வல்லவன் 10

மாமா, நான் ஹாஸ்பிட்டலுக்கு போக மாட்டேன். நாம இங்கிருந்து போகலாமா? விழித்து ஆகர்ஷனா ஆத்விக்கிடம் தாவினாள்.

“அதியா சொன்னது தவறில்லை. நீங்க போங்க. எங்க பேபியை நாங்க பார்த்துக்கிறோம்” ஆத்விக் சொல்ல, “தம்பி, என்னப்பா பேசுற? எங்க தர்சு மாதிரி தான ஆகாவும்”.

“ஆகாம்மா, தாத்தாகிட்ட வாங்க” அவர் அழைத்தார். அவள் அதியாவிடம் தாவினாள்.

“அண்ணா, நாங்க ரெஸ்ட் எடுக்கிறோம்” ஆகர்ஷனாவை படுக்க வைத்து அதியாவும் பாப்பாவை அணைத்து படுத்துக் கொண்டாள்.

“எஸ் அங்கிள், மாதிரி மட்டும் தான்” என ஆரியனை பார்த்தான் ஆத்விக்.

“இல்லப்பா” அவர் பேச எண்ண, “வேண்டாம்ப்பா” என்றான் ஆரியன். அவர் அவனை முறைத்து பார்த்து விட்டு ஆத்விக்கை பார்த்தார்.

சாரி அங்கிள். எனக்கு புரியுது. ஆனால் இதுக்கு மேல நாங்க இங்க இருக்கிறது நல்லா இருக்காது. நான் இங்கே வரும் போது பக்கத்துல்ல அதியை பத்தி தப்பா பேசுறாங்க. நான் இருக்கலாம்ன்னு நினைச்சது. இருவரும் ஏதாவது சூழ்நிலையில் ஒத்துப்பாங்கன்னு தான். ஆனால் அப்படி நடப்பதற்கு பதில் அதி ஹர்ட் ஆக தான் செய்றா. அவ அழுவா..காதுல இரத்தம் வர்றது போல கூட இருக்கும். பாசமா இருக்கும் யாரிடமும் இந்த அளவிற்கு கத்த மாட்டாள்.

இங்கிருந்தால் கஷ்டம் தான். நாங்க இன்று காலை கிளம்பிடுறோம் என கண்கலங்க கூறி விட்டு, உள்ளே சென்று கதவை அடைத்தான்.

உத்தமசீலனுக்கு கோபமும், ஏதோ வெகுநாட்கள் பழகிய உணர்வில் துருவினியும் உணர்ச்சிவசப்பட்டனர். காலை நிச்சயம் கிளம்பிடுவதாக ஆத்விக் சொல்லவும் ஹாலில் ஆரியன் தலையை பிடித்து அமர்ந்தான்.

எல்லாமே உன்னால தான். “போ அதி காலையில கிளம்பிடுவா?” துருவினி அழுது கொண்டே அவள் அப்பாவிடம், “அப்பா தர்சுவை எப்படி சமாளிப்பது?” எனக் கேட்க, ஆரியன் தலையை உயர்த்தி அவளை பார்த்தான்.

“தெரியலம்மா. இதுக்கு அந்த பொண்ணு வராமலே இருந்திருக்கலாம்” அவர் அறைக்கு செல்ல, துருவினி ஆரியனிடம் வந்து, நீ அண்ணியிடம் கூட இவ்வளவு பாசமாக பேசி பார்த்ததேயில்லை. உனக்கு அதியை பிடிச்சிருக்கு என கண்ணீரை துடைத்து, இப்ப அதி வெளிய போனால் இனி அவள் உன் வாழ்க்கையில் கிடையாது..

ஆத்விக் உறுதியா சொல்லீட்டார். அவர் பேசியதை நான் கேட்டேன். அவர் அப்பாவிடம் புகைப்படம் காட்டியவர் வர மாட்டாராம். வேறொருவரை பார்க்க சொல்லி இருக்காங்க.

“ஒரு வாரத்துல அதியும், ஆகாவும் வேற ஒருவருக்கு சொந்தமாக போறாங்க. நல்லா வேடிக்கை பாரு” கத்தி விட்டு அறைக்கு சென்றாள். ஆரியன் சோர்வுடன் அறைக்கு சென்றான்.

காலை தயாராகி கீழே அவனது லக்கேஜூடன் வந்தான் ஆத்விக். தர்சு அப்பொழுது தான் எழுந்தான்.

“அங்கிள், எங்க போறீங்க?” அவன் கேட்க, அவனது பொருட்களை அங்கேயே வைத்து விட்டு அவனை தூக்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

தர்சு, நீ அப்பாவோட இரு. அவரை, தாத்தாவை அப்புறம் ஆன்ட்டியை நல்லா பார்த்துக்கோ. நாங்க கிளம்புறோம்.

“நாங்க” என ஆத்விக் கூறியதை கவனிக்காத தர்சு, அதிம்மாவும் ஆகாவும் இன்னும் எழலையா. ஆகா இன்று என்னோட பள்ளிக்கு வருவால்ல? அப்பொழுதே எழுந்திருப்பால்ல. நான் பார்த்துட்டு வாரேன்” என ஓட இருந்த தர்சுவை தன்னுடன் அணைத்துக் கொண்டான் ஆத்விக்.

“அங்கிள், நீங்க எதுக்கு போறீங்க? நீங்க தான நாம கிரிக்கெட் விளையாடலாம்ன்னு சொன்னீங்க? நீங்க போனா என்னோட யாரு கிரிக்கெட் விளையாடுவா?”

உன்னோட அப்பாவையும் தாத்தாவை கூப்பிட்டுக்கோ..

இல்ல, அப்பா வர மாட்டார். தாத்தா கொஞ்ச நேரம் தான் விளையாடுவாங்க என்று அவனை பார்த்தான்.

