ஸ்ருதிக்கு டெலிவரி ஆன அன்று அவளது மற்றும் குழந்தையின் உடல்நலம் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்த மாதேஷ், மறுதினமும் அவரைப் பார்க்கச் சென்றான். “டாக்டர். ஒரு சின்ன ஆப்ளிகேஷன்..”, என்று ஆரம்பித்தான்.
“யெஸ்?”, என்று அவர் கேள்வியாக மாதேஷை நோக்கிவிட்டு எதிரிலிருந்த நாற்காலியை கை காண்பித்தார். “உக்காருங்க, சொல்லுங்க என்ன விஷயம்?”.
அவர் சொன்னதுபோல இருக்கையில் அமர்ந்தவன், “உங்களுக்கே தெரியும் டாக்டர், இப்ப அக்கா வீட்டுக்குப் போனா அவதான் அத்தை, குட்டிங்கன்னு மூணு பேரையும் மெயின்டைன் பண்ண வேண்டி இருக்கும்”, என்று கூறி.. சற்று மென்று விழுங்கி ஒரு நெடு மூச்சோடு தொடர்ந்தான்.
“ம்ம்?”
“அண்ட் .. எனக்கும் அவளுக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், சோ நா அவ வீட்டுக்குப் போறதில்ல”, சங்கடமாக அவரைப்பார்த்துவிட்டு, ஒரு சமாளிப்பு சிரிப்புடன்,”அப்டியே போனாலும் நா பெரிசா அவளுக்கு ஹெல்ப் பண்ணிட முடியாதில்லையா? சோ ஒரு ஆளை வேலைக்கு வர சொல்லி கேட்டிருக்கேன். அவங்க மூணு நாள்-ல வந்திடுவாங்க. அதுவரைக்கும் அக்கா இங்க ஹாஸ்பிடல்ல இருக்கட்டும் டாக்டர். அதோட கூட அக்காவும் நார்மலா எழுந்து நடந்ததுக்கு அப்பறமா அவளை வீட்டுக்கு அனுப்பினா நல்லாருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர்”, என்றான்.
“ஓகே. நோ ப்ராப்ளம். ஸ்ருதிட்ட நா பேசிக்கறேன்”, என்று மாதேஷின் யோசனைக்கு சம்மதம் சொன்னார் அந்த டாக்டர்.
அதே போல ரவுண்ட்ஸ் செல்லும்போது, ஸ்ருதியின் அறைக்குச் சென்றவர், குழந்தையைப் பற்றிய ரிபோர்ட்களை பார்வையிட்டுக்கொண்டே, ‘தடுப்பூசி எல்லாம் போட்டு, குழந்தைக்கு அலர்ஜி இருக்கான்னு கம்ப்ளீட்டா பாத்துட்டு ஒரு நாலைஞ்சு நாளைக்கப்பறம் வீட்டுக்குப் போலாம் சரியா?”, என்று அவளிடம் சொல்ல, வேறு வழியின்றி ஸ்ருதி ஒப்புக் கொண்டாள்.
ஸ்ரீகுட்டியை நினைத்து கொஞ்சம் கவலைப்பட்ட ஸ்ருதி, இன்றிலிருந்து இரவு நேரத்தில் அவளையும் தன்னுடனே படுக்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று எண்ணிக்கொண்டாள்.
டாக்டர் அறையை விட்டு சென்ற பின் ஸ்ரீகுட்டியை குறித்து அத்தையிடம் சொன்னபோது, “ஆங். அதுவும் சரிதான். இங்க என் பக்கத்துல படுக்க வச்சிக்கறேன்”, என்றார் அவர்.
“இல்லல்ல, டே டைம்ல வேணா ஸ்ரீ அங்க இருக்கட்டும். நைட் அவ என் கூட இருக்கட்டும். அவ இல்லன்னா எனக்கு எதோ மாதிரி இருக்கு”, என்று அவரை அவசரமாக மறுத்தாள் ஸ்ருதி. நிஜமாகவே இரண்டாவது பிள்ளை வந்ததும் முதல் குழந்தையை ஒதுக்குகிறோமோ என்ற ஒரு குற்ற உணர்வு ஸ்ருதிக்கு வந்திருந்தது.
