வானவில் கோலங்கள்- final

இறுதி அத்தியாயம்

புயலால் ஏற்பட்ட சேதாரம் மக்கள் கணித்ததை விட அதிகமாக இருந்தது. ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. தங்க இடம் இல்லாதவர்கள் சமுதாயக் கூடம் பள்ளிக்கூடம் என தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பயிர்கள் முழுவதும் நாசமாகி விட்டது. தென்னை மரங்கள் பாதிக்குமேல் விழுந்து விட, பாதி மரங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன. ஆங்காங்கே மரங்களும் விழுந்து கிடந்தன. மின்சாரம் முழுதுமாக துண்டிக்கப் பட்டிருந்தது. 

சக்தியும் குருவும் முன்னின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தனர். அங்கே வந்தார் விஸ்வநாதன். சக்தியை தயங்கி தயங்கி பார்க்க, அவரைப் பார்த்த சக்தி கண்டுகொள்ளாமல் வேலையில் கண்ணாக இருந்தான். பொறுத்து பார்த்த தாத்தா,

“டேய் சக்தி இங்க வா” என அதட்டலாக அழைத்தார்.

“இருடா என்னன்னு கேட்டுட்டு வரேன்” என குருவிடம் கூறிவிட்டு தாத்தாவிடம் சென்றான் சக்தி.

அருகில் சென்றவன் எதுவும் பேசாமல் ‘என்ன?’ என்பது போல பார்த்து நின்றான்.

“உன் பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு முதல்ல நம்ம வீட்டுக்கு வா. நேத்தே நீ வருவேன்னு நினைச்சேன். அப்படியாடா மனசாட்சி இல்லாதவன் நான்?” என்றார் தாத்தா.

சக்தி பதில் கூறாமல் நிற்க, “எங்க உன் பொண்டாட்டி…மணிமேகலை வீட்லதானே இருக்கு? வா நானே கூப்பிடுறேன்” என்றவர் “குரு நீ பார்த்துக்கோப்பா” என குருவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, சக்தியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மணிமேகலை வீடு நோக்கிப் புறப்பட்டார்.

“விடுங்க… விடுங்க… நானே வர்றேன்” என சக்தி கூற, “நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது என் கையை பிடிச்சுக்கிட்டுதான் ஊர்ல சுத்துவ. இப்ப என்னடா? வளர்ந்தாலும் நீ எனக்கு பேரன்தான்” என்றவர் அவன் கையை மட்டும் விடவில்லை.

சக்தி தாத்தாவைப் பார்த்து சிரித்துக் கொண்டான். அவருக்கு பிரபாகரனும் சுஜாதாவும் வந்திருப்பது தெரியாது. சக்தியும் தெரிவிக்கவில்லை.

இருவரும் மணிமேகலையின் வீட்டிற்குள் செல்ல முற்பட, புதியவர் ஒருவரை அழைத்து கொண்டு வந்தான் பழனிவேல்.

“அண்ணே இவர் உங்களை பார்க்கணும்னு சொன்னார்” எனக் கூறி அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான் பழனிவேல்.

புதிதாக வந்தவரின் மரியாதையான தோற்றத்தை பார்த்தவன், “வாங்க” என வரவேற்று “யார் நீங்க?” எனக் கேட்டான்.

“என் பெயர் அரசு. ரிடையர்ட் மேஜர் ஜெனரல்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர்.

“இந்த புயல்ல நிறைய சேதாரமாகி இருக்கு. என்னால முடிஞ்ச உதவியை சுத்தியுள்ள எல்லா கிராமங்களுக்கும் செய்றேன். இந்த ஊர்ல நீங்கதான் முன்ன நின்னு எல்லாம் செய்யறதா சொன்னாங்க. அதான் உங்ககிட்டயே செக் கொடுக்கலாம்னு வந்தேன்” என்றார்.

“ரொம்ப சந்தோஷம். நீங்க செய்ற உதவி இந்த ஊர் மக்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்” என்றவன் அவரை வீட்டின் உள்ளே அழைத்தான்.

தாத்தாவும் உடன் சென்றார். கூடத்தில் பிரபாகரனையும் சுஜாதாவையும் பார்த்து சிறிது அதிர்ந்தாலும், தாத்தா கோவப்பட்டு திரும்பி திரும்பி செல்லவில்லை. அவர்களிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்துகொள்ள மரியாதை கொடுக்கும் விதமாக எழுந்து நின்றார் பிரபா. 

