மதுவுக்கு அந்த தோப்பு ஓட்டு வீடு மிகவும் பிடித்து விட்டது. ஜன்னலைத் திறந்துவிட, அவளது முகத்தை மாசில்லாத தென்றல் வருடிச் செல்ல அந்த தருணத்தை ரசித்திருந்தாள். பேருந்தில் நன்றாக உறங்கியதால் உறக்கம் வருவது போல தெரியவில்லை. அவளது பெற்றோருக்கு கைப்பேசியில் பேசிவிட்டு, குளியலறையை தேடிச் சென்றாள்.
பின்கட்டில் குளியலறை இருந்தது. குளித்து முடித்து சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டாள். சமையலறை சென்று எட்டிப் பார்க்க, பொன்னுத்தாயி இட்லியும் சாம்பாரும் செய்திருந்தார்.
“ம்… உங்க சமையலோட வாசம் என்னை இங்கேயே இழுத்துட்டு வந்துட்டு” என மது கூற, “சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டார் பொன்னுத்தாயி.
“ரொம்ப பசி, கொடுங்க சாப்பிடுறேன்” என்றவள் ரசித்து சாப்பிடவும் செய்தாள். காரமாக இருந்தாலும் சுவையாக இருந்தது.
“மதியம் என்ன செய்யட்டும்மா?” என பொன்னுத்தாயி கேட்க, “டெய்லி என்கிட்ட கேட்காதீங்க. உங்களுக்கு தோணுறதை செய்யுங்க. அப்படி எனக்கு எதுவும் சாப்பிடணும் போல இருந்தா நானே சொல்றேன்” என்றாள்.
சாப்பிட்டு முடித்து சக்திக்கு அழைக்க சில நிமிடங்களில் அவனும் வந்து விட்டான்.
“வீடு பிடிச்சிருக்கா? எதுவும் வசதி குறைவா இருக்கா?” எனக் கேட்டான் சக்தி.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இந்த வீடு அமைதியா பிளசண்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
பின்னர் இருவரும் அந்த வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூர நடைப்பயணத்தில் இருந்த சிகிச்சையகத்திற்கு சென்றனர். மருத்துவர் மூர்த்தியிடம் கேட்டு முதலுதவி செய்வதற்கு என முடிந்த அளவு அங்கு ஏற்பாடுகள் செயதிருந்தான் சக்தி.
“வலது காலை வச்சி உள்ள போங்க” என சக்தி கூற சிரித்தாலும் அவன் வார்த்தையை மீறாது அவ்வாறே சென்றாள் மது.
உள்ளே சென்று எல்லாவற்றையும் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள்.
“பரவாயில்லை, ஓரளவுக்கு மேனேஜ் பண்ற மாதிரிதான் இருக்கு. ஆனாலும், எனக்கு இன்னும் கொஞ்சம் தேவைப்படும். செஞ்சு தருவீங்களா?” எனக் கேட்டாள்.
“இந்த இடம் எங்களோடது. இதை சரி பண்ணினதும் நாங்கதான். மத்தபடி ஊருல முக்கியப்பட்ட வசதியானவங்ககிட்ட எல்லாம் டொனேஷன் மாதிரி வாங்கித்தான் இதெல்லாம் பண்ணியிருக்கோம். நீங்க என்ன வேணும், எவ்ளோ பட்ஜெட்ன்னு சொல்லுங்க. முடிஞ்சவரை செய்யப் பார்க்கிறோம்” என்றான்.
எல்லாவற்றையும் அவனே முன்னின்று செய்தாலும், நான்தான் எல்லாம் செய்தேன் என பெருமையாக அவளிடம் சொல்லாமல் பன்மையிலேயே கூறினான். மூர்த்தி கூறியதாக பிரபாகரன் மூலம் சக்திதான் அனைத்தையும் செய்திருப்பது மதுவுக்கு தெரியும். ஆனால் அவன் அதை பெரிதாக காட்டிக் கொள்ளாமல் பேசியதும், தான் கேட்டதும் உடனே செய்கிறேன் எனக் கூறாமல் நடப்பை எடுத்துக் கூறி, செய்யப் பார்க்கிறேன் என கூறியதும் மதுவை வெகுவாக கவர்ந்தது.
அவளுக்கு தேவையான வசதிகள் செய்து தர எவ்வளவு செலவாகும் என மனதிற்குள் கணக்கிட்டவள், மேலும் சுமையளிக்க விரும்பாமல் தன் தந்தையிடம் இதுபற்றி பேசி பின் முடிவெடுக்கலாம் என நினைத்தாள்.