குழம்பிய முகத்தோடு இருந்த ஸ்ருதியைப் பார்த்த வசந்தி, “சரி உன் இஷ்டம்மா”, என்றவர்.. “வந்து.. தம்பி..”, என்று மாதேஷைத் பற்றி பேச ஆரம்பிக்க, ஸ்ருதி பார்வையை வேறு புறமாக திருப்பிக்கொண்டாள். தானாகவே வசந்தம்மாவின் பேச்சு நின்றது.
ஆனால் மாதேஷோ அக்காவின் நிராகரிப்பையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. எதைப்பற்றியும் லட்சியமின்றி, அங்கே மருத்துவமனை வளாகத்திலேயே இருந்தான். ஆனால், கூப்பிடு தூரத்தில் நின்றான். ஸ்ருதியும் அவனோடு பேச முயற்சிக்கவில்லை அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் இடையே பாலமாக அத்தை, வசந்தம்மா, ஸ்ரீகுட்டி நின்றனர்.
ஸ்ருதியின் வீட்டில் கூட மாட வேலை செய்ய.. குழந்தைகளை பார்த்துக்கொள்ளவென வேலைக்கு ஆள் அமர்த்தியதையும் அத்தையின் மூலமாகவே அக்காவிற்கு தகவலாக சொன்னான் மாதேஷ். ‘யாரோ என்னவோ எதையாவது திருடிட்டு போயிட்டா..? எங்களுக்கு பாத்துக்க தெரியாதா?’, என்ற முணுமுணுப்பு ஸ்ருதியிடம் எழத்தான் செய்தது.
‘அவங்க பையனுக்கு நான்தான் கார்டியனா இருந்து படிக்க வைக்கிறேன், ஒருவகைல அவங்க நமக்கு தூரத்து சொந்தமும் கூட. சோ, தாராளமா நம்பலாம்’, என்று அத்தையிடம் உறுதியளித்தான். மாதேஷ் சொன்னபடி பாமா எனும் அந்த பெண்மணி குறித்த நாளில் வந்துவிட, அத்தைக்கு முறையாக அறிமுகப்படுத்திவிட்டு அவரை ஸ்ருதியின் வீட்டில் கொண்டு போய் விட்டான்.
சில நாட்களுக்குப் பிறகு ஸ்ருதி வீட்டிற்குச் செல்லலாம் என்று மருத்துவர் தெரிவிக்க, மாதேஷ் அதற்கான ஏற்பாடுகள் செய்தான். டிஸ்சார்ஜ் தினத்தன்று, ஸ்ருதியை வீட்டிற்கு கூட்டிச் செல்ல மாதேஷ் கால் டாக்சி-யை வரவழைக்க, மருத்துவமனை வாசலில் வாடகைக் காரை பார்த்த ஸ்ருதிக்கு முணுமுணுவென கோபம் வந்தது.
‘இவன வீட்டுக்குத்தான வராதன்னு சொன்னேன்?, கார் என்ன வீட்டுக்குள்ளயா இருக்கு? ஏன் சாவி கொண்டு வர சொன்னா பாமாக்கா கொண்டு வந்து குடுக்க மாட்டாங்களா? வெட்டிச்செலவு ‘, ஸ்ருதிக்கு பொருமல் ஆரம்பித்து இருந்தது. கார் கதவை தொம்மென்று சாத்திவிட்டு இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
பர்வதம்மா, ஸ்ரீகுட்டி, மாதேஷ் அனைவருமாக வாடகைக் காரில் வந்தனர். மருத்துவமனையில் அனைத்து பொருள்களையும், பிளாஸ்டிக் கூடையிலும் பைகளிலும் அடைத்து வைத்த வசந்தம்மாவோ, “நீங்க நல்லா விலாசமா உக்காந்து போங்க, நா சரத் கூட வர்றேன், அவனுக்கு போன் பண்ணிட்டேன், இப்போ வந்துடுவான்” என்று விட்டார்.