அரசு யார் என்பதை எல்லோருக்கும் அறிமுகம் செய்வித்தான் சக்தி. ஒரு நல்ல தொகையை எழுதி காசோலையாக சக்தியின் கையில் கொடுத்தார் அரசு. அதை வாங்கிக் கொண்டவன் மதுவிடம் கொடுத்தான். அரசு முன்பு எதுவும் பேச வேண்டாம் என அமைதியாகவே இருந்தார் தாத்தா. 

கையில் வாங்கிய காசோலையை பார்த்த மது, “உங்க முழுப் பெயர் திருநாவுக்கரசா?” எனக் கேட்டாள்.

“ஆமாம்” என அவர் கூற, உள்ளே சென்றவள், சில நிமிடங்களில் வெளியே வந்தாள். கையிலிருந்த மரப்பாச்சி பொம்மையை அவரிடம் காட்டி, “இதை நீங்க யாருக்கும் கிஃப்ட் பண்ணுனீங்களா?” எனக் கேட்டாள்.

அதை கையில் வாங்கியவர் ஆழ்ந்து பார்த்துவிட்டு விஸ்வநாதனை தயக்கமாய் பார்க்க, “சார் அதுல இருக்கிற டிஎன் நீங்களா?” எனக் கேட்டான் சக்தி.

“ஆமாம்” என்றார் அவர்.

“அப்போ நீங்கதான் தேவி அத்தையை ஏமாத்தியதா?” என கோவமாக கேட்டான் சக்தி.

விஸ்வநாதன் குழம்பிப் போய் அமர்ந்திருந்தார். பிரபாகரனும் சுஜாதாவும் கூட ஒன்றும் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

“மாமா… தேவி இறந்ததுக்கு பிரபாகரன்தான் காரணம்ன்னு நினனைச்சுக்கிட்டு இருக்கீங்களே. பிரபா இல்லை காரணம். இவன்தான், இவனை சும்மா விடக்கூடாது” என உறுமினார் தங்கதுரை.

அரசுவின் முகத்தை பார்த்த மது, “கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவரை பேச விடுங்க” என்றவள், திருநாவுக்கரசை நோக்கி “நீங்க சொல்லுங்க. தேவி சித்தி என் கணவரோட அத்தை. அவங்களை உங்களுக்கு எப்படி தெரியும்?” என கேட்டாள்.

“இவர்கிட்ட என்ன பேச்சு மது? இவர்தான் என் அத்தையை ஏமாத்தினது” என்றான் சக்தி.

“நான் ஒன்னும் தேவியை ஏமாத்தல.தேவிதான் என்னை ஏமாத்திட்டா” என்றார் திருநாவுக்கரசு.

சக்தி ஏதோ பேசப் போக அவனை பேசவிடாமல் தடுத்த மது, “கொஞ்சம் விவரமா சொல்லுங்க சார். அவங்க இறந்ததுக்கு காரணம் என் அப்பான்னு நினைச்சுகிட்டு தாத்தா அவர் கூட பேசுறதே இல்லை. என்ன நடந்ததுன்னு நீங்க சொன்னாதான் எங்களுக்கு தெரியும்” என்றாள்.

அரசு பேச ஆரம்பிக்க எல்லோரும் அவரையே பார்த்த வண்ணம் இருந்தனர். 

“தேவி ஸ்கூல் படிக்க எங்க ஊருல இருக்கிற ஸ்கூலுக்குதான் வருவா. அப்போ நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். அப்போதான் எங்களுக்குள்ள பழக்கம். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். அவ ஸ்கூல் முடிச்ச பின்னாடி கூட இந்த ஊர் கோயில்ல வெள்ளி செவ்வாய் கிழமைகளில் சந்திப்போம். கோயில்ல ரெண்டு பேரும் பேசிக்க முடியலைன்னாலும் கண்ணாலேயே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்குவோம்”

“நாங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதி. பொருளாதார நிலையிலும் என் குடும்பம் ரொம்ப பின்தங்கி இருந்தது. நான் மிலிட்டரி ல சேர்ந்துட்டேன். இடையில லீவுல வந்தப்போ அவளை சந்திச்சேன். அடுத்த முறை லீவ்ல வர்றப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி, என் நினைவா நானே செஞ்ச இந்த மரப்பாச்சி பொம்மையை அவகிட்ட கொடுத்துட்டு போனேன்”

“அடுத்த முறை நான் வந்தப்போ தேவி உயிரோடு இல்லை” என்றார்.

