அத்தியாயம்  13 1

மாதேஷையும் ஸ்ரீகுட்டியையும் யோகியின் வீட்டில் இறக்கி விட்டு,காரில் போகும் வழியில் விஷாலுக்கு போன் வந்தது. “ஆங், சொல்லுங்க சார்”

“…”

“ஆமா அந்த டாகுமெண்ட் மாட்டும் பெண்டிங்-ல இருக்கு”

“….”

“தெரியும் சார், அதுக்குத்தான் முயற்சி செய்திட்டு இருக்கேன், இன்னிக்கு கண்டிப்பா காப்பி அனுப்பறேன்னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் அப்டியே லைன்-ல இருங்க, தோ மெயில் பாத்துட்டு சொல்றேன்”, சில நொடிகள் மின்னஞ்சலை தேடி, “இருக்கு சார். வந்திடுச்சு, இத அப்டியே உங்களுக்கு பார்வேர்ட் பண்ணிடறேன்”, என்றான் உற்சாகமாக.

“….”

“ஓஹ், என் கையெழுத்து அதுல போட்டு ஸெல்ப் அட்டஸ்ட் பண்ணனுமா?, சரி ஒண்ணு பண்றேன், நா சைன் பண்ணி  யார்ட்டயாவது குடுத்து அனுப்பறேன். இன்னிக்கு ஈவினிங் வரைக்கும் கொஞ்சம் எனக்காக சமாளிங்க சார்”, குழைந்தான்.

“…”

“ரொம்ப தேங்க்ஸ் சார்”, மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட விஷால் யோசனையானான். உடனடியாக வெளியே செல்ல வேண்டிய வேலை அவனுக்காக காத்திருந்தது. தவிர கடை ஆட்களை இங்கும் அங்குமாக இரண்டு இடங்களையும் பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கவே, யாரையும் உதவிக்கு கூப்பிட முடியாது. ‘என்ன செய்யலாம்?’ என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

அருகே இருந்த நந்தினிக்கு விஷாலுடன் பேசியது ரமணன் என்று புரிந்தது. கணவன் ரமணன் வேலை செய்யும் வங்கிக்கு ஒரு டாகுமெண்ட் குடுக்க வேண்டும், அது நிரம்ப அவசரம் என்பதும் புரிந்தது. ஆனால், ‘நான் வேணா போய் அந்த பேப்பரை குடுத்துட்டு வரட்டுமா?’ என்று கணவனிடம் கேட்க தயக்கம் இருந்தது.

தயக்கம் கணவன் சற்று முன் திட்டியதாலா? இல்லை, ரமணனை மீண்டும் சந்திக்க மனம் முரண்டுவதாலா? நந்தினி கண்களை மூடிக்கொண்டாள்.

என்றோ கல்லூரியின் ஆண்டு விழாவில் ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற தலைப்பில் ரமணன் பேசிய வரிகளும் அதன் பின்னர் நிகழ்ந்ததும் நினைவுக்கு வந்தது.

‘காட்டாறு அல்ல அவள்; உருட்டி பிரட்டி போட,  சிற்றோடையும் அல்ல அவள்; சிணுங்கிக்கொண்டு ஓட, சலசலத்து சென்றாலும் வேகம் குறையாத காவேரி அவள்,  செல்லுமிடமெல்லாம் வளம் பரப்பும் தமிழ் நதி அவள்.’

மேடையில் பக்கவாட்டில் அடுத்து பேசுவதற்காக காத்திருந்த  நந்தினியை நொடிக்கொரு முறை பார்த்துக் கொண்டே இதைப் பேசி முடித்தான்.

மேடையில் இருந்து அவன் இருக்கைக்கு வரும்போது, நந்தினியை அடுத்து அமர்ந்திருந்தவர் மேடையில் பேசுவதற்காக எழுந்து செல்ல, எதிர் வந்த ரமணன் இவள் அருகே வந்து அமர்ந்தான்.

சீனியர் என்ற மரியாதை நிமித்தம் நந்தினி, “அருமையா பேசினீங்க, வாழ்த்துகள்”, என்றாள்.

அவள் புறம் திரும்பி அமர்ந்து பளிச்சென சிரித்தவன், “நன்றி”, என்று சொன்னான். ஒரு நொடி தயங்கியவன் தன் கை நகத்தைப் பார்த்தவாறே, “என் ஸ்பீச்-ல கடைசி வரி விட்டுட்டேன். அது உங்க கிட்ட சொல்லணும்னு..”