ஆத்விக் அலைபேசி அழைத்தது. “தர்சு இங்கேயே இரு” என்று எழுந்து காதில் வைத்தவன் அதிர்ந்து, “கவனமா இருக்க மாட்டீங்களா? எங்கடா அவளை?”

“சரி செய்ய போயிருக்கா சார்” என்றான் ஒருவன்.

“எங்க இருக்கா?”

“அவன் அங்கே தான் வாரானாம். தடுக்க போயிருக்கா” என்றவுடன் அவளோட யாரு போயிருக்கா?

சார், தனியா போயிருக்கா.

“ஆர் யூ மேடு. தனியா எதுக்குடா விட்டீங்க?” என பேசிக் கொண்டே வெளியே வந்தான். அதே நேரம் சக்தி வீட்டினருகே வர, வீட்டிற்கு நேராக வேவு பார்த்துக் கொண்டிருந்தவன் கையில் துப்பாக்கியை எடுக்க, “சக்தி” என கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினான் ஆத்விக்.

அவன் சத்தம் கேட்டு வீட்டின் கீழிருந்தவர்கள் வர, சக்தி கையில் தோட்டா படும் நேரம் பைக்கில் வந்த ஒருவன் அவளை தள்ளினான். அவன் பின்னிருந்தவன் துப்பாக்கியால் சக்தியை கொல்ல வந்தவனை சுட, அவன் சரிந்தான்.

“ஹே, ஆர் யூ ஆல்ரைட்?” ஆத்விக் கேட்க, ம்ம்..ஓ.கே சார் என்று எழுந்தாள் சக்தி. “ராஸ்கல்ஸ்..முதல்ல அவனை செக் பண்ணுங்க” ஆத்விக் சொல்ல, சக்தியை பார்த்து சினமுடன் வந்தான் ஆரியன்.

செத்தவனின் அலைபேசியை ஆத்விக்கிடம் பிரஜித் கொடுக்க, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து சக்தியை முறைத்தான்.

“சார்” சக்தி அழைக்க, “தனியா எதுக்கு வந்த?”

சார், பிரஜித் கிளம்புவதற்குள் நீங்க பார்த்த மாப்பிள்ளை இங்க வந்துருவான். அவனை தடுக்க தான் வந்தேன்.

“அதுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் தேவையா?”

“சார், நீங்க தான அதி மேம்மை அவர் பார்க்கக் கூடாதுன்னு சொன்னீங்க?”

“சொன்னேன். முதல்ல என்னிடம் சொல்லணுமா? இல்லையா?”

“சார், கால் பண்ணேன்” அவனை பார்த்தாள் சக்தி.

உச்சு கொட்டி விட்டு, சரி அவனை என்ன செய்து தடுத்த?

சார், உங்க மாமா வருண் புகைப்படத்தை காட்டி, இவர் கட்டிக்க இருந்த பொண்ணுன்னு தான் சொன்னேன். அவரே போயிட்டார்.

“என்ன நடக்குது? உனக்கு எப்படி சக்தியை தெரியும்?” ஆரியன் சீற்றமுடன் ஆத்விக் சட்டையை பிடித்தான். அங்கே வந்த ஆரியனின் நண்பர்கள், “ஆரியா” கத்தினார்கள்.

“என்னடா?” கோபமாக அவர்களை பார்த்தான்.

வண்டியிலிருந்து இறங்கிய பிரகாஷ், விஷ்ணு, லோகேஷ் ஆரியனிடம் வந்தனர்.

“வந்தா சொல்ல மாட்டியாடா?” என ஆத்விக்கை திட்டினார்கள்.

“ஏதோ தெரிந்தவனிடம் பேசுவது போல பேசுறீங்க?” ஆரியன் கேட்டான்.

“எல்லாரும் உள்ள வாங்க. இங்க சரியில்லை” விஷ்ணு சொல்ல, சார் நாங்க கிளம்புகிறோம் என்றான் பிரஜித்தும் அவனுடன் வந்தவனும்..

“சரி” ஆரியன் கையை அவன் சட்டையிலிருந்து எடுத்து விட்டு, அவர்கள் அருகே சென்று, “சக்தி தனியா வராத” என்ற ஆத்விக், “அவனை டீப்பா வாட்ச் பண்ணுங்க” சொல்லி அனுப்பினான்.

“பை சார்” பிரஜித் சொல்ல, “ஹே கவனமா இருங்க. சக்தியை விட்டுட்டு போங்க” சொல்லி விட்டு ஆத்விக் வீட்டிற்குள் வந்தான்.

ஆத்விக்கை பார்த்த லோகேஷ், “நீ எப்படிடா இங்க வந்த?” கேட்டான்.

“சார், நான்” என ஆத்விக் ஆரியன் வீட்டினரை பார்த்தான்.

“ஆரியா, உனக்கு இவன் யாருன்னு தெரியலையா?” விஷ்ணு கேட்டான்.

ஆரியனும் அவன் வீட்டினரும் ஆத்விக்கை புரியாமல் பார்த்தனர்.

இவனும் இதை தான் கேட்டான் பட் எனக்கு தெரியலை.

ஆத்விக் சோர்வுடன் அமர்ந்தான்.

நம்ம முதல் கேஸ் பெங்களூர்ல்ல பள்ளியில் படிக்கும் பையனை தள்ளி விட்டு கொன்னதா சொல்லி போனோம்ல்ல. அந்த கேஸூக்கு உதவினானே அவன் தான் இவன் என விஷ்ணு சொல்ல, “அத்து..நீ அந்த பையனா?” கேட்டான் ஆரியன். அவனது அத்தூவில் புன்னகைத்த ஆத்விக், “ஆம்” என தலையசைத்தான்.

