அத்தியாயம் 13 2

மருத்துவமனையில் இருந்து ஸ்ரீகுட்டியை யோகியின் வீட்டில் விடச் சென்ற மாதேஷ், அவர்கள் வீட்டு வாசலில் தயங்கி நிற்க, “ஈஸ் அத்த”, என்று குரல் குடுத்தபடியே உள்ளே சென்றாள் ஸ்ரீகுட்டி.

ஹாலில் அமர்ந்து அன்றைய தினசரியில் சுடோகு பகுதியில் முழு கவனத்தையும் வைத்திருந்த ஈஸ்வரி, ஸ்ரீயின் குரல் கேட்டதும், “ஹாய், அதுக்குள்ள வந்தாச்சா?” உற்சாகமாக நிமிர்ந்து பார்த்தாள்.

“ஈஸு.. இங்க இருந்த பன்னீர் பாக்கெட் எங்க?”, உள்ளே கிச்சனில் இருந்து யோகி கேட்டான். அங்கு எக்ஸ்சாஸ்ட் ஃபேன் போடப்பட்டு இருக்க, அதன் சப்தத்தில்  சின்னவள் வந்தது யோகிக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது. தவிர அவன் யூ ட்யூப் பார்த்து சமைக்க ஏதுவாக காதில் இயர் போன் மாட்டி.. தலைவர் பிஸியோ பிஸி.

பன்னீர் என்று காதில் விழுந்ததும், “ஹே பன்னீர் டிக்காவா?…” என்றபடி ஸ்ரீக்குட்டி கிச்சனுக்குள் நுழைய,  அடுப்பின் மேலிருந்த தவாவில் சிக்கன் க்ரேவியும்  அருகே பரிமாறப்பட்ட உணவோடு தயாராக இரண்டு பிளேட்டுகள் அதோடு அருகே இரண்டு கப்களில் நறுக்கிய எலுமிச்சை + வெங்காயம் என அனைத்தும் இருந்தது.

ப்ரிட்ஜுக்குள் தலையை விட்டுருந்த  யோகியைப் பார்த்து, “யோகண்ணா என்ன டிஷ் பன்றீங்க? ஒரு மாதிரி வாசனை வருது..”, என்ற கேட்டவாறே மாடுலர் கிச்சனின் கீழிருந்த அலமாரியின் கைப்பிடியை படிகட்டாக்கி நொடியில் பக்கவாட்டுத் திட்டின் மீது ஏறி அமர்ந்தாள் ஸ்ரீ.

ஸ்ரீயின் அரவத்தில் யோகி அவசரமாக நிமிர அவன் தலை ‘நங்’கென மேலேயிருந்த ஃப்ரிட்ஜ் பிரீஸரின் பிடியில் மோதியது. “ஸ்ஸ்” என்று தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு திடுமென ஸ்ருதியின் நினைவு வந்தது. ‘ஐயோ வீட்டுக்காரம்மாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்..’ என்று அதிர்ந்தவன், இப்போது ஸ்ரீகுட்டிக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்பது தெரியாமல் “ஈஸு…”, என்று சத்தமாகக் குரல் குடுத்தான் யோகி. காரணம் அவனுக்கு இலகுவாக வராத விஷயம் ‘பொய்’.

இங்கே இவ்வாறிருக்க, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த மாதேஷை பார்த்து, “நீங்க..?”, என்று புருவம் சுருக்கிய ஈஸ்வரி.. (நாற்காலியில் இருந்தபடிதான்) “ஸ்ரீகுட்டியோட மாமா மாதேஷ் தான?”, என்று புன்னைகைக்க,

ஒரு பார்வையிலேயே அவளது இயலாமை புரிந்து ஒரு நொடி தடுமாறி “யா”, என்றான் மாதேஷ். ஆனால் ஈஸ்வரியின் முகத்தில் இருந்த பளிச் புன்னகை அவளது தன்னம்பிக்கையைக் காட்ட மாதேஷ் இயல்பாக முறுவலித்தான்.

ஈஸ்வரி தலையசைத்து “உள்ள வாங்க”, என்று சொன்னதும் மாதேஷ் உள்ளே வர, அதே நேரம் அடுக்களையில் இருந்து யோகி சரத்தின் “ஈஸு .. “, அலறல் கேட்டது.

