அத்தியாயம் 2

 
இரண்டு வருடங்களுக்கு முன்பு
 
சத்யகலா வாசனின் இரண்டாவது தங்கை. சத்யா படித்தாலும் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று வீட்டிலையே! இருந்து விட வாசன் அவளை வற்புறுத்தவில்லை. அவளுக்கும் பதினெட்டு வயதிலிருந்து மாப்பிள்ளை தேடிக்கொண்டுதான் இருக்கிறான் ஒன்றும் சரியாக அமையவில்லை. மாப்பிள்ளைக்கு பிடித்திருந்தால் சத்யாவுக்கு பிடிப்பதில்லை. சத்யாவுக்கு பிடித்திருந்தால் மாப்பிள்ளைக்கு பிடிப்பதில்லை. இருவருக்கும் பிடித்திருந்தால் மாப்பிள்ளையின் அன்னைக்கோ அக்காக்கோ சத்யாவை பிடிக்க மாட்டேங்குது. இப்படியே! நாட்கள் செல்ல அவள் வயது ஏறிக்கொண்டே போக வாசன் மற்றும் நித்யா மட்டும்தான் கவலையடைந்தனர். 
 
தன்னைத் தேடி ராஜகுமாரனே! வந்து விடுவான் என்று கனவுலகில் வாழ்ந்துகொண்டிருந்தாள் சத்யா. அவளிடம் யார் எடுத்துக் கூறுவது. ஒரு பெண்ணை பார்த்த நொடி பிடித்து விட முக அழகோ! வசீகரமான தோற்றமோ! பத்தாதுமா! பேச்சு ஒழுங்கா இருக்க வேண்டும் என்று.
 
சத்யகலா எதிரில் யார் இருக்கிறார்கள் என்று பாராமல் பேசிவிடுவதுதான் மற்றவர்களை முகம் சுளிக்க செய்து விடுவது அவளை பிடிக்காமல் போவதற்கும் காரணம். அது மாத்திரமன்றி தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு வேறு அவளுக்கு.
 
அன்னை வளர்த்திருந்தால் இவள் இப்படி இருந்திருக்க மாட்டாள். தான் வளர்த்ததனால்தான் இவள் இப்படி இருக்கிறாளோ! என்று நித்யாவுக்கு சில நேரம் குற்ற உணர்ச்சியாக இருக்கும். வாசன் தான் அவளை சமாதானப் படுத்துவான்
 
ஸ்ரீவத்சன் தற்பொழுது வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றான். அவன் ஒருவன்தான் குடும்பத்தில் படித்து முன்னேறியவன் என்ற பெருமையை தத்தெடுத்தவன். ஆனால் தன்னை படிக்க வைத்த அண்ணனையோ! அன்னையாக அரவணைத்த அக்காவையே இன்றுவரை தொடர்புகொண்டு பேசவில்லை. அவன் மதிக்கும் ஒரே நபர் ஆத்மநாதன். மாசம் தவறாமல் மாமாவுக்கு அழைத்து நலம் விசாரித்து வீட்டு செய்திகளைக் கேட்டுக்கொள்வான்.
 
ஸ்ரீராமுக்கு படிப்பு ஏறவில்லை. தொழில் செய்து சீக்கிரம் பணம் சம்பாதிப்பதுதான் அவன் ஒரே குறி. யாரிடமும் கைகட்டி வேலை பார்ப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் வாசனிடம் பேசி வீட்டை அடமானம் வைத்து லெதர் பிசினஸ் ஆரம்பித்து ஓஹோ என்று சென்னையில் இருக்கிறான். காலேஜ் செல்லும் பொழுதே காதல் வேறு. அக்கா சத்யகலா, இரு அண்ணன்களை பற்றி கவலை படாமல் கல்யாணமும் செய்துகொண்டான். திருட்டு கல்யாணம்தான். அந்த பஞ்சாயத்து வேறு இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. 
 
ஸ்ரீவத்சன் ஆண் பிள்ளை அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான் சத்யகாலாவுக்கு இருப்பத்தி ஆறு வயதாகிறது. அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்தால் போதும். தன் பாரம் தீர்ந்து விடும் என்று வாசன் நினைக்க மாப்பிள்ளை கிடைப்பதுதான் குதிரைக் கொம்பானது.
 
ஒருவாறு சாத்தியகாலவுக்கு சொந்தத்திலையே! மாப்பிள்ளை கூடி வர சந்தோஷமடைந்தான் வாசன். உடனே! நித்யாவை அழைத்து விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள் தங்கை.
 
