அத்தியாயம் 45

ஆதேஷ் எழவேயில்லை. மேலிருந்து ஆன்ட்டி வேற கீ இருந்தா தாங்க. மாமா எழுந்திருக்கவே மாட்டிக்கிறாங்க என்று கத்தினாள் ஜானு.

இரும்மா..கொடுத்து விடுறேன் என்று சிரித்து விட்டு வசந்தியிடம் கொடுத்து விட்டார். அவர் கொடுத்து விட்டு, ஜானுவை பார்த்து புன்னகைத்தார்.

அக்கா..எதுக்கு சிரிக்கிறீங்க? நான் மாமாவிடம் பேசணும். நீங்க கிளம்புங்க. நான் பேசிட்டு வந்திடுறேன்.

அவர் மீண்டும் புன்னகைத்து, சின்னம்மா..நீங்க மெதுவாகவே வரணும். இல்லை என்று அவர் பேச,

வசந்தி, என்ன பண்ற? லலிதா சத்தம் கொடுக்க, அவர் கீழே சென்றார்.

ஜானு ஆதேஷ் கட்டிலருகே வந்து, மாமா..எழுந்திருங்க.. எழுந்திருங்க.. என்று எழுப்ப, ம்ம் ஜானு வாரேன் என்று போர்வையை விலக்கி அவளை பார்த்தான்.

அவள் அவனருகே அவன் கட்டிலில் இருக்க, அவனோ அவளை இழுத்து அவன் மீது போட்டுக் கொண்டான்.

மாமா..விடுங்க. முதல்ல நீங்க எழுந்திருங்க என்று அவனை தள்ளி அவள் எழ, ஜானுவை மீண்டும் பிடித்து இழுத்தான்.

மாமா..என்ன பண்றீங்க?

ஏய்..ராட்ச்சசி..எனக்கு முத்தம் வேண்டும்.

ஹஅ..நான் எதுக்கு வந்தா நீங்க என்ன கேட்குறீங்க? முதல்ல எழுந்திருங்க என்று அவனை பிடித்து இழுத்தாள். அவன் அவளை அணைத்துக் கொண்டே இருக்க.

மாமா..உங்களுக்கு துகி அண்ணி வீடியோ ஏதோ அனுப்பி இருக்காங்க. ஏதோ சீரியசான விசயம் போல. வாங்க உங்க லேப் எடுங்க சீக்கிரம்.

அவள் அனுப்பினாளா? என்று சிந்தித்து எடுத்து விட்டு, ஜானு நீ இங்க வா..என்று அவளை மடியில் அமர்த்தி ப்ளீஸ் ஒரே ஒரு முத்தம் தானே கொடுத்து விட்டு பார்க்கலாமே?

மாமா..என்றாள் முறைத்தவாறு.

சரி..வேண்டாம் என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டு, வீடியோவை எடுத்தான். அதில் வேலீஸ்வரும் அவர் ஆட்களும் ஜானு அப்பாவை கொல்வதை பார்த்து, ஆதேஷ் ஜானுவை பார்த்தான். அவள் கண்கள் கலங்க பார்த்தாள். அவள் அம்மாவிடம் வேலீஸ்வர் பேசியது, மானத்தை காக்க அவராக பள்ளத்தில் குதித்ததை பார்த்து அழ ஆரம்பித்தாள்.

முழுவதையும் பார்க்க சொல்லி குறிப்பிட்டிருந்தாள் துகிரா.

வேலீஸ்வர் சென்றவுடன் அங்கே வந்தார் வெற்றி சக்கரவர்த்தி. பள்ளத்தில் எட்டி பார்த்தார். ஜானு அம்மா பயங்கர இரத்த காயத்துடன் அங்கிருந்த மரத்தின் கிளையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார்.

அவர் காதலித்த பொண்ணாயிற்றே..அவராகவே ஜானு அம்மாவை காப்பாற்றி வெளியே எடுத்தார்.

