ஸ்ருதிபேதம் 12
“நம்ம ஈஸு இப்படித்தான இருந்துச்சு?”, என்று யோகி கேட்டதும் சட்டென  வசந்தம்மாவின் முகம் கசங்கியது. மகனிடமிருந்து பார்வையை தழைத்து, சில நொடி தயங்கி,  உணர்வற்ற குரலில், “நா எங்கப்பா அவள பாத்தேன்?”, என்றார்.
எப்போதும் மாறா புன்னைகையுடன் பேசும் அன்னையின் விரக்தியான பேச்சும், அதில் இழையோடும் அவரின் குற்ற உணர்வும், யோகிக்கு சில கசப்பான நிகழ்வுகளை நினைவுறுத்த நொடியில் அவன் முகம் பாறையாய் இறுகியது.
மருத்துவமனை வளாகத்தில் நீளமானதொரு இருக்கையில் அமர்ந்திருந்த பர்வதம்மா, இவர்களின் உரையாடலைக் கவனிக்கும் நிலையில் இல்லை. அவர் அவரது மகன் ராகவ்வை பிரசவித்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தார். பொது மருத்துவமனையில் அவன் பிறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே பர்வதத்தின் கணவர் வந்தார். (அப்போதெல்லாம் பொதுப் போக்குவரத்துதானே? தனியாக வண்டி வாகனமெல்லாம் சாமானியர்களுக்கு கட்டுப்படியாகாதே?)
அதன் பின்னர் தனக்கு ஏற்பட்ட இரண்டு கருச்சிதைவுகள். பின்னர் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்காக உட்கொண்ட மருந்து மாத்திரைகள், சில வருடங்களில்  கருப்பையை எடுத்து விட சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியது, என ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபகம் வந்தது.
இல்லையென்றால் ராகவ் ஒற்றைப்பிள்ளையாய் நிற்பானேன்? ஹ்ம்ம். இப்போது அந்த பிள்ளையும் இல்லை. முன்பு ஸ்ருதியின் பிரசவத்தில் அவன்தான் குழந்தையை முதலில் வாங்கினான். அப்போது அவன் முகத்தில் மிளிர்ந்த பெருமிதம்.. அந்த பொலிவு! ஹூம், என்றொரு நெடுமூச்சு புறப்பட்டது பர்வதம்மாவிடமிருந்து.
அந்த நேரத்தில் செவிலி ஒருவர் வந்து, “குழந்தையை வார்டுக்கு வெளிய ரொம்ப நேரம் வச்சிருக்கக் கூடாதுங்க. இன்பெக்ஷன் ஆகும். குடுங்க. இனிமே  யார் வந்தாலும் விசிட்டிங் அவர்-ல வர சொல்லுங்க. விசிட்டர் பாஸ் ஒண்ணு வாங்கிக்கோங்க. அது இருந்தாதான் உள்ள அலோவ் பண்ணுவாங்க”, என்று தன்மையாகச் சொல்லி, சிசுவை வாங்கி சென்றார்.
யோகிக்கு தனக்கான வேலைகள் எதுவும் இனி இங்கில்லை என்று தோன்றவும், “மா. நா கிளம்பறேன். ஏதாச்சும் வேணும்னா போன் பண்ணுங்க”, என்று சொல்லி அவன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக,
“ஒரு அஞ்சு நிமிஷம் இருப்பா, நானும் உங்கூட வர்றேன்”, என்று மகனிடம் சொல்லியவர், பென்ச்சில் அமர்ந்திருந்த பர்வதம்மாவை தொட்டு, “நாம ஸ்ருதி ரூம்க்கு போலாம்மா, அங்க போனா நீங்க செத்த கால் நீட்டி படுக்க வசதியா இருக்கும். ரொம்ப நேரம் உக்காந்திருக்கீங்க”, என்று சொன்னார்.
பர்வதத்திற்கும் பத்து நிமிடம் படுத்தால் நன்றாக இருக்கும்போல் தோன்றவே, “ம்ம்”, என்றார். வசந்தம்மா மகனுக்கு கண்காட்ட, யோகி அவருக்கு கைகொடுத்து  எழுப்பி ஸ்ருதிக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றான்.