நந்தினிக்கு, ‘என்னவாய் இருக்கும்?’ என்ற யோசனை ஒரு புறமுமாக, அடுத்து அவள் பேசவேண்டிய முறை என்பதால் பேச்சாளரிடம் ஒரு கண்ணுமாக  இருக்க, “அப்டியா? சொல்லுங்க பாக்கலாம்.. “

ரமணன் தீவிரமாக நந்தினியை பார்த்தபடி ஆழ்ந்த குரலில், “..தமிழ் நதி அவள்; அவள் இன்னொரு பெயர் நந்தினி; என் நந்தினி”, என்றான். அவனது உணர்வுகள் தீவிரமாக நந்தினியைத் தாக்க திடுக்கென முழுமையாக தலையைத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவன் கண்களில் வழிந்த காதலில் நந்தினி அவள் பேச வேண்டிய தலைப்பை மறந்து போனாள்.

***************

மருத்துவமனையில், அத்தையிடம், “அத்த, வசந்தம்மா பொண்ணு ஈஸ்வரி கன்சீவா இருக்காங்களா?”, என்று ஸ்ருதி கேட்டாள். வசந்தம்மா மாலை நேரமாதலால், மருத்துவமனையை அடுத்து இருந்த கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டுவிட்டு வருவதாக கிளம்பி சென்றிருந்தார்.

“ஆமா, உனக்கு தெரியாதா?”

“ம்ஹூம்”

“அட போன வாரம் கூட அவளுக்குப் பிடிக்கும்னு காரத்தட்டை பண்ணினேனே? நீ கூட எதுக்கு ன்னு கேட்ட, அப்போ ஈஸ்வரிக்கு பிடிக்கும்னு..”, என்று சற்றே யோசித்து, “ஓ! என்ன விஷயம்னு சொல்லலியோ? அது.. உனக்குத் தெரியும்னு நினைச்சிருப்பேன்”

“ம்ம். இப்போ எத்தனாவது மாசம்?”

“இப்போத்தான் நாலு முடிஞ்சு அஞ்சு ஆரம்பிச்சிருக்கு”

“ஹ்ம்”, என்று சொல்லி படுக்கை ஓரத்தில் இருந்த சுருக்கத்தை நீவியபடி, “அவங்கள காலி பண்ண சொல்லலாம்னு இருந்தேன்”, மெதுவாக சொன்னாள்.

பர்வதம் இதை ஓரளவு எதிர்பார்த்துத்தான் இருந்தார். ஆனால், வீட்டிற்கு சென்றதும் இதைப் பற்றி பேசுவாள் என்று நினைத்திருந்தார். ஆனாலும் “யார்?, வசந்தியையா?” தெரியாதது போலக் கேட்டார்.

“ஆமா”, என்று அழுத்தமாகக் கூறி, “ஆனா இப்போ சொல்ல முடியாதில்ல?”

“ஆமாம்மா, மாசமா இருக்குறவங்க வீடு மாத்தக்கூடாதில்ல?, அதுவுமில்லாம அந்த பொண்ணு டெலிவரிக்காகத்தான் அவங்க சென்னைக்கு வந்ததே”

“அதென்ன? இவ்ளோ சீக்கிரமே வந்துட்டாங்க? அவங்க ஊர்-ல நல்ல ஹாஸ்பிடல் இல்லியா என்ன?”

“அப்படின்னு இல்ல, அவங்க டாக்டர் இங்க வந்து ரெகுலர் செக் அப் பண்ணிக்க சொன்னாங்களாம், அதான் டெலிவரி வரைக்கும் வீடு எடுத்து தங்கி இருக்கலாம்னு வந்திருக்காங்க”

“ஹூம். அப்ப அவங்க காலி பண்ண எப்படியும் இன்னும் ஒரு வருஷமாவது ஆகும்?”

“ஆமா”, என்று சொல்லி “என்ன திடீர்னு..?”, என மருமகளிடம் கேட்டார் பர்வதம்.

முகத்தை சுருக்கியவாறே, “அவங்க அதான் அந்த வசந்தம்மா பையன் ரொம்ப ஓவரா பேசறாங்க, சரியில்ல”, என்றாள் ஸ்ருதி.

“பேச்சுதான் ஜாஸ்தி ஸ்ருதி, மனசு தங்கம்”

“தங்கமோ வைரமோ, அது அவங்கவங்க வீட்ல இருக்கட்டும், நமக்கு வேண்டாம்”

“சரத் நேத்து அப்படி பேசிட்டானேன்னு கோவப்படறயா ஸ்ருதி?”

“நேத்து-ன்னு இல்ல, எப்போவுமே கொஞ்சம் மிதப்பாத்தான் பேசறாரு, அதுலயும் முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட எப்படி பேசறதுன்னு ஒரு வரைமுறை இல்ல”, மூக்கு விடைக்கக் கூறினாள். பின்னே, தன் பிள்ளையை முதன் முதலாக பார்க்கும்போது அவன் கடுகடு முகமும் அவனது திட்டும் அல்லவா நினைவுக்கு வந்தது?.

