ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 85.
மணி ஒன்பது முப்பதாகிறது. மருத்துவமனையிலிருந்த தருண் கண் விழித்தான்.மருத்துவர் அவனை பார்த்து விட்டு,அவன் அப்பாவிடம் வந்தார்.
டாக்டர் என் மகன்? பதறிய படி கேட்டார்.உங்கள் மகனுக்கு பெரிய பிரச்சனையெல்லாம் இல்லை. சீக்கிரம் சரியாகி விடுவார். பயப்படாதீர்கள்! அவரை யாராவது அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று விட்டு, சார் நாம் பேசணும் என்றார் மருத்துவர்.
என் மகனை பார்க்கலாமா? கேட்டார் தருணின் தந்தை.
சுயர். கண்டிப்பாக பாருங்கள். அதிகம் அவரை பேச விடாதீர்கள். சீக்கிரம் வெளியே வந்து விடுங்கள்.
தருண் அறைக்குள் அவர் நுழைய, மகன் முன் அழாமல் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்த நினைத்தவரால் முடியவில்லை. அழ ஆரம்பித்தார்.
தருண் அவரது கையை பிடித்து, அப்பா என்றான்.
அவர் அவனது கைகளில் முகம் புதைத்து அழுதார். பிரதீப் உள்ளே வந்தவன், அப்பா என்று அருகே வந்து அவரை அணைத்தவாறு, அவன் முன் அழாதீர்கள்.
அவர் கண்களை துடைக்க, மெதுவாக பேசினான். அப்பா..எனக்கு ஒன்றுமில்லை. அம்மா, புவி.. என்று பிரதீப்பை பார்த்தான். அவர்களும் கூறவே, அம்மாவிடம் சொல்லாதீங்கப்பா என்றான். அவனது தலையின் பின் பக்கம் தையல் போடப்பட்டிருந்தது. கட்டும் கட்டி இருந்தார்கள்.
அவர் அவனது கையை பிடித்து மற்றவர் மூலம் தெரிவதை விட நாம் சொல்வது தான் நல்லது. நான் அவளிடம் பேசிக் கொள்கிறேன். நீ எதை பற்றியும் யோசிக்காது அமைதியாக ஓய்வெடு என்றார்.
அவன் தனது இமைகளை கதவருகே திருப்ப, அதை புரிந்து கொண்ட தந்தை..அந்த பொண்ணு கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வீட்டிற்கு சென்றாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள்.
அப்பா..என்று அவன் அதிர, நீ அமைதியாக இரு. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அம்மாவும் புவியும் பார்த்தால் போதும் என்று அவனது காதலுக்கு பச்சை கொடி காட்ட, அவன் கண்களில் மகிழ்ச்சியை காட்டி தேங்க்ஸ்பா..ஆனால் இதயாவிற்கு..அவளுக்கும் உன்னை பிடிக்கும் என்றான் பிரதீப். அவன் மனதில் அளவில்லா மகிழ்ச்சியில் குதிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவனால் தான் முடியாதே!
நீ ஓய்வெடு அவர்கள் வெளியே செல்ல எத்தனிக்க, அவர்களை தடுத்து அர்ஜூனை கேட்டான். அவனும் வந்து விடுவான். ஆட்கள் நிறைய பேர் வெளியே இருக்கக் கூடாதாம் என்றார் அப்பா.
சரி என்று தலையசைத்தான்.அண்ணா! அவன் வந்தால் என்னை பார்க்க வரச் சொல்கிறீர்களா? கேட்டான்.
நான் சொல்லவே தேவையில்லை. அவனே வந்து விடுவான் என்று அவர்கள் வெளியேறினார்கள்.
அங்கே ஆதேஷும் துகிராவும் வந்தனர். சீனியருக்கு என்னாயிற்று? ஆதேஷ் கேட்டான்.
பிரதீப் அவர்களை பார்த்தவுடன் கொஞ்ச நேரம் இங்கேயே அவனை பார்த்துக் கொள்கிறீர்களா? மருத்துவரை பார்த்து விட்டு,நான் வந்து கூறுகிறேன் என்று தருண் அப்பாவிடம், அவனுக்கு ஒன்றும் இருக்காது. மருத்துவர் தான் கூறினார்ல அப்பா என்று அவரது கையை பிடித்தவாறு ஆறுதலாக பேசினான். துகிரா அவனை பார்த்துக் கொண்டிருக்க, ஆதேஷ் வெளியிலிருந்து தருணை வருத்தத்துடன் பார்த்தான்.பின் அவர்களிடம்,
நாங்கள் உள்ளே சென்று பார்க்கலாமா? கேட்டான்.
