அத்தியாயம் 12 2
“ம்மா…”, வாசலில் ஸ்ரீகுட்டியின் குரல். யோகி குழந்தையை அறைக்கு வெளியே விட்டு, தனது அலுவல்களை பார்க்க சென்று விட்டான்.
மகளை பார்த்ததும், ‘நேற்று இரவு ஒரு நாள் தான் இவளை பிரிந்து இருந்தோமோ?’ என ஸ்ருதிக்குத் தோன்றியது. ஏதோ நெடுநாள் பிரிந்து இருந்தது போல ஒரு உணர்வு, “குட்டிம்மா”, என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
வாயெல்லாம் பல்லாக மத்தாப்பு சிரிப்போடு உள்ளே வந்த ப்ரித்விஸ்ரீ யைப் பார்த்ததும், அவளது சிரிப்பு ஸ்ருதிக்கும் தொற்ற, கை தானாக மகளை நோக்கி நீண்டது. ஸ்ரீகுட்டியும் நேராக ஸ்ருதியிடம் வந்து அவளை உரசியபடி நின்றாள்.
பேத்தி ஸ்ரீகுட்டியின் சத்தத்தில் தூக்கத்தில் இருந்து விழித்த பர்வதம், வசந்தியும் ஸ்ரீயுடன் நின்று கொண்டு இருப்பதை பார்த்து “அட வந்துடீங்களா?”, என்று கேட்டு எழுந்து அமர்ந்தார்.
“இதோ இப்போ தான் வந்தோம்”, வசந்தி.
“மா நா குட்டிப்பாப்பாவ தொடலாமா?”, ஸ்ரீ. கேள்வி கேட்டவாறே, படுக்கையை சுற்றிக்கொண்டு குழந்தையின் அருகே சென்றிருந்தாள்.
“குட்டி தூங்கறான்டா, சத்தம் போடாம, மெதுவா தொட்டுப் பாரு”
மெல்ல தம்பியை வருடிய ஸ்ரீகுட்டி, “ம்மா, செம்ம ஸாஃட்டா இருக்கான் மா”
அக்காவின் தொடுகையில் உடல் கூசியதாலோ என்னமோ, குட்டி நெளிந்தான். அவனுக்குத் தெரிந்த விதத்தில் “ங்கா.. ங்”, என ஸ்ரீயின் தொடுகைக்கு ஆட்சேபனை தெரிவிக்க, அங்கிருந்த பெண்கள் மூவரும் சிரித்தனர்.
“ஸ்கின் ஏன்மா சுருக்க சுருக்கமா இருக்கு?”, “என்னை ஏன் பாக்க மாட்டேங்கிறான்? எங்கியோ பாக்கறான்?, “இவன் தலமுடி என்னம்மா மாமாது மாறியே இருக்கு?”, என சின்னவள் கேள்விகள் மேல் கேள்விகளாக கேட்க, அவளுக்கு பதில் சொல்லியே நேரம் பறந்தது.
மாதேஷ், பார்வையாளர்கள் நேரம் முடிய அரை மணி நேரமே இருக்கும் தருவாயில், மருத்துவமனை வந்தான். பர்வதம் விஷயத்தைக் கூறியதும் அரக்கப் பரக்கக் கிளம்பியவன்தான். நேரே விமான நிலையம் சென்று அவனுக்கு தெரிந்த ட்ராவல்ஸ் மூலம் சென்னைக்கு உயர்வகுப்பு இருக்கையை ஏற்பாடு செய்து இதோ மருத்துவமனை வந்துவிட்டான்.
வரவேற்பில் ஸ்ருதி அனுமதிக்கப்பட்டுள்ள அறையை கேட்டு தெரிந்துகொண்டு, அவள் இருந்த அறையின் வாசல் வரை வேகமாக வந்தவனுக்கு, உள்ளே செல்ல தயக்கம் வந்தது. கதவருகே நின்று திறந்திருந்த கதவை இருமுறை தட்டி, தன் வருகையை உள்ளே இருபவர்களுக்குத் தெரியப்படுத்தினான். முதலில் நிமிர்ந்தவள் ஸ்ருதி,  தம்பியைப் பார்த்ததும் சட்டென முகம் சுருக்கினாள்.