“மாப்பிளை ரமேஷுக்கு நம்ம சத்யாவை பிடிச்சிருக்காம் நித்தி. அவங்க குடும்பமும் ரொம்ப பெரிய குடும்பம் இல்லையா. ரெண்டு அண்ணன்க கல்யாணம் பண்ணாம அவர் எப்படி பண்ணுறதுனு இருந்துட்டாராம். சமீபத்துலதான் அவரோட சின்ன அண்ணன் கல்யாணம் ஆகிருச்சு அதுக்கு நானும் போனப்போ அத்தையே! கூப்பிட்டு பேசினாங்க. இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணத்த வச்சிக்கலாம்னு சொன்னாங்க”
 
“அத்தையே! பேசினங்களா?” நித்யாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
 
ரமேஷின் குடும்பம் செல்லம்மாவின் அண்ணன் வழியில் வந்தவர்கள். செல்லாம்மா இருக்கும் பொழுது அவர்கள் வருவார்கள் இவர்களும் போவார்கள். கல்யாணம் காட்ச்சி என்றால் வருவது போவதுதான். நித்யாவின் கல்யாணத்துக்கு மொத்த குடும்பமுமே! வந்து கல்யாண வேலைகளை பகிர்ந்துக்கொண்டு இழுத்துப்போட்டு வேலை பார்த்தனர். அப்பொழுது சத்யகலா பத்து வயது குழந்தை.
 
அதன்பின் கூட அங்கே! சென்றிருக்கிறாள். ரமேஷ் டவுனில் சிறிதாக ஒரு துணிக்கடையை செய்து வருபவன். அந்த வருமானம் தனக்கு போதும் என்று இருந்து விட்டான். வாசனும் அங்கு துணி வாங்கி இருக்கிறான். வாசனும் கடையை முன்னேற்றலாமே! என்று பலதடவை கூறி இருக்கிறான். ஆனால் ரமேஷ் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
 
சொந்தத்தில் மாப்பிள்ளை அமைந்து விட்டது. சத்யாவுக்கு மாப்பிள்ளை பிடித்து விட்டது என்றதில் வாசனும் அதிகம் யோசிக்காமல் கல்யாணத்துக்கு தயாராக ரமேஷின் அன்னை புஷ்பா கல்யாண செலவில் பாதிக்கும் மேல் வாசனை பொறுப்பேற்க சொல்லி இருந்ததோடு வரதர்சனையாக பெரும்தொகைப் பணமும், நூறு பவுன் நகை வேறு கேட்டிருந்தாள்.
 
என்ன செய்வது என்று வாசன் மண்டையை குடைந்துக் கொண்டிருந்தான். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கடையை விற்று தங்கையின் திருமணத்தை செய்வதா? விற்றாலும் காசு பத்துமா என்ற குழப்பத்தில் இருக்கும் பொழுதுதான் ஆபத் பாண்டவனாக, தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்றவனாகி ஸ்ரீராம் அழைத்து கல்யாண செலவு மொத்தத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறி இருந்தான். 
 
தானும் ஏதாவது செய்கிறேன். நீ இப்பொழுதுதான் தொழிலில் முன்னேறி இருக்கிறாய் என்று வாசன் சொல்ல,
 
“இதுநாள்வரைக்கும் நீ தனியாக இருந்து எங்களுக்காக கஷ்டப்பட்டது போதும்” சென்டிமென்ட்டாகப் பேசி  வாசனை மடக்கி அத்தனை பொறுப்பையும் தானே! ஏற்றுக்கொண்டான் ஸ்ரீராம்.
 
சத்யாவின் கல்யாண வேலைகள் இனிதே ஆரம்பமாகி இருந்தது. இதற்கிடையில் ராமநாதனின் குடிப் பழக்கத்தால் அவரின் சிறுநீரகங்கள் பழுதடைய அவர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாசனால் அவரின் மருத்துவத்துக்காக பெரும் தொகை பணம் செலவு செய்ய முடியாது. தன்னால் முடிந்ததை செய்தான்.
 
தந்தையின் உடல்நிலையை கேள்விப்பட்டு நித்யாவும், டில்லியிலிருந்து வர, சென்னையிலிருந்து வந்த ஸ்ரீராம் அவரை தடாலடியாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, வைத்தியம் பார்கலானான்.
 