“நான் நல்லா பார்த்துட்டு இன்னும் என்னென்ன வேணும்னு சொல்றேன். அப்புறமா இதைப் பத்தி பேசலாம். இங்க என்னென்ன மாதிரி மெடிக்கல் எமர்ஜென்சி ஆகியிருக்குன்னு சொல்ல முடியுமா?” என கேட்டறிந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் இரண்டு, மூன்று பாட்டிமார்கள் அங்கு வர மது அவர்களின் பிரச்சினைகளை கேட்டு பரிசோதிக்க ஆரம்பிக்க, “எதுவும்னா என்னைக் கூப்பிடுங்க. நான் வர்றேன்” என விடைபெற்று கிளம்பி சென்றான் சக்தி.
அரை நாளுக்கு மேல் அங்கு மதுவுக்கு வேலையில்லை. அந்த அரை நாளுமே பாதி நேரம் நெட்டித் தள்ள வேண்டியதாக இருந்தது. என்னென்ன தேவை என்று குறித்து வைத்துக் கொண்டாள். நாளையிலிருந்து ஏதாவது மருத்துவ புத்தகத்தை எடுத்து வந்து படிக்கலாம் என முடிவு செய்து கொண்டாள். மதியம் 2 மணிக்கு மேல் கிளம்பி வீட்டிற்கும் சென்று விட்டாள்.
மதிய சமையலை முடித்து வைத்துவிட்டு பொன்னுத்தாயி சென்று விட்டாள் போலும். ஒரு குளியலைப் போட்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தாள். புளிப்பு, காரம் எல்லாம் தூக்கலாக இருக்க மதுவுக்கு இலேசாக கண் கலங்கியது. ஆனாலும் பசி நன்றாக இருந்ததால் சாப்பிட்டு முடித்தாள்.
தன் தந்தையிடம் பேசி அங்கு தேவை என நினைத்ததை கூறினாள். இதெல்லாம் பிரபாகரனுக்கு ஒரு பொருட்டல்ல. இருந்தும் எவ்வாறு செய்ய முடியும் என யோசிக்க, “டாடி நீங்க செஞ்ச மாதிரி தெரிய வேண்டாம், நீங்க எனக்கு எல்லாம் அரேஞ் பண்ணுங்க. நான் சமாளிச்சுக்கறேன்” எனக் கூற அவரும் ஒத்துக் கொண்டார்.
மருத்துவம் சம்பந்தமான புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள் மது. சுற்றிலும் மரங்கள் இருக்க காற்று அலையென வீச, திண்ணையில் இருந்த மரத்தால் செய்யப்பட்ட சாய்வு நாற்காலி ஒன்றில் அமர்ந்து புத்தகத்தை விரித்து பார்வையை ஓட்டினாள்.
நேரம் நான்கை நெருங்கிக் கொண்டிருக்க மதுவைப் பார்க்க தோப்பு வீட்டிற்கு சக்தி வந்தான். சாய்வு நாற்காலியில் கனமான புத்தகம் ஒன்று அவள் நெஞ்சில் விரிந்து கிடக்க, அதை அணைத்தவாறு சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தாள் மது.
காற்றில் அவளது தலை முடிகள் முகத்தில் விழுந்து தவழ அதை அகற்ற, சக்தியின் கை அனிச்சையாய் அவளது முகத்தினருகே சென்று, பின் அகற்றாமலேயே பின்னிழுத்துக் கொண்டான்.
சில நிமிடங்கள் அங்கேயே நின்று அவளை ரசித்து பார்க்க, ‘தப்பு செய்யுறடா நீ’ என அவன் குரல் அவனுக்கு மட்டும் கேட்க, ‘பார்க்கத்தானே செய்றேன். இதிலென்ன தப்பு?’ என சக்தி பதில் கூற, ‘உரிமை இல்லாத பொண்ணை அவள் அனுமதி இல்லாமல் கண்ணால் பார்க்கிறது கூட தப்புதான்’ என நியாயத்தை அந்தக் குரல் எடுத்துரைக்க, அதற்கு கட்டுப்பட்டு திரும்பிச்செல்ல எத்தனித்தான் சக்தி.
மது புரண்டு படுக்க, புத்தகம் கீழே விழ அந்த சத்தத்தில் கண்விழித்தாள். சக்தி செல்வதை கவனித்தவள் “சக்தி” என அழைத்தாள்.
திரும்பிப் பார்த்தவன் “எழுந்துட்டீங்களா?” என கேட்டுக்கொண்டே கீழே விழுந்த புத்தகத்தை கையில் எடுத்து “எவ்ளோ பெரிய புத்தகம்?” என வியப்பாய் கேட்டான்.