ரொம்ப நன்றி. அவரிடம் கூட்டிட்டு போங்க ப்ளீஸ் என்று கையெடுத்து கும்பிட்டார். அவர் ஜானு அம்மாவை ஒரு மாதிரி பார்த்து விட்டு,

அவன் செத்துட்டான். இனி அவனிடம் சென்று என்ன செய்ய போகிறாய்? என்று கேட்டார்.

நான் அவரை பார்க்கணும் என்று அழுதார்.

நானும் அன்று என்னை கட்டிக்கோன்னு இப்படி தானே அழுதேன். ஆனால் நீ என்னை விட்டு அவனை கட்டிக்கிட்ட.

அவர் பயத்துடன், ப்ளீஸ் என்று பேச முடியாமல் சோர்வாக கேட்டார்.

சரி..உன்னை அவளிடம் அழைத்து செல்கிறேன். அதுக்கு முன் நீ எனக்கு வேண்டும்.

ச்சீ..என்ன பேசுற? இதுக்கு நான் செத்தே போயிருப்பேன் என்று அவராக நகர்ந்து காரிடம் வர, அவரை தரதரவென பிடித்து இழுத்து நகர்த்தினார் வெற்றி.

என்ன பண்ற? நான் அவரை பார்க்கணும்?

இனி அவன் உனக்கு தேவையில்லை. எனக்கு நீ வேண்டும் என்று அவரிடம் தவறாக நடந்து கொண்டார். டப்பென லேப்பை கீழிறிக்கினான் ஆதேஷ்.

ஜானு அவனுள் புதைந்து தேம்பி தேம்பி அழுதாள். ஜானு அழாத..அழாத.. என்று ஆதேஷ் கத்தினான். மீண்டும் உயர்த்தி வீடியோவை அவன் பார்க்க, ஜானு நிமிரவேயில்லை.

ஜானு அம்மா உயிருக்கு போராடுவதை போல் இருக்க..நீ அவனுடன் போகக்கூடாது. எனக்கு நீ வேண்டும் என்று பைத்தியம் போல் கத்திக் கொண்டே அவர் காரில் ஜானு அம்மாவை தூக்கிப் போட்டு சென்றார் வெற்றி.

ஜானு பார்க்கவில்லை என்றாலும் கேட்டிருப்பாள். அழுது கொண்டே அவள் மயங்க..லேப்பை மடக்கி விட்டு, அம்மா..அம்மா..என்று கத்தினான்.

சத்தம் கேட்காமலிருக்க, ஜானுவை தூக்கி அவனது கட்டிலில் போட்டு  அறையை விட்டு வெளியே வந்து,

மாம்…எங்க இருக்கீங்க? சீக்கிரம் வாங்க என்று வீடே அதிரும் வண்ணம் கத்தினான். மூவரும் பதறி அவனிடம் வந்தனர்.

ஆது,..என்னாச்சு? ஜானு எங்கே? கேட்டுக் கொண்டே அறை பக்கம் வந்தார்.

ஜானு மயங்கிட்டா. நீங்க பாருங்க என்று டாட் என்று அவரை அணைத்து அழுதான்.

என்னாச்சுப்பா? அவர் கேட்க, போன்..போன்.. என்று உள்ளே சென்று ஜானுவை பார்த்துக் கொண்டே போனை எடுத்து துகிராவை அழைத்து கத்தினான்.

துகி, நீ யோசிக்கவே மாட்டாயா? அவளிடம் எதுக்கு அந்த வீடியோவ பார்க்க சொன்ன? பாரு..இப்ப அவ மயங்கிட்டா என்று அவன் அழுது கொண்டே பேசினான்.

துளசி அழும் சத்தம் ஆதேஷிற்கு கேட்க, ஏய்..துளசிக்கும் தெரியுமா? என்று கத்தினான்.