“தந்தை மருத்துவமனையில் அநுமதிக்கபட்டது மாப்பிளை வீட்டாருக்கு தெரிய வேண்டாம். கல்யாணம் நடக்கப்போகும் நேரத்தில் என்ன இப்படி ஆகிவிட்டது என்று பேச்சு எழும்?” பெரியமனிதனாய் ஸ்ரீராம் பேச நித்யாவுக்கும் அதுதான் சரி என்று பட்டது.
 
ஸ்ரீராம் ரொம்பவே! பொறுப்பாககிட்டான். கடைக்குட்டியானாலும் நல்ல நிலைமையில் இருக்கிறான். ஐந்து குழந்தைகளை பெற்றதில் தந்தையை யாரேனும் ஒருவர் பார்த்துக்கொள்கிறாரே! என்று வாசன் நித்யாவிடம் கூறி பெருமை பட்டுக்கொண்டான்.
 
நித்யாவும் “ஸ்ரீராமின் மனைவி மது ரொம்பவும் அமைதியானப் பெண் ஸ்ரீராம் குடும்பத்துக்காக இவ்வளவு செலவு செய்வதை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. நல்ல பெண்ணாக தெரிகிறாள் அவன் வாழ்க்கையை அவன் அமைத்துக்கொண்டதில் எப்படி இருக்குமோ! என்று பயந்தேன் நல்லா வாழ்வான்” என்று கூறினாள்.
 
எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. தங்கள் குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்துகொண்டிரிருக்கிறது என்று வாசன் நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டவன் கல்யாண வேலைகளை பார்கலானான்.
 
தனக்கு இந்த கடையில்தான் பட்டுப்புடவை வாங்க வேண்டும், தனக்கு இந்த கடையில்தான் நகை வாங்க வேண்டும் என்று சத்யகலா ஆட்டம் போடாத குறையாக கூறி சென்னை சென்று ஸ்ரீராமின் வீட்டில் தங்கி இருந்து அவள் விரும்பியதுபோல் அனைத்தையும் செய்துகொண்டாள். 
 
போதாததற்கு தனது அறைக்கு மரச்சாமான்கள் வேண்டும் என்று அடம்பிடித்து அதை வேறு வாங்கிக்கொண்டாள்.
 
“அத்தை இவைகளை கேட்கவே! இல்லையே! சத்யா… ஸ்ரீராம் எல்லா செலவையும் செய்யுறான் என்பதற்காக அவனை இப்படி கஷ்டப்படுத்தலாமா?” வாசன் அன்பாக கேட்க அவனை கேலியாக பார்த்துவிட்டு நகர்ந்தாள் தங்கை. அந்த பார்வையின் அர்த்தம் வாசனுக்கு சுத்தமாக புரியவில்லை.
 
நித்யாவும் அழைத்து இதையே கேக்க “என்ன ஆளாளுக்கு இதையே! பஞ்சாயத்து பண்ணுறீங்க? உன் கல்யாணத்துக்கு மட்டும் புது மரச்சாமான் வாங்கணும் என் கல்யாணத்துக்கு வாங்க கூடாது அப்படித்தானே!” என்று அக்காளை கடிந்தவள் “அம்மா தாயே! நான் ஒன்னும் இத என் மாமியார் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக போறதில்ல. இங்கதான் வச்சிட்டு போக போறேன். அண்ணனையே! உபயோகிக்க சொல்லு” என்றவள் அலைபேசியை அனைத்திருந்தாள்.  
 
உண்மையில் வாசனின் வீடு அந்தக்கால பழைய வீடு. மினி பங்களாபோல் தான் இருக்கும். தோட்டமே! அப்படி பெருசு. வீட்டை வாங்கிய ராமநாதன் கலாவதியின் பெயரில் எழுதி விட செல்லம்மாவும், வீட்டை விற்க எண்ணவே! இல்லை. ஐந்து குழந்தைகள். வாடகை வீட்டில் தங்கினால் எத்தனை வருடம் தங்குவது? இரண்டு பெண்குழந்தைகள் கல்யாணம் காட்ச்சி என்று பார்க்க வேண்டாமா? மருமகன் குடித்து கெட்டு சீரழிந்து கடை சூறையாடப்படும் முன் கடையை விற்றுவிடலாம். எல்லாவற்றையும் சிந்தித்துதான் கடையை விற்றிருந்தாள்.  
 
ஆத்மநாதன்தான் நித்யாவின் கல்யாணத்துக்காக ரூம்செட் என்று கட்டில், பீரோ, ட்ரெஸிங் டேபால் எல்லாம் வாங்கிப் போட்டிருந்தான். அவர்கள் டில்லி செல்லலும் போது அவற்றை லாரியில் ஏற்றி இருந்தான். அவன் பொருட்கள் அவன் மனைவிக்காக வாங்கினது. அவனை யார் தடுப்பார்கள்.
 
