அத்தியாயம் 113

அனைவரும் கிளம்பிய பின் நந்துவிடமிருந்து அர்ஜூனுக்கு போன் வந்தது. அர்ஜூன் நாங்க வந்துட்டோம். ஆனால் அர்ஜூன் அவர் இரவு வெளியே கிளம்புகிறார். பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து விட்டார். இருந்தாலும் ரொம்ப பயமா இருக்குடா அவன் புலம்ப, நந்து அறை வாசலில் நின்று அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார் அர்ஜூன் மாமா சுந்தரம்.

அவன் அவரை கவனிக்காமல் அர்ஜூனிடம் புலம்ப, தம்பி கொஞ்சம் பேசலாமா? என்றார் கணீர் குரலில்.

சார்,..பேசலாம் என்று அவரை பார்த்தான். அவர் அவனிடம் வந்து அவன் போனை வாங்கி, அர்ஜூன்..நீ ஓய்வெடு.

சாகச வேலையெல்லாம் செஞ்சு களைச்சு போயிருப்ப..என்றார்.

மாமா, பொண்ணுங்க மாட்டி இருந்தாங்க. அதான் உதவ போனேன். நந்து அம்மா அவர்கள் முன் வந்து நின்றார்.

ஏய்..பூல்..அதுக்கு ஓநாய், சிங்கத்துடனா சண்டை போடுவ?

என்ன சிங்கமா? என்று பதறிய நந்து, அவர் பேசிக் கொண்டிருந்த போனை பிடுங்கி, அர்ஜூன்..உனக்கு ஒன்றுமில்லைல்ல. ஓநாய், சிங்கமா? என்னடா ஆச்சு? எதுக்குடா எல்லார் பிரச்சனையிலும் முன்னாடி நிக்கிற என்று அர்ஜூனை பேச விடாமல் பேசிக் கொண்டே சென்றான்.

நந்து..என்று அவன் அம்மா மெதுவாக சட்டையை பிடித்து இழுத்தார். சுந்தரம் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நந்துவை முறைத்துக் கொண்டிருந்தார்.

அம்மா..சும்மா இருங்க. கொஞ்சமாவது அறிவிருக்கா அவனுக்கு? அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்று..அவன் அம்மாவை பார்த்தான். அவர் புன்னகை கலந்த டென்சனில் சுந்தரத்தை பார்த்தார்.

பயந்தவாறு சார்..என்று இந்தாங்க என்று போனை நீட்டினான் நந்து. வாங்கிய அவர்..அர்ஜூன் நாளைக்கு பேசலாம். உன்னோட ப்ரெண்டு பாதுகாப்பா இருப்பான். நீ நிம்மதியா ஓய்வெடு என்று அவரும் அர்ஜூனை பேச விடாமல் போனை வைத்தார். அர்ஜூன் படுக்கையில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டே சாய்ந்தான்.

போனை வைத்த கமிஷ்னர் சுந்தரம். டைனிங் டேபிளில் அமர்ந்து அவர்களை அழைத்தார். இருவரும் அவர் முன் நின்றனர். இருவரையும் கூர்மையாக பார்த்து விட்டு, அது என்ன? என்னோட மருமகனை இவ்வளவு உரிமையா திட்டுற?

சாரி சார் என்றான் அவன்.

சரி..உட்காருங்க என்று பிளாஸ்க்கில் இருந்த டீயை ஊற்றி அவர் எடுத்துக் கொண்டு அவர்களுக்கும் ஊற்றி கொடுத்தார். நந்து அவன் வாங்கியதை கீழே வைத்து விட்டு, அவன் அம்மாவிடம் வாங்கி கொதிக்கும் டீயை ஊதிக் கொண்டிருந்தான். அவர் அவனை வித்தியாசமாக பார்த்தார். சூடு குறைந்த பின் அம்மாவிடம் கொடுத்து விட்டு அவன் எடுத்துக் கொண்டான்.

மூவரும் குடித்துக் கொண்டிருக்க, இருவரையும் பார்த்தவாரே பேச தொடங்கினார். மூன்றாவது மாடிக்கு யாருமே போகக்கூடாது. இரண்டாவது மாடியில் இடது பக்கம் செல்லக்கூடாது. வலதுபக்க அறையை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்க கீழே இருக்கலாம். ஏதாவது பிரச்சனை என்றால் இந்த ஸ்விச்சை பயன்படுத்துங்கள். எனக்கு அலார்ட் காட்டும் என்று நந்து அம்மாவை பார்த்தார். அவரும் பார்க்க, போன் வச்சிருக்கீங்களா? கேட்டார்.

நந்து அம்மா போனை மேலே எடுத்து வைக்க, அதை எடுத்துக் கொண்ட சுந்தரம்..இந்த போன் பயன்படுத்துங்க என்று புது டச் லார்ஜ் மாடல் கொடுத்தார்.

வேண்டாம். எனக்கு என்னுடையதே போதும் என்று அவன் அம்மா கையை நீட்டி கேட்டார்.

நான் கிஃப்ட் தரலை. இது உங்க பாதுகாப்பிற்காக என்று எழுந்து வந்து போனில் அவர் நம்பரை காட்டி விட்டு, அவர் நான்கு எண்ணை சொன்னார். தம்பி..நீங்களும் நோட் பண்ணி வச்சுக்கோங்க. போன் பத்திரம். பெரிய ஆபத்து என்றால் அந்த ஸ்விச்சை அழுத்தி விட்டு, இந்த நம்பரை உங்க போன் ஸ்கீரினில் போடுங்க. நான் உடனே வந்துடுவேன் என்றார்.

சார், நான் ஒன்று கேட்கலாமா? அவன் அம்மா கேட்டார்.

சமையலறை பயன்படுத்தலாமா? கேட்டார்.

என்னடா இவனுக? அர்ஜூன் பேசினானா? இல்லையா?

பேசினான் சார். ஆனால் நீங்க அங்க போகக்கூடாது, இங்க போகக்கூடதுன்னு சொன்னீங்க. சமையலறைக்கு போகலாமான்னு சந்தேகம் வந்தது நந்து அம்மா கேட்க அவர் சிரித்தார்.