என்ன பண்ணிகிட்டு இருக்க துகி? மாமாவுக்கு தெரிஞ்சா ரெண்டு மாமாவும் பிரிஞ்சிடுவாங்க என்று மீண்டும் கத்த, என்னடா சொல்ற? என்று லலிதா அவரிடம் வந்தார்.

அம்மா..என்று அவரிடம் சொல்ல ஆரம்பித்தான். அதற்குள் துளசி எதுக்கு அழுற? நீ அழுறது வெளிய வரை கேட்குது?

ஏய்..குட்டச்சி என் தங்கையை திட்டினாயா? என்று தீனா அவர்களருகே வர, துளசி மேலும் அழுது கொண்டே பின்னே வரும் பிரதீப்பிடம் ஓடினாள். அவன் பின் மறைந்து கொண்டு அண்ணா அவன போக சொல்லுங்க..என்று பிரதீப் சட்டை நுனியை இறுக பற்றி அழுதாள்.

துளசி..என்னாச்சு? தீனா பக்கத்தில் வர, துகிரா அவனை முறைத்துக் கொண்டே பிரதீப்பிடம் வந்தாள். தீனா முழு வீடியோவையும் பார்த்து அவன் அப்பாவிற்கு உதவுகிறான் என்று இரு பெண்களும் நினைத்துக் கொண்டனர்.

என்ன துகி சொல்றா? பிரதீப் கேட்க, தீனாவை பார்த்து நல்லா நடிக்கிறீயே? உனக்கு ஏதும் தெரியாதா? கேட்டாள் துகிரா.

தீனா புரியாமல், நீ என்ன சொல்ற?

ச்சீ..நீ உன்னோட அப்பாவ காப்பாத்த எப்படி வேண்டுமானாலும் நடிப்பாய் தான? என்று துகிரா ஆக்ரோசமாக கத்தினாள்.

ஏய்..என்ன பேசுற? என்று தீனா கோபமாக கேட்க, துகி என்ன பேசுற? தீனா நடிக்கிறானா?

ஆமாம். இவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு என்று அழுதாள்.

எனக்கு ஒன்றுமே புரியல? தீனா கத்தினான்.

துகிரா கையிலிருந்த பென் டிரைவை காட்டினாள்.

ஏய்..என் அறைக்கு சென்றாயா? இதை எதற்கு எடுத்தாய்? இது தான் அந்த கொலைகாரனுக்கான ஆதாரம்.

ஆதாரமா? இதை எல்லார் முன்னாடியும் போட்டு காட்டப் போறீயா? என்று சீற்றத்துடன் துகிரா தீனா சட்டையை பிடித்தாள்.

இதை காட்டினால் தான் அவனை நிரந்தரமாக உள்ளே தள்ளி தண்டனை வாங்கித் தர முடியும்.

அவன் கையிலிருந்து பென் டிரைவை பிடுங்க, நான் தர மாட்டேன் என்றாள்.

துகி..தெளிவா பேசு. ஒன்றுமே புரியலை என்று பிரதீப்பும் சத்தமிட, துகிராவும் துளசியும் அழுதனர். தீனா புரியாமல் இருவரையும் பார்த்தான். பிரதீப் தீனாவை பார்க்க,

அண்ணா..நான் ஏதும் செய்யவில்லை. எனக்கு இவங்க சொல்றது புரியவும் இல்லை. இதில் எங்க அப்பா இல்லை. அப்படி இருக்க நான் எப்படி அவரை காப்பாற்ற முயற்சிப்பேன்.

அப்பா..இல்லையா..அந்த பொறுக்கி இதுல இருக்கான். உனக்கு தெரியலையா? நீ வீடியோவை ஒழுங்கா பார்த்தியா? இல்லையா? என்று துளசி கத்தினாள்.

என்ன சொல்ற துளசி? இதுல பெரியம்மா..பெரியப்பா.. மட்டும் தான் இருக்காங்க.

இல்லடா..ஒழுங்கா பாரு என்று கத்தினாள் துளசி.