“ப்ளீஸ் ரெண்டு நிமிஷம் உக்காருங்க, தோ வர்றேன்”, கூடத்தில் இருந்த குஷன் நாற்காலியை காண்பித்து மாதேஷை உட்கார சொல்லிவிட்டு தனது தானியங்கி சக்கர நாற்காலியை இயக்கி அடுக்களைக்குச் சென்றாள்.

ஈஸ்வரி, “என்னாச்சு?”, என்று உள்ளங்கையால் தலையை தடவிக்கொண்டு நின்ற அண்ணனைப் பார்க்க.. எல் வடிவத்தை கவிழ்த்தாற்போல் இருக்கும் சமையல் மேடையில் இடது பக்கம் ஸ்ரீகுட்டி அமர்ந்திருக்க அவளுக்கு நேரெதிரே அடுப்பும் அருகே தட்டில் இவளுக்காக யோகி சமைத்திருந்த உணவும் இருந்தது. யோகி ஸ்ரீகுட்டியை ஒரு பார்வையும் அகண்ட வாணலி + தட்டத்தை ஒரு பார்வையுமாக செய்வதறியாது பார்க்க ஈஸ்வரிக்கு விஷயம் விளங்கியது.

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஈஸ்வரிதான் யோகியிடம் வம்படியாக, “எனக்கு நீ பண்ணுவியே பனீர் தூவி சிக்கன் கிரேவி அது சாப்பிடணும்போல இருக்கு. செஞ்சு குடு”, என்று அடம்பிடித்தாள்.

யோகியோ, “க்கும். வாடகைக்கு விடும்போதே நான்-வெஜ் வாசனையே வரக்கூடாதுன்னு  கண்டிஷன் போட்டாங்க. தெரியும்தான?”, என்றான் மிரட்டலாக.

சின்னபிள்ளைபோல , “ம்ஹும்.க்ஹும். ஆனா எனக்கு சாப்பிடணும்போல இருக்கே?”, ஈஸ்வரி சொல்ல, அடம்பிடிக்கும் தங்கையைப் பார்த்து..

“நா வேணா ஹோட்டல்ல வாங்கிட்டு வரட்டா?”, என்றான் யோகி.

“வேணா. அது நீ பண்றமாதிரி டேஸ்ட்டா இல்ல”, முகம் சுளித்தாள் தங்கை. “நம்ம ஊர்ல பண்ணுவியே அதே மாதிரி பண்ணித்தா யோகண்ணா”, என்று பாவமாக கேட்டதும்.., “உனக்கு காரியம் ஆகணும்னா அண்ணா வா?”, என்று செல்லமாய் கடிந்து, வேறு வழியின்றி அதற்குத் தேவையானவைகளை வாங்க வெளியே செல்ல ஆயத்தமானான்.

கடைக்குக் கிளம்பவென ஒரு டீ ஷர்டை மாட்டிக்கொண்டு, வண்டி சாவியை ஸ்டாண்டில் இருந்து எடுக்கும்போது “ஊர்ல நாட்டுக்கோழி நம்ம பண்ணைல இருந்தே வரும். இங்க பாக்கெட்ல வர்றதுதான் வாங்கிட்டு வரணும்”, என்ற யோகியின் புலம்பல் ஈஸ்வரிக்கும் கேட்டது. ஆனால் எப்படியும் இன்று நமக்கு சுவையான விருந்து, என்று மனம் மகிழவும் செய்தாள்.

ஆனால்.. இப்பொது ஸ்ரீகுட்டி திடீரென வரவும், (வசந்தம்மாவோடுதான்  ப்ரித்விஸ்ரீ வருவாள் என்பது முடிவாகி இருந்தது), திருதிருவென முழித்தான் யோகிசரத்.

திகைத்து நிற்கும் அண்ணனைக் காண ஈஸ்வரிக்கு சிரிப்பு வர, அதை அடக்கி “குட்டிமா, உங்கூடத்தானே உங்க அங்கிள் வந்தாங்க, உள்ள கூட்டிட்டு வந்து உக்கார சொல்லணுமில்ல? அவங்களுக்கு முதல்ல குடிக்க ஏதாச்சு குடு. ஓடு”, என்று ஸ்ரீயைப் பார்த்து சொன்னாள்.

