப்பதற்கு முதல் நாள் ராகவ்-வை அலுவலகத்தில் சென்று பார்த்த இந்த கட்டுமான நிறுவனத்தின் ஆட்களின் முகத்தில் காறி துப்பாத குறையாக திட்டினான்  என்று அந்த நிறுவனத்திலிருந்து சென்று அவனுடன் பேசிய அந்த நபர்களே விஷாலிடம் தெரிவித்து இருந்தனர்.

ஆனாலும் இப்போது ஸ்ருதி இந்த வீட்டை விற்றாக வேண்டும். இல்லையென்றால் இவனது தொழில் அல்லவா மொத்தமாக படுத்துவிடும். பணம்.. குறிப்பாக பெரும் பணம். இவனுக்கு மட்டுமல்ல, ஸ்ருதிக்குமே இது ஆதாயம்தான். ஆனால் இதை விற்க அவள் நினைக்கவேண்டுமே? இப்படி ஒரு பொய்யைச் சொன்னால் ஒருவேளை விற்பனை குறித்து யோசிப்பாளோ என்றுதான் விஷால் ராகவுக்கு அப்படி ஒரு சிந்தனை இருந்ததாக சொன்னான்.

காரணம், இந்த வீடு வேண்டும் என்று நிர்பந்திக்கும் அந்நிறுவனம் விஷாலின் இரண்டாவது கடையின் முதலீட்டுக்கு மட்டுமல்ல, அவனது மொத்த கொள்முதல்களுக்கும் நிறைய முன் பணம் கொடுத்துள்ளது. மேலும் பல புதிய பெரிய ஆர்டர்கள். இப்போதைக்கு கையில் இருக்கும் ஆர்டர்களில் தொண்ணூறு சதவீதம் அவர்களுடையது.

எல்லாவற்றிக்கும் ஆரம்பப் புள்ளி ஸ்ருதியின் இந்த வீடு. இதிலிருந்துதான்.. நிச்சயமாக இதை வாங்கித்தருகிறேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்து  விஷால் வாங்கிய ஆர்டர், பின் சங்கிலித்தொடர் போல பெருகிய முதலீடுகள். ஸ்ருதி மட்டும் வீட்டை விற்க முடியாது என்றாளோ அனைத்தும் அநித்தியமாகும்.

இந்த நிறுவனம் இங்கே பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டுமென முடிவெடுக்கக் காரணம், நங்கநல்லூர் போன்ற பரபரப்பான மக்கள் புழங்கும் இடத்தில் அதிலும் அதன் பிரதான சாலையில் ஸ்ருதியின் வீடு அமைந்திருப்பது.

அடுத்த மிக முக்கிய காரணம், ஸ்ருதியின் வீட்டுக்கு அருகே இருந்த ஐந்து கிரவுண்ட் நிலம். அந்த நிலத்தின் உரிமையாளரான், தன் தகப்பன் என்றோ எப்போதோ வாங்கிப் போட்ட சொத்தை, தந்தையின் மரணத்திற்குப் பிறகு இப்படி கட்டிடமாக எழுப்ப முடிவெடுத்தது. அவனது தாய்மாமனே ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தை நடத்துவது இன்னுமொரு காரணம்.

அந்த நிறுவனத்தை நடத்துபவன் பெயர் தனபாலன். சாம தான பேத தண்டம் எல்லாவற்றையும் பயன்படுத்தி குறுகிய காலத்தில் வெகு வேகமாக முன்னேறிய கட்டுமான நிறுவனம் அவனுடையது.

இப்போது அந்த சூப்பர் டீலக்ஸ் அடுக்குமாடி கட்ட இடைஞ்சலாக நிற்கும் ஸ்ருதியின் வீட்டை கைப்பற்றுவதில்.. தனபாலனது பொறுமை அனலிட்ட பனியாய் கரைந்து கொண்டிருந்தது. வெளி விபரம் தெரியாத இரு பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டை விலை கொடுத்து வாங்க இத்தனை நாள் காத்திருப்பதா? என்ற எண்ணம் அவனுக்கு. அதனால்தான், ‘என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோ எனக்குத் தெரியாது, அந்த வீடு எனக்கு வேணும்’ என்று விஷாலுக்கு நெருக்கடி குடுத்துள்ளான் தனபாலன்.

அதற்காக ஸ்ருதியிடம் விஷால் சொன்ன இந்த சின்ன ஒரு பொய், அவளை  காவல் நிலையத்தில் கால் கடுக்க நிற்க வைத்தது. அவளை மட்டுமல்ல. உபரியாக யோகிசரத்தையும் காவல் நிலையத்திற்கு வரவைத்தது.