பர்வதமோ “வாப்பா, நான்தான் மெதுவா வா ஒன்னும் அவசரமில்லன்னு சொன்னேனே?”, என்று வரவேற்றார். ஸ்ரீகுட்டி, “ஹைய் மாமா”, என்று கூக்குரலிட்டு, அவனருகே சென்று கைபிடித்து உள்ளே இழுத்து வந்தாள். குழந்தையின் அருகே சென்று, “இங்க பாருங்களேன், இப்போ எவ்ளோ அமைதியா அழாம இருக்கான்? கொஞ்சோண்டு தொட்டு பாரேன், அவ்ளோதான். கீச்சு கீச்சுன்னு கத்துவான்.” ஸ்ரீகுட்டிக்கு ஒருமை பன்மை விளிப்பு கலந்து கட்டி வரும். அதன் விளைவு பேச்சில் ‘வாங்க வா’ மாற்றி மாற்றி வரும்.
மாதேஷ் “இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அத்த, அப்படியே பாத்திட்டு போலாம்னு”, என்று பொத்தாம் பொதுவாக சொல்லி தனது அவசர வருகைக்கு சப்பைக் கட்டு கட்டினான்.
“மாமா குட்டிப் பாப்பாவ தொடு சொல்றேன்ல்ல?”, ஸ்ரீ.
ஸ்ருதி மகளும் தம்பியும் பேசுவதை கவனிக்காது, அங்கிருந்த மருத்துவ அறிக்கைகளை படிப்பதுபோல பாவனை செய்தாள்.
“இரு இரு, மாமா ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வர்றேன்”, என்று சொல்லி கைகளை கழுவி வந்த மாதேஷ் மெல்ல குழந்தையை பூப்போல தூக்கி அத்தையின் அருகே அமர்ந்து கொண்டான்.
“எவ்ளோ க்யூட்டா இருக்கான் பாரு, உங்களை மாதிரியே கர்லி ஹேர்”, என்று ஸ்ரீகுட்டி சொன்னதும்தான் கவனித்தான், பிள்ளைக்கும் இவனைப்போலவே முடி சுருட்டை சுருட்டையாய் இருந்தது.
கூடவே ஸ்ரீகுட்டி இதைச் சொன்னதும் ஸ்ருதி உதட்டைச் சுழித்து நொடித்துக் கொண்டதும் கண்ணில் பட்டது. அவளைப் பார்த்த மாதேஷுக்கு சிரிப்பு வந்தது, சின்ன வயதில் ஸ்ருதி இப்படித்தான் கோபித்துக் கொள்வாள்.
அத்தையிடம் குழந்தையின் எடை முதலிய விபரங்கள் கேட்டு தெரிந்து கொண்டு, பிள்ளை கண் விழிக்கும் முன் படுக்கையில் விட்டான். மாதேஷ் வந்த சிறிது நேரத்திலேயே விஷாலும் நந்தினியும் வந்தனர். “என்னம்மா ஒரு போன் பண்ணி இருந்தா வந்திருப்பேனே?”, என்று விஷால் பர்வதத்திடம் ஸ்ருதிக்கு வலி ஏற்பட்டதும் தன்னை உதவிக்கு அழைக்காததைக் கூறி குறைபட்டான்.
இயல்பாக, “தேவைன்னா கண்டிப்பா கூப்பிட்டு இருப்பேன்ப்பா, வசந்தி இருந்ததால கூப்பிட தோணல”, என்றார் பர்வதம்.
நந்தினி ஸ்ருதியின் அருகே சென்று நலம் விசாரித்து, குழந்தையைப் பற்றியும் பிரசவத்தைப் பற்றியும் கேட்டாள்.
விஷால் அங்கே மாதேஷைப் பார்த்ததும் , “எப்போ வந்தீங்க?”, என்று கேட்டான்.
“இப்போதான் அரைமணி நேரம் முன்னால”, மாதேஷ்.
அப்போது ரவுண்ட்ஸ் வந்த தலைமை செவிலி இத்தனை பேர் அங்கே குழுமி இருப்பதை பார்த்து, “என்ன இங்க ஒரே கூட்டம்? ஏம்மா, விசிட்டர் பாஸ் இருந்தாத்தான் உள்ள வரனும்-னு சொல்லி இருக்கேன் இல்ல?, எங்க இந்த டூயூட்டி நர்ஸ்?”,  என பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்.