அக்காவுக்கு வாங்கியது போலவே! தனக்கும் செய்ய வேண்டும் என்று சத்யா எதிர்பார்ப்பது என்னவோ! சிறுபிள்ளை தனமாக தெரிந்தாலும், சத்யா ஒன்றும் குழந்தை இல்லையே! இருபத்தி ஆறு வயதில் நிற்கும் மங்கை. குடும்ப கஷ்டம் அறிந்து செயல்பட வேண்டியவள்.
 
தனக்கு எதற்கு ரூம்செட் அவளிடம் பேசி பிரயோஜனமில்லை என்று அமைதியான வாசன் கல்யாண வேலைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஸ்ரீராமை அழைத்துக் கேக்க அவன் சொன்ன கல்யாண மண்டபத்தின் பெயரைக் கேட்டு வாசனுக்கு தலையே சுற்றியது.
 
அந்த கல்யாண மண்டபத்துக்கு அட்வான்ஸ் பணமே! ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் என்று அவனுக்கு நன்கு தெரியும். எதுக்கு அந்த கல்யாண மண்டபம் சாதாரண ஒரு கல்யாண மண்டபத்தை பார்த்தால் போதும் தானே! என்று வாசன் கேட்க,
 
“சத்யா அக்காவோட ஆச” என்றான் ஸ்ரீராம்.
 
சாப்பாடு முதல், மண்டப அலங்காரம், சத்யாவை அலங்கரிப்பது, இன்னும் இதர செலவுகள் என்று கணக்குப் பார்த்தாலும் முப்பது லட்சத்துக்கும் மேல் வரும். இதில் நகைகள் அடங்காது.
 
ஊரைக்கூட்டி பணக்காரர்கள் கூட இப்படி ஒரு கல்யாண விருந்தை கொடுத்திருக்க மாட்டார்கள் அப்படி செலவு செய்து சொந்தபந்தங்கள் யாரையும் விடாமல் அழைத்திருந்தான் ஸ்ரீராம். ஸ்ரீராமை கேள்வி கேட்டால் சத்யாவின் ஆசை என்று பதில் சொல்கிறான். அக்காவின் ஆசையை நிறைவேற்றுகிறான் என்று கடியாவும் முடியவில்லை. சத்யாவிடம் பேசி புரியவைக்கவும் முடியாமல் வாசன் ஒதுங்கி கையாளாதவனாக பார்த்துக்கொண்டிருந்தான்.
 
இத்தனை வீண் செலவையும் செய்வதில் அவன் கடையை விரிவு படுத்த செலவு செய்திருந்தாலாவது வருமானத்தை பெருக்கி இருப்பான். வாசன் கஞ்சனல்ல உழைப்பாளி. பணத்தின் அருமை அறிந்தவன். தம்பி தங்கைகளுக்கு அவன் எவ்வளவோ! செலவு செய்திருக்கிறான். என்றுமே! கணக்கு பார்த்ததில்லை. ஆனால் வீணான செலவு என்றுமே! செய்ததில்லை. அவனுக்காக அவர்களிடத்தில் கையேந்தியதுமில்லை. செலவு செய்வது தம்பி எனும் பொழுது அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. 
 
அதோ இதோ என்று கல்யாண நாளும் விடிந்தது. அனைவருக்கும் கல்யாணத் துணி ஸ்ரீராம் வாங்கிக் குவித்திருந்தான் என்றே! சொல்ல வேண்டும். அனைவரும் அணிந்துக்கொண்டு மண்டபத்துக்குள் நுழைய ஏதோ ராஜவம்சத்தினர் போல் தான் காட்சசியளித்தனர்.
 
கேலியும் கிண்டலுமாக பெண்கள் கல்யாண வேலைகளை பார்த்தார்களேயானால், பரபரப்பாகவும், மும்முரமாகவும் ஆண்கள் கல்யாண வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
மண்டபத்துக்குள் காலடி எடுத்து வைத்த ஆத்மநாதனின் அன்னை பத்மா வயிறெறிந்தவாறு நித்யாவிடம் வந்து பொறியலானாள்.
 