அப்போதுதான் பர்வதம்மாவிற்கு ஸ்ருதியின் தம்பி  மாதேஷுக்கு இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. “யோகி, இந்த போன்-ல மாதேஷ்ன்னு ஒரு நம்பர் இருக்கும். அவனுக்கு போன் போட்டு தர்றியாப்பா?”, என்று கேட்க, யோகி செய்தான்.
பர்வதம்மா மாதேஷுக்கு அழைத்ததும், “அத்த, சொல்லுங்க, ஏதாவது அவசரமா?”, ‘அவசியம் இல்லாவிட்டால் அத்தை போன் செய்ய மாட்டாரே?’ என்ற பதைப்பு அவனிடம்.
“அடடா, அப்படியெல்லாம் இல்லப்பா, எல்லாம் நல்ல சேதிதான் உனக்கு மருமகன் பிறந்திருக்கான், அத சொல்லத்தான் கூப்பிட்டேன்”, என்றார். அவர் விஷயத்தைக் கூறியதும், படபடப்பாக, “டெலிவரிக்கு இன்னும் நாலைஞ்சு நாளாவது ஆகும்னு சொன்னீங்க அத்த? கூட யாருமில்லாம எப்படி சமாளிச்சீங்க? இதோ இப்போ அடுத்த பிளைட் பிடிச்சு உடனே வர்றேன்”, என்று பரபரத்தான்.
இத்தனைக்கும் முதல் நாள் காலையில்தான் அத்தையோடு பேசி இருந்தான். ‘டெலிவரிக்கு இன்னும் நாலு அஞ்சு நாளாகும்போல தெரியுது மாது, எதுக்கும் ரெண்டு நாள்ல நீ இங்க வந்துடு. எல்லாத்துக்கும் சரியா இருக்கும்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், இன்றோ..? ‘உடல் நலமில்லாத நிலையில் தனி ஆளாய் ஸ்ரீகுட்டியையும் வைத்துக் கொண்டு அத்தை இந்த சூழலை சமாளிக்கும்படி விட்டோமே’ என மாதேஷுக்கு குற்ற உணர்வு தலை தூக்கியது.
“அதெல்லாம் ஒண்ணும் அவசரமில்ல மாது, இங்க அக்கம் பக்கத்துல இருக்கறவங்க கூட வந்து ஒத்தாசை பண்ணினாங்க. அதனால் பிரச்சனை எதுவும் இல்ல. நீ நிதானமாவே வா”என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தி, “ஆனா உங்கக்கா..?”,  என்று இழுத்தார்.
உடனே ரோஷமாக, “நா ஒன்னும் அவளை பாக்க வரல, என் மருமகனை பாக்க வர்றேன். என்கிட்டே எதாவது பேசட்டும்.. அப்ப பாத்துக்கறேன்”, என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் மாதேஷ்.
‘ம்ம். அக்காவுக்கேற்ற தம்பி’, என்று நினைத்தார் பர்வதம்.
“என்ன பர்வதம்மா, யாரு போன்ல?”, யோகி.
“அதான்ப்பா மாதேஷ், ஸ்ருதியோட தம்பி”
“ரொம்ப பாசம்போல…”, எப்போதும் போல அவனது வழமையான கிண்டல் த்வனி.
முறுவலித்து, “ஆமாமா, இவ அவனை வீட்டுக்கே வரக்கூடாதுன்னு சொல்லி திட்டியும்,  தினமும் விடாம போன் போட்டு கேப்பான். எங்களுக்கே தெரியாம அப்பப்போ வந்து பாத்துட்டு போனானாம். குருக்கள் மாமி சொன்னாங்க. அக்கா மேல அவ்வளவு பாசம், நல்ல பையன்”, பர்வதம்.