சிரித்த மது அந்த புத்தகத்தை கையில் வாங்கிக்கொண்டு “நீங்க வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா?” எனக் கேட்டாள்.
“இல்ல, இப்பதான் வந்தேன். என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் என் தாத்தாகிட்ட அறிமுகப்படுத்தலாம்ன்னு நினைச்சேன்” என்றான்.
ஒரு நொடி தயங்கியவள், “சரி இருங்க ஒரு 5 மினிட்ஸ் வந்துடறேன்” எனக் கூறி உள்ளே சென்றாள்.
“டாக்டரம்மா இந்த முடிய கொஞ்சம் பின்னல் போட்டுகிட்டு வர்றீங்களா?” என சக்தி கேட்க அவனை ஒரு மாதிரியாக பார்த்தாள்.
“தப்பா எடுத்துக்காதீங்க முதமுதல்ல பெரியவங்கள பார்க்க வர்றீங்க. இப்படி தலையை விரிச்சுப் போட்டுட்டு வந்தா நல்லா இருக்காது. அதுக்காக சொன்னேன். எங்க ஊர்ல இப்படி யாரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்க மாட்டாங்க” எனக் கூறினான்.
‘என்ன இவன்?’ என நினைத்தாலும் அவன் சொன்னபடியே தலைமுடியை தூக்கி ஒரு குதிரை வால் போல் போட்டு கொண்டே கிளம்பினாள். சக்தி அவனுடைய புல்லட்டில் வந்திருந்தான். “வண்டிய எடுங்க கிளம்பலாம்” என மது கூற,
“அது…” என தயங்கிய சக்தி “வேணாங்க, நடந்து போற தூரம்தான் நடந்தே போலாம்” என்றான்.
“இப்போ ரைட்ல போலாம். திரும்பி வர்றப்ப தோப்பு வழியா வரலாம்” எனக் கூறியவள் வலது பக்கமாக நடக்க ஆரம்பித்தாள்.
சக்தியும் சிறிது இடைவெளி விட்டு அவளுடன் இணைந்து கொண்டான். சில ஓட்டு வீடுகளும், ஓலை வீடுகளும், இடையிடையே மிகச் சில காரை வீடுகளுமாய் மாறி மாறி இருக்க மது வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள்.
இடையில் சென்ற சிலர் சக்தியை பார்த்து புன்னகைத்து செல்ல, சிலர் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு செல்ல “எல்லோருக்குமே உங்கள தெரிஞ்சிருக்கு” என்றாள் மது.
“இந்த ஊர்ல மொத்தம் இருக்குற குடும்பங்களே 200க்குள்ளதான். எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்” என்றான்.
“இங்க எல்லாருமே விவசாயம்தான் பார்க்கிறாங்களா?” எனக் கேட்டாள்.
“ஆமாம் சில பேர் சொந்தமா நிலம் வச்சி விவசாயம் பண்றாங்க. சிலபேர் அடுத்தவங்க நிலத்தில வேலை பார்க்குறாங்க. அதை விட்டா ஆடு, மாடு, கோழின்னு வளர்ப்பாங்க. விவசாயத்தை விட்டா எங்களுக்கு வேற ஒன்னும் தெரியாது” என்றான்.
“யாரும் படிச்சு வேலைக்கு எல்லாம் போகலையா?” எனக் கேட்டாள் மது.
“இங்க இருக்கிறதே ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான். அதுல கூட படிக்கிற பிள்ளைங்க எண்ணிக்கை கம்மிங்கறதனால ரெண்டு டீச்சருங்கதான். மத்தபடி ஏழு எட்டு கிலோமீட்டர் தள்ளிப் போனாதான் பெரிய பள்ளிக்கூடம் இருக்கு. காலேஜ் போகணும்னா திருவாரூர் இல்லைனா மன்னார்குடிதான். சிலபேரு டிகிரி முடிச்சா கூட அடுத்தவன்கிட்ட வேலை பார்த்து என்ன வந்துடப் போகுதுன்னு விவசாயத்தையே பார்க்குறாங்க. இல்லைன்னா இந்த ஊரை விட்டே போய்டுறாங்க. சில பேர் ரெண்டும் இல்லாம வெளிநாட்டுல போய் கூலி வேலை பார்க்குறாங்க” என்றான்.