“ஏன் டி உன்ன மட்டும் கட்டிக் கொடுக்கும் போது ஒன்னும் இல்லாம தள்ளி விட்டாங்க, உன் தங்கச்சிய மட்டும் இம்புட்டு செலவு பண்ணி கட்டி கொடுக்குறாங்க சொந்தம்னா ஒருமாதிரி, அசல்னா ஒருமாதிரியா?” பத்மா நித்யாவை காணும் பொழுதெல்லாம் கறிச்சுக்கொட்டுவதுவதுதான். நித்யாவின் அழகில் மயங்கி மகன் இப்படி அவளிடம் விழுந்து கிடக்கிறானே! என்ற கோபம்.
 
“அம்மா என்ன பேசுற?”  அன்னையை பற்றி நன்கு அறிந்த ஆத்மநாதன் எகிற
 
“டேய் நீ பேசாத விளங்காதவன். ஊருல இல்லாத அழகிய கட்டி இருக்கான் பாரு. நல்லா ஏமாந்துட்ட டா நீ. உன்ன நல்லா ஏமாத்திட்டாங்க. இந்த கல்யாணத்துக்கு நீ எவ்வளவு செலவு பண்ண?”
 
“நான் அஞ்சு பைசா செலவு பண்ணல” சொல்லும் போதே! பண்ணவும் மாட்டேன் என்ற உள்ளர்த்தம் ஒழிந்திருந்தது நித்யாவால் நன்கு உணர முடிந்தது.
 
“ம்ம்.. நீ பண்ணாலும் நான் பண்ண விட்டுடுவேனா? மருமகளே! வந்தவளை நிக்கவச்சே அனுப்பிடுவ போல இருக்கு. குடிக்க ஏதாச்சும் கொடுக்க மாட்டியா என்ன?” அதிகாரமாக கேட்டவள், வாசன் அங்கு வரவும் “என்ன மாப்புள எப்படி இருக்கீங்க தங்கச்சி கல்யாணத்த ஜாம் ஜாம்னு பண்ணுறீங்க போல” பத்மாவின் விசாரிப்பே உள்குத்து என்று வாசனுக்கு புரிந்தது.
 
 
பக்கத்துக்கு ஊரில் இருந்தாலும் பஸ்ஸில் வந்து மளிகை கடையில் ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்களை மாதாந்தம் அள்ளிக்கொண்டு போய் விடுவாள் பத்மா. காசும் கொடுக்க மாட்டாள். வாசனும் நித்யாவுக்காக பொறுமையாக இருந்து விடுவாள். இது தொடரவே! பொறுக்க முடியாமல் கடையில் வேலை செய்யும் ரகு நித்யாவை அழைத்து சொல்லிவிட கணவனிடம் பொருமலானாள் நித்யா.
 
“உங்கண்ணன் எதுக்கு கொடுக்கிறான். முடியாதுனு கட் அண்ட் ரைட்டா சொல்ல வேண்டியதுதானே!” ஆத்மநாதன் சொல்ல நித்யா சண்டைக்கு நிற்க ஆத்மநாதன் அன்னையை அழைத்து அலைபேசியில் திட்டிவிட்டு பொருட்கள் வாங்கினால் காசு கொடுத்து வாங்குமாறு வேறு கூறியவன் வாசனையும் அழைத்து அன்னை வந்தால் காசு வாங்காமல் பொருட்கள் கொடுக்க வேண்டாம் என்று வேறு கூறி இருந்தான். வாசனுக்குத்தான் தர்மசங்கடமாகிப்போனது.
 
பத்மா பொருட்களையும் வாங்கிக்கொண்டு குத்தல் பேச்சுக்களையும் குறைவிலாது அள்ளி வீசிவிட்டு காசை ஆத்மநாதனிடம் வாங்கிக்கொள்ளும்படி கூறிவிட்டு செல்வாள். பத்மா செல்லும் வரை பொறுமை காப்பவன் கடையியில் வேலை பார்க்கும் ரகுவை முறைப்பான்.
 
“இதுக்குதான் நான் அமைதியா இருக்குறது. இப்போ இந்த பேச்சையும் கேக்கணும். வியாபாரம் நடக்குற நேரத்துல இது தேவையா?” என்று கடையை மூடும் நேரத்தில் மாட்டிக்கொள்ளும் ரகு வாசனிடம் காது பஞ்சர் ஆகும் அளவுக்கு கேட்டுக்கொள்பவன் பத்மாவுக்கு சாபங்களை அள்ளித்தெளிப்பான்.
 
“என்ன டா இவ்வளவு திட்டுற அமைதியா இருக்க?” என்று வாசன் கேட்டாலும்” முகத்தை உர்ர் என்று வைத்திருப்பவன் எதுவும் பேச மாட்டான். வாசனின் நிலைமையும் சூழ்நிலையையும் நன்கு அறிந்தவன் அவன்.
 