அந்த சமாசாரங்கள்தான் யோகிக்குத் தெரியுமே? இவன்தானே அன்று ஸ்ருதியை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றான்? அதன் பின் நடந்தவைகளை பர்வதம்மா, அம்மாவிடம் சொல்லி புலம்பும்போது பலமுறை கேட்டிருக்கிறான்.
இவ்வாறு ஸ்ருதியின் அறையில் யோகியும் அத்தையும் பேசிக்கொண்டிருக்க… வசந்தி, லேபர் வார்டை ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டு இப்போதைக்கு ஸ்ருதியை வெளியே அனுப்ப மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டார். கூடவே அங்கிருந்த தாதியிடம் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டார்.
பிறகு பர்வதம் இருந்த அறைக்கு வந்தவர், நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவரை அட்டெண்டருக்கான படுக்கையில் அமரவைத்து, “பர்வதம்மா, நர்ஸ் கிட்ட கேட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல புள்ளயையும் ஸ்ருதியையும் இங்க கூட்டிட்டு வந்துடுவாங்களாம். நீங்க இங்க இருந்து பாத்துக்கோங்க. நா இப்போ தம்பியோட வீட்டுக்கு போயிட்டு மடக்குனு குளிச்சுட்டு டிபன எடுத்துட்டு வந்துடறேன்.” எனவும்,
கார் சாவியை கையில் எடுத்துக்கொண்டே யோகி அறையில் இருந்து வெளியேறி, “மாவ் நா வண்டிய எடுத்துட்டு வாசல்ல வந்து நிக்கறேன், பர்வதம்மா வர்றேன்.” என்க..
யோகிக்கு “ம்ம்”, என்று ஒப்புதலாக தலையசைத்த வசந்தி, அலமாரியில் இருந்த  ஃபிளாஸ்கினை பர்வதத்தின் கைகெட்டுமாறு வைத்து, “இதுல ஹார்லிக்ஸ் வாங்கி வச்சிருக்கேன். பசிக்கிறா மாதிரி இருந்தா குடிச்சுக்கங்க.”, என்று சொல்லி புறப்பட ஆயத்தமானார்.
‘இந்த நேரத்தில் வசந்தி மட்டும் இல்லையென்றால்?’, என்று சற்றே உணர்ச்சி வசப்பட்ட பர்வதம், வசந்தம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “எங்களால உங்களுக்கு சிரமம், இதெல்லாம் வேணான்னு வாய் வார்த்தைக்காக் கூட சொல்ல முடியல”, என்றார்.
பொய்யான கோபத்தோடு, “ஹூம்? அப்ப இன்னம் என்னை வேத்தாளாதா நினைச்சிட்டு இருக்கீங்க?”, வசந்தி.
பர்வதம்மா சங்கடமானதொரு சிரிப்பை உதிர்த்து விழிக்க வசந்தி அவரை நேர்ப் பார்த்து, “இந்த நேரத்துல உதவி செய்யலன்னா அப்பறமா மனுஷங்களா இருந்தென்ன?, சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க.”, “பேரன் வந்தாச்சு, வீட்டுக்கு வந்ததும் எங்களுக்கு இனிப்பா ரசகுல்லா செஞ்சு குடுங்க.”, என்றார் இலகுவாக.
பர்வதம் ஒப்புதலாக தலையசைத்து முறுவலிக்க.., “சுருக்க வந்துடறேன்”, என சொல்லி வசந்தி சென்றார்.
அவர் சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்க்கு பிறகு செவிலியர் இருவர் ஸ்ருதியை சக்கர நாற்காலியில் அமரவைத்து அவளது அறைக்கு அழைத்து வந்தனர். அவள் மெத்தையில் படுக்க உதவி செய்து, பின் சிசுவை அருகே விட்டுச் சென்றனர்.
பழக்கமில்லாத வெளிச்சத்தை உணர்ந்தோ அல்லது தன்னைச் சுற்றியிருந்த துவாலையில் தாயின் கதகதப்பைக் காணோமே என்று நினைத்தோ அச்சிசு கண் சுருக்கி சிறு சிறு சிணுக்கங்களை வெளியிட்டு கொண்டிருந்தது. ஸ்ருதியுமே கண்மூடி இருந்தாலும் விழித்துக் கொண்டுதானிருந்தாள், ஆனால் கவனம் வேறொங்கோ நிலை கொண்டு இருந்தது.