அங்கிருந்த லேப்பை பார்த்து வீடியோவை ஓட விட்டான். துகிரா பிரதீப்பை பார்த்து, நீங்க பார்க்க வேண்டாம். வெளிய வாங்க என்று அவனது கையை பிடித்து இழுத்தாள்.

அவள் கையை உதறி விட்டு தீனாவுடன் சேர்ந்து பார்க்க, அண்ணா..நீங்க பார்க்க வேண்டாம் என்று பிரதீப்பை துளசி தடுக்க, ரெண்டு பேரும் சும்மா இருங்க. எனக்கு என்ன தெரியக்கூடாது?

தெரியக்கூடாதுன்னு இல்ல. உங்களால தாங்க முடியாது. வாங்க என்று துகிரா பிரதீப் கையை பிடித்து இழுத்தாள்.

கையை விடுங்க..என்று இருவரிடமும் கத்தி விட்டு, முதலில் நடந்த விபத்தை மட்டும் தான் தீனா பார்த்திருப்பான். ஆனால் இப்பொழுது அந்த விபத்தில் இன்னொரு காரிலிருந்து யாரோ கீழே விழுவதும் பிரதீப் அப்பா கையில் ஒரு குட்டி பாப்பா இருப்பதையும் பார்த்தனர். அந்த பொண்ணு முகம் இரத்தத்துடன் கத்திக் கொண்டு கடைசியில் மயங்கியது

ஒரு நிமிஷம் நிறுத்து ஸூம் பண்ணு பிரதீப் கூற, அண்ணா…இந்த பொண்ண பாரேன் ஸ்ரீ மாதிரியே தெரியுது? தீனா கூற, அழுது கொண்டிருந்த பொண்ணுங்களும் பார்த்தனர்.

ஆமா..இது ஸ்ரீ தான் துகிரா கூற, மூவரும் அவளை பார்த்தனர். ஆதேஷ் இதை கேட்டுக் கொண்டிருந்தான். ஜானு விழித்து விட்டாள்.

அம்மா..ஜானுவை பார்த்துக்கோங்க என்று அவன் லேப்பை எடுத்து உள்ளே செல்ல, மாமா..என்று அவனை அழைத்தாள் ஜானு.

மாமா..நானும் வாரேன் என்றாள்.

நீ நல்லா தூங்கி எழுந்திரு.

ஆன்ட்டி..நீங்க போங்க. எனக்கு ஒன்றுமில்லை என்று எழுந்து ஆதேஷிடம் வந்தாள். அவன் லேப்பை வைத்து விட்டு போனை காதில் வைத்தவாறே அவளை பார்த்தான்.

அனைவரும் வெளியே செல்ல அவள் அழுதிருப்பது தெளிவாக தெரிய, லலிதா அவள் பெற்றொரை பற்றி தெரிந்திருக்குமோ? என்று அவளை பார்த்துக் கொண்டே சென்றார்.

அக்கா..ஜானுவிற்கு சூடா குடிக்க ஏதாவது எடுத்து வாங்க கூறி விட்டு அவர்கள் சென்ற பின் அவளருகே வந்தான்.

மாமா..நான் உங்கள கட்டிக்கவா? என்று கேட்க, என்ன கேட்ட?

மாமா..என்று அழுது கொண்டு அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

ஜானு..இங்க பாரு..நாம அவரை சும்மா விடக் கூடாது. கொஞ்ச நேரம் இரு. வீட்ல என்ன நடக்குதுன்னு பார்ப்போம். அவளை துக்கி எப்போதும் போல் மடியில் அமர்த்தி லேப்பை எடுத்து வீடியோவை பார்க்க, ஜானு அவனை கட்டிக் கொண்டிருந்தாள்.