இன்னொரு விசயம் சார், எனக்கு தனி அறையெல்லாம் வேண்டாம். நான் என் மகனுடனே இருந்து கொள்கிறேன் என்றார்.

உங்கள் விருப்பம் என்று அவர் சொல்லி விட்டு, தினமும் சமையல் எனக்கும் சேர்த்து செய்வீங்கல்ல. அதுல எந்த சந்தேகமும் இல்லையே? என்று அவர் புன்னகையுடன் கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டார்.

நோ..பிராபிளம் சார். கண்டிப்பா செஞ்சிருவேன் என்றார் அவன் அம்மா.

அம்மா, அவர் உங்களை கேலி செய்கிறார் என்றான் நந்து.

கேலியா பண்றீங்க சார்? என்று வீறு கொண்டு நந்து அம்மா எழ, அவருக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. நந்து அவரை முறைத்தான்.

சார் நானும் வாரம் மூன்று நாட்கள் தான் வீட்டிற்கு வருவேன் என்றான் நந்து.

நோ..நோ..இது ரொம்ப டேஞ்சர். நீ எங்கேயும் போகக்கூடாது என்றார்.

போகக்கூடாதா? கம்பெனி வேலை வேற இருக்கும்?

இந்த வயசுல என்ன வேலை? நான் கூட உன் பிரபசரிடம் நோட்ஸ் வாங்கித் தாரேன். வீட்ல இருந்தே படி. முடியாது நான் போகணும் என்றான்.

சொன்னா கேட்க முடியாதா? விசயம் எவ்வளவு சீரியஸ்ன்னு தெரியுமா உனக்கு? சத்தம் போட்டார்.

சார்..ப்ளீஸ். காலேஜ் கூட போகலை. கம்பெனிக்கு போகணும் இல்லைன்னா மேகாவை வேற யாருக்காவது அவர் அப்பா கல்யாணம் பண்ணி வச்சிருவாரு கண்கலங்க கூறினார்.

“சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பது போல் வெகுளியாக இருந்த நந்து அம்மா கோபமாக, நீங்க உதவுவீங்கன்னு அர்ஜூன் சொன்னதாத தான் வந்தோம். இதுக்கு கூட என் பையனை வெளிய விட மாட்டீங்களா சார்? என்று சத்தமிட்டார்.

நந்து அதிர்ந்து, அம்மா உட்காருங்க என்றான்.

நான் பார்த்துக்கலாம். வெளியே சென்றால் அவன் உங்கள் மகனை விட மாட்டான். உங்க பையன் செத்து பிணமாக தான் வரணும் என்று அவர் சொல்லவும், அவன் அம்மா அழுதார். நந்து சுந்தரத்தை முறைத்து விட்டு,

அவங்க என்னோட அம்மா, நீங்க இப்படி பேசுறீங்க? அழுறாங்க. நீங்க  என்னோட அம்மாவை அழ வச்சுட்டீங்க என்று கமிஷ்னர் என்பதை மறந்து கத்தினான்.

ஹேய்..நான் உனக்காக தான் சொன்னேன் என்றார் அவர். ஆனால் இருவர் பாசமும் அவரை நெகிழ வைத்தது.

கமிஷ்னர் நந்து அம்மா முன் வந்து, என்னை மன்னிச்சிருங்க. நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று குரல் தேய சொல்ல..இருவரும் அதிர்ந்து அவரை பார்த்தனர்.

சார், இருக்கட்டும். ஒன்றுமில்லை என்று அவன் அம்மா கண்ணை துடைத்தார்.

யார் அந்த பொண்ணு? கல்யாணமா? என்று சாதாரணமாக பேசினார்.

நந்து சொல்ல, அவரை எனக்கு நன்றாக தெரியும். நீங்க வீட்ல இருந்தே பண்ற மாதிரி செய்யலாம்.

சார், அவள்?

அந்த பொண்ணை பார்த்தே ஆகணுமா? கமிஷ்னர் கேட்க, அவன் அம்மாவை பார்த்தான். அந்த பொண்ணை வர வைக்கலாமா சார்? அவன் அம்மா கேட்டார்.

வந்தா வீட்ல இருந்து வெளிய எங்கேயும் போக முடியாது. அந்த பொண்ணு வர ஒத்துக்கிட்டா. நான் வேணும்மா அந்த பொண்ணோட அப்பாவிடம் பேசுகிறேன் என்றார்.

ஓ.கே சார் என்ற நந்து உடனே அழைத்து மேகாவிடம் பேச, அவளும் ஒத்துக் கொண்டாள். உயிருக்கு ஆபத்து என்றும் சொல்லி தான் இருப்பான்.

அந்த பொண்ணு ஒத்துகிட்டாளா? ஆச்சர்யமாக அவர் கேட்டார்.

சார், நீங்க அவர் அப்பாவிடம் பேசிட்டு சொல்லுங்க என்றான் நந்து. சமையலுக்கு தேவையான சாமான் முழுவதும் அங்க இருக்கு எடுத்து வச்சுக்கோங்க என்று எழுந்தார்.

சார், நீங்களா வாங்குனீங்க?

ஆம்.

உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

இல்லை. லிஸ்ட்டு என்னோட தங்கை அனுப்பினா. கவனமா இருங்க. இரவு சாப்பிட தான் வருவேன். அந்த பொண்ணு வந்தா உடனே உள்ள வந்துருங்க என்று அவர் சென்றார்.

நல்ல மனுசனா தான்டா இருக்கார். நான் கூட பயந்தேன்.

அவரை பற்றி தெரிந்து தான் நான் சரின்னு சொன்னது. ஆனால் என்ன சிரிக்கலாம் செய்கிறார் என்றான்.

சிரித்தால் என்ன? அவர் மனுசன் தான?

அம்மா..அவரை டெவில்ன்னு சொல்லுவாங்க. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்.. என்றான்.

மனைவி இல்லையாடா?