மதுவுக்கு இதையெல்லாம் கேட்க புதிதாகத்தான் இருந்தது. நகர்ப்புறங்களில் எத்தனை பள்ளிகள்… எத்தனை மருத்துவமனைகள்… படிப்பைத் தாண்டி இன்னும் படிப்பை சாராத செயல்பாடுகளான ஓவியம், நீச்சல், விளையாட்டு, இசை, நடனம் என எத்தனை எத்தனை சிறப்பு பயிற்சி கூடங்கள் வேறு. பல பள்ளிகளிலேயே இவையெல்லாம் ஒரு அங்கமாக இருக்கின்றன. ஆனால் இங்கே அடிப்படையான கல்விக்கும் மருத்துவத்துக்குமே எத்தனை பாடு என எண்ணிக் கொண்டே நடந்தாள்.
“இதுதாங்க எங்க வீடு” என சக்தி கூற, யோசனையை விடுத்து வீட்டைப் பார்த்தாள்.
வெளியே இரும்பு கதவு போடப்பட்டிருக்க அந்த கிராமத்திலேயே பெரிய வீடாக இருந்தது சக்தியின் வீடு. வீட்டிற்கு முன்னால் சில கோழிகளும், சேவல்களும் திரிந்து கொண்டிருக்க, வீட்டின் பக்கவாட்டில் கொஞ்சம் இடைவெளிவிட்டு மாட்டுத்தொழுவம் இருக்க மாடுகள் வைக்கோலை அசை போட்டுக் கொண்டே படுத்துக் கிடந்தன.
ஒரு மாடு மட்டும் சத்தம் போட்டுக் கொண்டே இருக்க, “மருது சிவப்பி பக்கத்திலேயே இரு” என ஒருவனிடம் கூறிவிட்டு மதுவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
வீட்டின் கூடத்தில் மரத்தாலான சோஃபாவில் விஸ்வநாதன் அமர்ந்திருக்க, “தாத்தா இவங்கதான் நம்ம ஊருக்கு வந்திருக்கிற டாக்டர். பேரு மதுமிதா” என அறிமுகப்படுத்தி வைத்தான் சக்தி.
“வணக்கம்” என இரு கரங்கள் குவித்து மதுமிதா வணக்கம் வைக்க, பதிலுக்கு வணக்கம் வைத்து “உட்காரும்மா” என்றார்.
“இல்ல இருக்கட்டும்” என மரியாதையாக மது கூற, “பெரிய படிப்பு படிச்ச பொண்ணு நீ உட்காரும்மா” என்றார் தாத்தா.
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள் வளர்மதி.
“என்னோட அண்ணி” என சக்தி கூற இருவரும் பரஸ்பரம் சிரித்துக் கொண்டனர்.
மதுவிற்கு தங்குமிடத்தில் வசதிகள் எல்லாம் இருக்கிறதா என விசாரித்து அறிந்த விஸ்வநாதன், “உன் அப்பா அம்மா என்ன பண்றாங்கம்மா?“ எனக் கேட்க, மதுவிற்கு குடித்துக்கொண்டிருந்த தேநீர் புரைக்கேற அவளது முகமும் மாறியது.
“பார்த்தும்மா” என விஸ்வநாதன் கூற, அதற்குள் சுதாரித்தவள் “என் அப்பா அம்மா ரெண்டுபேருமே டாக்டர்ஸ். ரெண்டு பேருமே யுஎஸ்ல இருக்காங்க. இங்க நான் மட்டும்தான் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். டூ இயர்ஸ்ல என் பேரண்ட்ஸ்ம் இந்தியா வந்திடுவாங்க. எனக்கு யுஎஸ் போகப் பிடிக்கலை. என் அப்பாவுக்கு இப்படி வில்லேஜ் ல சர்வீஸ் பண்ணனும்னு ரொம்ப ஆசை. அவரால முடியலை, அதான் நான் வந்திருக்கேன்” என கதை அளந்தாள்.
உள்கட்டிலிருந்து அனுசுயாவும் அன்னபூரணியும் வெளியில் வர அவர்களையும் அறிமுகம் செய்வித்தான் சக்தி. அனுசுயாவையே மது பார்த்துக்கொண்டிருக்க “என்னமா என்னை ஏன் இப்படி பார்க்கிற?” எனக் கேட்டார் அனுசுயா.
“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு. அதான்” என சமாளித்தாள் மது.
வெளியே இருந்து ஓடிவந்த மருது, “ஐயா நம்ம சிவப்பிக்கு பிரசவம் ஆயிடும் போலங்க” எனக்கூற வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சக்தி விரைவாக வெளியேற, அனைவரும் அவன் பின்னாலேயே சென்றனர்.