“ஊருக்கு போனதும் அந்த கிழவிக்கு ஒரு சூனியத்தை வைக்கணும்” மனத்துக்குள்தான் அதை சொல்லி வாசனிடம் மேலும் வாங்கிக் கட்டிக்கொள்ள அவன் தயாராக இல்லை. 
 
கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் தாயில்லா பிள்ளை என்று ஆசிர்வதிக்காமல் இன்றும் அதே! குத்தல். சிரித்து சமாளித்த வாசன் “சின்னவன் தான் அத்த எல்லாம் செய்யுறான்”
 
“அவன்கிட்ட ஏது அவ்வளவு காசு?” தன் கயல்யாணத்தை தானே! நடத்திக்கொண்டதை போல் போல் ரமேஷ் அல்லது ரமேஷ் வீட்டினர் தான் கல்யாணத்தை எடுத்து செய்வதாக நினைத்திருந்த ஆத்மநாதன் யோசனையாக கேக்க
 
“தொழில்ல ஏதோ பெரிய லாபம் வந்திச்சுன்னு சொன்னான் மாப்புள” ஆத்மநாதனை வாசன் ஏறிட்டுக் கூறினான்.  
 
“வரட்டும், வரட்டும்” என்ற பத்மா ஸ்ரீராமை அழைத்து “என்ன சின்ன மாப்புள சின்னக்கா கல்யாணத்த எடுத்து நடத்துறீங்களாமே! சந்தோசம். பெரிய அக்காவ மறந்துட போறீங்க. அவ கல்யாணத்துக்கு உங்க வீட்டுல ஒரு செலவும் பண்ணல. எல்லா செலவும் என் மகன்தான் பண்ணான். இப்பயாச்சும் ஏதாவது பண்ணுங்க” காசு வருவதென்றால் பிணத்தின் வாயை திறந்து கூட கையை விட்டு எடுப்பாள் பத்மா.        
 
“பண்ணிடலாம் அத்த பண்ணிடலாம்” ஸ்ரீராம் புன்னகைக்க, ஆத்மநாதன் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.
 
“இந்த சிரிச்சு சமாளிக்கிற வேலையெல்லாம் சரிப்பட்டு வராது மாப்புள. இதோ இப்போவே கொடுங்க” அடம்பிடுக்கும் குழந்தை போல் பிடிவாதம் பிடித்தவளின் பேச்சில் உறுதி இருந்தது.   
 
“நல்லா காமடி பண்ணுறீங்க அத்த” என்ற ஸ்ரீராம் நகரப்போக
 
“என்னைப் பார்த்தா என்ன தோணுது? தாலி கட்ட விட்டுடுவேனா?” கத்தினாள் பத்மா.
 
அந்த மண்டபம் மூன்று மாடிகளைக் கொண்டது மூன்றாம் மாடியில்தான் மணமகள் அறை இரண்டாம் மாடியில் மணமகன் அறை முதல் மாடியில் கல்யாண மண்டபம். இவர்கள் இருந்த தளத்தில் வீட்டார் மாத்திரம்தான். இவர்கள் பேசிக்கொண்டிருந்தது மணமகள் அறைக்கு அருகில் என்பதால் சத்யாவின் காதிலும் எல்லா பேச்சும் விழுந்துகொண்டுதான் இருந்தது. பத்மா கல்யாணத்தை நிறுத்துவதாக கூறவும்  
 
“என்ன என் கல்யாணத்த நிறுத்துவியா? என்ன தைரியம் உனக்கு? டேய் ராம் இந்த பொம்பள மூஞ்சில காச விட்டெறிஞ்சி வெளில துரத்து” சத்யா கத்த நித்யா பத்மாவுக்கு குடிக்க ஜூஸோடு வரவும் சரியாக இருந்தது. வாசன் சத்யாவை உள்ளே செல்லுமாறு கூறிக்கொண்டிருந்தான்.
 
“பாத்தியா ஆத்மா உன் பொண்டாட்டி வீட்டுல எனக்கு கொடுக்குற மரியாதைய? இப்போ நான் என்ன தப்பா கேட்டுட்டேன்” ஏதோ சாதாரணமாக சொல்வதுபோல் சொன்னாலும் காச விட்டுடாத மகனே!! என்ற சேதி அதில் பொதிந்திருந்தது.
 