டேய் ஆரியா, உனக்கு அந்த பள்ளியில் குட்டிப்பொண்ணு ஒரு பையனிடம் லவ் லெட்டர் குடுத்ததுல்ல. அந்த பொண்ணு கூட இவன் தங்கை தான். எப்படி லிங்க் ஆகுது பாரு என லோகேஷ் சிரித்தான்.

ஆரியனும் அவன் குடும்பமும் அதிர, ஆத்விக் ஆரியனை அவதானித்துக் கொண்டிருந்தான்.

“என்னது? குட்டிப் பொண்ணு லவ்வா? உங்க தங்கையா?” துருவினி ஷாக்குடன் கேட்டாள்.

ம்ம்..என்றான் ஆத்விக்.

“நீ எதுக்கும்மா இவ்வளவு ஷாக் ஆகுற?” பிரகாஷ் கேட்க, “ஷாக்க குற ஷாக்க குற” லோகேஷ் கேலி செய்ய, “அண்ணா வாயை மூடுங்க. கேலி செய்ற நேரமா இது?” துருவினி லோகேஷை திட்டினாள்.

ச்சே..வர வர மரியாதை ரொம்ப குறையுது.

ஆரியா, அன்று அதி மயங்கின்னால்ல. உனக்கு அடிப்பட்டதுல்ல. அப்பொழுதும் இவன் தான் பைக்கில் வந்து உதவினான் விஷ்ணு சொல்ல, உத்தமசீலன் நெஞ்சை பிடித்து அமர்ந்தார்.

“ஆமா அண்ணா, இது எனக்கும் அதிக்கும் தெரியும்” என்றாள் துருவினி.

அப்ப சக்தி?

சக்தி என்ற சுவேரா என்னோட ஜூனியர். மும்பைல்ல பெரிய குடும்பத்து பொண்ணு. அவள் குடும்பத்தை அவர்களின் எதிராளிகள் குண்டு வைச்சு கொன்னுட்டாங்க. அவள் மட்டும் தப்பித்தாள். எனக்கு கீழ வொர்க் பண்ணீட்டு இருந்தா. பிரஜித்துக்கும் துரியனுக்கும் யாருமில்லை. எங்களுடன் சமீரா என்ற பொண்ணும் இருந்தாள். அவளை அங்கே இருக்கும் ஆபிஸை பார்த்துக்க சொல்லீட்டு வந்துட்டோம்.

எனக்கு முழு இன்ஸ்பரேசன் நீங்க தான். பள்ளி படிக்கும் போது உங்கள் திறமையை பார்த்து வியந்தேன். உதவ தோணுச்சு செய்தேன். அதிலிருந்து உங்களை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

உங்களுடன் சேர தான் படிக்கணும்ன்னு முதலில் முடிவெடுத்தேன். ஆனால் என் குடும்பத்திற்காக நான் சட்டம் படித்தேன் . எல்லாத்தையும் கத்துக்கணும்ன்னு எல்லாமே தேடி போய் தெரிஞ்சுக்கிட்டேன்.

படித்தும் அனைத்தும் அறிந்தும் ஒரு பயனும் இல்லை என அறிந்து யாராலும் தீர்க்கபடாத கேஸ் ஒன்றை எடுத்தேன். அதில் வெற்றியும் பெற்றேன். எனக்கான புகழ் என்னிடம் வந்தது. ஆனால் மனதில் நிம்மதி மட்டும் இல்லை. முதல்ல என்னோட வீட்டை திருத்தணும்ன்னு நினைச்சேன். ஆனால் அக்காவை மாமா படுத்தும் பாட்டை தூரத்தில் இருந்து பார்த்திருக்கேன். வெறியாய் வரும். பட் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு பணபலம், புகழ், நல்லவன் என்ற பட்டம் அனைத்தும் இருக்கு. அதை அழிக்கணும்ன்னு நினைச்சேன்.

அதனால் பெங்களூர் கிளம்பிய சமயம் தான் என் நண்பன் ஒருவன் மூலம் அக்கா இறந்த செய்தி தெரிந்தது. அதியையும் ஷனா பேபியையும் பாதுகாக்கணும்ன்னு எண்ணி தான் வந்தேன்.

“என்னது அதியா?” லோகேஷ் கேட்க, ஆமா..நீங்க சொன்ன அதி. நான் உங்க ஆரியனை காப்பாற்ற வந்த போது ஆரியனுக்காக அழுத அதி, என்னோட உடன் பிறந்த தங்கை தான் என்றான். ஆரியன் நண்பர்கள் அதிர்ந்து அனைவரையும் பார்த்தனர்.

“அதி ஷனா பேபியை தூக்கிட்டு அவள் காதலனுடன் ஓடிப் போயிட்டான்னு சொன்னாங்க” என்று பல்லை கடித்துக் கொண்டு ஆரியனை பார்த்தான்.

“சார், அதி எங்க ஓடிப் போனா?” துருவினி கேட்க,

நிரஞ்சன். அவள் காதலித்தவன். காதல் இல்லை அன்பு. இவளுக்கு மட்டும் தான் அவன் மேல அன்பு இருந்தது. இதில் அதிக்கு தெரியாத முக்கியமான விசயம் என்று எழுந்து மாடியருகே சென்று அவள் வருகிறாளா? என்று பார்த்து விட்டு, அந்த நிரஞ்சன் கூட வருண் ஆள் தான். எங்க அம்மாவுடன் வேலை செய்து வருணிற்கு விசுவாசியாக இருக்கான்.

“வருண் அதியாவை கடத்திய அன்று நிரஞ்சன் அங்கு தான இருந்தான்?” ஆரியன் கேட்க, ம்ம்..இருந்தான். அதி உள்ளே அவன் வெளியே. அவளுக்கு இதுவும் தெரியாது. தெரிந்தால் உடைஞ்சு போயிடுவா..