“வேணாம் இதுலயே வந்துடுங்க”, என்று பர்வதமும் ஸ்ருதியும் வற்புறுத்தியும் கேட்கவில்லை. சொன்னவாறே ஐந்து நிமிடத்தில் வசந்தியை கூட்டிச் செல்ல யோகி வர,ஸ்ருதி கிளம்புவதற்கு முன்பே வீட்டிற்குக் கிளம்பியும் விட்டார் வசந்தி.
மருத்துவமனையில் இருந்து கிளம்பி நேராக ஸ்ருதியின் வீட்டு வாசலில் கார் நிறுத்தப்பட, முதலில் இறங்கி கொண்ட மாதேஷ், பின்னால் வைத்திருந்த சாமான்களை கையில் எடுத்துக் கொண்டான். ஸ்ரீகுட்டியும் பர்வதம்மாவும் அடுத்து இறங்க, கடைசியாக கைக்குழந்தையோடு ஸ்ருதி காரில் இருந்து இறங்கினாள்.
மெயின் கேட் வாசலில் அவள் கால் வைக்கும்போது, உள்ளேயிருந்து குருக்கள் மாமியின், “ஸ்ருதி அங்கேயே ஒரு நிமிஷம் நில்லும்மா”, கேட்டது. சில நொடிகளில் கையில் ஆரத்தியோடு வாசலை நோக்கி வந்தார் அவர்.
அவர் நோக்கம் புரிய அதில் சில கணங்கள் திகைத்த ஸ்ருதி, வேண்டாம் என்றும் கூற முடியாமல்.. மங்கல ஆரத்தியை ஏற்றுக்கொள்ளத் தனக்கு தகுதியுள்ளதா? இது சரிதானா? என்ற குழப்பத்தோடு நின்றாள்.
“ஒண்ணும் யோசிக்காதீங்க, ஒரு உயிரை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கீங்க, அதோட.. இந்த சிங்க குட்டி முதன் முதல்ல அதோட வீட்டுக்கு வரப்போகுது. ஆரத்தி எடுக்கமாட்டங்களா என்ன?”, என்று வந்தாள் ஒரு பெண். அநேகமாக அது ஈஸ்வரியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ருதி நினைத்துக் கொண்டாள்.
முதன்முறையாக ஈஸ்வரியும் ஸ்ருதியும் பார்த்துக்கொண்டனர். ஈஸ்வரிக்கு வசத்தாமாவின் சாயல் அதிகம் இருந்தது. அறிமுகப் படுத்தவேண்டிய அவசியம் இருவருக்குமே ஏற்படவில்லை.
தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் ஸ்ருதி புன்னகைக்க, பதிலுக்கு ஈஸ்வரியும் சினேகமாக தலையசைத்தாள்.
“எங்கடீம்மா, இந்த நந்தினியக் காணோம், இந்த நேரம் இவோ வந்துடுவான்னு சொல்லி இருந்தேன். கொஞ்சம் கூட பொறுப்பில்லை பாரேன். இரு அவளுக்கு போனைப் போடறேன்”, என பரபரத்தார் குருக்கள் மாமி.
ஆனால் மாமி அவரது போனை எடுப்பதற்குள் நந்தினி ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தாள். மூச்சுவாங்க மாமியின் அருகே வந்து நின்று, “வந்துட்டேன் மாமி வந்துட்டேன் திட்டாதீங்க, மாமியார் கிட்ட இருந்து போன் வந்துச்சு. எங்க மாமனார் இந்த பக்கமா வர்றாராம். பேரனைப் பாத்து ரொம்ப நாளாச்சு. பையனை அவரோட அனுப்பி வைன்னு சொன்னாங்களா? அதான் அவனை அனுப்பிட்டு வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிடுச்சு”, என்றாள்.