அதிகமாக அவனிடம் பேசாதீர்கள்! பிரதீப் கூறி விட்டு அகன்றான்.
இருவரும் உள்ளே சென்று, அவனிடம் பேசிக் கொண்டிருக்க,
தருண்,வெளியே இருந்த அந்த ஆள் உன்னுடைய அப்பாவை அவரும் அப்பா என்கிறார்.அவரு ஜானுவோட அண்ணா தானா? உன் அப்பாவை நன்றாகவே தேற்றுகிறார்? அது மட்டுமல்ல விறைப்பாகவே திரிகிறார். இருமுறை பார்த்திருக்கிறேன். சிரிக்கவே மாட்டாரோ? கேட்டாள் துகிரா.
நீ என்னை பார்க்க தான் வந்தாயா? கேட்டான் தருண் மெதுவாக.
அஃப் கோர்ஸ்.உன்னை பார்க்க தான் வந்தேன். அந்த ஆளை பார்த்தேனா? அதான் கேட்டேன். என்னுடைய அப்பாவிற்கு என்னிடம் பேச கூட நேரமிருக்காது. ஆனால் உன் அப்பாவிற்கு ஆறுதல் கூறினார்.
என்ன பேசுற?ஆதேஷ் அவளது கையை அழுத்தினான்.அதை பார்த்த தருண்,அவள் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே! மூச்செடுத்தவன்..அந்த ஆள் என்று அவரை அழைக்காதே! அவர் மனதளவில் மிகவும் உயர்ந்தவர். ஊரில் உள்ள நல்லது கெட்டதில் அவர் தான் முன் நிற்பார். அவருக்கு வேலை நிறைய இருக்கும். காலை அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து இரவு பத்து மணி வரை வேலை இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும் அவர் ஊரிலுள்ள அனைவரையும் அவர் குடும்பம் போல நினைத்து தான் செயல்படுவார்.
போதும் சீனியர், நீங்க அமைதியா இருங்க என்று ஆதேஷ் கூற, மரியாதை எல்லாம் பெரியதாக உள்ளதே? தருண் கேட்க, அவன் நாங்கள் வெளியே இருக்கிறோம் சீனியர் என்று எழுந்தான்.
நீ எப்பொழுதும் போல் பேசு. எனக்கு ஒன்றுமில்லை என்று தருண் கூற, கண்கலங்க ஆதேஷ் அவனை பார்த்து விட்டு வேகமாக வெளியேறினான்.ஜில்லா என்று துகிரா அழைத்துக் கொண்டே அவள் தருணை பார்த்து விட்டு வெளியே வந்தாள்.
மருத்துவர் அறைக்கு சென்றனர் தருண் அப்பாவும், பிரதீப்பும். அவரு மோசமான நிலையை கடந்து வந்து விட்டார். காயம் என்னவோ பலமாக தான் உள்ளது. நாங்கள் கூட அவர் நிலையை பார்த்து, கோமாவில் சென்று விடுவாரோ என்று கூட எண்ணினோம்.
அவர் மனதை வலிமையுடன் வைத்திருக்கிறார். அவர் தேவையில்லாமல் எதையும் சிந்திக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சத்தான ஆகாரங்களை கொடுங்கள். இன்று ஒரு நாள் மட்டும் நீர் ஆகாரங்கள் கொடுங்கள். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.ஒருவர் எப்பொழுதும் உடன் இருந்தே ஆக வேண்டும். இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கலாம். நிறைய அறிவுரை கூறினாள். அதை கேட்டு அவனது தந்தை மனமுடைந்து நின்றார். பிரதீப் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்.
அர்ஜூன் மருத்துவமனைக்குள் நுழைய, கவின் பதட்டமாக வராந்தாவில் நடை பயின்று கொண்டிருந்தான். அர்ஜூனை பார்த்து அவனிடம்,
அர்ச்சு ஸ்ரீயின் மருத்துவருக்கு அந்த நாதாரி பொம்பளை போன் செய்து ஆளை விட்டு மிரட்டுகிறாளாம். இருவரையும் சேர்க்க வேண்டாம். அவர்கள் எனக்கு வேண்டும் என்று கவின் கூறிக் கொண்டிருக்கும் போதே கண்கலங்க ஸ்ரீயின் மருத்துவர் அர்ச்சு முன் வந்து நின்றார்.