‘நான் என் பிள்ளையைப் பற்றி என் மாமியாரிடம் என்னவோ சொல்லி விட்டு போகிறேன்? இவன் யார் இடையில் வர?’, என்று நினைத்தவளுக்கு அப்போதே இவனது உதவி வேண்டாம் என்று மறுக்கத் தோன்றியது. ஆனால், நேற்று இருந்த நிலையில் எதுவும் பேச முடியவில்லை.

“அப்படியில்ல ஸ்ருதி, அவன் தங்கச்சி ஈஸ்வரி இருக்கால்ல.. கொஞ்சம் உடம்பு சரியில்லாத பொண்ணு..”என்று எதையோ சொல்ல வந்து மௌனமானார்.

கேள்வியாக மாமியாரைப் பார்த்து,”ஓஹோ”, என்றவள் சிலநொடி பொறுத்து, “என்ன அவங்களுக்கு?”, விளக்கம் கேட்டாள்.

சற்றே தயங்கியபடி, “அது.. அவளுக்கு பிறக்கும்போதே முட்டிக்கு கீழ எதுவும் இல்ல, கால்.. பாதம் விரல்-ன்னு ஒண்ணும் கிடையாது.”, என்று வருத்தத்தோடு சொன்னவர்.. தொடர்ந்து,  “ஆனாலும் அது அவளுக்கு ஒரு குறைன்னே நினைக்கமாட்டா தெரியுமா? ரொம்ப நல்ல பொண்ணு. புத்திசாலியுங்கூட. அவளை அவங்கண்ணன் அப்டி தாங்கறான், பாத்தா ரெண்டும் ஏட்டிக்கு போட்டி பேசறா மாதிரிதான் இருக்கும் ஆனா அவ சொல்றத இவன் தட்டாம செய்வான், அவளும் அப்படித்தான் இவன் சரி ன்னு சொல்லாம எதுவும் செய்ய மாட்டா”

“ஓ !”, ஸ்ருதிக்கு கலவையான உணர்வுகள் வந்து போயின.

“அதான் அவ வயித்துல இருக்கிற குழந்தைக்கு சரியான வளர்ச்சி இருக்கான்னு அப்பப்போ ஸ்கேன், அப்பறம் ஏதோ மரபணு சோதனைன்னு என்னவோ சொன்னாங்க அதெல்லாம் பாக்க நம்ம ஏரியா-ல இருக்கிற பெரிய ஹாஸ்பிடல் தான் வசதியாம். அதான் இங்க வந்து தங்கி வைத்தியம் பாக்கறாங்க.”

“அதுவுமில்லாம அவளுக்கோ அவங்கம்மாவுக்கோ இது ஒரு குறையா தெரியக்கூடாதுன்னு இந்த பையன் அவங்கள வம்பிழுத்துகிட்டே இருப்பான், சுத்தி இருக்கிறவங்க கிட்டயும் அப்படியே பேசி பழகிட்டான். பேச்சு மிதப்பா இருக்குமே தவிர தப்பா ஏதும் சொல்ல மாட்டான். ஊர்ல இவங்கதான் பெரிய தனக்காரங்களாம். எப்போவுமே சரத் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது”, என்று யோகிக்கு நீளமாக நற்சான்று பாத்திரம் வாசித்தார் பர்வதம்.

“அத அவங்க ஊரோட வச்சிக்கணும்”, என கத்தரித்தாள் ஸ்ருதி.கூடவே அவர்கள் பேச்சு வழக்கும் கூட அத்தைக்கு வந்து விட்டது என்று நினைத்தாள். ‘ம்ம். பெரிய தனக்காரங்க-ன்னா பண்ணைக்காரங்களா இல்ல பணக்காரங்களா என்ற யோசனை ஓடியது.

“ஹ்ம்ம்”, என்ற நெடுமூச்சோடு பர்வதம் அத்தை, “அது அப்படியில்..”என்று ஆரம்பிக்க அதற்குள் கோவிலுக்கு  போயிருந்த வசந்தம்மா வந்து விட பேச்சு அதோடு நின்றது.

பின் வசந்தம்மா எப்போதும் போல சளசளக்க அத்தையும் அவரோடு சேர்ந்து கொண்டார். குழந்தை அவன் வேலையை செவ்வனே செய்ய, ஸ்ருதி அவனுக்கு  பசியமர்த்தித் தூக்க வைத்தாள்.  மெல்ல குழந்தையின் அருகே படுத்துக் கொண்டு, எதிரே அத்தையுடன் சிரித்தவாறே பேசும் வசந்தமாவைப் பார்த்து இவங்க பொண்ணுக்கு உடம்பு முடிலைன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? ஹ்ம்ம். ஓரோருத்தங்களுக்கு ஓரொரு மாதிரி கஷ்டம்’, என்று ஸ்ருதி நினைத்துக் கொண்டாள். அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

**************