“உங்களுக்காக வெயிட் பண்ணாம ஏன் இறந்து போனாங்க?” என கேட்டாள் மது.

“நான் எல்லையில இருந்தப்போ தீவிரவாத கும்பலோட நடந்த சண்டையில என்னோட டீம்ல இருந்த நிறைய பேர் இறந்து போனாங்க. என்னோட டீம்ல திருநாவுக்கரசர்ன்னு இன்னொருவரும் இருந்தார். அவருக்கும் குண்டடி பட்டு இருந்தது. எனக்கும் குண்டடி பட்டு இருந்தது. ரெண்டு பேருமே சீரியஸான நிலையில ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம்”

“ராணுவத்தை சேர்ந்தவங்க ராணுவ மருத்துவமனையில் சீரியஸான நிலையில அனுமதிக்கப்படும் போது உடனடியா அவங்க வீட்டுக்கு தகவல் கொடுப்பாங்க”

“அப்படி எங்க ரெண்டு பேர் குடும்பத்துக்கும் நாங்க சீரியஸா இருக்கிற விவரம் தெரிவிச்சாங்க. அதுல சிகிச்சை பலனில்லாமா இன்னொரு திருநாவுக்கரசு இறந்து போயிட்டார். என்ன குழப்பம் ஏற்பட்டுச்சுன்னு தெரியலை, எங்க ரெண்டு பேர் பேரும் ஒண்ணா இருந்ததால தவறுதலா என்னோட குடும்பத்துக்கு நான் இறந்துட்டதா தகவல் அனுப்பிட்டாங்க”

“அப்போ நீங்க இறந்துபோனதா நெனச்சிகிட்டுதான் தேவி அத்தை இறந்துட்டாங்களா?” எனக் கேட்டான் சக்தி.

“நான் குணமாகி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட நண்பன்தான் சொன்னான்.அவன்தான் நான் இறந்துட்டதா தேவிக்கு சொல்லியிருக்கான். நான் உயிரோடதான் இருக்கேன்னு செய்தி இங்க கிடைச்சப்போ தேவி…” என்று கூற முடியாமல் அந்த பொம்மையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அங்கே கனத்த அமைதி நிலவியது. விஸ்வநாதன் மெல்ல அவரது கைகளை பிடித்துக் கொண்டார். “உங்களோட வாழ என் பொண்ணுக்கு கொடுத்து வைக்கலை” என்றார்.

உயிர்ப்பின்றி சிரித்த திருநாவுக்கரசு, “எனக்குதான் கொடுத்து வைக்கலை” என்றார்.

“நீங்க வேற கல்யாணம்…” என ஆரம்பித்த மது, எப்படி கேட்பது என தெரியாமல் பாதியிலேயே நிற்க,

“தேவியை மறக்க வைக்கிற அளவுக்கு என் வாழ்க்கையில நான் வேற யாரையும் சந்திக்கவே இல்லை. அவள் நினைவுகளோடேயே இவ்வளவு காலத்தை கழிச்சிட்டேன். இனி இருக்கப் போகிற கொஞ்ச காலத்துக்கும் அவளோட நினைவுகளே போதும்” என்றார்.

விஸ்வநாதன் சங்கடமாய் பிரபாகரனைப் பார்க்க, “மாமா, என்கிட்ட எதுவும் நீங்க சொல்ல வேண்டாம். உண்மை எதுவும் தெரியாம இருந்ததால நீங்க என்னை தப்பா நினைச்சுக்கிட்டீங்க. அவ்வளவுதான். நானும் அப்பவே தேவி கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னு உங்ககிட்ட சொல்லியிருக்கணும். சொல்லி இருந்தா நம்ம தேவியை அப்பவே விசாரிச்சு இருந்திருக்கலாம். அவள கவனமா பார்த்துகிட்டு இருந்திருந்தோம்ன்னா இவரும் திரும்பி வந்து தேவியை கல்யாணம் செய்திருப்பார். நான் தெளிவில்லாம செய்த காரியத்தாலதான் தேவி இறந்து போயிட்டான்னு இப்ப கூட எனக்கு தோணுது” என்றார்.