ஸ்ரீகுட்டி, “ஸ்ஸ் ஆமால்ல?”, மாமாவை மறந்து விட்டோமே என்று கண்ணை மூடிகொண்டு தலையில் கை வைத்தவள், உடனே மேடையில் இருந்து குதிக்க தயாரானாள். அவளது செயலை எதிர்பார்த்தவளாக தனது நாற்காலியை ப்ரித்விஸ்ரீயின் அருகே கொண்டு சென்ற ஈஸ்வரி, “வா ரைட் போலாம்”, என்றாள்.

“ஐ.. ஜாலி”, என்று வீல்சேரில் கால்வைத்து இறங்கிய ஸ்ரீகுட்டி குளிர்ந்த நீர் இருக்கும் ஒரு பாட்டிலை குளிர்சாதனப்பெட்டியில் இருந்து எடுத்துக்கொண்டு ஈஸ்வரியின் மடியில் அமர்ந்து கொள்ள, வண்டியை இயக்கியா ஈஸ்வரி நமுட்டுச் சிரிப்புடன் யோகியைப் பார்த்து, “எல்லாத்தையும் மூடி வச்சிட்டு வா”, என்றுவிட்டு நேராக வெளியே கூடத்திற்கு சென்றாள்.

“மாமா தண்ணீ”, என்று நாற்காலியில் இறங்கியபடி (குதித்தபடி?) கேட்டு பாட்டிலைத் மாதேஷிடம் தந்தாள் ஸ்ரீகுட்டி.

இவ்வளவு இயல்பாக மற்றொரு வீட்டில் ஸ்ரீ இருந்ததை மாதேஷ் பார்த்ததில்லையாதலால் கொஞ்சம் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

மாதேஷ் பாட்டிலை வாங்கிக் கொள்ளவும் ஸ்ரீகுட்டி ஈஸ்வரி பக்கம் திரும்பி, ”  யோகண்ணா என்னவோ ஸ்பெஷலா குக் பண்றாங்க. நா போய் டேஸ்ட் பாக்க போறேன்”, என்று மீண்டும் அடுக்களைக்குப் போக எத்தனிக்க.., ஈஸ்வரி ‘ஆஹா அண்ணா மறுபடியும் முழிக்கப்போறான்’ என்று குறும்பாக நினைத்து புன்னகையோடு அமைதியாக இருந்தாள்.

வீட்டின் உள்ளே நுழைந்ததுமே அசைவ உணவின் வாசத்தை உணர்ந்த மாதேஷோ,  “ஸ்ரீகுட்டி நோ..”, என்று அடிக்குரலில் அதட்ட.., இரண்டடி எடுத்து வைத்த ப்ரித்விஸ்ரீ சட்டென தயங்கி நின்றாள்.

“இல்லல்ல.. போட்டும் விடுங்க..”, என்று ஈஸ்வரி சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் யோகி வேலை முடித்து கிட்சனில் இருந்து இந்த உரையாடலைக் கேட்டபடி வெளியே வந்தான். ஹாலில் புதிதாக வந்துள்ள மாதேஷை ஒருமுறை கண்களால் அளந்தவன், வழியில் ஸ்ரீகுட்டி தயங்கி நிற்பதைப்  பார்த்து, அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “ப்ச். அது உனக்கு வேணாடா, காரமா இருக்கும். அத விட ஸ்பெஷலா இப்போ ஈஸு ஒரு சாக்லேட் மில்க்க்ஷேக் பண்ணப்போறா. ஐஸ்க்ரீம் அன்ட் டூட்டி ஃப்ரூட்டி டாப்பிங்ஸோட. ஓகே வா?”, பேசிக்கொண்டே நடந்து இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான், கையைப் பிடித்து இருந்ததால் அவன் கூடவே ஸ்ரீகுட்டியும்.

“ஹே சூப்பர்”, என்றவள்.., தாய் மாமா மாதேஷ் இதற்கும் ஏதாவது ஆட்சேபம் தெரிவிப்பானோ என்று எண்ணினாளோ என்னவோ, ஒருமுறை மாதேஷைத் பார்த்து விட்டு, யோகியிடம், “மாமாக்கு?”, என்று கேட்டாள்.