ஒரு வித புருவச் சுழிப்போடு அசைவற்று படுத்திருக்கும் மருமகளை பார்த்த பர்வதம், “என்னம்மா? ஏதும் வலிக்குதா?”, என்று தனது படுக்கையில் அமர்ந்தபடியே ஸ்ருதியைக் கேட்டார்.
“ம்ம். அதல்லாம் ஒன்னுமில்லத்த”, என விட்டேத்தியான குரலில் பதில் சொன்னாள்.  ஸ்ருதியின் நினைவடுக்கில் அவளது முதல் பிரசவமும்.., அப்போது உடனிருந்த கணவனும் இருந்ததால்.., பர்வதம் கேட்டதும் மனதின் பாரம் கண்களில் நீராய்  வடிந்தது.
அக்குரல் மாற்றத்திலேயே அவளது நினைவுகளைப் படித்தவராக, “ம்ப்ச். ஸ்ருதி, ஜலதோஷம் பிடிச்சு உடம்புக்கு வந்தா உனக்கு மட்டுமில்ல குட்டிக்கும் கஷ்டம்.  கண்ணத் துட, குட்டி சிணுங்கறான் பாரு”, என்று சொல்லி எப்போதும் போல அவளை மடை மாற்றினார்.
“ம்ம்”, என்று பதில் சொல்லியவள், திரும்பி அவளுக்கு இடது பக்கமாக இருந்த மகனைப் பார்த்து மெல்ல தலையை வருடி அதன் அசைவை உணர்ந்தாள்.
பிள்ளையின் சருமம் பூவிதழை விட மென்மையாக இருக்க, அவனைத் தொட்ட அந்தக் கணத்தில் அவளது உடல் மற்றும் மன வலியெல்லாம் பின்னுக்குப் போய் உள்ளுக்குள் ஆழ்ந்த அமைதி படர்ந்தது.
அப்படியே பிள்ளைக்கு பசியாற்ற, சற்று நேரத்தில் குழந்தை தூங்க ஆரம்பிக்கவும், முதுகு தட்டிக் குடுத்துப் படுக்க வைத்தாள். அப்போது பிள்ளை சிறிது கக்கியிருப்பதை கவனித்தவள், கட்டிலின் அடியில் பிளாஸ்டிக் பெட்டியில் இருந்த உலர் துணியை எடுத்து துடைத்து விட்டு, ‘டிஸ்யூஸ் வாங்கணும் அப்பறம் இவனுக்கேத்த மாதிரி காட்டன் ட்ரெஸ் வாங்கணும்’ நினைத்துக்கொண்டாள்.
ஸ்ருதிக்கு இது இரண்டாவது பிரசவமாதலால் தாதிகள் எதுவும் சொல்லத் தேவையின்றி அவளே அனைத்தையும் அறிந்திருந்தாள். தவிர, ‘என்னையும் என் குடும்பத்தையும் நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்’, என்ற எண்ணம் சென்ற சில மாதங்களாய் வலுப்பெற்றதாலோ, முடிந்தவரை மற்றவரின் உதவியை நாடக்கூடாதென்ற வைராக்யமோ, அவளை செயலாற்ற வைத்தது. டெலிவரியில் நாள் கணக்கு முந்தியதுதான் அவள் கைமீறி நடந்த விஷயம்.
“வசந்தி ஹார்லிக்ஸ் வாங்கி வச்சிருக்காங்க, கொஞ்சம் குடிக்கிறயா ஸ்ருதி?”, அத்தை கேட்டார்.
வசந்தி என்ற பெயரைக் கேட்டதும் அவளுக்கு யோகி சரத்தின் நினைவு வந்தது. தானாகவே முகம் கடுகடுவென்றானது. பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க, “என்ன ஸ்ருதி? குட்டிக்கு ஏதாவதுன்னு டாக்டர் சொன்னாங்களா?”, அவர் கவலை அவருக்கு.