இதை பார்த்துக் கொண்டு உள்ளே வந்த வசந்தி இறுமுவது போல் செய்ய, இருவரும் அவரை பார்த்தனர். ஜானு கீழே இறங்க முற்பட,..நோ..ஜானு என்று அவளை பிடித்துக் கொண்டு அக்கா வாங்க என்று அவரிடம் வாங்கி விட்டு,

ஜானுவிடம் உன் கவனம் இந்த வீடியோவில் இருக்கக்கூடாது. புரியுதா? கேட்டான்.

படம் பாக்குறீங்களா? என்று வசந்தி கேட்க, ஆமாக்கா..படம் தான் பார்க்கிறோம். நீங்க எல்லாரும் இதை தான எதிர்பார்த்தீங்க? கேட்டான் ஆதேஷ்.

ஆமா தம்பி..என்று அவர் வெட்கப்பட்டு ஓடினார். அவர் சென்றவுடன் ஜானுவை கீழே இறக்கி அவன் பக்கத்திலே அமர வைத்தான்.

அவன் வீடியோவில் அவர்கள் பேசியதை வைத்து எடுத்து பார்த்து அவனும் ஸும் செய்தான். இவங்க எப்படி இங்க வந்தாங்க? ஆதேஷ் புலம்ப, ஜானுவும் பார்த்து ஸ்ரீ அக்காவா? என்று அதிர்ந்தாள். பின் அவன் மூடி வைக்க,

பிரதீப் வீட்டில் வீடியோவை பார்க்க, பிரதீப் அம்மாவை பார்த்து அவன் அழுகை சத்தம் அதிகமானது. இன்னும் வீடியோ உள்ளதா? என்று தீனா கேட்க, இருவரும் அவனை முறைத்து பார்த்தனர்.

பின் நடந்ததை பார்க்க பிரதீப் துடித்து போனான். பெருங்குரலெடுத்து அவன் அழ, அப்பத்தா சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்து அவரும் கதறினார். தீனா கண்கள் நீரால் நிறைந்திருக்க கையை முறுக்கினான்.

துகிரா பிரதீப்பை அணைத்திருக்க, துளசி அப்பத்தாவை அணைத்து அழுதாள்.

இப்ப என்ன செய்யப் போற? துகிரா தீனாவை பார்த்து கத்த,

அவன் என்ன செய்றது? ஏலேய்.உங்க அப்பன் எங்க இருந்தாலும் இங்க இழுத்துட்டு வாடா. என் கையாலே அவனை வெட்டிக் கொன்னுடுறேன் ஆத்திரமாக அப்பத்தா கத்தினார்.

அப்பத்தா..நீ புள்ளைங்கள பார்த்துக்கோ..வாடா அண்ணா அந்த ஆள் உன் கையால தான் சாவணும் என்று தீனா கூற பிரதீப்பும் கனல் பறக்க எழுந்தான். துகிராவிற்கு பக்கென்றது.

இல்ல..போகாதீங்க. கொலையெல்லாம் பண்ண வேண்டாம் அழுது கொண்டு துகிரா பிரதீப் கையை பிடிக்க, அந்த ஆளு என்னோட அம்மாவ என்ன பண்ணி வச்சிருக்கான் பாரு. அவனை சும்மா விட சொல்றியா? அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று அவன் செல்ல, துளசி, அப்பத்தாவும் நிதர்சனம் புரிந்து,

போகாதீங்க..அவனை கோர்ட்டுல பார்த்துக்கலாம்.

எப்படி பாக்குறது? அந்த வீடியோவ எல்லார் முன்னும் போட்டு காட்ட சொல்றியா? என்று பயங்கரமாக கத்தினான் பிரதீப்.

ப்ளீஸ் வேற ஏதாவது பண்ணலாம். ப்ளீஸ் போகாதீங்க என்று அழுதாள். ஆனால் இருவருமே கோபம் குறையாது இருக்க, இதை கேட்டுக் கொண்டிருந்த ஆதேஷ் பட்டென எழுந்தான்.