அப்பொழுதுதான் மது கவனித்தாள். அவள் உள்ளே வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு படுத்திருந்த மாடு சினையாக இருந்தது. கன்றின் காற்குழம்புகள் இரண்டின் முனையும் வெளியே தெரிய, சில நொடிகளில் கன்றின் தலையும் சேர்ந்து வெளியே வந்தது. சக்தியே முன்னின்று லாவகமாக கன்றின் தலையையும் முன்னிரு கால்களையும் சேர்த்து பிடித்திழுக்க சிவப்பி கன்றை பிரசவித்தது. மாட்டிற்கு அருகிலேயே வைக்கோலில் மெத்தை போன்று அமைத்து கன்றை படுக்கவைத்து வைக்கோல் கொண்டு சுத்தப்படுத்ததிக் கொண்டே, “மருது ஓடிப்போய் மூங்கில் தளையையும் புல்லையும் கொண்டு வந்து சிவப்பிக்கு போடு” என்றான்.
மருதும் அவ்வாறே செய்ய, அதை தின்று வயிறு நிறைந்து நஞ்சுக்கொடியையும் வெளித்தள்ளியது சிவப்பி. அருகில் படுத்திருந்த தன் கன்றை, நாக்கால் நக்கி அதன் முகத்தில் மோதியது சிவப்பி.
சிவப்பியை குளிக்க வைத்து, மஞ்சள் பூசி குங்குமம் இட்டு, அனுசுயா கொண்டு வந்த கருப்பட்டி கலந்த பச்சரிசி மாவை சிவப்பிக்கு சாப்பிடக் கொடுத்தான். பின் அங்கேயே இருந்த குளியலறையில் சென்று குளித்தவன், ஈரத் துண்டுடன் வீட்டிற்குள் சென்றான்.
“எலேய் சக்தி… எங்கப்பு ஒன் அரையில கயிற காணோம். ஆம்பள புள்ள கயறில்லாம இருக்கலாமாய்யா? முதல்ல கயிற கட்டு” என அன்னபூரணி சத்தமாக கூற, “என் மானத்தை வாங்காதே, கயிறு கட்டியிருக்கேன், உன் கண்ணுக்கு தெரியலன்னா நான் என்ன பண்றது?” எனக் கூறிக் கொண்டே உள்ளே விரைந்தான் சக்தி.
சிரித்துக்கொண்டே “என்ன சொல்றாங்க?” என வளர்மதியிடம் மது கேட்க, “அது இடுப்புல ஆம்பள பிள்ளைங்க எப்பவும் அரைஞாண் கயிறு கட்டி இருக்கணும். அதைத்தான் அம்மாச்சி சொல்லுது” என்றாள் வளர்மதி.
“ஆமாம் தாயி. ஆம்பளைங்க இடுப்புல கயிறு கட்டுனா குடலிறக்கம் வராதுன்னு சொல்லுவாங்க. இந்தப் பையன் என்னடான்னா கயிறு இல்லாம திரியிறான், கேட்டா கட்டியிருக்கேன்னு சொல்றான்” எனக் கூறிக்கொண்டே அவரும் உள்ளே சென்றார்.
“சக்திக்கு மாட்டுக்கு பிரசவம் எல்லாம் பார்க்க தெரியுமா?” எனக் கேட்டாள் மது.
“சிவப்பிக்கு மட்டும் இல்லை அதோ நிக்குதே வெள்ளையம்மா, அதுக்குப் பின்னாடி நிக்குதே முத்துப்பேச்சி, அதுங்களுக்கு கூட சக்திதான் பிரசவம் பார்த்தது” எனக் கூறினாள் வளர்மதி.
தனது அறைக்கு சென்ற சக்தி மாற்றுடை எடுக்க, ஏதோ கீழே விழுந்தது. உடை மாற்றிக் கொண்டவன், என்னவென்று எடுத்துப் பார்த்தான். பிரபாகரன் கொடுத்துச் சென்ற அவரது மகளின் திருமணப் பத்திரிக்கை.
மீண்டும் உள்ளேயே வைக்கப் போனவன், எதையோ நினைத்துக்கொண்டு பத்திரிக்கையை திறந்து பார்த்தான். பத்திரிக்கையின் உள்ளே தங்கள் நல்வரவை நாடும் என்ற வாசகங்களுக்கு கீழே மதுமிதா எம்பிபிஎஸ் என்ற பெயரும் இருந்தது. யோசனையாய் அதை மீண்டும் பத்திரப்படுத்தி வைத்தான்.
கூடத்திற்கு வந்தவன், “டாக்டர் எங்க?” எனக் கேட்டான்.
ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்தவன், மதுவை பார்க்க, தாயிடம் பால் அருந்திக் கொண்டிருந்த கன்றை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் மது. முகம் முழுக்க யோசனையுடன் அவளையே பார்த்து நின்றான் சக்தி.