என்ன சொன்னீங்க? எந்த உதவியும் செய்வதாக சொன்னீங்களே? அர்ஜூன் அவரை பார்த்து முறைத்தான்.
மருத்துவ உதவியாவது செய்ய தான் நினைத்தேன். ஆனால் அது கூட என்னால் முடியவில்லை. எனக்கும் பெண்பிள்ளை இருக்கிறதே?
ரொம்ப நல்லது சீற்றத்துடன் கூறிய அர்ச்சு, சிந்தித்தவாறு இருக்க, கவின் அவனை அவசரப்படுத்தினான். எந்நேரமும் அவள் ஆட்கள் இங்கு வரலாம்.சீக்கிரம் செல்லணும் அர்ச்சு.
நிவாஸை தருண் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றலாம். அவன் எப்படி இருக்கிறான்? கவினிடம் கேட்க,அவன் இரு நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். தலை,கை, வயிற்றில் அதிக அடிதான் என்றார் மருத்துவர் அவனது சீற்றத்தில் பயந்தவாறு.
போதும் சார். நீங்க அவனை மாற்ற உங்க மருத்துவமனையில் உள்ள விதிமுறைகளை பாலோ பண்ணுங்க. ஒரு கோப்பில் தயார் செய்து தாருங்கள். இவங்கள நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் அர்ஜூன்.
என்னை மன்னிச்சிடு தம்பி.
எனக்கு உங்களது மன்னிப்பு தேவையில்லை கராரான குரலில் கூறி விட்டு, கவினிடம் ஸ்ரீயை என் வீட்டிற்கு அழைத்து சென்று தாரியை அவளை பார்த்துக் கொள்ள சொல்லலாம். பின் நிவாஸை அந்த மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவமனை டீனை பார்க்கணும்.
எந்த மருத்துவமனை? அவர் கேட்டார்.
ஆருத்ரா ஹாஸ்பிட்டல் என்றான் அர்ஜூன்.
நான் அவரிடம் பேசுகிறேன் என்றார். தேவையில்லை என்னவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் அழுத்தமாக கூறி விட்டு, உங்களது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று எள்ளலாக கூறினான்.அவர் தலையை தொங்க விட்டுக் கொண்டே சென்றார்.
சற்று நேரத்தில் அனைத்தும் தயாராக கவின் ஓட்டுனர் இடத்திலும் , ஸ்ரீயும் நிவாஸும் அர்ச்சு மடியில் இருக்க, இதை பார்த்து கண்ணில் நீருடன் மூவரையும் பார்த்தவாறு காரை புயலென எடுத்தான் கவின்.காரில் செல்லும் போதே ஆருத்ராவை அவளது மருத்துவமனைக்கு வரச் சொன்னான் அர்ஜூன்.கவின் அர்ச்சுவை கவனித்துக் கொண்டே காரை செலுத்தினான்.
முதலில் வீட்டிற்கு வந்தனர். நிவாஸை காரிலே விட்டார்கள். ஸ்ரீயை கையில் அள்ளிக் கொண்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வந்த அர்ச்சுவை தாரிகா இதயா பார்த்து விட்டு, ஸ்ரீயை பார்த்து அழுதவாறு நின்றனர். அவனது வீட்டின் ஓர் அறையை உதைத்தவுடன் திறந்தது அவ்வறை. அதில் ஸ்ரீயை கட்டிலில் கிடத்தி விட்டு வெளியே வந்தான்.
அர்ஜூன் கடுப்புடன்,வாயை மூடுங்கள் கத்தி விட்டு அவளை பார்த்துக் கொள் தாரி. நீ வெளியே வர வேண்டாம்.இதயா நீ வா..மருத்துவமனைக்கு என்றான்.
அண்ணா..நிவி? என்று தாரிகா கேட்டாள்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கே பாதுகாப்பு இல்லை அவன் பேச, தாரிகா அவனை கட்டிக் கொண்டு, ரொம்ப பயமா இருக்குடா.
கவின் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ அர்ஜூனை விடாது, நீ அவளை தவறாக நினைக்கவில்லையே? கேட்டாள்.
அமைதியாக இருந்த அர்ஜூன் கையை சுவற்றில் குத்த முனைய, பயத்தில் அவனை விட்டு விலகினாள் தாரிகா. கவின் அவனது கைகளை பிடித்து தடுத்து, வேண்டாம்டா..அணைத்துக் கொண்டான்.