மாமா..என்னாச்சு? ஜானு கேட்க, உங்க அண்ணாவை எப்படி சமாதானப்படுத்த முடியும்? சீக்கிரம் சொல்லு ஜானு கத்தினான்.

மாமா..அண்ணாவுக்கு பிரச்சனையா?

அய்யோ…மாமாக்கள் வீடியோவ பார்த்துட்டாங்க. உங்க சித்தப்பாவ கொல்லப் போறதா? கிளம்புறாங்க.

அண்ணா…பார்த்துட்டானா? என்று கதறினாள் ஜானு.

ஜானு அழும் நேரமல்ல. அவங்க மட்டும் கொன்னுட்டா. அவங்க வாழ்க்கையே முடிஞ்சிடும்.

அவங்களிடம் நான் பேசுறேன் மாமா..என்று ஜானு கூற, போனை அணைத்து விட்டு மீண்டும் துகிராவிற்கே போன் செய்தான். அவள் பிரதீப்பை தடுத்துக் கொண்டிருந்தாள். அவளை கோபமாக தள்ளி விட்டு வெளியே சென்றனர் இருவரும்.

ஜானு..பேசினாள். அண்ணா..எங்க போறீங்க? என்று கேட்டாள். பிரதீப் நின்றான். தீனா துகிராவை பார்க்க, ஜானுவிற்கும் தெரியும் என்றாள்.

பிரதீப் அதிர்ந்து அவளுக்கு ஏன் சொன்ன? துகிராவை அடிக்க வந்தான்.

அண்ணா..அண்ணிய திட்டாதீங்க. நீங்க எல்லாரும் மறைச்சிருந்தா தான் என்னை ஒதுக்கியதா நினைச்சு கஷ்டப்பட்டிருப்பேன். ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்.

அண்ணா..அம்மா, அப்பாவை போட்டோவிற்கு அப்புறம் இப்ப தான் வீடியோவா பார்க்கிறேன் என்று ஜானு அழுது கொண்டு, இந்த நிலையில பார்க்கிற மாதிரி ஆகிடுச்சே அண்ணா..என்று தேம்பி தேம்பி அழுதாள்.

ஜானு..அழாத..ஆதேஷ் குரல் கேட்டது. அண்ணா..இப்ப என்ன பண்ண போற அண்ணா?

சித்தப்பாவை கொன்னுட்டு..நீ என்னையும் அண்ணியையும் தனியா விட்டுட்டு ஜெயிலிக்கு போகப் போறியா?

அவன் துகிராவை பார்த்தான். அவளும் துளசியும் அழுது கொண்டிருந்தனர்.

சொல்லு அண்ணா?

இல்லம்மா. உங்கள தனியா என்னால எப்படிம்மா விட முடியும்?

அண்ணி, உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாங்க. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இப்ப தான் அண்ணா பொறுமையா இருக்கணும். நீங்க உள்ள போக போறீங்களா? இல்ல அவரை பிடிச்சு கொடுக்க போறீங்களா? ஜானு கேட்டாள்.

அதற்கு தீனா..நீ இரு நான் போறேன் என்று பிரதீப்பிடம் கூற,..

போ..தாரளமா போ..சாதாரணமா போறேன்னு சொல்ற? துளசி, சித்தி, அப்பத்தா, புவனாவை பத்தி யோசிச்சியா?

நீ போடா..நீ போனா.. புவனாவிற்கும் துளசிக்கும் பாதுகாப்பு இல்ல. நீ போன மறு நாளே அவங்க செத்துட்டாங்கன்னு செய்தி வரும். பார்த்து ரசிச்சுகிட்டே இரு.

அவர கொன்னுட்டா எல்லாமே சரியாகிடுமா? வீடியோவ சரியா பார்த்தீங்களா? இல்லையா? அதுல ஸ்ரீ அக்கா இருக்காங்க. இதுல எப்படி எல்லாமே சரியாகிடும்?

நான் செய்திய பார்த்தேன். ஸ்ரீ அக்காவ கொல்ல நினைச்சவனை பிடிச்சுட்டாங்களாமே?