இது உன்னோட அம்மாவுக்கு தெரியுமா? பிரகாஷ் கேட்டான்.

நோ..தெரியாது. அவங்க கம்பெனி எம்பிளாயி தான என்று அவனை விட்டுட்டாங்க.

“அப்படி விடுவாங்கன்னு உனக்கு தோணுதா?” ஆரியன் கேட்க, எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு என்று அவன் சொன்னான்.

“ஆரியா, அதியோட பர்ஸ்ட் லவ் நீ தானா?” என லோகேஷ் சிரிக்க, கடுப்பில் அவனை முறைத்தான் ஆத்விக்.

அச்சமயம் வெளியே பைக் சத்தம் கேட்டு அனைவரும் எட்டி பார்த்தனர்.

கதவருகே வந்த ஒருவன் கையில் வேப்பமரக் குச்சியுடன் நின்றான்.

அவனை பார்த்து, “மச்சான்” ஆத்விக் எழ, “மச்சானா? கொன்றுவேன் டா” அந்த குச்சியை வைத்து ஆத்விக்கை விரட்டினான். வந்தவனை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

அவன் கவின். மக்களே முதல் எபிசோடில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தோம்ல்ல..அந்த கவின்.

பிரகாஷ் எழுந்து அவனை பிடிக்க, அப்பொழுது அங்கே இருக்கும் அனைவரையும் பார்த்து அதிர்ந்தவன் ஆரியனை பார்த்து, “வாவ்..வாட் எ சர்பிரைஸ் சார்? உங்களை தான் இந்த ஒரு மாதமாக வலை வீசி தேடிட்டு இருந்தேன்” என்று லோகேஷை பார்த்து, “சொல்ல மாட்டேன்னு சொன்னீங்க சார். எப்படி பார்த்துட்டேன்ல்ல?” காலரை தூக்கினான்.

“உனக்கு இவனை எப்படிடா தெரியும்?” ஆத்விக்கை பார்த்தனர். “அதுவா” என கவின் படியிலிருந்து கையில் பையுடன் இறங்கி வந்து கொண்டிருந்த அதியாவை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பார்த்தான்.

அவள் கவினை பார்த்து அதிர்ந்து கண்ணீருடன் ஆகர்ஷனா கையை விட்டு, ஆரியனிடம் உதட்டை பிதுக்கி பாவமாக முகத்தை வைத்திருப்பதை போல் வைத்துக் கொண்டு, “மாமா” வேகமாக இறங்கினாள்.

“அட, என்னோட வெல்லக்கட்டி. சோ பிரிட்டி” கவின் சொல்ல, அவள் அவனருகே வந்து கட்டிக் கொண்டு அழுதாள். ஆரியனுக்கு வயிறு பற்றிக் கொண்டு எறிந்தது.

அவளை நகர்த்திய கவின், “வெல்லக்கட்டி இங்க என்ன பண்ற? உன்னை பத்தி எவ்வளவு மோசமா நியூஸ் வந்திருக்கு. நீ இங்க ஜாலியா எஞ்சாய் பண்ணீட்டு இருக்கியா?” கவின் கேட்க, “ஜாலியா? ஆமா..ரொம்ப ஜாலியா தான் இருக்கா” என ஆத்விக் சொல்ல, அதியா அவனை முறைத்தாள்.

“மாமா, என்னோட வீங்கின கண்ணை பார்த்தால் உனக்கு நான் ஜாலியா இருக்குற மாதிரியா இருக்கு?” கோபமாக கேட்டாள் அதியா.

ஆமா இதை கவனிக்கலே அழுமூஞ்சி பாப்பா..

மாமா..சொல்லாத..ஏற்கனவே டென்சன்ல்ல இருக்கேன்.

அவள் தோளில் கையை போட்டு, “பட்டுக்குட்டிக்கு என்ன டென்சன்? அழுதியா? உன்னை யார் அழ வச்சா சொல்லு? வச்சி செஞ்சிடலாம்” கவின் சொல்ல, “போலீஸ் சார், உங்க பட்டுக்குட்டி அழ காரணம் இதோ இந்த நல்லவர் தான்” ஆத்விக் ஆரியனை கை காட்டினான்.

“மச்சீ..இது ஓவர்டா. அவர் எதுக்கு என் பட்டுக்குட்டியை அழ வைக்கப் போறார்?” கேட்டுக் கொண்டே ஆரியனை பார்த்தான். ஆரியன் அவனை வெறியுடன் பார்க்க, அவன் புரியாமல் அனைவரையும் பார்த்தான்.

அவன் முன் ஆகர்ஷனா கையை கட்டிக் கொண்டு நிற்க, துருவினி அவன் கையை தட்டி விட்டி, “அதி யார பார்த்தாலும் கட்டிப்பிடிக்கிற?” சினமுடன் கேட்டாள்.

ஹலோ மேம், நான் யாரோ ஒருவன் இல்லை. என் பட்டுக்குட்டிக்கு முறைமாமன். என்னோட சொந்த மாமா பொண்ணை கட்டி என்ன கிஸ் கூட என அவன் வார்த்தை நின்று ஆத்விக்கை பார்த்தான். அவன் ஆரியனை பார்க்க, அவன் கோபமாக எழுந்தான்.

“சார், உங்க அறைக்கு தான போகப் போறீங்க? இதையும் கேட்டுப் போங்க” என்று கவினை அவன் பக்கம் இழுத்து, “என்னோட மச்சானை என்னோட அதிக்கு இந்த வாரத்துக்குள்ள திருமணம் செய்து வைக்கப் போறேன். கண்டிப்பா இன்விட்டேசனோட வாரேன். கண்டிப்பா குடும்பத்தோட வர்றீங்க” என சொல்ல,

கவின் திகைத்து, “ஆது என்ன சொல்ற?” என கேட்க, “சுத்தம். எங்க பிளானெல்லாம் நாசமா போச்சு” லோகேஷ் சொன்னான்.