“தேவி இறந்து போனதுக்கு யாரையும் காரணம் சொல்ல முடியாது. எங்களோட தலைவிதி” என பெருமூச்சு விட்டவர், நான் கிளம்புறேன்” என்றார்.

கிளம்பும் சமயம் “இந்த பொம்மையை நானே வச்சுக்கட்டுமா?” எனக் கேட்டார்.

“இது உங்களோடது. உங்ககிட்டதான் இருக்கணும். வச்சுக்குங்க” என்றாள் மது. கனத்த மனதுடன் அங்கிருந்து சென்றார் திருநாவுக்கரசு.

விஸ்வநாதன் பிரபாகரனின் கைகளை பிடித்துக் கொண்டு “பிரபா என்னை…” என கூற வர “மாமா தயவுசெய்து மன்னிப்பெல்லாம் கேட்டு என்னை அன்னிய படுத்தாதீங்க” எனக் கூறி அவரை தழுவிக்கொண்டார்.

பார்த்த மற்றவர்களுக்கும் கண்கலங்கிப் போனது.

பிரபாகரனும் சுஜாதாவும் கூட புயல் நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்க, இன்னும் சிலரிடமும் நிதி உதவி பெற்று கிராம மக்கள் பாதிப்பில் இருந்து வெளிவர உதவி செய்தான் சக்தி. குரு துணை நின்றான்.

*******

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இரண்டு தொட்டில்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கூடத்தில் இருந்தன. சக்திதரன் மதுமிதா தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா.

பிரபாகரன், சுஜாதா, மயூரி,அஜய், கௌசிக்,சுகன்யா என அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். சுகன்யா மூன்று மாதம் கருவுற்று இருந்தாள்.

இரு குழந்தைகளும் மதுவின் மடியில் இருந்தார்கள். அவர்கள் ஊர் வழக்கப்படி பெரியாச்சிக்கு படைக்க கறி குழம்பு, கோழி குழம்பு, கருவாட்டு குழம்பு, அவித்த முட்டை, பச்சரிசி கொழுக்கட்டை, முருங்கைக்கீரை, களி அனைத்தும் செய்து வாழையிலையில் வைக்கப்பட்டிருந்தது.

படியில் வேம்பு காப்பு, பால மணி, கருப்பு நிற வளையல்கள் வசம்பு மாலை, வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞாண் கொடி, தங்க சங்கிலி, தங்க வளையல் அனைத்தும் போட்டு குழந்தைகளுக்கு முன்னர் பெரியவர்கள் ஒவ்வொருவராய் வந்து குலுக்கி சென்றனர். குழந்தைகள் இருவருக்கும் சுடலை பொட்டு வைத்து விட்டு, அணிகலன்களை அணிவித்து விட்டனர்.

குழந்தைகளுக்கு தேன் தடவி, இருவருக்கும் ஏற்கனவே தேர்ந்தெடுத்த பெயர்களான கிரிதரன், நிரஞ்சனா என்ற பெயர்களை வைத்தார் அன்னபூரணி. பின்னர் அவரே கிரிதரனை சுஜாதா கையிலும், நிரஞ்சனாவை அனுசுயா கையிலும் கொடுத்து தொட்டியில் இடச் சொன்னார். ஒவ்வொருவராய் வந்து பெயரைச்சொல்லி தொட்டிலை ஆட்டிச் சென்றனர்.

“என்ன குழந்தை டாக்டர். நீ எப்ப பேரப்பிள்ளை பெத்துக் கொடுக்கப் போற?” என மயூரியைப் பார்த்து அன்னபூரணி கேட்க, குழந்தைப் பேறை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த மயூரிக்கும் ஆசை வந்தது.

மயூரி கேள்வியாக அஜயைப் பார்க்க “சரியா போச்சு போ. இப்பதான் நீ பேராண்டிய கண்ணாலேயே பாக்குற, இப்படியே பார்த்துக்கிட்டே இரு. அதுக்குள்ள உன் தங்கச்சி அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு புள்ளைங்கள பெத்து தரப் போறா” என அன்னபூரணி கூற சிரிப்பலை எழுந்தது.