பொண்ணே இருக்கா. யாருமே உடன் இல்லை. இவர் வேலை வேலைன்னு போனா. யார் இருப்பா? என்று நந்து சொல்ல.

ஏன்டா, அப்படி சொல்ற? குடும்பத்துக்காக தானடா வேலையே பார்க்கிறார். நீ சொல்வதை வைத்து பார்த்தால் அவர் வேலையில் ஆபத்தும் இருக்கும் போல. அதனால் கூட குடும்பத்தை விட்டு விலகி வேலையில் கவனத்தை செலுத்தி இருக்கலாம் என்றார் அவன் அம்மா.

இருக்கலாம் என்று நந்து சிந்தித்தான்.

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்த சுந்தரம். இதை அவள் புரிந்து வைத்திருந்தால் நாங்கள் மூவருமே சந்தோசமாக இருந்திருக்கலாம் என்று கண்ணீர் விட்டார்.

படுத்திருந்த அர்ஜூன் எழுந்து சட்டையை கழற்றி விட்டு அவனுக்கு மருந்தை எடுத்து படுக்கையில் அமர்ந்தான். அவனுக்கு மார்பு, தொடை, கை அடிபட்ட இடம் வலிக்க.. ஷார்ட்ஸ் அணிந்து தொடைக்கு மருந்திட்டி கையை பார்த்தான். கதவு தட்டும் ஓசை கேட்க, திறந்து தான் இருக்கு உள்ளே வாங்க என்றான்.

ஸ்ரீ தயங்கிக் கொண்டே உள்ளே வந்தாள். அவளை பார்த்த அர்ஜூன், என்னோட அறைக்கு வந்துருக்கீங்க? என்ன விசயம்? கேட்டான்.

அவனை பார்த்து அவள் திரும்பி நின்று, சாரி அர்ஜூன் என்றாள்.

எதுக்கு சாரி?

உன்னை கஷ்டப்படுத்துற மாதிரி நான் பேசியிருந்தா, நடந்திருந்தா சாரி.

எப்ப நடந்ததை சொல்ற? அர்ஜூன் கேட்டான்.

ஏற்கனவே நடந்ததையும், இப்ப நடந்ததையும் என்றான்.

நான் மன்னிச்சுட்டேன். அதை என்ன யாருமில்லா பக்கம் திரும்பி நின்று பேசுற?

நீ இந்த கோலத்தில் இருந்தா நான் என்ன செய்வது?

என்னால் உன்னை டீஸ் பண்ண சுத்தமா முடியாது. செம்ம பெயினா இருக்கு என்று எழுந்து அவளிடம் வந்தான்.

பெயினா இருக்கா? என்று திரும்பினாள். அர்ஜூன் மிக அருகில் இருக்க..ஸ்ரீ இதயம் வேகமாக துடித்தது. பின் தான் அவன் காயத்தை கவனித்தாள்.

இவ்வளவு காயத்துடனா எல்லாமே செஞ்சுகிட்டு இருக்க? சினத்துடன் கேட்டாள். அவன் புன்னகையுடன், ம்ம்..அப்புறம் நம்ம குடும்பத்தை நாம தான பார்க்கணும் என்று அவள் தோளில் கை போட்டான்.

அவன் கையை தட்டி விட்டு, வா..என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.

மெதுவாம்மா..நான் தான் சொல்றேன்ல. ரொம்ப பெயினா இருக்கு என்று அவளுடன் படுக்கையில் அமர்ந்தான். அவன் கையில் மருந்து போட்டிருப்பதை பார்த்து..லூசாடா நீ? போட்டிருக்கும் மருந்து மேலே போட்டிருக்க.

ஸ்ரீ..என்னால முடியலை. ரொம்ப சோர்வா இருக்கு. அதான் அப்படியே போட்டேன்.

அவள் திட்டிக் கொண்டு, முதல்ல படு. நான் போட்டு விடுறேன் என்று அவனிடம் வர..அர்ஜூன் அவள பக்கத்துல விட்ட உனக்கு கஷ்டம்டா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட அர்ஜூன்.

நீ போ..அனுவை பார்த்துக்கோ என்றான்.

நீ தான சொன்ன சோர்வா இருக்குன்னு?

பரவாயில்லை நீ போ.

வாயை, கண்ணை மூடி படுத்துக்கோ.

வாயை மூடிக்கிறேன். கண்ணை மூட மாட்டேன் என்றான்.

ஆன்ட்டியவாது கூப்பிட்டிருக்கலாம்ல?

அவங்க கேட்டாங்க. நான் ஏற்கனவே போட்டுட்டேன்னு சொன்னேன். அதனால அவங்களும் ஏதும் சொல்லலை என்றான்.

தண்ணீர் எடுத்து வந்து காயத்தை ஊதி ஊதி துடைத்து மருந்து போட்டாள். அர்ஜூன் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். ஸ்ரீ அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டே செய்து முடித்து விட்டு, அமைதியாக அமர்ந்தாள்.

நீ போகலையா?

நீ தூங்கு போறேன். இல்ல யாராவது தொந்தரவு செய்ய வருவாங்க இல்ல..போன் வந்துரும் என்று அவள் சொல்லி கூட முடிக்கலை..அழைப்பு வந்தது.

தூங்குடா..என்று அர்ஜூன் போனை எடுத்து பார்த்து விட்டு அர்ஜூனை பார்த்தாள்.

யாரு?

போனை நீட்டினாள். சுந்தரம் போன் செய்திருந்தார்.

மாமா, எல்லாமே ஓ.கே தான? அர்ஜூன் கேட்டான்.

இல்லடா. நான் ஓ.கே இல்லை என்றார்.

மாமா?

அவங்கள ஊருல்ல வச்சு நீ பார்த்துக்கிறியா? பாவமாக கேட்டார்.

அவங்க எதுவும் சொன்னாங்களா? நந்து தேவையில்லாமல் ஏதும் பேச மாட்டானே?

அதில்லைடா. அவங்க பாசமழைய பார்த்தால் கடுப்பா இருக்குடா..என்றார் சத்தமாக. அர்ஜூன் விழுந்து விழுந்து சிரித்தான்.