“சார், இரு நாட்கள் மட்டும் இருங்களேன். அண்ணாவை நானே ஒத்துக்க வைக்கிறேன்” துருவினி ஆத்விக்கிடம் கேட்டாள்.

“வினு, அவர் வாழ்க்கைக்கான முடிவையே அவரால் எடுக்க முடியலைன்னா எப்படி? இத்தனை வருடமாக முடிவெடுக்கத் தெரியாமல் இருந்த அதியே ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்” என்று அவளை பார்த்தான்.

அண்ணா, “மாமா” அவள் கவினை பார்த்தாள்.

“உனக்கு கவினை பிடிக்கும் தான? அவனுக்கு உன்னை ரொம்பவே பிடிக்கும். என்னடா சொல்ற?”

பிடிக்கும். இங்க என்ன நடக்குது? சார் என அவன் ஆரியனை பார்க்க, ஆரியன் அதியாவையே பார்த்தான். அந்த ஏக்கப்பார்வையை புரிந்து கொண்ட கவின் அதிர்ந்து ஆத்விக்கை பார்த்தான்.

அவன் கவினிடம் கண்ணை காட்ட, அதியாவும் ஆரியனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓ.கே டா மச்சி. கல்யாணம் தான? பண்ணீட்டா போச்சு” கவின் சொல்லி விட்டு, “அம்மா, அப்பா உன்னை பார்க்கணும்ன்னு வந்தாங்களே!” என வெளியே எட்டிப் பார்த்தான்.

கவின் அம்மா அப்படியே அதியா போல..கவின் ஆத்விக்கை அடிக்க தாவி வேப்பங்குச்சியை எடுத்து சென்றதை பார்த்து அவரும் முயற்சி செய்ய, அவர் கணவர் அவரை தூக்கிக் கொண்டிருந்தார்.

“அம்மா, அப்பா என்ன பண்றீங்க?” கோபமுடன் வெளியே ஓடினான் கவின்.

எல்லாரும் வெளியே பார்க்க, “அதி அவங்க உன்னோட அத்தையா? அப்படியே உன்னை போலவே இருக்காங்க. அண்ணா பாரேன்” துருவினி ஆரியன் கையை பிடித்து இழுக்க, அவன் நகரவேயில்லை..

“க்யூட் கப்புல்லா இருக்காங்கடா” லோகேஷ் சொல்ல, மச்சி..உன்னோட பொண்டாட்டியோட நீ நினைச்சு பாரு பிரகாஷ் சொல்ல, ஆரியன் கால்கள் தானாக அவ்விடம் சென்று பார்த்து அதியாவுடன் அவனை அவனே கற்பனை செய்ய அவன் புன்னகைப்பதை பார்த்து ஆத்விக் துருவினி தோளில் கையை வைத்து அவனை பார்க்க செய்தான்.

வேகமாக ஆத்விக்கை நெருங்கி, “ஏதாவது பிளான் இருக்கா?” கேட்டாள். அவனோ உதட்டை விரித்து “இல்லை” தலையசைத்தான்.

அதியா புன்னகையுடன் வெளியே ஓடினாள். அதற்கு முன் அவ்விடம் சென்ற கவின், “அப்பா..என்ன இது? எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க?”

என் பொண்டாட்டி ஆசையை நான் செய்றேன். எவன் பார்த்தால் எனக்கென்ன? அவர் சொல்ல, “கரெக்டா சொன்னீங்க மாமா” என்ற குரலில் இருவரும் அதியாவை பார்த்து, “அதிக்குட்டி” இருவரும் புன்னகைத்தனர்.

தன் பொண்டாட்டியை இறக்கி விட்டு கவின் தந்தை சுகுமார் கையை விரிக்க, புன்னகையுடன் அவரை அணைத்துக் கொண்டாள்.

“இவ என்ன எல்லாரையும் கட்டிப்பிடிக்கிறா? அண்ணன் இப்படி தான் வேடிக்கை பார்ப்பீங்களா?” துருவினி கேட்க, இருவரையும் ஆரியனும் அவன் நண்பர்களும் பார்த்தனர்.

“அவங்க கண்ணை பாரு. தவறான எண்ணம் தெரியுதா?”

“ஆனால் மத்தவங்க என்ன நினைப்பாங்க?”

“யாரு என்ன நினைச்சால் என்ன? நீ அழுதா உன் மேல் அக்கறை உள்ளவங்க தான அணைச்சுக்கணும். ரோட்ல போறவன் பக்கம் போவீயா?”

“வாட்?” அவனை முறைத்தாள்.

நீ செய்ய மாட்டான்னு தெரியும். ஜஸ்ட் எக்ஸாம்பில். அடுத்தவர் பேச்சை கேட்கும் போது அதியிடம் புன்னகை இருந்து நான் பார்த்ததில்லை. இப்ப அவளை பாரு. நீயே புரிஞ்சுப்ப? நாம யாரிடம் எப்படி நடந்துக்கணும்ன்னு அடுத்தவங்க சொல்லக் கூடாது. நீ தீர்மானிக்கணும் அப்பொழுது தான் உண்மையான சந்தோசம் கிடைக்கும் என்றான்.

துருவினி ஆத்விக்கை பிரமித்து பார்த்தாள்.

ஆரியனிடம் வந்த விஷ்ணு, “என்னடா நடக்குது? அதி பையோட எதுக்கு கீழ வந்தா? கவினுக்கு இவன் அதியை மேரேஜ் செய்து வைக்கப் போறதா சொல்றான். அமைதியா இருக்க? இதுல இவங்க இருவரும் பேசிக்கிறது” என ஆத்விக் துருவினியை பார்த்தான்.