“ஷ்.. இதோ இப்போ உடனே கிளம்பிடுவோம்”, என்று விறுவிறுவென அனைவரும் கலைந்தனர். “அத்த கொஞ்சம் ஃப்ரஷப் ஆயிட்டு வர்றேன். ஏதாவது வேணுன்னா போன் பண்ணுங்க, பக்கத்துலதான் இருக்கேன்”, என்று அத்தையிடம் மாதேஷ் சொன்னான்.
“ம்ம் சரிப்பா, வீட்டுச் சாவி கீழ் வீட்ல இருக்கும்”, என்று சொன்ன பர்வதத்தை ஸ்ருதி மறுப்பாக ஏறிட்டுப் பார்த்தாள்.
“இல்லத்தை, இங்க பக்கத்துலயே ஹோட்டல் இருக்கு, வரும்போதே ரூம் புக் பண்ணிட்டேன்”, நேரே விமான நிலையத்தில் இருந்து வருகிறான், இங்கிருந்து சென்றுதான்  அறையைப் பதிவு செய்ய வேண்டும், ஆனாலும் அத்தையிடம் இப்படிச் சொன்னான்.
அக்கா சொன்ன ‘வெளியே போ, வீட்டுக்கு வராதே’ வை மாதேஷால் மறக்க முடியுமா? அவளாக வா வென சொன்னால் மட்டுமே அந்த வீட்டுக்கு செல்வது என்பதில் மாதேஷ் தீர்மானமாக இருந்தான்.
அக்காவின் பிரசவ நேரம் என்பதால் இப்போது மருத்துவமனையில் அவளுடன் இருப்பது கடமை, ஆனால் அவள் வீட்டுக்கு செல்வது என்பது தன்மானக்குறைவு என்று நினைத்தான். ம்ம். என்ன இருந்தாலும் ஸ்ருதியின் தம்பியல்லவா? அவளது ரோஷம் இவனுக்கும் அப்படியே இருந்தது.
“அப்போ ஸ்ரீகுட்டிய வீட்ல விட்டுட்டு போறியா?, இங்க ரொம்ப நேரம் பசங்கள வச்சிக்க விட மாட்டாங்க.”
“ஆமாப்பா, நம்ம வீட்டில விட்டுடுங்க, ஈஸு காத்திட்டு இருக்கும்”, வசந்தம்மா சொல்ல, மாதேஷ் நெற்றி சுருக்கி ‘யார் ஈஸு?’, என்று யோசனையானான்.
“ஈஸ்வரி இவங்க பொண்ணு, கீழ் வீட்ல இருக்காங்க”, பர்வதம் விளக்கினார்.
” ம்ம்.சரி, நா டாக்டரை பாத்து பேசிட்டு கிளம்பறேன்”
“இருங்க மாதேஷ், நானும் வீட்டுக்கு தான் போறேன். உங்களையும் ஸ்ரீகுட்டியையும் ட்ராப் பண்ணிடறேன் “, விஷால் சொல்ல, மாதேஷ் “ஓகே நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க தோ வந்துடறேன்”, என்று ஒப்புக்கொண்டான்.
அறையில் இருந்த மருத்துவரை சந்தித்து பேசி, ஸ்ருதியின் மற்றும் சிசுவின் உடல்நிலை குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டான். ஏதேனும் அவசரம் என்றாலோ, என்ன தேவையென்றாலுமோ தன்னை அழைக்கும்படி ப்ரத்தியேகமாக டாக்டரிடம் வேண்டுதலாக சொன்னான்.
ஸ்ருதியின் தம்பி என்று இவனை மருத்துவருக்குத்தான் ஏற்கனவே தெரியுமே? “நத்திங் டு வொரி, ஸ்ருதிக்கு நார்மல் டெலிவரி, பேபியும் ஹெல்தியா இருக்கு, இப்போ ரெண்டு நாள்-ல தடுப்பூசி எல்லாம் போட்டு அனுப்பிடுவோம்” , என்று புன்னகைத்தார்.
“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்”, என்றுவிட்டு மாதேஷ் அவரிடம் விடை பெற்றான்.
விஷால் எகனாவே காரோடு வாசலில் காத்து நிற்க, நந்தினி, ஸ்ரீகுட்டி, மாதேஷ் என்று அனைவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
அப்படி வீட்டுக்குச் செல்லும் வழியில் விஷால், “நீ ஏன் உங்க அக்காவை உங்கூட கூப்டுக்க கூடாது?”, என மாதேஷிடம் மெல்ல பேச்சுக் குடுத்தான்.