அர்ஜூன்..ஸ்ரீ கேட்க?

மாமா..கொஞ்ச நேரத்துக்கே சொல்றீங்களே? இனி தான் பெரிய படமே ஓட்டுவாங்க. நானெல்லாம் ஒரு தடவை தான் அவங்க வீட்டுக்கே போனேன். அப்புறம் போனாலும் வெளியிருந்தே கிளம்பிடுவேன். அப்படி அன்பு மழைய பொழிவாங்க. அதுவும் நான் தனியா கஷ்டப்பட்ட நேரம் வேறையா? நந்துவ விட அவங்க அம்மா பயங்கர கேரியிங் பெர்சன். வீட்டுக்கு போன என்னை கவனிக்காம அவங்க பையனுக்கு ஊட்டி விட்டு கிட்டு இருக்காங்க. எனக்கெல்லாம் செம்ம வயித்தெரிச்சல்..என்றான் அர்ஜூன் காரமாக.

அவரும் சிரித்தார். ஆனால் டா அந்த பையனோட அம்மா ஒண்ணு சொன்னாங்க. ரொம்ப கஷ்டமா போச்சு.

கோபப்பட்டாங்களா?

இல்லடா. அதை விட என் நிலையை சரியா யூகிக்கிறாங்க. ஆனால் உன்னோட அத்தை ஒரே ஒரு தடவை அந்த மாதிரி யோசித்து இருந்தா. நாங்க பிரிஞ்சிருக்க மாட்டோம். என் பொண்ணும் கஷ்டப்பட்டிருக்க மாட்டா.

அர்ஜூன் முகம் சீரியசாக மாறியது.

என்ன பேசுனாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா மாமா? கேட்டான்.

சுந்தரமும் நந்து அம்மா அவனிடம் பேசியதை சொன்னார்.

இவங்க நல்லா தான் யூகிச்சு இருக்காங்க. ஆனால் மாமா எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்களே? அத்தைக்கு நீங்க பக்கத்துல இருக்கணுன்னு நினைச்சிருப்பாங்க. நீங்க அவங்க பாதுகாப்ப பார்த்தீங்க..அவங்க மனசு, ஆசைய விட்டுட்டீங்க மாமா. அதனால் தான் அவங்க வேறொருவரை தேடிட்டாங்க.

சரி தான் அர்ஜூன். என்னுடைய வீக் பாயிண்டே குடும்பம் மட்டும் தானே? மற்றபடி எதுக்கும் பயப்பட மாட்டேன். ஆனால் அர்ஜூன் அவங்க இருவரும் ஏற்கனவே தெரியும்.

மாமா..என்றான்.

ஆமாடா. கல்யாணத்தோட தெரிஞ்சிருந்தா நானே விலகியிருந்திருப்பேன். ஆனால் தப்பான பழக்கம் இல்லை. அவளோட முதல் காதல் தான் அவன். ஆனால் என்னுடன் வாழாமல் சொல்லி இருந்திருந்தால் நானே ஏதாவது அப்பவே செய்திருப்பேன். ஆனால் நான் ஒரு நாள் வேலை விட்டு நடுஇரவில் அவளிடம் சொல்லாமல் வந்ததால் எனக்கு தெரிந்து விட்டது. காரு பிறந்து ஆறாவது பிறந்தநாளில் தான் நான் அறிந்தது. காரு என்னோட பொண்ணு தான். அதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை. நான் அவர்களை எச்சரித்ததால் பயந்து தள்ளி இருந்தான்.

ஆனால் அர்ஜூன் உன் அத்தையை என்னால் சமாளிக்க முடியவில்லை. யாரிடமும் சொல்ல முடியாமல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவளை அடித்து விட்டேன். அவள் பாப்பாவுடன் சென்று விட்டாள். எவ்வளவோ பேசியும் என்னால் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை.

பாப்பாவுக்காகவாது ஒழுங்கா இருப்பான்னு பார்த்தேன். இருவருக்கும் சண்டை நீள..விவகாரத்து பேச்சு வந்தது. காருவுக்காக தான் நான் அவளை இன்னும் விவகாரத்து செய்யவில்லை. அவள் அம்மா செய்யும் கண்றாவி வேலையெல்லாம் பார்த்து அவள் வளர வேண்டாம் என்று நினைத்தேன். அதனால் தான் ஹாஸ்ட்டல்ல சேர்த்தோம். அவள் தப்பானவளில்லாமல் நான் இரவு வேறொருத்தியிடம் இருக்கிறேன் என்று அநியாயமாக என் மீது பழியை போட்டு என் பிள்ளை அருகே கூட செல்லவிடாமல் செய்து விட்டாள்.

அவள் மட்டுமாவது பிள்ளையுடன் கான்டெக்ட்ல இருக்கட்டும்ன்னு தான் பேச சொல்லி நானே அனுப்பி வைத்தேன் என்று அழுத அவர்..அவள் அதுக்கு என்னிடம் பணம் வாங்குவா அர்ஜூன். அவளுக்கு பாப்பாவுடன் பேச கூட விருப்பமில்லை அர்ஜூன் என்று மேலும் அழுது கொண்டு..பாப்பாவுக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவான்னு தான் அவளிடம் அதையும் சொல்லவில்லை என்று தேம்பினார்.

மாமா..விடுங்க. அழாதீங்க. காருவை நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம் என்ற அர்ஜூன் வெளியே பார்த்து, ஸ்ரீ கௌதம் சார் மாதிரி தெரியுதுல்ல. இவ்வளவு வேகமாக எங்க போறார்? என்று அர்ஜூன் எழ..இரு நான் பார்க்கிறேன் என்று ஸ்ரீ வெளியே வந்து, சார் என்று அழைத்தால் கௌதம் கண்ணீருடன் அவளை பார்த்து விட்டு ஓடினான்.

அர்ஜூன்..என்று ஸ்ரீ பதட்டமாக சார் அழுது கொண்டே ஓடுறாருடா.