ஆரியன், இருவரையும் பார்த்து விட்டு திரும்பி தன் தந்தையை பார்க்க, அவர் முகம் சுருங்கி இருந்தது.

அவரருகே வந்து, “என்னாச்சுப்பா?” எதுவும் நடவாதது போல கேட்டான்

துரு சொன்னது சரிதான். எல்லாமே உன்னால தான். நம்ம வீட்ல இந்த அளவு சந்தோசம் அதிக்கு எப்பொழுது இருந்தது தெரியுமா? அந்த ஒரு வாரம். நாம அவளையும் ஆகாவை வெளியே அழைச்சிட்டு செல்லும் போது மட்டும் தான் இருந்தது. ஆனால் இப்ப..கண்கலங்கினார் அவர்.

ஆத்விக் சொன்னதும் சரிதான். அவரவர் வாழ்க்கை முடிவை அவர்கள் தான் எடுக்கணும். யாரும் கட்டாயப்படுத்துவதால் பிரச்சனை தான் அதிகமாகும். எனக்கு அந்த குடும்பத்தை பார்த்தால் பொறாமையா இருக்கு என்று உத்தமசீலன் எழுந்து அறைக்கு செல்ல, தர்சனும் அவர் பின்னே ஓடினான். துருவினி வருத்தமாக அவரை பார்க்க, ஆத்விக் அவரறைக்கு சென்றான்.

உத்தமசீலன் தன் மனைவி புகைப்படத்தை பார்த்தவாறு கண்கலங்க நின்றிருந்தார். ஆரியன் அறைக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“அங்கிள்” ஆத்விக் அழைக்க, அவர் திரும்பினார் கண்ணீருடன்.

“என்ன அங்கிள், சின்னப்பையன் மாதிரி அழுறீங்க?” அவன் கேட்க, இல்லப்பா இத்தனை வருசமா எங்க வீட்ல சத்தமே கேட்காது. எல்லாரும் அவங்க அவங்க வேலையில தான் இருந்தாங்க. தனியா தான் இருப்பேன். இப்ப கொஞ்ச நாளாக தான் குடும்பத்தோட இருந்தது போல இருந்தது. ஆனால் இப்ப..

அங்கிள், அதுக்கென்ன அங்கிள். ஆகாவும் அதியும் வீட்டை விட்டு தான் போறாங்க. கண்டிப்பா அதிக்கு மேரேஜ் செய்து வைக்க தான் போறேன். எனக்கான வழியை அந்த கடவுள் காண்பிச்சுட்டார். கவின் கண்டிப்பா நல்லா அவளை பார்த்துப்பான். உங்களை பார்க்க கண்டிப்பாக அதியும் ஆகாவும் வருவாங்க. ஆனால் கவினும் உங்களில் ஒருவனா வருவான். அவ்வளவு தான்..

நானும் அவனும் மாமா, மச்சான் என்பதை விட நல்ல நண்பர்கள். என்னை படிக்க வைத்த நண்பனின் பெற்றோர் இவங்க தான். எங்க அப்பாவின் தங்கை அதிவதினி. பெயர் மட்டும் ஒத்துமையில்லை அங்கிள். இரு அதியும் ஒருவர் தான்..

மாமாவுக்கு அத்தையை பிடிச்சு தாத்தாவிடம் பேசினார். தாத்தா கம்பெனி பொறுப்புகளை ஏத்துக்கணும்ன்னு சுகுமார் மாமாகிட்ட கண்டிஷன் போட்டாரு. மாமா மறுத்திட்டார்.

என்னோட பொண்டாட்டிக்கு பணம் தேவையில்லை. நான் தான் தேவைன்னு அடித்து கூறினார். அது தாத்தாவிற்கு பிடித்து தான் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இவங்களுக்கும் எங்க கம்பெனி சேர்ஸ் எல்லாமே இருக்கு. அம்மாவுக்கு இவங்களை பிடிக்காது என்பதால் அவங்களை அவமானப்படுத்தும் படி மாமாவிடம் பேச, அதி போல கள்ளம்கபடமில்லாத அத்தைக்கு கோபம் வந்து, எங்க அம்மாவிடம் மொத்தத்தையும் கொடுத்துட்டாங்க.

நான் கவினோட பேசுவது பழகுவதும் அம்மாவுக்கு பிடிக்காது. ஆனால் நான் பேச தான் செய்வேன். மாமாவுக்கும் அத்தைக்கும் ஆதி அக்கா, அதி இருவரையும் ரொம்ப பிடிக்கும். அக்கா அம்மா பேச்சை கேட்டாலும் உறவுகளை அம்மாவிடம் கூட விட்டு கொடுக்க மாட்டாள். அக்கா தினமும் அலைபேசியிலாவது பேசிறுவா. அதி படித்த பள்ளி, கல்லூரிக்கே சென்று இருவருமே அதியிடம் பேசுவாங்க..

எங்களிடம் பணத்திற்காக இல்லாமல் பழகிய குடும்பம் அங்கிள். கவினுக்கு முன்னாடியே அதி மீது விருப்பம் இருந்தது எனக்கு தெரியும். ஆனால் அம்மாவுக்கும் அவனுக்கும் ஆகவே ஆகாது. அதனால் அதியிடம் எல்லையுடன் நடந்துப்பான். அத்தைக்கு சொத்துல்ல உரிமை கிடைக்கக்கூடாதுன்னு வேண்டுமென்றே தள்ளி வைச்சுட்டாங்க.

“கூட பிறந்த தங்கைன்னா இப்ப கூட கேஷ் போடலாமேப்பா?” உத்தமசீலன் கேட்டார்.