“ஆக்சுவலா அப்டித்தான் முதல்ல நினைச்சிட்டு இருந்தேன், இப்போ ரகுமாமா வேலை வேற அக்காக்கு கிடைச்சிருக்கு, தவிர அத்தை இந்த ஊரை விட்டு வரமாட்டாங்க. என்ன பண்றது சொல்லுங்க?”
“அதுவும் சரிதான், எதுக்கு சொல்றேன்-ன்னா இவங்க அந்த வீட்டை மெயின்டெய்ன் பண்றதுங்கிறது கஷ்டம். ரெண்டு மாசம் முன்ன கூட வீட்ல பைப் லீக்கேஜ்-ன்னு சொல்லி அத்தை போன் பண்ணினாங்க. நாந்தான் ப்ளம்பரைக் கூப்பிட்டு சரி வந்து செய்தேன். என்னைக் கேட்டா, அதை வித்துட்டு உங்க அக்கா ஆபீஸ் பக்கத்துல இல்லன்னா ஸ்ரீகுட்டி ஸ்கூல் பக்கமா ஒரு வீடு வாங்கிட்டு போறது நல்லது. அலைச்சல் மிச்சமாகும். மிச்ச காசை தூக்கி பேங்க்-ல போட்டா நல்ல வருமானம் வரும். ஸ்ருதி வேலைக்குப் போக வேண்டிய அவசியம் கூட இருக்காது. எல்லாத்துக்கும் மேல ஒண்ணு  சொல்றேன் கேளு, வீட்டு வாடகைக்கு வர்றவங்க எப்படி இருப்பாங்களோ? என்னவோ? அவங்களோடல்லாம் லேடீஸால ஓரியாட முடியாது”
விஷால் சொல்வது சரிதான் என்று மாதேஷுக்கு தோன்றியது. “சரி.. சொல்லி பாக்கறேன், ஆனா கேப்பாளான்னு தெரியாது”, ‘யார் சொன்னாலும் கேக்க மாட்டா. முக்கியமா நா சொன்னா கண்டிப்பா கேக்க மாட்டா’, என்று மாதேஷ் மனதுள் நினைத்துக் கொண்டான்.
விஷால், “சரி எதுக்கும் அத்தைகிட்ட சொல்லி வை, பார்ட்டி ரெடியா இருக்கு, சொன்னா உடனே முடிச்சிடலாம்”, தூண்டில் போட்டு வைத்தான். விஷாலுக்கு அந்த கட்டுமான நிறுவனத்திடமிருந்து இந்த வீட்டிற்காக நெருக்கடி வந்த வண்ணம் இருந்தது.
இன்னும் மூன்று மாதங்கள் போகட்டும், முடித்து தருகிறேன் என ஸ்ருதியின் பிரசவத்தை காரணம் காட்டி சமாதானம் சொல்லி இருக்கிறான். இப்போது மாதேஷோடு பேசியதில் விஷாலுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அதற்க்குள் ஸ்ருதியின் வீடு வந்துவிட, “ஓகே விஷால், தேங்க்ஸ், அப்பறம் பாக்கலாம், உங்ககிட்ட என் போன் நம்பர் இருக்கில்ல ?”
“ஆங். இருக்குப்பா, நீயும் அப்பப்ப கால் பண்ணு, வர்றேன்”, சொல்லிவிட்டு கிளம்பினான்.
செல்லும் வழியில் நந்தினி, “அவங்க வீட்டை விக்கறதுக்கு ஏன் நீங்க இன்ட்ரெஸ்ட் எடுக்கறீங்க?”, என்று கணவனிடம் கேட்டாள்.
விஷால் தன்னருகே அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்த்து முறைத்தான். முகம் கடுகடுவென்றானது, “உனக்கெதுக்கு இதெல்லாம்? ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாரு. நா என்ன பண்றேன் ஏது பண்றேன்னு எல்லாம் கேக்காத”, முன்னாள் ட்ரைவர் இருப்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு தாழப் பேசினான்.
நந்தினி முன்பே கணவனின் நடவடிக்கைகளால் சுணங்கியிருந்தாள். தவிர அவள் கேட்டது ஸ்ருதியின் மேலிருந்த அக்கறையினால். இப்படி ஒரு பதில் வரவும், இன்னமும் அவனிடமிருந்து மனதளவில் தள்ளிப் போனாள்.