அர்ஜூன் கதறிக் கொண்டு,இப்படி நடந்து விட்டதே! அவள் விசயத்தில் என்ன செய்வது? அவளை சமாதானப்படுத்த முடியாதுடா. நாம் தாமதமாக வந்து விட்டோம்டா என்று மீண்டும் அழுதான்.
கவின் கண்ணிலும் கண்ணீர் வழிந்தோட, அதை பார்த்த தாரிகாவும் அவர்களை கட்டிக் கொண்டு அழுது கொண்டே கவின் கையை பிடித்தாள். இதயா அவர்களை பார்த்தவாறு கண்ணீருடன் நின்றாள்.
நினைவு வந்த அர்ஜூனோ, நிவி என்று காரில் ஏறினான். மற்றவர்களும் ஏற, நிவாஸை பார்த்து இதயா திகைத்தாள். அவன் தலை, கைகளில் கட்டுடன் நினைவிழந்து மயக்கத்தில் இருந்தான்.
தாரிகா அவனை எட்டி பார்த்து கண்ணீருடன் உள்ளே செல்ல, அர்ஜூன் அவன் வீட்டின் கதவில் நம்பர் லாக் செய்தான். மீண்டும் ஆருத்ராவிற்கு போன் செய்து பேசினான். கல்லூரிக்கு சென்றவளோ மீண்டும் அர்ஜூன் சொன்னதற்காக மருத்துவமனை வந்து, பிரச்சனை யாருக்கு என்று ஆர்வமுடன் காத்திருந்தாள். தன்னவன் என்று அறியாது அர்ஜூன் கூறிய அனைத்தையும் அவளது அப்பாவிடம் கூறி ஏற்பாடு செய்து விட்டு, அங்கேயே இருந்தாள்.
அர்ஜூன் கார் வந்தது மருத்துவமனைக்கு. ஆருத்ரா வெளியே ஸ்ட்ரெட்சரோடு ஆட்களும் இருக்க, அர்ஜூன் தூக்கி வந்த அவனை பார்த்து திகைத்து இமைக்க மறைந்து சிலை போல் நின்றாள். அவளை மீறியும் ஒரு சொட்டு நீர் உருண்டோட, நிவாசை அதில் கிடத்தியவன் சிலை போல் நின்றிருந்த ஆருத்ராவை அழைத்தான். அவளிடம் பதிலேதும் இல்லாமல் இருக்க, அர்ஜூன் அவள் முன் வந்து அவளை உலுக்க, அவளை மீறி வடிந்த கண்ணீரை பார்த்து புரியாமல் அர்ஜூன் அவளை பார்த்து மீண்டும் ஆரு.. கத்தினான்.
அவள் நிலையுணர்ந்தவலாய் அவளது கண்ணீரை தொட்டு பார்த்து விட்டு அர்ஜூனை கவனிக்க, அவள் ஆட்களை பார்த்தாள். அவளால் பேச முடியவில்லை. அவர்கள் தருண் அறையை தாண்டி நிவாஸை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த தருண் அப்பா, பிரதீப், ஆதேஷ், துகிரா அவர்களை விழி அகல பார்த்தனர்.
இவனுக்கு என்ன ஆச்சு? ஆதேஷ் பதட்டமாக, பிரதீப் அவனிடம் இவன் ஸ்ரீயின்..இழுத்தான்.
அவளுடைய தம்பி தான்.
ஆம்..தம்பி தான். கொஞ்ச நேரத்திற்கு முன் தான் அர்ஜூனிடம், ஸ்ரீயை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அவனை திட்டி விட்டு சென்றான்.அதற்குள் என்ன நடந்திருக்கும்?
வாங்க சென்று பார்ப்போம் என்று அவர்கள் நகர, இதயா மிகவும் வாட்டத்துடன் அங்கே வந்தாள். அவளிடம் கேட்டாள். அவள் பதில் கூறாமல் அங்கிருந்த சேரில் காலை தூக்கி வைத்துக் கொண்டு முகத்தை அதில் புதைத்தவாறு இருந்தாள்.
துகிரா அவளருகே வந்து, தருண் விழித்ததை கூற, நிமிர்ந்து பார்த்து விட்டு, வேகமாக எழுந்து வெளியே சென்றாள்.
என்ன செய்கிறாய்? அவன் இங்கே இருக்கிறான் துகிரா கூற, மீண்டும் அவளருகே வந்து அவள் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி வெளியே சென்று முகத்தை கழுவி சரி செய்து கொண்டு வந்தாள்.அவளை வித்தியாசமாக பார்த்தனர்.