மாமாவுக்கு சொத்து மேலெல்லாம் விருப்பமில்லை. அவரை பொறுத்தவரை அவர் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கணும். அவ்வளவு தான். பணத்திற்கு முக்கியத்துவம் தர மாட்டார் அங்கிள்.

எனக்கு அக்கா கஷ்டப்பட்டு வளர்த்தது என்ற சென்டிமெண்ட்டிற்காக தான் அவங்களிடமிருந்து கம்பெனியை நான் வாங்க நினைக்கிறேன்.

“வாங்கி நீ எப்படிப்பா மேனேஜ் பண்ணுவ?”

“அதான் அதி இருக்காலா?”

“அதி எப்படி?”

படிச்சிருக்கா அங்கிள். அவள் கேரக்டருக்கு அவளால் அக்கா போல் நடத்த முடியாது. அவளுக்கு ஏற்ற ஆட்களை தேர்வு செய்யணும்..

“எதுக்கு உங்க குடும்ப விசயத்தை சொன்ன?” அவர் கேட்க, நீங்க அதியை நம்ப தான் அங்கிள். அவள் திருமணமாகி போனாலும் மறக்காமல் உங்களை தேடி வந்திருவா. அவளை கவின் அழைத்து வந்துருவான்.

அங்கிள், தயாரா இருங்க. நீங்க தான் அதி திருமணத்தை முன் நின்று நடத்தணும். எங்களுக்கு அப்பா இல்லை. நீங்க பார்த்துப்பீங்கல்ல? ஆத்விக் உத்தமசீலனை பார்க்க, அவர் அவனை அணைத்து, “தேங்க்ஸ்ப்பா” என்றார்.

“கவின் பெற்றோர் ஒத்துப்பாங்களா?” அவர் கேட்க, வெளிய வந்து பாருங்க. அதியும் நானும் அவங்களுக்கு ரொம்ப ஸ்பெசல்..

“அவங்களுக்கு பொண்ணு எதுவும் இருக்கா?” தயக்கமுடன் அவர் கேட்க, “அங்கிள்” என புன்னகைத்த ஆத்விக், இல்லை இருந்தாலும் நான் கட்டிக்க மாட்டேன்..

“ஏன்? உங்களுக்கு தான் அவங்களை பிடிக்குமே!”

“அங்கிள், நான் லாயர். என்னிடமே போட்டு வாங்க பார்க்குறீங்களா?” அவர் மீசையை பிடித்து இழுத்தான்.

உள்ளே வந்த அதிவதினி ஆத்விக்கை தான் தேடி வந்தார். வெளியே நின்ற ஆரியனை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவர் ஆத்விக் காதை திருகி இழுத்தார்.

ஆ…அத்த..விட்ருங்க…

“சென்னைக்கு வந்து பத்து நாளாச்சு. வீட்டுக்கு வரணும்ன்னு தோணவேயில்லையா? எங்க உன்னோட மாமன்?” அவர் கணவரை தேட,

“விதுக்குட்டி..மாமன் வந்துட்டேன்” அவர் புன்னகைக்க, இதுக்கு தான் இவனை மும்பை அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னேன். வந்து நம்மை பார்க்கணும்ன்னு கூட நினைக்கலைல்ல? அவர் கணவருக்கு வந்து விழுந்தது அடியொன்று..

சரிம்மா..விடு. பிள்ளைக்கு காது சிவந்து போச்சு. பாரு என்று அவர் சொல்ல, மாமா சும்மா இருங்க. அந்த காதும் பழுத்திரும் என அவன் அத்தையை அணைத்து, நான் வந்த நோக்கம் வேற அத்தை. அதான் வரலை.

“ஆமா, உங்க பையன் இங்கே தான செட்டில் ஆகப் போறானா இல்லை மறுபடியும் வேலூர் போகும் ஐடியா இருக்கா?” ஆத்விக் கேட்டான்.

வேலூர் என்றவுடன் ஆரியன் குடும்பம், நண்பர்கள் முகம் மாறியது. ஆத்விக் அதை கவனித்துக் கொண்டே ஆரியன் முன் வைத்தே கவினை அதியாவிற்கு திருமணம் செய்து வைப்பது பற்றி பேசினான்.

ஆரியன் தவிப்பை கட்டுப்படுத்தியவாறு நிற்க, “அதி என்னோட மருமகடா. ஆனால் உன்னோட அம்மா?” அதிவதினி கலக்கத்துடன் கேட்டார்.

“அவங்களை விடுங்க. அண்ணன் நான் இருக்கும் போது இந்த திருமணத்தை எவன் தடுக்கிறான்னு பார்க்கலாம்” என்று ஆரியனை பார்த்துக் கொண்டே ஆத்விக் கேட்க, ஆரியனோ வேகமாக அறைக்கு செல்ல, சுகுமார் அவனை கண்டு கொண்டு, தம்பி..நீங்களா? எங்க அதிக்கும் ஆகு குட்டிக்கும் பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. “ரொம்ப நன்றி” என்று அவர் சொல்ல, அவனால் அந்த நன்றியை கூட ஏற்கமுடியவில்லை அவன் உள்ளே சென்றான்.

“வாங்க மாமா. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க” ஆத்விக் சொல்ல, ஆது..நீயும் அதியும் எங்க வீட்ல தான் தங்கணும்.

முடியவே முடியாது அத்தை. நாங்க என்னோட வீட்ல தங்கிப்போம்.

“உனக்கு வீடா? சொல்லலைடா?” கவின் கேட்க, “எப்ப இங்கே வந்தேனோ? அப்பவே வாங்கிட்டேன்” என்று உத்தமசீலனை பார்த்து, “அங்கிள்..நாங்க அடிக்கடி வருவோம். சொல்லு அதி?” அவளையும் இழுத்தான்.