பத்மாவின் மேல் ஆத்மநாதனுக்கு பெரிதாக பாசம் என்று என்றுமே! இல்லை. இருந்தாலும் தான் பார்க்க வளர்ந்த பெண் இவள். இந்த சின்னப்பெண் என் அன்னையை பேசுவதா?  ஆத்மநாதனுக்கும் கோபம் வர பல்லைக் கடித்தவாறு நித்யாவை முறைத்தான். கணவனின் சீற்றத்தில் நித்யா நடுங்க
 
“தப்பா கேட்டுடேனா? இன்னும் என் கழுத்துல தாலியே! ஏராள என் கல்யாணத்த நிறுத்துறேன்னு சொல்லுற மொதல்ல வெளிய போ” ஆத்மநாதனும் ஊருக்கு வந்தால் வாசனின் வீட்டில் வந்து தங்குவதோ! மாப்பிள்ளை என்ற அதிகாரமோ! பண்ண மாட்டான் அவனுக்கு தனியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆத்மநாதன் நித்யாவை திருமணம் செய்தாலும் இந்த குடும்பத்தோடு பெரிதாக ஒட்டுதல் இல்லை. அதனாலயே! சத்யா அவனையும் அவன் குடும்பத்தையும் மதிக்க மாட்டாள். பத்மாவை சுத்தமாக பிடிக்காது. சத்யாவை பொறுத்தவரையில் இவர்கள் அவளுக்கு யாரோ!  
 
விஷயம் கைமீறும் முன் சத்யாவை அடக்க வழி தெரியாமல் வாசன் சத்யாவை அறைந்திருக்க, நித்யா அதிர்ச்சியில் உறைந்தாள்.
 
சத்யாவை வாசன் அறைந்ததும்தான் பத்மாவும், ஆத்மநாதனும் அமைதியானார்கள். நித்யா சத்யாவை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று சமாதானப்படுத்த, நித்யா மீதுள்ள பாசத்தால்தான் அண்ணன் தன்னை அடித்தான் என்று நித்யாவை வசை பாட ஆரம்பித்தாள் சத்யா.    
 
அங்கே குட்டி க்ளோபரமே! நடந்துகொண்டிருந்தது சிலர் கண்களில் வேறு பட்டு மாப்பிள்ளையின் வீட்டார் காதுக்கு சென்றடைய ரமேஷின் அன்னை புஷ்பா வேறு வந்து வாசனிடம் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தாள்.
 
ஸ்ரீராம் பத்மா பணம் கேட்ட விஷயத்தைக் கூறி தான் ஏற்பாடு பண்ணியதாகவும் கூறி அவளை அனுப்பி வைத்தான். அனைவரும் சுற்றி இருந்ததால் சத்யாவை வாசன் அறைந்தது மற்றவர்கள் கண்ணில் விழவில்லை.
 
ஸ்ரீராம் உடனே! பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்து பத்மாவை அனுப்பி வைக்க சத்யாவுக்கு வசவுகளை வழங்கியவாறே மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.
 
ஒருவாறு பிரச்சினை இல்லாமல் சத்யாவின் திருமணம் நடந்தேறியது. மண்டபத்திலிருந்து மணமக்கள் ரமேஷின் வீட்டுக்கு செல்ல நித்யாவும் ஸ்ரீராமும் குடும்பத்தோடு அவர்களோடு செல்ல வாசன் மண்டபத்திலிருந்து பொறுப்பாக கிடைத்த அனைத்து பரிசுப்பொருட்களையும் வேன் பிடித்து ரமேஷின் வீட்டுக்கு அனுப்பி வைத்து, மீதமிருந்த உணவுகளை பகிர்ந்து கொடுத்து விட்டு மண்டபத்தை காலி செய்து கொடுத்த பின்னரே! ரமேஷின் வீடு நோக்கி புறப்பட்டான்.
 
“ஏன் லேட்” என்று  புஷ்பா விசாரிக்க, வாசன் சிரித்தானே! ஒழிய பதில் பேசவில்லை.
 
சத்யாதான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். “அண்ணனுக்கு அக்கா மேல்தான் பாசம் எப்போ பார்த்தாலும் என்னையே! குறை சொல்வான். இப்போ அத்த கேள்வி கேக்கும் விதமா நடந்துக்கிட்டான்” என்று ரமேஷிடமே! புகார்  வாசித்தவள் நித்யாவையும் முறைக்கத் தவறவில்லை.
 
சொந்த அத்தை என்பதால் நித்யா ரமேஷின் வீட்டில் ஓடியாடி வேலை பார்ப்பது சத்யாவின் கண்ணை உறுத்த “இவள் எதற்கு என் அத்தையிடம் நல்ல பெயர் வாங்க இதை செய்கிறாள்” என்று பொருமலானாள்.
 