அழுறாரா? காருவும் அவரும் பேசுவாங்கன்னு தான் என்ற அர்ஜூன்..காரு அவரை அடிச்சிட்டாளோ? என்று அர்ஜூன் எழ, ஒழுங்கா படு. நான் அவரை பார்த்து பேசிட்டு வாரேன். மருந்து போட்டாச்சு. நான் வரும் போது முழிச்சிருந்த அவ்வளவு தான் என்று விரலை நீட்டினாள்.

அவள் விரலை பிடித்த அர்ஜூன்..அவரிடம் உனக்கென்ன பேச்சு? அர்ஜூன் கேட்க, சார், ரொம்ப நல்ல பையன். உனக்கு தெரியாதா? அவர் தவறானவரா இருந்தா நம்ம வீட்டுக்குள்ள விட்ருவோமா? என்ன? ஸ்ரீ கேட்டாள்.

ஹேய்…நீ இப்ப என்ன சொன்ன? நம்ம வீடா? என்று அவளை இழுத்தான்.

லூசு அர்ஜூன். விரலை உடைச்சிராத டா..என்று அவள் நகர, கேட்டுக் கொண்டிருந்த சுந்தரம் புன்னகையுடன், உனக்கு ஓ.கே சொல்லிருவா போலடா?

சில பேரு மனசுக்குள்ள எல்லாத்தையும் வச்சுக்கிட்டு வெளிய ஒரு மாதிரி இருப்பாங்க மாமா என்றான் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே.

சரி, நமக்காக வந்த புள்ளைடா அவரு. முதல்ல என்னன்னு பாருங்க என்றார். அர்ஜூன் நீ தூங்கு. நான் அவரிடம் பேசிட்டு வந்து சொல்றேன் என்று ஸ்ரீ வெளியே ஓடினாள்.

மாமா, பார்த்தீங்கள்ள அவ மனசுல இருக்குறது வெளிய வருது என்றான்.

ம்ம்.. உன்னோட பேச்சுக்கு சரியா கவுண்டர் கொடுக்குறா பொண்ணு என்றார். அவருக்கு போன் வர..இப்ப தான வீட்ல இருந்து வந்தேன். அதுக்குள்ள என்ன பிரச்சனை? அர்ஜூன் உன்னோட ப்ரெண்டு அதுக்குள்ள கால் பண்ணுறான்.

இதுக்கு தான நான் அவங்கள உங்ககிட்ட விட்டதே? என்று சொன்னான்.

என்ன அர்ஜூன்?

ஒன்றுமில்லை மாமா. நீங்க பேசுங்க? இல்லை அவன் உங்களை தேடி வந்து விடாமல்..

தேடி வந்திருவானா?

மாமா முதல்ல பேசுங்க. வந்தாலும் வந்துருவான். நான் வைக்கிறேன் என்று போனை அணைத்து விட்டு படுத்தான்.

அர்ஜூனுக்கு நந்துவிடம் போன் வந்தது. அவன் கான்ப்ரென்சல் போட்டான். அவர் இன்னும் யோசனையுடன் போனை பார்க்க ரிங் நின்றது. அவன் மீண்டும் போன் செய்தான். அவர் போனை பார்த்துக் கொண்டிருக்க அர்ஜூன் போனை எடுத்து என்னடா? என்று கேட்ட நேரம் போனை எடுத்தார்.

டேய் அர்ஜூன், உன்னோட மாமாவை பத்தி பெருமையா பேசுன? ஒரு போனை கூட எடுக்க மாட்டிங்கிறார். என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார்? கெல்ப் பண்றேன்னு போனை கூட எடுக்கலை. பாரு அவர் எடுக்கும் வரை விட மாட்டேன் என்று கத்தினான் நந்து.

எதுக்குடா கத்துற? காது வலிக்குது? அர்ஜூன் சொல்ல..நாங்க எங்க வீட்டுக்கே போறோம்.

அவருக்கு பொண்டாட்டி மாதிரி பேசுற?

பொண்டாட்டியா? லூசு மாதிரி பேசாத அர்ஜூன்.

லூசா? நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். இன்று எல்லாரும் என்னை லூசுன்னே திட்டுறீங்க?

நீ தான அப்படி பேசுன? அவருக்கு சாப்பாடு ஆக்கி போட்டு அவரை பார்த்துக்க நான் ஒன்றும் அவர் பொண்டாட்டி இல்லை.

சாப்பாடு செய்து கொடுத்தால் பொண்டாட்டின்னா சொல்லணும்? அர்ஜூன் கேட்க..இல்லையே?

அப்புறம் எதுக்கு அப்படி சொன்ன?

அதுவா வந்துருச்சு..

பார்த்துடா. அம்மாவும் அந்த வேலைய தான் பார்த்துக்கப் போறாங்க அர்ஜூன் சட்டென சொல்ல, சுந்தரம் அதிர்ந்தார்.

அர்ஜூன்? என்ன பேசுற? பல்லை உடைச்சிருவேன் என்றான் சீற்றமுடன் நந்து.

அர்ஜூன்..நிறுத்துறியா? உன் காமெடிக்கு அளவில்லாமல் போகுது என்றார் சுந்தரமும். இருவருமே அவரை எதிர்பார்க்கவில்லை.

டேய்..அர்ஜூன் போனை கட் பண்ணு.

எனக்கு பேர் இருக்கு என்ற நந்து, மேகா வீட்டிக்கு வந்துட்டா. நாங்க பாதுகாப்பா வீட்டுக்குள்ள இருக்கோம்ன்னு அம்மா சொல்ல சொன்னாங்க. சொல்லிட்டேன். வேரெதுக்கும் கால் பண்ணலை. நான் வச்சிடுறேன் என்று நந்து சொல்ல..

அர்ஜூன், அவனிடம் சாரி சொல்லு என்றார் சுந்தரம்.

மாமா. சும்மா விளையாட்டுக்கு பேசியது. அவன் சீரியசா எடுக்கிறான்.

கேளுன்னு சொன்னேன் என்று சுந்தரம் அதட்டினார்.

சாரிடா என்று அர்ஜூன் போனை பட்டென வைத்தான்.