“அதிம்மா, எங்க போகப் போறீங்க? நானும் வருவேன்” தர்சன் அதியாவின் ஒரு கால்களையும் கட்டிக் கொண்டு அழுதான்.

தர்சு அழக்கூடாது. அதிம்மா அடிக்கடி வந்து உன்னை பார்த்துப்பேன்.

இல்ல, அதிம்மா போகக் கூடாது அழுதான்.

அதியா ஆத்விக்கை பார்க்க, “தர்சு..அங்கிள் சொன்னது போல நீ இங்க எல்லாரையும் பார்த்துக்கோ. நானும் ஆகாவும் அடிக்கடி வருவோம்” அவன் சொல்ல, “அதிம்மா வேணும்” பிடிவாதமாக அழுதான்.

“சாரி ஆன்ட்டி” என்று துருவினி அவனிடம் வந்து, “தர்சு பிடிவாதம் பண்ணாத வா..நாம பள்ளிக்கு கிளம்பலாம்”.

“முடியாது. போ..நான் அதிம்மா கூட தான் இருப்பேன்” என அவன் அழுதான். உத்தமசீலன் கல்லாகி நின்றார். நகரவேயில்லை.

“தர்சு” சினமுடன் துருவினி அழைக்க, “வினு, எதுக்கு சத்தம் போடுற?” அதியா அவளை அதட்ட, அவள் கண்ணீருடன் “நீ தான் போறேல்ல. அப்புறம் எதுக்கு கேக்குற? இதுக்கு முன்னாடி நான் இப்படி தான் இருந்தேன். இப்பவும் அப்படியே தான் இருக்கேன்” என தர்சு கையை பிடித்து இழுக்க, அவன் அதியாவை பிடித்துக் கொண்டிருந்தான்.

சுகுமார் உத்தமசீலனை பார்க்க, அவர் கண்கள் கலங்கினாலும் ஏதும் பேசாமலிருக்க, “அம்மாடி இரும்மா” துருவினியை நிறுத்திய சுகுமார், “உங்க பேரு என்ன?” என அவனை அவர் பக்கம் இழுக்க, அவன் அவள் புடவையை பிடித்துக் கொண்டு “தர்சன்” என்றான் அழுது கொண்டே.

“தர்சு கண்ணா, அதி கல்யாணம் பண்ணிக்கப் போறால்ல?” அதுனால இங்க அவ இருக்க முடியாதுல்ல..

இல்ல அதிம்மா இங்க தான் இருப்பாங்க. அப்பாவுக்கு அதிம்மாவை பிடிக்கும்.

“அதிம்மா நீங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கோங்க” தர்சன் சொல்ல, எல்லாரும் அதிர்ந்து பார்க்க, ஆத்விக் அவனிடம் “உன்னோட அப்பா தான் அதிம்மாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லீட்டாருல்ல?”

இல்ல. அப்பாவுக்கு அதிம்மாவை பிடிக்கும். அப்பா என்னிடம் கூட பேச மாட்டாங்க. ஆனால் அதிம்மா பேசும் போதும் ஸ்மைல் பண்ணுவாங்க.

“என்னங்க இது?” அதிவதினி கேட்க, சரி அப்படின்னா உன் அப்பாவிடம் சொல்லு? ஆத்விக் சொல்ல, “அண்ணா என்ன பேசுற?” அதியா சினமுடன் கேட்டாள்.

நான் தவறா ஏதும் பேசலை அதி. இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும் நீங்க காதலிக்கிறீங்கன்னு. கவின் குடும்பத்தை தவிர.

“அப்புறம் எதுக்குப்பா கவினை திருமணம் செய்ய சொல்லி கேட்ட?” சுகுமார் கோபமாக ஆத்விக்கிடம் கேட்டார்.

சொல்றேன் அங்கிள். நாம இங்க எதையும் பேச வேண்டாம். கிளம்பலாம் என்று ஆத்விக் தர்சனை அதியாவிடமிருந்து பிரித்து துருவினி கையில் கொடுக்க, தர்சன் இப்பொழுது துள்ளிக் கொண்டு “அம்மா..அம்மா” கத்தினான். அறையில் இருந்த ஆரியன் மனம் வெடித்து சிதறியது. அவன் காதல் கொண்ட மனம் கதற, அதியா அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

உத்தமசீலன் அறையிலிருந்து வெளியே வந்து தன் பேரனை சமாதானப்படுத்த முயன்றார். இதை பார்த்த அதிவதினி கோபமாக ஆரியன் அறைக்கதவை பலமாக தட்டினார்.

“அம்மா” கவின் அவரருகே வர, ஆத்விக் அவரை நிறுத்தி, “அத்த நீங்க என்ன பேசினாலும் அவர் காதில் வாங்கப் போறதில்லை. வாங்க..நாம கிளம்பலாம்”.

“அதி இவரை காதலிச்சிட்டு கவினை எப்படி கல்யாணம் பண்ணிப்பா?”

“பண்ணிப்பா அத்த, அதி வேணும்ன்னா இவரே வரட்டும்” என கோபமாக சொல்லி ஆத்விக் அவர்களை இழுத்து சென்றான்.

துருவினியும் உத்தமசீலனும் தர்சனை துருவினி அறைக்கு இழுத்து சென்றனர். எல்லாவற்றையும் ஆரியன் நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அழுது கொண்டிருந்த அதியா இவர்களை பார்த்து கண்ணை துடைத்து அனைவரையும் பார்த்து விட்டு, “அண்ணா ஆகு எங்க?”

“உள்ள இருக்கான்னு நினைக்கிறேன்” என்று ஆத்விக் உள்ளே வந்தான்.