அவளது முன்யோசனையில் மாதேஷ் மற்றும் யோகி இருவரும் சிரிக்க.., ஈஸ்வரியோ, “யோகண்ணா, இவங்க ஸ்ரீயோட மாமா”, என்று அறிமுகப்படுத்திவிட்டு, “குட்டிமா வாடா நம்ம மில்க் ஷேக் பண்ணலாம்”, என்று பிள்ளையை அழைத்தாள்.

அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் மாதேஷ் , “ஸாரி, சொல்லாம கொள்ளாம வந்துட்டோம்”, என்றான் அசௌகரியமாக.

“அதனால என்ன? பரவால்ல. நீங்க எப்போ சென்னைக்கு வந்தீங்க?”, என்று யோகி சம்பிரதாயமாக பேச ஆரம்பித்தான். அதன் பின்னர் என்ன வேலை செய்கிறான்? எங்கு வசிக்கிறான் என்பதில் துவங்கி இருவரைப் பற்றிய பொதுவான விபரங்கள் அனைத்தும் பகிரப்பட்டு இருந்தது.

பத்து நிமிடங்களில் பிடியுடன் கூடிய கண்ணாடி டம்ளரோடு ஸ்ரீகுட்டி அடி மேல் அடிவைத்து வெளியே வந்தாள். அப்படியே மெல்ல நடந்து சென்று பானத்தை மாதேஷிடம் குடுத்து, “நா பண்ணினேன்”, என்றுவிட்டு.. “இங்க பாருங்க கையெல்லாம்”, என்று வலது கையை விரித்துக் காண்பித்தாள். அது நல்ல இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.

ஒரு புறமாக தலை சாய்த்து, “மிக்சி பட்டன இப்டியே பிடிச்சிட்டு இருந்தேனா இந்த கலராயிடுச்சு”, என்றாள். ப்ளெண்டரில் மில்க்ஷேக்கை தயார் செய்ய மிக்சியின் குமிழை பிடித்தவாறே இருந்ததை சொல்கிறாள் என்பது பெரியவர்களுக்குப் புரிந்தது.

“சரி அவங்களுக்கு..?”, மாதேஷ் யோகியை சுட்டிக் காட்ட..,

ஸ்ரீகுட்டியின் கண்கள் குறுகுறுவென ஜொலிக்க மாதேஷின் காதருகே சென்று மேடை ரகசியமாக, “அவங்க கோலி கிரேவி சாப்பிடப்போறாங்களாம். அதனால அவங்களுக்கு வேணாமா”,என்று விட்டு திரும்பி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கிசுகிசுப்பாக, “அம்மாகிட்ட சொல்லக்கூடாது ஓகே வா?”, என்றாள்.

மாதேஷின் எதிரே அமர்ந்திருந்த மனதுக்குள் தங்கையை வைதபடி யோகி செய்வதறியாது அசடு வழிய பார்க்க, மாதேஷ் மருமகளிடம் “ஓகே டீல்”, சொல்லி சிரித்தான். இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்த ஈஸ்வரியோ, சின்னவளைப் பார்த்து முறைத்தாள்.

உள்ளே  இந்த குட்டி சொன்னதென்ன ? இங்கே செய்வதென்ன? என்பதுபோல கண்டனமாக முறைக்க, அவளோ “ஆங்.நீங்க அம்மாட்ட தான சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க?”, என்றுவிட்டு ஈஸ்வரியின் கையில் அவளுக்காக எடுத்து வந்திருந்த குளிர்பானத்தை வாங்கிக்கொண்டு ரிமோட்டோடு தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து கொண்டாள்.

எப்படி இலகுவாக சமாளிக்கிறாள்? என்று நினைத்த ஈஸ்வரி தமையனை திரும்பிக் கூட பாராமல் தனது வேலைகளை பார்க்க உள்ளே சென்று விட்டாள். (வேறென்ன சாப்பிடறதுதான்)

யோகி மாதேஷிடம், “அது.. தப்பா எடுத்துக்காதீங்க. இங்க வீடு பாக்க வரும்போதே வீட்டுக்காரம்மா போட்ட கண்டிஷன் என்வி சாப்பிடக்கூடாதுன்னுதான். இங்க கடைல வாங்கித் தர்றது ஈஸுக்கு புடிக்கல. செஞ்சு குடுன்னு கேட்டுச்சு, அதான்..”, என்று இழுத்தான்.