சாரிப்பா, அவன் விளையாட்டுக்கு பேசிட்டான் என்றார் அவர். அர்ஜூன் சொன்னது போல் ஏதும் நடக்கக்கூடாது என சுந்தரம் பேசுவதை கூட கேளாமல் போனை வைத்து விட்டான் நந்து.

ஏதோ பேசிக்கிட்டாவது இருந்தான் அந்த பையன். அர்ஜூன் அதையும் கெடுத்திட்டானே புலம்பிக் கொண்டே ஆபிஸ் அறைக்குள் நுழைந்தார்.

போனை வைத்த அர்ஜூன் படுத்தான். இருந்த அயர்வில் சற்று நொடியிலே தூங்கி விட்டான்.

வெற்றி வீட்டிற்குள் வந்த ஜானு, புத்தகப்பையை சேரிலே போட்டு விட்டு கன்னத்தில் கையை வைத்தவாறு அமர்ந்தாள்.

அப்பத்தா, அவளிடம் வந்து என்னடி கன்னத்தில கையை வச்சிட்டு இருக்க?

அவரை பார்த்து விட்டு மீண்டும் அப்படியே அமர்ந்தாள். மீனாட்சி இருவரையும் பார்த்து விட்டு டீயை ஜானுவிடம் கொடுத்து விட்டு அவளருகே அமர்ந்து, என்னாச்சும்மா?

அம்மா..நீங்க சொன்னாதான் அண்ணா அமைதியா இருப்பான். அண்ணாவை ஸ்கூலுக்கு வர சொல்லி இருக்காங்க. என்னை பத்தி கம்பிளைண்ட் பண்ணப் போறாங்க. போச்சு..போச்சு..கத்த போறான் என்று ஜானு சொல்லிக் கொண்டிருக்க, பிரதீப் வெளியே வந்தான். அவனை பார்த்த ஜானு, அவள் அம்மாவை பார்த்தாள். இரு..பேசலாம் என்று கண்ணை காட்டினார்.

கண்ணா..பாப்பா ஸ்கூல்லுக்கு உன்னை வர சொல்லி இருக்காங்களாம் என்று பிரதீப்பிடம் சொல்ல, அவன் கோபமாக ஜானு பக்கம் திரும்பினான். ஆதேஷூம் அவன் அப்பாவும் வந்தனர்.

என்ன செஞ்ச?

அண்ணா..நான் எதுவும் செய்யவில்லை என்றாள் தலைகவிழ்ந்தவாறு.

அப்புறம் எதுக்கு தலைகுனியணும்? பிரதீப் சினத்துடன் கேட்டான்.

எதுக்குப்பா கத்துற?

அம்மா, ஏதாவது பிரச்சனை பண்ணிடுவா. அவங்க வரிசையா அடுக்குவாங்க. இது நல்லாவா இருக்கு? கத்தினான். அனைவரும் வெளியே வந்தனர்.

ஏன்டா கத்திகிட்டு இருக்க? வெற்றி கேட்க, தீனா மட்டும் அவனறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

அப்பா, ஜானு ஸ்கூல்ல இருந்து வர சொல்லி இருக்காங்க என்றான். இதற்கு முன் அவர்கள் வீட்டில் அவளும் பிரதீப்பும் தான். ஆனால் இப்ப எல்லாரும் இருக்க…அவள் கண்ணீர் வெளியே வந்தது.

அதுக்கு கத்துவியா?

இவ செய்யுற சேட்டையால யாராவது இவ மேல கம்பிளைண்ட் குடுத்திருவாங்க. எனக்கு தான் அவமானமா இருக்கு என்று அவன் பேசிக் கொண்டே செல்ல..அவளுக்கு மேலும் கஷ்டமாக அவள் அழுகை சத்தம் மெதுவாக வர, அங்கே நிற்க முடியாமல் அவளறைக்கு ஓடினாள்.

ஜானு..நில்லு என்று மீனாட்சியும் லலிதாவும் சத்தம் கொடுக்க வேகமாக படி ஏறினாள். அவள் விரல் பிரண்டு அதை பார்க்க ஓர் அடி பின் வைத்து கீழே விழ, ஜானும்மா என்று எல்லாரும் கத்தினார்கள்.

பிரதீப், துகிரா, ஆதேஷ், அவன் அப்பா ஓடி வந்தனர். பிரதீப்பும் ஆதேஷ் அப்பாவும் அவள் விழாமல் பிடித்தனர். அவள் கண்ணீர் பிரதீப் மீது விழ பதட்டமானான்.

ஆனால் ஜானு அவர்கள் கையை தட்டி விட்டு அவர்களை பார்க்க திராணியற்று படி இடித்து இரத்தம் வந்த விரலுடன் மீண்டும் ஏறினாள்.

ஏய் ராட்ச்சசி, ஸ்ட்டாச்சு..என்றான். ஜானு நின்றாள் ஒரே நிமிடம். அவனை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் ஏறி அவள் அறைக்கதவை பூட்டினாள்.

ஜானு, கதவ திறடா. அண்ணா கூப்பிடுறேன்ல பிரதீப் சத்தம் கொடுக்க, வெற்றியும் கதவை தட்டிக் கொண்டு உன்னோட ஸ்கூலுக்கு நான் வாரேன் . அண்ணா வேண்டாம் என்றார். அவள் அழும் சத்தம் மட்டும் கேட்டது.

ஜானு வெளிய வர்றீயா? கதவை உடைக்கணுமா? ஆதேஷூம் பேச, அவள் அழுது கொண்டே யாரும் என்னால அவமானப்பட வேண்டாம். கஷ்டப்பட வேண்டாம். நீங்க எல்லாரும் போங்க. உங்க வேலைய பாருங்க.

அதெல்லாம் நான் கோபத்துல பேசிட்டேன். வெளிய வாம்மா..பிரதீப் கெஞ்ச..துகிராவிற்கு கோபம் வந்தது.