“அப்பத்தா வர வர உன் வாய் தமிழ்நாட்டு பார்டரையே தாண்டிப் போகுது” என சக்தி கூற, தொட்டியில் படுத்திருந்த அவனது மகன் அழ ஆரம்பித்தான். சக்தி அவனை கையில் தூக்கிக் கொள்ள, அவன் சட்டையை நனைத்து வைத்தான்.

“தொட்டியில் படுத்திருக்கிற வரை சும்மா இருந்துட்டு நான் தூக்கினதுக்கு அப்புறம் என்னை ஏண்டா நனைக்குற” என சக்தி கேட்க, “அப்படித்தாண்டா… என்னை ஏதாச்சும் சொன்னீனா என் கொள்ளுப் பேரன் அப்படித்தான் பன்னீர் அபிஷேகம் செய்வான்” என்றார் அன்னபூரணி.

“நீ இப்படியே பேசிக்கிட்டே இரு. அவனுக்காவது பன்னீர் அபிஷேகம் உனக்கு சந்தன அபிஷேகம் இருக்கு” என மணிமேகலை கூற, “அடி போடி கிறுக்கச்சி. இவன் பண்ணாத அபிஷேகத்தையா அவன் புள்ளைங்க பண்ணிட போகுது” என அன்னபூரணி சளைக்காமல் பதில் கூற, சிரிப்பலை ஓய வெகு நேரமானது.

ஊருக்கே கறி விருந்து நடைபெற்றது. கௌசிக்கும் சுகன்யாவும் ஒரு வாரம் அங்கே தங்கலாம் என்று இருந்து விட்டனர்.

மதுவின் பிரசவத்தின்போதே பிரபாகரனும் சுஜாதாவும் வந்துவிட்டனர். இன்று வரை அங்கேயே இருந்தனர். இதற்கு மேல் மருத்துவமனை செல்ல வேண்டும் என்பதால் சிறப்பாக விழாவை முடித்துக்கொண்டு பிரபாகரன், சுஜாதா, மயூரி, அஜய் ஆகியோர் சென்னை கிளம்பினர். அவர்களுடன் மதுவும் சென்னை கிளம்பினாள்.

பிரசவத்திற்கு சக்தி அவளை பிறந்தவீடு அனுப்பவில்லை. இப்பொழுதும் அனுப்பவில்லை என்றால் நன்றாக இருக்காது என்பதால் சக்தி மறுத்து எதுவும் பேசவில்லை.

சக்தி, மது திருமணத்திற்கு பின்னர் வரும் முதல் பிரிவு. மது சென்னை வந்த பிறகு ஒரு நாள் மட்டும் சுஜாதா வீட்டிலேயே இருந்தார். அடுத்த நாளிலிருந்து மருத்துவமனை செல்ல ஆரம்பித்து விட்டார். மதுவையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள ஆள் வைத்து விட்டார்.

மதுவுக்கு எதுவும் சிரமமாக இல்லாதவாறு அவர் பார்த்துக் கொண்டார். ஆனால் மது, சக்தி அருகில் இல்லாததை வெகுவாக உணர்ந்தாள். மதுவாவது குழந்தைகள் முகம் பார்த்து மனதை தேற்றிக் கொண்டாள். சக்தியின் நிலைமை சொல்லவும் வேண்டாம்.

ஒரு நாள் காலைப் பொழுதில் சக்தி திடீரென வந்து நின்றான். மது சென்னை வந்து இருபது நாட்கள்தான் ஆகியிருந்தன.

“மது இல்லாம கிராம மக்கள் ரொம்ப சிரமப் படுகிறாங்க. அதான் கூப்பிட வந்துட்டேன்” என காரணம் வேறு சொன்னான்.

“குழந்தைகளை வச்சுக்கிட்டு அவ எப்படி ஹாஸ்பிடல் போவா?” எனக் கேட்டார் சுஜாதா.

“டெய்லி ஒரு மணி நேரம் மட்டும் ஹாஸ்பிடல் போவா. அந்த நேரம் அம்மா, பாட்டி, அண்ணி எல்லாரும் பார்த்துக்குவாங்க” என்றான் சக்தி.