மணமக்கள் இரண்டு நாட்கள் இங்கு தங்கட்டும் முறையாக வந்து மறுவீட்டு விருந்துக்கு அழைக்குமாறு புஷ்பா கூற நித்யா குடும்பத்தோடு தந்தையையும் அழைத்துக்கொண்டு வாசன் விடை பெற்றான்.
 
ஆத்மநாதனுக்கு ஆபிசிலிருந்து கால் வந்த வண்ணமே! இருக்க நித்யாவை கிளம்ப சொல்லி நச்சரித்துக்கொண்டிருந்தான்.  குழந்தைகளுக்கு பாடசாலை விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் பத்து நாட்கள் தங்கி விட்டே வருவதாக நித்யா கறாராக கூற கோபமாக அவன் மட்டும் டில்லி புறப்பட்டு சென்று விட்டான்.
 
சத்யா மற்றும் ரமேஷ் குடும்பத்தாரோரு மறுவீட்டு விருந்துக்கு வர விருந்தும் சிறப்பாக நடைபெற புஷ்பா மேலுமொரு இடியாக தங்களது வீட்டில் ஏற்கனவே! இரண்டு மகன்களும் திருமணமாகி குடும்பத்தோடு இருப்பதாகவும், மகளும் கணவனை விட்டு பிரிந்து வந்து விட்டதாகவும் கூறியவள் ரமேஷையும், சத்யாவையும் வாடகைக்கு வீடு பார்த்து வைக்க வேண்டும் என்றும் அதை பற்றி இன்னொரு நாள் பேசலாம் என்றும் கூற வாசன் சரி என்று விட நித்யாதான் யோசனைக்குள்ளானாள். 
 
புஷ்பா தனது மற்ற இரண்டு மகன்களுக்கும் பெண்ணெடுத்து இருக்கும் இடம் வசதியான குடும்பம். சத்யாவை ரமேஷுக்கு கேட்டதில் ஏதும் உள்நோக்கம் இருக்குமோ! என்று தோன்ற ஆரம்பிக்க புஷ்பா இனிமேல் என்ன கேட்டாலும் செய்வதாக ஒப்புக்கொள்ள கூடாதென்று வாசனிடம் கூற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
 
 மறுவீட்டு விருந்தும் முடிந்த பின்னர் மேலும் மூன்று நாட்கள் தங்கியிருந்த நித்யா குழந்தைகளோடு டில்லிப்புறப்பட்டு செல்ல வாசன்தான் அவளை வழியனுப்பி வைத்தான்.
 
வீடு வந்தவனை பிடித்துக்கொண்டு “வாசா… நீயும் கல்யாணம் பண்ணிக்கடா… நானும் ரொம்ப வயசாகிட்டேன். நீ மட்டும் இப்படி தனிமரமா இருக்காதடா” ராமநாதன் குரலில் கவலையை தேக்கிச் சொல்ல
 
தன்னிடம் என்றுமே! அன்பாக பேசாத தந்தை ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று ஒருகணம் திகைத்தாலும் அன்னை இருந்தவரை தந்தை அவளை அன்பாகத்தான் நடாத்தினார். அதிர்ந்து கூட பேசியதில்லை. சிலநேரம் இரவில் பாட்டு பாடும் சத்தம் கூட கேட்கும். அது அன்னைக்காக தந்தை பாடுவது அவ்வளவு காதல். அவள் பிரிவை தாங்க முடியாமல்தான் அவர் இவ்வாறு ஆகிவிட்டார்.
 
மகளின் திருமணம் அவளின் எதிர்கால வாழ்வு மட்டுமல்ல ஒருத்தந்தைக்கு மகனின் திருமணம் அவனின் எதிர்கால வாழ்க்கையை பற்றியும் சிந்தனைகள் இருக்கத்தான் செய்கிறது என்று ராமநாதனின் பேச்சில் புரிந்துகொண்டான் வாசன்.
 
“பண்ணலாம்பா… நீங்களே! ஒரு நல்ல பொண்ணா பாருங்க. அம்மா மாதிரியே! அழகா! அடக்கமா! அன்பானவளா!” என்றவன் புன்னகைத்தான். 
 
 நித்யா டில்லிக்கு சென்று சேர்ந்துகூட இருக்காது சத்யா ஏற்படுத்திய அலைபேசி அழைப்பினூடாக ரமேஷ் சொன்ன சேதியில் வாசனின் மனதில் பூகம்பமே! வெடித்தது.