எல்லாரும் அமைதியா இருங்க என்று துகிரா சத்தமிட்டு, ஜானு நீ செஞ்ச எதுவுமே தப்பில்லையா? உன்னோட அண்ணாவுக்கு நம்ம ஊர்ல எவ்வளவு மரியாதை இருக்குண்ணு உனக்கே தெரியும். ஸ்கூல்ல உன்னை பற்றி குறை சொல்றதை அவர் கையை கட்டி கொண்டு பார்க்க நல்லா இருக்கா உனக்கு? அவங்க உன்னை பத்தி பேசினாலும் காரணமென்று அவரை தான சொல்வாங்க.

அன்று அந்த பசங்க பிரச்சனையில அந்த பசங்க பேசியதை உங்க பிரின்சிபல் நம்பலை. நீ செய்ய மாட்டான்னு அவர் உன்னை பற்றி நல்லவிதமாக சொன்னாலும்..உன்னோட பிடிவாதம், சேட்டை எல்லாமே இருக்குன்னு தான சொன்னாங்க.

அவரை வைச்சு உன்னை அவங்க முடிவெடுக்கக் கூடாது. நீ நல்லபடியா நடந்து கொண்டால் எங்க மாணவி அப்படியில்லை என்று உன்னுடைய பழக்கத்தையும் சரியா சொல்லுவாங்க. முதல்ல அதுபோல் நடந்துக்கோ. இப்ப வெளிய வா..உன்னை அவரு ஏதும் சொல்ல மாட்டார். நாளைக்கு உன்னோட அப்பா பள்ளிக்கு வருவார்.

சரி அண்ணி. நான் ரெஸ்ட் எடுத்துட்டு வாரேன்.

ரெஸ்டா? நீயா? வெளிய வா..எல்லாரும் பதட்டமா இருக்காங்க. உனக்கு ரெஸ்ட் முக்கியமா? ஆதேஷ் திட்டினான்.

நீ உள்ளேயே இரு ஜானு..சாம்சங்க தோட்டத்துக்கு வந்துட்டான். நீயே பாரு. நைட் ஆகிடுச்சு. பாம்புல்லாம் வரும்..என்று துகிரா சொன்னாள்.

ஜானு சன்னல் வழியே எட்டி பார்த்தாள். நிஜமாகவே சாம்சங் அவன் வீட்டிலிருந்து வெளியே வந்திருந்தான்.

ஜானு கதவை திறந்து வெளியே ஓடினாள். ஆதேஷ், அவன் அப்பா, வெற்றி மற்றவர்கள் வெளியே வந்தனர். நீ எப்ப இதை பார்த்த? பிரதீப் கேட்டான்.

நான் தான் அவனை திறந்து விட்டேன். அவனோட கூண்டு லூசா இருந்தது. ஆது ரிமோட் கண்டரல் ஒன்று தயார் செய்து வைத்திருந்தான் என்று அவர்களும் ஜானுவிடம் வந்தனர்.

சாம்சங் அவனாக வரவில்லை என ஜானு பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டாள். அண்ணி, அவனை இந்த நேரத்தில் எதுக்கு திறந்து விட்டீங்க? கத்தினாள் ஜானு.

இதுக்கு தான். இப்ப பாரு எல்லாரும் அமைதியாகிட்டாங்க. உன்னோட கவனம் அவனிடம் வந்து விட்டது. அதனால் வெளிய வந்துட்ட.

அண்ணி அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தால்..

ஏதும் ஆகாது.

அது எப்படி உறுதியா சொன்னீங்க?

அம்மா..நான் இருக்கும் தைரியம் தான் என்றார் மறைவிலிருந்த தோட்டக்காரர். எனக்கு மேசேஜ் வந்தது. அதான் அவனுக்கு துணையா வந்தேன். என்னை இருட்டில் பார்த்தால் அவன் பயப்படுவான் என மறைந்து நின்றேன் என்றார் அவர்.

அண்ணி..அவனுக்கு அவர் இருந்தாலும் இரவு நேரம் பாதுகாப்பில்லை.

அப்படியா ஜானு? ஆனால் அவனை விட எங்களுக்கு நீ தான முக்கியம். காலை சாம்சங்கிற்காக மட்டும் நான் அந்த ஆபத்து பகுதிக்குள்ள போகலை. நீ தான் அழுத? அவனில்லாமல் இருக்க மாட்டேன்னு சொன்ன? துகிரா கேட்க, அவளை எல்லாரும் பெருமையுடன் பார்த்தனர்.

சாரி அண்ணி என்று சாம்சங்கை அவள் கையில் கொடுத்து விட்டு உள்ளே சென்றாள். இம்முறை அவள் ஓடும் முன்னே பிரதீப் அவளை பிடித்தான். எல்லாரும் உள்ள வாங்க என்று ஜானுவை அழைத்து சென்றான்.

உள்ளே வந்ததும் இனி நீ சம்பந்தபட்டதை அம்மாவும் அப்பாவும் பார்த்துப்பாங்க என்று ஆதேஷ் அப்பாவை பார்த்து, மாமா போகலாமா? கேட்டான்.

மாமா..நானும் வாரேன் என்றான் ஆதேஷ். ஜானுவை பார்த்துக் கொண்டே துகிராவிடம் சென்று “தேங்க்ஸ்” சொன்னான். எங்க இன்னொருக்க சொல்லுங்க என்றாள்.

அவன் சொல்ல வாயருகே கையை கத்திரிக்கோளாக்கி அவன் தேங்க்ஸை கட் செய்தாள். உங்க தேங்க்ஸ் காணாமல் போனது. நெருங்கிய உறவுகளுக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாது காட்டான் என சொல்ல கா..என்று நிறுத்தி அனைவரையும் பார்த்து விட்டு,…தேங்க்ஸ் பதிலா வேறேதாவது தந்தா நல்லா இருக்கும்.

ஓய்..எல்லாரும் இருக்கோம். என்ன பேசுற? ஆதேஷ் கேட்க, உனக்கு எல்லாமே தப்பா தான தெரியும். நான் என்னோட மாமாவிடம் எனக்கு சாப்பிட ஏதாவது வேணும்ன்னு கேட்டேன் என்றாள் துகிரா.

பிரதீப் ஆர்வமுடன் மாமான்னா சொன்ன?