ஜானு..பிடிச்சுட்டாங்களா? ஆதேஷ் கேட்க, மாமா இத்தனை நாளா எல்லார் கண்ணுலையும் விரல விட்டு ஆட்டியவன். அவன் வேலைய முடிக்காம எப்படி பிடிபடுவான்? அர்தீஸும் உள்ள இருக்கான். அவன் அப்பனும் இருக்கான். இந்த கொலைகாரனும் இருக்கான்.

இது உங்களுக்கு சரியா படுதா? அனைவர் மூளையும் விழித்துக் கொண்டது.

ஆனால் ஜானு அவன் காவலில் தான் இருக்கிறான்.

எதை அண்ணா..காவல்ன்னு சொல்றியா? உன்னோட ப்ரெண்டு மாதிரி எத்தனை பேர் போலீசா இருக்காங்களோ? உன்னால நிச்சயமாக இவன் நம் பக்கம் தான்னு சொல்ல முடியுமா? கேட்டாள்.

அண்ணா..அர்ஜூன் அண்ணா பேசியதையும் கேட்டேன். அவங்க மொத்த கஷ்டத்தையும் சொல்லிட்டாங்க. ஆனா உண்மைய சொன்னாங்க. கொலைகாரனுக்கு எதிரா தான் அனைத்தும் இருந்தது.

அர்ஜூன் அண்ணா, அகில் அண்ணா எல்லாரையும்  குறி வைத்திருப்பான். அவர்களை ஏதும் செய்யாமல் அவன் உள்ளே இருப்பான்னு தோன்றுகிறதா?

அப்புறம் அந்த அர்தீஸ் பைத்தியக்காரன். அவன் புவனா பின் எப்படி சுத்தினான் தெரியுமா? அவளை சும்மா விட்டு உள்ளே இருப்பான்னு தோணுதா? ஒரு சின்ன இடைவெளி கிடச்சா போச்சு. நீ கவனமா இரு. அவனிடம் புவனா மட்டுமல்ல நானும் துளசியும் கூட மாட்டாமலிருப்பது தான் நல்லது. புவனாவிற்கு ஆள போட்டிருப்ப. நான் மாமா வீட்ல இருக்கேன். ஆனால் துளசி தினமும் பள்ளிக்கு தனியே தான் போவாள். அவளை பார்த்துக்கோ.

உள்ள இருக்கிற எல்லாருமே சாகணும். ஆனால் நம்ம வீட்ல யாரும் அவங்க மேல கைய வைக்கக் கூடாது. அர்ஜூன் அண்ணா சொன்ன மாதிரி ஸ்ரீ அக்காவை வைச்சு பண்ணுங்க. அவங்க தற்காப்பிற்காக செஞ்சாங்கன்னா யாராலும் ஏதும் செய்ய முடியாது. அக்கா தைரியமானவங்க. கண்டிப்பா அந்த ஆளை பார்த்தா யாருன்னு கண்டுபிடிச்சிருவாங்க.

சரி ஜானு. நீ தேவையில்லாம எதை பற்றியும் யோசிக்காத. இனி நாங்க நிதானமாகவே பார்க்கிறோம். புவனா துளசியை பார்த்துக்கிறோம். மாப்பிள்ள ஜானுவை பாத்துக்கோங்க.

கண்டிப்பா மாமா சார்.

ஏன்டா, ஜில்லா எனக்கு போன் செய்து பேச தோன்றியதா? துகிரா ஆதேஷிடம் கேட்க,

அண்ணி, மாமா வந்ததில இருந்து தூங்கிகிட்டே இருந்தாங்க. நீங்க சொன்ன பின் நான் தான் எழுப்பினேன்.

ஏன்டா..உடம்புக்கு ஒன்றுமில்லையே? துகிரா கேட்க, திடீர்ன்னு ரொம்ப அக்கறையோட பேசுற? ஆதேஷ் கேட்டான்.