“சேச்சே அதெல்லாமில்லத்தை, நார்மல் வெயிட், நல்லா ஆக்டிவா இருக்கான்னு சொன்னாங்க, இதோ இப்போ கொஞ்ச நேரம் முன்னால கூட கைய கால உதைச்சிட்டுதான இருந்தான்?”
“அப்போ வேறென்ன யோசனை?”
“ப்ச். ஸ்ரீக்குட்டி என்ன பண்றாத்த?”
“அவ தூங்கிட்டு இருக்களாம், இப்போ கொஞ்ச நேரம் முன்னால ஈஸ்வரி போன் பண்ணி சொன்னா. உனக்கு எதாவது வேணும்னா தயங்காம வசந்தி கேக்க சொன்னாங்க”
‘ஹ்ம். இப்போதும் அந்த யோகியின் குடும்பம்தான் உதவிக்கு வந்திருக்கிறது. ஆனாலும் இவர்களை காலி செய்யச் சொல்ல வேண்டும்’ என நினைத்தபடி,  “எனக்கும் தூக்கம் வருது அத்தை”, நேரடியான பதிலைத் தவிர்த்தாள்.
“ம்ம்”, என்று பதிலளித்து அவரும் படுத்துக்கொள்ள… சற்று நேரம் விழித்திருந்து தன் நிலைபற்றி யோசனை உருண்டோட..  அயற்சியின் காரணமாக தூக்கம் அவளைத் தழுவியது.
மெல்ல தன்னை யாரோ தொட்டு எழுபவது தெரிய, கையில் ஹார்லிக்ஸ்-ஸோடு  வசந்தம்மா நின்றிருந்தார். அப்போது தான் தன்னையுமறியாது அடித்துப் போட்டாற்போல் தூங்கி இருக்கிறோம் என்பது ஸ்ருதிக்கு புரிந்தது. சுவரில் இருந்த கடிகாரம் மூன்று மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்ததைக் காண்பித்தது.
“ஹார்லிக்ஸ் அப்டியே இருக்கு. வெறும் வயித்துல தூங்கறயியே? அதான் எழுப்பினேன்”, என்றார்.
“ம்ம். அத்தை இல்லயா?”
“உஷ்… மெல்ல மெல்ல, நல்லா அசந்து போயி தூங்கறாங்க “
“ஓ.., சரி ஒரு நிமிஷம் இருங்க, வாய் கொப்புளிச்சுட்டு வந்துடறேன்”
“அட பரவால்ல குடிம்மா, உடம்புக்கு தெம்பு வேணா?”
“ஐயோ அதுக்கில்லீங்க, வாயெல்லாம் வள வள- ன்னு இருக்கு”
வசந்தம்மா, “அப்டியா சரி..”, என்று சொன்னவர் ஸ்ருதியின் கட்டில் அருகே நெருங்கி வந்து நின்று, “எந்திரிக்க முடியுமா உனக்கு?”, கேட்டார்.
“முடியும்ன்னுதா தோணுது”, சொல்லி காலை கீழே வைத்து எழுந்து நிற்க முயற்சிக்கையில், தலை சுற்றுவது தெரிந்தது. கையைக் காற்றில் துழாவிக்  கட்டிலைப் பிடித்துக் கொள்ள எத்தனிக்கும்போது, வசந்தம்மா தாங்கி பிடித்துக் கொண்டார்.
“இதுக்குத்தான் சொன்னேன். படுத்த மேனிக்கே வாய் கொப்புளிச்சிகிறியா?, டப்பா ஏதாச்சும் கொண்டு வர்றேன்?”, என்று கேட்டவரிடம்..
மிகவும் சங்கடமாக உணர்ந்தாள், மெல்ல வேண்டாமென தலையசைத்து, “அய்யய்ய அதெல்லாம் வேண்டாம் நானே மெதுவா போய்க்கறேன்”, என்று விட்டு தரையில் காலை ஸ்திரமாக ஊன்றி தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள்.