உண்மையில் மதுவைத் தேடி மக்கள் வந்தார்கள்தான். அவர்கள் தேடியதை விட சக்திதான் மதுவை மிகவும் அதிகமாக தேடினான். இதையே காரணமாக வைத்துக்கொண்டு அழைக்கவும் வந்துவிட்டான்.

சுஜாதா என்ன சொல்வாரோ என பிரபா நினைக்க, “அழைச்சிட்டுப் போங்க” என சாதாரணமாக கூறிவிட்டார்.

பிரபா ஆச்சரியமாய் பார்க்க, “இங்க மது இருக்கான்னுதான் பேர். நம்மளால டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுதா? மது சின்ன வயசிலேயே நம்மள ரொம்ப மிஸ் பண்ணினதா சொல்லுவா. இப்போ அவ ஹஸ்பண்ட்டை ரொம்ப மிஸ் பண்றா. முடிஞ்சு போனத சரி பண்ண முடியாது. ஆனா, இப்போ அவ சந்தோஷத்தை அவளுக்கு கொடுக்கலாம்தானே” என சுஜாதா கேட்க, “நீ ரொம்ப மாறிட்ட சுஜாதா” என்றார் பிரபா. சுஜாதா சிரித்துக்கொண்டார்.

வெற்றிகரமாக தன் மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு அழகியசூரபுரம் வந்துடைந்து விட்டான் சக்தி.

மதுவுடன் தான் தங்கி கொள்வதாக அனுசுயா கூறியும் சக்தி மறுத்துவிட்டான். அவனுடனே தங்க வைத்துக் கொண்டான்.

“டேய் பேராண்டி. பச்சை உடம்புக்காரி. நீ எதுக்கும் மூணு மாசம் தனியா படுத்துக்குறது நல்லது” என அன்னபூரணி கூறியதற்கு “எல்லாம் எனக்கு தெரியும்” என கூறிவிட்டான்.

இரவில் மதுவுக்கு துணையாக சக்தியே குழந்தைகளை பார்த்துக் கொண்டான்.

“சரியான ரௌடி நீங்க. அத்தை என் கூட தங்கிகிட்டா நீங்க சிரமமில்லாமல் தூங்கலாம் தானே? அப்படி என்ன பிடிவாதம்? “ எனக் கேட்டாள் மது.

“நீ இல்லாம எப்படி எனக்கு தூக்கம் வரும்? நீ பக்கத்துல இருந்தாலாவது இப்படி இடை இடையில் தூங்கிக்குவேன். நீ இல்லன்னா சுத்தமா தூங்க மாட்டேன்” என்றவன், சற்று குரலை தனித்து, “உனக்கு மட்டும் என்ன… நான் இல்லாம தூக்கம் வந்துடுமா?” எனக் கேட்க சிரித்துக்கொண்டாள் மது.

“ஆமாம் அப்படின்னு சொன்னாக்கா உனக்கு கிரீடம் இறங்கிடுமே… சரி தூங்கு. இவன் தூங்கிட்டான், கொஞ்ச நேரத்துல என் பொண்ணு முழிச்சுக்கப் போறா. அதுக்குள்ளே கொஞ்ச நேரம் தூங்கிக்க” என்றான்.

மது தூங்க, அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்தாள் நிரஞ்சனா. மது எழுந்துகொள்ள, ஈரம் செய்துவிட்ட கிரிதரன் அழ ஆரம்பித்தான். சக்தி மகனை கவனிக்க ஆரம்பித்தான்.

“என்னை ரொம்ப மிஸ் பண்ணுனீங்களா?” எனக் கேட்டாள் மது.

“வீட்டுக்கு வரவும் பிடிக்காது. காட்டுல வேலை எதுவும் ஓடாது. பைத்தியம் பிடிக்க வச்சிட்ட நீ” என்றான்.

“எனக்கு மட்டும் என்னவாம்?” என்றாள் மது.

“தெரியும்டி சுண்டெலி. அதான் ஹாஸ்பிடல் காரணத்தை காட்டி உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.

சக்திதரனுக்கும் மதுமிதாவுக்கு இடையில் அவர்களது காதல் சின்னங்கள் உறங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அவர்களும் நிம்மதியாய் உறங்கினர்.