அப்புறம் நீங்க எனக்கு சித்தப்பாவா? கேட்டாள். ஜானு சிரித்தாள். அனைவரும் பார்க்க அமைதியானாள்.

இங்க வந்ததிலிருந்து ஒரு முறை கூட இப்படி அழைத்ததில்லை. அதான்..அவன் பார்வை மாற, மாப்பிள்ள கிளம்பலாமா? ஏற்கனவே பசங்க போயிட்டாங்க. நாம தான் லேட் என்றார்.

இருங்கப்பா. அவன் மட்டும் மாமான்னு கூப்பிடுறான். அதான் நானும் கூப்பிட்டேன்னு ஆதேஷை கை காட்டினாள்.

இரு. உன்னை வந்து கவனிச்சுகிறோம் என்ற ஆதேஷ், மாமா கிளம்பலாமா? பாருங்க எத்தனை மேசேஜ் போனை காட்டினான்.

எங்க போறீங்க? துகிரா கேட்க, மீனாட்சி அவளிடம் வெளியே கிளம்பும் போது இப்படி கேட்கக்கூடாதும்மா.

அத்தை அப்புறம் எப்படி தெரிஞ்சுக்கிறது?

அவங்க தான் வெளியே கிளம்பும் போது சொல்லிட்டு போகணும்..என்று பிரதீப்பை பார்த்தார்.

நாங்க ரெசார்ட்டை பார்க்க போறோம் ஆதேஷ் கூறிக் கொண்டே ஜானுவை பார்த்தான். அவள் அமைதியாக இருக்க, ஜானு இது உனக்கு செட்டே ஆகல. முதல்ல பார்த்த ஜானு மாதிரி இல்லையே? ஆதேஷ் கேட்டான்.

உதட்டை சுளித்துக் கொண்டு சமையலறை பக்கம் செல்ல, நில்லுடி..முதல்ல பள்ளி சீருடையை மாத்திட்டு வா. அப்புறம் போ..என்றார். அனைவரும் கிளம்பினர்.

மணி ஏழானது. ரெசார்ட்டில் அனைவரும் ஆஜராக, நித்தியும் கைரவும் இன்று பிராக்டீஸை ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் கைரவ், சைலேஷூம் அங்கே செல்ல..நித்தி கவலையுடன் இருந்தாள்.

ஏற்கனவே பிரதீப் சொன்ன வேலைகள் முடிந்திருக்க..அகில் ரதியை அழைத்து வந்திருந்தான். அலங்கார பொருட்கள் லிஸ்ட் எடுக்க,..உள்ளே உணவுக்கும் இருக்க, இப்பொழுதைக்கு அங்கு யாரும் வரவில்லை. ஒவ்வொருவரும்..சில திட்டங்களை கூற..அனைத்தையும் வேலு நோட் செய்து கொண்டிருந்தான். இன்பா அவனை கவனிக்க ஆரம்பித்தாள். நீரூற்று அமைத்து சிறுமி, சிறுவருக்கான பூங்கா, மலைப்பிரதேசம் என்பதால் காட்சிக்கு மிகவும் அழகாக இருக்கும்.

நாமே சுற்றுலா என கைடு தயார் செய்தால் என்ன? எல்லா இடத்திற்கும் அழைத்து செல்ல..நம்மிள் ஒருவர் இருந்தால் என்ன? வேலு கேட்டான்.

நான் இருக்கேன் என்ற சத்தத்தில் அனைவரும் அதிர்ந்தனர். பிரதீப் கோபமானான். எதுக்கு குடிச்சிட்டு பிரச்சனை பண்றதுக்கா?

இல்லண்ணா. நான் அந்த அளவிற்கு செல்ல மாட்டேன் என்றான் சக்தி.

உன்னோட சகாக்கள் எங்கடா? கேட்டான் கண்ணன்.

இனி நான் அவர்களுடன் போக மாட்டேன் என்றான். மறை அவனிடம் வந்து ஏதும் பிரச்சனையா? அவனது உதடு, தலையில் அடிபட்டு லேசான இரத்தமாக இருந்தது.

டேய்..அவன் குடிச்சிட்டு விழுந்து கிடந்திருப்பான் சத்யா கூற, அவனிடம் சரக்கு வாடையே இல்லை என்று மறை சொன்னான்.

அட..ஆமா..என்று அர்ஜூன் அவனருகே வந்தான். சக்திக்கு நினைவு நான்கு மணி நேரத்திற்கு முன் சென்றது.

மாலினியும் அவளோட தோழியும் கடைக்கு வந்திருப்பாங்க. அப்பொழுது தான் சக்தியிடம் பொன்னன் கேட்டுக் கொண்டிருந்தான். நான் ஜெயில்ல இருந்தேன். நீ எங்க போன? எல்லாரும் என்னை தேடி வந்தாங்க..நீ எங்க போன?

சக்தி அவனை முறைத்துக் கொண்டு, அன்று நடந்த பிரச்சனை யாரால்? என்னையும் மாலினியையும் சேர்த்து பூட்டியது யார்? என கேட்டான்.

யாரா இருக்கும்? நீயாடா? நீயாடா? என்று பொன்னன் ஒவ்வொருவராய் கேட்க, சக்திக்கு கோபம் ஏறி “நீ தானடா நாயே?” என்று பொன்னனை அடித்தான். இருவரும் உருண்டு பிரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். எழுந்த சக்தி பொன்னனை அடிக்க, மற்றவர்கள் சக்தியை பிடித்தனர். பொன்னன் எழுந்து “அவளுக்காக என்னையே அடிக்கிறாயா?” என்று சக்தி வயிற்றிலே குத்தினான்.

அந்த பக்கம் வந்த மாலினியும், அவள் தோழியும் அவனை பார்த்தனர். மாலினி அங்கே வர, போகாதடி என்று அவள் தோழி கத்திக் கொண்டே வந்தாள். சக்தி கீழே விழுந்தான். அவன் கண் முன் மாலினி கண்ணீருடன் அவனிடம் வருவதை பார்த்து கண்ணை மூடினான். நடப்பது மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.