நான் அக்கறையோட உன்னிடம் பேசியதே இல்லையாடா? அழுவது போல் துகிரா கேட்க,

அழாத துகி,..மாமா பாவம். நீ அழுதா பாக்க சகிக்காது என்று ஆதேஷ் கேலி செய்ய,

ஆமா..இவன் பெரிய மன்மதன்னு நினைப்பு. என்ன கேலி பண்றானாம். உன்னோட மூஞ்சிய கண்ணாடில பாரு.

கொஞ்சம் அடிபட்டுருக்கு. அப்புறம் பாரு..ஆதேஷ் கூற,

இன்னும் தூங்காத..உனக்கு எத்தனை முறை போன் செய்வது? தூங்கு மூஞ்சி.

ரெண்டு பேரும் அப்புறம் சண்டை போடலாம் பிரதீப் கூறி விட்டு, ஜானு..நீ ஊருக்கு வரலையா?

அவள் தயங்கி பதிலளிக்காமல் இருக்க, மாமா..ஜானு வருவா.ஆனால் அவளுக்கு கொஞ்ச நாட்கள் மட்டும் நேரம் கொடுங்கள் ஆதேஷ் கூற,

அவள் ரொம்ப நாள் அங்கிருப்பது சரியில்லை பிரதீப் கூற, ஆதேஷ் அமைதியானான்.

அண்ணா..மாமா சொன்னது போல் கொஞ்ச நாட்கள் மட்டும் நேரம் தாருங்கள். கண்டிப்பா வந்துருவேன்.

அண்ணா என் மேல கோபமா இருக்கிறாயா?

நீ பேசியது கஷ்டமா இருந்தது. ஆனா நீ சொன்னது சரி தான்ம்மா. என் மீதும் தவறுள்ளது. நீயும் என்னை மன்னிச்சிரு ஜானும்மா.

அண்ணா..இப்படி பேசாத.

சரி..நீ ஓய்வெடு என்று போனை வைத்தான்.

நான் ஹாஸ்பிட்டல் கிளம்புகிறேன் என்று தீனா கிளம்ப, அண்ணா நானும் வருகிறேன் துளசி அவனிடம் வந்தாள்.

அப்பத்தாவை பார்த்தான். நான் வீட்ல இருக்கேன். என்னால அலைய முடியலடா என்று அவர் கூற, அண்ணனும் தங்கையும் கிளம்ப, சாப்பிட்டு போங்க என்று இருவரையும் நிறுத்தினாள் துகிரா.

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அப்பத்தா எங்க போற?

வா..என்று துளசி அழைத்து உட்கார வைத்தாள். துகிரா அனைவரும் எடுத்து வைத்தாள். ஆனால் பிரதீப்பால் சாப்பிட முடியவில்லை.

சாப்பிடுய்யா..எல்லாத்தையும் பார்த்துக்கலாம்.

அண்ணா..எனக்கு என்னமோ பெரியம்மாவுக்கு ஏதும் இருக்காது. அவங்க உயிரோட இருப்பாங்கன்னு தோணுது துளசி கூற, துகிராவும் தலையசைத்தாள். பிரதீப் கண்ணில் கண்ணீர் தேங்கி இருக்க, துகிரா அவனது தோளில் கை வைத்தாள்.

அப்பத்தாவும் கண்ணீருடன் சரியாக சாப்பிடாமல் எழுந்து செல்ல, பிரதீப் சாப்பிடாமல் கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.

நாங்க கிளம்புகிறோம் என்று தீனாவும் துளசியும் கிளம்ப, தீனா பிரதீப்பிடம் கண்ணை காட்டினான். அவனும் கண்ணை மூடி திறந்தான். அவர்கள் கிளம்ப, துகிரா பிரதீப் அருகே அமர்ந்தாள். அவன் அவளை பார்த்தான். அவள் அமைதியாக இருந்தாள்.