“இதுல என்னங்க இருக்கு?”, மாதேஷ்.

“இல்ல நா வேற அன்னிக்கு சும்மா இல்லாம வீட்டுக்காரம்மாகிட்ட ஏட்டிக்கி போட்டி பேசினேனா, இப்போ இது தெரிஞ்சா ஏதாவது சொல்லுவாங்க.”

மாதேஷ், “யாரு அத்தையவா சொல்றீங்க?”, என்று ஆச்சர்யமாக கேட்டான்.

“அய்யய்ய. பர்வதம்மாவ சொல்லலைங்க. உங்க அக்கா இருக்காங்க இல்ல அவங்கள சொல்றேன். சும்மாவே கர்புர்ன்னு தான் இருப்பாங்க”, என்றான் யோகி.

ஒரு பெருமூச்சோடு, “அது மாமாவோட சடன் டெத் னால அப்டி ஆயிட்டா”, என்றான்.

“ஆனா அன்னிக்கு ஒருநாள் ஹாஸ்பிடல் போகணும்னு கண்ல தண்ணீ வச்சிட்டாங்க. ரொம்ப கோவமா அழுகையா என்ன பண்றதுன்னு தெரியாம, டூ வீலரையும் பாலன்ஸ் பண்ண முடியாம இங்க வாசல்ல நின்னாங்க. ரொம்ப பாவமாயிடுச்சு”, என்ற யோகி, தொடர்ந்து..

“சொல்றேனேன்னு கோச்சிக்காதீங்க. நீங்களும் அத்தையும் அந்த நேரத்துல எடுத்த முடிவு தப்புங்க. குழந்தை வேணாம்-ன்னு நீங்க அவங்களுக்கு யோசனைதான் சொல்லி இருக்கணுமே தவிர.. அதுக்கு குறை இருக்கு கலைச்சிடுன்னு எல்லாம் சொன்னது தப்புங்க”

ஒரு வித இயலாமையோடு, “தப்புதான் அவளுக்கு நல்லதுன்னு நினைச்சேன். அது இப்படி பேக் ஃபயர் ஆகும்னு தெரில”, மாதேஷ் சொன்னான்.

“சரி விடுங்க. அதுவும் நல்லதுக்குத்தான். அதுக்கப்புறமா தான் வீட்டுக்காரம்மா ரொம்ப ஸ்ட்ராங் ஆயிட்டாங்கன்னு ஈஸ்வரி சொல்லுச்சு”, யோகி.

மாதேஷின் கவனம் இப்போது ஈஸ்வரியிடம் திரும்பியது. “உங்க சிஸ்டர்க்கு இப்படி?… ஆக்சிடென்ட் அத மாதிரி..?”, ஈஸ்வரி ஏன் இப்படி என்று யோகியிடம் சுற்றி வளைத்துக் கேட்டான்.

“அதெல்லாம் இல்ல. ஈஸு பிறக்கும்போதே இப்படித்தான்”, என்று சொல்லிவிட்டு, “நேத்து உங்க அக்காவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக சொல்லி ஈஸு சொல்லிச்சு. போனேன். அப்பாவும் வீட்டுக்காரம்மா என்னவோ ஏடாகூடமா பேசினாங்க. ஈஸு ஞாபகத்துல நா கொஞ்சம் கத்திட்டேன்”, யோகி.

இவன் என் அக்காவைத் திட்டினானா? என்று மாதேஷ் யோகியைப் பார்த்தான். அவன் கேள்வி புரிந்து யோகி வலது கையை நீட்டி மறுப்பாக, “ஆங்.. அவங்க தப்பா பேசினாங்க, நானும் பேசினேன். மனசுல பட்டதை பட்டுனு சொல்லிடனும், அது திட்டோ பாராட்டோ, எதுன்னாலும்”, என்றான்.

பளிச்சென சிரித்து யோகியை ஆமோத்திதான் மாதேஷ்.