“சரி சரி மளமளன்னு வா”, என்ற மாமி ஆரத்தியை ஒருபுறம் பிடிக்க மறுபுறமாக நந்தினி நின்று, ஸ்ருதிக்கும் குழந்தைகளுக்கும் ஆரத்தி எடுத்தனர். பின் அந்த ஆரத்தி நீரை வாசலில் விட நந்தினி காம்பவுண்டை கடந்து வெளியே போனாள்.
“அடடா.. என் பொண்டாட்டிக்கு என்மேல எவ்வளவு அக்கறை? ஆரத்தில்லாம் ஏற்பாடு பண்ணி இருக்காளே?”, என்று சாலையில் இவர்கள் வீட்டு வாசலில் ஆட்டோவில் இருந்து இறங்கிய ஒருவன் கேட்டான்.
நந்தினியோ வந்திருப்பவன் யாரெனத் தெரியாமல் கையில் கொட்டவேண்டிய ஆரத்தியோடு முழிக்க, வீட்டுக்குச் செல்ல ஆயத்தமான ஸ்ருதியும் பர்வதம்மாவும் நின்று இந்த புதியவன் யாரென பார்த்தார்கள். அதற்குள்ளாக பாமா வந்து ஸ்ரீகுட்டியையும் கைக்குழந்தையை யும் வீட்டுக்கு அழைத்து சென்று இருந்தார்.
“அந்த ஆரத்தி ஒன்னும் உங்களுக்கில்ல”, கடுகடுவென பதில் வந்தது ஈஸ்வரியிடம் இருந்து. தொடர்ந்து, “இப்ப எதுக்கு இங்க வந்தீங்க?”, சற்றும் காரம் குறையாமல் அந்த மனிதனிடம் கேட்டாள்.
“சீதை இருக்குமிடம் ராமருக்கு அயோத்தி”, என்று நாடகத்தனமாக சொன்ன அந்த புதியவன்.., பெட்டியோடு ஈஸ்வரியின் பக்கத்தில் வந்து “எப்படி இருக்க?” என்றான்.
“ம்ம். எப்பவும் இருக்கிறா மாதிரிதான்”, என்று வெடுக்கென்று சொல்லிய ஈஸ்வரி, தனது நாற்காலியை திருப்பிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்க.., “எங்கம்மா கேட்டதுக்கும் தங்கச்சி சொன்னதுக்கும் நா என்ன பண்ணுவேன் ஈஸு?”, என்று தணிவாக கேட்டு அவளோடு கூட நடந்தான்.
இவர்களை பார்த்து நின்ற மற்றவர்களுக்கு அவன் யாரென்பது பிடிபட, அவரவர் காரியங்களுக்குத் திரும்பினர். நந்தினி ஆரத்தியை கொட்டிவிட்டு மாமி வீட்டுக்கு செல்ல, ஸ்ருதி அத்தையை முன்னால் நடக்கவிட்டு, நிதானமாக அவரோடு படி ஏற ஆரம்பித்தாள்.
“அதல்லாம் முடியாது,நீ வக்கீல் னா கோர்ட்டுல சட்டம் பேசு,நீ என்ன சொன்னாலும் இங்க தங்க முடியாது.”
“டே மச்சான், நீயும் இப்படி சொன்னா என்னடா பண்றது?”, புதியவன் அதாவது ஈஸ்வரியின் கணவன்.
“யேய் முதல்ல யாரகேட்டு நீ இங்க வந்த?”, யோகியின் சத்தம் மேல்மாடி வரையில் கேட்டது. ஸ்ருதி வீட்டின் உள்ளே சென்றும் கூட கீழே இருவரது வாக்குவாதம் தொடர்வது தெரிந்தது. ஸ்ருதியின் பின் சென்ற நந்தினியோ, குழந்தையுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு அவளது வீட்டிற்கு கிளம்பினாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஈஸ்வரியின் கணவன் ஸ்ருதியின் வீட்டு வாசலில் அழைப்பு மணியை அடித்தபடி நின்றான்.