ஸ்ருதி மறுத்தும் அவள் கையை கெட்டியாக பிடித்தவர், “அட.. உனக்காக பண்றேன்னு நினைக்கிறியா தாயி?, எம் மவ பிரசவத்துக்கு நா பழகனுமில்ல? இன்னும் அஞ்சு மாசத்துல அவளுக்கு பிரசவ தேதி சொல்லியிருக்காங்கல்ல?”
“ஓ அப்டியா?” என்றவளுக்கு நிஜமாகவே இந்த விஷயம் புதிது. வீட்டில் எப்போதாவது ஈஸ்வரி பற்றி ஏதேனும் பேச்சு வந்தால், ஸ்ரீகுட்டி அவளது சதுரங்க விளையாட்டுத் திறமையைப் பற்றி பேசுவாள், பர்வதமோ வசந்தம்மா பற்றியும், யோகி பற்றியும் ஏதேனும் சொல்வார். எதையும் ஸ்ருதி அவ்வளவாக காதில் போட்டுக் கொள்ள மாட்டாள்.
“உனக்குத் தெரியாதில்ல?, நீதான் நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருக்கியே?”, பேச்சு ஒருபுறம் இருக்க ஸ்ருதியை அணைவாக பிடித்திருந்தார்.
“…”, சிறு முறுவலாக ஸ்ருதியின் பதில்.
“ஆனா உன்ன சொல்லி தப்பில்ல, உனக்கும் நேரம் சரியா இருக்கு”, என்று அவரே சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
ஸ்ருதிக்கு ஒவ்வொரு முறை அடி எடுத்து வைக்கும்போதும் அடிவயிற்றில் சுருக் கென்றிருந்தது. ஆனாலும் வலி பொறுத்துக்கொண்டு கால் நடுங்கியபோதும் மெல்ல நடந்து சென்று வாய் கொப்பளித்து விட்டுத்தான் வந்தாள். வசந்தம்மா உதவியுடன் கட்டிலில் அமர்ந்ததும், அப்பாடா என்று இருந்தது.
“ஸ்ரீகுட்டி எழுந்துட்டாளா வசந்தம்மா?”
“ஆங். எந்திரிச்சிட்டாம்மா, இட்லி குடுத்தேன். ஒழுங்கா  சாப்டா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவா. சரத்துக்கு இந்த பக்கமா வேலை இருக்கு, வண்டில கூட்டிட்டு வர்றேன்னு சொன்னான். கிளம்பி வந்துட்டு இருப்பாங்க”, என்றவர் தொடர்ந்து..
“அடாடாடா உன்பொண்ணு அலப்பறைய ஏன் கேக்கற? எனக்கு தம்பி பாப்பா வந்துடுச்சுன்னு நம்ம அபார்ட்மெண்ட் முழுக்க எல்லார்ட்டயும் போய் ஒரே குதி”, வசந்தியின் பேச்சில் குதூகலம் இழையோடியது. கையால் பிளாஸ்க் திறந்து டம்ளரில் பானத்தை ஊற்றிக் குடுத்தார்.
ஸ்ருதிக்கு மகளை பற்றி நினைத்ததும் மனதில் இதம் பரவியது. ஸ்ரீ குட்டிக்கு சந்தோஷம் வந்தால் அவ்வளவுதான். ரப்பர் பந்தாக துள்ளுவாள், சளசள வென பேச்சு தூள் பறக்கும்.
மகள் நினைவில் புன்முறுவலோடு வசந்தி குடுத்த ஹார்லிக்ஸை வாங்கிக்கொண்டு, “நீங்க குடிச்சீங்களாம்மா?”
“ஆங். அது ஆச்சு. நாலைஞ்சு முறை ஹ ஹ”, என்றார்.
இதமான சூட்டில் இருந்த ஹார்லிக்ஸ் உள்ளே செல்லச் செல்ல ஸ்ருதிக்கு, நடந்த களைப்பு நீங்கி கொஞ்சம் தெம்பு வந்தாற்போல் இருந்தது.